“சுப்பையா.”
“என்னப்பா?”
“சித்தே உள்ளே வாரயா என்கூட?”
“தாராளமா வர்ரேன். ஏன்ப்பா உடம்பை வலிக்கிறதா? பிடிச்சுவிடணுமா?”
“அதெல்லாம் இல்லை குழந்தை. உன்கூட தனியாப் பேசணும்.”
“உள்ளே சித்தி இருக்காளே.”
“அவ குழந்தேளை அழைச்சுண்டு கோயிலுக்குப் போயிருக்கா. வா. இப்படி உட்கார். அங்கே இல்லை. இங்கே கட்டில் மேல் என் பக்கத்தில்.”
“உங்களுக்கு வசதிக் குறைவா இருக்குமேன்னு பார்த்தேன்.”
“பரவாயில்லை வா.”
“சொல்லுங்கோப்பா.”
“வாசல்ல தெருக்குழந்தேளும் பசங்களும் விளையாடிண்டிருக்காளே பார்த்தியா?”
“பார்த்தேனே. அதப் பார்த்துண்டேதான் உட்கார்ந்திருந்தேன். அடடா. அதப் பார்க்கறத்துக்குத்தான் எவ்வளவு ஆனந்தமாயிருக்கு. கீச்சுக் கீச்சுன்னுண்டு அந்த மழலைச் சத்தமும் சின்னச் சின்னக் கைகால்களை அசைச்சாட்டிண்டு ஓடிவர அழகும், மண்ணை அரிசியாக்கி இலை செத்தைகளைப் பாத்திரங்களாக்கி சமையல் செய்யற பாந்தமும், அதுகள் அதைப் பகிர்ந்து சாப்டுகிற அழகும், கத்தறதும் கீசறதும் ஒண்ணுக்கொண்ணு கொஞ்சிக் குலாவிக்கறதும்தான் கண்ணையும் காதையும் எப்படி நெறச்சு வழியறது.”
“சுப்பையா.”
“என்னப்பா?”
“நீ யாரு?”
“இந்தக் கேள்விக்கு நான் என்ன பதில் சொல்லணும்?”
“அந்தக் குழந்தேள் வயசென்ன?”
“பத்து பனிரண்டு வயசுக் குழந்தேள் அத்தனையும்.”
“பசங்கள்.”
“கூட ரெண்டு வயசிருக்கும். கொஞ்சம் பெரிய குழந்தேள் அதுகளும்…”
“உன் வயசென்ன?”
“பதினாலு.”
“நீ குழந்தையில்லையாடா சுப்பையா?”
“எனக்கு இதுக்குப் பதில் சொல்லத் தெரியலையேப்பா. என்ன மன்னிச்சுக்குங்கோ.”
“உன்னொத்த வயசுக் குழந்தேளோட சேர்ந்து வெளையாடணும்னு உனக்குத் தோணவேயில்லையா. அதை விட்டுட்டு அவா வெளையாடறதைப் பார்த்து பெத்தவா சந்தோஷப்படறாப்பல சந்தோஷப்பட்டுண்டே எப்படி ஒதுங்கி நிக்கறே நீ. அவா உன்னைச் சேத்துக்க மாட்டேன்னு சொன்னாளா? நான் வேணா சொல்லட்டுமா அவா கிட்டே?”
“அதெல்லாம் ஒண்ணுமில்லைப்பா. நீங்களா மனசில எதையாவது நெனச்சுண்டு போட்டுக் குழப்பிக்காதீங்கோ. என்னை யாரும் எதுவும் சொல்லலை. நானாத்தான் பாத்துண்டிருக்கறதுலேயே ஆனந்தமாயிருக்கேன்னு திண்ணைல நின்னிண்டிருந்தேன்.”
“…………”
“எனக்கு உன்னை நெனச்சா பயம்மா இருக்கேடா சுப்பையா.”
“மனசைப் போட்டு அலட்டிக்காதீங்கோப்பா. ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு விஷயத்தில் பயம். எனக்கு இப்போ போய் விளையாட்டில் கலந்துண்டேன்னா இப்படி விலகி நின்னு பார்க்கிறதில் கிடைக்கிற ஆனந்தம் போய் விளையாட்டுக்கே உரிய வெற்றி தோல்வி பற்றின கவலை வந்து இந்த அற்புதமான லயிப்பைக் கெடுத்துடுமோன்னு பயம். அவ்வளவுதான். நீங்க தூங்குங்கோ. ஜாஸ்தி பேசப்படாதுன்னு வைத்யர் சொல்லிட்டுப் போயிருக்காரோல்லியோ.”
“இருடா. வைத்யர் கெடக்கார். இப்போ எழுந்து வந்து வாசத்திண்ணைல நின்னிண்டிருந்தேனே இந்தத் தென்போட என்னோட கடைசி சக்தியையும் செலவழிச்சுட்டேன்னுதான் எனக்குத் தோண்றது. குறுக்கே பேசாதக்கி நான் சொல்றதைக் கேளு. எனக்கு என்னைப் பத்தின கவலையெதுவும் கிடையாது. நன்னா சம்பாதிச்சேன். யந்திரங்களுக்கான காலம் கூடிய சீக்கிரம் வரப்போறதுன்னு அதுல ஏதாவது செய்வமேன்னு பார்த்தேன். விதேசியால காசு கரைஞ்சு ஆலையை மூடினதுதான் மிச்சம். போறாத காலம்னுதான் சொல்லணும். நெறய சேத்து குழந்தைகளுங்கூட எனக்கப்புறம் தடுமாறிட மாட்டான்னு நம்பிக்கையிருக்கு. ஆனாக்க சுப்பையா, குழந்தே, உன்னை நெனச்சாதாண்டா எனக்குப் பயம்மா இருக்கு. நீ ஏண்டா இப்படியிருக்கே?”
“நான் எப்பவும்போலத்தானேப்பா இருக்கேன்.”
“எப்பவும்போலத்தான் இருக்கே. எப்பவும்போல எல்லாரை மாதிரியும் இல்லாதைக்கு இருக்கே. உன் கணக்குப் பொஸ்தகத்தில் நீ எழுதி வைச்சிருந்ததைப் படிச்சேன் இன்னைக்கு.”
“…………”
“கணக்கு சுணக்கு பிணக்கு மணக்கு ஆமணக்கு…. என்னடா இது.”
“சும்மா தோணித்து. எழுதி வெச்சேன்.”
“என்னடா அர்த்தம் இதுக்கு? நீ பெரிய கவியோ?”
“நான் கவியுமில்லை. அது கவிதையுமில்லைப்பா. கவிதை பெரிய விஷயம். அது சும்மா தோணினபடி கிறுக்கி வெச்சது.”
“எப்படிடா இப்படித் தோணும்?”
“தோண்றதேப்பா. நான் என்ன செய்வேன். தோண்றதே. எனக்கும்தான் அதுக்கு அர்த்தம் தெரியலை. ஆனா அதை எழுதறப்போ வாசிக்கிறப்போ வரிசையா அந்த முதல் வார்த்தையை, அந்த சப்த லயத்தை விட்டு விடாதைக்கு வேறொரு வார்த்தையால் கொத்திப்போட்டு அதை இன்னொரு வார்த்தையால் தொட்டு லயம் பிசகாமல் இப்படி வாய் நிறைய சொல்லிண்டே அல்லது எழுதிண்டே போனாக்கா ஒரு திருப்தி. ஆனந்தம். ஒருவேளை இதுக்கு அர்த்தம் தெரிஞ்சால் அல்லது அர்த்தமே இல்லைனு தெரிஞ்சா இப்படி எழுத மாட்டேனாயிருக்கும். இதுக்காகவே அந்த அர்த்தத்தைத் தேட வேண்டாம்னு தோண்றது.”
“இதைப் பக்குவம்னு சொல்றதா. பைத்யாரத்தனம்னு சொல்றதா? எதுக்கு சிரிக்கிறாய்?”
“உங்க நண்பரோட தர்பார்ல இன்னிக்கு வேறொருத்தர் இதை வேற விதமாகக் கேட்டார். சுப்பையா உன்னைப் பாம்புன்னு மிதிக்கவும் முடியலை பழுதுன்னு தாண்டவும் முடியலைன்னு.”
“உன்னைப் பார்த்தா எனக்கே அப்படித்தான் தோண்றது. என் குழந்தைன்னு உன்னை எடுத்துக் கொஞ்சவும் முடியலை. பெரிய ஞானின்னு கும்பிடவும் முடியலை. படிக்கவும் மாட்டேங்கறே. சுப்பையா…”
“என்னப்பா?”
“நீ ஏண்டா என்னை மாதிரி அஞ்ஞானிக்கு வந்து மகனாப் பொறந்தே?”
“அதுக்கு நான் கொடுத்து வெச்சிருக்கணுமேப்பா.”
“இன்னைப் பள்ளிக்கூடத்துக்குப் போனயா?”
“போனேனே. எதுக்குக் கேக்கறேள்.”
“வரலைன்னு சொன்னாளே.”
“வரலைன்னு சொல்லியிருக்க மாட்டா. வந்துட்டுப் பாதி வகுப்பில வெளியே போய்ட்டேன்னு சொல்லியிருப்பா.”
“எப்படியோ. ஏன் அப்படி பாதில வெளியே போய்ட்டே?”
“…………”
“சரி வேறொண்ணு கேக்கறேன். உன் உபாத்யாயர் வந்து சொன்னார். சில பசங்களும் வந்து சொன்னா. நீ ஏதோ ஒரு பொண்ணைப் பத்தி திடீர் திடீர்னு பிரக்ஞையில்லாதைக்கு வகுப்பிலேயே பிதற்றறியாமே அப்படியா?”
“…………”
“நான் நம்பலை. செல்லம்மாகிட்டே நீ எவ்வளவு பிரியமா இருக்கேங்றது எனக்குத் தெரியும். ஒருவேளை செல்லாவைப் பத்திதான் நீ பிதற்றறாய் என்று அவா கேலி செய்யறாளோன்னு ஒரு சந்தேகம். நீ குழந்தை…”
“மன்னிச்சுக்குங்கோப்பா. இதுக்கும் என்னால் பதில் சொல்ல முடியலை.”
“ஏதடா இப்படிப் பேசறே. எனக்குக் கலக்கமா இருக்கேடா சுப்பையா.”
“நீங்க கவலைப்படறா மாதிரி எதுவும் கிடையாதுப்பா. எனக்கு அதைப் பத்திச் சொல்லத் தெரியலை. உண்மையாச் சொல்லணும்னா நான் அந்தப் பெண்ணைப் பாத்திருக்கேனா இல்லையாங்கறது பத்தி எனக்கே தெளிவா சொல்ல முடியலை.”
“இதை எந்தப் பதிலில் சேத்துக்கறது?”
“அவளை அடிக்கடி பார்க்கறாப்ல இருக்கு. பேசறாப்ல இருக்கு. நான் பள்ளிக்குப் போற வழில தெருக்கோடீல திடீர்னு வந்து நின்னுண்டு என்னை அங்கேயிங்கே போகவிடாதபடி தன்னோட கூட்டிண்டு போறாள்னும் தோண்றது. ஆனா பிரமைன்னு சொல்ல முடியாதபடிக்கு அப்படியொரு தத்ரூபம். இன்னொண்ணையும் சொல்லணும். அவகிட்ட பேசிண்டிருக்கச்சே அவளைத் தவிர மத்ததெல்லாம் பிரமை மாதிரியும் தோணறாப்போல.”
“என்னடா இப்படிப் பேசறே?”
“நீங்க கேட்டதனால சொன்னேன்ப்பா. அவ எங்கேர்ந்து வாராள். எங்கே திரும்பிப் போறாள். அவ யாரு. உண்மையா பொய்யாங்கறதைப் பத்தி தெரிஞ்சுக்க எனக்கே வயசு பத்தாதுண்ணு தோண்றது. சித்தே முன்னாடி கேட்டேளே. நீ குழந்தையில்லையான்னு. அவ முன்னாடி நிக்கறப்போ மாதிரி ஒரு ஏக்கம் மனசைப் பிடிச்சு ஆட்டிண்டே இருக்கும்.”
“கேக்கறேன்னு தப்பா நெனச்சுக்காதே சுப்பையா. உன் சித்தி உன்னைக் கரிச்சுக் கொட்டறாளா?”
“நீங்க என்ன நெனைக்கறேள்னு தெரியறது. அம்மா இருந்த நினவே இல்லைப்பா எனக்கு. ஆனா இது அதுனால இல்லைன்னும் சொல்ல முடியலை. என்னவோ ஒரு ஏக்கம். ஒரு துக்கம். அந்த சமயத்தில். சித்தி தெய்வம்னா. இது வேற, இதுக்குக் காரணம்தான் எனக்கே தெரியலைங்கறேனே. அந்தப் பொண்ணு என்னை எங்கேயோ கூட்டிண்டு போய்ட்டு திடீர்னு அங்கே விட்டுட்டுக் காணாமப்போய்டறாள். அப்போதான் எனக்கு இந்த ஏக்கம் வந்துடறதுன்னு நெனைக்கறேன். இன்னொன்னு, இன்ன நேரம்னு இல்லாதக்கி நான் உபாத்யாயர் முகத்தைப் பார்த்திண்டிருக்கச்சையும் வந்து கூட்டிண்டுபோயிடறாள். என் கையில் வெச்சிண்டிருக்கற பாடப் புஸ்தகத்தைப் பிடுங்கித் தூக்கி எறிஞ்சுட்டு இன்னிக்கு அவள் கையில வெச்சிண்டிருந்த புஸ்தகம் ஒண்ணைக் காட்டினாள். என்ன மாதிரி புஸ்தகம்ங்கறேள். அதைத் திறந்தவுடனேயே கமழ்ற வாசனையும் அதுலேர்ந்து பறக்கற பட்சிகளும் பூச்சிபொட்டுகளும் விளையாடற குழந்தைகளும் காட்டு மிருகங்களும்….”
“மஹாராஜா பழக்கிவிட்ட அந்தக் கெட்டப் பழக்கத்தை நீ இன்னும் விடலைன்னு தெரியறது.”
“அது உண்மையா இருந்தாலும் அதுக்கும் இதுக்கும் சம்பந்தம் ஏதும் இருக்கறதா தெரியலை. மறுபடி நீங்க என்னை மன்னிச்சுக்கணும், உங்கக்கிட்டே இப்படியெல்லாம் பேசறதுக்காக.”
“என்னமோ குழந்தை. உன்கூட பேசிண்டிருக்கப் பேசிண்டிருக்க பயம் ஜாஸ்தியாறாப்லதான் இருக்கு. நான் உனக்கு எதுவும் சொல்ல முடியும்னு தோணலை. நான் ரொம்ப நாள் இருப்பேன்னும் எனக்குத் தோணலை.”
“இப்படியெல்லாம் பேசி நீங்க என்னைத் தண்டிக்கப்படாது.”
“உண்மையைச் சொல்லணுமில்லையா. ஏதோ என்னால முடிஞ்சவரைக்கும் உன்னை வளர்த்துட்டேன். எனக்கப்புறம். உன்னை இங்கே வச்சு கவனிச்சுக்கற ஞானம் இங்கே இருக்கறவாளுக்குப் போறாதுன்னு தோண்றது. செல்லம்மா சமர்த்துதான். ஆனா அவ குழந்தை. அவளுக்கு வயசு பத்தாது. உன்னைப் புரிஞ்சுக்கறதுக்கு இன்னம் கொஞ்ச நாள் போகணும் அவளுக்கு. உன்னைப் பார்த்து பயந்துபோயிருக்கா அவ. எனக்கே இவ்வளவு வயசு பத்தாதுன்னு தோணறபோது குழந்தைய என்ன சொல்ல முடியும்.”
“நீங்க பெரிய வார்த்தையெல்லாம்….”
“எனக்கப்புறம் நீ இங்க இருக்கறது நல்லதுன்னு எனக்குப் படலை சுப்பையா. எனக்கப்புறம் நீ இங்க இருக்காதே. காசிக்கு குப்பம்மாளுக்கு எழுதிப்போட்டிருக்கேன். அங்க போய்டு. இங்கேருந்து வெளில போனாத்தான் உனக்கு உள்ளே அரிச்சிண்டிருக்கற இந்த விஷயமெல்லாம் — அது நல்லதுக்கோ கெட்டதுக்கோ — மட்டுப்பட்டு எல்லாரையும்போல குடும்பம் குழந்தைன்னு லௌகீகத்துல உனக்கு ஐக்கியம் ஏற்படும்னு நான் நம்புறேன். இந்த சப்த ஜாலம், மாயப்பொண், மந்திரப் புத்தகம் இதெல்லாம் உன்ன விட்டு முதல்ல போயாகணும்.”
“நீங்க சொன்னா தப்பா இருக்காதுப்பா. அத்தையாத்துக்கு நான் போய்த் தங்கணுங்கறது உங்க விருப்பமானா ரொம்பச் சரி.”
“ரொம்ப சந்தோஷம்டா குழந்தை.”
“ஆனா - இப்படிச் சொல்றதுக்காகத் திரும்பவும் நீங்க என்னை மன்னிக்கணும் — எனக்கென்னவோ அந்தப் பொண்ணு எங்கே போனாலும் எந்த ஊர்ப்பள்ளிக்கூட வாசலானாலும் அங்கே வந்து நின்னுண்டு என்னைப் போக வொட்டாம கூட்டிண்டு போய்டுவள்னுதான் எனக்குத் தோணறது — இதை நானாயிருந்து உங்களுக்குச் சொல்றதுகூட அவள்தானா தெரியலை — அது காசியானாலும் சரி, கைலாசமேயானாலும் சரி.”
℧
தொடர்புடைய பதிவுகள்
பாரதியின் வாழ்க்கையே மாயத்தன்மை கொண்டதுதான் - பா.வெங்கடேசன் பேட்டி
பின்னூட்டம் (1)
Login / Create an account to add a comment / reply.
Bharathiraja D 3 years ago
பா.ெங்கடேசனின் எழுத்து அபாரம்
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.