இன்னொரு குரல் 6 நிமிட வாசிப்பு

ராஜன் குறை எதிர்வினைக்கு எதிர்வினை

அரவிந்தன் கண்ணையன்
07 Nov 2021, 5:00 am
1

‘அருஞ்சொல்’ தொடர்பில் நாகரீகமான முறையில் முன்வைக்கப்படும் ஆளுமைகளின் குறிப்புகள், விமர்சனங்கள் எதுவாயினும் ‘இன்னொரு குரல்’ பகுதியில் அதை வெளியிடுகிறோம். அதன் ஒரு பகுதியாக, சாவர்க்கர் குறுந்தொடருக்கு ராஜன் குறை ஆற்றிய எதிர்வினைக்கு, அரவிந்தன் கண்ணையனின் முகநூல் எதிர்வினையையையும் இங்கே வெளியிடுகிறோம். 

சாவர்க்கர் பற்றிய இரண்டு முக்கிய வாழ்க்கை வரலாறு நூல்களை முன்வைத்து,  பி.ஏ.கிருஷ்ணன் ஐந்து நாட்கள் தொடராக ‘அருஞ்சொல்’ தளத்தில், 'சாவர்க்கர்: வாழ்வும் நூல்களும்' தொடரை எழுதியிருக்கிறார். பொது வாசகர் ஒருவர், சாவர்க்கர் பற்றி அறிந்துகொள்ள அக்கட்டுரைகள் உதவும். சீரிய வாசகர்கள் பலருக்கும்கூட, சாவர்க்கரை வரலாற்றுரீதியாக மதிப்பிட அக்கட்டுரைகள் தெளிவான தரவுகளை அளிக்கின்றன. சாவர்க்கரின் வாழ்க்கைப் பயணம் எப்படி தேசபக்தி, கொடும் சிறைவாசம் என்று பயணித்து, முடிவில் அதிதீவிர இஸ்லாமிய எதிர்ப்பு நிலைக்குப் போய் இந்தியாவின் தேசப் பிதாவின் கொலைக்கு தூண்டுகோலாய் இருந்தது என்பது வரை பாரபட்சமில்லாமல் பி.ஏ.கே. எழுதியிருக்கிறார்.

சாவர்க்கரைப் பற்றி இதுவரை அறியாதது ஏதும் இருக்கிறதா என்று கேட்பது அபத்தம். இருக்கிறது என்பது வேறு விஷயம். அங்கொன்றும் இங்கொன்றுமாக அறிந்தவற்றையே தொகுத்துப் படிக்கும்போது கிடைக்கும் புரிதல் வேறு தளம். அதைத்தான் இக்கட்டுரைகள் வாசகனுக்கு அளிக்கும். 

ஹிட்லரைப் பற்றி இதுவரை வெளிவராததா? ஆனால், சென்ற வருடம்கூட முக்கியமான புதிய வாழ்க்கை வரலாறு வெளிவந்தது. இதெல்லாம் மேற்குலகில் மிக சகஜம். மால்கம் எக்ஸ் பற்றி இதற்கு மேல் யாரும் எழுதிவிட முடியாதென்று கருதப்பட்ட வரலாற்று புத்தகத்தை அடுத்து, இன்னொன்றும் சென்ற வருடம் வந்தது. வரலாற்றை மீண்டும் மீண்டும் வினவி புதிய தரவுகள், புதிய புரிதல்கள் என்றுதான் மேலெடுத்துச் செல்ல முடியும். இதுவரை சாவர்க்கர் பற்றி முழு நீள வரலாறு இல்லை; அதனை விக்ரம் சம்பத் செய்திருக்கிறார்; அது உள்ளிட்ட நூல்களை முன்வைத்து பி.ஏ.கே. எழுதியிருக்கிறார். 

பி.ஏ.கே. கட்டுரைகள் குறித்து சில விமர்சனங்கள் எனக்குண்டு. சாவர்க்கரை அறிய வேண்டும் என்று சொல்வது வேறு - ஆனால் இன்று சாவர்க்கருக்கு நாம் அளிக்கக் கூடிய இடம் என்னவாக இருக்க வேண்டும்? நாடாளுமன்றத்தில் அவர் புகைப்படம் இருப்பது சரியா? அந்த இடத்தை அவருக்கு அளிப்பது சரியா? இந்திரா காந்தி சாவர்க்கருக்கு அப்படியொரு இரங்கல் குறிப்பு எழுதியிருக்க வேண்டுமா? எப்படி சாவர்க்கர் போன்ற ஒருவர் அவர் பாதக செயல்கள், கருத்துகளைத் தாண்டி நயம்பட பேசத் தக்க ஒருவராக இருக்கிறார்? அதில் அவர் சாதியின் பங்கு என்ன? பால் தாக்கரே போன்ற ஒருவருக்கு அரசு மரியாதையுடன் இறுதி ஊர்வலம் நடந்தது ஏன்? சாவர்க்கருக்கு வரலாற்றில் என்ன இடம்? இவற்றையெல்லாமும் கட்டுரைகள் தெளிவாகப் பேசியிருக்கலாம்.

சாவர்க்கர் சாதியை எதிர்த்தார் என்று தரவுகளின் அடிப்படையில் நிறுவப்படுகிறது. சாதியை அவர் சமூகநீதியின் பொருட்டு எதிர்த்தாரா இல்லை கிறிஸ்தவ மதமாற்றம், இஸ்லாமிய ஒருங்கிணைப்பு ஆகியவற்றுக்கு எதிரான தந்திரோபாயமா என்றும் வினவியிருக்கலாம். சாதியை எதிர்க்கும் ஒருவர் ஏன் மத வெறியராக இருந்தார்? அந்த இருமைக்குள் ஒரு முரண் இருக்கிறது. அதுதான் என்னைப் பொறுத்தவரை, அவரது சாதி எதிர்ப்பையே கேள்விக் கேட்க வைக்கிறது. 

சரி, ஒரு நல்ல கட்டுரையின் வெற்றி என்பது, இப்படி விவாதங்கள் நிகழ்வதும், இரண்டு வாசகராவது “என் முடிவுகளில் ஒன்றையாவது இது அசைத்தது” என்று சொல்வதும்தான்.

அப்படியிருக்க, பி.ஏ.கே., சாவர்க்கரை ஏதோ மீட்டுருவாக்கம் செய்து புனிதராக்கிவிட்டார் என்று கூப்பாடு போடுவதெல்லாம் அபத்தம். அப்படிப்பட்ட எதையும் பி.ஏ.கே. செய்துவிடவில்லை. நிச்சயமாக பலருக்கும் இக்கட்டுரைகள் ஒரு முக்கியமான நபர் குறித்த அறிமுகமாக இருக்கும். மேலும், ஒரு நபரைச் சார்ந்த வரலாறாக மட்டுமல்ல; ஒரு கொந்தளிப்பான காலகட்டம் குறித்தும், முக்கியமான தகவல்கள் அடங்கிய கட்டுரைகள் இவை. வாசகர்கள் கண்டிப்பாக வாசிக்க வேண்டும்.

ராஜன் குறையின் எதிர்வினை பற்றி...

‘அருஞ்சொல்’ தளத்தில் ‘பார்ப்பனர்’ என்று எழுதவிட மாட்டார் சமஸ். ‘பிராமணர்’ என்று மாற்றி விடுவார் என்று ஆரம்பிக்கிறது ராஜனின் எதிர்வினை. இது என்ன வக்கிரம்? பிராமணரான ராஜன், இப்படி எழுதுவதன் மூலம் யாருக்கு என்ன நிரூபிக்க பிரயாசைப்படுகிறார்? This is craven playing to the gallery and dammn cheap one at that.

“சாவர்க்கரின் இறுதியான, உறுதியான வரலாற்றுப் பங்களிப்பு என்பது இதுதான் என்று தெரியும்போது, அவரைக் குறித்த இன்னபிற தகவல்களால் என்ன கூடுதல் புரிதல் வரப்போகிறது?” என்று கேட்கிறார் ராஜன். அப்படிப் பார்த்தால் ஹிட்லர் 1939-க்கு முன் ஓவியனாக முயன்றது, ஒரு யூதர் உதவியதெல்லாம் நமக்கெதற்கு? காந்தி லண்டனுக்குப் போன கதையெல்லாம் எதற்கு? பெரியாரின் ஆரம்பக் கால வாழ்வு எதற்குத் தெரிய வேண்டும்? இப்படித் தான் வரலாறு எழுதப்பட்டும் பேசப்பட்டும் இருக்கிறது. இதுதான் முறை; ‘குறை’ அல்ல என்று ராஜன் குறைக்கு யார் உரைப்பது?

இப்படியெல்லாம் எழுதியிருக்கிறார் ராஜன் குறை.

//அவரை எல்லாத் தலைவர்களும் மிகவும் மதித்தார்கள். அவர் மீன் சாப்பிடுவார். ஜாதி வேற்றுமைகளை ஏற்றுக்கொள்ளவில்லை என்று பல தகவல்களை சொல்கிறது. இது சாவர்க்கர் என்ற தனி நபரைப் பற்றிய வர்ணனை. வரலாற்றில் எல்லாக் கொடுங்கோலர்களும், பாசிஸ்டுகளும் பல்வேறு கோணங்களில் நாம் அனுதாபம் கொள்ளத்தக்க வாழ்க்கையைத்தான் கொண்டிருப்பார்கள். தியாகங்கள் பல புரிந்திருப்பார்கள். // — சாவர்க்கரின் வாழ்க்கை, தடம் புரண்ட வாழ்க்கை என்பதைத் தான் பி.ஏ.கே.வின் கட்டுரை நமக்களிக்கிறது. அனுதாபமேற்படுத்தி சாவர்க்கரின் வன்மங்களுக்கு வக்காலத்து வாங்குவதல்ல கட்டுரைகளின் நோக்கம்.

//எந்த நேரத்தில் யார் ஏற்படுத்திய பாதிப்பினால் அவர் வன்முறையாளராக ஆனார் என்பது போன்ற அம்சங்களை அறிந்துகொள்வதால் வரலாற்றிற்கு பயன் எதுவும் கிடையாது.// இப்படியெல்லாம் ஒரு பல்கலைக்கழக ஆசிரியர் பேசுவது வேடிக்கை, துயரம். சே குவேரா ஏன் புரட்சியாளர் ஆனார் என்றறிய அவசியம் உண்டென்றால், சாவர்க்கர் ஏன் இஸ்லாமிய வெறுப்பாளனாக மாறினார் என்றறிவதும் வரலாற்றின் கடமைதான். 

//நேருவியர் என்று நீங்கள் நற்சான்றிதழ் வழங்கும் உங்கள் நவ-பார்ப்பனீய கட்டுரையாளர் காந்தியின் அஹிம்சா தர்மத்தை தன் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்த பெரியாரை, 'நாஜி' என்று அழைப்பது உங்களுக்குத் தெரியாதிருக்க வாய்ப்பில்லை. // ஈ.வெ.ரா. பெரியாரை, பி.ஏ.கே நாஜி என்று அழைப்பதில் எனக்கு உடன்பாடில்லை. அதுகுறித்து விவாதமே நடத்தியிருக்கிறோம். ஆனால், ஈ.வெ.ரா.வை காந்திய அஹிம்சாவாதி என்று அவரது பேச்சு, எழுத்து எதையும் படிக்காத ஒருவர்தான் சொல்ல முடியும் அல்லது அரசியல் லாபத்துக்காக மட்டுமே சொல்ல முடியும். 

//ஏன் இந்து மகாசபை, ஆர்.எஸ்.எஸ். ஆகிய இயக்கங்களை மராத்திய பார்ப்பனர்கள் உருவாக்குகிறார்கள் என்பது குறித்து ஆய்வதில்லை. // இது அபத்தம். கட்டுரை என்ன ஆர்.எஸ்.எஸ் பற்றியதா? இரண்டு வாழ்க்கை வரலாற்று புத்தகங்கள் குறித்தான அறிமுகம்தானே?

மீண்டும் சொல்கிறேன் பி.ஏ.கே.வின் கட்டுரைத் தொடர் சகலரும் வாசிக்கக் கூடிய ஒன்று. இந்தியாவின் உருவாக்கத்தில் இருந்த முரணியக்கங்களை புரிந்துக் கொள்ளவும், ஒரு வலாற்றுக் காலத்தில் செயல்பட்ட பலரின் செயல்பாடுகளையும் நிகழ்வுகளையும் சுருக்கமாகவாவது அறிந்துகொள்ள உதவும்!

- அரவிந்தன் கண்ணையன்

 

ஏராளமான புதிய விஷயங்களைக் கொண்டுள்ளது சாவர்க்கர் தொடர்

ராஜன் குறையின் பதிவில் அவரின் நண்பர்கள் பட்டியலில் உள்ளவர்கள் மட்டும் பின்னூட்டம் இட முடியும் என்பதால், 'அருஞ்சொல்' தளத்தில் அதற்கான எதிர்வினையை இடுகிறேன்:

  1. சாவர்க்கர் மீது எந்த புதிய வெளிச்சத்தையும் இந்தத் தொடரில் பாய்ச்சப்படவில்லை என்று எதை அடிப்படையாகக் கொண்டு ராஜன் குறை சொல்கிறார்? ஏராளமான புதிய தகவல்கள் வெளிப்பட்டுள்ளன.
  2. // ஹிட்லர், முசோலினி ஆகியோர் முதலில் மேற்குலகின் சிந்தனையாளர்கள், அரசியலாளர்களால் பெரிதும் மதிக்கப்பட்டவர்கள், புகழப்பட்டவர்கள்தான். இரண்டாம் உலகப் போர் தொடங்கும் வரை, அவர்கள் தேசியத் தலைவர்களாகவே கருதப்பட்டார்கள். // என்று எழுதும் ராஜனுக்கு வரலாறு தெரியவில்லை என்பது தெளிவாகிறது. (இதுபோன்ற அறியாமையைப் போக்கவே இத்தகைய தொடர்கள் மிகத் தேவை). இரண்டாம் உலகப் போருக்கு முன்பாக ஹிட்லர், முசோலினியை எந்த மேற்குல சிந்தனையாளர்கள், அரசியலாளர்கள் மதித்துப் புகழ்ந்தனர் ? பாசிசத்தை முன்மொழிந்த சில அரசியலாளர்கள், 'சிந்தனையாளர்கள்' மட்டுமே புகழ்ந்தனர். ராஜனின் ஆதர்ச நாயகர்களில் ஒருவரான, மிக முக்கிய சிந்தனையாளரான ஆன்டனியோ கிராம்சியை முசோலனி 1926ல் கைது செய்து, கொடும் சித்தரவதை செய்து, 1937ல் சிறையில் மரணமடையச் செய்தவன். இரண்டாம் உலகப் போர் 1939ல் தான் தொடங்கியது. கிராம்சி எழுதிய சிறைக் குறிப்புகள் உலகப் புகழ் பெற்றவை. ஹிட்லர், முசோலனி இருவரும் ஆட்சிக்கு வந்த உடனே கம்யூனிஸ்டுகள், லிபரல்கள், ஜனநாயகவாதிகளை வேட்டையாடி, சிறையில் அடைத்தனர். கிராம்சி அவர்களில் மிக முக்கியமானவர். அன்று எந்த சிந்தனையாளர் இவர்களைப் புகழ்ந்து ஆதரித்தார்? ஹைடெக்கர் ஒருவரைத் தவிர? Sweeping generalisations.
  3. ஒரு மனிதனை தீவிர வெற்றுப்பரசியலை நோக்கிய திருப்பக் காரணமான சம்பவங்களை, வரலாற்றை ஆராய்ந்து ஒரு கருத்தை தெரிவிப்பது பெரும் குற்றமோ அல்லது திசை திருப்பலோ, unscientific method-ஓ அல்ல.
  4. //பெரியார் ஆரிய, திராவிட இனங்கள் கலந்துவிட்டன என்பதையும் தூய இன அடிப்படையிலான பிரிவினை சாத்தியமில்லை என்பதையும் புரிந்துகொண்டவர், ஏற்றுக்கொண்டவர். // இல்லை. பார்ப்பனர்கள் அனைவரும் தூய்மையான ஆரியர்கள், பார்ப்பனர் அல்லாதவர்கள் யாவரும் தூய்மையான திராவிடர்கள் என்று தான் பெரியார் கருதினார். இந்த 'கலந்துவிட்ட' விவகாரம் எல்லாம் சமீபத்திய வருடங்களில், DNA evidences எல்லாம் வெளியான பிறகு ஏற்றுக்கொள்ளப்படும் உண்மைகள். பெரியார் காலத்தில் கருப்பு வெள்ளையாகத் தான் பார்த்தார்கள். பெரியார் பார்ப்பனீயப் பண்பாட்டை, பார்ப்பனீயத்தை மட்டும் எதிர்க்கவில்லை, பார்ப்பனர்களையும் எதிர்த்தார். அவர்கள் தனி இனம் என்றும், 'வேறு' என்றும் வகைப்படுத்தி, வெறுப்பரசியலை வளர்த்தெடுத்தார். அது இன்றும் தொடர்கிறது.

- கே.ஆர்.அதியமான், பத்திரிகையாளர்

 

என்ன பேராசிரியர்கள், இப்படி ஆகிவிட்டார்கள்?

ராஜன் குறை ஒரு ஆய்வாளர். அவர் இப்படி எழுதுவது சரியில்லை. பி.ஏ.கிருஷ்ணன் சரியாகவே இந்தத் தொடரை எழுதியுள்ளார். நான் பாஜகவை வெறுக்கிறேன். தொடரைப் படித்தபோது, எனக்கு சாவர்க்கர் மீது உள்ள அபிப்ராயம் ஏதும் மாறவில்லை. சாவர்க்கரைப் பற்றிப் பேச ஏதுவாக, மேலும் சில தகவல்களை அறிந்துகொண்ட உணர்வே ஏற்படுகிறது. ஆங்கிலப் பத்திரிகைகள் இது மாதிரியான ஆழமான கட்டுரைகளை வெளியிடுகின்றன. சமீபத்தில் 'எக்ஸ்பிரஸ்' நாளிதழில், சாவர்க்கரைப் பற்றி வலதுசாரி ஒருவர், இடதுசாரி ஒருவர் எழுதியிருந்ததைக்கூட நான் படித்தேன். தமிழில் இப்படியெல்லாம் வாராதா என்று ஏங்கிக்கொண்டிருந்தபோதுதான் மாமணிபோல வந்திருக்கிறது 'அருஞ்சொல்' இணையப் பத்திரிகை. அப்படிப்பட்ட பத்திரிகை மீது ராஜன் குறை அவர்கள் தாக்குதல் நடத்தியிருக்கிறார் என்பதாகவே இதைச் சொல்ல வேண்டியுள்ளது. சாவர்க்கரைப் பற்றியெல்லாம் எழுதவே கூடாது என்று அவர் சொல்வது, என்ன இந்த நாட்டில் பேராசிரியர்கள் எல்லாம் இப்படி ஆகிவிட்டார்கள்? என்ற எண்ணத்தையே உருவாக்குகிறது. பாஜக போல எல்லோருமே பாசிஸ்ட்டுகளாக ஆகிவிடுவார்களோ என்ற பயத்தையும் உருவாக்குகிறது. இந்த விமர்சனத்தையும் பொருட்படுத்தி சமஸ் அவர்கள் 'அருஞ்சொல்'லில் வெளியிட்டிருப்பது அவருடைய நேர்மைக்கும், ஜனநாயகத்துக்கும் சான்று. இதுபோல கட்டுரைகளை அவர் துணிந்து வெளியிட வேண்டும்.

-ராஜ கைலாசம்

 

தொடர் முழுவதையும் வாசித்துவிட்டுப் பிரசுரித்திருக்கலாமே? 

ராஜன் குறை அவர்கள் இங்கு தெரிவித்திருக்கும் கருத்துகள், பி. ஏ. கிருஷ்ணன் அவர்களுடைய தொடரை படித்துக் கொண்டிருக்கும்போதே எனக்கும் தோன்றியது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தலைவர்களின் அரசியல் சித்தாந்தத்திற்கு, அவர்களின் இளம் பிராய நிகழ்வுகளிலிருந்து அல்லது அந்தரங்க வாழ்க்கையிலிருந்து மூலத்தைக் கண்டறியும் செயல் எந்த வகையிலும் நியாயமாகாது. அந்தமான் ஜெயில் பதான் வார்டர்கள்தான், சாவர்க்கரின் முஸ்லிம் வெறுப்பிற்கு காரணம் என்று சொல்வது அவரின் அரசியல் புரிதலுக்கு அவமானமான ஒன்றாகும். தன்னுடைய வெறுப்பு அரசியலை ஹிந்து சனாதன, சாதிய மேட்டிமை உணர்விலிருந்தே சாவர்க்கர் பெற்றிருக்க வேண்டும். மேலும் ராஜன் குறை சொல்வது போல, இந்தக் கட்டுரைத் தொடர் சாவர்க்கர் மற்றும் அவரது அரசியலின் மீது எந்த ஒரு புதிய வெளிச்சத்தையும் பாய்ச்சவில்லை. ஒரு கட்டுரைத் தொடரை வெளியிடும் முன், அதன் முழுமையையும் படித்து ஒரு informed evaluation செய்ய வேண்டியது இதழாசிரியரின் கடமை. ஒரு சாதாரண, நம்பகத்தன்மை குறைந்த, பரபரப்பை மட்டும் சார்ந்திருக்கக் கூடிய வாரமிருமுறை புலனாய்வு இதழில் வெளிவந்திருக்கக் கூடிய தொடரை 'அருஞ்சொல்' வெளியிட்டது பெரிய வியப்புத்தான். இப்படியான செயலில் அரசியல் ஏதும் இல்லை என்று நம்புவோம்.

- பிரபு

 

கோட்ஸேயைப் பற்றி, எச்.ராஜாவை எழுதவைங்களேன்...

எனக்கும் இதேபோன்று ஒரு சந்தேகம் வந்தது, ஹிந்துதுத்வா அரசியலினால் நிகழ் காலத்தில் பாடத்தைக் கற்றுகொண்டு இருக்கிறோம். இந்த சூழலில் கிருஷ்னன் அவர்களை வைத்து, அதுவும் ஹிந்துத்துவ அரசியலின் பிதாமகன் சாவர்க்கர் பற்றிய கட்டுரைத் தொடர் எழுதவைப்பது முரணாகப்பட்டது. ராஜன் குறை, என் மனதில் உள்ளதை அப்படியே கொட்டி இருக்கிறார். சாவர்க்கர் பற்றிய கட்டுரை ஒரு பரபரப்புக்காக எழுதப்பட்டதாக நாம் நினைக்கிறோம். பி.ஏ.கிருட்டிணன் பற்றி தமிழ் உலகிற்கு நன்றாகத் தெரியும். அவரின் நோக்கம் வெற்றிபெறாது. ஒரு தாழ்மையான யோசனை: கோட்ஸேயைப் பற்றி, நம்ம எச்.ராஜா எழுத இடமளியுங்களேன்...

-கணேசன் நடராஜன்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
அரவிந்தன் கண்ணையன்

அரவிந்தன் கண்ணையன், அமெரிக்காவில் வசிக்கும் தமிழர். இந்திய வரலாறு, சமகால அரசியல் தொடர்பில் இணையத்தில் தொடர்ந்து எழுதிவருபவர். உலக வரலாறு, அமெரிக்க அரசியல் தொடர்பில் ஆழ்ந்த ஆர்வம் கொண்டவர்.








பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

V NEELAKANDAN   3 years ago

தமிழகத்தில் அதுவும் குறிப்பாகச் சமூக வலைதளத்தில் சாதி ஒழிப்பு என்பது மிகவும் வித்தியாசமானது. எந்தக் கருத்தைச் சொன்னாலும் கருத்து பின்னுக்குத் தள்ளப்பட்டு சொன்னவர் என்ன சாதி, சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது முன்னுக்கு வந்து விடுகிறது. அதுவரை தெரியாத வாசகர்களுக்கெல்லாம் இவர் இன்ன சாதி என்பதை அறிவிப்பதாகவோ அல்லது வாசகரே தேடிச் செல்லும் ஒரு குறுகுறுப்பையோ ஏற்படுத்திவிடுகிறது. இந்தத் தொடரில் சவார்க்கர் மீது அனுதாபம் ஏற்படுத்தக் கட்டுரையாளர் முயன்றாரோ இல்லையோ நிச்சயம் கட்டுரை ஒரு பரிவுணர்வை ஏற்படுத்தவே செய்கிறது. ஆர்எஸ்எஸ் குறித்து எழுத இது ஆர்எஸ்எஸ் பற்றிய கட்டுரைத் தொடர் அல்ல என்றால், தந்தை பெரியாரைப் போகிற போக்கில் சவார்க்கர் சொன்னதைத்தான் பெரியாரும் சொன்னார் என்பது என்ன நியாயம்? அதுவும் இடதுசாரிகள் உட்பட பல தலைவர்கள் சவார்க்கர் குறித்து ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் பாராட்டியதை மட்டும் கூறுவது அந்தத் தலைவர்கள் சவார்க்கர் குறித்து ஒட்டுமொத்தமாக என்ன கருத்து கொண்டிருந்தார்கள் என்பதைக் கூறாமல் பதிவிடுவது அந்தத் தலைவர்களுக்கே நியாயம் செய்ததாகாது. ஆய்வாளர்களிடம் அறிந்து கொள்ள விரும்பும் சாதாரண வாசகர் எதிர்பார்ப்பது காய்தல் உவத்தல் அற்ற கருத்து முன் வைக்கப்படுவதையே. அக்கருத்துக்களிலிருந்து வாசகர் அவரது புரிதலுக்கு ஏற்ப முடிவுக்கு வரலாம் அல்லது மேலும் தேடச் செய்வதாக ஆய்வாளர்களின் படைப்புகள் இருத்தல் நலம்.

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

திராவிட மாடல்இந்திய எல்லைஅயலுறவில் ‘பெரியண்ணன்’ அணுகுமுறை!சகிப்புத்தன்மைபாபாரதிய ஜனதா கட்சிநடப்பு நிகழ்வுகள்மெய்த்திமாதவ் காட்கில்ஹேஷ்டேக்அபயாதங்கச் சுரங்கம்இந்தத் தாய்க்கு என்ன பதில்?இன்ஃபோசிஸ்நானும் நீதிபதி ஆனேன்ஒரு முன்னோடி முயற்சிஒன்றிய அரசுக்கான சவால்மதமும் கல்வியும்அரசு நடவடிக்கைகாளியம்மன்தேசிய உறுப்பு தான தினம்லத்தீன் அமெரிக்க இலக்கியம்பொதுவெளிகள்மக்களாட்சிக்கு நன்மை உதயநிதிகளின் தலைமைஇழிவான பேச்சுகள்ashok selvan keerthiசபாநாயகர்குற்றவியல் நடைமுறை (அடையாளம் காணல்) மசோதா-2022சென்னை மழைஞாலப் பெரியார்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!