தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுக்குத் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தைக் கையில் எடுத்துக்கொள்ள விழைகிறது தமிழ்நாடு அரசு; முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய சட்டமன்ற உரையில், ‘இதுதொடர்பில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும்’ என்று தெரிவித்திருக்கிறார். ஆளுநர்கள் மரபை மீறி தங்களுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தும் போக்கு அதிகரிப்பதற்கான திமுக அரசின் எதிர்வினை இது.
தமிழக ஊடகங்களில் பேசப்படவில்லை என்றாலும்கூட, சமீபத்தில் நடந்த தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் மாநில அரசின் பரிந்துரையானது ஆளுநரால் புறந்தள்ளப்பட்டது உயர்மட்ட அளவில் பேசப்படக்கூடியதாகவே இருக்கிறது.
துணைவேந்தரைத் தேர்ந்தெடுக்க முத்தரப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. மாநில அரசின் சார்பிலான பிரதிநிதி, ஆளுநரின் சார்பிலான பிரதிநிதி, பல்கலைகழகங்கள் வழி வரும் பொது பிரதிநிதி என்று இப்படி அமைக்கப்பட்ட பிரதிநிதிகள் குழுவானது பேராசிரியர் அ.ராமசாமியைப் பரிந்துரைத்ததாகத் தெரிகிறது. அதாவது, முந்தைய ஆளுநரால் நியமிக்கப்பட்ட பிரதிநிதியும்கூட தமிழக அரசின் பிரதிநிதி தேர்ந்தெடுத்தவரையே துணைவேந்தர் பதவிக்குப் பரிந்துரைத்திருக்கிறார்.
புதிதாக ஆளுநராக வந்த ஆர்.என்.ரவி, இந்தப் பரிந்துரையை ஏறக்கட்டிவிட்டு தன்னுடைய விருப்பத்தின்பேரில் வி.திருவள்ளுவனை நியமித்திருக்கிறார். முந்தைய அதிமுக ஆட்சியின்போது எப்படி ஆளுநரின் கை நீண்டதோ அப்படியே இந்த திமுக ஆட்சியிலும் ஆளுநரின் கை நீள்கிறது. முந்தைய அதிமுக அரசுபோல, இப்போதைய திமுக அரசு இதை அமைதியாகப் பார்த்திருக்காது என்பதை வெளிப்படுத்தும் விதமாகவே முதல்வர் ஸ்டாலினின் இந்நகர்வைப் பார்க்க வேண்டியிருக்கிறது.
இந்த மோதல் தமிழ்நாட்டில் மட்டும் இல்லை. பாஜக ஆளாத மாநிலங்களான வங்கத்திலும், மகாராஷ்டிரத்திலும், கேரளத்திலும்கூட ‘பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசின் கீழ் முழுமையாகக் கொண்டுவரப்பட வேண்டும்; பல்கலைக்கழக வேந்தர்கள் பதவியில் இனி ஆளுநர்களுக்குப் பதிலாக முதல்வர்கள் என்ற நிலையை உருவாக்க சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும்’ என்ற குரல்கள் ஒலிக்கின்றன. மாநிலங்கள் தனித்தனியே தீர்மானங்களை நிறைவேற்றி இது ஆகும் காரியம் இல்லை; பல தசாப்தங்களுக்கு முன்பு ஆந்திராவில் என்.டி.ராமாராவ் இப்படியொரு முயற்சியை முன்னெடுத்து அது சாத்தியப்படாமல்போனது இங்கு நினைவுகூரத்தக்கது.
அரசியல் கட்சிகளின் நேரடிப் பிரதிநிதிகளாக மாநில முதல்வர்கள் இருக்கிறார்கள்; அவர்கள் கைகளில் துணைவேந்தர் நியமனம் இருப்பதைக் காட்டிலும், அரசியல் சார்பற்ற ஆளுநர்களின் கையில் அந்த அதிகாரம் இருந்தால் பல்கலைக்கழகங்கள் மேலும் சுதந்திரமாகச் செயல்பட முடியும்; துணைவேந்தர்கள் அதிகாரத்தோடு செயல்படுவார்கள் என்ற நம்பிக்கையிலேயே இப்படி ஓர் ஏற்பாட்டுக்கான நியாயம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
முக்கால் நூற்றாண்டு அனுபவம் நமக்கு எதைச் சொல்கிறது என்றால், தில்லியை ஆள்வது காங்கிரஸோ பாஜகவோ எதுவாயினும், அவர்களுடைய நிழல் அதிகார மையமாகவே ஆளுநர் மாளிகைகள் செயல்படும்; அரசியல் சார்பற்றவர் ஆளுநர் என்று ஒருவரை இந்தியாவில் கூறுவது அபத்தம் என்பதையே ஆகும். காலப்போக்கில் சீரழிவுகள் மிகுந்து, துணைவேந்தர் பதவிகள் பல கோடிகளுக்கு விற்கப்படுவதும் அதில் ஆளுநர்கள் கையிருப்பதுமான குற்றச்சாட்டுகளும்கூட மலிந்துவிட்ட காலகட்டத்தையும் நாம் பார்த்துவிட்டோம். இத்தனைக்குப் பிறகும் பல்கலைக்கழங்களின் வேந்தர்களாக ஆளுநர்கள் நீடிப்பதில் எந்த நியாயமும் இல்லை.
இந்தியா போன்ற பரந்து விரிந்த ஒரு கூட்டாட்சியில் பள்ளிக்கூடங்கள் முதல் பல்கலைக்கழகங்கள் வரை எல்லாவற்றிலும் ஒன்றிய அரசு தலையைத் திணித்துக்கொண்டு உருட்டுவது அவலம் என்பதைக் காட்டிலும் அற்பத்தனம் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். கல்வித் துறையின் அதிகாரமானது மாநிலங்களின் பட்டியலுக்குள்ளும், அதிலிருந்து உள்ளாட்சிகள் - அந்தந்தக் கல்வி நிறுவனங்களுக்கும் என்று பகிர்ந்தளிக்கப்பட வேண்டியதோடு சேர்த்தே இந்த விவகாரத்தை அணுக வேண்டியிருக்கிறது. அப்படியிருக்க பல்கலைக்கழக வேந்தர் பதவியில் ஆளுநர்களுக்குப் பதில் முதல்வர்கள் தம்மை இருத்திக்கொள்ள முற்படுவதும் கல்வித் துறைக்கு அழகு சேர்ப்பது இல்லை.
நம்முடைய கல்வி நிலையங்கள் உண்மையில் அதிகாரமிழந்து, தொலைநோக்கோ கற்பனையோ கனவுகளோ இல்லாமல் சீரழிந்துகொண்டிருக்கும் காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்; கல்வியாளர்களுக்கு உரிய அதிகாரம் இல்லாததும் இதற்கான முக்கியமான காரணம். இப்படி ஒரு மோசமான சூழலை உருவாக்கியதில் மாநில அரசுகளின் பங்கை எவரும் மறுத்துவிட முடியாது.
ஆகையால், மாநில அரசு - ஒன்றிய அரசு இடையிலான அதிகாரப் பகிர்வோடு சுருக்கிடாமல் கல்வித் துறைக்கான அதிகாரப் பகிர்வையும் கூட்டாட்சி எல்லைக்குள் நாம் சிந்திக்க வேண்டும். இதற்குக் கல்வி நிறுவனங்களின் தலைவர்கள் சுயாதீனமாக இயங்கத்தக்க அரசமைப்புசார் பாதுகாப்பு ஏற்பாட்டை நோக்கி நாம் நகர வேண்டும். வேந்தர்களாகக் கல்வியாளர்களே அமர்த்தப்படட்டும்; அவர்களைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் மாநில அரசுகளை வந்தடையட்டும். முதல்வர் ஸ்டாலின் இந்த விவகாரத்தை தமிழ்நாட்டோடும் மாநில உரிமைகளோடும் நிறுத்திவிடாமல், கல்வித் துறை சுயாட்சியையும் உள்ளடக்கிப் பேசும் ஒரு செயல்திட்டத்தோடு தேசிய அளவிலான கூட்டாட்சி விவாதமாக முன்னெடுக்க வேண்டும். கூட்டாட்சியின் ஆன்மா ஒவ்வொரு அமைப்பின் சுயாட்சியோடும் பிணைந்திருக்கிறது.
7
3
பின்னூட்டம் (4)
Login / Create an account to add a comment / reply.
S Senthil kumar 3 years ago
புதிதுபுதிதாக பல்கலைக்கழகங்களை உருவ க்குவதொடு ஒன்றிய மற்றும் மாநில அரசின் கல்வி சார்ந்த பொறுப்புகள் முடிந்துவிடவில்லை . தேர்ந்த கல்வியளர்களை பணியில் அமர்த்தி சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பதின் மூலமே , தற்போதுள்ள " " "படித்தல்" என்ற சுருங்கிய புரிதல்லிலருந்து "கல்வி" என்ற கருத்தாக்கத்திற்கு சமூகத்தை, மாணவர்களை நகர்த்த முடியும். இரு அரசுகளையும் இடித்துரைத்து, பொறுப்புகளை சுட்டியதனாலும், கல்வியில் கூட்டாட்சியின் முக்கியத்துவத்தை கூறியதாலும் இக் கட்டுரை முக்கியத்துவம் பெறுகிறது. சௌ. செந்தில் குமார், M.D திருச்சிராப்பள்ளி.
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
Renganathan 3 years ago
கல்வியில் சிறந்த தமிழ்நாடு திசை மாறாமல் பயணிக்கவேண்டும். அதற்கான வழிகாட்டுதலை உங்கள் கட்டுரை எடுத்து இயம்புகிறது. நன்றி ஆசிரியருக்கு. ----அட்சயன்.
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
Umamaheswari 3 years ago
மிக முக்கியமான கட்டுரை ... கல்வி மாநிலப் பட்டியலுக்கு வர வேண்டும் ..
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
Hariharan 3 years ago
நல்ல தொடக்கமாக அமையட்டும்..
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.