இலக்கியம், புத்தகங்கள் 4 நிமிட வாசிப்பு
மரண ஓலங்களுக்கு நடுவில் ஒலிக்கும் புத்தரின் குரல்
நண்பர் ஆழி செந்தில்நாதன் ஒரு நாவலை என்னிடம் காட்டி, "இதை மொழிபெயர்க்க இயலுமா?" எனக் கேட்டபோது அந்த நாவல் எத்தனை பக்கங்கள் என்று முதலில் பார்த்தேன். கடைசிப் பக்கத்தில் 452 என்னும் எண்ணைப் பார்த்தபோது மிரட்சியாக இருந்தது. நான் பதில் சொல்வதற்குள், “ஆறு மாதங்களில் முடிக்க முடியுமா?” எனக் கேட்டு என் பீதியைக் கூட்டினார் செந்தில். பணி சார்ந்த பல்வேறு நெருக்கடிகள் நினைவுக்கு வந்தாலும், நாவல் என்பதாலும், சீனப் பின்புலம் என்பது எனக்கு முற்றிலும் புதிய களம் என்பதாலும் ஆவல் ஏற்பட்டது. நாவலைப் புரட்டிப் பார்க்கிறேன் என்று சொல்லி அப்போதைக்கு அந்தப் பேச்சை முடித்துவைத்தேன்.
ஓரிரு அத்தியாயங்களைப் படித்ததுமே இந்த நாவல் தமிழுக்கு வந்தாக வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. பெரிய நாவல்களுக்கே உரிய அமைதியும் பன்முகத்தன்மை கொண்ட அணுகுமுறையும் வரலாற்றுப் பின்புலமும் நாவலின் மீது பெரிய மரியாதையை ஏற்படுத்தின. நாவலின் மொழி பரபரப்பற்ற பக்குவத்தையும் அலாதியான நிதானத்தையும் கொண்டிருந்தது. செந்தில்நாதனுக்குச் செய்தி ஒன்றை அனுப்பிவிட்டுப் பணியைத் தொடங்கினேன்.
ஆங்கிலத்தில் ‘தி என்ஷியன்ட் ஷிப்’ (The Ancient Ship) என்னும் தலைப்பு கொண்ட இந்த நாவல், கடந்த நூற்றாண்டின் சீன வரலாற்றில் மிக முக்கியமான ஆண்டுகளின் நிகழ்வுகளைப் பின்புலமாகவும் சாரமாகவும் கொண்டுள்ளது. 1949-ல் மக்கள் குடியரசு உருவான பிறகு நடந்த பல்வேறு மாற்றங்களை இது தன் போக்கில் பிரதிபலிக்கிறது. நிலச் சீர்திருத்த இயக்கம், மாபெரும் பாய்ச்சல், 1959-61 ஆண்டுகளின் மாபெரும் பஞ்சம், 2 முதல் 5 கோடி மக்கள் வரை கொன்று குவிக்கப்பட்டதாக மதிப்பிடப்படும் கலாச்சாரப் புரட்சி இயக்கம் ஆகியவற்றுனூடே இந்த நாவல் பயணிக்கிறது.
சீனச் சமூகம் நவீனத்துவத்தை எதிர்கொண்ட பதற்றமான காலமும் நாவலில் அடிச்சரடாய் ஓடுகிறது. ஒற்றைக்கட்சி ஆட்சி முறையின் கீழ் இருக்கும் சீன அரசியல் சூழலில் கட்சியின் அதிகாரபூர்வமான நிலைப்பாடுகளிலிருந்து முரண்படும் பார்வைகளைப் பதிவுசெய்வதென்பது எளிது அல்ல. அதைக் கலாபூர்வமாகவும், சமூகத்தின் பல்வேறு பிரிவினரையும் கவரும் விதத்திலும் செய்வதென்பது மேலும் கடினமானது. தகவல்களின் உண்மைத்தன்மை, நிகழ்வுகள் குறித்த தனது பார்வை ஆகியவற்றில் சமரசம் செய்துகொள்ளாமல் ஜாங் வெய் இந்த நாவலைப் படைத்திருக்கிறார்.
சமூக, அரசியல் விமர்சனப் பார்வைகளைத் துருத்தலாக அல்லாமல் உள்ளார்ந்த நிலையில் வெளிப்படச்செய்திருப்பது படைப்புக்குக் கலாபூர்வமான வெற்றியைத் தந்திருக்கிறது. கருத்தளவில் முரண்படுபவர்களும் மனமூன்றிப் படிக்கும் வகையிலான புனைவுத்தன்மையும் கலை அமைதியும் பக்குவமான நடையும் சிறந்த வாசிப்பு அனுபவத்தைச் சாத்தியமாக்குகின்றன.
வாலி என்னும் கற்பனை நகரைப் பின்புலமாகக் கொண்டு சீனப் பேரரசின் மாபெரும் மாற்றங்களை, கொந்தளிப்புகளை ஜாங் வெய் விசாரணைக்கு உட்படுத்துகிறார். சூய், லீ, ஸாவோ ஆகிய மூன்று வம்சத்தவர்களின் மூன்று தலைமுறை வாழ்வையும் சொல்லிச் செல்கிறார். சிறிய ஊர், மூன்று வம்சங்கள், கிட்டத்தட்ட 35 ஆண்டுகள், தேசிய அளவிலான மாபெரும் நிகழ்வுகள். இந்தப் புள்ளிகளைச் சுற்றி இழைக்கப்படும் புனைவுக் கோலம் காலத்தில் முன்னும் பின்னுமாய் நகர்ந்து நமக்குக் கதை சொல்கிறது. வரலாற்றைக் கதையாகச் சொல்கிறது.
வாலியில் நடந்ததை வைத்து ஒட்டுமொத்த சீனத்தில் நடந்தவற்றை நாம் புரிந்துகொள்ள முடியும். சீனத்தின் மாபெரும் மாற்றங்களின் பின்புலத்தையும் அவை நிகழ்ந்த விதத்தையும் அவற்றுக்கும் பின்னால் இருக்கும் மாபெரும் வேதனைகளையும் இழப்புகளையும் நம்மால் புரிந்துகொள்ள முடியும். குறிப்பாக, நிலச் சீர்திருத்த இயக்கம், பஞ்சம், கலாச்சாரப் புரட்சி ஆகியவற்றின் சித்திரங்கள் பதைக்கவைக்கின்றன.
வன்முறை வெறியாட்டத்தில் பெண்களின் உடல்கள் எப்படிப் பணயப் பொருள்களாக்கப்படுகின்றன என்னும் யதார்த்தம் நம்மை உறையவைக்கிறது. நவீனத்துவத்தைச் சீனம் வரித்துக்கொள்வது குறித்த உரையாடல்கள் புதிய திறப்புகளை அளிக்கின்றன. சீனத் தத்துவ மரபின் குரலும் பொருத்தமான இடங்களில் நாவலின் புனைவமைதியைக் குலைக்காமல் ஒலிக்கிறது. ஜாங் வெய்யின் கலைப்பார்வையும் புனைவுத் திறனும் நிகழ்வுகளினூடே ஊடுருவிச் செல்லும் விதம் பிரமிப்பை ஏற்படுத்துகிறது.
மகத்தான நாவல்களின் முக்கியமான ஒற்றுமை, அவை காலத்தைத் தம் முக்கியப் பாத்திரமாகக் கொண்டிருக்கும். இந்த நாவலிலும் காலம்தான் மிக முக்கியமான பாத்திரம். மிகவும் கொந்தளிப்பான, ஒற்றைப் பரிமாண வரையறையால் விளக்கிவிட முடியாத சிக்கலான காலத்தைக் கலாபூர்வமாகப் பதிவுசெய்திருப்பது, இந்த நாவலின் சிறப்பான அம்சம்.
கொத்துக்கொத்தாக மக்கள் மடிந்தது, மனிதர்கள் ஈவிரக்கமின்றி நெருப்பில் தூக்கிப் போடப்பட்டது, மனிதத்தன்மை என்பதன் சாயல்கூட இல்லாத வகையிலான கொடூரமான தண்டனைகள், பழிவாங்கல்கள், வன்மங்கள், வன்புணர்வுகள், வெறுப்புகள், மாற்றாரைக் கருவறுப்பதற்கான அடங்காத வெறிகள், உயிர் பிழைத்திருப்பதற்கான போராட்டங்கள், பழமையைக் காப்பாற்றுவதற்கான பிடிவாதங்கள், அடையாளம் தேடும் வேட்கைகள் ஆகியவற்றினூடே அமைதியை நாடும் அறத்தின் குரலும் ஒலிக்கிறது.
தன்னை முன்னிறுத்தாமல் பொது நலனை முன்னிறுத்தும் பக்குவம் தனிநபர்களின் மூலம் வெளிப்படுகிறது. பழிவாங்குதலில் நம்பிக்கையற்ற மனிதநேயம் வெளிப்படுகிறது. சுருக்கமாகச் சொல்வதானால், ரத்த ஆறுகளுக்கும் மரண ஓலங்களுக்கும் நடுவில் புத்தரும் காந்தியும் நம்மிடையே பேசுகிறார்கள். பிரபஞ்சம் தழுவிய மானுட அன்பின் குரலால் அவர்கள் ஆசீர்வதிக்கிறார்கள்.
கொந்தளிப்புகளுக்கும் நிராசைகளுக்கும் இடையில் துளிர்க்கும் நம்பிக்கைக் கீற்றுடன் நாவல் முடிகிறது. நிஜ உலகில் நம்பிக்கையின் விகாசம் போதிய அளவில் வெளிப்படாமல் போகலாம். ஆனால், எந்த நிலையிலும் நம்பிக்கை கொள்வதற்கான காரணத்தை மனித இனம் இழந்துவிடவில்லை என்னும் நம்பிக்கையை நாவல் அளிக்கிறது. கருத்தளவில் இல்லாமல் அனுபவ தளத்தில் அதைச் சாத்தியமாக்குகிறது. இதுவே சீனத்திலும் தைவானிலும் 20க்கும் மேற்பட்ட பதிப்புகளைக் கண்டு, பல்வேறு விருதுகளைப் பெற்றிருக்கும் இந்த நாவலை மகத்தான நாவல்களின் வரிசையில் வைத்துப் பார்க்கக் காரணமாக அமைகிறது.
ஜாங் வெய் எழுதிய ‘காலத்தின் கப்பல்’ மொழியாக்க நாவல் மொழியாக்கத்தின் முன்னுரை. நூல் வெளியீடு: ஆழி பதிப்பகம், விலை ரூ.500. தொடர்புக்கு: https://www.aazhibooks.com/product/kaalathin-kappal/
பின்னூட்டம் (1)
Login / Create an account to add a comment / reply.
Parasara Devaraj 3 years ago
சீன நாவல் குறித்த நல்ல அறிமுகமும், திறனாய்வும் சிறப்பு.
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.