தலையங்கம் 5 நிமிட வாசிப்பு

அடுத்து தமிழ்நாட்டின் கொடியை அறிவியுங்கள் முதல்வர்

ஆசிரியர்
20 Dec 2021, 5:00 am
2

னோன்மணீயம் சுந்தரனார் எழுதிய 'நீராரும் கடலுடுத்த...' பாடலைத் தமிழ்நாட்டின் மாநில கீதமாக அறிவித்ததின்வழி, இந்தியக் கூட்டாட்சி வரலாற்றில் திமுகவின் அடுத்த அத்தியாயத்தைத் தொடக்கிவைத்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

ஒரு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது, மற்றவர்கள் எழுந்து நிற்க காஞ்சி சங்கர மடாதிபதி விஜயேந்திரர் மட்டும் எழாமல் அமர்ந்திருந்தார். அந்த சமயத்தில், இது ஒரு விவாதமானது. 1970 மார்ச் 11இல் 'நீராரும் கடலுடுத்த...' பாடல், அன்றைய திமுக அரசால், முதல்வர் மு.கருணாநிதியால் தமிழ்த்தாய் வாழ்த்தாக அறிவிக்கப்பட்ட பின், தமிழ்நாட்டில் நடக்கும் பொது நிகழ்ச்சிகளின் இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படுவது போலவே, தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவதும் ஒரு மரபாகவே தொடர்ந்தது. 

தேசிய கீதம் பாடப்படும்போது எழுந்து நிற்கும் சங்கராச்சாரியார், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது அமர்ந்தே இருந்தது தமிழுக்கான அவமதிப்பாகப் பார்க்கப்பட்டதை முரணாகச் சொல்ல முடியாது. சமீபத்தில் ஒரு வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், "தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க வேண்டிய கட்டாயம் இல்லை" என்று குறிப்பிட்டிருந்தார். சட்டரீதியாக தமிழ்த்தாய் வாழ்த்து எழுந்து நிற்க வேண்டிய கட்டாயத்தை கொண்டிருக்கவில்லை. இப்போது மாநிலத்தின் கீதமாக அதை அறிவித்ததின் வழி, சட்டபூர்வ கட்டாயத்தையும், கூட்டாட்சி கதையாடலில் புதிய அத்தியாயத்தையும் உருவாக்கியிருக்கிறார் ஸ்டாலின். 

இன்று தமிழ்நாட்டின் மாநில கீதமாக அறிவிக்கப்பட்டிருக்கும் பாடலானது, இந்த இடத்தை வந்தடைய ஒரு நூற்றாண்டு ஆகியிருக்கிறது. 1913இல் கரந்தை தமிழ்ச் சங்கத்தின் ஆண்டறிக்கையில், "இந்தப் பாடலைத் தமிழ்நாட்டின் அனைத்து விழாக்களிலும் பாட வேண்டும்" என்ற முழக்கம் இடம்பெற்றது. அப்போது முதலாக கரந்தை தமிழ்ச் சங்கத்தின் ஆண்டு விழாக்களில் இந்தப் பாடல் பாடப்படலானது. தொடர்ந்து தமிழ்நாட்டின் தமிழ்ச்சங்கங்களின் விழாக்களிலும் இது பாடப்படுவது வழக்கமானது. 

தமிழ்நாட்டின் முதல்வராக 1967இல் அண்ணா பொறுப்பேற்ற பிறகு, தமிழ்நாட்டின் கீதமாக அப்பாடலை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது. இதன் தொடர்ச்சியாகவே தமிழ்த்தாய் வாழ்த்தாக மு.கருணாநிதி அரசு, இப்பாடலை அறிவித்தது. இந்தியாவில் தமிழ்நாடு மட்டுமல்லாமல் இப்படி மாநிலத்துக்கென்று தனி கீதத்தைப் பல மாநிலங்கள் கொண்டிருக்கின்றன. இதை வெறுமனே அந்தந்த பிராந்தியம்சார் அல்லது மொழிசார் உணர்வுகளின் வெளிப்பாடு என்று மட்டுமே கூறிவிட முடியாது. இந்தியக் கூட்டாட்சிக்கு மாநிலங்கள் சேர்க்கும் வலுவும் வண்ணமும்கூட இது. 

திமுக சரியாக 50 ஆண்டுகளுக்கு முன்பு விட்ட இடத்திலிருந்து இப்போது மீண்டும் தொடங்குகிறது என்று ஸ்டாலினின் இந்நகர்வைக் குறிப்பிடலாம். 1971இல் ஜம்மு காஷ்மீர் நீங்கலாக நாட்டிலேயே முதன்முறையாக மாநிலத்துக்கான கொடியை அறிவித்தார் அன்றைய முதல்வர் கருணாநிதி.

இந்திய அரசமைப்புச் சட்டம் மாநிலங்களுக்கென்று கொடிகள் எப்படி அமைய வேண்டும் என்று வரையறைகளைக் கொண்டிருக்கவில்லையோ, அதேபோல மாநிலங்கள் தமக்கென்று கொடியைக் கொண்டிருக்கக் கூடாது என்பதற்கான தடைகளையும் கொண்டிருக்கவில்லை. மேலும், இந்திய தேசியக் கொடிக்கான வரையறைகள் அதோடு சேர்ந்து இன்னொரு கொடி பறப்பதையும் தடுக்கவில்லை. இதன் விளைவாகவே காஷ்மீர் இணைப்பின்போது, அரசமைப்புச் சட்டப் பிரிவு 370 அளித்த சிறப்பு ஏற்பாடுகளில் காஷ்மீருக்கான கொடியும் ஒரு பகுதியாக இருந்தது. எப்படி ஒரு நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மாநில கீதமும், நிகழ்ச்சியின் முடிவில் தேசிய கீதமும் பாடப்படுவதானது ஒன்றுக்கொன்று முரண்பட்டதாக இல்லாமல் அந்த நிகழ்ச்சிக்கு ஒரு பரிபூரணத்தை வழங்குகிறதோ அதுபோலவே தேசியக் கொடியுடன் மாநிலக் கொடியும் இணைந்து பறப்பதானது இந்தியக் கூட்டாட்சிக்கு கூடுதல் வண்ணம் சேர்ப்பதாகவே அமையும். 

உலகமெங்கும் உள்ள முற்போக்கான கூட்டாட்சி நாடுகள் எல்லாவற்றிலுமே தேசியக் கொடியுடன் மாநிலக் கொடிகள் பறக்கின்றன. தம்முடைய நெடிய பயணத்தில் புதுப்புது வடிவமைப்பையும் இந்தக் கொடிகள் சேர்த்துக்கொள்கின்றன. அமெரிக்காவின் அத்தனை மாநிலங்களும் தமக்கெனத் தனிக்கொடியைக் கொண்டிருக்கின்றன. தலைநகரம் வாஷிங்டன் அதற்கென்று ஒரு  கொடியைக் கொண்டிருக்கிறது. 1893 - 1918 காலகட்டத்துக்குள் பெரும்பான்மையான அமெரிக்க மாநிலங்கள் தமக்கான கொடியை உருவாக்கிக்கொண்டுவிட்டதோடு ஒப்பிட்டால், ஒரு கூட்டாட்சியாக இந்தியா எவ்வளவு பின்தங்கி நிற்கிறோம் என்பது புரியவரும். இந்த 2021 ஜனவரியில்கூட மிஸிஸிப்பி மாநிலம் மூன்றாவது முறையாக தன்னுடைய கொடியை மாற்றி புதிய கொடியை அமலுக்குக் கொண்டுவந்ததை  நினைவுகூரலாம். கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி எல்லா நாடுகளிலுமே இப்படி நடக்கிறது. ஏனைய கூட்டாட்சிகளைப் போல மாநில கீதங்கள், மாநில லட்சினைகள் ஆகியவற்றை அங்கீகரிக்கும் இந்தியக் கூட்டாட்சியானது, மாநிலங்களின் கொடியை மட்டும் நிராகரிக்க பகுத்தறிவான காரணம் ஏதும் இல்லை. 

முன்னதாக 1970இல் முதல்வர் கருணாநிதி தமிழ்நாட்டுக்கு என்று கொடியை அறிமுகப்படுத்தி, ஒன்றிய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியபோது இந்திரா அரசு அதை ஏற்க மறுத்தது. இப்படி ஒரு விஷயத்தை எப்படி எதிர்கொள்வது என்று அதற்குத் தெரியவில்லை. நிராகரித்தது. அதுவரை சுதந்திர தின விழாக்களில்கூட மாநிலத் தலைமையகத்தில் தேசியக் கொடியேற்றுபவராக ஆளுநரே இருந்தார். கருணாநிதியின் வலியுறுத்தலுக்குப் பிறகே குறைந்தபட்சம் தேசியக் கொடியேற்றும் உரிமையை 1974 முதலாக முதல்வர்களிடம் கையளித்தது. 

நெடிய இடைவெளிக்குப் பின், 2018 மார்ச் 8இல் கர்நாடகத்தில் அன்றைய முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு தம் மாநிலத்துக்கென்று ஒரு கொடியை அறிமுகப்படுத்தியது. அதை ஒன்றிய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பியபோது மோடி அரசு  நிராகரித்தது. அடுத்து 2019 ஆகஸ்ட் 5-ல் எடுக்கப்பட்ட காஷ்மீர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அந்த மாநிலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, ஒன்றியப் பிரதேசமாக்கப்பட்டு, அரசமைப்புச் சட்டப்பிரிவு 370 செல்லாததாக்கப்பட்டபோது இந்தியாவில் அதுவரையில் பறந்த ஒரே மாநிலக் கொடியும் கீழே இறக்கப்பட்டுவிட்டது.

இதில் இந்தியக் குடியரசு பெருமைகொள்ள ஏதுமில்லை. அச்சம் மட்டுமே இதன் பின்னணியில் உள்ள ஒரே காரணம். நாடு சுதந்திரம் அடைந்து முக்கால் நூற்றாண்டாகும் தருணத்திலும் கூட்டாட்சி உணர்வுக்கும், பிரிவினை உணர்வுக்கும் இடையிலான வேறுபாட்டைக்கூடப்  பகுத்துணராதபடியான அச்சம் நீடித்து நம்மைச் சூழ்ந்திருக்குமேயானால், அது மக்களுடைய தேச உணர்வைக் கொச்சைப்படுத்துவதாகவே அமையும். 

இந்தியா தன்னுடைய கூட்டாட்சி உணர்வைச் செழுமைப்படுத்த மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவமும், அதிகாரப்பகிர்வும் மேலோங்க வேண்டும். தரைப்படை, வான்படை, கடற்படை உள்பட இந்தியாவின் பல துறைகள் தனக்கென்று தனிக்கொடியைக் கொண்டிருக்கும்போது மக்களால் தேர்ந்தெடுக்கும் மாநில அரசுகளும் உள்ளாட்சி நிர்வாகங்களும் தமக்கென்று தனித்துவமான கொடியைக் கொண்டிருக்க ஜனநாயக உரிமை உண்டு. ஒன்றிய அரசு நிராகரிக்கலாம்; தொடர்ந்து முன்மொழிய வேண்டியது மாநிலங்களின் கடமை.  கூட்டாட்சியின் முன்னோடியாக தமிழ்நாடு எப்போதும் இருக்கட்டும். முதல்வர் ஸ்டாலின் அடுத்து, தமிழ்நாட்டுக்கென்று மாநிலக் கொடியை அறிமுகப்படுத்தட்டும்!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.

7

7





பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

Aravindh Rajendran   3 years ago

பல வல்லுநர்களின் கருத்துகளின் அடிப்படையில் கூடாடாசியத்தை ஒன்றிய அரசு புரிந்துணர வேண்டும்.அத்தகைய அறிஞர்களில் நடுநிலையானவர்களை அனைத்து மாநில அரசுகளிடமும் இனைந்து கூட்டாட்சி பணியாற்றும் ஒரு ஒன்றிய பிரதிநிதியை தேர்வு செய்தனுப்ப வேண்டும்.அல்லது கவர்னர் என்னும் பதவியின் முக்கியத்துவத்தை உணர்ந்து, இது போன்ற மேற்சொன்ன வகையில் சீர்திருத்தங்களை கொண்டு வருவதே நாட்டின ஒற்றுமைக்கு உறததி சேர்க்கும்.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

VIJAYAKUMAR   3 years ago

எதிர்வரும் தமிழ்நாடு தினத்தில் இதைச் செயல்படுத்தினால் நன்றாக இருக்கும்.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

பிறகு…பூர்வீகக்குடி மக்கள்மசாலாபூதம்பாடிதெய்வீகத்தன்மைமனித உரிமை நிறுவன நினைவகம்மூர்க்குமாசெ கட்டுரைமாற்றம் விரும்பிகளுக்கும்பாலசிங்கம் இராஜேந்திரன்திருமஞ்சன தரிசனம்காக்காய் வலிப்புசிறுபான்மைஆளும் கட்சிசந்தேகப்பட வைக்கிறது ‘வக்ஃப்’ மசோதா!புதிய நுழைவுத் தேர்வுஈராயிரம் குழவிகளை எப்படி அணுகப்போகிறோம்?உள்ளூர் மாணவர்கள்வேளாண் துறைநவீன அறிவியல்கான்கிரீட் தளங்கள்யு.அஜய் சந்திர வாசகம் கட்டுரைமாநில நிதிபெரும்பான்மைவாதம்திராவிடக் கதையாடல்தற்காலிகம்தொகுதிகள் மறுவரையறைஅப்பாபத்திரிகை ஆசிரியர்விரித்தலும் சுருக்குதலும்புதிய இந்தியா

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!