தலையங்கம், விவசாயம் 4 நிமிட வாசிப்பு

அயோக்கியத்தனமானது லக்கிம்பூர் கெரி வன்முறை

ஆசிரியர்
07 Oct 2021, 5:01 am
5

உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் கெரியில் விவசாயிகளின் போராட்டம் வன்முறையாக மாற்றப்பட்டதும், தேசத்தின் மனநிலையை விவசாயிகளுக்கு எதிராகத் திருப்பிவிடுவதுமான முயற்சி அயோக்கியத்தனமானது. இந்த விவகாரத்தில் விவசாயிகள் தரப்பில் சில தவறுகள் இழைக்கப்பட்டிருந்தாலும், இந்திய அரசே அதற்கான பொறுப்பையும் சேர்த்து ஏற்க வேண்டும்.

வேளாண் துறையில் நிறைய சீர்திருத்தம் வேண்டியிருக்கிறது. அது விவசாயிகள், இடைத்தரகர்கள், வியாபாரிகள், மண்டி நிர்வாகிகள், வேளாண் துறையினர், மாநில அரசுகள் என்று இதில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்புகளையும் ஆலோசனை கலந்து மேற்கொள்ளப்பட வேண்டிய செயல்பாடு. இந்திய அரசு தன் இஷ்டத்துக்கு இந்த வேளாண் சட்டங்களைக் கொண்டுவந்தது. அதிர்ந்துபோயினர் விவசாயிகள். பெருநிறுவனங்கள் கைகளில் தங்கள் பிழைப்பு பறிபோய்விடும் என்று அவர்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர். இந்த அச்சம்தான் போராட்டங்களின் மையம்.

விவசாயிகளுடைய அச்சத்தை அரசு போக்கியிருக்க வேண்டும். போராட்டத்தை நோக்கிச் சென்ற விவசாயிகளையும், ஏனைய தரப்புகளையும் அழைத்து, திறந்த மனதோடு பிரதமர் மோடியால் பேச முடிந்திருந்தால், விளைவுகள் வேறாக இருந்திருக்கும்; எந்த அம்சங்களை இச்சட்டத்தின் எதிர்ப்பாளர்கள் அச்சுறுத்தலாகப் பார்க்கிறார்களோ அந்த அம்சங்களை நீக்கிவிட்டு, அவர்கள் சேர்க்கச் சொல்லும் அம்சங்களுடன் வேளாண் சட்டங்களை அரசால் அமலாக்கியிருக்க முடியும். விவசாயிகளை அரசு புறந்தள்ளியது; அலைக்கழித்தது. மாநில அரசுகள் இந்த விவகாரத்தின் தீவிரத்தை உணர்ந்து, ‘வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்பட வேண்டும்’ என்று பேசின. இந்திய அரசு பொருட்படுத்தவே இல்லை.

போராட்டத்தை இழுத்தடிக்கத் தள்ளி, போராட்டக்காரர்களை அயர்ச்சிக்குள்ளாக்கி, விவகாரத்தை முடிவுக்குக் கொண்டுவந்துவிடலாம் என்பது மட்டமான நம்பிக்கை. அறவழியில் போராட முனைவோரை அப்படி அலைக்கழிப்பதும், அவமதிப்பதும் பெரிய வன்முறை. ஒரு வீட்டில் தன்னுடைய கோரிக்கையை முன்னிறுத்தி, ‘உணவருந்த மாட்டேன்!’ என்று போராடும் சக உறவினரை, ‘அப்படியா, இரு!’ என்று சொல்லிவிட்டு, தன் போக்குக்கு ஒரு குடும்பத் தலைவர் செயல்படுவார் என்றால், அது எத்தகைய கொந்தளிப்புக்குள் அந்த உறவையும், குடும்பத்தையும் தள்ளும் என்பதை குடும்பஸ்தர்கள் உணர்வார்கள்.

அப்படியான கொந்தளிப்பை இந்நாட்டின் விவசாயிகளுக்கு மோடி அரசு வெகுநிதானமாகப் புகட்டியது. கரோனா பெருந்தொற்றுக் காலத்தில், நாடே வீடடங்கிக் கிடந்த நிலையிலும், போராட்டக் களத்தில் கிடந்தனர் விவசாயிகள். ஓராண்டை நெருங்குகிறது அவர்கள் போராட்டம். வெயில், பனி, மழை அவ்வளவுக்கு மத்தியிலும் இந்தப் போராட்டத்தை ‘இன்று நான், நாளை நீ’ என்று முறைவைத்துத் தொடர்ந்தார்கள் விவசாயிகள். அரசின் மீது அவர்கள் நம்பிக்கையை இழந்ததும், பாஜக தலைவர்களுடன் பேசவே மாட்டோம் என்ற நிலைக்கு அவர்கள் சென்றதும் துரதிருஷ்டவசமான அடைவு. அந்த இடத்துக்கு அவர்களைத் தள்ளியதற்கும் ஒரு சமூகமாக நாம்தான் பொறுப்பேற்க வேண்டும்.

மக்கள் மீது அப்படியான பொறுப்புணர்வு ஏதுமற்றவர்களின் காலம் இது என்பதை ஹரியாணா பாஜக முதல்வர் மனோகர் லால் கட்டாரின் பேச்சு உணர்த்தியது. ‘சந்தர்ப்பம் பார்த்து விவசாயிகளைச் சாத்துங்கள்’ என்று  கட்சியினரிடம் அவர் பேசும் காணொளி நாடு முழுவதும் பரவிற்று. உத்தர பிரதேசத்தின், லக்கிம்பூர் கெரியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மீது மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவுக்கு சொந்தமான கார் செலுத்தப்பட்டதானது பாஜகவினரிடம் உறைந்திருக்கும் ஆழமான வெறுப்பு, உக்கிரமான ஆத்திரத்தின் வெளிப்பாடு. 

மத்திய அமைச்சரின் மகன் அஷிஸ் மிஸ்ரா அந்த காரில் இருந்ததாக விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். மத்திய அமைச்சரோ, ‘மகன் அதில் இல்லை’ என்கிறார். கட்சியினர் இருந்தார்கள் என்பது உறுதி. விவசாயிகள் தாக்கியதாக பாஜகவினர் குற்றஞ்சாட்டுகிறார்கள். விவசாயிகள் நால்வர், ஒரு பத்திரிகையாளர், அமைச்சரின் கார் ஓட்டுநர், இரு பாஜகவினர் என்று எட்டு பேர் சம்பவத்தில் இறந்திருக்கின்றனர். எப்படியாயினும் கொடூரம் இது. மக்கள் பிரதிநிதிகள் எந்த அளவுக்குப் பட்டவர்த்தமாக மக்கள் விரோதிகள் ஆகிக்கொண்டிருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்தும் கொடூரம்!

சம்பந்தப்பட்ட அமைச்சரை உடனடியாக பதவியிலிருந்து விலக்கிவிட்டு, நியாயமான விசாரணைக்கு உத்தரவிடுவதோடு, நடந்த சம்பவத்துக்காக மன்னிப்பும் கேட்டிருக்க வேண்டும் அரசு. இப்போதும் பிரச்சினையைத் திசை திருப்பும் உத்தியிலும், விவகாரத்தை மூடிவிடும் வேலையிலும் ஈடுபடுவது வெட்கக்கேடு. இவ்வளவு தீவிரமான ஒரு பிரச்சினையில் எதிர்க்கட்சிகள் தலையிடாமல் எப்படி இருப்பார்கள்? பாதிக்கப்பட்டோரை நோக்கிச் சென்ற காங்கிரஸ் தலைவர்கள் பிரியங்கா காந்தியையும், ராகுல் காந்தியையும் யோகி ஆதித்யநாத்தின் உத்தர பிரதேச அரசு நடத்திய விதம் மிக மோசம். ஜனநாயகத்தை நேசிக்கும் எவரும் இந்த நாட்டில் லக்கிம்பூர் கெரி வன்முறைக்காக தலைகுனிவார்கள். விவசாயிகளிடம் மானசீகமாக மன்னிப்புக் கோருவார்கள். பிரதமர் மோடி இதற்கெல்லாம் பதில் சொல்லும் காலம் வரும்!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.






1

பின்னூட்டம் (5)

Login / Create an account to add a comment / reply.

அ.பி   3 years ago

மக்கள் இந்த விஷயத்தில் எப்படி பொறுப்பு ஏற்க முடியும்..... ஆனால் 2 வது தடவை பிஜெபி கு வாக்களித்த வாக்காளர் பெருமக்கள் அனைவருக்கும் பொறுப்பு உள்ளது.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

V NEELAKANDAN   3 years ago

இந்திய ஊடகங்கள் முதல் நாள் தொட்டு நிகழ்கால ஜாலியன்வாலா பாக் சம்பவம் குறித்து மிக சாமர்த்தியமாக “வன்முறை” என்று பொதுவாகத் தலைப்பிட்டு அரசின் திசைதிருப்பல் முயற்சிக்கு ஆதரவளித்து வருகின்றன. உங்கள் தலையங்கத்தின் தலைப்பும் கூட லகிம்பூர் கெரி வன்முறை என்றே உள்ளது. வன்முறை, கலவரம் எனில் இருதரப்பும் மோதிக் கொண்டது என்றே தடம் புரளும். யார் நிகழ்த்திய வன்முறை என்பதைச் சேர்த்தே சொல்ல வேண்டுமல்லவா? பொதுவாகச் சொல்லி தாக்கியவர்களையும் பாதிக்கப்பட்டவர்களையும் ஒரே தட்டில் நிறுத்துவது என்ன நியாயம்? ஓராண்டை நெருங்கும் போராட்டத்தில் சோர்ந்து போனது விவசாயிகள் அல்ல, அரசுதான் என்பதற்கு அவர்கள் நிகழ்த்திய இந்த வெறியாட்டமே சாட்சி. ‘அருஞ்சொல்’ அறம் உரைத்திருக்கிறது அழுத்தமாக. --வெ. நீலகண்டன், கடலூர்

Reply 7 0

Login / Create an account to add a comment / reply.

Seyed Bukhari   3 years ago

இதை ஒரு தனி நிகழ்வாக காண்பது தான் இந்தியாவின் அல்லது இந்தியாவில் வசிப்போரின் சாபம்.இந்த மனநிலை பலவேளைகளில் போராட்டத்தையும் போராடுவோரையும் சமுக விரோதிகளாக அவதானிக்க தூண்டுகிறது.இது மாற வேண்டும்.மக்களின் பிரிவினையும் தனித்தனியாய் இயங்கும் குழு மனப்பான்மையும் ஆள்வோர்கான பெரும் பலமாகும்.இதுதான் இந்தியாவின் அதிகார சுழற்சியில் பெரும் பங்காற்றி கொண்டிருக்கிறது.மேலும் 47 ற்கு பிறகு இந்தியாவை ஆண்டவர்களில் பெரபான்மையினர் மக்கள் நலனில் அக்கறையற்றவர்கள்.அதிலும் இன்று ஆள்பவர்கள் மக்கள் நலன் குறித்து கிஞ்சிற்றும் கவலையற்றவர்கள் இதன் விளைவு நோயை காரணப்படுத்தி மக்களை முடக்கி பாராளுமன்றத்தை பார்வையாளராக மாற்றி விட்டு சட்டத்திருத்தத்தை முன்வடிவுகளை முன்மொழிந்து சட்டங்களை நிறைவேற்றுகிறார்கள்.இவர்களிடம் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் தன்மையை எதிர்பார்க்க கூடாது.எதிர்பார்க்கவும் முடியாது.அதை உருவாக்க வேண்டும்.அதற்கான அரசின் அவசரக்கோல ஆர்வக்கோளாறுகள் தானே உருவாக்கி தந்துள்ளது.அதை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பளிக்கும் வகையில் மக்களின் உணர்வுகளை மதித்து செயல்படும் அதிகார மையங்களை உருவாக்க முடியும்.அதற்காக இந்த சூழலை சாதமாக்கி உழைக்க வேண்டும்.மக்கள் உள்ளங்களை இணைக்க வேண்டும்.தொடர்ந்து போராட வேண்டும்.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

V.AGORAM    3 years ago

காலம் பதிலளிக்கும். அழைத்து பேசி சுமுகமான முறையில் செல்ல வேண்டும்.விவசாயிகளை அவமதிக்கும் நாடு கஷ்டம் கொள்ளும்

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Krishnamoorthy   3 years ago

ஒரு சமூகமாக நாம்தான் பொறுப்பேற்க வேண்டும்" என்று நீங்கள் சொல்வது அரசின் தவறை மக்களின் பக்கம் திருப்பி நீர்த்துப்போகச் செய்யும் வார்த்தைகள் திரு. சமஸ்,,, அரசு மட்டுமே இதற்குப்.பொறுப்பு,,,நீங்கள் உச்ச்சிமுகரும் காந்திய வழியில்தான் தொடர்கிறார்கள். அவர்களை அழைத்துப் பேசும் காந்திய உரையாடலை இந்த அரசு நிகழ்த்த வேண்டும்.மக்களைக் குறை சொல்லாதீர்.இதே தொனொயில் நீங்கள் காவிரியில் நமக்கு பொறுப்பில்லை என்று எழுதியதும் நினைவுக்குப்வருவதைத்ந்தடுக்க முடியவில்லை.

Reply 5 0

Login / Create an account to add a comment / reply.

டிரெண்டிங்கே.சங்கர் பிள்ளைஉடைவுதேர்தல் களத்துக்கு எதிரணி தயார்கல்விச் சீர்திருத்தம்ராஜேஷ் அதானிசட்டமன்ற உறுப்பினர்தீவிரவாதம்ஸ்டாலின் ராஜாங்கம் கட்டுரைதமிழன்கான் மார்க்கெட் மேட்டுக்குடிகள்நுகர்வு உறுப்புமின் கட்டண உயர்வுஎலும்பு முறிவுமெக்காலேபா.இரஞ்சித் நட்சத்திரம் நகர்கிறது அருஞ்சொல்பொதுவிடம்வாய்வுத் தொல்லைமாரி செல்வராஜ்சைனஸ் தொல்லைகர்நாடக காங்கிரஸ் தலைவர்களின் இந்து ஆதரவுப் போக்குசூப்பர் டீலக்ஸ்வ.சேதுராமன் கட்டுரைநீதிபதி சந்துருமதச்சார்பற்ற ஜனதா தளம்ஏழாவது கட்டம்பென்ஷன் பரிஷத்ஒடிஷாமாயக்கோட்டையின் கடவுள்செமி கன்டக்டர் தட்டுப்பாடு

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!