கட்டுரை, கல்வி, நிர்வாகம் 7 நிமிட வாசிப்பு
புள்ளியியல் மேதமை பி.சி.மஹலாநோபிஸ்
இந்தியாவின் ஐந்தாண்டு திட்டங்களுக்கு அரிய பங்களிப்பை ஆற்றியவர் பிரசாந்த சந்திர (பி.சி.) மஹலாநோபிஸ். அவருடைய அரிய சேவையை அங்கீகரிக்கும் விதமாகமாகவே ஜூன் 29 நாளைத் தேசிய புள்ளி விவரண நாளாக நாம் கொண்டாடி வருகிறோம். புள்ளிவிவரங்களைச் சேகரிப்பதையும் தொகுத்து ஆய்வு செய்வதையும் ஒரு கலாச்சாரமாகவே வளர்த்து இடைவிடாமல் உரம் ஊட்டியவர் மஹலாநோபிஸ். கடந்த ஜூன் 28, அவர் இயற்கை எய்திய ஐம்பதாவது ஆண்டு நாளாகவும் அமைந்துவிட்டது. தரவுகள் சேகரிப்பு, பராமரிப்பு, பயன்பாடு, தரவுகளின் தரம் தொடர்பாக பல்வேறு கவலைகளும் அச்சங்களும் எழுந்துள்ள இச்சமயத்தில், அவருடைய வாழ்க்கையில் நிகழ்ந்த சில சம்பவங்களை நினைத்துப் பார்ப்பது பொருத்தமான நினைவாஞ்சலியாக இருக்கும்.
தேசிய வளர்ச்சிக்கும் மனிதவள ஆற்றலின் முன்னேற்றத்துக்கும் திறமையான திட்டமிடல் அவசியம் என்று மஹலாநோபிஸ் நம்பினார். பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் பெற்ற புதிய நாடான இந்தியாவுக்கு, வெவ்வேறு கள ஆய்வுகள் மூலம் பெற்ற தகவல்களே 1950களில் ஆதாரத் தரவுகளாக இருந்தன.
தன்னுடைய தனிப்பட்ட திறமையையும் இடையறாத ஆர்வத்தையும் கலந்து, கிடைத்த தரவுகளைத் துல்லியமாக ஆராய்ந்து மிகச் சிறப்பான முடிவுகள் வர மஹலாநோபிஸ் காரணமாக இருந்தார். அன்றைக்கு இருந்த சமூக – பொருளாதாரச் சூழலும், திட்டமிடலை வெற்றிகரமாக மேற்கொள்ள மஹலாநோபிஸை பிரதமர் ஜவாஹர்லால் நேரு பெரிதும் சார்ந்திருந்ததும் அவருடைய சிறப்பான பங்களிப்புக்கு நிச்சயம் உதவின.
தாகூருடனான நெருக்கம்
ரவீந்திரநாத் தாகூரின் விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தின் நூறாவது ஆண்டு காலத்தில், அந்தப் பல்கலைக்கழகம் தோன்றிய காலத்தில் அதன் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் பெரிதும் உதவியவர்களில் ஒருவரான மஹலாநோபிஸின் பங்களிப்பையும் அவருக்கும் கவியரசர் ரவீந்திரநாத் தாகூருக்கும் இடையிலான தொடர்பு எப்படிப்பட்டது என்பதையும் அறிவது மிகவும் சுவாரசியம் அளிப்பதாக அமையும். தாகூரும் மஹலாநோபிஸும் தாங்கள் எடுத்துக்கொண்ட செயலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக உழைக்கும் திடமான மனவுரம் வாய்ந்தவர்கள்.
தாகூரைவிட மஹலாநோபிஸ் 32 வயது இளையவர் என்றாலும், அவரைத் தன்னுடைய நெருக்கமான தோழராகவே நடத்தினார் தாகூர். இருவருக்கும் இடையிலான நட்பும் முப்பதாண்டுகளுக்கு மேல் தொடர்ந்தது. “தாகூர் எனக்கு குருநாதர் அல்ல - அவரை மனதார மிகவும் நேசிக்கிறேன் என்பதே பொருத்தமாக இருக்கும்” என்று தன்னுடைய வருங்கால மனைவி ராணியிடம் கூறியிருக்கிறார் மஹலாநோபிஸ்.
புள்ளியியல் துறை மீது தற்செயலான ஈடுபாடு
புள்ளியியல் (ஸ்டேட்டிஸ்டிக்ஸ்) துறை தொடர்பாக மஹலாநோபிஸுக்குத் தற்செயலாகத்தான் தெரியவந்தது என்பது வியப்புக்குரியது. 1915இல் இங்கிலாந்திலிருந்து இந்தியா திரும்புவதற்கான அவருடைய பயணம் தாமதமானபோது இது நிகழ்ந்தது. கல்கத்தா மாகாண (பிரசிடென்ஸி) கல்லூரியின் இயற்பியல் துறை பேராசிரியரான மஹலாநோபிஸை, சிறந்த கல்வியாளரும் அறிஞருமான பிரஜேந்திரநாத் சீல் என்கிற வங்கப் பிரமுகருக்கு 1917இல் ரவீந்திரநாத் தாகூர் அறிமுகம் செய்துவைத்தபோது அவரையும் அறியாமல் மஹலாநோபிஸைப் புள்ளிவிவரத் துறை பக்கம் ஈடுபட வைத்துவிட்டார்.
கல்கத்தா பல்கலைக்கழகத்தின் அந்த ஆண்டுத் தேர்வு முடிவுகளை ஆராய்ந்து பகுப்பாய்வு செய்ய முடியுமா என்று மஹலாநோபிஸைப் பார்த்து பிரஜேந்திரநாத் சீல் கேட்டார். உண்மையான தரவுகளைக் கொண்டு கள ஆய்வு செய்யும் முதல் வேலை அங்குதான் அவருக்குத் தொடங்கியது.
சாந்திநிகேதனில் ரவீந்திரநாத் தாகூரை 1910இல் சந்தித்தபோது மஹலாநோபிஸுக்கு வயது 17 மட்டுமே. பிறகு சத்யஜித் ராய் இதுகுறித்து எழுதிய குறிப்பு ருசிகரமானது: “ரவீந்திரநாத் தாகூர் லண்டனுக்கு 1912இல் தன்னுடைய கீதாஞ்சலிக் கவிதைத் தொகுப்பின் ஆங்கில மொழியாக்கத்துடன் வந்தபோது பிரசாந்த சந்திர மஹலாநோபிஸ், கேதார்நாத் சட்டோபாத்தியாய, என்னுடைய தந்தை சுகுமார் ராய் ஆகியோர் அவரை வரவேற்றனர். ரோதன்ஸ்டீன் இல்லத்தில் நிகழ்ந்த கூட்டம் குறித்து என்னுடைய தந்தை ஒன்றுக்கும் மேற்பட்ட கடிதங்களில் எழுதியிருக்கிறார்.”
மஹலாநோபிஸுக்கும் தாகூருக்கும் இடையிலான நட்பு நாளுக்கு நாள் வலுப்பட்டது. 1919இல், ஜாலியன்வாலாபாக் படுகொலைகளைக் கண்டித்து அன்றைய இந்திய வைஸ்ராய் செம்ஸ்போர்டு பிரபுவுக்குக் கடிதம் எழுதிய தாகூர், பிரிட்டிஷ் அரசு தனக்கு அளித்த சிறப்பு பட்டத்தைத் துறப்பதாக அறிவித்தார். அந்தக் கடிதத்தை அனுப்புவதற்கு முன்னால் மஹலாநோபிஸிடம் தந்து வாசிக்கச் சொன்னார்.
தாகூரின் சர்வதேசப் பயணங்கள் பெரும்பாலானவற்றில் - குறிப்பாக 1920களில் - மஹலாநோபீஸும் உடன் சென்றார். அந்தப் பயணங்களின்போது நிகழ்ந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் எழுத்தில் பதிவுசெய்திருக்கிறார் மஹலாநோபீஸ். ‘பிரபாஷி’ என்ற மதிப்புமிக்க வங்காள இதழுக்கு, ‘ரவீந்திரநாத் தாகூரைப் பற்றிய அறிமுகம்’ எனும் தலைப்பில் அந்தப் பயணம் தொடர்பான கட்டுரைகளை எழுதியிருக்கிறார். 1929இல் கனடா நாட்டுக்கு தாகூர் மேற்கொண்ட பயணம் குறித்து நூலொன்றையும் எழுதினார்.
விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீனை தாகூர் சந்தித்தபோது மஹலாநோபிஸும் உடன் இருந்தார். “போஸ் என்ற பெயரில் உங்கள் நாட்டில் இளம் விஞ்ஞானி ஒருவர் இருக்கிறாராமே?” என்று ஐன்ஸ்டீன் தாகூரிடம் கேட்டார். “ஜகதீஷ் சந்திரபோஸ் விஞ்ஞானிதான்; ஆனால், இளையவர் இல்லையே” என்று தாகூர் வியப்புடன் கூறினாராம். சத்யேந்திரநாத் போஸ் என்று இன்னொரு இளம் விஞ்ஞானி இருப்பதை தாகூரின் கவனத்துக்கு அப்போது கொண்டுவந்தார் மஹலாநோபிஸ் (பிற்பாடு ‘ஹிக்ஸ் - போஸான் துகள்கள்’ ஆராய்ச்சியின் வழி சர்வதேசப் புகழ் பெற்றவர் சத்யேந்திரநாத் போஸ்).
திரைப்படத் துறையையும் தாகூருக்கு அறிமுகம் செய்தவர் மஹலாநோபிஸ். திரைப்படத் தொழில்நுட்பத்தின் தந்தை என்று போற்றப்படுகிறவர் நிதின் போஸ். அவரை 1917இல் போல்பூருக்கு அழைத்துச் சென்று விஸ்வபாரதி மாணவிகளின் நாட்டிய நாடகத்தைத் தொடர்காட்சிகளாக படச்சுருளில் பதிவுசெய்யச் செய்தார் மஹலாநோபிஸ். பிறகு கல்கத்தா மாகாணக் கல்லூரியில் தன்னுடைய இயற்பியல் ஆய்வுக்கூடத்தையே திரைப்படச் சுருள் தயாரிப்புக் கூடமாக்கிவிட்டாராம். 17 நிமிடங்கள் திரையில் ஓடும் அந்தக் காட்சிகளைப் பார்த்து தாகூர் மிகவும் பரவசப்பட்டார்.
மஹலாநோபிஸ் அப்போதுதான் இயற்பியலாளர் என்கிற நிலையிலிருந்து புள்ளிவிவரணராகப் படிப்படியாக ஆனால் உறுதியாக மாறிக்கொண்டிருந்தார். அவருக்கிருந்த இயற்பியல் கல்விப் பின்னணி புள்ளிவிவரண சித்தாந்தத்தைத் துல்லியமாக வகுக்கவும், ஆய்வு, வழிமுறை, ஆய்வு முடிவு ஆகியவற்றின் மீது முழுமையான நம்பகத்தன்மையை ஏற்படுத்தவும் பேருதவியாக இருந்தது.
கல்கத்தா மாகாணக் கல்லூரியின் பேக்கர் ஆய்வகத்திலேயே புள்ளிவிவரண ஆய்வகப் பிரிவையும் மஹலாநோபிஸ் ஏற்படுத்தியிருந்தார். அந்த ஆய்வகத்துக்கு தாகூர் சில முறை நேரில் சென்றிருக்கிறார். ‘புள்ளிவிவரம்’ என்ற வார்த்தைக்கு இணையான வங்க மொழிச் சொல், ‘ராஷிபீஜனன்’. அதை உருவாக்கியவரே தாகூர்தான். மஹலாநோபிஸ் மீது அவருக்கிருந்த பற்றே இந்தப் பெயரிடலுக்கு முக்கியக் காரணம்.
புள்ளிவிவரணத் துறைக்காகவே 1933இல் ‘சங்கியா’ என்ற பெயரில் தனி இதழைக் கொண்டுவந்தார் மஹலாநோபிஸ். இரண்டாவது தொகுப்பின் முதல் அத்தியாயத்தில் புள்ளிவிவரம் என்பதற்கு தாகூர் கவித்துவமாகவே விளக்கம் அளித்திருக்கிறார். “நேரம் – இடம் என்ற பெருவெளியில் எண்களின் நாட்டிய ஜதிகளே புள்ளிவிவரங்கள்; அங்கே ‘தோன்றும்’ தகவல்கள் ‘மாயை’, தரவுகள் சேரச்சேர அவை மாறிக்கொண்டேயிருக்கும், அது இடையறாமல் நடக்கும், தகவல்கள் மாறும், காட்சி மட்டும் தொடரும்” என்று வர்ணித்திருக்கிறார்.
விஸ்வபாரதியில்…
விஸ்வபாரதி என்ற கவிஞரின் லட்சியத் திட்டம் கைகூட மஹலாநோபிஸ் பெரிதும் உதவியிருக்கிறார். விஸ்வபாரதியின் இணைச் செயலராக, தொடங்கிய முதல் பத்தாண்டுக் காலம் பதவி வகித்துள்ளார். நிர்வாகக் குழு, செயற்குழுப் பேரவை, பாடத்திட்டக் குழு, வேளாண்மை வாரியம் ஆகிய அனைத்திலும் உறுப்பினராக இருந்து ஆலோசனைகள் கூறியதுடன் திட்டங்களை வகுத்துச் செயல்பட வைத்திருக்கிறார். தாகூரின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை ஆண்டுவாரியாக – ஒன்றுவிடாமல் – தொகுத்ததில் மஹலாநோபிஸின் பங்களிப்பு பிரமிக்க வைக்கிறது. நிகழ்ச்சிகளின் தொகுப்பிலும், பிரபல வங்க எழுத்தாளர் பிரபாத் குமார் முகோபாத்யாய் தயாரித்த நூல் பட்டியலிலும் இருந்த சில பிழைகளைக்கூட கவனித்து திருத்தியிருக்கிறார் மஹலாநோபிஸ்.
தான் எழுதிய கவிதைகள், உரைநடைகள், நாடகங்கள் போன்றவற்றில் சில மாற்றங்களைச் செய்தவுடன் மூலப் பிரதியை அழித்துவிடுமாறு கூறுவாராம் தாகூர். மஹலாநோபிஸ்தான் தலையிட்டு அவற்றையெல்லாம் பத்திரமாக பாதுகாக்க வேண்டும் என்று கூறி, பாதுகாக்கச் செய்தாராம். ஒரு கவிஞனின் மனநிலைக்கும் - எந்த மாற்றத்துக்கும் காரணம் தெரிய வேண்டும், எந்தத் தகவலையும் விட்டுவிடக் கூடாது என்ற புள்ளிவிவரத் தரவு நிபுணரின் மனநிலைக்கும் உள்ள மாற்றத்தையும் இது சுட்டிக்காட்டுகிறது. எதையும் விவரமாகவும் துல்லியமாகவும் தயாரிக்க வேண்டும் என்ற உள்ளார்ந்த வேட்கை மஹலாநோபிஸுக்கு இருந்தது. ஐந்தாண்டு திட்டங்களுக்கு அவர் நடத்திய ஆய்வுகளும் தரவு சேகரிப்புகளும் இதற்குச் சான்றுகள்.
தாகூர் இயற்றிய ‘வசந்தம்’ என்ற நாட்டிய நாடகம், மஹலாநோபிஸின் திருமண நாளன்று கல்கத்தா பல்கலைக்கழகத்தில் அரங்கேற்றப்பட்டது. அந்த நாட்டிய நிகழ்ச்சிக்குப் பிறகு மஹலாநோபிஸின் திருமண நிகழ்ச்சிக்கு சென்று மணமக்களை வாழ்த்தினார் தாகூர். ‘வசந்தம்’ என்ற அந்த நாட்டிய நாடகத்தின் கையெழுத்துப் பிரதியையே மணமக்களுக்குத் திருமணப் பரிசாகவும் வழங்கினார். அவ்விருவருக்கும் இடையிலான உறவு மிகவும் தனித்துவமானது.
இந்தியாவுக்குச் செழுமையான புள்ளிவிவரப் பின்புலத்தை ஏற்படுத்தவும் நம்பிக்கையான தரவு சேகரிப்பு – ஆய்வுமுறை ஆகியவற்றை உருவாக்கவும் தாகூருடனான அவருடைய தொடர்பு ஏற்படுத்தித் தந்த உற்சாகம் பாய்ச்சிய ஒளி வெள்ளமும் ஒரு காரணமாக இருந்திருக்கக்கூடும். மஹலாநோபிஸின் மறைவுக்குச் சில பத்தாண்டுகளுக்குப் பிறகும்கூட அவர் வகுத்த வழிமுறைகள் மிகச் சிறப்பாகவே செயல்பட்டன.
தரவுகள் எப்போதும் பல மடங்காக வளர்ந்துகொண்டே செல்லக்கூடியவை என்பதை மறுக்கவே முடியாது. தரவு அறிவியல் வளர்ச்சி அடைய அந்தத் துறையே பல்வேறு மாற்றங்களைச் சந்தித்துவருகிறது. மாறிவரும் சூழலுக்கேற்ப ஒருவர் தன்னையும் மாற்றிக்கொள்ள வேண்டும். மத்திய திட்ட ஆணையத்தை ‘நிதி ஆயோக்’ என்று பெயர் மாற்றுவதோ, தேசிய தரவுகள் (என்எஸ்எஸ்ஓ) அலுவலகத்தை மத்திய புள்ளிவிவர அலுவலகத்துடன் இணைப்பதோ மட்டும் போதாது. அந்த அமைப்புகளுக்குத் தலைமை தாங்க மஹலாநோபிஸ் போன்ற ஆளுமையுள்ள தகுதியான தலைவர் வேண்டும். மஹலாநோபிஸ் போலவே புதியவற்றைக் கண்டுபிடிக்கும் ஆர்வம், அர்ப்பணிப்பு, இடையறாத முயற்சி ஆகியவையும் இப்போதைய மூத்த நிர்வாகிகளிடம் தேவை!
தமிழில்: வ.ரங்காசாரி
4
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.