கோணங்கள் 8 நிமிட வாசிப்பு

அஜித் தோவலின் ஆபத்தான கருத்து

அருணா ராய்
23 Dec 2021, 5:00 am
4

ந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல், 1968-ல் இந்தியக் காவல் பணியில் சேர்ந்தார். அதே ஆண்டு நானும் இந்திய நிர்வாகப் பணியில் சேர்ந்தேன். இதில் முக்கியத்துவம் வாய்ந்தது பயிற்சி. லால்பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமியில் எல்லோரும் அடிப்படை நிர்வாகப் பாடங்களைக் கற்றோம். பயிற்சி பெறும் இளம் அதிகாரிகளிடையே கருத்தில் வேறுபாடுகள் இருக்கும். ஆனால், இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு விசுவாசமாக இருப்பேன் என்று எடுத்துக்கொள்ளும் பிரமாணம் எல்லோரையும் கட்டுப்படுத்துவது ஆகும்.

அந்தப் பிரமாணத்தை மீண்டும் நினைவுபடுத்துவதுகூட நல்லது: “…… ஆகிய நான் சட்டம் அறிவுறுத்தும் வகையில், இந்திய நாட்டுக்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கும் விசுவாசமாக இருப்பேன். இந்திய நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் கட்டிக்காப்பேன்; பதவியில் இருக்கும்போது என் கடமைகளை விசுவாசத்துடனும் நேர்மையுடனும் பாரபட்சமின்றியும் நிறைவேற்றுவேன் என்று உளமாரச் சான்று கூறுகிறேன்.”

அரசு ஊழியர்களின் கடமை

பயிற்சியின்போது பல விஷயங்கள் தொடர்பில் எனக்கு எதிர்க் கருத்துகள் இருந்தன. ஏழே ஆண்டுகள் பணிசெய்துவிட்டு அதிலிருந்து விலகிவிட்டாலும் நான் இன்றளவும் நினைவில் வைத்திருப்பவை அரசமைப்புச் சட்டத்தின் மாண்புகளைக் காக்க வேண்டும் என்பது. சமூகத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு உதவுவதற்காக, அரசின் கொள்கைகளாக அறிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டுநெறிகள் முக்கியமானவை என்ற அறிவுரைகளும் முக்கியமானது. அகாடமியில் எங்களுக்கு அளிக்கப்பட்ட பயிற்சிகளும், நிர்வாக நடைமுறைகளும் தார்மிக-அறநெறிகள், நேர்மை, சார்பில்லாமை ஆகியவற்றைக் கடைப்பிடிக்க வலியுறுத்தின.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் தங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வாய்ப்பைப் பயன்படுத்தி வரம்புகளை மீறக்கூடாது, அவ்வாறு அரசமைப்புச் சட்டமும் வேறு எந்த மரபுகளும் மீறப்படாமல் பார்த்துக்கொள்ளும் கடமை அரசு ஊழியத்துக்குத் தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது என்று உணர்த்தப்பட்டது.

அஜீத் தோவலின் ஆபத்தான கருத்து

ஹைதராபாதில் உள்ள தேசிய காவல் துறை அகாடமியின் பயிற்சி முடிப்பு அணிவகுப்பு நிகழ்ச்சிக்கு, நவம்பர் 11-ல் தலைமை விருந்தினராக கலந்துகொள்ளச் சென்ற தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல், எந்த விதிகளுக்கும் கட்டுப்படாத வகையில் தானாகவே ஒரு கருத்தை, தேசியப் பாதுகாப்பு தொடர்பாக தெரிவித்திருக்கிறார். ‘போர் அல்லது தாக்குதல்’ என்பதற்கு அரசியல் முலாமுடன் புதிய விளக்கம் அளித்திருக்கிறார். அந்த விளக்கம் ஆபத்தானது, மிகப் பெரிய விளைவுகளைப் பின்னாளில் ஏற்படுத்தவல்லது.

புதிய காவல் துறை அதிகாரிகளிடம் பேசுகையில் தோவல் கூறுகிறார், “நான்காம் தலைமுறைப் போர்முறை என்ற புதிய கருத்து பேசப்படுகிறது. இதன் புதிய போர் எல்லை ‘சிவில் சொசைட்டி’ என்று அழைக்கப்படும் - அரசுக்கு அப்பாற்பட்ட - குடிமைச் சமூகங்கள் - அதாவது தன்னார்வத் தொண்டர்களைக் கொண்ட சங்கங்கள் உள்ளிட்ட அமைப்புகள் ஆகும். அரசியல், ராணுவ நோக்கங்களுக்காக நடத்தப்பட்ட போர்களும் தாக்குதல்களும் இப்போது வலுவற்ற ஆயுதங்களாகிவிட்டன. அவற்றுக்கு நிறைய செலவுசெய்ய வேண்டியிருப்பதுடன், அவ்வாறு போர் செய்ய பொருளாதாரமும் நாடுகளுக்கு இடம் தருவதில்லை. அப்படிப்பட்ட போர்களின் முடிவுகள் தங்களுக்குச் சாதகமாகத்தான் இருக்கும் என்பதும் நிச்சயம் இல்லாமல் இருக்கிறது. மாறாக, ‘சிவில் சொசைட்டி’ என்று அழைக்கப்படும் குடிமைச் சமூகம் - அதாவது தன்னார்வ அமைப்புகளைத் தங்கள் நோக்கங்களுக்கேற்ப பயன்படுத்தினால், நாட்டின் நலனை எளிதாக சீர்குலைத்துவிடலாம். குடிமைச் சமூகத்தில் உள்ளவர்களுக்கு லஞ்சம் கொடுக்கலாம், அழிவு வேலைகளுக்கு எளிதாகப் பயன்படுத்தலாம், அவற்றைப் பிளவுபடுத்தலாம், அவற்றை நம் விருப்பத்துக்குச் செயல்பட வைக்கலாம் என்று அந்நிய சக்திகள் கருதுகின்றன. அப்படி குடிமைச் சமூகங்களை நாட்டின் எதிரிகள் தங்களுடைய நோக்கங்களுக்குப் பயன்படுத்திக்கொண்டுவிடாமலிருக்கத்தான் நீங்கள் பயிற்சி பெறுகிறீர்கள்!” என்று பேசியிருக்கிறார் தோவல்.

யாரைக் குறிப்பிடுகிறார்?

இந்த இடத்தில் ‘சிவில் சொசைட்டி’ என்று யாரைக் குறிப்பிடுகிறார் என்று விளக்குவது அவசியம் என்று தோவல் கவலைப்படவில்லை. தாக்குதலை நம் மக்கள் மீதே தொடுக்கலாம் என்று அறிவிக்க தோவலுக்கு அதிகாரத்தை யார் கொடுத்தது என்றும் தெரியவில்லை. நாலாவது தலைமுறைத் தாக்குதல் என்று எதைக் கூறுகிறார் என்று அவர் மேலும் விளக்க வேண்டும். அரசியல் தலைமையும் தனியார் துறையும்தான் தேசத்தைக் கட்டி எழுப்பும் முயற்சிகளுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் பெற்றவை என்பதான கருத்து இது.

அரசுக்கு எதிராகக் கருத்து தெரிவிப்பவர்களும், அரசை எதிர்க்குமாறு மக்களிடம் பேசுகிறவர்களும் வளர்ச்சியையும் தேசியத்தையும் சேதப்படுத்துவதற்காகத்தான் அப்படிச் சொல்கிறார்கள் என்று சித்தரிக்க முயல்கிறார் தோவல். அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள ஜனநாயக, சமூக, வளர்ச்சிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு, வளர்ச்சிக்கான வழிகள் என்று நினைப்பதை அரசு நேரடியாக மேற்கொள்ள வேண்டும் என்று எண்ணுகிறார்.

ஜனநாயகத்துக்கு யாரெல்லாம் பங்களிக்கிறார்கள்?

ஐஏஎஸ் பணியிலிருந்து 1975-ல் விலகி, நான் மக்கள் சமூக அமைப்புகளில் ஆர்வலராகச் சேர்ந்துகொண்டேன். நீதி, சமத்துவம் ஆகிய அரசமைப்புச் சட்ட மாண்புகள் எப்படி இந்தியர்களின், சமூகங்களின், அரசியல் வாழ்க்கையில் ஊடுருவி விரிந்திருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்டேன். பதவியோ, பண பயனோ எதிர்பார்க்காமல் வலுவான சுதந்திர நாட்டுக்கான அடிப்படையை உருவாக்க ஏராளமானவர்கள் நேர்மையாக பிரச்சாரங்களிலும் இயக்கங்களிலும் பங்கேற்றுச் செயல்பட்டதை நேரில் கண்டேன். சுதந்திரப் போராட்ட இயக்கத்திலிருந்து உத்வேகம் பெற்று, ஏராளமான குடிமக்கள் அமைப்புகள், குழுக்கள் வளர்ச்சி, ஜனநாயகம் ஆகியவற்றுக்காக உழைத்துவருகின்றன. அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள சுதந்திரம், சமத்துவம், நீதி, தோழமை, கண்ணியம் ஆகிய கொள்கைகளின் அடிப்படையில்தான் இந்த இயக்கங்களும் பிரச்சாரங்களும் இருந்தன. சுதந்திரத்தையும் ஜனநாயக உரிமைகளையும் மறுப்போரை இயக்கங்கள் தொடர்ந்து கண்காணித்தன. இதுதான் அரசுக்குப் பிரச்சினையாக இருந்திருக்கக் கூடும்.

இந்திய நாட்டுக்கே இந்த மக்கள் குழுக்கள்தான் எதிர்கால ஆபத்துகளாக இருக்கக் கூடும் என்று புதிய காவல்துறை அதிகாரிகளுக்கு இவர்களைத்தான் இலக்காகச் சுட்டிக்காட்டியிருக்கிறார் தோவல்.

எங்களுடைய அணியைச் சேர்ந்தவர்களில் அவர் மட்டும்தான் இன்னமும் அரசு நியமனத்தால் பொதுப் பதவியில், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருக்கிறார். இது மத்திய காபினட் அமைச்சருக்குரிய அந்தஸ்துடன் உள்ள பதவி. நான்காவது தலைமுறைப் போர் குறித்தும், குடிமைச் சமூக இயக்கங்களால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்தும் அவருக்கு எப்படிப்பட்ட கருத்துகள் இருந்தாலும் அரசமைப்புச் சட்டத்துக்கு, எங்கள் எல்லோரையும்விட - அதிகம் கட்டுப்பட வேண்டியவராக இருக்கிறார். குடிமைச் சமூகத்துக்கு எதிராக துப்பாக்கிகளைத் திருப்புங்கள் என்று காவல் துறை பயிற்சி அதிகாரிகளிடம் கூற அரசமைப்புச் சட்டத்தின் ஒரு வாசகம்கூட அவருக்கு அதிகாரத்தைத் தந்திருக்கவில்லை. இதன் மூலம் அவர் இந்தியாவின் பாதுகாப்புக்குத்தான் அதிக சேதம் விளைவிக்கிறார்.

எதிரிகள் அல்ல விமர்சகர்கள்

அரசமைப்பு நியமனம் என்பதால், இப்போதைய அரசியல் தலைமைக்கு எதிரான எந்த விமர்சனத்தையும் நாட்டுக்கு எதிரான அச்சுறுத்தலாகவே பார்க்கிறார். உள்நாட்டுக்குள்ளேயே இருக்கும் எதிர்ப்பாளர்கள்தான் எதிரிகள் என்று வரையறுக்கிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மட்டுமே சட்டபூர்வமாக ஏற்கப்பட்டது, அது நிறைவேற்றும் சட்டங்கள் அனைத்துமே ஏற்கத்தக்கவை என்று தோவலுடைய கருத்து வாதிடுகிறது. மேலும், ‘ஜனநாயகம் என்பதற்கான முழு உரைகல் வாக்குப் பெட்டியில் இல்லை, இந்த வாக்குச் சீட்டுகளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் இயற்றும் சட்டங்களில் இருக்கிறது’ என்றும் பேசியிருக்கிறார் தோவல். தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களின் அரசியல் சித்தாந்தத்துக்கேற்பவே தேசம், தேசியம் என்ற கருத்துகளும் விளக்கம் பெற்று, சட்டப்படியான ஆட்சியாக வரையறுக்கப்படுகிறது என்பது புரிகிறது.

இது ஒரு பாணி. இந்திய ராணுவப் படைகளின் முதல் தலைமை தளபதியான ஜெனரல் விபின் ராவத், ‘டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சியில் பேசியது முக்கியத்துவம் வாய்ந்தது. “பயங்கரவாதிகளை நாங்களே அடித்துக் கொல்வோம் என்று ஜம்மு-காஷ்மீர் மாநில உள்ளூர் மக்கள் சொல்கிறார்கள். இது ஆக்கபூர்வமான அறிகுறி. உங்கள் பகுதியில் பயங்கரவாதி செயல்படும்போது அவரை ஏன் நீங்கள் அடித்துக் கொல்லக்கூடாது!”

யார் பயங்கரவாதி என்பதை அடித்துக் கொல்லும் கும்பலே தீர்மானித்துக்கொள்ளவே இந்தப் பேச்சு ஊக்கமளிக்கும். அதற்குப் பிறகு அவர்களே தண்டனையையும் தந்துவிடுவார்கள். இதுதான் சட்டப்படியான ஆட்சியா?

தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்எச்ஆர்சி), அரசியல் தலைமையால் நியமிக்கப்பட்டவரின் தலைமையில் செயல்படுவது, சமீபத்தில் மத்திய காவல் படைகளுடன் இணைந்து விவாதம் ஒன்றுக்கு அது ஏற்பாடு செய்திருந்தது. ‘பயங்கரவாதம், நக்ஸலிஸம் ஆகிய தீமைகளுக்கு எதிராகப் போரிட மனித உரிமைகள் ஒரு தடைக்கல்லாக இருக்கிறதா?’ என்பது விவாதத் தலைப்பு. தேசிய மனித உரிமைகள் ஆணையம் என்ற அமைப்பு இருப்பதற்கே சட்டப்பூர்வமான அவசியக் காரணமாக இருக்கும், (அரசியல் சட்டம் காப்பதாக உறுதியளிக்கும்) மனித உரிமைகள் தடைக் கல்லாக இருக்கிறதா என்று அரசமைப்புச் சட்டத்தின் மனசாட்சிக் காவலராக இருக்க வேண்டிய அமைப்பே தலைப்பில் கேட்கிறது என்றால், என்ன செய்து!

இவை அனைத்துமே நம்முடைய சொந்த மக்கள் மீதே நாம் நடத்தும் பயங்கரமான தாக்குதல்கள். நம்முடைய அரசமைப்புச் சட்டம், ஜனநாயகம், குடியுரிமை ஆகியவற்றை முக்கியமற்றவையாகக் கருதி செயல்படக்கூடிய எதிர்கால சாத்தியக் கூறுகளையே இவை காட்டுகின்றன. இந்தியா என்ற கருத்தாக்கத்தையே இவை முக்கியமில்லாமல் செய்கின்றன. இந்த அரசாக இருந்தாலும் எந்த அரசாக இருந்தாலும் மீற முடியாத ஜனநாயகக் கடமைகளுக்குக் கட்டுப்பட்டவைதாம். அரசமைப்புச் சட்டப்படி நடக்க வேண்டியவை. அதைவிட்டு விலகியும் செல்ல முடியாது, அசரீரிகளுக்கு ஏற்பவும் செயல்பட்டுவிட முடியாது!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
அருணா ராய்

அருணா ராய், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி. சமூகச் செயற்பாட்டாளர்.


2






பின்னூட்டம் (4)

Login / Create an account to add a comment / reply.

Sivasankaran somaskanthan   3 years ago

மத்திய அரசு அனுதாபிகள் நிச்சயம் வாசிக்க வேண்டிய கட்டுரை. அந்நிய சக்திகள் நாட்டு மக்களை சிவில் சொசைட்டியை பயன்படுத்தி அழிவை ஏற்படுத்துவது உண்மையாக இருக்கலாம். அவர்களை எதிர் கொள்ளும் பொது அரசு விமர்சகர்களை காப்பதும் அரசின் கடமை . இதை அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன். ------------------------------------------------------------------- Genuine Civil society can not be a collateral damage in your warfare National Security Advisor sir

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Amaipaidhiralvom   3 years ago

Samas sir unble to type in tamil... in your portal Pl help me

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Barani R   3 years ago

மன்னராட்ச்சியின் அரசியல் அடையாளங்களான உளவுத்துறையும் காவல்துறையும் இன்றைய நவீன குடியரசமைப்பில் தவிர்க்க முடியத அம்சங்களானாலும் தற்போதைய அரசு இவ்வம்சங்களை நம்பியே செயல்படுகிறது. இதை மிகத் தெளிவாக திட்டமிட்டு செய்வதால் சிறிது காலம் தொடரும், விளைவுகள் விபரீதமாகத்தான் இருக்கும் நாம் விழித்துக்கொண்டாலொழிய விடிவில்லை.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

M. Balasubramaniam   3 years ago

அருணா ராய் வருக! --------------------------- விடுதலைப் போராட்ட வீரர் அருணா ஆஸஃப் அலியின் நினைவாக, 1946 ஆம் ஆண்டு பிறந்த தன் மகளுக்கு அருணா எனப் பெயர் சூட்டினார் தந்தை ஜெயராமன். சென்னையில் பள்ளிப்ப்படிப்பையும், தில்லியில் கல்லூரிப்படிப்பையும் படித்த அருணா ஜெயராமன், ஐஏஸ் தேர்வில் வெற்றி பெற்றார். தமிழக அரசில் ஐஏஎஸ் அதிகாரியாகச் சிலகாலம் பயின்ற அவர், சமுதாயத்தைச் சீர்திருத்த இளைஞர்கள் வரவேண்டும் என்னும் ஜெயப்ரகாஷ் நாரயணின் குரல் கேட்டு, வேலையை உதறிவிட்டு, தெருவில் இறங்கினார். தன் கல்லூரித் தோழரான பங்கர் ராயை மணந்து, அருணா ராய் ஆன, அவர் தன் கணவருடன் சில காலம் இணைந்து டிலோனியா என்னும் குக்கிராமத்தில் பணியாற்றினார். பின்னர், தனக்கான ஒரு சமூகக் கனவைச் சுமந்து, தேவ்துங்ரி என்னும் இன்னொரு கிராமத்துக்குச் சென்று, தன்நண்பர்கள் நிகில் டே, ஷங்கர் சிங் உடன், உழைப்பாளர், உழவர் சக்தி இயக்கம் (Majdoor Kisan Sakthi sabha) என்னும் முறைசாரா இயக்க்கத்தை உருவாக்கினார். இதில் தலைவர், தொண்டர் என்னும் பதவிகள் கிடையாது. அனைவரும், ஒரு வட்டமாக அமர்ந்து விவாதங்கள் செய்து முடிவு எடுக்கும் ஒரு குழுமுறை.. இது நமது மூத்த குடிகளான ஆதிவாசிக் குழுக்களில் உள்ள ஒரு உண்மையான ஜனநாயக முறை. 1987 ஆண்டு, ராஜஸ்தானில் வறட்சி நிவாரணக் கூலியாக 11 ரூபாய் கொடுக்கப்பட வேண்டும் எனத் தொடங்கிய மக்கள் போராட்டம், வீதிகள் வழியே வளர்ந்து, 18 ஆண்டுகள் கழித்து, இந்தியாவின் ‘தகலறியும் சட்டமாக’, மலர்ந்தது. தேவ்துங்ரியில் இவரும் நண்பர்களும் வசிக்கும் இடத்தை, புகழ்பெற்ற பத்திரிக்கையாளர் ரஜ்னி பக்‌ஷி, ‘பாபு குடில்’ (சேவாகிராமம்) போன்றது என அழைக்கிறார். காந்தியைப் பார்த்திராத இக்கால மக்களுக்கு கண்முன்னே வாழும் காந்தி இவர். ’மன்னவனும் நீயோ, வளநாடும் உனதோ?, நாமார்க்கும் குடியல்லோம், நமனை அஞ்சோம்’ , என அதிகாரத்தின் எதிர்ப்புறம் நின்று எழும்பிய குரல்களின் வழிவந்த அருணா ராய் அவர்களின் கட்டுரைகளை, ‘அருஞ்சொல்’, தமிழில் வெளியிடுவது, மிக முக்கியமான தொடக்கம். வாழ்க!

Reply 15 0

Login / Create an account to add a comment / reply.

வருமானச் சரிவு… பாஜகவைப் பின்னுக்கு இழுக்கும் சரிவஅதிக சம்பளம் வாங்க வழிஉடல் அசதிமகாதேவ் தேசாய்மாநிலங்கள் அதிகாரம் பெறுவது ஏன் முக்கியமானது?இந்தியத் தொல்லியல் துறைசோகம்தகுதித் தேர்வுரஷ்ய ஏகாதிபத்தியம்ஜெயமோகன் அருஞ்சொல் சமஸ்முத்தலாக்திருவொற்றியூர் விபத்துநாத்திகம்குழந்தைகளைக் கையேந்த விடாதீர்!மாரா நதிகால் பாதிப்புமோடி பயணத்தின் பேசப்படாத கதைகள்ஏவூர்திதமிழகத்தில் பள்ளிகள் திறப்புகருத்து வேறுபாடுகள்களத்தில் உரையாட வேண்டும்ராஜ்பவனங்கள் காரியபவனங்களாக மாறிவிட்டன?இரும்புச் சிலைகோர்பசெவின் கல்லறை வாசகம்தோசை!தமிழ்ப் புத்தாண்டு அண்ணாஎதேச்சதிகாரத்தின் உச்சம்ஆணின் விந்தணு பூஜ்ஜியத்துக்குப் போய்விடுமா?சித்தர்கள்படுகுழியில் தள்ளிவிடக்கூடும் ராகுலின் தொடர் மௌனம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!