பிரான்சிஸ் ஹாகென் (Frances Haugen) ஓர் அமெரிக்க தொலைக்காட்சியின் நேரலையில் தோன்றினார். ஃபேஸ்புக்கின் செயல்பாடுகள் குறித்து ‘வால்ஸ்ட்ரீட் ஜர்னல்’ பத்திரிகையில் சமீபத்தில் வெளிந்த கட்டுரைகளுக்குத் தரவுகள் தந்துதவியது ஃபேஸ்புக் நிறுவனத்திலேயே வேலை பார்க்கும் தான்தான் என்று அவர் சொன்னார். அடுத்த 24 மணி நேரத்தில் பேஸ்புக்கின் பங்குச்சந்தை மதிப்பு 6 பில்லியன் டாலர் சரிந்தது. மேலும் சோதனையாக ஃபேஸ்புக் செயலி பல மணி நேரங்கள் செயலிழந்ததும், அந்நிறுவனத்தின் செயல் திறன் மீது கேள்விகள் எழுப்பியது.
இச்சூழலில் அமெரிக்காவின் மூன்று முக்கிய பத்திரிக்கைகள் - ‘நியூ யார்க் டைம்ஸ்’ (NYT), ‘வாஷிங்டன் போஸ்ட்’ (WaPo), ‘வால்ஸ்ட்ரீட் ஜர்னல்’ (WSJ) - அடுத்தடுத்து நீண்ட கட்டுரைகளை வெளியிட்டன. இந்தியாவில் வெறுப்பரசியல் வளர ஃபேஸ்புக் உதவுவதாகவும், இதைத் தடுக்க எந்தப் பிரயத்தனமும் எடுக்கப்படவில்லை என்றும் அந்தக் கட்டுரைகள் கூறின.
இப்படி மூன்று மிக முக்கிய பத்திரிக்கைகள் இந்தியாவை மையமாக வைத்து ஃபேஸ்புக்கின் செயல்பாட்டினை அம்பலப்படுத்தியது மெதுவாகவே இந்திய ஆங்கில ஊடகங்களில் பேசப்பட்டன, அதுவும் மேம்போக்காக! தமிழ் ஊடகங்களில் இவ்விஷயம் பெரும் கவனத்தைப் பெறவில்லை. இந்திய அரசியலை உற்றுக் கவனிப்போர் விவாதிக்க வேண்டிய விஷயம் இது என்பதாலேயே இக்கட்டுரை அவசியமாகிறது.
ஃபேஸ்புக்கின் உளவியலும் நன்மைகளும்
குகைகளில் கோட்டோவியம் வரைந்த ஆதி மனிதன் முதல் இன்று வரை எண்ணங்களை சக மனிதனோடு பகிர்வது அடிப்படை அவாவாக இருக்கிறது. சகல ஜீவராசிகளும் அதில் ஏதோவொரு வகையைப் பின் பற்றினாலும் மனிதனால்தான், தன் பின்புலத்தோடு வேறுபட்ட மற்றவர்களோடு அர்த்தத்துடன் உறவாடி அறிவுத் தளத்தில் இணைந்து செயல்பட முடிகிறது. அவ்வகையில் சமூக வலைதளங்களின் அறிமுகமும் நவீன யுகத்தின் இணைய வசதிகளும் அவ்வுணர்வுக்கு நெய்யூற்றி வளர்த்தது. உலகம் நிஜமாகவே இன்று கையளவுதான்.
அக்டோபர் மாதம் டில்லியில் வாழும் எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன், ஸ்வீடனில் வாழும் பாகிஸ்தானிய வரலாற்றாசிரியர் இஷ்டியாக் அஹ்மத், நியூ ஜெர்ஸியில் வாழும் நான் ஆகியோர் முகம்மது அலி ஜின்னா பற்றிய நேரலை நிகழ்வொன்றை ஃபேஸ்புக் மூலம் ஒருங்கிணைத்தோம்; பார்வையாளர்கள் எல்லோரும் தமிழ்நாட்டில். நிகழ்வின் முடிவில் ஜின்னா போன்ற ஓர் ஆளுமையைப் பற்றி பலரும் அறிய முடிந்தது. அதேபோல் தலித் வரலாற்றாசிரியர்களோடு நிகழ்த்திய நேரலைகளும் பலருக்கு புதிய வரலாற்று புரிதல்களை அளித்தன.
பேரிடர்களின்போது ஃபேஸ்புக் மூலம் உதவிகள் ஒருங்கிணைப்பது, மருத்துவச் செலவுகளுக்குப் பணம் திரட்டுவது - ஒரு குழந்தையின் மருத்துவத்துக்கும் கோடிக்கணக்கில் பணம் திரட்டியதும் சமீபத்தில் நடந்தது - ஜனநாயகம் காக்க யதேச்சாதிகார அரசுகளுக்கு எதிராகத் திரள உதவுவது என்று ஃபேஸ்புக் எவ்வளவோ நற்பயன்களை நமக்குத் தருகிறது என்பதில் சந்தேகமே இல்லை.
ஆனால், விஞ்ஞானம், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் எப்போதுமே இரு முனைக் கத்தி! அணுசக்தியால் நகரங்கள் அழிந்திருக்கின்றன. அதே அணுசக்தி புற்றுநோயிலிருந்து காக்கவும் உதவுகிறது. ஃபேஸ்புக்கும் இதற்கு விதிவிலக்கு இல்லை.
அமெரிக்க அரசியலும் பேஸ்புக்கும்
2016 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் உலகமே ஆச்சர்யப்படத்தக்க வகையில் ஹிலாரி கிளிண்டன் தோற்று டொனால்ட் டிரம்ப் ஜெயித்தார். அமெரிக்க அரசியல் உலகையே அதிர்ச்சியில் உறைய வைத்த நிகழ்வு அது. அந்த வெற்றியில் முக்கியப் பங்கு வகித்தது ட்விட்டரை மிகச் சாதுர்யமாக டொனால்ட் டிரம்ப் பயன்படுத்திய விதம். அத்தேர்தலில் ரஷ்யா தலையிட்டதா என்று ஆராய்ந்த அமெரிக்க அரசு நிறுவனங்கள், “ஆம், ரஷ்யா ஒரு மிகப் பெரும் பொய்ச் செய்தி பரப்புரையை மேற்கொண்டது, சமூக ஊடகங்களின் துணையோடு!” என்று அறிவித்தன.
வாஷிங்டன் டி.சி. அருகே ஒரு பீட்சா ஹட் உணவகத்தில் ஹிலாரி கிளிண்டனின் பாலியல்ரீதியாக குழந்தைகளை துன்புறுத்துவதாக ஒரு பொய்ச் செய்தி ஃபேஸ்புக்கில் பரவ அந்த உணவகம் தாக்கப்பட்டது, சமூக வலைதளங்களின் வீச்சுக்கும் தாக்கத்திற்கும் ஓர் உதாரணம் இது.
2020 தேர்தலில் டொனால்ட் டிரம்ப் தோற்றார். ஆனால், தொடக்கத்தில் தன் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்து அமெரிக்க ஜனாதிபதியான அவரே பொய்ச் செய்திகளை பரப்பினார். அவர் ஆதரவாளர்கள் அச்செய்திகளை சமூகவலைதளங்களில் மேலும் பரவலாக்கினர். அமெரிக்க தேர்தலின் மீது அமெரிக்கர்களே நம்பிக்கை இழந்து, ‘மோசடி நடந்தது’ என்று பேசும் நிலையை உருவாக்கினர். டிரம்பின் நீதித் துறையே, தேர்தல் நேர்மையாக நடந்ததென்று சான்றளித்தை டிரம்ப் ஆதரவாளர்கள் கேட்கவில்லை. முத்தாய்ப்பாக தேர்தல் முடிவை அதிகாரபூர்வமாக அமெரிக்க காங்கிரஸ் ஏற்கும் நாளன்று அமெரிக்காவே திகைக்கும் வகையில் காங்கிரஸ் கட்டிடத்தைத் தாக்கிச் சூறையாடினார்கள் டிரம்ப் ஆதரவாளர்கள். இதில் ஃபேஸ்புக்கின் பங்கு கணிசமானது.
இன்ஸ்டாகிராமும் பதின்ம வயதுப் பெண்களின் உளைச்சலும்
செப்டம்பர் 14 அன்று ‘வால்ஸ்ட்ரீட் ஜர்னல்’ பத்திரிகை, ஃபேஸ்புக்கின் இன்னொரு சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் எவ்வாறு பதின்ம வயதுப் பெண்களுக்கு தங்கள் உடல் பற்றிய திருப்தியின்மையை உருவாக்கி பெரும் மன உளைச்சல் அளிக்கக் காரணமாகின்றது என விரிவான கட்டுரை வெளியிட்டது. அக்கட்டுரை வெளியான சமயம்தான் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமை இளம் பதின்ம வயதினருக்கு அனுமதியளிக்க எத்தனித்தது.
ஃபேஸ்புக் நிறுவன ஆய்வின் அடிப்படையிலேயே, மூன்றில் ஒரு பங்கு (33%) பதின்ம வயதுப் பெண்கள் இன்ஸ்டாகிராமினால் தங்கள் உடல் அழகின் மீது அதிருப்திக் கொண்டு உளைச்சலுக்கு ஆளாகின்றார்கள் என்பதைச் சுட்டிக்காட்டியது ‘வால்ஸ்ட்ரீட் ஜர்னல்’ கட்டுரை. தற்கொலை எண்ணம் எழுந்த பதின்ம வயதினரில், அமெரிக்காவில் 6% இன்ஸ்டாகிராமை குற்றஞ்சாட்டினார்கள். பதின்ம வயதினரும் இள வயதினரும் ஃபேஸ்புக்கைவிட இன்ஸ்டாகிராமையே அதிகம் விரும்புகின்றனர் என்கிற புள்ளிவிபரத்தை நினைவில் கொள்ள வேண்டும். மேலும் இந்த பிரச்சினைகள் எல்லா 'ஸ்நாப்சேட்' போன்ற தளங்களுக்கும் பொதுவானதாக இருந்தாலும் இன்ஸ்டாகிராமுக்கே பிரத்யேகமான சில பிரச்சினைகள் உண்டு.
ஃபேஸ்புக் தானே அறிய வந்த இந்த உண்மைகளைப் பொதுவெளியில் மட்டுப்படுத்தியே பேசியதோடு அல்லாமல், இது போன்ற ஆய்வின் முடிவுகளைக் கேட்ட அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களுக்கே விபரங்களை அளிக்க தட்டிக் கழித்தது என்றது ‘வால்ஸ்ட்ரீட் ஜர்னல்’ கட்டுரை.
வெறுப்பை ஊக்குவிக்கும் அல்காரிதம்
எந்த ஒரு மென்பொருள் (Software) செயல்பாட்டினை நிர்ணயிப்பதும் கட்டமைப்பவதும் அதனை எழுதப் பயன்படுத்தும் மொழியும் அது சார்ந்த இலக்கணமும். அம்மொழிகளை வைத்துக் கட்டமைக்கப்படும் ஒவ்வொரு செயலுக்கான விளைவினை ‘அல்காரிதம்’ என்று சொல்லலாம். ஒரு பொத்தானை அழுத்தினால் அடுத்து என்ன நிகழும் என்று கட்டமைப்பதே அல்காரிதம். இன்று சமூக வலைத்தளங்கள் வெறுப்பை ஊக்குவிக்கும் செயலிகளாக உருமாறியிருப்பது தற்செயல் இல்லை.
2016-ல் ஃபேஸ்புக் நிறுவனத்தின் ஆய்வாளரே வெளியிட்ட பதிவொன்றில், ‘சமூக வலைதளங்கள் மூலம் செய்திகளைப் படித்து ஒரு ஊக்கமற்ற தன் தேவைக்கான நுகர்வோராக (passive user) மட்டுமே இருப்பது மன ஆரோக்கியத்துக்கு கேடு’ என்று கண்டறிந்து எழுதினார். ஆனால், ஃபேஸ்புக்கால் விளையும் மன பாதிப்புக்கான மருந்து, ஃபேஸ்புக் மூலம் இன்னும் பலருடன் பகிர்தலே’ என்பதாகச் சொல்லி அதனை ஊக்குவிக்கும் வகையில் ஃபேஸ்புக் செயல்பட ஆரம்பித்தது.
ஃபேஸ்புக்கின் புதிய அல்காரிதம் விருப்பக் குறிக்கு (like) 1 மதிப்பெண், மறுப்பகிர்வுக்கு 5, முக்கியமான நீள கமெண்ட் அல்லது மறுப் பகிர்வுக்கு 30 என்று பதிவுகளை மதிப்பிட ஆரம்பித்து, இதற்கேற்ப பதிவுகளைப் பயனர்களின் செய்திச் சுருளில் (news feed) காட்டுமாறு செய்தது. இதன் விளைவாக சர்ச்சைப் பதிவுகள் பிரதான இடம்பெற்றன, ஆக்ரோஷத்தை உண்டாக்கும் பதிவுகள் தூக்கிப்பிடிக்கப்பட்டன.
போலந்தில் ஓர் அரசியல் கட்சி 50%-50% என்கிற அளவில் நேர்மறைச்செய்தி, எதிர்மறைச் செய்திகளைப் பகிர்ந்துவந்தது. ஃபேஸ்புக்கின் புதிய அல்காரிதம் மாற்றத்துக்குப் பின் எதிர்மறைச் செய்திகளின் பங்கு 80% ஆக எகிறியது. இப்படிப்பட்ட சூழலில்தான் பாஜகவின் ஐடி விங்கின் எதிர்மறைச் செய்திகளை நாம் நினைவுகூர வேண்டும். சென்ற வருடம் ஃபேஸ்புக் கோப உணர்வு எமோஜிக்கான மதிப்பீட்டை பூஜ்யமாக்கியதும் வன்முறைப் பதிவுகள் குறைந்தன என்று நிறுவனத்தின் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
இப்படிப்பட்ட இடத்தில் நாம் எல்லோருமே ஏதோ ஒரு வகையில் ஃபேஸ்புக்கின் அல்காரிதத்தின் பகடைக்காய்கள் ஆகிவிடுகிறோம். நீண்ட நாள் ஃபேஸ்புக் செயல்பாட்டாளனாக என்னால் இதை உறுதியாகச் சொல்ல முடியும். தமிழ்ப் பதிவுகளில் பிராமணர்களைக் காழ்ப்புடன் பழிப்பதோ, பெரியாரைக் காட்டமாக விமர்சிப்பதோ நொடிப் பொழுதில் வைரலாகும். மார்க் ஸக்கர்பர்க் இப்படியான எதிர்மறை விளைவுகளை மட்டுப்படுத்த நிறுவன ஊழியர்கள் முன்வைத்த யோசனைகளை நிராகரித்தார் என்கிறது ‘வால்ஸ்ட்ரீட் ஜர்னல்’ கட்டுரை.
இந்த இடத்தில்தான் நாம் இந்தியா தொடர்பான ஃபேஸ்புக் செயல்பாடுகளையும், பாஜகவின் வெறுப்பரசியலையும் ஆராய வேண்டி இருக்கிறது.
2019 தேர்தலும் பாஜகவின் சமூக வலைதளப் பிரச்சாரமும்
2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அசுர வெற்றி பெற்றது ஏன் என்று கிரிஸ்டோஃப் ஜாஃப்ரலாட்டும் கில்லிஸ் வெர்னியர்ஸும் ‘கான்டெம்ப்ரவரி சௌத் ஏஷியா’ (Contemporary South Asia) இதழில் வெளியிட்ட கட்டுரையில் சில காரணங்களை முன்வைத்தார்கள். அத்தேர்தலில் பாஜக சமூக வலைதளங்களை எப்படிப் பயன்படுத்தியது என்று கவனப்படுத்தியிருக்கிறார்கள். சில விவரங்களை இங்கு தொகுக்கிறேன்.
தேர்தலுக்காக ஆர்எஸ்எஸ் உடன் இணைந்து மிகப் பெரும் களப் பணியாளர் படையை உருவாக்கியது பாஜக. மஹாராஷ்டிரத்தில் மட்டும் 92,000 வாக்குச்சாவடிக் கண்காணிப்பாளர்கள். எந்த ஒரு பணியாளரும் 100 வாக்காளருக்கு மேல் பொறுப்பாக இருக்க மாட்டார், அந்தளவுக்குப் பணியாளர்களும் இருந்தார்கள். 2018-ல் அமித் ஷா, பூத் செயல்பாட்டு திட்டம் ஒன்றை உருவாக்கினார். இதில், ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒருவர் என்று 90,000 செல்பேசி பிரமுகர்கள் (cell phone pramukhs) நியமிக்கப்பட வேண்டும் என்பது இலக்கு.
இப்படி நிர்ணயிக்கப்படுபவர்கள் வெறும் செய்தி சேகரிப்பாளர்கள் மட்டும் இல்லை; செய்திகளைப் பரவலாக்குவோரும் ஆவர். அவர்களுக்கு செல்பேசி அளித்து வாட்ஸப் குழுமங்களை உருவாக்கி அதன் மூலம் பிரச்சாரத்தில் ஈடுபடுத்துவதே குறிக்கோள். ஐ.டி. விங்கின் தலைவர் அமித் மாளவியா 1.2 மில்லியன் களப் பணியாளர்கள் பாஜக அரசின் சாதனைகளைப் பரப்புரை செய்கிறார்கள் என்றார். ஒரு டிரோல் (troll) படையே உருவாக்கப்பட்டது என்கிறார்கள் கட்டுரை ஆசிரியர்கள்.
2019 தேர்தலுக்கு, ‘ஐ.டி. படை வீரர்கள்’ (I.T. Yoddhas) என்று ஒரு அணியே அமித் ஷா வழிமுறையில் உருவாக்கப்பட்டதாகவும், அவர்களுள் ஒருவரான தீபக் தாஸ் 1,114 வாட்ஸப் குழுமங்கள் நடத்தியதாகவும் சொல்கிறார். இவர் பாஜகவின் அதிகாரப்பூர்வ கட்சி உறுப்பினர் அல்ல, மாறாக, ‘நானும் சௌகிதார்’ என்று உறுதிமொழி எடுத்துக்கொண்ட வாக்கு சேகரிப்பாளர் அல்லது வாக்காளர் மீது தாக்கம் செலுத்தும் 10 மில்லியன் ஆதரவாளர்களுள் ஒருவர்.
2019-ல் பாஜக 2,00,000 - 3,00,000 வாட்ஸப் குழுமங்கள் நடத்தியதாகவும், காங்கிரஸ் 80,000 - 1,00,000 வரை நடத்தியதாகவும் தெரிகிறது. ஃபேஸ்புக் பொய்ச் செய்தி பரப்பும் போலிக் கணக்குகளை முடக்கியபோது அவற்றில் முக்கியமான ஒன்றாகப் பேசப்பட்ட ‘இண்டியா ஐ’ (India Eye) பாஜக சார்பானது. ராகுல் காந்தியை இஸ்லாமியர் என்றும், காங்கிரஸ் அரசியலர்கள் பாகிஸ்தானின் கொடியை வைத்திருப்பதுபோலவும் பொய்ச் செய்திகள் பரப்பப்பட்டன. 2017 உத்தர பிரதேச தேர்தல் பிரச்சாரத்தின்போது அமித் ஷா ஒரு கூட்டத்தில், “பொய்யோ மெய்யோ நாம் ஒரு செய்தியை எல்லா மக்களிடத்திலும் கொண்டுசேர்க்கும் திறன் படைத்தவர்களாக இருக்க வேண்டும்” என்றார்.
பாஜகவின் தேர்தல் வியூகத்தில் மட்டுமல்ல, தேசத்தை அரசாளும் வியூகத்திலும் சமூக வலைத்தளத்துக்கு பெரும் பங்குண்டு. அதன் மூலம்தான் அதன் வெறுப்பரசியல், வாக்காளர்களின் விரல் நுனிகளுக்கும் விழித்திரைகளுக்கும் சென்றடைகிறது. இது இன்று நேற்று நடப்பதல்ல. சமூக வலைதளக் காலம் இதை மேலும் விஸ்தரித்திருக்கிறது.
ஃபேஸ்புக்கும் அங்கி தாஸின் ராஜிநாமாவும்
ஃபேஸ்புக்கை இந்திய வெறுப்பரசியலின் முக்கிய அங்கமாக பாஜக இருப்பதைப் பற்றி ஆகஸ்ட் 2020-ல் ‘வால்ஸ்ட்ரீட் ஜர்னல்’ விரிவான கட்டுரையை வெளியிட்டது.
பாஜகவின் டி.ராஜா சிங், தெலுங்கானாவைச் சேர்ந்தவர். ரோஹிங்யாக்களைப் பற்றியும், இந்திய முஸ்லிம்களைப் பற்றியும் மிக ஆட்சேபகரமான பதிவுகளை, வன்முறையைத் தூண்டும் விதமாகவே (விரிவாக அப்பேச்சுகள் இந்திய ஊடகங்களிலும் பேசப்பட்டது, சுட்டிகளை கட்டுரையின் கீழ் காண்க) எழுதவும் பேசவும் செய்தார். அவரைப் போன்ற வன்முறைப் பேச்சுகள் பேசியவர்களை அமெரிக்காவில் ஃபேஸ்புக் தன் எல்லா தளங்களிலிருந்து நீக்கியிருந்தாலும், ராஜா சிங் மீது நடவடிக்கை எடுத்தால் ஆளும் பாஜகவைப் பகைத்துக்கொள்ள நேரிடுமோ என ஃபேஸ்புக் இந்தியாவின் முக்கிய பொறுப்பில் இருந்த அங்கி தாஸ் மறுத்துவிட்டார். ஃபேஸ்புக்கை அமெரிக்காவில் உபயோகிப்போர் 200 மில்லியனுக்கும் சற்று குறைவு, இந்தியாவில் பயனாளர்கள் எண்ணிக்கை 300 மில்லியனை நெருங்குகிறது.
அங்கி தாஸ் பாஜக சார்புடையவராக இயங்கினார் என்று ஃபேஸ்புக் நிறுவன ஊழியர்களே சொன்னார்கள். 2014-ல் அங்கி தாஸ் நரேந்திர மோடியின் சமூக வலைத்தள பிரச்சாரத்தை முடுக்கிவிட உதவியதாகவும், அதன் பின் நிகழ்ந்தது ஊரறிந்தது என்றும் பதிவிட்டார். இன்னொரு பதிவில் அவர் 30 வருட களப் பணி இந்தியாவை சோஷலிஸத்தில் இருந்து விடுவித்தது என காங்கிரஸை தாக்கிப் பதிவிட்டார். அங்கி தாஸின் செயல்கள் பாரபட்சமாக இருக்கிறதா என்ற கேள்விக்கு தாஸின் பதிவுகள் முழுமையாகப் பார்த்தால் எந்தப் பாரபட்சத்தையும் காட்டவில்லை என ஃபேஸ்புக் நிறுவனம் சமாதானம் சொன்னது. தாஸ் இஸ்லாமியரை பற்றியும் கீழ்த் தரமான பதிவொன்றைப் பகிர்ந்திருந்தார்.
பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் அனந்தகுமார் ஹெக்டே, ‘இந்திய முஸ்லிம்கள் கரோனா தொற்றைப் பரவச் செய்கின்றனர்’ என்று சமூக வலைத்தளங்களில் எழுதினார். ட்விட்டர் அவரை வெளியேற்றியது. ஆனால் ஃபேஸ்புக்கோ ‘வால்ஸ்ட்ரீட் ஜர்னல்’ இக்கட்டுரை தொடர்பாக கேட்கும்வரை அவரை நீக்கவில்லை. பிப்ரவரி 2020 கபில் மிஷ்ரா இஸ்லாமியரை மிரட்டிய பேச்சு ஒன்று ஃபேஸ்புக்கில் அவரால் வலையேற்றப்பட்ட சில மணி நேரங்களில் டில்லியில் கலவரம் வெடித்தது. ‘கிரவுட்டான்கிள்’ (CrowdTangle) எனும் ஃபேஸ்புக்கின் மென்பொருள் மூலம் ஆராய்ந்ததில் மிஷ்ராவின் அந்தப் பதிவுக்கு முன், ஒரு மாதத்தில் சில ஆயிரம் வலைதளப் பரிமாற்றமாக (interactions, probably refers to comments and not just rehshares) இருந்த அவர் பதிவுகள் 2.5 மில்லியனாக எகிறியதாம். வெறுப்புத் தீயாகப் பரவும் வகை கொண்டது. இக்கட்டுரைகளின் விளைவாக அங்கி தாஸ் அக்டோபரில் பதவி விலகினார்.
டிசம்பர் 2020-ல் ‘வால்ஸ்ட்ரீட் ஜர்னல்’ இன்னொரு கட்டுரையில், ‘ஃபேஸ்புக் சமூக வன்முறை உண்டாகக் கூடிய இடங்களில் மிக உச்சப்பட்ச ஆபத்து இருக்கும் தொகுப்பான முதலாவது அடுக்கில் (Tier -1)-ல் இந்தியாவைக் கணக்கிட்டது’ என்றது.
இந்த வருடம் மீண்டும் ஃபேஸ்புக்கின் செயல்பாடுகளை விமர்சித்து முன்பு கூறிய மூன்று பத்திரிக்கைகளும் கட்டுரைகளை வெளியிட்டன. இதில் இந்தியாவுக்கு என்றே பிரத்யேகக் கட்டுரைகள் வெளிவந்தன.
ஃபேஸ்புக்கின் கட்டமைப்பு போதாமை
ஒரு முக்கியமான புரிதலை சமீபத்தியக் கட்டுரைகள் உணர்த்தின.
ஃபேஸ்புக் உலகில் எல்லா நாடுகளில் இருந்தாலும், பொய்ச் செய்திகளைக் கண்டறிவதற்கான அதன் மொத்த நிதி ஒதுக்கீட்டில் 87% அமெரிக்காவுக்கும், வெறும் 13% மட்டுமே அமெரிக்கா தவிர்த்த மொத்த உலகுக்கும் செலவாகிறது.
இந்தியாவில் ஹிந்தியிலும் வங்க மொழியிலும் வெறுப்பு மொழியாடல்களைக் கண்டறிய மென்பொருளில் முதலீடுசெய்ததாக ஃபேஸ்புக் சொல்கிறது. சமீபத்திய தேர்தலுக்குப் பின் வங்கத்தில் 40% பதிவுகள் பொய்கள் என்று ஃபேஸ்புக் கண்டறிந்தது. ஒரு பொய்ப் பெயர் (Fake ID) பதிவாளரின் பதிவு 30 மில்லியன் லைக் போன்றவற்றை அள்ளியதாம்.
தமிழில் பொய்ச் செய்திகளைக் கண்டறியவும், வன்மம் கொண்ட பதிவுகளைக் கண்டறிந்து நீக்கவும், ஃபேஸ்புக் தமிழ் மொழியில் முதலீடு செய்யவில்லை என்று தெரிகிறது. தமிழில் பிராமணர்களுக்கு எதிராகவும், தலித்துகளுக்கு எதிராகவும், சிறுபான்மையினருக்கு எதிராகவும் (இதில் பிராமணர்களும் சேர்த்தி) மிக வன்மத்துடன் எழுதப்பட்ட பதிவுகள் சாதாரணமாக அன்றாடம் தென்படும். அடிப்படையில் யாரோ யாரைப் பற்றியோ வன்மத்துடன் எழுதுகிறார்கள். மிகவும் அருவருக்கத்தக்க சொல்லாடல்கள் மிகச் சாதாரணமாகத் தெறிக்கும். மேலும் ரிப்போர்ட் அடிப்பது என்கிற புகார் சொல்லுதலை வைத்து பதிவர்களை, அவர் எழுதியது - வன்மமோ இல்லையோ- பிடிக்காதவர்கள், முடக்குவதும் அடிக்கடி நிகழும் ஒன்று. ஆனால் அதையெல்லாம் மட்டுப்படுத்தும் கட்டமைப்பு ஃபேஸ்புக்கிடம் இல்லை.
இந்திய வெறுப்பரசியலைக் கண்டு அஞ்சிய ஃபேஸ்புக் ஆய்வாளர்கள்
முன்பு குறிப்பிட்டதைப் போல், இவ்வருடம் ஃபேஸ்புக்கின் செயல்பாடுகளை அம்பலப்படுத்திய கட்டுரைகள் வெளிவர ஆரம்பித்ததுமே மூன்று முக்கிய நாளிதழ்கள் ஃபேஸ்புக்கினால் இந்தியாவில் பெருகும் அல்லது வெளிவரும் வெறுப்பரசியலைப் பற்றி பிரத்யேக கட்டுரைகள் வெளியிட்டன. உலகின் மிகப் பெரிய ஜனநாயகத்தில் நிகழும் அரசியலும் அதில் சமூக வலைத்தளங்களின் பங்கு பற்றியும் உலக அரங்கில் இருக்கும் முக்கியத்துவமே அக்கட்டுரைகளுக்கு காரணம்.
இந்தியாவில் ஃபேஸ்புக் இயங்கும் முறையையும் அங்கிருக்கும் உரையாடல்களையும் ஆராய முனைந்து, ஃபேஸ்புக்கின் ஊழியர் ஒருவர் ஒரு பொய் கணக்கைத் தொடங்கினார்; ஃபேஸ்புக்கின் அல்காரிதம் பரிந்துரைக்கும் குழுமங்களில் இணைவது, பரிந்துரைத்த காணொளிகளைக் காண்பது என்று ஒரு சாதாரண பயணாளியாக அவர் இயங்க ஆரம்பித்தார். பிறகு மளமளவென்று வன்முறைப் பதிவுகள் வரத் தொடங்கின, பொய்ச் செய்திகள் தொடர்ந்தன. மூன்றே வாரத்தில் தன் வாழ்நாளில் பார்த்த மொத்த வன்முறைக் காட்சிகளையும்விட அதிகமாக பார்க்க நேரிட்டதாம் அந்தப் பரிசோதனை பதிவருக்கு. பாகிஸ்தானுக்கு எதிராக, இஸ்லாமியரை மிகக் கீழ்த்தரமாக வசை பாடி, மோதியை துதிபாடி, அதீத வன்முறை பதிவுகள் வர தொடங்கின. ஃபேஸ்புக்கின் உள்ளேயே இந்தியாவில் ஆளும் கட்சியை சேர்ந்தவர்களுக்குத் தொடர்ந்து வெறுப்புப் பதிவுகளுக்கான தண்டனைகளிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக வெளிப்படையாக ஓர் அறிக்கை சொன்னது.
ஃபேஸ்புக்கின் செயல்பாடு இப்படியே தொடர்ந்தால், இன்னும் பத்து வருடத்தில் வெறுப்பு மட்டுமே எஞ்சும் என்று ஓர் இஸ்லாமியர் ஃபேஸ்புக்கின் ஆய்வாவாளர்களிடம் சொன்னாராம். லவ்-ஜிஹாத், கரோனா தொற்று ஆகியவற்றுக்கு இஸ்லாமியரை வசைபாடி வரும் பதிவுகளில் பெரும்பாலானவை சங்கப் பரிவார அனுதாபிகளுடையதுதானாம். பஜ்ரங் தள், ராம் சேனா ஆகிய குழுக்கள் பற்றி ஃபேஸ்புக் நிறுவனத்துக்குள்ளேயே அச்சம் இருந்தது. ஆனால் அவற்றைத் தடைசெய்தால் பாஜகவின் அதிருப்திக்கு ஆளாக நேரிடுமோ என்று ஃபேஸ்புக் தயங்கியது. பஜ்ரங் தள் பதிவுகளுக்கும் நிஜ வாழ்வில் நடக்கும் வன்முறைக்கும் தொடர்பிருக்கிறது என்கிறது ஓர் ஆய்வு.
திரிபுராவில் 11 வயது பையன் ஒருவன் ஜூன் 26 அன்று இறந்ததும், சிறுநீரகத்தைத் திருடுவதற்காகவே அவன் கொல்லப்பட்டான் என்று வதந்தி பரப்பப்படது. விளைவாக உண்டான கலவரத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். அந்த வதந்தியைப் பரப்பியதில் முக்கியமானவர் பாஜகவைச் சேர்ந்த ரத்தன் லால் நாத். பிள்ளைகளைக் கடத்துகிறார்கள் என்று வாட்ஸப்பில் பரவும் வதந்திகளால் மஹாராஷ்டிராவில் மட்டும் ஒரு மாதத்துக்குள்ளேயே 14 கலவரங்கள். மாடுகளைக் கடத்துகிறார் என்ற வதந்தியால், பெஹ்லு கான் அடித்தே கொல்லப்பட்டார்.
பரவும் வெறுப்புக் கலாசாரமும் ஏற்றுமதியாகும் வெறுப்பும்
ஃபேஸ்புக் பற்றிய உண்மைகள் அம்பலமானதும் அது ஒரு தனியார் நிறுவனம் தன் லாப நோக்குக்கான உறுபசிக்கு சமூகங்களைக் காவு கொடுக்கிறது என்ற விமர்சனம் எழுந்தது. உண்மை. ஆனால், அது மட்டுமே உண்மை இல்லை. ஃபேஸ்புக் இந்திய அரசோடு கருத்துரிமைக்காக சில சட்டங்களை எதிர்க்கிறார்கள் என்ற எண்ணம் பொதுவில் மேலோங்கியபோது, இந்தியா இந்திய தயாரிப்பான 'கூ' (Koo) என்ற செயலியை அறிமுகப்படுத்தியது. உடனே பாஜகவினர் கூவை நோக்கிப் பாய்ந்தனர். கூ தளத்தில் மட்டுறுத்தல் செய்வதற்கு ஆட்கள் இல்லை. வெறுப்புப் பதிவுகள் உடனே பெருகியது. ஒரு பதிவர் இஸ்லாமியரை எந்த வசைச் சொல்லை வைத்து அழைக்கலாம் என்று அச்சில் ஏற்ற முடியாத நான்கு சொற்களைக் குறிப்பிட்டிருந்தார்.
கூ தளத்தைப் போல் கிளப்ஹவுஸ் வலைதளத்திலும் சாதியமும் இஸ்லாமியருக்கு எதிரான வசைகளும் தளம் ஆரம்பித்து இந்தியர்கள் சேர்ந்த உடனேயே தொடங்கியது. ஒரு கிளப்ஹவுஸ் நிகழ்வில் முஸ்லிம் ‘ஜெய் ஶ்ரீராம்’ என்று சொன்னால் ரூ. 500 அளிப்பதாகச் சொல்லப்பட்டது.
ஃபேஸ்புக் நிறுவனம் தன் கடமையில் தவறுகிறது, ஆனால், அதை தாண்டி இந்தியாவில் நிலவும் வெறுப்புச் சூழல் இந்தியாவின் பிரச்சினை, இந்தியர்களின் பிரச்சினை. இதனை மழுப்பவே முடியாது.
வெளியுறவுக் கொள்கைகளைப் பற்றி செய்திகள், கட்டுரைகளை வெளியிடும் ‘ஃபாரின் பாலிஸி’ (Foreign Policy) இதழ், சென்ற வருடம் இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் இஸ்லாமிய வெறுப்பு என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டது. பொய்ச் செய்திகளை ஆராயும் ஓர் ஆய்வகம் இந்தியாவை மையமாகக் கொண்டு செயல்படும் 260 போலி ஊடக தளங்கள் 65 நாடுகளில் வியாபித்திருப்பதாகச் சொல்கிறது. வெளிநாடுகளில் இடதுசாரி அரசியலர்கள்கூட தங்கள் தொகுதி இந்தியர்களின் மோதி ஆதரவை அனுசரித்துப் பேசும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. அரசியலர்கள் முதல் பல்கலைக்கழக பேராசிரியர்கள் வரை அமெரிக்க வாழ் இந்துத்துவர்களின் சமூக வலைதளத் தாக்குதல்களுக்கு - பலவும் வன்முறையை அப்பட்டமாகப் பேசும் தாக்குதல்கள் - உள்ளாகியிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் கர்நாடக சங்கீதத்தில் கிறிஸ்தவர்களைப் பற்றி பிரச்சினை கொழுந்துவிட்டு எரிந்தபோது, டி.எம்.கிருஷ்ணா நியூ ஜெர்சியில் நிகழ்ச்சி நடத்த வந்திருந்தார். அப்போது எழுந்த அச்சுறுத்தல்களைப் பார்த்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே விக்கித்துப்போய் அமெரிக்க போலீஸாரிடம் பாதுகாப்பு கேட்ட அவலமும் நடந்தது.
கவனியுங்கள் வாசகர்களே... மிரட்டியவர்கள் அமெரிக்க வாழ் மெத்தப் படித்த தமிழர்கள். முன்பொரு முறை சுப்பிரமணிய சுவாமியின் நிகழ்ச்சி ஒன்றுக்கு நியூ ஜெர்சியில் நேரில் சென்றிருந்தேன். சுவாமி பேசிய அப்பட்டமான வெறுப்புப் பேச்சுக்கு மெத்தப் படித்தவர்கள் பலர் கை தட்டியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். இந்தியர்கள் இங்கு அமெரிக்காவில் சிறுபான்மையினர், இங்கு எந்த பாதுகாப்பைத் தங்களுக்கு விழைகிறார்களோ அதனை அமெரிக்க வாழ் இந்துத்துவர்கள் இந்தியாவில் தர மறுக்கிறார்கள். இது அசிங்கமான இரட்டை வேடம்.
இந்தியா உலகின் ஜனநாயக நாடுகளில், அதன் மக்கள்தொகையாலும் அங்கிருக்கும் பல கோடி சிறுபான்மையினராலும், அமெரிக்காவுக்கு சற்றும் குறையாத முக்கியத்துவம் வாய்ந்தது. ஜனநாயகம் உலகில் எங்கு சிதைவுற்றாலும் அது உலகெங்கிலுமுள்ள ஜனநாயகத்தைப் பலவீனமாக்கும். இன்று ஜனநாயகத்துக்கு முக்கிய அச்சுறுத்தலாக சமூக வலைதளங்கள் உருவெடுத்திருக்கின்றன. அரசுகளும் சமூகங்களும் இதுகுறித்து அக்கறையோடு உடனடியாக பலவித உரையாடல்களை முன்னெடுக்க வேண்டும். எல்லாப் பழியையும் வலைதளங்கள் மீது போட்டுவிட்டு சமூகங்கள் தங்கள் பொறுப்புகளைத் தட்டிக் கழிக்கவும் முடியாது. சமூக வலைதளங்களானவை ஒரே சமயத்தில் ஊதுகுழல்களாகவும் முகம் காட்டும் கண்ணாடிகளாகவும் நமக்குத் தோன்றுகின்றன. அதாவது, அடிப்படை வெறுப்பானது நம் சமூகத்தின் உள்ளே ஊற்றெடுக்கிறது. அதைத்தான் நாம் வெல்ல வேண்டும்.
ஆதாரச் சுட்டிகள்:
2. https://www.nytimes.com/2021/
3. https://www.nytimes.com/2021/
4. https://www.washingtonpost.
5. https://www.washingtonpost.
8. https://www.bbc.com/news/
12. https://news.yahoo.com/uproar-
13. https://www.buzzfeednews.com/
17. https://time.com/6112549/
18. https://foreignpolicy.com/
19. https://thediplomat.com/2019/
20. https://www.rollingstone.com/
23. https://www.livemint.com/
2
பின்னூட்டம் (4)
Login / Create an account to add a comment / reply.
DHAMU 3 years ago
What an important article. But this was not discussed and published with this much details in any main stream medias (Tamil) like what we are imagining as 'media'. Keep doing 'ARUNCHOL'!
Reply 4 0
Login / Create an account to add a comment / reply.
Saran Viveka 3 years ago
நல்ல பதிவு. பேஸ்புக்கிலேயே நாள் முழுவதும் குப்பை கொட்டினாலும் எத்தனை பேர் சமீபத்தில் பேஸ்புக் சார்ந்து வெளியான பல்வேறு ஆர்ட்டிகிள்களை, ஆராய்ச்சி கட்டுரைகளை படித்திருப்பார்கள் என்று தெரியவில்லை. இந்தியாவை முன்வைத்தே பேஸ்புக் சார்ந்த விவாதம் கடந்த ஒருவருடத்துக்கு மேலாக நடந்துகொண்டிருக்கிறது, அந்த செய்திகளை தொடர்ந்தவர் மிக சொற்பம். உங்களது கட்டுரை அதை ஒட்டுமொத்த பார்வையை அளிக்கிறது. குறிப்பாக இந்த கட்டுரையை எழுதிவிட்டு இதற்கான "ஆதார சுட்டிகள்" கொடுத்தது ரசிக்க வைத்தது. எந்த ஆதாரமில்லாமல் மானாவாரியாக பொய்ச்செய்திகளை பரப்புபவர்களுக்கு, அதை தமது அரசியல் சாதுர்யமாக கொண்டு அது சார்ந்த குற்ற உணர்வு இல்லாதவர்களுக்கான ஒரு கட்டுரையில் "ஆதாரச் சுட்டிகள்" கொடுப்பது என்பது ஒன்றை குறிப்பால் உணர்த்துவது. இதையும் "அஜெண்டா" என்று சொல்லி கடக்க முயல்பவர்களுக்காணது அந்த "ஆதாரச் சுட்டிகள்".
Reply 5 0
Login / Create an account to add a comment / reply.
Ganeshram Palanisamy 3 years ago
'FEES'BOOK.
Reply 4 0
Login / Create an account to add a comment / reply.
Rathan Chandrasekar 3 years ago
Shocking! So much has happened, The media in India, especially in tamilnadu, didn't write a single word. Communal forces that use social media for false news and have seized the media to cover up the truth. A blatant expression of the fall of democracy.
Reply 6 0
Login / Create an account to add a comment / reply.