தலையங்கம், அரசியல் 5 நிமிட வாசிப்பு

ஆளுநர் பதவி ஒழிப்பிலிருந்து அரசமைப்புச் சீர்திருத்தம் ஆரம்பிக்கட்டும்

ஆசிரியர்
07 Feb 2022, 5:00 am
2

ந்தியாவின் தென்முனையிலிருந்து இரு மாநிலங்கள் விடுக்கும் அறைகூவல் நாளைய அரசியல் எதுவாக இருக்கப்போகிறது என்பதற்குக் கட்டியம் கூறுவதாக அமைந்திருக்கிறது. தமிழ்நாட்டில் இருந்து, "ஆளுநர் பதவி இனியும் தேவை இல்லை" என்ற குரல் உரத்து ஒலிக்கிறது. தெலங்கானாவோ, "இந்தியாவின் அரசமைப்பானது மாநிலங்களை மையப்படுத்தியதாக திருத்தியமைக்கப்பட வேண்டும்" என்று பேச ஆரம்பித்திருக்கிறது. 

மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத்தேர்வு (நீட்) ரத்துசெய்யப்பட வேண்டும் என்று தமிழகத்தை இன்று ஆளும் திமுக தொடர்ந்து வலியுறுத்திவருகிறது. இதை ஒரு கட்சியின் கோரிக்கையாகப் பார்க்க முடியாது. தமிழ்நாட்டின் குரல் என்று உறுதியாகச் சொல்ல முடியும். 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல் இரண்டிலும் முக்கியமான பேசுபொருளாக இது இருந்தது. இரு தேர்தல்களிலும் திமுக கூட்டணி பெரும் வெற்றி பெற காரணமாகவும் அது அமைந்தது. பாஜக தவிர, தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் - பாஜகவின் கூட்டணிக் கட்சிகள் உள்பட - இந்த விஷயத்தில் ஒன்றுபட்டு நிற்பது மக்களுடைய உணர்வின் வெளிப்பாடே ஆகும். நாடாளுமன்றத்தில் இதைப் பிரதிபலிக்கும் வகையிலேயே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பேச்சும் அமைந்திருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது. 

தமிழக சட்டமன்றம், நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விதி விலக்கைக் கொண்டுவரும் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றியிருந்தது. இந்தத் தீர்மானத்தைக் குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் ரவி அனுப்பியிருக்க வேண்டும். சில மாதங்களாக அந்த மசோதாவைக் கிடப்பில் போட்டிருந்த அவர், ஒருகட்டத்துக்கு மேல் திமுக பொதுவெளியில் இதைப் பேசலானதும், தன் முடிவை அறிவிக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானார். சட்டமன்றம் நிறைவேற்றிய மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல் சபாநாயகருக்குத் திருப்பி அனுப்பிய அவர், அதற்கு நியாயம் கற்பிக்கும் நோக்கில் அபத்தமான விளக்கங்களையும் குறிப்புகளாக எழுதியது அத்துமீறல். விளைவாக மீண்டும் மசோதாவை நிறைவேற்றி அனுப்பும் முடிவை எடுத்திருக்கிறது திமுக.

இந்த விவகாரம் ஒரு கட்சி அல்லது ஒரு மாநில அரசு அல்லது ஒரு ஆளுநர் சம்பந்தப்பட்ட விவகாரமோ, விதிவிலக்கான மோதலோ இல்லை. இந்தியக் குடியரசு முக்கால் நூற்றாண்டை நெருங்கும் நிலையில் இத்தகு மோசமான வரலாறு, ஒரு கலாச்சாரமாகவே உருவாகியிருக்கிறது. டெல்லியில் ஒன்றிய அரசைக் கையில் வைத்திருக்கும் ஆட்சியாளர்கள் மாநிலங்களில், எதிர்க்கட்சிகள் ஆளும்போது ஆளுநர்களை தங்களுடைய நிழல் அதிகார மையமாக்கி மோதவிடுவதற்கு ஒரு நீண்ட வரலாறு இருக்கிறது. 

ஒன்றிய அரசின் கைப்பாவையாக ஆளுநர்கள் செயல்படுவதைத் தடுப்பது என்பதுபோக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசை, அரசமைப்புரீதியிலான பதவியின் வழி ஒரு தனிநபர் சீண்ட அனுமதிக்கும் இப்படியான ஒரு பொறுப்புக்கு தேவை என்ன என்ற கேள்வி முக்கியமானது. இந்தியா முழுவதும் உள்ள ராஜ்பவன்கள் இதுநாள்வரை செலவிட்டிருக்கும் தொகை, அதன் வழி நடந்திருக்கும் அத்துமீறல்கள் இவற்றோடு ஒப்பிட்டால் ஆளுநர்கள் பதவி வழி மக்களுக்கு நடந்திருக்கும் நன்மைகள்தான் என்ன?

மாநிலத்தில்  ஆட்சியமைக்க அழைப்பு விடுக்கும் பணியைத்  தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க முடியும். அமைச்சரவைப் பதவியேற்பை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளைக் கொண்டு நடத்திவிட முடியும். சட்டமன்றத்தில் அரசு சார்பில் ஆளுநர் வாசிக்கும் உரைகளை சபாநாயகர்களைக் கொண்டே வாசிக்க வைத்துவிட முடியும். சம்பிரதாய நிமித்தமான இந்த மூன்று காரணங்களை அன்றி ஆளுநர் பதவி நீடிப்பதற்கு ஒரு தேவையும் இல்லை. ஆளுநர் பதவி ஏன் தேவையற்றது என்பதைத் தீவிரமாக விவாதிக்க வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். 

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், "மாநிலங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அரசமைப்பைச் சட்டத்தைத் திருத்தியமைக்க வேண்டும்" என்று கூறியிருப்பதையும் தமிழ்நாட்டோடு இணைத்துப்  பார்க்க வேண்டிய சூழலிலேயே இருக்கிறோம். இந்தியக் கூட்டாட்சியின் முன்னோடியான அண்ணாவினுடைய குரலின் தொடர்ச்சி இது. தன்னுடைய உரையில் சந்திரசேகர ராவ் சுருக்கமாகவும், துல்லியமாகவும் இதற்கான நியாயத்தைக் குறிப்பிடுகிறார். "மத்திய அரசுக்கு என்றும், மாநில அரசுக்கு என்றும் நம்முடைய அரசமைப்பு, அதிகாரங்களைப் பகிர்ந்தளித்து இருந்தது. இரண்டுக்கும் பொதுவான அதிகாரப் பட்டியலும் இருந்தது. இந்தப் பொதுப் பட்டியலின் பெயரால், மாநிலங்களின் பல அதிகாரங்களை மத்திய அரசு களவாடிக்கொண்டது. உலகெங்கும் நாளுக்கு நாள் கூட்டாட்சி உணர்வும், அதிகாரப் பகிர்வும் விரிந்துகொண்டிருக்கும் காலகட்டத்தில் இந்தியாவோ நேர் எதிராகச் செல்கிறது. மத்தியில் உள்ள அதிகாரங்கள் மாநிலங்களுக்கும், மாநிலங்களில் உள்ள அதிகாரங்கள் உள்ளாட்சிகளுக்கும் மேலும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இங்கோ காங்கிரஸும், பாஜகவும் நிலைமையைத் தலைகீழாக்கிவிட்டன. இதனாலேயே அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்கிறோம். நாடு இதை விவாதிக்கட்டும்" என்கிறார் சந்திரசேகர ராவ். தமிழ்நாட்டின் நெடுநாள் குரலை நம் அண்டை மாநிலம் உரக்க எதிரொலிப்பதாகத் தோன்றுகிறது. 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இப்போது தன்னுடைய பார்வையை முழு இந்தியாவை நோக்கியும் திருப்புகிறார். சமூகநீதித் தளத்தில் கால் பதித்து அவர் விரிக்க முற்படும் படையானது கூட்டாட்சியியத்தையும் மையச் சரடுகளில் ஒன்றாகக் கொள்ளட்டும். அதேபோல, பாஜகவுக்கான மாற்று அரசியல் ஒன்றைத் திட்டமிடும் காங்கிரஸும், தன்னை முழுமையான மறுபுனரமைக்கு உள்ளாக்கிக்கொள்ள வேண்டிய காலகட்டம் இது. நாடாளுமன்றத்தில் கூட்டாட்சியின் முக்கியத்துவத்தை ராகுல் உறுதிபடப் பேசிக்கொண்டிருக்கும் இதே காலகட்டத்தில்தான், அவருடைய கட்சியின் தெலங்கானா மாநிலத் தலைவர் ரேவந்த் ரெட்டி  முதல்வர் சந்திரசேகர ராவுடைய பேச்சை எதிர்த்து அவர் மீதான சட்ட நடவடிக்கைக்கு குரல் கொடுத்திருக்கிறார்.  இத்தகு முரண்பாடு சூழலுக்கு காங்கிரஸ் முடிவு கட்ட வேண்டும். தேசம் மேலும் தன்னை ஜனநாயகப்படுத்திக்கொள்ள தயாராகட்டும். தமிழ்நாடு அதற்கு வழிகோலட்டும்!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.

10

4





பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   3 years ago

எதிர்க்கட்சியாக இருக்கும்போது மட்டும் மாநில உரிமைகளை தூக்கிப்பிடிப்பது இந்தியாவின் இரண்டாவது பெரிய கட்சிகளின் வாடிக்கையாக உள்ளது. இராகுலாவது குறுகியகால அரசியல் இலாபங்களை கருத்தில் கொள்ளாமல் கொள்கை அரசியலை முன்னெடுக்கவேண்டும். ஏனெனில் கட்சியைவிட நாட்டுநலன் பெரியது.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Ma Amar Murugesan   3 years ago

மூன்றே மூன்று செயல்பாடுகளுக்கு மட்டும் ஒரு கவர்னர் அதற்கு ஒரு அதிகார மையம் இதை ஒழிப்பதற்கு இதற்கு முதலில் காங்கிரஸ் தன்னை தயாற்படுத்தி கொள்ளவேண்டும் அப்போதுதான் வலுவான எதிர்க்கட்சி உருவாகும் அதன்பிறகு கூட்டாட்சி தத்துவம் வலுபெற்று தேசம் முன்னேற்ற பாதையில் பயணிக்கும்

Reply 5 0

Login / Create an account to add a comment / reply.

சூர்யாஇருமொழிக் கொள்கைபேரரசுகள்தமிழ்நாடு கேடர்அதீதத் தலையீடுகள்கள்ளக்குறிச்சிபிணைமீண்டெழட்டும் அதிமுகஅரிய கனிமங்கள்தொழில்நுட்பத் துறைகேள்வி நீங்கள் - பதில் சமஸ்நால்வரணிபூங்காக்கள்செய்தி சேனல்பயிர்வாரிரயத்துவாரி முறைசசிகலாசமஸ் அருஞ்சொல் தமிழ்நாடு பிரிவினைpreparing interviewsசீரான நிதி மேலாண்மைநான்கு வர்ணங்கள்மெரினாஆய்வுக் கட்டுரைகல்கத்தாசண்டே டைம்ஸ்சீனாவைச் சுற்றிவரும் வதந்திyogendra yadav5 மாநிலத் தேர்தல்திராவிட நிலம்மேட்டுக்குடி நிதியமைச்சர்கள்!

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!