புதையல், அரசியல், மொழி, உரைகள் 30 நிமிட வாசிப்பு

இந்தி ஆதிக்கத்தை என்றும் எதிர்ப்போம்

சி.என்.அண்ணாதுரை
12 Apr 2022, 5:00 am
6

இந்தி ஆதிக்கத்தை நிலைநாட்டும் பேச்சுகளும், முயற்சிகளும் இந்தியா ஒரு சுதந்திர நாடாக உருப்பெற்ற காலத்திலிருந்தே தொடரும் கதை. தமிழும், தமிழ்நாடும் எல்லாக் காலங்களிலும் இதற்கு உடன் எதிர்வினை ஆற்றியும் வந்திருக்கின்றன. சில எதிர்வினைகள் காலத்துக்கும் நிற்கும் வல்லமை மிக்கவை. அறிஞர் அண்ணா 1963, மே மாதத்தில் நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் ஆற்றிய உரை அத்தகைய எதிர்வினைகளில் ஒன்று. காலப் பொருத்தம் கருதி 'அருஞ்சொல்' அந்த உரையை இன்று வெளியிடுகிறது. 

மேன்மை பொருந்திய அவைத் தலைவர் அவர்களே…

உள்துறை அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரி அளித்த தெளிவான விளக்கத்தைக் கேட்டபோது, கம்பி மீது நடக்கும் ஜால வித்தையில் அவர் தேர்ந்தவர் என்பது புரிந்தது. இப்போதைய சூழ்நிலையில் எடுக்கக்கூடிய எளிதான நடவடிக்கை என்பதைப் போல இதைத் தாக்கல்செய்ய முயன்றிருக்கிறார்; இயன்றவரையில் இதைத் தீங்கற்றதுபோலக் காட்டவும் முயன்றிருக்கிறார். அவையிலும் வெளியிலும் அவர் அளித்த விளக்கங்களுக்குப் பிறகு எனக்கு நம்பிக்கை ஏற்படவில்லை; இந்த அவையில் கட்சிகளுக்குள்ள வலு தெரிந்தும் இந்த மசோதாவை எதிர்க்கிறேன். அரசியல் கூட்டல் – கழித்தல்களுக்கும் அப்பால் அரசியல் தார்மிகம், ஜனநாயகத்தையொட்டிய தாராள சிந்தனாவாதம் ஆகியவற்றுக்கும் இந்த அவை முக்கியத்துவம் தரும் என்று நம்புகிறேன்.

ஜனநாயகத்துக்கான உண்மையான விளக்கம் என்ன?

ஜனநாயகம் என்பது, பெரும்பான்மை எண்ணிக்கை அடிப்படையிலான ஆட்சி மட்டும் அல்ல; சிறுபான்மை மக்களின் உரிமைகள், உணர்ச்சிகள் ஆகியவையும் புனிதம் என்று கருதி, அவற்றைக் காப்பதற்குப் பெயர்தான் ஜனநாயகம். இந்த அவையில் கிட்டத்தட்ட நான் மட்டும்தான் அல்லது நண்பர் பேராசிரியர் ரத்தினசாமியையும் என்னுடன் சேர்த்துக்கொள்ளலாம்; வேறு யாருடைய உதவியையும் இங்கே நான் எதிர்பார்க்க முடியாது. எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும் நாங்களே ஒருவரையொருவர் தாக்கிக்கொள்வதாக உள்துறை அமைச்சர் சுட்டிக்காட்டினார். எல்லோருமே என்னைத் தாக்கும்போது அது பிரச்சினையாகத்தான் இருக்கிறது; இருந்தாலும் நான் என்ன சொல்ல விரும்புகிறேனோ அதைச் சொல்லாமல் விடுவது என்னுடைய கடமையிலிருந்து தவறிய செயலாகிவிடும். எனவே, இப்போதைய மசோதா முழுக்க முழுக்க அதிருப்தியையே தருகிறது என்பதை முதலில் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தி ஆட்சி மொழியாவதை எதிர்த்து உணர்ச்சிபூர்வமாகத் தெரிவிக்கப்படும் எதிர்ப்பை இந்த மசோதா கணக்கிலேயே எடுத்துக்கொள்ளவில்லை; இந்த எதிர்ப்பு இந்தியாவின் ஏதோ ஒரு சிறு பகுதியிலிருந்து வரவில்லை, தென்னிந்திய மாநிலங்கள் அனைத்திலிருந்தும் வருகிறது. என்னுடைய நண்பர் புபேஷ் குப்தா (கம்யூனிஸ்ட்) இன்றைக்கென்று பார்த்து ஆங்கிலத்தை விரட்டியடித்தே தீர வேண்டுமென்று முடிவுசெய்துவிட்டார், எனவே ஆங்கிலத்துக்கு எதிராகக் கடுமையாக ஆங்கிலத்திலேயே பேசிவிட்டார். ஷேக்ஸ்பியரின் நாடகப் பாத்திரங்களான ரோமியோ, ஜூலியட்டைக்கூட அவர் விட்டுவைக்கவில்லை.

தமிழ் என்றவுடனேயே எனக்குப் பெருமிதம் தோன்றுகிறது, அப்படியொரு எண்ணம் ஆங்கிலம் தொடர்பாக எனக்கு வருவதில்லை. என்னுடைய மாநிலத்தில் தமிழ்தான் ஆட்சி மொழி. நான் இங்கேதான் ஆங்கிலத்தில் உரையாற்றுகிறேன்; என்னுடைய மாநிலத்தில் தமிழில்தான் பேசுகிறேன் என்பதை குப்தாவின் நண்பர் அவருக்குச் சொல்லியிருக்க வேண்டும். தமிழ்நாட்டை காங்கிரஸ் ஆண்டாலும், அங்கே ஆட்சி மொழி தமிழ்தான், பள்ளிக்கூடங்களில் உயர் வகுப்புகளில்கூட பயிற்று மொழியும் தமிழ்தான். தாய்மொழிதான் ஆட்சி மொழியாகவும் பயிற்சி மொழியாகவும் இருக்க வேண்டும் என்று எங்கள் மாநில அரசு மீது நான் செல்வாக்கை செலுத்துவதைப் போல, மேற்கு வங்க அரசு மீதும் புபேஷ் குப்தா செல்வாக்கு செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

புபேஷ் குப்தா: மன்னிக்கவும், என்னால் அதைச் செய்ய முடியாது.

சி.என்.அண்ணாதுரை: அவரால் செல்வாக்கு செலுத்த முடியாது என்பதற்காக அனுதாபப்படுகிறேன்; நான் ஆங்கிலத்துக்காக மன்றாடுகிறேன், ஆங்கிலத்திலேயே பேசுகிறேன் – ஆங்கிலத்தால் மிகவும் கவரப்பட்டு அல்ல; என்னுடைய தாய்மொழியைவிட ஆங்கிலத்துக்கு உயர்ந்ததொரு இடத்தைக் கொடுத்துவிட வேண்டும் என்பதற்காக அப்படிப் பேசவில்லை. இந்திய மாநிலங்களுக்கிடையே உரையாடலுக்கும் தகவல் பரிமாற்றுத்துக்கும் ஆங்கிலம் எளிதான மொழியாக இருக்கிறது என்பதற்காக. நன்மைகளையும் தீமைகளையும் சரிசமமாகப் பகிர்ந்துகொடுக்க ஆங்கிலம் நமக்கு நல்ல ஊடகமான மொழி. இந்தியா ஒற்றை நாடு அல்ல; ஒரே மொழி பேச!

இந்தியர்கள் அனைவருக்கும் பொதுவாக ஒரு மொழி வேண்டும் என்று பலரும் பல விதங்களில் வாதாடினர்; அது ஏற்கப்பட்டால் இந்தியாவில் பேசப்படும் மொழிகளில் ஒன்றைத்தான் பொதுமொழியாக ஏற்க வேண்டும். அதில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் இல்லை. இந்தியா ‘ஒற்றை நாடு’ என்றால், இந்த வாதம் ஏற்கத்தக்கதே. ஆனால், இந்தியா ‘கூட்டாட்சி நாடு’. இந்தியச் சமூகம் பன்மைத்தன்மை கொண்டது. எனவே ஒரேயொரு மொழியைப் பொதுமொழியாக வைத்துக்கொள்வது ஏனைய மொழி பேசுவோருக்கெல்லாம் அநீதியைச் செய்வதாகிவிடும். அது மட்டுமல்ல; சமூகத்தின் பெரும் பகுதி மக்களால் அம்மொழியைப் படிக்க முடியாமல் குறைகள் ஏற்படும்.

இந்தியா ஒரே நாடு அல்ல; இந்தியா பல்வேறு இனக் குழுக்களையும், மொழிக் குடும்பங்களையும் கொண்ட நாடு. இதனாலேயே இந்தியாவை ‘துணைக் கண்டம்’ என்று அழைக்கிறார்கள். எனவேதான், ஆட்சி மொழியாக ஒரே மொழியை நம்மால் ஏற்க முடியவில்லை.

இதை நான் சொல்வதற்காக காங்கிரஸ் நண்பர்கள் என்னை மன்னிக்க வேண்டும் – தேசிய கீதங்களாக இரு பாடல்களை நம் நாடு ஏற்றுக்கொண்டிருக்கிறது, ‘ஜன கண மன’ என்ற தேசிய கீதமும், ‘வந்தே மாதரம்’ என்ற தேசத் தாய் வாழ்த்துப் பாடலும் ஏற்கப்பட்டுள்ளன, இந்த இரண்டுமே இந்தியில் எழுதப்பட்டவை அல்ல; என்னுடைய நண்பர் புபேஷ் குப்தாவைப் போல அவையும் வங்காளத்திலிருந்து வந்தவை.

இந்தி மொழி மிகவும் முன்னேறிவிட்டது என்று உள்துறை அமைச்சர் எவ்வளவுதான் பேசினாலும் இந்தியின் நிலை இதுதான்; ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் முந்தைய பழமையுள்ள மொழி என்னுடையதாக இருக்கும்போது – அதைப் பொதுமொழியாக என்னால் ஏற்கச் செய்ய முடியாத நிலையில் – “நன்றாக முன்னேறிவிட்டது; இந்தியைப் பொது மொழியாக வைத்துக்கொள்வோம்” என்று உள்துறை அமைச்சர் பேசுவதால் எனக்கு ஏற்படும் இழப்புளை ஈடுசெய்வது எப்படி?

இந்தியாவின் மொழிகளில் – வழக்கொழிந்துவிட்ட சம்ஸ்கிருதம் நீங்கலாக - தமிழுக்குத்தான் ஐயாயிரம் ஆண்டுகளுக்கும் முந்தைய இலக்கிய மரபு இருக்கிறது. தமிழில் இயற்றப்பட்ட ‘தொல்காப்பியம்’ என்கிற இலக்கணத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலை வெளியிட குடியரசுத் தலைவர் எங்களுடைய மாநிலத்துக்குச் செல்கிறார். ‘தொல்காப்பியம்’ என்பது மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழில் இயற்றப்பட்ட இலக்கண நூல். அத்தகைய பாரம்பரியம் எங்களுக்கு இருக்கிறது. ஆங்கில எடுபிடிகளைப் போலப் பேசுகிறோம் என்று நண்பர் புபேஷ் குப்தா நினைக்க வேண்டாம். இந்தி தேசிய மொழியாகவும் ஆட்சி மொழியாகவும் வேண்டும் என்று வாதிட்ட புபேஷ் குப்தா இன்னமும் இந்தி படிக்கவோ, பேசவோ முயற்சிகளே எடுக்கவில்லை.

புபேஷ் குப்தா: எனக்கு அதற்கு நேரம் இல்லை.

சி.என்.அண்ணாதுரை: ஆனால், அவருக்கு ‘தாஸ்காபிடல்’ (மூலதனம்) படிக்க நேரமிருக்கிறது. ரஷ்ய கம்யூனிஸத்துக்கும் சீன கம்யூனிஸத்துக்கும் உள்ள வேறுபாடுகளைப் படிக்க நேரம் கிடைக்கிறது. இந்தியைத் தவிர எல்லாவற்றையும் படிக்க அவருக்கு நேரம் இருக்கிறது, இருந்தாலும் இந்திக்கு ஆதரவாக இங்கே பேசுகிறார்; “சி. ராஜகோபாலாச்சாரியார் எங்கோ, எதையோ பேசியிருக்கிறார்” என்று இடித்துக்காட்ட முடிகிறது. குப்தா கூறியதைப் போல, ராஜாஜி பேசிவிடவில்லை. அந்தக் கூட்டத்தில் அவர் பேசியபோது பக்கத்திலேயே அமர்ந்திருந்தேன். “இந்தி தொடர்பாக எனக்கும் என்னுடைய நீண்ட நாள் நண்பர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன; மொழி (இந்தித் திணிப்பு) தொடர்பாக இப்போது என் பக்கத்தில் அமர்ந்திருக்கும் திமுகவுக்கும் எங்களுக்கும் இடையில் கருத்தொற்றுமை ஏற்பட்டுள்ளது; இதிலிருந்து நீங்கள் புரிந்துகொள்ளலாம் மொழி நம்மை பிரிக்கிறது, மொழி நம்மை இணைக்கிறது; ஆங்கிலம் இணைக்கிறது, இந்தி பிரிக்கிறது” என்று அவர் குறிப்பிட்டார்.

ஆகவே, ராஜாஜியோ அவரைப் போன்றவர்களோ, ஆங்கிலம் ஆட்சி மொழியாக நீடிக்கட்டும் என்று கூறும்போது அந்த மொழியின் செல்வாக்குக்கு அடிமையாகி அல்ல, தங்களுடைய தாய்மொழியைவிட அது உயர்வானது என்பதால் அல்ல என்று புரிந்துகொள்ள வேண்டும்.

சட்டம் சாமானியர்களுக்கும் புரியும்படி இருக்க வேண்டும்!

ஆங்கிலத்தில் உள்ள ‘மே’ (இருக்கலாம்), ‘ஷெல்’ (இருக்க வேண்டும்) என்ற இரு வார்த்தைகளும் இரு வேறு விளக்கங்களுக்கு வழிகோலுபவை என்று உள்துறை அமைச்சர் பேசுகையில் சுட்டிக்காட்டினார். நான் வழக்கறிஞர் அல்ல – சட்டத்தைக் கரைத்துக் குடித்தவனும் அல்ல என்று அடக்கமாகக் கூறிவிட்டு, ‘மே’ என்ற சொல் இரண்டு வித விளக்கங்களுக்கு வழிசெய்யும் ஆபத்தானது என்று தெரிவித்தார்.

ஒரு மசோதாவோ, நிறைவேற்றப்பட்ட சட்டமோ, அதை யார் அமலாக்குகிறார்கள் – எப்படி அமலாக்கப்படுகிறது என்பதைப் பொருத்துத்தான் வலுவாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார். இந்த மசோதாவிலேயே மிகவும் கடுமையாக எதிர்க்கப்பட வேண்டியது இந்தப் பகுதிதான்.

எந்த ஒரு சட்டமும் எளிதாக விளங்கிக்கொள்ளும் வகையில் இருக்க வேண்டும். உள்துறை அமைச்சர் போன்ற படித்தவர்கள் மட்டுமல்லாது, அவரைச் சந்திக்க அன்றாடம் வரும் சாமானியர்களும் புரிந்துகொள்வதாக இருக்க வேண்டும். இந்த மசோதா அமல்படுத்தப்பட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று உள்துறை அமைச்சர் உறுதியளித்திருந்தால் எனக்கு அவர் மீது முழு நம்பிக்கை ஏற்பட்டிருக்கும்; இனிவரும் காலங்களுக்கும் லால்பகதூர் சாஸ்திரி உள்துறை அமைச்சராகவே நீடிப்பாரா? அவர் இந்தியாவின் குடியரசுத் தலைவராக வர வேண்டியவர் அல்லவா? நான் அமைச்சராகத் தொடர்வேன், நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்வது சரியல்ல; எந்தச் சட்டமும் எதிர்கால அரசுகளின் மனவோட்டத்துக்கு ஏற்ப அமல்படுத்தப்படும் என்ற ஊசலாட்டத்துக்கே இடம் தரக் கூடாது.

அமைச்சர் பேசும்போது இன்னொரு ஆபத்தும் இருப்பது தெரிந்தது. இந்தச் சட்டம் தொடர்பாக வழக்குகள் வந்தால் தீர்ப்பதற்கு நீதிமன்றங்கள் இருக்கின்றன என்றும் அவர் கூறினார். ஒவ்வொரு சட்டமும் அமல்படுத்தப்படும்போது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படும்; வழக்கறிஞர்கள் வாதிடுவார்கள்; நீதிபதிகள் அந்த வாதங்களைக் கேட்டு தீர்ப்பளிப்பார்கள் என்றால், நாம் சட்டங்களின் அமலுக்கு வழக்கறிஞர்களையும் நீதிபதிகளையும்தான் நம்பியிருக்க வேண்டுமா? வழக்கறிஞர்களுக்கும் நீதிபதிகளுக்குள்ளும் கருத்து வேறுபாடுகள் வரும் என்பது நமக்குத் தெரியும்; முக்கியமான பிரச்சினையில் இப்படியா முழுமையற்ற சட்டத்தை இயற்றுவது? ‘மே’ என்ற வார்த்தைக்கு என்ன பொருள் என்று தெரிந்துகொள்ள நீதிமன்றங்களுக்கு அலையும் விதத்திலா சட்டத்தைத் தயாரிப்பது? ‘மே’ என்ற வார்த்தைக்குப் பதிலாக ‘ஷெல்’ என்ற வார்த்தையைப் போட்டால் நிறைய பிரச்சினைகள் வரும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

பிரச்சினைகள் வரத்தான் செய்யும். அனைவரும் ஏற்கும் வகையிலும், பிரச்சினைகள் வராத வகையிலும் சட்டத்தைத் தயாரிக்கத்தான் சட்ட அமைச்சகம் இருக்கிறது. அரசமைப்புச் சட்டம் அளிக்கும் அடிப்படை உரிமைகளைக்கூட கட்டுப்படுத்தும் சட்டங்களை வாரந்தோறும் இயற்றும் சட்ட அமைச்சகத்துக்கு, புதிதாகச் சிந்திக்க முடியாத கற்பனை வறட்சியோ, முழுமையான மசோதாவைத் தயாரிக்க முடியாத திறமைக் குறைவோ இருக்கும் என்று நான் நினைக்கவில்லை! இந்த மசோதாவை வாசித்ததிலிருந்தும், உள்துறை  அமைச்சர் அளித்த விளக்கங்களிலிருந்தும் இது முழுமையற்ற மசோதா என்றே நான் கருதுகிறேன்.  

சிவில் சர்வீஸ் தீர்வுகளில் நாளை இந்திக்காரர்களே கோலோச்சுவர்!

இந்த மசோதாவில் இன்னொரு புதுமை என்னவென்றால், உள்துறை அமைச்சர் அதைக் கொண்டுவந்த விதம்; “இந்தி பிரச்சார சபை பட்டமளிப்பு விழாவுக்காக மதறாஸ் சென்றிருந்தேன்; அங்கே ஆங்கிலத்தில்தான் உரையாற்ற வேண்டியிருக்குமோ என்று யோசித்துக்கொண்டிருந்தேன்; அவர்களோ, இந்தியிலேயே பேசுங்கள்” என்றனர் என்று உள்துறை அமைச்சர் பேசினார். இந்தி பிரச்சார சபை பட்டமளிப்பு நிகழ்ச்சியில் இந்தியில் பேசுவதில் ஏதாவது ஆச்சரியம் இருக்கிறதா? இது யாருக்குப் பெருமை சேர்க்கும் தகவல்?

உண்மையிலேயே ஆச்சரியம் எதுவென்றால், தான் பேசும் இந்தி - பிரச்சார சபை மாணவர்களுக்குப் புரியுமா என்று அவருக்கே சந்தேகம் ஏற்பட்டிருப்பதுதான்; அதனால்தான் அவர்களைப் பார்த்து எந்த மொழியில் பேசட்டும் என்று கேட்டிருக்கிறார். இந்த சமாச்சாரங்களை இளைஞர்களிடம் விட்டுவிடுங்கள்; தெளிவான, தர்க்கரீதியிலான, பொறுப்பான வாதங்களை உங்களுடைய மசோதாவுக்கு ஆதரவாக முன்வையுங்கள்.

இந்த மசோதா தொடர்பாக மூன்று அல்லது நான்கு பெரும் பிரிவுகளில் பேச விழைகிறேன். அரசமைப்புச் சட்டத்தை வகுத்த அரசமைப்புச் சட்ட நிர்ணய சபையில் மொழி தொடர்பாக நடந்த வாத-பிரதிவாதங்கள், கடந்த 15 ஆண்டுகளில் நமக்கு ஏற்பட்டிருக்கும் அனுபவங்கள், பிரதமர் அளித்த வாக்குறுதி, பிரதமர் அளித்த வாக்குறுதிக்கு ஏற்ப இந்த மசோதா இருக்கிறதா என்று பேச விழைகிறேன்.

முதலாவதாக, அரசமைப்புச் சட்ட நிர்ணய சபையில் நடந்த விவாதங்களை எடுத்துக்கொள்வோம். “இந்தியாவின் ஆட்சி மொழியாக ஆங்கிலம் எப்போதும் இருக்க முடியாது, இந்திய மொழியான இந்திதான் இருக்க முடியும்” என்று நண்பர் புபேஷ் குப்தா பேசினார். ஆங்கிலேயர்களின் அடிவருடிகள், விசுவாசிகள்… (குறுக்கீடு)

புபேஷ் குப்தா: நான் சதவீத கணக்கே கொடுத்திருந்தேன்.

சி.என்.அண்ணாதுரை: நீங்கள் பேசியதை மறுபடியும் வாசித்துப்பாருங்கள். யார் இந்தியை எதிர்க்கிறார்கள், யார் ஆங்கிலத்துக்காக வாதிடுகிறார்கள் என்று. அரசமைப்புச் சட்ட நிர்ணய சபையில் ஒரிஸ்ஸாவைச் சேர்ந்த பி.தாஸ் என்ன பேசினார் என்று கூறுகிறேன். அவர் இந்தியை ஆட்சி மொழியாக ஏற்றுக்கொண்டவர். ஏற்றுக்கொண்ட பிறகு அவர் கூறினார், “இதை ஆட்சி மொழியாக ஏற்றுக்கொண்டுவிட்டதால் எங்களுக்கு அச்சமோ, ஐயமோ, எச்சரிக்கை உணர்வோ இல்லையென்று அர்த்தமில்லை; நாங்கள் இன்றைக்குக் கொண்டிருக்கும் அச்சமும் ஐயமும் சில ஆண்டுகளுக்கு முன்னால் ஆங்கிலேயர் நம்மை ஆண்டபோதும் இருந்தன. சிவில் சர்வீஸ் தேர்வுகள் லண்டனில் நடந்ததால் அந்த சேவையில் ஆங்கிலேயர்கள் அதிகம் தேர்ச்சி பெற்று அதிகாரிகளானார்கள். இப்போது சிவில் சர்வீஸ் தேர்வுகள் டெல்லியில் நடக்கப்போகின்றன. இந்தி பேசும் மாநில மக்கள்தான் அதிகம் தேர்ச்சியடையப்போகின்றனர்” என்று தீர்க்கதரிசனத்துடன் அன்றே பேசியிருக்கிறார் தாஸ்.

உடனடியாக என்று நான் கூறவில்லை - இன்னும் பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தி பேசும் உத்தர பிரதேசம் மத்திய மாகாணம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்களே இந்திய ஆட்சிப் பணியிலும் குடிமைப் பணியிலும் கோலோச்சுவர். டாக்டர் சுப்பராயன்கூட ஆங்கிலமே நீடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்; ஆங்கிலம் இல்லாவிட்டால் இந்தியை ரோமன் வரி வடிவத்தில் படிக்க (தேவநாகரி மூலம் அல்ல) அனுமதிக்க வேண்டும் என்றும் கோரினார்.

அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கோர எங்களுக்கு எல்லா உரிமைகளும் உண்டு!

அரசமைப்புச் சட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட மொழி பற்றிய துணைப் பிரிவு, ‘ஒரு சமரசம்’ என்றே கொள்ளப்பட வேண்டும். எல்லா சமரச ஏற்பாடுகளிலும் அதை மறு மதிப்பீடு செய்யவும் அதன் மீது மறு சிந்தனை செலுத்துமாறு கோரவும் எங்களுக்கு எல்லா உரிமைகளும் இருக்கின்றன. “இந்தியைப் பொருத்தவரை 1965-ல் அதுதான் ஆட்சி மொழியாக வரப்போகிறது, அதில் எந்த சந்தேகமும் இல்லை, அது ஏற்கெனவே முடிவான ஒன்று, அதைப் பற்றி யாரும் கேள்விகேட்கக்கூட முடியாது” என்றார் நண்பர். அல்ல, நீங்கள் பேசியது சரியல்ல; நம்முடைய அரசமைப்புச் சட்டம் நெகிழ்வுத்தன்மை கொண்டது. நம்முடைய அரசமைப்புச் சட்டம் ஜனநாயகத்தன்மை கொண்டது. அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துமாறு கோர எங்களுக்கு எல்லா உரிமைகளும் இருக்கின்றன.

அரசமைப்புச் சட்டத்தை 16-வது முறையாகத் திருத்திக்கொண்டிருக்கிறோம்; ஆட்சி மொழி எது என்ற பிரச்சினையை மறு மதிப்பீடு செய்யுங்கள் என்று கோருகிறேன். கசப்புணர்வு மேலும் பரவாமல் தடுக்க, செயற்கையாக இரு வேறு முகாம்கள் உருவாகாமல் தடுக்க, மொழிப் பிரச்சினையை மறு ஆய்வுக்கு உள்படுத்த வேண்டும், அதுவரை இப்போதைய நிலைமையே தொடர அனுமதிக்க வேண்டும் என்று இந்த அவை மூலம் அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். அது செய்யப்பட்டால் நான் இந்த அரசின் உள்நோக்கம் குறித்து அச்சமில்லாமல், திருப்தி அடைவேன்.

கட்சிக் கூட்டங்களில் உள்துறை அமைச்சருக்கு காங்கிரஸ்காரர்களே மாற்று யோசனைகளைக் கூறவில்லையா? இந்த மசோதா மீது எல்லா காங்கிரஸ் உறுப்பினர்களும் திருப்தியாக இருக்கிறார்களா? உள்துறை அமைச்சரும் பிரதமரும் கெஞ்சி, கேட்டுக்கொள்ளும் நிலைமை வரவில்லையா?  இப்படிக் கூறும்போது நான் எந்த ரகசியத்தையாவது கசியவிடுகிறேனா? அவை எல்லாம் செய்தித்தாள்களில் வரவில்லையா? தென்னிந்திய மாநிலங்களைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த மசோதாவால் திருப்தி அடைந்திருக்கிறார்களா? ‘ஷெல்’ என்ற வார்த்தைக்காக அவர்கள் போராடவில்லையா? மறுபரிசீலனைக் குழு தொடர்பான உள்பிரிவை ரத்துசெய்ய வேண்டும் என்று அவர்கள் போராடவில்லையா? அவர்களிடம் என்ன கூறப்பட்டது? 

உள்துறை அமைச்சருடன் எனக்குத் தனிப்பட்ட தொடர்பு ஏதும் கிடையாது. தொலைவிலிருந்து பார்க்கும்போதே ஈர்க்கிறார். அவருடைய கட்சிக்காரர்களுக்கு அவர் இன்னமும் கவர்ச்சிகரமான தலைவராக இருக்கிறார். எனவே அவர்களுடைய சந்தேகங்களைப் போக்கும் வழி அவருக்கு இருக்கிறது. ஆனால், பிரச்சினை சந்தேகங்கள் பற்றியதல்ல; இந்த மசோதாவின் உள்நோக்கம் குறித்துத்தான் மக்களுக்கு சந்தேகம். 42% மக்கள் (இந்தி பேசுகிறார்கள்) என்று வாதிடக்கூடும்… (நேரமாகிவிட்டது என்று மணி அடிக்கப்படுகிறது)

எம்.பி. லால்: அவர் பேச மேலும் நேரம் தரப்பட வேண்டும்.

என்.எம். அன்வர்: அவருக்கு இன்னும் சிறிது நேரம் தாருங்கள்

(ஒரே சமயத்தில் பல உறுப்பினர்கள்): ஆம், அவர் பேச மேலும் நேரம் ஒதுக்குங்கள்.

சி.என்.அண்ணாதுரை: இந்திய மக்களில் 42% பேர் பேசும் மொழியாக இந்தி இருப்பதால், அதற்கு ஆட்சிமொழி அந்தஸ்து தரப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படுகிறது. இந்த 42% பேரும் நாடு முழுவதும் பரந்து விரிந்து வாழ்ந்தால் இந்த வாதத்துக்கு தர்க்க நியாயம் இருக்கும். அது நியாயமாகவும் ஏற்கப்படும். 42% பேரும் அடுத்தடுத்த நிலப்பகுதியில் மிகவும் நெருக்கமாக வாழ்கின்றனர்.  இதை நீங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டால் அடுத்தடுத்துள்ள நிலப்பரப்பைச் சேர்ந்தவர்களுக்கு நிரந்தரமான, வற்றாத ஒரு சாதகத்தை ஏற்படுத்துகிறீர்கள்; அதன் மூலம் நாட்டின் பிற பகுதி மக்களுக்கு பாதகத்தை ஏற்படுத்துகிறீர்கள். அதனால்தான் இந்த 42% வாதத்தை ஏற்க முடியாது என்கிறேன்.

ஒரு பிராந்தியத்தின் மொழி இந்தி!

நாடு முழுக்க வாழும் 20% மக்களால் இந்திதான் பேசப்படுகிறது என்றால்கூட, கன்னியாகுமரியிலிருந்து இமயமலை வரையில் இந்திதான் பேசப்படுகிறது, ஆட்சி மொழியாக இருக்கட்டும் என்று கூறலாம். அந்த வாதத்தையும் ஆதரிக்க முடியாவிட்டாலும், புரிந்துகொள்ள முடியும். உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், பிஹார் மாநிலங்களில் வசிக்கும் மக்கள் பேசும் மொழிதான் தேசிய மொழி என்பதை எப்படி ஏற்க முடியும்? டி.டி. கிருஷ்ணமாசாரி ஒரு முறை பேசினார், இந்தியா –அதாவது பாரத் – அதாவது உ.பி.…

சந்தேஷ் குமார் பாசு: அப்படிப் பேசியவர் சியாமா பிரசாத் முகர்ஜி.

சி.என்.அண்ணாதுரை: முகர்ஜி பேசியதை டி.டி. கிருஷ்ணமாசாரி மீண்டும் குறிப்பிட்டார், எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. இந்தக் கருத்து முதலில் வங்காளத்திலிருந்துதான் வந்தது; எல்லாப் 'புரட்சிகர கருத்து'களும் வங்காளத்திலிருந்துதான் முதலில் வருகின்றன. எனவே அடுத்தடுத்துள்ள ஒரே நிலப்பரப்பில் பேசப்படும் மொழி நாட்டின் மக்கள்தொகையில் 42% என்பதால் அதையே ஏற்க வேண்டும் என்று கூறுவதைத் தார்மிகப் பெரும்பான்மையாகக் கருத முடியாது. எனவே ஆட்சி மொழியாவதற்கு இந்திக்கு எந்த உரிமையும் இல்லை என்று கூறுகிறேன்.

மொழிவாரி மாநிலங்கள் ஏற்பட்டுவிட்டதால் நாம் முழு ஒற்றுமையுடன் வாழ்கிறோம் என்று உள்துறை அமைச்சர் கூறினார். நாம் நமது மாநில மொழிகளை வளர்த்துக்கொண்டிருக்கிறோம்.  அவற்றை பிராந்திய மொழிகள் என்றுகூட நாம் கூறுவதில்லை, தேசிய மொழிகள் என்றே கூறுகிறோம். என் மாநிலத்தில் தமிழ்தான் தேசிய மொழி, அதுதான் ஆட்சி மொழியும். ஒவ்வொரு தேசிய அல்லது மாநில மொழியும் தத்தமது வழியில் வளர்ச்சி அடைந்துவருகின்றன. இந்த அவையில் உள்ள எல்லா உறுப்பினர்களும் என்னுடைய மாநிலத்துக்கு வந்து, இப்போதைய அரசியல் சூழலைப் பார்த்துவிட்டு, உங்களுடைய தேசிய மொழி முயற்சி சரிப்பட்டு வருமா என்று ஆராயக் கோருகிறேன்.

மொழிவாரி மாநிலங்கள் தங்களுடைய மொழிகளை வளப்படுத்துகின்றன. ஆந்திரத்தில் தெலுங்கு; கேரளத்தில் மலையாளம்; தமிழ்நாட்டில் தமிழ்; உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பிஹார், ராஜஸ்தானில் இந்தி என அவரவர் மொழிகளை அவரவர் தேசிய மொழியாக வளர்க்கின்றனர், அதற்கான உரிமை அவர்களுக்கு இருக்கிறது.

இருமொழி மாநிலமான பஞ்சாபில் பஞ்சாபி, இந்தி இரண்டும் பேசப்படுகிறது. இந்தியை ஆட்சி மொழியாக்கப் பெரிதும் பாடுபட வேண்டியிருந்தது என்று அவைத் தலைவர் கூறியதாக செய்தித்தாள்களில் வாசித்தேன். எனவே இந்தி பேசும் மாநிலங்களுக்கு என்னுடைய வேண்டுகோள் எல்லாம், உங்களுடைய மொழியை வளப்படுத்துங்கள், மாநில ஆட்சி மொழியாக்குங்கள், நீங்கள் விரும்பினால் அனைவரும் ஏற்கும் மொழியாக்குங்கள் என்பதுதான்.

சந்தோஷ்குமார் பாசு: இந்தியா முழுவதற்கும் ஒரு பொது மொழி வேண்டும் என்ற பிரச்சினைக்கு நீங்கள் கூறும் தீர்வு என்ன?

சி.என்.அண்ணாதுரை: என்னுடைய தீர்வு எதிர்மறையானது, நேர்மறையானது அல்ல. நான் கூற விரும்புவது இதைத்தான். இப்போதுள்ள நிலையே நீடிக்க அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துங்கள். இதற்கான தீர்வை நாம் காண வேண்டிய அவசியம் இல்லை.

இந்தியாவை ஆளும் கடைசி ஆட்சியாளர்கள் நாமல்ல. நாம் மிகவும் குழம்பியிருக்கிறோம். நம்மிடைய அரசியல் மாச்சரியங்கள் அதிகமாக இருக்கின்றன. எதிர்காலத்தில் பொருத்தமான தீர்வு ஏற்படும். அந்த வழியை நாம் அடைக்க வேண்டாம்.  இப்போதுள்ள நிலையையே பராமரிக்க அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வோம். இதை என்னுடைய தீர்வு என்று கூற மாட்டேன். இது என்னுடைய வேண்டுகோள், கோரிக்கை, இந்தத் தீர்வில்தான் தென்னிந்தியாவின் முழு அரசியல் எதிர்காலமும் – குறிப்பாக தமிழ்நாட்டின் எதிர்காலம் அடங்கியிருக்கிறது.

பி.கே.பி. சின்ஹா (பிஹார்): ஏன் இதை உலக நீதிமன்றத்தின் (தி ஹேக்) கவனத்துக்குக் கொண்டுசெல்லக் கூடாது?

சி.என்.அண்ணாதுரை: நான் இப்போது உள்துறை அமைச்சரை எதிர்கொண்டிருக்கிறேன், ஒரு காந்தியர் என்ற வகையில், நான் எதை தீமை என்றும் அநியாயம் என்றும் கருதுகிறேனோ அதற்கு எதிராகப் போராட எனக்கு அவர் உரிமை தர வேண்டும். இதன் விளைவு எதுவாக இருந்தாலும் சந்திக்கத் தயார், தமிழ்நாட்டில் நான் தனியாள் இல்லை. எனவே என்னுடைய வேண்டுகோள் எல்லாம், மிகவும் பெருமை வாய்ந்த மொழிக்குச் சொந்தக்காரர்களான மாநில மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுங்கள், இந்தியை ஆட்சிமொழியாகத் திணிப்பதால் அரசியல் மனமாச்சரியங்கள்தான் எஞ்சும் என்பது. “ஆங்கிலம் அன்னிய நாட்டு மொழியாயிற்றே!” என்று வாதிக்கப்பட்டது.

அமெரிக்காவையும் அயர்லாந்தையும் பாருங்கள்!

நான் ஒரு உதாரணம் கூற விரும்புகிறேன், இது என்னுடைய நண்பர் புபேஷ் குப்தாவுக்கு எரிச்சல் ஊட்டலாம். அமெரிக்கா என்ற நாடு உருவானபோது அங்கே குடியேறியவர்களில் வெறும் 20% பேர் மட்டுமே பிரிட்டிஷ் தீவுகளிலிருந்து சென்றவர்கள். 80%க்கும் மேற்பட்டவர்கள் ஸ்பெயின், போர்ச்சுகல், இத்தாலி மற்றும் இதர ஐரோப்பிய நாடுகளிலிருந்து சென்றவர்கள். இருந்தும் ஆங்கிலத்தையே ஆட்சி மொழியாகத் தேர்ந்தெடுத்தது அமெரிக்கா. ‘ஓ… அப்படியா, இது ஆங்கிலேயே-அமெரிக்க சதி-எங்களுக்கு நன்றாகத் தெரியும்’ என்று மனதில் நினைத்தபடி என் நண்பர் புபேஷ் குப்தா புன்னகைக்கிறார். இருந்தாலும் அமெரிக்கர்கள் எங்களைப் போலவே சுயமரியாதை உள்ளவர்கள் என்று கூறுவேன். ஆங்கிலத்தை ஆட்சி மொழியாக ஏற்றால் ஏராளமானோரின் உணர்வுகளை வெளிப்படுத்த முடியும் என்று கருதினர்.

இன்னொரு தகுந்த உதாரணத்தையும் என்னால் கூற முடியும். அயர்லாந்து இங்கிலாந்துக்கு எதிராகத் தீவிரமாகப் போர் புரிந்துகொண்டிருந்தது - காங்கிரஸ் பிரிட்டிஷாரை எதிர்த்துப் போராடிய அளவுக்கு இல்லையென்றாலும்! அப்போது அயர்லாந்து புரட்சிக்காரத் தலைவர் டி வலேரா கூறினார். “உங்களுக்கு அயர்லாந்து வேண்டுமா, கேலிக் மொழி வேண்டுமா என்று எங்களிடம் கேட்டால், அயர்லாந்து கோரிக்கையை விட்டுக்கொடுத்துவிட்டு கேலிக் மொழியைக் கேட்டுப் பெறுவேன்” என்று.

அயர்லாந்து சுதந்திர நாடானவுடன் அயர்லாந்து நாடாளுமன்றம் கேலிக் மொழியை ஆட்சி மொழியாக அறிவித்தது, அதே கையோடு ஆங்கிலமும் துணை ஆட்சி மொழியாக அறிவிக்கப்பட்டது. பிரிட்டிஷ்காரர்கள் மீது நமக்கு பகைமையோ, விரோதமோ இல்லை. நாம் வேறு நாடுகளின் குழுவில் இருக்க வேண்டும் என்று புபேஷ் குப்தா விரும்பினாலும் நாம் காமன்வெல்த் அமைப்பில் உறுப்பினராக இருக்கிறோம். அதிருஷ்டமோ, துரதிருஷ்டமோ நாம் காமன்வெல்த் நாடுகளில் ஒன்றாக இருக்கிறோம். காமன்வெல்த்தில் நீடிக்க முடியும், எல்லா தொழில்நுட்பங்களையும் பெற முடியும்.

ஆங்கிலம் என்ற சாளரத்தின் வழியாக உலகைப் பார்க்க முடியும். ஆனாலும், ஆங்கிலம் அன்னிய மொழி என்பீர்கள். பிரிட்டிஷ்காரர்கள் இங்கேயே இருந்து, ஆங்கிலத்தை ஆட்சி மொழியாக ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கூறினால் அதை நாம் அவமரியாதையாகக் கருதலாம்; அதை நாம் எதிர்த்தே ஆக வேண்டும். பிரிட்டிஷ்காரர்கள் ஆங்கிலத்தைத் திணிப்பது என்றே கேள்விக்கே இடமில்லை. நாம் பேசும் ஆங்கிலம் தரமாக இல்லை என்பதற்காகவே ஆங்கிலம் இங்கிருந்து வெளியேற வேண்டும் என்றே பிரிட்டிஷார் விரும்புவார்கள் என்று புபேஷ் குப்தாகூட குறிப்பிட்டார். எனவே வெளியிலிருந்து அன்னிய சக்திகள் அன்னிய மொழியைத் திணித்துவிட்டதாக இதைக் கருதக் கூடாது.

நம்முடைய தேவைக்காக, நம்முடைய பயன்பாட்டுக்காக, உகந்த வகையில் இருப்பதால், சூழ்நிலைகள் காரணமாக ஆங்கிலத்தை ஆட்சி மொழியாகத் தொடர வேண்டிய நிலையில் இருக்கிறோம். இந்த மொழி உத்தர பிரதேசத்துக்கு மத்திய பிரதேசத்துக்கு பிஹாருக்கு ராஜஸ்தானுக்கு தமிழ்நாட்டுக்கு ஆந்திரத்துக்கு அன்னிய மொழியாகும். இதனால் ஏற்படப்போகும் நன்மையும் தீமையும் அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானது.

மொழித் தூய்மை எனும் அபாயம் காத்திருக்கிறது!

ஒருவேளை இந்தி ஆட்சி மொழியாகிறது என்று வைத்துக்கொள்வோம்; இந்தியை மேலும் எளிமைப்படுத்த வேண்டும் என்று பிரதமர் கூறிவருகிறார். ஒரு மொழி தேசிய மொழியானால், அதை மேலும் மேலும் தூய்மைப்படுத்துவதும் அதை மேலும் எளிமைப்படுத்துவதும்தான் நடைபெறும். தமிழ் மொழியைக் கையாளும் அனுபவத்திலிருந்து இதைக் கூறுகிறேன். ஒரு மொழியை தேசிய மொழியாகவும் ஆட்சி மொழியாகவும் அறிவித்துவிட்டால் அதை உங்களால் எளிமைப்படுத்தவே முடியாது. எங்களுடைய மாநிலத்துக்கு வந்தால் புபேஷ் குப்தா காணலாம், ‘பழைய’ தமிழ் வார்த்தைகளுக்குப் பதிலாக ‘புதிய’ வார்த்தைகளை நிறையப் பயன்படுத்தி வருகிறோம்; இவையெல்லாம் ‘பழைய அகராதிகளிலிருந்து புதிதாக’ எடுக்கப்பட்டவை! சம்ஸ்கிருதத்தோடு தமிழ் கலந்திருந்தது. இப்போது சம்ஸ்கிருதம் நீக்கப்பட்டு தமிழ் தூய்மையாக்கப்பட்டுள்ளது. இந்தி பேசும் மாநிலங்களிலும் இதுதான் நடக்கும். அப்படி நடக்கும்போது ‘எளிமையான இந்தி படியுங்கள்’ என்று எம் இனத்தவரைக் கேட்பது அவர்களுக்குப் பெரிய பின்னடைவாகிவிடும் அல்லவா?

இந்தி பேசும் மாநிலங்களில் – இந்தி பேசும் மக்களுக்கு அதுவே தாய்மொழியாக இருக்கும்; அதுவே அரசு மொழியாகவும் இருக்கும்; அதுவே பயிற்று மொழியாகவும் இருக்கும்; அதிவே மத்திய அரசின் மொழியாகவும் இருக்கும்! இந்தி பேசும் மக்களுக்குத்தான் எத்தனை சலுகைகள், வாய்ப்புகள், உரிமைகள். இந்தி பேசாத எம் போன்ற மக்களுக்கு எவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்துகிறீர்கள்? 

இந்தி எங்களுக்குத் தாய்மொழி அல்ல. எனவே நாங்கள் இந்தி கற்றுக்கொண்டாலும் நண்பர் சத்யநாராயணாவைப் போலத்தான் பேச முடியும்.  நீங்கள் வட இந்தியாவில் வினோதங்களை ஏற்படுத்தப் பார்க்கிறீர்கள். எவ்வளவுதான் திறமையாகப் படித்தாலும் சரளமாகப் பேசினாலும் நமக்குத் தாய்மொழியாக இல்லாத ஒன்று அனுகூலங்களைத் தராது; அதனால்தான் சொல்கிறோம் இந்த மொழி மசோதாவுக்குப் பின்னால் அரசியல் இருக்கிறது என்று.

இதை நீங்கள் உணராமல் இருக்கலாம். தங்களுக்கு எந்த உள்நோக்கமும் இல்லை என்று அமைச்சர் தனது உரையின் இறுதிப் பகுதியில் கூறினார். அவரைப் போன்ற கனவான்கள் இதைக் கையாளும்போது அப்படி ஏதும் இருக்க முடியாது. உங்களுக்கு நோக்கம் இருக்கிறதோ, இல்லையோ இறுதியில் விளைவு அப்படிப்பட்டதாகத்தான் இருக்கும்.

எந்த விளைவுகளுக்கும் நாங்கள் அஞ்சப்போவதில்லை!

இந்தியை ஆட்சி மொழியாகத் திணிப்பது இந்தி பேசும் மாநிலங்களுக்கு திட்டவட்டமான, நிரந்தரமான சாதகமாக அமையும். இதைத்தான் ஒரிசாவைச் சேர்ந்த பி.தாஸ், டாக்டர் சுப்பராயன் போன்றோர் இந்திய அரசமைப்புச் சட்ட நிர்ணய சபையிலேயே கூறினர். ராஜ்யசபையிலும்கூட சில ஆண்டுகளுக்கு முன்னால் இது தொடர்பான கேள்வி விவாதிக்கப்பட்டபோது என்னுடைய நண்பர் அவினாசிலிங்கம் செட்டியார் தனது எச்சரிக்கைக் குரலை உயர்த்தினார்.

எனவே, இந்த எதிர்ப்பு திமுகவால் மட்டுமே எழுப்பப்பட்டது என்று எண்ணாதீர்கள். இந்தப் பிரச்சினையில் திமுக சிறிய பங்கை மட்டுமே வகிக்கிறது. இந்த மசோதாவின் எதிர்காலம் பொருத்துதான் திமுக சிறிய இடத்தைப் பிடிக்கிறதா, பெரிய இடத்தைப் பிடிக்கப்போகிறதா என்பது முடிவாகும். இந்தி ஆட்சிமொழியாக திணிக்கப்பட்டால் திமுக தனது இடைவிடாத போராட்டத்தைத் தொடரும்; விளைவுகள் எப்படிப்பட்டவையாக இருந்தாலும் கவலைப்படாது.

அன்றொரு நாள், “நெருக்கடிநிலை நிலவும்போது நான் விரும்பும் எந்த நடவடிக்கையையும் எடுக்க நாடாளுமன்றம் எனக்கு அதிகாரத்தைத் தருகிறது” என்று அன்றொரு நாள் உள்துறை அமைச்சர் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்தேன். அவர் சொன்னதன் பொருளை உணர்ந்திருக்கிறேன், இந்தித் திணிப்பு முயற்சி உண்மையிலேயே நடக்குமானால் என்னுடைய மனசாட்சி சும்மா இருக்காது; தென்னிந்தியா முழுவதும் திரண்டு எழும். தென்னிந்தியா என்று சொல்லும்போது, ஆந்திரர்கள், மலையாளிகள் மற்றும் பிற பகுதியினர் என்ன கூறுவார்கள் என்று எனக்குத் தெரியும்; “இல்லையில்லை, நாங்கள் உங்களுடன் இல்லை” என்றுதான் கூறுவார்கள். ஆனால், இந்தித் திணிப்பின் ஆபத்தை உணர்ந்தவர்கள், அதன் விளைவைச் சிந்திக்க முடிந்தவர்கள் அனைவரும் என்னோடு இருக்கின்றனர்.

ஓர் உறுப்பினர்: மெட்றாஸ் நகரச் சிறுபான்மையின மக்கள் உங்களுக்கு ஆதரவாக இருக்கின்றனர்.

சி.என்.அண்ணாதுரை: (ஒட்டுமொத்த இந்தியாவுடன் ஒப்பிடுகையில்) நான் சிறுபான்மைப் பிரிவைச் சேர்ந்தவன் என்பதால் இறைஞ்சுகிறேன். நானே பெரும்பான்மைச் சமூகத்தவனாக இருந்திருந்தால் என்னுடைய வாதம் ஏற்கப்பட்டிருக்கும். நான் குற்றஞ்சாட்டவில்லை. காங்கிரஸ் கட்சி பெரும்பான்மைத் தொகுதிகளில் வெற்றி பெற்றதால் ஆட்சி நடத்தவில்லை, சிறுபான்மைச் சமூக மக்களின் ஆதரவு கிடைத்திருப்பதால் அதிகாரம் அதனிடம் இருக்கிறது என்று நீங்கள் கூறிக்கொள்வதால் இதைத் தெரிவிக்கிறேன்.

கே.பி. சின்ஹா: மிகப் பெரிய வாக்குத் திரள்கள்.

சி.என்.அண்ணாதுரை: கடந்த மக்களவைப் பொதுத் தேர்தலில் மொத்தமாக 45% வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ் கட்சி 72% தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. எதிர்க்கட்சிக் குழுக்களோ 55% வாக்குகளைப் பெற்றும் 28% இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்தது.

(குறுக்கீடுகள்)

சி.என்.அண்ணாதுரை: இந்த உண்மைகளையெல்லாம் வெளியிடுமாறு என்னைச் சீண்டாதீர்கள். எனவே இங்கே பெரும்பான்மை – சிறுபான்மை என்ற வாதங்கள் பொருந்தாது. நீதி எது, சுதந்திரம் எது என்றுதான் பார்க்க வேண்டும். ஆலோசனை, கருத்தொற்றுமை ஆகியவற்றுக்குத்தான் முக்கியத்துவம் தர வேண்டும். அன்பும் சுமுகத் தன்மையும் வேண்டுமா அல்லது பகையும் பூசலும் வேண்டுமா என்று தீர்மானிக்க வேண்டும்.

இந்தப் பிரச்சினையை அப்படித்தான் அணுக வேண்டுமே தவிர எங்களுக்குப் பெரும்பான்மை வலு இருக்கிறது என்று எண்ணிக்கை அடிப்படையில் தீர்மானிக்கக் கூடாது. மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டிருந்தாலும் இதைத் திரும்பப் பெறுமாறு உள்துறை அமைச்சரை வேண்டிக்கொள்கிறேன். பிரதமர் அளித்துள்ள உறுதிமொழியைக் கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள். அவரிடம் கடைசியாக நான் வலியுறுத்த விரும்புவது இதைத்தான்.

இவ்வளவுதானா உங்கள் அரசியல் மதியுகம்?

பிரதமரின் உறுதிமொழிதான் என்ன? பிரதமர் உறுதிமொழி அளித்தார் என்று சொல்வதற்கு முன்னால் அந்த உறுதிமொழிக்கான மூலம் எது என்று பார்க்குமாறு உள்துறை அமைச்சரைக் கேட்டுக்கொள்ள ஆசைப்படுகிறேன். ஏன் அப்படியொரு உறுதிமொழி தரப்பட்டது, எப்போது தரப்பட்டது, எப்படி தரப்பட்டது, யாருக்குத் தரப்பட்டது என்று ஆராயுங்கள்.

ஒரு நாட்டின் பிரதமர் யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் உறுதிமொழிகளை அளித்துக் கொண்டே இருக்க மாட்டார். அன்றைக்கு அப்படியொரு உறுதிமொழியைத் தர வேண்டிய அளவுக்கு அரசியல் சூழ்நிலை நிலவியது. நாட்டு மக்களின் கொதிப்படைந்த உள்ளங்களைக் குளிர்விக்க வேண்டிய கடமை பிரதமருக்கு ஏற்பட்டது. அப்போதுதான் மொழிவாரிச் சிறுபான்மை மாநிலங்களின் ஐயங்களைப் போக்கும் வகையில் ஆட்சி மொழி தொடர்பாகப் பிரதமர் அந்த உறுதிமொழிகளை அளித்தார். ‘இணை ஆட்சி மொழி’ என்ற வார்த்தையை ஏன் நாம் பயன்படுத்தக் கூடாது? 

சிலர் கேட்கக்கூடும், ஏன் உங்களுக்கு இப்போதைய தலைப்பில் திருப்தி இல்லையா என்று? இது ஆட்சி மொழிதான்; இந்தத் தலைப்பு எனக்குத் திருப்தியைத் தந்தால் நண்பர் வாஜ்பாய்க்கு அதில் திருப்தி இருக்காது, ஏனென்றால் ‘ஆட்சி மொழி’ என்று அல்ல - ‘ஆட்சி மொழிகள்’ என்று பன்மையில் இருக்கிறதே என்று நினைப்பார். வாஜ்பாய்க்கு நான் எதிரானவன் அல்ல. அவருடைய வார்த்தைகளுக்கு அர்த்தம் என்ன என்று எனக்குப் புரியும். அரசியலில் எதிரெதிர் துருவங்களாக இருப்பவர்களுக்கு எதிர்த்தரப்பார் என்ன சொல்கிறார்கள், நினைக்கிறார்கள் என்று புரிந்துவிடும். இப்படியும் இல்லாமல் – அப்படியும் இல்லாமல் கலவையாக இருப்பவைதான் பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும்.

என் நண்பர் வாஜ்பாய் இந்தி மொழியில்தான் பதவியேற்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டார். அவருடைய துணிச்சலைப் பாராட்டுகிறேன். என்னுடைய மாநிலத்திலும் ஏராளமான (மொழிப்பற்று மிக்க) வாஜ்பாய்கள் உருவாக வேண்டும் என்று விரும்புகிறேன். வாஜ்பாய்க்கு முழு வாய்ப்பு கிடைத்தால் இந்தியை இந்தியாவின் ஆட்சி மொழியாக மட்டுமல்ல – உலக ஆட்சி மொழியாகக்கூட மாற்றிவிடுவார்! அவருடைய மொழி ஆர்வத்துக்காகவே அவரை எனக்கு மிகவும் பிடிக்கிறது. ஆனால் காங்கிரஸ் அரசோ இப்படிச் செய்திருக்கிறது, ஒரு பக்கம் இந்தி பேசும் மக்களை ஊக்குவித்துக்கொண்டே இருக்கிறார்கள், இன்னொரு பக்கம் எங்களிடம் இந்தி திணிப்பு இருக்காது என்று உறுதிமொழியை வழங்கிக்கொண்டே இருக்கிறார்கள்.

இந்தியை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு நேரும்போதெல்லாம், ‘அச்சம் வேண்டாம்; 1965 பிறக்கட்டும், இந்தி ஆட்சி மொழியாகிவிடும்’ என்று கூறுகின்றனர். வாஜ்பாய்க்குத் திருப்தியே இல்லை. அதனால்தான் இந்த மசோதா அவருக்கு அதிருப்தியைத் தந்திருக்கிறது. ஆங்கிலத்துக்கு மேலும் பத்தாண்டுகள் ஆயுள் நீட்டிப்பு கிடைத்திருக்கிறது. அதனால்தான் அவர் ‘எங்கே என் இந்தி?’ என்று கேட்கிறார்.

ஆட்சி மொழி தொடர்பாக நீங்கள் எங்களுக்கும் நிறைய வாக்குறுதி தந்திருக்கிறீர்கள். ஆங்கிலம் இணை ஆட்சி மொழியாக காலவரம்பின்றித் தொடரும் என்று கூறினீர்கள். ‘காலவரம்பின்றி’ என்ற வார்த்தைக்கு பண்டிதர் ஜவாஹர்லால் நேரு இப்படியொரு விளக்கத்தையும் அளித்தார்: “நீங்கள் விரும்பும்வரை, இந்தி பேசாத மக்கள் விரும்பும்வரை, ஆட்சி மொழி தொடர்பான இறுதி முடிவு எடுக்கும் உரிமையை இந்தி பேசும் மக்களுக்கு அல்ல, இந்தி பேசாத மக்களிடம் விட்டுவிடுகிறேன்’ என்று கூறியிருந்தார்.

வாஜ்பாய் சிறந்த நண்பர்; எங்களுக்குள் பகையை மூட்டாதீர்கள்!

இந்தித் திணிப்பு இருக்காது என்று எங்களிடம் கூறிவிட்டு, இந்தி வேண்டும் என்று கோரும் வாஜ்பாயைப் போன்றவர்களைக் கோரிக்கைகளை வலியுறுத்த ஊக்குவிப்பதன் மூலம் எனக்கும் வாஜ்பாய்க்கும் இடையில் பகையை மூட்ட முற்படுகிறீர்கள். உத்தர பிரதேசத்தில் இந்தியை வளர்க்க வாஜ்பாய்க்கு ஊக்குவிப்பு தந்து, எனக்கும் வாஜ்பாய்க்கும் இடையில் ஆங்கிலம் தொடர்புமொழியாகத் தொடர நீங்கள் அனுமதிக்கும்பட்சத்தில் வாஜ்பாயைவிடச் சிறந்த நண்பரை நான் பெற முடியாது. இந்த மசோதா மூலம் நீங்கள் அரசியல் மாச்சரியங்களை வளர்க்கிறீர்கள். பிரதமர் அளித்த வாக்குறுதி இந்த மசோதாவில் இடம் பெறவேயில்லை. இந்த மசோதாவின் ஒவ்வொரு ஷரத்தாக மக்கள் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆங்கிலம் தொடரும் என்று பிரதமர் சொன்னார்; ஆங்கிலம் தொடர்கிறது, எப்படி?  இந்தியுடன் சேர்ந்த இணை ஆட்சிமொழியாக அல்ல, மத்திய அரசு தீர்மானிக்கும் சில செயல்களுக்கு மட்டும் ஆங்கிலம் இணை ஆட்சிமொழியாக இருக்கும். பிரதமர் அளித்த வாக்குறுதியோ இந்தியுடன் ஆங்கிலமும் இணை ஆட்சிமொழியாக எல்லா நிலையிலும் தொடரும் என்பதுதான்; பிரதமரின் வாக்குறுதி முழுதாக நிறைவேற்றப்பட வேண்டுமென்றால் இப்போதைய மசோதா கைவிடப்பட வேண்டும்; நீங்கள் அஞ்சா நெஞ்சர்கள், வேட்டியை வரிந்து கட்டுங்கள், இந்த மசோதாவைக் கைவிடுவதால் எழும் எதிர்ப்பைத் துணிந்து எதிர்த்து நில்லுங்கள். ஆட்சி மொழியாக ஆங்கிலமே தொடரும் என்ற இப்போதைய நிலைமை நீடிக்க அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துங்கள். அன்னிய மொழி என்பதால் இதைக் கைவிட வேண்டும் என்று நினைக்காதீர்கள். எந்த நாட்டிடமிருந்தும் அறிவியல், தொழில்நுட்ப உதவிகளைக் கேட்டுப்பெறும் காலம் இது; ஆங்கில மக்கள் நமக்குக் கொடுத்தத் தொழில்நுட்ப உதவியாகவே இம்மொழியைக் கருதுவோம்.

இந்தியாவின் ஆட்சி மொழி அல்லது பொது மொழிப் பிரச்சினைக்கான தீர்வை எதிர்காலம் காணட்டும். பதற்றம், கோபம் ஏதும் இல்லாத நிலையில் எதிர்காலத்து இந்தியர்கள் இதற்கொரு தீர்வு காணட்டும். எனவே இந்த மசோதாவைக் கைவிடுமாறு உள்துறை அமைச்சரைக் கேட்டுக்கொள்கிறேன். இந்த மசோதா மீதான விவாதம் தொடங்கியதிலிருந்து தென்னிந்தியாவின் அமைதியான சூழலில் பாதிப்பு ஏற்பட்டுவருகிறது.

தமிழ்நாட்டின் எல்லா பகுதிகளிலும் எல்லா ஊர்களிலும் மக்கள் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து ஆட்சி மொழி தொடர்பாக சூடாக விவாதித்து வருகின்றனர். சாதாரணமாக விவாதிக்கவில்லை, அரசியல் சார்புடனும் மாச்சரியங்களுடனும் ஆக்ரோஷமாக விவாதிக்கின்றனர். நாம் விரட்டியடிக்கப்பட வேண்டிய எதிரி (சீன எல்லையில்) அங்கே இருப்பதாக உள்துறை அமைச்சர் கூறிவிட்டு, நமக்குள்ளேயே மோதல்களை ஏற்படுத்துவதற்கு இதுதான் உற்ற நேரமா? அரசியல் சுமூக நிலையையும் அரசியல் சூழலையும் சேதப்படுத்த இதுதான் சரியான நேரமா? மிகச் சிறந்த ராஜதந்திரி என்ற வகையில் இந்தப் பிரச்சினையில் கவனம் செலுத்தி இம்மசோதாவைக் கைவிட வேண்டும், அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தி, இந்தி பேசாத மக்கள் முடிவெடுக்கும்வரையில் ஆங்கிலமே ஆட்சி மொழியாக நீடிக்கும் வகையில் அரசியல் சட்டத்துக்குத் திருத்தம் கொண்டுவர வேண்டும்.

இப்படிச் சொல்வதற்காக நான் நகைப்புக்கிடமானவனாகிவிட மாட்டேன், மத்திய திட்டக் குழு உறுப்பினரான ஸ்ரீமன் நாராயண், இந்தி பேசாத மக்கள்தான் (ஆட்சி மொழி தொடர்பாக) முடிவெடுக்க வேண்டும் என்று கடந்த வாரம்தான் கூறியிருக்கிறார். உள்துறை அமைச்சர் லால்பகதூர் சாஸ்திரி கலந்துகொண்ட கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மிஸ்ரா என்ற பெயருள்ள தலைவர் பேசியிருக்கிறார், “ஆட்சி மொழி தொடர்பாக இந்தி பேசாத மக்களிடம் கையெழுத்திடாத வெற்றுக்காசோலையை (முடிவெடுக்கும் வாய்ப்பை) கொடுத்துவிட வேண்டும், அதில் அவர்கள் பெயரையும், தேதியையும் எழுதிக்கொள்ளட்டும்” என்று. இதுதான் அரசியல் பெருந்தன்மை, அரசியல் மதிநுட்பம்.

உங்களிடம் எதிர்பார்க்கப்பட்ட மதிநுட்பமும், ராஜதந்திரத் தன்மையும் இந்த மசோதாவால் தகர்க்கப்பட்டுவிட்டது; கடந்த ஓராண்டாக ஏற்படுத்தப்பட்டிருந்த ஒற்றுமையைக் குலைத்து அமைதியான அரசியல் சூழலில் பிளவை ஏற்படுத்துகிறீர்கள். எனவே ஒற்றைக் குரலாக – புபேஷ் குப்தா கூறியபடி இரைச்சலான குரலாக இருந்தாலும் – எனது கோரிக்கையை உள்துறை அமைச்சரிடம் வைக்கிறேன்; திமுகவின் அதிகாரப்பூர்வ பிரதிநிதி என்ற வகையிலும் இந்தி பேசாத தென் மாநிலங்களின் அதிகாரப்பூர்வமற்ற தூதுவன் என்ற வகையிலும், இந்தியின் தீமையையும் விளைவுகளையும் புரிந்துகொண்டவர்களின் சார்பிலும் கேட்கிறேன், இந்த மசோதாவை வலியுறுத்தாதீர்கள். மொழி விவகாரத்தில் மறு ஆய்வு செய்யுங்கள். மறு ஆய்வு முடிவு வரும்வரையில் ஆங்கிலமே ஆட்சி மொழியாக நீடிக்க அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தி இப்போதைய நிலையைப் பராமரியுங்கள்.

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
சி.என்.அண்ணாதுரை

சி.என்.அண்ணாதுரை, சுதந்திர இந்தியாவில், தமிழ்நாட்டில் அமைந்த திராவிட இயக்க ஆட்சியின் முதல் முதல்வர். தாய்நிலத்துக்குத் தமிழ்நாடு எனும் பெயரை உத்தரவாதப்படுத்தியவர். ஏராளமான நூல்களின் ஆசிரியர்.


5

4





பின்னூட்டம் (6)

Login / Create an account to add a comment / reply.

K Chitra   2 years ago

அறிஞர் என்ற சொல்லுக்கே அர்த்தம் சேர்த்தவர் 🙏

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Saravanan Sekar   2 years ago

Very soon year 2023 will be born. C.N. Anndurai delivered this speech in the year 1963. Even after 60 years, still the points put forth by him stand relevant in Today's India. An immaculate speech. What a Clarity on his thoughts , depth of argument is simply amazing.. Thanks for reminding and sharing this text Arunchol..

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Madavan   2 years ago

காலம் கடந்து இன்றும் நிலைத்து நிற்கும் எழுத்துகள். தீர்க்கதரிசனமான வரிகள்

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Madhukumar   2 years ago

தற்பொழுதுள்ள சூழ்நிலைக்கும் பொருந்தும் மிக அருமையான கட்டுரை.. ....

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Rajendra kumar   3 years ago

என்னவொரு அற்புதமான பேச்சு..... படிக்க படிக்க அறிஞர் அண்ணாவின் முகம் எனக்குள் மலர்ந்து கொண்டே இருக்கிறது.... சிங்க கர்ஜனையும் வார்த்தை லாவகமும் அவருக்கே உரிய தனிச்சிறப்பு.... அறிஞரின் மாதங்களுக்கு ஆயிரமாயிரம் அன்பு முத்தங்கள்

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Thiruvasagam   3 years ago

Outstanding... !

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

வலிமிகல்டூட்ஸிதிராவிட இயக்கக் கொள்கைகள்ஒடுக்கப்பட்ட சமூகம்பாஜகவின் கவலைகளைப் பெருக்கும் ஆறாவது கட்டம்அதானி குழுமம்சுரங்கப் பாதைநேர்மையாகபொது பாதுகாப்புச் சட்டம் (பிஎஸ்ஏ)புதிய தாராளமயக் கொள்கைஏழைகளின் உணர்வுகளுடன் விளையாடும் பைஜூஸ்!வடவர் ஆதிக்கம்மராத்திய பேரரசின் பங்களிப்புஆண்களை அலையவிடலாமா?சிறுநீர்க் கசிவுவரவு – செலவுபிரதிட்ஷைசமஸ் - கே.அஷோக் வர்தன் ஷெட்டிமையப்படுத்தப்படும் உறுப்பு மாற்றுத் திட்டம்: வரமா?யோகி அதித்யநாத்நவீன இயந்திரச் சூழல்தேர்தல் வரலாறுவிவசாய அமைப்புகள்writer balasubramaniam muthusamyஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டிஇந்திய வரலாற்றை இனி தென்னிந்தியாவில் தொடங்கி எழுத அந்தரங்கச் சுத்தம்விகாஸ் தூத் கட்டுரைகாங்கிரஸ் - இடதுசாரிகள் ஒற்றுமைநவீனத் தமிழாசிரியர்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!