கட்டுரை, அரசியல், இலக்கியம் 5 நிமிட வாசிப்பு

ராமாயணத்தை இலக்கியப் பிரதியாக வாசிக்க முடியாதா?

அரவிந்தன்
06 Apr 2023, 5:00 am
1

ராமாயணம், மகாபாரதம் போன்ற பண்டைய ஆக்கங்கள் சமூக-அரசியல் அடிப்படையில் சர்ச்சைக்குள்ளாவது புதிதல்ல. இதுபோன்ற பிரதிகளுக்குள் இருக்கும் பகுத்தறிவுக்கு ஒவ்வாத, பிற்போக்குத்தனமான, சமத்துவத்துக்கு எதிரான உள்ளடக்கங்களை ஒட்டிய விமர்சனங்களும் விவாதங்களும் எப்போதும் எழுந்தபடி இருக்கும். விமர்சனங்கள் கருத்தளவிலும் படைப்புரீதியாகவும் முன்வைக்கப்படும். அகலிகை கதையின் மீதான புதுமைப்பித்தனின் எதிர்வினை ‘சாப விமோசனம்’ என்னும் படைப்பாக வெளிப்பட்டது என்றால் ஐந்து ஆண்களைத் திருமணம் செய்துகொண்ட திரௌபதியின் கதைக்கான எதிர்வினை பெரியாரிடத்தில் கருத்தளவிலான விமர்சனமாக வெளிப்பட்டது.

கம்ப ராமாயணத்தில் உள்ள ‘காமம்’ சார்ந்த உள்ளடக்கத்தைத் தொகுத்துக் ‘கம்பரசம்’ என்னும் விவாத நூலாக அண்ணா எழுதினார். ராவணனை நாயகனாகச் சித்தரித்துப் புலவர் குழந்தை ‘ராவண காவியம்’ என்னும் படைப்பை இயற்றினார். டாக்டர் அம்பேத்கர் உள்ளிட்ட பலர் இந்துப் புராணங்களில் ஏற்றத்தாழ்வையும் ஒடுக்குமுறையையும் முன்னிறுத்தும் உள்ளடக்கங்களை விமர்சனம் செய்திருக்கிறார்கள். ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றின்மீது பெருமதிப்புக்கொண்டிருந்த மரபியரான சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாரும் வாலி வதத்திற்காக ராமனை விமர்சித்திருக்கிறார். தான் எழுதிய ராமாயணக் கதைக்கு உள்ளேயே அவர் இதைச் செய்திருக்கிறார்.

பெருமாள்முருகனின் ஐயம்

ஆக, இன்றைய பார்வையில், இன்றைய அளவுகோல்களைக் கொண்டு பண்டைய பிரதிகளை விமர்சிப்பது புதிதல்ல. அண்மைக் காலத்தில் ராமாயணம் தொடர்பாக வட மாநிலங்களில் நிகழ்ந்த சர்ச்சை ஒன்று பெருமாள்முருகனை ராமாயணத்தின் இலக்கியப் பெறுமானம் குறித்து யோசிக்கவைத்திருக்கிறது. இந்தச் சர்ச்சையை முன்னிட்டு ராமாயணம் தொடர்பான பல்வேறு சர்ச்சைகளைத் தொட்டுப் பேசும் அவர் ராமாயணத்தை இனி இலக்கியப் பிரதியாக வாசிக்க முடியுமா என்னும் கேள்வியை எழுப்புகிறார். “முழுமையாக மதவாத அரசியல் பிரதியாக மாற்றப்பட்டுவிட்ட நிலையில் ராமாயணத்தை இனி இலக்கியப் பிரதியாக வாசிப்பது சாத்தியமா என்னும் கேள்வியே இப்போது எனக்குள் எழுந்திருக்கிறது!” என்கிறார்.

பெருமாள்முருகன் இந்தக் கேள்வியோடு தன் கட்டுரையை முடிக்கிறார். ஆனால், அதற்கு முன்பே அதற்கான பதிலையும் சொல்கிறார். 

“இப்போது இதிகாசம், காப்பியம், இலக்கியம் என்னும் வரையறைகளைக் கடந்து ராமாயணம் அரசியல் நூலாகிவிட்டது. வெகுமக்களைத் தூண்டுவதற்கும் தம் பக்கம் ஈர்ப்பதற்கும் ராமாயணம் பயன்படுகிறது. 1990களில் தொலைக்காட்சித் தொடராக ராமாயணக் கதை வர ஆரம்பித்தபோதிருந்தே இத்தகைய நிலை ஏற்பட்டுவிட்டது. பாபர் மசூதி இடிப்பு நிகழ்வுக்குப் பிறகு ராமாயணத்தின் மீதான புனிதம் மேலும் கவிந்துவிட்டது. படிப்படியாக அப்புனிதம் இறுகி இப்போது அது இலக்கிய உலகத்திலிருந்து கிட்டத்தட்ட முழுவதுமாக வெளியேறிவிட்டது” என்றும்,

“ராமாயணம் ஒவ்வொரு மொழியிலும் இலக்கியமாகத்தான் இத்தனை காலம் கருதப்பட்டுவந்துள்ளது. கடவுள் நம்பிக்கை உள்ளோர் அந்நோக்கில் வாசித்ததும் உண்டு. வீட்டில் விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்றால் சுந்தர காண்டத்தைத் தினமும் வாசிக்க வேண்டும் என்னும் நம்பிக்கை எல்லாம் உண்டு. நம்பிக்கைகள் ஒருபுறம்; இலக்கியப் பார்வை மறுபுறம். இரண்டும் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டதில்லை. இப்போது அப்படியல்ல. நம்பிக்கை என்னும் இடத்தை மதவாத அரசியல் கைப்பற்றிக்கொண்டது. ஆகவே, எந்த மொழியாக இருந்தாலும் சரி, ராமாயணம் இலக்கிய அந்தஸ்தை இழந்துவிட்டது என்றே நினைக்கிறேன்” என்றும் சொல்கிறார்.

ராமாயணத்தை இலக்கியமாக வாசிக்க முடியாமல்போய்விடுமோ என்னும் அச்சத்தை வெளிப்படுத்துகிறாரா அல்லது இந்த அளவுக்கு அரசியல்மயப்படுத்தப்பட்ட பிறகு இதை இப்படி வாசிக்க முடியாது என்னும் முடிவை முன்வைக்கிறாரா என்னும் குழப்பத்திற்கிடையே இதுகுறித்த என் எண்ணங்களை முன்வைக்கிறேன். 

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

ராமாயணம் இலக்கியமா; புனித நூலா?

பெருமாள்முருகன் 18 Mar 2023

அரசியல் வாசிப்பும் இலக்கிய வாசிப்பும்

ராமாயணம் என்றல்ல, இந்தியாவிலோ உலகின் பிற பகுதிகளிலோ தோன்றிய எந்தப் பண்டைய பிரதியையும் கேள்விக்கு உட்படுத்தலாம். அவற்றை முழுமையாகவோ அவற்றின் சில பகுதிகளையோ நிராகரிக்கலாம். ராமாயணமோ மகாபாரதமோ அதற்கு விலக்கு அல்ல. ஆனால், இவ்விரு பிரதிகளும் அப்படி முற்றிலுமாகப் புறக்கணிக்கக்கூடியவையோ அல்லது இலக்கியமாகக் கருதப்படக்கூடியவையோ அல்ல என்பதே என் கருத்து.

இந்தியாவில் எத்தனையோ புராதனப் பிரதிகள் இருக்க, இதிகாசங்கள் எனப்படும் இவ்விரு பிரதிகள் உள்ளிட்ட சில மட்டுமே இலக்கிய மதிப்புப் பெற்றிருக்கின்றன. கதை வடிவில் எழுதப்பட்டது மட்டும் இதற்குக் காரணமல்ல. பல்வேறு புராணங்களும் கதை வடிவில்தான் இருக்கின்றன. அவை அனைத்தும் இலக்கியமாகக் கருதப்படுவதில்லை. ஆண்டாளின் பாசுரங்களில் கதையம்சம் இல்லை. ஆனாலும், அவை இலக்கிய மதிப்புப் பெற்றிருக்கின்றன. இலக்கிய மதிப்புப் பெறாத பிரதிகளிலும் ஒரு சில கூறுகள் இலக்கியத்தன்மையைக் கொண்டு உருப்பெற்றுவிடுவதுண்டு. எனவே, அரசியல் வாசிப்பிற்கு உட்படுத்தப்படுவதாலேயே ஒரு பிரதி இலக்கிய மதிப்பை இழந்துவிட்டதாகச் சொல்ல முடியாது. 

நவீனகாலப் படைப்புகள் சிலவற்றைக் கொண்டு இதை மேலும் தெளிவுபடுத்திக்கொள்ள முயற்சிசெய்யலாம். பெருமாள்முருகன் எழுதிய ‘மாதொருபாகன்’ நாவலைச் சிலர் அரசியல்ரீதியாக வாசித்து எதிர்ப்புத் தெரிவித்தார்கள். அதன் ஒருபகுதி தங்களை இழிவுபடுத்துவதாகக் கூறி எதிர்த்தார்கள். அது ஓர் இலக்கியப் படைப்பு என்றும் இலக்கியப் படைப்பின் உள்ளடக்கத்தை இப்படி அணுக முடியாதென்றும் அந்நாவலை ஆதரித்தவர்கள் வாதிட்டார்கள். நீதிமன்றத்தின் தீர்ப்பும் இவ்விதமாகவே அமைந்தது. ‘மாதொருபாக’னைத் தங்களுக்குத் தோதான அரசியல் வாசிப்புக்குள் சுருக்க நினைத்தவர்களின் முயற்சி தோல்வியுற்றது. ‘மாதொருபாக’னை ஓர் இலக்கியப் படைப்பாக இன்றும் பல ஆயிரக்கணக்கானவர்கள் படித்துவருகிறார்கள்.

சுந்தர ராமசாமியின் ‘பிள்ளை கெடுத்தாள்விளை’ சிறுகதைக்கும் இதே கதி ஏற்பட்டது. அது தலித் விரோதப் பிரதி என்னும் விமர்சனம் எழுந்தது. அது எப்படி தலித் விரோதப் பிரதி அல்ல என்றும் சிறந்த இலக்கியப் படைப்பு என்றும் பல எழுத்தாளர்களும் விமர்சகர்களும் உரிய காரணங்களை முன்வைத்து நிறுவினார்கள். மேலும் பல ஆண்டுகளுக்கு முன்பு ஜெயமோகனின் ‘டார்த்தீனியம்’ என்னும் நீள்கதை தலித்துகளின் வளர்ச்சியை எதிர்மறையாகப் பார்க்கும் தன்மை கொண்டது என்னும் விமர்சனம் எழுந்தது. அவருடைய ‘விஷ்ணுபுரம்’ நாவல் இந்துத்துவப் பிரதி என்னும் விமர்சனம் எழுந்தது. இந்த விமர்சனங்களை மீறி அந்தப் பிரதிகள் இலக்கியமாகப் படிக்கப்பட்டுவருகின்றன.

இதிகாசங்களின் இலக்கியப் பெறுமானம்

ஒரு படைப்பைப் பலவிதமாக வாசிப்பது சாத்தியம்தான். அரசியல்ரீதியான வாசிப்பும் அதில் ஒன்று. ஆனால், ஒரு பிரதி இலக்கியத்தன்மை கொண்டிருந்தால் எத்தகைய வாசிப்பையும் விமர்சனத்தையும் தாண்டி அது இலக்கியமாகவே கருதப்படும், நிலைபெறும் என்பதில் ஐயமில்லை. சிறுகதை, நாவல், குறுநாவல் என வடிவ ஒழுங்கும் கச்சிதமான வரையறைகளும் கொண்ட நவீனத்துவப் படைப்புகளுக்கே இத்தகைய வாசிப்புகள் சாத்தியம் என்றால் பல்வேறு கிளைக் கதைகளையும் பல்வேறு கூறுகளையும் பல்வேறு தொனிகளையும் உள்ளடக்கக்கூடிய கட்டமைப்பைக் கொண்ட பண்டைய பிரதிகளில் – காவிய வடிவங்களில் – இத்தகைய வாசிப்புக்கான வாய்ப்புகள் பல மடங்கு அதிகமாகவே இருக்கும். எந்த வாசிப்பையும் தன்னளவில் தவறானது எனச் சொல்லிவிட முடியாது. பண்டைய இலக்கியங்களில் இன்றைய பார்வையில் பொருத்தமற்ற, பொருளற்ற, ஏற்றுக்கொள்ளவே முடியாத பல கூறுகளும் இருக்கவே செய்யும். சம்புகனை ராமன் கொன்றது, ஏகலைவனிடம் துரோணர் கட்டைவிரலைத் தட்சிணையாகப் பெற்றதுபோல எண்ணற்ற நிகழ்வுகளை இதிகாசங்களில் சுட்டிக்காட்ட முடியும். சீதையை அக்கினிப் பிரவேசம் செய்யச் சொன்னது, சீதையைக் காட்டுக்கு அனுப்பியது, அம்பைக்கு இழைக்கப்பட்ட அநீதி, கர்ணனுக்கு இழைக்கப்பட்ட அவமானம் என்று மேலும் பலவற்றை அடுக்கலாம். 

இதிகாசப் பிரதிகளுக்குள் இருக்கும் போதனைகள், நம்பிக்கைகள், சிந்தனைகள், அவை முன்வைக்கும் விழுமியங்கள் ஆகியவை இன்றைய பார்வையில் விமர்சனத்துக்கும் புதிய விளக்கங்களுக்கும் உள்ளாவது தவிர்க்க இயலாதது. இவற்றையெல்லாம் மீறியும் ராமாயண, மகாபாரதப் பிரதிகள் இலக்கியமாக இருக்கின்றன என்பதில் ஐயமில்லை. விரிவான கதைக்களம், புனைவின் கோலாகலமாக அமைந்த கதையம்சம், பல சாயைகள் கொண்ட அடர்த்தியான பாத்திர வார்ப்புகள், கவித்துவம், நுணுக்கமான வர்ணிப்புகள், கதைப்போக்கின் உள்ளடுக்குகள், அவை எழுப்பும் உணர்வுகள், மகத்தான தருணங்கள், நெகிழ்வுகள், மன எழுச்சி, வாசகரின் கற்பனையை விரிவுபடுத்தும் சாத்தியங்கள் ஆகியவை இந்தப் பிரதிகளைப் படிக்கும் ஒவ்வொரு வாசகரும் உணரக்கூடியவை. கதைப்போக்கையும் நிகழ்வுகளையும் பாத்திரங்களையும் பல விதமான பார்வைகளில் பார்க்கவும் அலசவும் விவாதிக்கவுமான சாத்தியக்கூறுகளை இந்தப் பிரதிகள் கொண்டுள்ளன. 

குறிப்பாக ராமாயணத்தில் கூனியின் போதனை, கைகேயி கேட்ட வரம், ராமனின் எதிர்வினை, வாலி – சுக்ரீவன் பகைமை, வாலி வதம், ராவணன், கும்பகர்ணன், இந்திரஜித் போன்றோரின் பாத்திர வார்ப்பு, சீதை அக்கினிப் பிரவேசம், அகலிகை சாப விமோசனம், லட்சுமணன், ஊர்மிளையின் தியாகம் என ராமாயணத்தின் பல்வேறு பகுதிகள் இன்றளவும் பேசித் தீராத விஷயங்களாக இருக்கின்றன. ராமாயணப் பிரதி இன்றளவிலும் வாசிப்பின்பத்தைத் தருவதுடன் அந்த வாசிப்பு பல விதமான உணர்வுகளையும் எழுப்புகிறது. திரும்பத் திரும்ப வாசிக்கும்போதும் வாசிப்பனுபவம் குறையாததுடன், புதுப்புதுக் கோணங்களிலும் அணுகுவதற்கான சாத்தியக்கூறைக் கொண்டுள்ளது. வாசிப்பவரின் கற்பனையை விரிவடையச் செய்கிறது. சிந்தனையைக் கூர்மையாக்குகிறது. சுய பரிசோதனையைத் தூண்டுகிறது. வெறும் கதையாகவே வாசிக்கும்போதும் கேட்கும்போதும் ராமாயணக் கதை மனதைக் கவர்கிறது.

வால்மீகி ராமாயணத்திலும் கம்ப ராமாயணத்திலும் பல பகுதிகள் அவற்றின் கவித்துவத்துக்காகவும் அபாரமான எழுத்தாற்றலுக்காகவும் மீண்டும் மீண்டும் வாசிக்கக்கூடியவையாக இருக்கின்றன. இவற்றையெல்லாம் வைத்துப்பார்க்கும்போது ராமாயணம் இலக்கியப் பிரதியாக வாசிக்கப்படக்கூடிய நிலையை இழந்துவிடவில்லை என்பது மட்டுமல்ல; ஒருநாளும் அது இழந்துவிடாது என்றே சொல்லத் தோன்றுகிறது. 

ராமாயணம் போன்ற பிரதிகளுக்குள்ள பிரத்யேகமானதொரு சிக்கலையும் நாம் கவனிக்க வேண்டும். ஒருபுறம் இன்றைய அறிவியல், பகுத்தறிவு, முற்போக்குப் பார்வைகளின் அடிப்படையில் அதைப் புறக்கணிக்கக் கோருவது. இன்னொருபுறம், அதைப் புனிதப் பிரதியாகக் கருதி அதன் மீதான எல்லா விதமான எதிர்மறைக் கருத்துக்களையும் ஆவேசமாக எதிர்ப்பது. ஒன்று தேவையில்லை என விலக்கச் சொல்கிறது. இன்னொன்று அதன் புனிதத்தை முன்னிறுத்தி விமர்சகர்களை விலக்க முனைகிறது. விமர்சிப்பவர்கள் புறக்கணிக்கும் அளவுக்குச் செல்வதும் மதிப்பவர்கள் விமர்சனமே கூடாது என்று ஆவேசப்படுவதுமான இந்த இரண்டு அணுகுமுறைகளுமே ராமாயணம்போன்ற படைப்புகளின் இலக்கிய மதிப்பை மறுப்பவை. 

படைப்புச் சுதந்திரத்தை நசுக்கும் ஆவேசம்

ராமாயணமும் மகாபாரதமும் விமர்சனத்தையும் புனிதப்படுத்துதலையும் மீறித்தான் இலக்கியப் பிரதிகளாகத் தங்கள் இடத்தைப் பல நூற்றாண்டுகள் கடந்தும் தக்கவைத்துக்கொண்டுள்ளன. கடவுள் நம்பிக்கையுள்ள எந்த இந்துவும் இந்தப் பிரதிகளைப் புனிதம் எனச் சொல்வதை மறுக்க மாட்டார். ஆனால், பூஜையறையில் வைத்து வழிபடும் கடவுளர்களுக்கோ வழிபாடு தொடர்பான இதர குறியீடுகளுக்கோ தரும் மதிப்பைச் சராசரி இந்து அல்லது இந்தியர் இந்தப் பிரதிகளுக்குத் தருவதில்லை. அவர்கள் தங்கள் மனம்போன போக்கில் இந்தப் பிரதிகளைப் படித்தும் கேட்டும் பகிர்ந்துகொண்டும் விவாதித்தும் வருகிறார்கள்.

எழுத்து வடிவிலும் திரை வடிவிலும் இந்த இரு படைப்புகளுக்கும் எண்ணற்ற வடிவங்கள் வந்துவிட்டன. ஒவ்வொன்றும் மாறுபட்ட அணுகுமுறையையும் விளக்கங்களையும் கொண்டவை. இத்தகைய மாறுபட்ட சித்தரிப்புகளுக்கும் விளக்கங்களுக்கும் உட்படும் எந்தப் பிரதியும் நடைமுறைப் பொருளில் புனிதமானதாக இருக்க முடியாது. ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு பிரதியை உருவாக்கி இது என்னுடைய ராமாயணம் என்று தைரியமாக ஒருவர் சொல்ல முடியும். அந்த அளவுக்கு இந்தப் பிரதிகள் ஜனநாயகப்படுத்தப்பட்டுள்ளன.

படைப்புச் சுதந்திரத்தைப் பறைசாற்றுகின்றன. அகலிகையின் கதையைப் புதுமைப்பித்தன் விமர்சனபூர்வமாக அணுகியபோது மரபியரான ராஜாஜி, உண்மையைவிட உண்மையின் மீதுள்ள பாசிதான் ஜனங்களுக்குத் தெரிகிறது என்று விமர்சித்தார். பாசி என்பது என்ன? அதுவும் உண்மையின் ஒரு பகுதிதானே என்று புதுமைப்பித்தன் அதற்குப் பதில் சொன்னார். 

இதிகாசங்களைப் புனிதப் பிரதிகளாக முன்னிறுத்தி விமர்சனங்களை ஒடுக்கும் போக்கு வளர்ந்துகொண்டேபோனால் இத்தகைய படைப்புச் சுதந்திரம் நீடிக்குமா என்பது முக்கியமான கேள்வி. ராமாயணமும் மகாபாரதமும் எத்தனையோ விமர்சனங்களை எதிர்கொண்டும் கால வெள்ளத்தில் கம்பீரமாக நீந்தி வந்திருக்கின்றன. அதிகாரத்தின் துணையுடன் அச்சமூட்டும் வகையில் அதிகரித்துவரும் புனித ஆவேசங்களையும் இவை வெற்றிகரமாக எதிர்கொண்டு தங்கள் இலக்கிய மதிப்பைத் தக்கவைத்துக்கொள்ளும் என்றே நம்ப விரும்புகிறேன்.  

பண்டைய தமிழ் இலக்கியங்களை ஆழ்ந்து கற்றவரான பெருமாள்முருகனிடம் ஒருவர் கம்பராமாயணத்தில் வரும் வாலி வதக் காட்சியையோ அனுமன் - சீதை சந்திப்பையோ பற்றிச் சொல்லும்படி கேட்டால் அருமையான இலக்கிய உரையை உரையாடல் வடிவில் நிகழ்த்த அவரால் முடியும். இதற்கான சாத்தியம் இருக்கும்வரை உலகில் யார் எப்படி அரசியலாக்கினாலும் புனிதக் கவசம் பூட்டினாலும் ராமாயணம் இலக்கியப் பிரதியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

 

தொடர்புடைய கட்டுரை

ராமாயணம் இலக்கியமா; புனித நூலா?

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
அரவிந்தன்

அரவிந்தன், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர். ‘இந்தியா டுடே’, ‘காலச்சுவடு’, ‘தி இந்து’ தமிழ், ‘மின்னம்பலம்’, ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ குழுமத்தின் தமிழ் இணையதளமான ‘சமயம்’ ஆகிய ஊடகங்களில் ஆசிரியர் இலாகாவில் முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றியவர். தற்போது ‘காலச்சுவடு பதிப்பக’த்தின் பதிப்பாசிரியராகப் பணியாற்றுகிறார்.


1






பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Duraiswamy.P   2 years ago

ராமாயணத்தை விட மகாபாரதம் ஒரு முழுமையான இதிகாசம் என்பதற்கான அனைத்து தகுதிகளையும் கொண்டுள்ளது என்பது என் கருத்து. அது ஒரு மாபெரும் கடல். விரும்புபவருக்கு விரும்பியது கிடைக்கும்.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

ஐஏஎஸ் அதிகாரிகள்மனநிலைநவ தாராளமயம்விஷச் சுழலை உடையுங்கள்கிராமப்புறங்கள்சட்டப்பேரவை பொதுத் தேர்தல்கே.சந்துரு கட்டுரைஅரசியல் பிரதிநிதித்துவம்பிரிட்டிஷ்காரர்தற்காலிகம்ஆவணமாகும் புகைப்படத் தொகுப்புதனுஷ்கன்சர்வேடிவ் கட்சிபாரத் ஜோடோ நியாய் யாத்திரைவருவாய்சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவுகதீஜா கான் கட்டுரைபாகுபலிநூலகங்களில் சீர்திருத்தம்எல்.ஐ.சி. தனியார்மயம்ஜான் க்ளாவ்ஸர்சமூக – அரசியல் விவகாரம்தேசிய கட்சிகள்குமார் கந்தர்வாமோடியை வீழ்த்த வரலாற்றிலிருந்து ஒரு பாடம்அப்பாசேவை நோக்கம்ஆண்-பெண் உறவுமாய பிம்பங்கள்ஜார்டன் பீட்டர்சன் கட்டுரை

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!