கட்டுரை, இரு உலகங்கள் 5 நிமிட வாசிப்பு
ப்ரக்ருதி ஏன் ஆனந்தா வழியே தன் வாழ்வை அர்த்தப்படுத்திக்கொள்ள முயன்றாள்?
சமந்தா - சைதன்யா பிரிவை முன்வைத்து ‘இரு உலகங்கள்’ தொடர் கட்டுரைகளை ஆரம்பித்தபோது, பலரும் ஒரு விமர்சனத்தை முன்வைத்திருந்தனர். ‘பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்வில் நுழையலாமா?’, ‘இது கவன ஈர்ப்புக்கான உத்தி’, ‘அவர்கள் இப்படித்தான் எண்ணினார்கள் என்று எப்படி எண்ண முடியும்?’ இப்படியெல்லாமும் கேட்டு ஏராளமான விமர்சனங்கள் வந்திருந்தன.
அப்படியெல்லாம் ஒரு மண்ணும் இல்லை. நாம் எல்லோருமே பிரபலங்களைப் பிரபலங்களாக மட்டும் பார்ப்பதில்லை. குறிப்பாக சினிமா நட்சத்திரங்களை நம் வாழ்வின் ஓர் அங்கமாகவே இந்தியாவில் பார்க்கிறோம். இதில் பாசாங்கு ஏதும் இல்லாமல், எனக்குத் தோன்றியதைத் தோன்றியபடி எழுத நினைக்கிறேன். இந்த அத்தியாயத்தையும் அப்படியே எழுதுகிறேன்.
⁋
நானும் என் கணவரும் யூட்யூபில், ‘சைமா விருதுகள்’ (SIIMA Awards) வழங்கும் நிகழ்வை சமீபத்தில் பார்த்துக்கொண்டிருந்தோம். ஏற்கெனவே அது பார்த்திருந்ததுதான். நடிகை நயன்தாராவுக்கு, ‘நானும் ரவுடிதான்’ படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்படும் காட்சி அது.
விருதைப் பெறுகிற நயன்தாரா சொல்கிறார், “என்னுடைய திறமையை நம்பி இந்தக் கதாப்பாத்திரத்தை எனக்களித்த விக்னேஷ் சிவனிற்கு நன்றி. இந்த விருதினை நான் அவர் கையால் பெற விரும்புகிறேன்!”
மேடைக்கு விக்னேஷ் சிவன் வருகிறார். நயன்தாரா வெட்கத்தில் திளைக்கிறார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் இருவரையும் கலாய்க்கிறார்கள்.
அது விக்னேஷ் சிவனுக்கு முதல் படம். இந்தப் படத்தில் நடிப்பதற்கு முன்பாகவே நயன்தாரா சூப்பர் ஸ்டார் நடிகையாக அறியப்பட்டவர். “அவரிடம் கதை சொல்லிவிட முடிந்தாலே, அவர் அருகில் செல்ல முடிந்தாலே அது அதிர்ஷ்டம்தான்!” என்று தான் கருதியதாக விக்னேஷ் சிவனுமே கூறுகிறார். இப்படிப்பட்ட சூழலில் ஏன் நயன்தாரா இவ்வளவு பெரிய கிரீடத்தை விக்னேஷ் சிவனுக்கு அளிக்க முற்பட்டார்?
போரிட்டு வெற்றிகளை வசப்படுத்துகிற காளியும் அவள்தான், ஒரு குழந்தையென அதைத் தன் ஆணிடம் சமர்ப்பிக்கிற காளியும் அவள்தான் என்று எனக்குத் தோன்றியது. உண்மையில் அந்த இரண்டாவது செயல்பாட்டில்தான் பெண்ணின் வெற்றி முழுமை அடைவதாக நான் உணர்கிறேன்!
⁋
எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது. நான் ‘காளி’ எனக் குறிப்பிடும்போதெல்லாம் நீங்கள் அவளை என்னவாக உருவகித்துக்கொள்கிறீர்கள்? அரக்கனைக் கொன்று காலுக்கடியில் அழுத்தியவாறு வாயிலும் கண்களிலும் ரத்தம் தெறிக்க நிற்கிறவளையா? அப்படியென்றால் என் சந்தேகம் சரி, தயவுசெய்து உங்கள் உருவகத்தை மாற்றிவிடுங்கள்.
நான் குறிப்பிடும் ‘காளி’ அவளது தோற்றத்தைக் கண்டு பகடிசெய்த ஒரு சிறுவனை விகடகவியாக்கி மகிழ்ந்தவள்! தெனாலிராமன் கதை உங்களுக்குத் தெரியும்தானே? காளியின் ஆயிரம் தலைகளிலிருந்த ஆயிரம் மூக்குகளைக் கண்டு நகைத்தபடி, ‘ஜலதோஷம் பிடித்தால் நீ எப்படிச் சமாளிப்பாய்?’ என அவன் சிரித்ததாகவும், அதில் மகிழ்ந்த அவள் அவனை விகடகவியாக்கியதாகவும் அப்பா என் சிறுவயதில் கதைகள் சொல்லியிருக்கிறார்.
பெண்கள் அப்படித்தான், எளிய பரிசுகளில் மகிழ்ந்து பெரிய பரிசுகளைத் தருகிறவர்களாகவே இருக்கிறார்கள். கவனம், எளிய பரிசு என்றாலும், நீங்கள் அடிக்கடி தர வேண்டும்!
⁋
தாகூரின் ‘சண்டாலிகா’வை நீங்கள் வாசித்திருக்கிறீர்களா? கொல்கத்தா வந்த பிறகுதான் அதை வாசித்தேன். தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்துவிட்ட ப்ரக்ருதி, தான் பெண்ணாகவும் தாழ்த்தப்பட்டவளாகவும் பிறந்துவிட்டதையும் அதனால் எதிர்கொள்ளும் புறக்கணிப்புகளையும் எண்ணித் துயருறுகிறவளாய் இருக்கிறாள். அவளது தயக்கத்தையும் தாண்டி அவளிடம் நீர் பெற்று அருந்துகிற புத்தபிக்கு ஆனந்தா வாழ்வின் பொருள் பற்றிய சிந்தனைகளை அவளுள் தூண்டுகிறார். இச்சிந்தனைகளால் உளமீட்சி அடைகிற ப்ரக்ருதி அவர் மீது பெரும் மோகம் கொள்கிறாள். தன் அன்னையின் மந்திரச் சக்திகளால் ஆனந்தாவைத் தன்னை நோக்கி ஈர்க்க முயன்று அதனால் ஆனந்தாவும் பெரும் துயருக்குள்ளாவார்.
நயன்தாரா ஏன் விக்னேஷ் கையால் விருது பெற விரும்பினார் என்ற கேள்விக்கு ஆட்பட்டது மாதிரியே ‘சண்டாலிகா’ வாசித்தபோது, ப்ரக்ருதி ஏன் ஆனந்தா வழியே தன் வாழ்வை அர்த்தப்படுத்திக்கொள்ள முயன்றாள் என்றும் கேள்விக்கு ஆட்பட்டிருக்கிறேன்.
தன்னுடைய வெற்றிகளையும் மீட்சிகளையும் ஓர் ஆண் வழியாகவே அர்த்தப்படுத்திக்கொள்ள பெண் விரும்புகிறாளோ என்று தோன்றியிருக்கிறது. ஆணுக்கும் இப்படித்தான் இருக்குமா என்றும் கேள்வி எழுந்திருக்கிறது. என்னால் அதை உறுதிபடுத்திக்கொள்ள முடியவில்லை. ஆனால், பெண்கள்போல ஆண்கள் இல்லை என்ற சந்தேகம் உறுதியாக இருக்கிறது!
⁋
பிறிதொரு உயிரைப் புரிந்துகொள்ளுதல் கடினம் என்பதை யாவரும் அறிவார்கள். தன்னுயிரைப் புரிந்துகொள்ளுதலுமே நாள்படத்தான் விளங்குகிறது. உயிருக்கும் உடலுக்கும் இடையில் உள்ள உறவையும்கூட. ஒரு பெண்ணாக என் மனதில் உண்டாகும் மாற்றங்களை உடலுக்குள் உண்டாகும் மாற்றங்களோடு இப்போதெல்லாம் நெருக்கமாகப் பொருத்திப் பார்க்கிறேன்.
குழந்தை பிறந்தவுடன்தான் இதை முதன்முதலில் நான் கண்டுணர்ந்தேன். எனக்குக் குழந்தை பிறந்து மூன்று மாதங்கள் ஆகியிருந்தது. என்னில் சுரக்கிற பால் குழந்தையின் பசியைத் தீர்க்கப் போதுமானதாக இல்லாமல் இருப்பதை, குழந்தையின் தொடர் அழுகை வழியாக நாங்கள் கண்டுகொண்டோம். மருத்துவரிடம் கேட்டபோது, குழந்தைக்குப் பால்மாவைச் சுடுதண்ணீரில் கலந்து புகட்டுமாறு சொன்னார்.
குழந்தைக்கு முதல் முறையாக அந்தப் பாலைக் கொடுக்கும்போது எனக்கு அவ்வளவு பதற்றம்! அதை - அதன் சுவையைக் குழந்தை ஏற்றுக்கொள்ளுமா, அதன் பசி தீருமா, ஒவ்வாமை ஏதும் உருவாகிவிட்டால், குழந்தையின் பசி தீர்க்க வேறு என்ன வழி? எவ்வளவோ பரிதவிப்புகள்!
குழந்தை எந்த ஒவ்வாமையும் இன்றி பாலை அருந்தி நிம்மதியாக உறங்கியபோது நானும் என் கணவரும் மிகுந்த மகிழ்ச்சியடைந்தோம். கொஞ்ச நேரத்தில் நான் தூங்கப் படுத்தபோது என் உள்ளத்தில் பெரும் கலக்கம் பரவியது.
இத்தனை நாட்களாக நான் தூக்கிக்கொள்ள வேண்டும் என முரண்டுபிடித்து அழத பிள்ளை இப்போது அந்தப் பாலைக் குடித்ததும் என்னைத் தேடாமல் உறங்குகிறதே, எனில் அம்மா என்பது வெறும் பால்தானா, அது இருந்தாலே ஒரு குழந்தையை சமாதானப்படுத்தி வளர்த்துவிட முடியுமா, அப்படியென்றால் எனக்கும் என் குழந்தைக்குமான உறவு என்ன!
மறுநாள் காலை இது பெரும் சோகம்போல எனக்குள் கவிந்தது. உள்ளுக்குள் கலக்கம் பூதாகரம் ஆனது. அலுவலகம் சென்றிருந்த கணவரைத் தொலைபேசியில் அழைத்து இதைச் சொல்லும்போது, உடைந்து அழத் தொடங்கிவிட்டேன். “பைத்தியம் மாதிரி எதையாவது யோசிக்காதே!” என்று அவரால் சொல்ல முடிந்ததே அன்றி அதற்கு மேல் அவரால் என்னை ஆற்றுப்படுத்த முடியவில்லை. பின்னர் அதைப் பழகிக்கொள்ள, என்னை நானே ஆற்றுப்படுத்திக்கொள்ள ஆரம்பித்தேன்.
உண்மையில், பசி சார்ந்த பிணைப்பு, பகிர்தல் சார்ந்த பிணைப்பு என ஒவ்வொன்றிலிருந்தும் குழந்தை அன்னையைவிட்டு விலகி தன்னுடைய உலகத்திற்குள் செல்லத் துவங்கும்போது ஒரு தாய் உணர்கிற வெறுமை மிகப் பிரம்மாண்டமானது.
குழந்தைகளே அவளுடைய உறவில் இவ்வளவு வெறுமையை உருவாக்க முடியும் என்றால், உற்ற உறவான அவளுடைய ஆண் ஏற்படுத்தும் வெறுமை எவ்வளவு பூதாகரமானதாக இருக்கும்!
⁋
வேலைக்குச் செல்வதில் விருப்பமில்லை என்று கூறுகிற தோழிகளிடம் நான் சொல்வது உண்டு, ‘பரவாயில்லை, ஆனால் ஏதேனும் ஒன்றில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளுங்கள்!’
முந்தைய தலைமுறைப் பெண்கள் கோவிலுக்குச் சென்று வருவதை ஒரு தினசரிப் பழக்கமாய் வைத்திருந்ததைக்கூட, வெறுமையிலிருந்து விடுபடலின் ஒரு வழியாகவே நான் இப்போது உணர்கிறேன். என் அம்மாவுக்கு கோயில் அப்படி இருந்திருக்கிறது. சரி, வெறுமையை இப்படியெல்லாம் கடந்துவிட முடிகிறதா என்று கேட்டால் உண்மையாகவே எனக்குப் பதில் சொல்ல தெரியவில்லை.
பெண் பேராற்றல் கொண்டவள். கருணை நிரம்பியவள். ஆனால், அவளுடைய மனதை அவள் நேசிக்கும் ஆணுடைய அன்பைக் காட்டிலும் நிறைக்கும் ஒன்று இந்த உலகில் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
அது கிடைக்கும்போது உண்டாகும் மகிழ்ச்சி எவ்வளவு பெரிதோ, அது கிடைக்காதபோது உண்டாகும் துயரமும் அவ்வளவு பெரிது. ஒவ்வொரு பெண்ணும் சதுரங்க ஆட்டத்தின் ராணி. ஆனால், தான் நேசிக்கிற ஆணின் பொருட்டு எல்லாவற்றையும் சமர்ப்பிக்கிற அவளது குணம்தான் அவளது பலமும் பலவீனமும் என நான் கருதுவதுண்டு.
⁋
உடலும் மனமும் வேறு என்பதுபோல நம் சமூகத்தில் நிறையச் சொல்லப்படுகிறது. நாமும் நிறைய அப்படித்தான் நினைத்துக்கொள்கிறோம். என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். உடலும், மனமும் வெவ்வேறு அல்ல. என் உடல் என் மனதையும், என் மனது என் உடலையும் தீர்மானிக்கின்றன. பேசுவோம்!
1
பின்னூட்டம் (1)
Login / Create an account to add a comment / reply.
RAJA RAJAMANI 3 years ago
மிக ஆழமான பதிவு மேடம். ஒரு தடவை படித்தால் மட்டும் போதாது. நன்றி.
Reply 2 0
Login / Create an account to add a comment / reply.