கலை, கவிதை, இலக்கியம் 5 நிமிட வாசிப்பு

மாயக் குடமுருட்டி: விந்து நீச்சல்

ஆசை
23 Jul 2023, 5:00 am
0

ஓவியங்கள்: ஜோ. விஜயகுமார்

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்

                   - திருவள்ளுவர்

1. தணல்நீச்சல்

மாயக் குடமுருட்டி
மனமெல்லாம் தீயுருட்டி
சொல்லைப் பஞ்சுருட்டி
உள்ளெறிந்தேன் பொறிபரப்பி
மூடுதிசை நீறுபூக்க

வெளியே நீ துருத்தி
வளியே கொண்டு
உன் அலகிலா வாய்பொருத்தி
குப்பென்று குப்பென்று
ஊதுக நீ உலைத்தீ

தமிழே நீ தனியுருட்டி
தன்னடனம் தான்சுழற்றி
விரிவாய் விண்பரப்பி
என் கவியுள் பொன்பரப்பி

காவிரியே நீ தனிமயக்கி
கால்பாவும் இடமெல்லாம்
வாவாவென்று நீயழைக்க
போபோவென்று நான் மறுக்க
உன்னுள் கரைந்தோடுகிறது
என்னிடம் சேராத
என் நீச்சல்

வாழ்வே நீ
தணல் தாங்கி
தாங்காக் கணம்
தணலணைக்கும் புனல்தேடி
நீந்துக நீந்துக
அப்படி ஒரு பெருநீச்சல்

2. நீச்சலின் நிர்விகல்ப சமாதி

நானான விந்தே
நீ இருப்பது அப்படியோ
இல்லை நீ
நீச்சலின் நிச்சலனமோ

நானான விந்தேற்ற
என்னம்மை அண்டமே
அங்கேயே முடித்தனையோ
உனை நோக்கிப் பாய்ந்துவந்த
அரும்பெரும் நீச்சலை

தந்தை நீச்சல் அடக்கிய
தாயாறே
விந்தை நீச்சல் உனது
அடித்துச் செல்வதல்ல
விரிந்து சென்று
வெடித்து நிறைவது
அல்லது
துடித்து மறைவது

3. நீர் மறைய நீ மறைய…

     இசையால் அசையும் உடலே,
     சுடர்பரப்பும் விழிவீச்சே
     நர்த்தனத்திலிருந்து
     நர்த்தகரைப் பிரித்தறிவது எப்படி?

                  - டபிள்யு.பி. யேட்ஸ் (1865-1939),
                   ‘Among School Children’
                   கவிதையிலிருந்து...

குழந்தை கேட்கிறான்:
நீச்சல் எங்கே இருக்கிறது
மாஸ்டர்
நீரிலா
என் உடம்பிலா
என் மனதிலா

மாஸ்டர் சொல்கிறார்:
நீரில்தான் நிச்சயம்
இருக்கிறது
உடலைத் தூண்டில் போட்டு
மனதைக் கரையில்
உட்கார வைத்து
நீச்சலைப் பிடிக்க வேண்டும்
நீச்சல் உன்னைப்
பேராசையுடன் கவ்வும்
அப்படியே விழுங்கும்
நரம்பை இழுத்துக்கொண்டே
நீரில் மேலும் கீழும்
நாற்றிசையும்
வலம் வரும்
அதன் வயிற்றிலிருந்து
கரையை வேடிக்கை பார்ப்பாய்
நீரின் மனதை வேடிக்கை பார்ப்பாய்
உன் மனதும் நீரின் மனதும்
ஒன்றெனக் காண்கையில் 
நீரின் மனதைக் காண்பாய்
அப்போது கரையில்தான்
நீச்சல் உள்ளது என்பதையும்
அதை நீரின் மனம் கொண்டு
பிடிக்க வேண்டும் என்பதையும்
உணர்வாய்
கரையில் உள்ள நீச்சலைக்
கடைசியில் பிடிப்பதுதான்
உன் இலக்கு

குழந்தை சொல்கிறான்:
குழப்புகிறதே மாஸ்டர்
நீரில்
கரையில்
என்று மாற்றி மாற்றிச் சொல்கிறீர்களே
நான் நீந்தாமல்
இருக்கும் போது
நீச்சல் எங்கே இருக்கும்

மாஸ்டர் சொல்கிறார்:
நீந்தும்போதே நீச்சல் தோன்றுகிறது
நீரும் தோன்றுகிறது
நீயும் தோன்றுகிறாய்
நீச்சல் மறையும்போது
நீரும் மறைய
நீயும் மறைந்துவிடுவாய்

4. புதிய கடல்

குழந்தை கேட்கிறான்:
ஆமாம் நீங்கள் யார் மாஸ்டர்

மாஸ்டர் சொல்கிறார்:
நானா
நீச்சல் மறக்கக் கற்க
முயல்பவன்
என் நீச்சலை
ஒவ்வொருவருக்கும் மொண்டு ஊற்றி
எனக்குள் இருக்கும் தரை காண
விரும்புகிறேன்
தரைதட்டிக் கிடக்க விரும்புகிறேன்
அதன் பின் என் மேல்
ஆழிப்பேரலை அடித்தாலும் கவலையில்லை
புதிய கடல் என் மேல் தோன்றினாலும்
கவலையில்லை
எனக்கு நானே சொல்லிக்கொள்வேன்
நான் புதிய கடலின் ஆழ்மனம் என்று
பழைய கடல் எனக்கு வேண்டாம்
நீரின் தொன்மமாய்
கடலின் தொன்மமாய்
உடைந்து மூழ்கிய கப்பலுக்குப் பக்கத்தில்
கதைபேசிக்கொண்டிருப்பேன்
நீந்தாமல்
சாகாமல்
மிதக்காமல்
மூச்சில்லாமல்
நீரடிக் கனவாவேன்

5. சட்டையைக் காப்பாற்றுங்கள்

குழந்தையும் மாஸ்டரும்
பேசுவதைப் பார்த்துக்கொண்டிருந்த நான்
தத்தளிக்க ஆரம்பித்தேன்
ஏதோ ததும்பியது என்னுள்

அவரிடம் போய்க் கேட்டேன்
‘நீச்சலை ஏன் மறக்க வேண்டும்
என்று முயல்கிறீர்கள்’

‘நீச்சல் என்னையும் சாக விடாது
பிறரையும் சாக விடாது’

‘அதற்காகத்தானே நீச்சல்’

‘சில சமயம் நீச்சலை விட
சாவு முக்கியம்’

‘எப்போதிருந்து முயல்கிறீர்கள்
நீச்சலை மறக்க’

‘தற்கொலைக்காக ஆற்றின் பெருவெள்ளத்தில்
குதித்து மிதந்து வந்த ஒரு பாட்டியைக்
காப்பாற்றியதிலிருந்து’

‘ஆ! ஆற்றின் பெயர்’

‘பாமணியாறு’

‘நீச்சலை நீங்கள்
மறக்க முடியாது மாஸ்டர்
நீங்கள் அன்று சட்ரஸின் மேலே
அவிழ்த்துப் போட்ட சட்டை கரைந்து
அதன் நிறம்
நீங்கள் நீச்சல் சொல்லித்தரும்
ஒவ்வொரு குளத்திலும் கலந்திருக்கிறது
அதைத் தூக்கிக் கரையில்
போட முடியுமா என்று பாருங்கள்
ஒரே ஒரு முறை
உங்கள் சட்டையைக் காப்பாற்றுங்கள் மாஸ்டர்
உங்களுக்கு நீச்சல் மறந்துபோய்விடும்’

6. குளம் பேசியதாவது

மாஸ்டர் மாஸ்டர்
நான் ஒண்ணு சொன்னா
நீங்க தப்பா எடுத்துக்க மாட்டீங்களே

தப்பா எடுத்துக்க மாட்டேன்டா
கண்ணு

நான் ஒரு நிமிஷம்
இந்தக் கம்பியைப் பிடிச்சிக்கிட்டே
ஓரமா நிப்பேனாம்
அப்புறமா நீந்துவேனாம்

போடா டைனோசர் மண்டையா
என்று சொல்லித்
தூக்கித் தண்ணீரில் வீசுகிறார் மாஸ்டர்

இந்த நாடகம் கண்டு
குபீரென்று சிரிக்கும்
மற்ற பிள்ளைகளின் அம்மாக்கள்
நாளைக்கும் இதே நேரத்தில்
வாடா குழந்தை
என்று கேட்டுக்கொள்கிறார்கள்
தினமும் இதே கெஞ்சல்
இதே வீசல்
அப்புறம் தத்தளிப்பு
தத்தளித்தே
நீச்சல் குளத்தின் மறுமுனையை
அடைகிறான் குழந்தை
மறுபடியும் கெஞ்சல்
மறுபடியும் மாஸ்டர் தூக்கியெறிய
மறுபடியும் தத்தளித்து மறுமுனை

தான் செய்தது
தத்தளிப்பு என்று நினைத்து
ஓரக் கம்பியைப் பிடித்து
நடுங்கிய
குழந்தையை
அது நீச்சல்தான் என்று நம்ப வைக்க
நீச்சல் குளம் பேசியதாவது:

‘தத்தளிப்புதான் நீச்சல் குழந்தை
ஆனால்
தத்தளிப்பு நீச்சல் இரண்டையும் பிளந்து
நடுவே அச்சத்தின் வெள்ளம்
கரைபுரண்டோடுகிறது
முதலில் தத்தளிப்பிலிருந்து
நீச்சல் நோக்கி நீந்து
மறுமுனை தொட்டுத் திரும்பிப்
பார்த்தால்
உன் தத்தளிப்பு தரை வறண்டு கிடக்கும்’

7. அல்லிக்குப் பெயர் வைப்பாயா

இந்தச் சிற்றேரி கண்டதும்
அதன் அல்லி தாமரை இலைகள் மூடிய
அழுக்கு நீர்ப்பரப்பைக் கண்டதும்
தாவக் குதிக்கத் துடிக்கிறது மனம்
நடுவே இலைகளற்ற நீர்வழியில் நடந்துசென்று
கைகளை விசிற ஆரம்பிக்கிறேன்
தொடர்ந்து அடித்துவிட்டுத்
தரையில் கால்வைக்காமல்
நிமிர்ந்து பார்க்கிறேன்
நேரத்தில் கடந்தது நொடிகளா ஆண்டுகளா
தெரியாது
தூரத்தில் மிகச் சில அடிகளே
ஆனாலும் அது நீச்சல்
சிரமப் பிரசவம்
ஆனாலும் அது குழந்தை

அப்போதுதான் பிறந்து
பிறந்தவுடனே அவ்வேரியின்
பவள அல்லி நிறம் சூடிய உதடுபிளந்து
கேட்டது அக்குழந்தை:
நேரத்தையும் தூரத்தையும்
ஒரே சமயம்
ஒரே அளவில் கடக்க முடியாதா

மேலும் கேட்டது:
அப்படிக் கடந்து நீ பறிக்கும் அல்லிக்கு
நீச்சல் என்று பெயர் வைப்பாயா

8. மீன்குஞ்சு

ஆற்றில் பிடித்த சின்ன மீனையெல்லாம்
கிணற்றில் விட்டுவா
என்றீர்கள் சித்தப்பா
கிணறுவரை போய்விட்டுத்
திரும்பி வந்து
நடுவிலா ஓரத்திலா
என்று உங்களைக் கேட்டதற்கு
கிணற்றில் இறங்கி
அடித் தரையில் என்றீர்கள் சித்தப்பா
மீன் குஞ்சுக்கு
நீந்தக் கற்றுக்கொடுக்க வேண்டாம்
என்று எனக்கும் தெரியும் சித்தப்பா
ஆனால் ஆற்று மீனுக்குக்
கிணற்றைக் கற்றுக்கொடுக்க வேண்டுமா
வேண்டாமா என்று
எனக்குத் தெரியவில்லையே சித்தப்பா
எனக்கு இன்றுவரை யாரும்
கிணற்றையும் ஆற்றையும்
கற்றுக்கொடுக்கவில்லையே சித்தப்பா

9. சாம்பலின் நீந்தல்

நீச்சல் தெரிந்திருந்தாலும்
குடமுருட்டியிடம் தோற்றபின்

முதல் பாதி வாழ்க்கையின்
வடவாற்றிலும் சரி
இரண்டாம் பாதி
பாமணியாற்றிலும் சரி
எந்த ஆற்றிலும் நீந்தவே இல்லை
அந்தச் சிறுவன்

ஆழம் குறைந்த
ஓரக் கரையில்
தலைமூழ்கி
எழுந்துவருவதோடு சரி

பாதி நீச்சலைக்
குடமுருட்டி
கொண்டுபோக
மீதி நீச்சலைத்
தன்னிடமே வைத்திருந்தான்

வா வா
என்னிடம் உள்ள
நீண்ட பாத்திரம் கொண்டு
உன் குறைநீச்சலை
அளந்து அளந்து
பார்க்கிறேன்
என்று
எத்தனையோ முறை
அத்தனை ஆறுகளும் கெஞ்சியபோதும்
அந்தக் குரல்கள் நுழையாமல்
தன் செவிகளைத்
தன்னக்கட்டிக்கொண்டான்

தன் பிள்ளைகளிடம்
சொன்ன கதையில் மட்டும்
குடமுருட்டியில்
இறுதிவரை நீந்திக்கொண்டிருந்தான்
அவன்

தலைமுறைகளின்
நீச்சலைத்
தன் பிள்ளைகளை விட்டுக்
காவு வாங்கிவிட்டாள்
காவிரி

எந்த நீச்சலையும் விட
தன் விந்து நீச்சலின் வேகம்
தன்னைக் கடந்தும்
சென்றுகொண்டே இருக்க வேண்டுமென்பதில்
காவிரியையும் மிஞ்சி
அவனையே அறியாத பிடிவாதம்
அவனுக்கு

வடவாற்றில் அவன் சாம்பலை
அவன் பிள்ளைகள் கரைத்துவிட்டு
அங்கேயே குளித்தபோது
சாம்பலிலிருந்து
மீதி நீச்சலை
இழை பிரித்துக்
காவிரி எடுத்துக்கொண்டாள்

கரைதூக்கிப் போட்டுக்
காப்பாற்ற வாகாய்ப்
பற்றுதற்கென்று
கற்றை முடியேதுமில்லா
சாம்பல் அது

கரைத்த தலையிலும்
மொத்த முடியை
எடுத்துச் சென்ற சாம்பல் அது

கடலுக்குப் போகாமல்
வழியிலேயே சுவறிப்போகும்
வடவாறு
அவன் செவியின் மந்திரத்தை
யாரிடம் போய்ச் சேர்த்திருக்கும்

இனி தொடரும் தலைமுறைகளின்
வழிவழி
தொடருமே
சாம்பலின் நீந்தல்

       (வடவாறு: தென்பெரம்பூரில்
       வெண்ணாற்றிலிருந்து வெட்டாறு,
       வெண்ணாறு, வடவாறு ஆகிய
       மூன்று ஆறுகள் பிரிகின்றன.
       இதில் வடவாறு மூவர்கோட்டை
       என்ற ஊரில் கண்ணனாறு
       என்றும் வடவாறு விஸ்தரிப்பு
       என்றும் பிரிகிறது. அந்த
       இடத்தைத் தாண்டியும் வடவாறு
       விஸ்தரிப்பு உள்ளூர் மக்களால்
       வடவாறு என்றே அழைக்கப்படுகிறது).

10. பனிக்குடப் பெருங்கடல்

பனிக்குட முருட்டிய
என்னைக் கரையில்
இழுத்துப் போட்டது
எவர் கைகள்

இழுத்துப் போட்ட
கரையில்தான் தவிக்கிறேன்
தத்தளிக்கிறேன்

பனிக்குட நீர்ப்பரப்பின்
சிறைவைக்கும்
ஓரிடச் சுழிப்பிலிருந்து
ஒரே நேரம்
எல்லாத் திசையிலும்
இழுக்கும் சுழிப்புக்குள் வந்து
ஆட்படுவேன் என்று
கருவில் கூட நினைத்துப்
பார்த்ததில்லை

என்னை இழுத்து வெளியில் போட்டது
எவர் கை
அவர் கை தேடுகிறேன்
வெகுகாலமாய்

இப்போதுள்ள பனிக்குடமும்
உடைந்தால்
எச்சுழிப்புள் அக்கை கொண்டுசேர்க்குமோ
அதனுள்ளும் நீச்சல்போடக்
கற்றுத்தருகிறேனென
காணும் ஆறுகுளமேரிகடலெல்லாம்
கைதட்டி அழைக்கச்
செவிபொத்தி நடக்கிறேன்

பனிக்குடப் பெருங்கடல் தாண்டி
நீந்துவர் நீந்தார்
மாயக் குடமுருட்டி மனமாகி
உலகு காண்பர்

11. நீரல்ல வாழ்வல்ல

இழுத்துப் போட்ட கை
காணவில்லை
கரையில் வந்து விழுந்த 
மீன் காணவில்லை

இழுத்த விசை
அப்படியே
இருக்கிறது

அது தலைமுறை
தலைமுறையாய்
மயிர் பற்றி
இழுத்து வெளியில்
போடுகிறது வாழ்வை

நீரல்ல
வாழ்வல்ல
விசைதான் குடமுருட்டி

12. நீந்துபுனல்

பிறப்பு
ஒரு நீச்சல் மறதி
இறப்பு
அந்த மறதியின்
முகத்துவாரம்

           (தொடரும்...)

 

தொடர்புடைய கவிதைகள்

மாயக் குடமுருட்டி
மாயக் குடமுருட்டி: அவட்டை
மாயக் குடமுருட்டி: அண்ணன் பெயர்
மாயக் குடமுருட்டி: பாமணியாறு
மாயக் குடமுருட்டி: ஆயிரம் பாம்பு கொன்ற அபூர்வ சிகாமணி

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
ஆசை

ஆசை, கவிஞர், பத்திரிகையாளர், மொழியியலர். ‘க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி’யில் துணை ஆசிரியராகப் பங்களித்தவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் நடுப்பக்க ஒருங்கிணைப்பாளராகச் செயலாற்றியவர். தற்சமயம், ‘சங்கர்ஸ் பதிப்பக’த்தின் ஆசிரியர். ‘கொண்டலாத்தி’, ‘அண்டங்காளி’ ஆசையின் குறிப்பிடத்தக்க கவிதைத் தொகுப்புகள். தொடர்புக்கு: asaidp@gmail.com


1






பாகிஸ்தான்ஒரியன்டலிஸம்பாத பாதிப்புகுஜராத் கல்விவியூகம்புத்தகம்மூக்கில் நீர் வடிதல்விதி எண் 267தொழில்நுட்பமும் அடியாள் பலமும்ஸரமாகோவின் உலகில் ஒரு வழிகாட்டிதாழ்வுணர்வு கொண்டதா தமிழ்ச் சமூகம்?வினோத் காப்ரிகே.வி.மதுசூதனன் கட்டுரைசிப்கோ ஆந்தோலன்அனுபவக் குறைவுஉலகம்மாவோசமஸ் - ஜெயலலிதாதனிநபர் வருமான வரிஉங்கள் மொபைல் எண்ணின் விலை எவ்வளவு தெரியுமா?உணவுப் பழக்கம்அராத்து கட்டுரைஅன்வர் ராஜா சமஸ் பேட்டிஉதயசூரியன்முலாயம் சிங் யாதவ்பற்கள்பொன்னியின் செல்வன்ஜெயமோகன் பாலசுப்ரமணியம் முத்துசாமிஎன்னைத் தூக்கில் போடுங்கள்: வி.பி.சிங்இயம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!