கட்டுரை, ஆளுமைகள் 12 நிமிட வாசிப்பு

டேவிட் கிரேபர்: சில சிந்தனைகள்

எஸ்.அப்துல் ஹமீது
05 Dec 2021, 5:00 am
1

யுவால் நோவா ஹராரியின் ‘சேப்பியன்ஸ்’, ஜாரெட் டைமண்டின் ‘துப்பாக்கிகள், கிருமிகள், எஃகு’ போன்று மனித குல வரலாற்றை சுவாரஸ்யமாக முன்வைக்கும் புத்தகங்கள் மேற்குலகில் தொடர்சியாக வெளிவருவதுண்டு. அப்படியான ஒரு புதிய வரவு 'தி டான் ஆஃப் எவரிதிங்க்.' (The Dawn of Everything - எல்லாவற்றின் தொடக்கம்).

அமெரிக்காவைச் சேர்ந்த மானுடவியலாளர் டேவிட் கிரேபர் மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த தொல்லியலாளர் டேவிட் வெங்ரோ ஆகிய இருவர் இணைந்து எழுதிய இந்தப் புத்தகமானது, ‘சேப்பியன்ஸ்’, ‘துப்பாக்கிகள், கிருமிகள், எஃகு’ புத்தகங்கள் மனிதகுல வரலாறு தொடர்பாக முன்வைக்கும் பார்வையிலிருந்து மாறுபட்டுச் செல்கிறது. அதனாலயே இந்தப் புத்தகம் தற்போது உலகின் பெரும் கவனத்தை ஈர்த்திருக்கிறது. ஆனால், நாம் இங்கு பார்க்க இருப்பது அந்தப் புத்தகத்தைப் பற்றி அல்ல. அதன் ஆசிரியர்களில் ஒருவரான டேவிட் கிரேபர் பற்றி!

டேவிட் கிரேபர் மானுடவியல் ஆய்வைத் தாண்டி அவருடைய களச் செயல்பாடுகளுக்குப் பெயர் பெற்றவர். டேவிட் கிரேபர் அடிப்படையில் ஒரு அனார்கிஸ்ட். பொதுச் சூழலில் அனார்கிஸ்ட் என்றால் வன்முறையாளர் என்ற பிம்பமே இருக்கிறது. ஆனால், அனார்கிஸம் என்பது ஒருவகை அரசியல் தத்துவம். அரசு என்ற அமைப்பையே - அதன் அதிகாரக் கட்டமைப்பு மற்றும் சட்ட விதிகளை - ஏற்க மறுப்பது அனார்கிஸ கோட்பாட்டின் அடிப்படையாகும். அமெரிக்காவில் நிலவிவந்த ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக 2011-ம் ஆண்டு நியூயார்க் நகரின் வால் ஸ்ட்ரீட்டில், அனார்கிஸ்ட்டுகள் ஒன்றுதிரண்ட 'வால் ஸ்ட்ரீட் போராட்டம்'  இயக்கத்துக்குக் காராணகர்த்தாக்களில் ஒருவர் டேவிட் கிரேபர்.

அவருடைய 'டெப்ட்: தி ஃபர்ஸ்ட் 5,000 இயர்ஸ்' (Debt: The First 5,000 Years - கடன்: முதல் 5000 ஆண்டுகள்), 'புல்ஷிட் ஜாப்ஸ்' (Bullshit Jobs - அபத்த வேலைகள்) ஆகிய புத்தகங்கள் முதலாளித்துவச் சூழலையையும் அதன் பொருளாதாரக் கட்டமைப்பில் மனிதனின் வாழ்வு எத்தகைய நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறது என்பதையும் பேசுபவை. ஒருவகையில் அவை புரட்சிகரமான மாற்றத்தைக் கோருபவை. 

சமகாலத்தில் கவனிக்கத்தக்க சிந்தனையாளராகவும், முக்கியமான களச் செயல்பாட்டளராகவும் அறியப்பட்ட டேவிட் கிரேபர், சென்ற ஆண்டு – 59 வயதில் - மரணடைந்தார். அவரது மரணத்துக்குப் பிறகுதான் ‘தி டான் ஆஃப் எவரிதிங்க்’ புத்தகம் வெளியாகியுள்ளது.

அனார்கிஸம், மனித குலத்தின் ஏற்றத்தாழ்வு, வேலைகள் ஆகியவை தொடர்பாக அவருடைய சிந்தனைகளைப் பார்க்கலாம்.

அனார்கிஸம் பற்றி…

சுதந்திரமான மற்றும் சமத்துவமிக்க ஒரு சமூகத்தை உருவாக்குவதுதான் அனார்கிஸத்தின் நோக்கம். வரலாற்றைக் கவனித்தால் தெரியும். ஏற்றத்தாழ்வு, கடன், அடிமை முறை, கூலித் தொழில் போன்ற நிலைமைகள் அனைத்தும் ராணுவம், சிறைச்சாலைகள் மற்றும் காவல் துறையைப் பயன்படுத்தியே தக்கவைக்கப்படுகின்றன. அனார்க்கிஸ்ட்டுகள் இந்த அதிகாரக் கட்டமைப்பு இல்லாத சமத்துவமிக்க சமூகத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டவர்கள்.

மார்க்ஸிஸமும் சமத்துவமான சமூகத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டதுதான். ஆனால், மார்க்ஸியத்துக்கும் அனார்கிஸத்துக்கும் ஒரு முக்கியமான வேறுபாடு இருக்கிறது. பெரும்பாலான மார்க்ஸிஸ்ட்டுகள், முதலில் அரசு அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்றும் அந்த அதிகாரத்தைக் கொண்டு சமத்துவ சமூகத்தை உருவாக்க வேண்டும் என்றும் காலப்போக்கில் அந்த அதிகாரக் கட்டமைப்பு மறைந்துவிடும் என்றும் கூறுவார்கள். ஆனால், அது சாத்தியமற்றது. நீங்கள் மக்களுக்குப் போர் பயிற்சியைக் கற்றுக்கொடுத்துவிட்டு அதன் மூலம் அமைதியை ஏற்படுத்த முடியாது. மேல், கீழ் அடுக்கு அதிகாரக் அமைப்பை உருவாக்கிவிட்டு அதன் மூலம் சமத்துவத்தை உருவாக்க முடியாது. இங்குதான் அனார்கிஸம் மார்க்ஸியத்திலிருந்து வேறுபடுகிறது. அனார்க்கிஸம் சுதந்திரத்தை முதன்மையானதாகக் கருதுகிறது. அரசின் அதிகாரக் கட்டமைப்பை அது மறுக்கிறது. மாறாக, ஒருமித்த அடிப்படையிலான ஜனநாயகத்தை முன்வைக்கிறது. 

அனார்கிஸ்ட்டுகளை வன்முறையில் ஈடுபடுபவர்களாகவும், வெடிகுண்டுத் தாக்குதல் நடத்துபவர்களாகவும் பார்க்கும் போக்கு உண்டு. அது தவறான புரிதல். காந்தி, அனார்கிஸ்ட் தன்மை கொண்ட இருபதாம் நூற்றாண்டின் அரசியல் தலைவர். கலகக்காரர்.

போராட்டம் பற்றி…

நான் போராட்டம் என்ற வார்த்தையையே பிரச்சினைக்குரியதாகப் பார்க்கிறேன். போராட்டம் என்பது ஏற்கனவே நீங்கள் தோற்றுவிட்டீர்கள் என்பதுபோல் தொனிக்கிறது. ஒருவகையில் போராட்டச் செயல்பாடு என்பது அதிகாரக் கட்டமைப்பின் பகுதிதான். அதாவது அதிகாரத்தைச் செலுத்துபவர்கள் – அதற்கு எதிராக போராடுபவர்கள்.

எனவே, நான் போராட்டம் என்பதற்குப் பதிலாக ‘நேரடி செயல்’ (Direct Action) என்பதை முன்வைக்கிறேன். என்ன வித்தியாசம்? போராட்டத்தில் நீங்கள் அரசமைப்புச் சட்டத்துக்குட்பட்டு உங்கள் உரிமையை வேண்டிப் போராடுவீர்கள். அந்த விதத்தில் நீங்கள் விரும்பாமலே அரசின் அதிகாரக் கட்டமைப்பை ஏற்றுக்கொள்கிறீர்கள். அதுவே நேரடி செயல் என்பது, அரசின் அதிகாரக் கட்டமைப்புக் குறித்து கவலை கொள்ளாமல், நீங்கள் நினைப்பதை செய்வதாகும். அதிகாரத் தரப்பினருக்கு பணியாமல் இருப்பதைப் போல அவர்களைக் கோவமூட்டும் செயல் வேறொன்றும் இல்லை. அனார்கிஸ்ட்டுகளின் வழி அதுதான்.

தி டான் ஆஃப் எவரிதிங்க் பற்றி…

தொல்லியலாளர் டேவிட் வெங்ரோவுடன் இணைந்து ஒரு நூலை எழுதிக்கொண்டிருக்கிறேன். சமூக ஏற்றத்தாழ்வுக்கான தோற்றுவாயைப் பற்றியது அந்த நூல். சமூக ஏற்றத்தாழ்வைப் பற்றி பேசும் பலரும் 1960-களில் கிடைக்கப்பற்ற தொல்லியல் மற்றும் மானுடவியல் ஆய்வின் அடிப்படையிலே அதைப் பேசுகின்றனர். தவிர, மானுடவியலாளர்களும் தொல்லியலாளர்களும் 60களுக்குப் பிறகு தங்கள் துறைகளுக்கு வெளியே உள்ள யாருக்கும் எழுதவில்லை. எனவே நாங்கள் அதைச் செய்ய இருக்கிறோம்,

மனித குல வரலாறு தொடர்பாக இதுவரையில் நாம் அறிந்தது அனைத்தும் தவறானது. இன்றும் மக்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள், ‘வரலாற்றில் பெரும்பாலான மக்கள் 20-40 பேர் கொண்ட குழுக்களாகவே வாழ்ந்துவந்தனர். அவை முற்றிலும் சமத்துவமாக இருந்தன. மக்கள் தொகை பெருக்கமடையும்போது அந்தச் சமத்துவம் சாத்தியமற்றதாகிவிடுகிறது.’

இது மனித குலத்தின் ஏற்றத்தாழ்வு தொடர்பாக வழக்கமாகச் சொல்லப்படும் கதை. மனிதகுலம் வேளாண் நோக்கி நகரந்ததால் தனிச் சொத்து உருவாகியது; அது ஏற்றத்தாழ்வுக்கு அடித்தளமாக அமைந்தது; நகரங்கள் உருவானபோது உபரி தோன்றியது; பெரும் உற்பத்தியை, உபரியை நிர்வகிக்க அரசு என்ற அமைப்புக்குக்கான தேவை ஏற்பட்டது என்று மனித நாகரிகம் குறித்து நமக்குச் சொல்லப்பட்டுவருகிறது.

இவை எதுவும் உண்மை இல்லை. பல வேட்டைச் சமூகங்கள் மிக மோசமான ஏற்றத்தாழ்வை எதிர்கொண்டிருக்கின்றன. ஆனால், நிரந்தரமாக அல்ல - குறிப்பிட்ட பருவ காலங்களில் மட்டும். ஆண்டின் ஒரு பகுதியில் அவர்கள் சமத்துவமாக இருப்பார்கள். மறுபகுதியில் அவர்கள் சிறு நகரங்களில் கூடி, ஆண்டின் முதல் பகுதியில் செய்த வேலைக்கு நேரெதிர் வேலைகளைச் செய்வார்கள். அவர்களே படிநிலைகளை உருவாக்கி அவர்களே அவற்றை மீண்டும் அழித்துவிடுவார்கள். அப்படியானால் சமத்துவமின்மை எப்படி வந்தது என்பதல்ல நாம் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி. மாறாக, அந்த ஒற்றை நிலையிலேயே மனித இனம் எப்படி சிக்கிக்கொண்டது என்பதுதான் நாம் கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்வி.

நாம் அறிந்த ஆரம்ப கால நகரங்களில், குறிப்பாக மெசபடோமியா, சிந்து சமவெளி நாகரிகம் போன்றவாற்றில் ஆளும் வர்க்கம், சொத்து சேர்ப்பு மற்றும் அதிகாரக் கட்டமைப்பு இருந்தாதாக ஆதாரங்கள் இல்லை.  அந்த நகரங்களில் பெரிய கட்டிடங்கள் என்றால் பொது குளிப்பிடங்கள்தான். அதேபோல், ரஷ்யாவில் உள்ள டிரிபோலி, மால்டோவா, உக்ரைன் போன்ற முழுமையாக ஆராயப்பட்டுவரும் நாகரிங்களிலும் அப்படியான  சூழல்தான் காணப்படுகிறது. மெசபடோமியாவைவிட பெரிய நகரங்கள் இவை. ஆனால், இங்கும் பெரிய கோயில்கள் இல்லை, மாளிகைகள் இல்லை. அவ்வளவு ஏன் ஏனைய வீடுகளைவிட ஒரு வீடு பெரியதாக இல்லை.

ஆக, ஆரம்ப கால நகரங்கள் சமத்துவ நிலையில் இருந்திருக்கின்றன. துரதிருஷ்டவசமாக அந்தக் காலகட்டத்தில் எழுத்து தோன்றிடவில்லை. அதனால், அந்த நகரங்களைப் பற்றி நாம் எதிர்பார்க்கும் அளவுக்கு நம்மால் தெரிந்துகொள்ள முடியவில்லை. எப்படியாயினும் நகரங்களின் ஆரம்ப காலகட்டத்தில் மனிதகுலம் சமத்துவமாகவே இருந்துள்ளது. எனவே, நாகரிகம் குறித்த இங்கு சொல்லப்படும் மரபார்ந்த கதையாடல் தவறானது.

புல்ஷிட் ஜாப்ஸ் புத்தகம் பற்றி…

ருவர் தான் செய்யும் வேலையை அர்த்தமற்ற ஒன்று என்று உணர்கிறார் என்றால், அந்த வேலை இந்த உலகத்திலிருந்து மறைந்துபோனாலும் அதனால் எந்த ஒரு மாற்றமும் ஏற்படாது என்றால் அது அபத்தமான வேலைதான். பல காராணங்களுக்காக அவர் அப்படி உணரலாம். ஒன்றுமே செய்யாமல் முழு வேலை நாளையும் அந்த ஊழியர் ஒட்டிக் கொண்டிருக்கலாம், அவருடைய வேலை அவருடைய நிறுவனத்துக்கு பெரிய பயனைத்தை தரக்கூடியதாக இல்லாமல் இருக்கலாம், அல்லது அவரது நிறுவனமே தேவையற்ற ஒன்றாக இருக்கலாம்.

அபத்த வேலைகளை எப்படி அடையாளம் காண்பது? ஆசிரியர்கள், துப்பரவுத் தொழிலாளர்கள், கட்டிடத் தொழிலாளர்கள், காவலர்கள் இவர்களை ஒரு சமூகத்திலிருந்து நீக்கிவிட்டால் என்ன ஆகும்? பெரும் தடுமாற்றம் ஏற்படும். ஆனால், அபத்த வேலைகள் அப்படி அல்ல. அந்த வேலை நாளை மறைந்துபோனாலும் அது உலகில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் வழக்கறிஞர் வேலை, நிறுவனத்தின் மக்கள் தொடர்பாளர் வேலை, பிராண்ட் மேனேஜர்கள், நிர்வாக வல்லூனர்கள் போன்ற வேலைகளை அபத்த வேலைகளுக்கு உதாரணமாகச் சொல்லலாம். இவர்களுக்கு உள்ளூரத் தெரியும், இந்த வேலை இல்லையென்றால் உலகம் இன்னும் கொஞ்சம் நல்ல நிலையில் இருக்கும் என்று. ஆனாலும், ஊதியம் கொடுத்து இவர்களை உக்காரவைத்து அந்த வேலை முக்கியத்துவமானது என்ற ஒரு தோரணையை நிறுவனங்கள் உருவாக்குகின்றன.

இதில் என்ன சுவாரஸ்யம்  என்னவென்றால், இவையெல்லாம் முதலாளித்துவ அமைப்பில் நாம் எதிர்பார்த்திராத விளைவுகள். ஏனென்றால் முதலாளித்துவ அமைப்பானது திறனற்ற, பலன் இல்லாத வேலைகளை நீக்கிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது எல்லாம் தலைகீழாக உள்ளது. எப்படி இந்தச் சூழல் உருவானது?

சோவியத் மாதிரியில்தான் நாம் இத்தகைய வேலைகளை எதிர்பார்க்க முடியும். ஏனென்றால், சோவியத் மாடலானது அனைவருக்கும் வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கத்தைக் கொண்டது. ஆக, தேவையற்ற ஒன்றையும் அது ஒரு வேலையாக உருவாக்கும். ஆனால், ஒரு சுதந்திரச் சந்தையில் இப்படி நிகழ முடியாது.

வேலைகளை உருவாக்க வேண்டும் என்ற அரசியல் அழுத்தம்தான் இதற்கெல்லாம் காரணம் என்று நான் நினைக்கிறேன். பணக்காரர்கள் மூலம்தான் வேலைகள் உருவாகின்றன என்ற கருத்தாக்கத்தை நாம் ஏற்றுக்கொண்டிருக்கிறோம். நிறைய வேலைகள் உருவாக்கினால், நாம் மேம்படுவோம் என்று நமக்கு சொல்லப்பட்டிருக்கிறது – அந்த வேலைகளால் உண்மையில் எந்த ஒரு பயனும் இல்லையென்றாலும்.

இத்தகைய அபத்த வேலைகளை காலி செய்துவிட்டால் மக்கள் நிம்மதியாக இருப்பார்களா?

நான் ஒரு மானுடவியலாளன். ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டும் வேலை செய்யும் சமூகங்கள் பல உள்ளன. பெரும்பாலான விவசாய சமூகங்கள் அவ்வளவு மணி நேரம்தான் வேலை செய்கின்றன. அறுவடை மற்றும் விளைச்சல் காலங்களில் நீங்கள் 12 மணி நேரம் வேலை செய்வீர்கள். மற்ற காலங்களில் நீங்கள் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 மணி நேரம்தான் வேலை செய்வீர்கள். இடைக்காலத்தில் பண்ணையில் வேலை செய்தவர்கள் நம்மை விடவும் குறைவான நேரமே வேலை செய்தார்கள்.

நாம் என்ன நினைக்கிறோம் என்றால், வேலைகளைக் காலி செய்துவிட்டால் மக்கள் வீட்டில் டிவி பார்த்துக்கொண்டும், மது அருந்திக்கொண்டும், மன அழுத்தத்தில் உழன்றுகொண்டும் இருப்பார்கள் என்று. நாம் உபரி நேரங்களை அனுபவித்தது இல்லை என்பதால் ஏற்படும் எண்ணம் இது. அபத்த வேலைகளை நீக்கிவிட்டால், சமூகம் அதற்கு பயனுள்ள வேலைகளைச் செய்யும்.

அனைவரின் அடிப்படைத் தேவைகளை பூர்த்திசெய்யும் உலகத்தை நான் விரும்புகிறேன். அதனால்தான் நான் அடிப்படை வருவானம் திட்டத்தை முன்வைக்கிறேன். நான் மக்கள் சுதந்திரமானவர்களாகவும், அவர்கள் விரும்பிய வழியில் சமூகத்துக்குப் பங்களிக்கக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

தற்போது நாம்  ஒரு சிக்கலான பொருளாதாரக் கட்டமைப்பில் இருக்கிறோம். அதை உடனடியாக மாற்ற முடியுமா என்ன? நீங்கள் எதிர்பாக்கும் உலகத்துக்கு மாற சாத்தியமே இல்லை. நீங்கள் சொல்வதுபடி பார்த்தால் எல்லாவற்றையும் அழித்துவிட்டு உலகத்தை முதலிருந்து புதிதாகத்தான் கட்டமைக்க வேண்டும்!

இந்த அபத்தச் சூழலை பலர் உணரத் தொடங்கிவிட்டனர். ஆனால், அவர்களுக்குப் புதிய உலகத்தை அல்லது அமைப்பை உருவாக்குவதற்கான பாதைத் தென்படவில்லை. நீங்கள் எல்லாவற்றையும் அழித்துவிட்டு துரும்பிலிருந்து ஆரம்பிக்கத் தேவையில்லை. நாம் அபத்த வேலைகள் அற்ற, சமத்துவமிக்க ஒரு அமைப்பை முதலில் கற்பனை செய்ய வேண்டும். கடந்த நாற்பது ஆண்டுகளில், அரசியலிலும் பொருளாதாரத்திலும் கற்பனைக்கு இடமில்லை என்று நாம் கற்றுக்கொடுக்கப்பட்டிருக்கிறோம்.

சரி, அபத்த வேலைகளிலிருந்து மக்கள் வெளிவந்துவிடுகிறார்கள். அவர்கள் செய்ய என்ன வேலை வைத்திருக்கிறீர்கள்?

முதலில் நம்முடைய மதிப்பிடுகளை நாம் மாற்ற வேண்டும். சக மனிதர்கள் மீது அக்கறைக்கொண்டிருக்கும், நீதிபற்றி சிந்திக்கும் மக்களை முக்கியத்துவப்படுத்த வேண்டும்.  ஏனென்றால் தற்போது ஆசிரியர் வேலைக்கோ, சமூக சேவை செய்யவோ ஒருவர் சென்றால் அவருக்கு குறைவாகவே ஊதியம் வழங்கப்படுகிறது.  பொறியியல் வேலைகள், மருத்துவ வேலைகள், அறிவியல் வேலைகள்  மூலம் மட்டுமல்ல, வேறு வேலைகளின் மூலமும் மக்களால் சமூகத்துக்கு பங்களிப்புச் செய்ய முடியும் என்பதை நாம் உணர வேண்டும். வீட்டைக் கவனித்துக்கொள்பவர்கள், தன்னார்வலர்கள் பற்றி நான் சிந்திக்கிறேன்.  அவை ‘வேலை’ என்ற நம்முடைய மதிப்பீட்டுக்குள் வராதனால் நாம் அவற்றைக் கண்டுகொள்வதில்லை. ஆக, நாம் அர்த்தமுள்ள வேலைகளை விரும்பும் மக்களை ஒன்றிணைத்து புதிய சமூக இயக்கங்களை உருவாக்குவது பற்றிச் சிந்திக்க வேண்டும். இது நாம் அனைவரும் பின்வாங்கக்கூடிய ஒரு அரசியல் திட்டம்!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.

1






பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

violet   3 years ago

https://paperplane207.wordpress.com/2020/10/01/graeber-euology/ கிரேபர் இறந்தபோது எழுதிய குறிப்பு.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

சுவடுகள்மதிப்பெண்களை வாரி வழங்குகின்றனவா மாநிலக் கல்வி வாரமாமாஜிகுடிமைப்பணித் தேர்வுகள்அடுத்த தலைமுறைச் சீர்திருத்தம்மாநிலத் தலைகள்: கே.சந்திரசேகர ராவ்யாதும் ஊரேபசுமைத் தோட்டம்இறந்தவர்களைத் தூற்றுவது இழிவுஅஞ்சலி: ஆயிரம் படம் கண்ட ஆரூர்தாஸ்குடியுரிமை மறுப்புயூரிக் அமிலம்மாய பிம்பங்கள்ஆஃப்கன்வாசகர் பக்கம்சிவராஜ் சிங் சௌஹான்ஷிழ் சிங் பாடல்இந்தியத் தாய்மொழிகளின் தகைமை அத்வானிநீர்க்கடுப்பு ஏற்படுவது ஏன்?பெரிய மாநிலம்இந்திய அணிகபில்தேவ்மம்மூட்டிகாலம் மாறிப்போச்சு காங்கிரஸ்காரரே!சீன ராணுவம்அயோத்திதாசர்என்எஸ்ஏபி திட்டம்மோடி அரசின் சாதனைகள்: உண்மை என்ன?சம்பாரண் சத்தியாகிரகம்: இந்தியப் புரட்சியின் நூற்ற

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!