கட்டுரை, அரசியல், சட்டம் 10 நிமிட வாசிப்பு

பிரச்சினை திமுகவா அல்லது தமிழில் அர்ச்சனையா?

கே.சந்துரு
05 Sep 2021, 12:00 am
4

தமிழ்நாட்டுக் கோயில்களில் தமிழில் அர்ச்சனைகள் அமையாததைக் கண்டு மனம் வருந்திப் பாடினார் பாரதிதாசன், “உயிர்போன்ற உங்கள் தமிழ் கடவுளுக்கே/ உவப்பதால் இல்லை போலும்/ உயிர் போன்ற உங்கள் தமிழ்/ உரைத்தக்கால் கடவுளதை ஒப்பார் போலும்…” பாரதிதாசன் மேலும் இவ்வாறு உருக்கமான வேண்டுகோளையும் விடுத்தார்: “திருப்படியில் நின்றபடி செந்தமிழில்/ பெரும்படியார் அருளிச் செய்த/ உருப்படியை அப்படியே ஊரறியும்/ படியுரைத்தல் படியும் நெஞ்சில்…”

சனாதனிகளின் தாக்குதல்

திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் கோயில் தொடர்பிலான ஏதேனும் ஒரு பிரச்சினையைக் கையிலெடுத்துக்கொண்டு எதிர்ப்புப் பிரச்சாரம் செய்வதும், பின்னர் தங்களது பரிவாரங்கள் மூலம் நீதிமன்றத்தில், ‘இந்துக் கோயில்களில் ஆகம விதிகள் புறக்கணிக்கப்படுகின்றன’ என்று நீதிமன்றத்தில் புகார் கூற முற்படுவதும் சனாதனிகளின் வழக்கமான பாணியாகிவிட்டது.

தேவநாதன் மற்றும் முனிரத்தின நாயுடு இருவரும் 1971-ல் இந்து சமய அறநிலையத் துறையின் ஒரு சுற்றறிக்கையை எதிர்த்து வழக்கு தொடுத்தனர். அதற்கு அடுத்த வருடமே தட்சிணாமூர்த்தி பட்டர் மானாமதுரையிலுள்ள சோமநாத சுவாமி கோயிலுக்கு எதிராக வழக்கு தொடுத்தார். இந்த இரு வழக்குகளும் சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில் 10.1.1974 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது.

அறநிலையத் துறை விடுத்த சுற்றறிக்கையில் தவறேதும் இல்லை என்று சொன்ன நீதிபதிகள் இவ்வாறு குறிப்பிட்டனர், “சுற்றறிக்கையில் எங்குமே சம்ஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்யக் கூடாது என்று கூறப்படவில்லை. தமிழில் அர்ச்சனைகள் நடைபெறும் உதாரணங்கள் சம்ஸ்கிருதத்தில் அர்ச்சனை நடைபெறுவதைத் தடுப்பது ஆகாது. சுற்றறிக்கைகள் எவருடைய மத நம்பிக்கை உரிமையையோ, தங்களது மதத்தைக் கடைப்பிடித்து சுதந்திரமாகப் பிரச்சாரம் செய்யும் உரிமையையோ தடுக்கவில்லை. குறிப்பிட்ட மொழியில்தான் வெளிப்படுத்த வேண்டும் என்று கூறினாலொழிய அவை மதத்தையும் மத நடவடிக்கைகளையும் தடுப்பதாகாது.”

அடுத்த தாக்குதல்

1974-ல் திராவிடக் கழகம் சார்பாக பெரியார் திடலில் ராவண லீலை கொண்டாடப்பட்டது. அச்சமயம் பதவியில் இருந்த திமுக ஆட்சிக்குப் பிரச்சாரரீதியில் இத்தகைய நிகழ்வுகள் மிகுந்த தலைவலியைக் கொடுத்தன. வடஇந்தியர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். வழக்கமாக அடிப்படை உரிமைகளை நிலைநிறுத்துவதற்கு மட்டுமே, அதுவும் அசாதாரணமான சூழ்நிலையில் மட்டுமே அத்தகைய மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும். இருப்பினும், ‘தமிழ்நாட்டுக் கோயில்களில் தமிழில் அர்ச்சனைகள் நடத்தக் கூடாது’ என்று தன்னுடைய ரிட் மனுவில் கோரியிருந்தார் காளிதாஸ் சோந்தி. இந்த மனு 18 வருடங்களுக்குப் பின்னால் நீதிபதி எஸ்.மோகன் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அவர் தமிழ் இலக்கியங்களில் பரிச்சயமுள்ள நீதிபதி.

4.2.1992 நடைபெற்ற விசாரணையில் நீதிபதிகளின் ஆலோசனைப்படி மனுதாரருக்கும் இந்து சமய அறநிலையத் துறைக்கும் ஒரு உடன்படிக்கை ஏற்பட்டது. அதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், காளிதாஸ் சோந்தி தொடுத்த வழக்கைப் பைசல் செய்தனர். தீர்ப்பில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது: “இரு தரப்பு வழக்கறிஞர்களும் அவர்களுக்கிடையே கீழ்க்கண்டபடி உடன்படிக்கை ஏற்பட்டதாகக் கூறினர். ஆகம முறை வழிபாடுள்ள கோயில்களில் மரபுப்படி சம்ஸ்கிருதத்தில் வழிபாடுகள் நடத்தப்படும். அதேசமயத்தில், தமிழ் இலக்கியத்திலுள்ள மதிப்பு மிக்க தேவாரம், திருவாசகம் ஆகியவையும் பக்தர்கள் விருப்பத்துக்கேற்ப வழிபாட்டுக்கு உகந்தவையே. இம்முறை அர்ச்சனைகள் ஊக்குவிக்கப்பட வேண்டும். பொதுவாக, ஆகம வழிபாட்டு முறைகள் கடைப்பிடிக்கப்படும். எங்கெல்லாம் அர்ச்சகர்கள் தமிழில் அர்ச்சனை செய்வதற்குத் திறமை பெற்றவர்களாக இருக்கிறார்களோ, பக்தர்கள் தமிழில் அர்ச்சனையை விரும்புகிறார்களோ அங்கெல்லாம் இத்தகைய வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும்!” 

நிபுணர் குழுவின் முடிவு

இதற்கிடையில், ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.மகராஜன் தலைமையில் தமிழ்நாட்டுக் கோயில்களில் அர்ச்சகர் நியமன முறையை ஆராய்வதற்கு நிபுணர் குழு ஒன்றைத் தமிழக அரசு  நியமித்தது. அந்தக் குழுவின் அறிக்கை 27.8.1982 அன்று அரசாணை 1001 இந்து சமய அறநிலையத் துறை உத்தரவின் மூலம் அரசிதழில் வெளியிடப்பட்டது. குழுவின் பரிந்துரைகளில், “தமிழில் அர்ச்சனை செய்வது ஆகமத்துக்கு உடன்பாடானதே ஆகும். ஆதலால், தமிழ் அர்ச்சனைப் பயிற்சியைக் கல்லூரிகளில் பாடத்திட்டத்தின் பகுதியாகச் செயல்படுத்த வேண்டும்.”

மேலும், அறிக்கையில் நீதிபதி எஸ்.மகராஜன் தன் குறிப்பாக இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்: “இதுகாறும் சொல்லியவற்றால் தமிழ் அர்ச்சனை ஆகமத்துக்குப் பொருத்தமானது, ஆகமத்திலேயே விதிக்கப்பட்டது என்பதும், அதை விரிவாகவும் பொருள் பொதிந்த வகையிலும் செயல்படுத்துவது அரசாங்கத்தின் கடமை என்பதும் நன்கு விளங்கும். இதனால், வடமொழியை அகற்றிவிட வேண்டும் என்பது பொருள் அன்று. பெருகிவரும் மக்களுடைய ஆர்வத்தை நன்கு மதித்து, தமிழுக்கும் இடங்கொடுக்கட்டும். இதன் மூலம் பிற சமய மத மாற்றத்துக்கும் ஓரளவு வழிகோலட்டும்!”

மீண்டும் இந்து ஆலயப் பாதுகாப்புக் குழு என்ற பெயரில் உயர் நீதிமன்றத்தில் ரிட் மனுவானது சுற்றறிக்கைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு தங்களது 17.6.1992 உத்தரவின்படி வழக்கைத் தள்ளுபடி செய்ததுடன், ஏற்கெனவே இரு நீதிபதிகள் அமர்வு கொடுத்த 10.1.1974 தீர்ப்பு இவ்வழக்குக்கும் பொருந்தும் என்றும் கூறியது.

ஆயினும், சனாதனத்தைத் தூக்கிப் பிடிக்கும் சங்கப் பரிவாரங்கள், மயில் ராவணர்கள் ஆயிற்றே; வெட்டிச் சாய்த்தாலும் புதிய தலைகள் முளைத்துக்கொண்டே இருக்கும். அவர்களது பொது அமைப்பின்பேரில் எவ்வித வழக்குகளையும் அவர்கள் தொடர்வதில்லை. புதிது புதிதாக அமைப்புகளை ஏற்படுத்திக்கொண்டு அதன் மூலம் சட்டப் பிரச்சினைகளை எழுப்புவதோடு நின்றுவிடாமல், சட்ட ஒழுங்குப் பிரச்சினைகளையும் கிளப்பிக்கொண்டிருப்பார்கள்.

மேலும் தாக்குதல்

1996 தேர்தலில் வென்று மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தது. லட்சார்ச்சனையையும் கோடி அர்ச்சனையையும் தமிழில் நடத்த 29.8.1997 தேதியிட்டு ஒரு சுற்றறிக்கையும், எல்லாக் கோயில்களிலும் தமிழிலும் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று கோயில் வாசலில் அறிவிப்புப் பலகை வைத்து பக்தர்கள் விருப்பப்படி எந்த மொழியில் அவர்கள் அர்ச்சனை செய்ய விரும்புகிறார்களோ, அந்த மொழியில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று 18.9.1997 தேதியிட்டு ஒரு சுற்றறிக்கையும் அனைத்துத் திருக்கோயில்களுக்கும் அனுப்பப்பட்டன.

தமிழ் ஆர்வலரான பழ.கருப்பையாவால் இதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவர் அனைத்துக் கோயில்களிலும் தமிழில் மட்டுமே பூஜைகள், அர்ச்சனைகள், கும்பாபிஷேகம், இதர வழிபாடுகள் நடத்த வேண்டும் என்று பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுத்தார். அவ்வழக்கு இரு நீதிபதிகள் அமர்வால் தள்ளுபடி செய்யப்பட்டது (பழ.கருப்பையா - எதிர் - தமிழ்நாடு அரசு, 16.12.1998). அந்தத் தீர்ப்பில் இவ்வாறு கூறப்பட்டிருந்தது: “இந்துக்களுடைய மத நிறுவனங்களில் வழிபாட்டு மொழியை மாற்ற வேண்டும் என்பது மனுதாரரின் கோரிக்கை. அரசுக் கட்டுப்பாட்டிலுள்ள மத நிறுவனங்களில் குறிப்பிட்ட மொழியை நுழைப்பதற்கோ (அ) இதர மொழிகளைத் தவிர்ப்பதற்கோ நீதிமன்றத்தால் உத்தரவிட முடியாது. மனுதாரரின் கோரிக்கை அரசமைப்புச் சட்டத்தில் கொடுக்கப்பட்ட மத நம்பிக்கைப் பிரச்சார உத்தரவாதத்தை மீறுவதாகும்.”

அதே காலகட்டத்தில், பழ.கருப்பையாவின் மனுவை முறியடிக்கும் விதமாக இந்து ஆலயப் பாதுகாப்புக் குழுவின் தலைவர் வி.எஸ்.சிவக்குமார் இரண்டாவது முறையாக அறநிலையத் துறை சுற்றறிக்கைக்கு எதிராக ரிட் மனு தாக்கல் செய்தார். மேலும், உத்தரகோசமங்கைக் கோயிலின் பரம்பரை அர்ச்சகர் ஒருவரும், கோயில் அர்ச்சனைகளில் தமிழைப் புகுத்தக் கூடாது என்றும், அது ஆகம விதிகளுக்கு புறம்பானது என்றும் வழக்கு தொடுத்தார். சைவர்கள் தமிழில் மந்திரங்கள் கூறுவது ஆகமத்துக்கு விரோதம் என்றும் அவருடைய மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதற்கிடையிலேயே 2002-ல் திமுக ஆட்சி போய் மீண்டும் 2006-ல் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றது. இந்து சமய அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் சாதி வேறுபாடின்றி அர்ச்சகர்களை நியமிப்பது தொடர்பில் ஆலோசனை வழங்கும்படி ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் 10.6.2006 அரசாணைப்படி உயர்நிலைக் குழு நியமிக்கப்பட்டது. குன்றக்குடி அடிகளாரும், பேரூர் சாந்தலிங்க அடிகளாரும், ஸ்ரீரங்கம் ஜீயரும், பிள்ளையார்பட்டி பிச்சை சிவாச்சாரியாரும், திருப்பரங்குன்றம் சந்திரசேகர பட்டரும் இந்தக் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர். உயர்நிலைக் குழுவின் அறிக்கை 1.12.2008 அரசிதழில் வெளியிடப்பட்டது.

கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வது தொடர்பில் உயர்நிலைக் குழு இவ்வாறு கூறியிருந்தது: “தற்போது திருக்கோயில்களில் தனிநபர் அர்ச்சனை முக்கிய இடத்தை வகிக்கின்றது. ஒவ்வொரு பக்தரும் தன் நன்மைக்காகவும், தன் உறவினருடைய நன்மைக்காகவும், அர்ச்சகர் மூலமாக இறைவனிடம் இறைஞ்சிச் சொல்கின்ற வேண்டுதலாக உள்ளது. இது அஷ்டோத்திரம் (108), திரிசதி (300), சகஸ்ரநாமம் (1000) என மூன்று வகையான நாமாவளியாக நடைமுறையில் உள்ளது. முன்பே சொன்னபடி, இந்த அர்ச்சனை முறை ஆகமங்களில் சொல்லப்படவில்லை. ஆனால், கோயில்களில் கால பூசைக்கு அடுத்தபடி இதுவே தற்போது முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்த அர்ச்சனை தொடர்பான நாமாவளிகள் தற்போது பெரும்பாலும் சம்ஸ்கிருதத்திலேயே சொல்லப்படுகின்றன. இந்த நாமாவளிகள் ஆகமத்திலிருந்து எடுக்கப்பட்டவை அல்ல; வடமொழியில் உள்ள புராணங்களிலிருந்து எடுத்துப் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு சிலர் இந்த வடமொழியை நல்ல உச்சரிப்போடு சொன்னாலும், பலர் இவற்றை முழுமையாகச் சொல்லாமலும், பொருளுணர்ந்து சொல்லாமலும், முழு ஈடுபாடு இல்லாமலும் செயல்படுகின்றனர். பக்தர்களின் மேன்மைக்காக, நன்மைக்காகச் சொல்லப்படும் இந்த வடமொழி நாமாவளிகளைப் புரிந்துகொள்ள முடிவதில்லை. அர்ச்சகர் ஆவதற்கு சம்ஸ்கிருத மொழி கண்டிப்பாகத் தெரிய வேண்டுமா என்றால், தேவையில்லை என்று கூறினார் அக்னிஹோத்ரம் தாத்தாச்சாரியார். ‘அவரவர் பாஷையில் அர்ச்சனை செய்யலாம். தமிழில் செய்தால் கடவுளுக்கு ஏற்குமா என்றால் ஏற்கும்’ என்றார் அவர். காலத்தின் தேவைக்கேற்பவும், இறைவனைப் போற்றும் நாமாவளிகளைக் கேட்டு அனைவருக்கும் பக்தியும் ஈடுபாடும் ஏற்படும் வகையிலும், தமிழிலேயே இந்த அர்ச்சனை நாமாவளிகளைச் சொல்ல வேண்டும் என்று இந்தக் குழு கருதுகிறது.”

தர்மராவும் நானும் வழங்கிய தீர்ப்பு

இந்து ஆலயப் பாதுகாப்புக் குழு, சிவக்குமாரும் பிச்சை பட்டரும் 1998-ல் தொடுத்த வழக்கு 2007-ல் நானும் நீதிபதி ஈ.தர்மாராவ் அடங்கிய இருவர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்து தீர்ப்பு கூறுவதில் காலதாமதம் ஏற்பட்டது. ஏனெனில், அச்சமயம் நான் மதுரைக் கிளைக்கு மாற்றப்பட்டிருந்தேன். நான் திரும்பியவுடன் 19.3.2008 அன்று இரு மனுக்களும் விசாரணைக்கு வந்தபோது அவை தள்ளுபடி செய்யப்பட்டன. அமர்வின் சார்பில் தீர்ப்பை எழுதிய நான், இறுதியில் இவ்வாறு குறிப்பிட்டிருநந்தேன், “எந்த மொழியில் அர்ச்சனை என்பது பிரச்சினை அல்ல. பக்தர்கள் தாங்கள் விரும்பும் மொழியிலேயே கடவுள் தங்களது விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்று நினைப்பார்கள். கடவுளுக்கு தேவநாகரி எழுத்திலுள்ள மொழி மட்டுமே தெரியும் என்று சொல்வதும், தமிழ் அதற்கு இணையாகாது என்று கூறுவதும் எந்தப் புராணம் அல்லது மத நூலின் அடிப்படையில் எழுப்பப்படவில்லை… ஆகமங்களிலோ அல்லது இதர மத நூல்களில் தமிழ் மந்திரங்கள் கூறுவதற்குத் தடையேதும் செய்யப்படவில்லை. தற்போது துறை விடுத்திருக்கும் சுற்றறிக்கைகள் மக்களின் மத நம்பிக்கைக்கு எதிரானவை அல்ல!”

2011-ல் ஆட்சியை இழந்து 2021-ல் மறுபடியும் திமுக ஆட்சிக்கு வந்திருக்கிறது. ‘அனைத்துச் சாதியினரையும் அரச்சகராக்கலாம்’ என்று அறிவித்ததுடன், ‘தமிழிலும் அர்ச்சனைகள் திருக்கோயில்களில் நடைபெறலாம்’ என்று உத்தரவிடப்பட்டவுடன், மீண்டும் ஒரு ஜீபூம்பா தோன்றியது. ஸ்ரீரங்கத்து வழக்கறிஞர் ஒருவர் 1998-ம் வருடத்திய பழ.கருப்பையா வழக்கில் கொடுத்த தீர்ப்பின் அடிப்படையில் சம்ஸ்கிருதம் மட்டுமே அர்ச்சனைக்கு உகந்த மொழியாக இருக்க வேண்டும் என்று பொதுநல வழக்கொன்றைத் தொடுத்தார். அதை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி தலைமையில் அமர்ந்த அமர்வு அதைத் தள்ளுபடி செய்ததுடன், முந்தைய நீதிபதிகள் அளித்த தீர்ப்பை முன்னுதாரணமாகவும் சுட்டிக்காட்டினர். மீண்டுமொரு முறை அர்ச்சனைக்கான மொழி பக்தர்களின் விருப்பம் என்று தங்கள் தீர்ப்பில் கூறினர்.

சுவாரஸ்யம் என்னவென்றால், தமிழ் மொழியிலேயே தம் மீது அர்ச்சனையைச் செய்யச் சொல்லி சிவபெருமான் சுந்தர நாயனாரைக் கட்டளையிட்டதாகச் சொல்கிறது சேக்கிழாரின் ‘பெரிய புராணம்’. “அர்ச்சனை பாட்டேயாகும், ஆதலால் மண்மேல் தம்மைச் சொற்றமிழ் பாடுக என்றார் தூமறை பாடும் வாயார்…”

இவ்வளவுக்குப் பின்னரும், தொடர்ந்து நீதிமன்றங்கள் மீது படையெடுத்துக்கொண்டிருக்கும் சனாதன சங்கிகளை என்னவென்று சொல்வது? இவ்வழக்குகளின் வரலாற்றை உற்றுப் பார்த்தால் நமக்கு ஒரு விஷயம் தெளிவாகப் புரிந்துவிடும், ‘வழக்கு தொடுத்தவர்களுக்குப் பிரச்சினை என்பது அர்ச்சனை மொழி என்னவாக இருக்கிறது என்பது தொடர்பிலானது அல்ல; தமிழ்நாட்டில் ஆட்சியில் யார் இருக்கிறார்கள் என்பது தொடர்பிலானது. ஆம், திமுகதான் அவர்களுக்குப் பிரச்சினை!

(நம்முடைய ‘அருஞ்சொல்’ ஊடகத்துக்கான பணிகள் 2021 ஆகஸ்ட் 22 அன்று தொடங்கின. தனிமனிதப் பாட்டுக்காக ஆப்பிரிக்கா சென்ற காந்தி, ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் அடியெடுத்து வைத்ததன் வழியாகப் பொதுவாழ்வை நோக்கித் தன் பாதையைத் திருப்பிக்கொண்ட நாள்; நேட்டா இந்திய காங்கிரஸ் தொடங்கப்பட்ட நாள்; அதுவே காந்தியால் நிர்மாணிக்கப்பட்ட முதல் பொது அமைப்பு; கூடவே, தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை நாளும்கூட. காந்தியையும் தமிழையும் இணைக்கும் புள்ளியான அந்த நாளிலிருந்து நாம் பணிகளைத் தொடங்கினோம். 1921 செப்டம்பர் 22 அன்று மதுரையில் தன்னுடைய ஆடையை எளியவர்களின் அடையாளமான வேட்டி, துண்டாக மாற்றிக்கொண்டார் காந்தி. காந்தியின் மிக முக்கியமான குறியீடுகளில் ஒன்றானது அவருடைய ஆடை. தமிழ்நாட்டையும் காந்தியையும் பிணைக்கும் இந்த நிகழ்வின் நூற்றாண்டு நிறைவில் நம்முடைய இணையதளம் மக்கள் பார்வைக்கு வந்திருக்கிறது. இடைப்பட்ட ஒரு மாதத்தில் வெளியானவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டவற்றை இங்கே கொடுத்திருக்கிறோம். அவற்றில் ஒன்று இது.)

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
கே.சந்துரு

கே.சந்துரு, சென்னை உயர் நீதிமன்றத்தின் மேனாள் நீதிபதி; சமூக விமர்சனங்களை முன்வைப்பதோடு நீதித் துறையின் சீர்திருத்தங்களுக்கான சிந்தனைகளையும் தொடர்ந்து முன்வைப்பவர். ‘ஆர்டர்.. ஆர்டர்!’, ‘நீதிமாரே, நம்பினோமே!’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.








பின்னூட்டம் (4)

Login / Create an account to add a comment / reply.

Narayanan Mugunthan   3 years ago

கட்டுரையை விட படம் உண்மைநிலையை விளக்குகிறது

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

kALIDAS   3 years ago

அர்ச்சனை எந்த மொழியில் என்பதைவிட யார் ஆட்சியில் என்பதே பிரதானமாகிறது சாத்திரங்களின் முன்! சரித்திரங்கள் அன்றாட நிகழ்வுகளே சாமானியன் எண்ணமும் ஏற்றமும சரித்திரத்தின் படிகளாகும் சாதனை நிகழ்வுகள் தொடர ஆட்சியாளர்கள் அவசியம் சனாதான புதையலில் சிக்கிக்கொள்ள கூடாது!

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Prabhu   3 years ago

கட்டுரை ஆசிரியர் மாண்பமை சந்துரு அவர்கள் சரியான பள்ளியைத் தொட்டுக் காட்டுகிறார். திமுக ஆட்சியில் தொடர்வது என்பது எப்போதுமே சனாதன சக்திகளுக்கு ஏற்புடையதாக இல்லை. எதையாவது சொல்லி தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும். இதற்கு கடவுள், ஆலயம், ஆகமம் போன்றவைகள் சிறந்த காரணங்கள். பெருவாரியான இந்து மக்களை இந்தக் காரணங்கள் நிமித்தம் திமுகவிற்கு எதிராக நிறுத்த முடியும் என்பதுதான் உள்கிடக்கை. தமிழ் இந்த நிலப்பகுதியில் உள்ள ஆலயங்களில் அர்ச்சனை மொழியாக இருக்க முடியாது என்று சொல்வதற்கே ஒரு தைரியம் வேண்டும். சனாதனிகள் தங்களது ஆற்றலை திமுக எதிர்ப்பு என்ற தங்களது நிலைப்பாட்டிலிருந்தே அதைப் பெறுகிறார்கள்.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

K. Ramasami   3 years ago

சிவனுக்குத் தமிழ் தெரியாதென்று சொல்லும் சத்குருக்களும் இங்கே உண்டு!

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

அருஞ்சொல் கட்டுரைமபி: என்ன செய்வார் மாமாஜி?ஆர்.ராமகுமார் கட்டுரைபாஜக நிராகரிப்புநளினிநிலக்கரி வர்ணமா?தற்செயலான சாதியம்சமூக ஊடகங்களில் தமிழ் நடிகர்களின் ரசிகர்கள் நடவடிகநிரந்தரமல்லபெண் குழந்தைகள்சசிகலாமார்ட்டின் லூதர் கிங்வட்டி விகிதம்சோவியத் ஒன்றியம்மெர்சோ: மறுவிசாரணைரயில்வே துறைபன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுஅரிய வகை அம்மைமாநிலவியம்சொல்லும் செயலும்அல்காரிதம்தமிழக வரலாறுபீம் ஆர்மிராஜன் குறை கிருஷ்ணன் உதயநிதி ஸ்டாலின் கட்டுரைவரைபடங்கள்நிதிநிலை அறிக்கை 2023-24விக்டோரியா ஏரிசட்டம் - ஒழுங்குதொற்றுப் பரவல்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!