கட்டுரை, ஆளுமைகள் 7 நிமிட வாசிப்பு

யார் இந்த சமஸ் அல்லது எங்கே நிம்மதி?

அரவிந்தன்
16 Jan 2015, 5:00 am
0

யார் இந்த சமஸ்? - பலருக்கும் இந்தக் கேள்வி எழுந்திருக்கும். சிலருக்கு வியப்புடன், சிலருக்குக் கடுப்புடன். இரண்டுக்குமே நியாயமான காரணங்கள் இருக்கக் கூடும் என்ற முரண்பாடுதான் சமஸின் வசீகரத்துக்குக் காரணம்.

சமஸ் அப்போது எனக்கு அறிமுகம் ஆகியிருக்கவில்லை. சமஸின் கட்டுரைகளை அவருடைய வலைப்பூவில் பார்த்தபோது அவர் எழுத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டது. அவருடைய ‘சாப்பாட்டுப் புராணம்’ நூலிலிருந்து சில பகுதிகளை நான் நடத்திவந்த ‘நம்ம சென்னை’ இதழில் நன்றியுடன் வெளியிட்டேன்.

சமஸின் எழுத்து, அவர் கொடுக்கும் தலைப்புகள், கட்டுரையைத் தொடங்கும் விதம் ஆகிய அனைத்தும் கவன ஈர்ப்புக்கான கச்சிதமான இதழியல் அஸ்திரங்களாகச் செயலாற்றுவதைக் கவனித்திருக்கிறேன். ‘ஆண்களிடம் பெண்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள்?’, ‘இது எந்த நாகரிகத்தின் எச்சம்?’, ‘உங்களால் மட்டும்தான் முடியும் கருணாநிதி’, ‘தமிழர்கள் யோக்கியவான்களா?’, ‘தமிழகத்தின் ஏழு மண்டேலாக்கள்’ என்பன போன்ற தலைப்புகள் அத்தகையவை. இந்த ஈர்ப்பு சற்றே எல்லை மீறிப் போவதும் உண்டு. ‘மீண்டும் புலிகள்: முட்டாள்களா நீங்கள்?’ என்று வாசகர்களின் சுயமரியாதைக்குச் சவால்விடும் தலைப்புகளை உதாரணமாகச் சொல்லலாம். கட்டுரைகளின் இதர அம்சங்களிலும் இதே தன்மைகளைக் காண முடியும்.

இன்று சமஸ் மீது பெரும் மதிப்பும் அவர் எழுத்தின்பால் பரவசமும் கொள்பவர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள். அவர் எல்லை மீறும் இடங்களைக் கண்டு அவர் மீது கடுப்படைபவர்களும் இருக்கிறார்கள். இந்த இரு விதமான எதிர்வினைகளுக்குமான காரணங்களையும் சமஸ் வழங்கிவருகிறார். சமஸை மதிப்பிடுகையில் இந்த முரண்பாடு முக்கியமான ஓர் அம்சம். ஆனால், இந்த முரண்பாட்டைத் தாண்டி ஒரு முக்கியமான அம்சம், அவரது எழுத்தின் முக்கியத்துவத்தைப் பறைசாற்றுகிறது. அது, சமஸ் தேர்ந்தெடுக்கும் விஷயங்களையும் அவற்றை அவர் முன்வைக்கும் விதத்தையும் சார்ந்தது!

செயலூக்கமும் தரமும் இணைந்திருப்பது தமிழ்ச் சூழலில் அரிதானது. எழுத வேண்டும் என்னும் ஆசையுடன்தான் எல்லாருமே பத்திரிகைத் துறைக்கு வருகிறோம். ஆரம்பத்தில் ஆசையுடன் பல விஷயங்களையும் எழுத ஆரம்பிக்கிறோம். ஆனால், ஆசை என்பது ஒருகட்டத்தில் வெறும் வேலையாகிவிடுகிறது. வேலை என்றானதுமே மனம் அதில் கணக்குப் பார்க்கத் தொடங்கிவிடுகிறது. கணக்கு நம் செயல்பாட்டின் வீச்சைச் சுருக்கிவிடுகிறது. அன்றாட வேலைப் பளுவும் இதற்குக் கணிசமான பங்காற்றி முடக்குகிறது. இதுதான் பெரும்பாலான பத்திரிகையாளர்களின் நிலை.

செயலூக்கம் இல்லாமல் முடங்கிவிடும் பத்திரிகையாளர்கள் ஒருபுறம். எக்கச்சக்கமாக எழுதிக் குவித்தும் பொருட்படுத்தத்தக்க எழுத்தைத் தர இயலாதவர்கள் மறுபுறம். இந்த இரண்டு தரப்பிலும் சேராதவர் சமஸ். செயலூக்கமும் தரமும் இணைந்திருப்பது சமஸின் மிக வலுவான அம்சங்களில் ஒன்று.

சமஸுக்கு யாரும் எந்த வேலையும் தர வேண்டாம். எந்த ஊக்கமும் தர வேண்டாம். எந்தக் கேள்வியும் கேட்க வேண்டாம். அவர் அயராமல் வேலை செய்துகொண்டிருப்பார். தனக்கு அளிக்கப்பட்ட வழக்கமான வேலைகளை மட்டுமல்லாமல் பல வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வார். “எங்க சார், ரொட்டீன் வேலைக்கே நேரம் சரியா இருக்கு” என்று புலம்பாமல் புதிது புதிதாக வேலைகளை உருவாக்கிக்கொள்வார். செய்த வேலையைத் திரும்பத்திரும்பச் செப்பனிட்டுக்கொண்டே இருப்பார். அவருக்குள் இருக்கும் கறாரான மதிப்பீட்டாளரைத் திருப்திப்படுத்தப் படாத பாடு படுவார். தன் பக்கத்தில் இருப்பவர்களையும் படுத்துவார். இந்தப் பிரசவ வேதனையை அருகிலிருந்து பார்க்கும் அரிய வாய்ப்பு எனக்கு சமஸுடன் ‘தி இந்து’ நாளிதழில் இணைந்து பணியாற்றுவதன் வழி கிடைத்திருக்கிறது.

ஒரு பெரிய வேலையை முடித்துவிட்டு இரண்டு நாட்கள் சமஸால் நிம்மதியாகத் தூங்க முடியாது. இந்தியா முழுவதும் சுற்றித் தேர்தல் கோலங்களைத் தரிசித்து வித்தியாசமான சித்திரங்களைத் தந்த களைப்பு தீர்வதற்குள் தமிழ்நாடு முழுக்கச் சுற்றி கடலோடிகளின் வாழ்க்கையை அறியக் கிளம்பிவிடுவார். அது முடிந்ததும் சத்தீஸ்கரில் உள்ள ஆயுதக் குழுக்கள் மேல் அவர் பார்வை விழும்.

தேடிச் செல்வதற்கும் எழுதுவதற்கும் புதுப் புது விஷயங்களும் புதுப் புதுக் களங்களும் சமஸுக்குத் தட்டுப்பட்டுக்கொண்டே இருக்கும். எந்த ஒரு விஷயத்திலும் புதுப் புதுக் கோணங்களும் அவர் கண்ணில் படும். மீனவர்களின் கஷ்டங்களைப் பற்றி எல்லாரும் எழுதினார்கள். ஆனால், சமஸ் அதை எழுதிய கோணமே வேறு. ஏனென்றால் அதை அவர் பார்த்த கோணமே வேறு. அதனால்தான் அது எண்ணற்ற கடலோடிகளையும் அவர்கள் வாழ்வைப் பதிவுசெய்த கலைஞர்களையும் ஒருசேரக் கவர்ந்தது.

எழுதும் விஷயங்களுக்கான தரவுகளைச் சேகரிக்க சமஸ் பல  கிலோ மீட்டர்கள் பயணிப்பார். பல நூறு பக்கங்களைப் படிப்பார். பலருடன் விவாதிப்பார். போர்க்களத்தில் நிற்பவரின் தயார் நிலையுடன் இதழியல் பணியை அணுகும் சமஸின் துடிப்பைத் தமிழ்ச் சூழலில் காண்பது அரிது.

சமஸ் ஒருங்கிணைக்கும் பக்கங்களிலும், வேலைகளிலும் இதே தன்மையைப் பார்க்க முடியும். அது உலகப் போர் நூற்றாண்டு தருணமாக இருக்கலாம் அல்லது சென்னை புத்தகக் கண்காட்சியாக இருக்கலாம். பத்திரிகைக்குள் கொண்டுவர புதிய யோசனைகள், புதிய முயற்சிகள், புதிய செயல்பாடுகள், அவற்றின் மூலம் உருவாக்கப்படும் புதிய எல்லைகள்... இதுதான் சமஸின் பயணம். புதிதாகச் செய்தல் அல்லது ஏற்கனெவே உள்ள விஷயங்களைப் புதுமையாகச் செய்தல். இரண்டையுமே அழுத்தமாகச் செய்தல். இதுதான் சமஸ் ஆளுமையின் அடிநாதம். செய்ததைத் திரும்பச் செய்தல், பழகிய பாதையில் பத்திரமாக நடைபோடல் ஆகியவை சமஸின் இயல்புக்கு ஒவ்வாதவை. இந்த ஒவ்வாமைதான் அவரைத் தொடர்ந்து செயல்பட வைக்கிறது. புதிது புதிதாகச் செய்யவைக்கிறது. நிம்மதி இல்லாமல் ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கிறது. அதுதான் தமிழ் இதழியலின் வரையறைகளை மாற்றி எழுதிக்கொண்டிருக்கிறது.

நவீன இலக்கிய வாசிப்பும், சிற்றிதழ்கள், இடைநிலை இதழ்களுடனான நெருக்கமும் சமஸ் எழுத்துகளுக்குத் தீவிரமும் ஆழமும் சேர்க்கின்றன. பொதுப் புத்தி சார்ந்த தளத்தைத் தாண்டிச் செல்லும் தேடலை வழங்குகின்றன. ரசனையுடனும் பன்முகத்தன்மையுடனும் ஒரு விஷயத்தை அணுகும் தன்மையைத் தருகின்றன.

சமஸ் எழுத்தைப் படித்துவிட்டு உங்களுக்குக் கோபம் வரலாம். பரவசம் வரலாம். எரிச்சல் வரலாம். கடுப்போ நெகிழ்ச்சியோ வரலாம். ஒருபோதும் அலட்சியம் வராது. படிப்பவரை ஏதாவது ஒரு விதத்தில் அழுத்தமாகப் பாதிப்பது சமஸ் எழுத்தின் சிறப்பியல்புகளில் ஒன்று. அழுத்தம் என்றால், சாதாரண அழுத்தம் இல்லை; பத்திரிகையைப் பிடித்திருக்கும் விரல்களில் எழுத்துகள் ஒட்டிக்கொள்ளும் அளவுக்கு அழுத்தம். ‘எழுத்தில் இவ்வளவு உணர்ச்சி அழுத்தம் தேவையா?’ என்றும்கூட கேள்வி எழலாம். ஆனால் அதுதான் சமஸ்.

இந்த அழுத்தம் பட்டிமன்றங்களிலும் அரசியல் மேடைகளிலும் வெளிப்படும் செயற்கையான அழுத்தம் அல்ல. தான் நம்பும் மதிப்பீடுகள் சார்ந்த ஆத்மார்த்தமான ஈடுபாட்டின் விளைவு. தான் உண்மை என நம்பும் விஷயத்தின் மீதுள்ள பிடிப்பின் நீட்சி. நேர்மையான பின்னணியிலிருந்து உருவாகும் அழுத்தம் என்பதால்தான் அது இவ்வளவு வாசகர்களைச் சென்று சேர்கிறது. அவர்கள் சிந்தனையைப் பாதிக்கிறது. மனசாட்சியைத் தொடுகிறது. ‘யார் இந்த சமஸ்?’ என்று கேட்கச் சொல்கிறது.

காலப்போக்கில் சமஸின் வேகம் மட்டுப்பட்டுச் செறிவு கூடலாம். அழுத்தம் குறைந்து ஆழம் அதிகரிக்கலாம். இவையெல்லாம் அவரது எழுத்தின் மதிப்பை மேலும் மேலும் கூட்டக்கூடியவை. ஆனால் புதிதாகவும் புதுமையாகவும் எதையேனும் செய்ய வேண்டும் என்னும் துடிப்பு குறைய வேண்டியது இல்லை. புதிய களங்களை நோக்கிச் செல்லும் தேடல் குறைய வேண்டியது இல்லை. ஏனென்றால், சமஸின் அடையாளங்களான இந்தத் தன்மைகள்தான் தமிழ் இதழியலின் ஆகிவந்த எல்லைகளை உடைப்பவை.

தனிநபரின் செயலூக்கம் சூழலின் எல்லைகளை விஸ்தரிப்பது தமிழ்ச் சூழலின் தனித்தன்மை. பாரதி, சி.சு.செல்லப்பா என இதற்கு ஒரு பாதை உண்டு. அந்த மரபில் வரும் சமஸ் தமிழ் இதழியலின் எல்லைகளை மேலும் விரிவுபடுத்த எனது வாழ்த்துகள்! 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
அரவிந்தன்

அரவிந்தன், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர். ‘இந்தியா டுடே’, ‘காலச்சுவடு’, ‘தி இந்து’ தமிழ், ‘மின்னம்பலம்’, ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ குழுமத்தின் தமிழ் இணையதளமான ‘சமயம்’ ஆகிய ஊடகங்களில் ஆசிரியர் இலாகாவில் முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றியவர். தற்போது ‘காலச்சுவடு பதிப்பக’த்தின் பதிப்பாசிரியராகப் பணியாற்றுகிறார்.








டி20 உலகக் கோப்பைஇதழ்கள்கீழடிசொத்துப் பரிமாற்றம்thiruma interviewசமூகச் சீர்திருத்தம்தேசத் தந்தைநைரேரேவின் விழுமியங்களும்ஜெய்பீம் சூர்யாதிட்டமிடா நகரமயமாக்கல்நிலவின் ‘இருண்ட பகுதியோ’ மணிப்பூர்? எக்காளம் கூடாதுஜெனரல் இண்டியன் இங்கிலீஷ்ஆமத்தம் உள்இதய நோய்தமிழ்ப் பௌத்தம்சமஸ் உதயநிதி சனாதனம்ஊழல்நாகாஇரு பெரும் முழக்கங்கள்தென்னிந்தியாவிநாயக் தாமோதர் சதுர்வேதிகமல்நாத்யு.அஜய் சந்திர வாசகம் கட்டுரைபுஷ்கர் சந்தைநிதி ஒதுக்கல்: வடக்கு - தெற்கு பிரச்சினை அல்லகவசம்புரோட்டீன்ரகசியம்மனுஷ்யபுத்திரனுக்கு என்ன பதில்?

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!