இன்னொரு குரல் 3 நிமிட வாசிப்பு
விவசாயிகளுக்கு நீர் மேலாண்மையில் அக்கறை இல்லையே!
தமிழில் தீவிரமான விவாதங்களை வளர்க்கும் பணியில் தன்னையும் ஈடுபடுத்திக்கொள்கிறது ‘அருஞ்சொல்’. அதனால்தான் தலையங்கம், கட்டுரை ஆகியவற்றுக்கு இணையான முக்கியத்துவத்தை ‘இன்னொரு குரல்’ பகுதிக்கு அளித்து, இணையதளத்தின் பிரதான இடத்திலேயே அதற்கு இடமும் அளிக்கிறது. வாசகர்கள் மட்டும் இல்லை; எழுத்தாளர்கள், அறிஞர்கள், பத்திரிகையாளர்கள், செயல்பாட்டாளர்கள், அதிகாரிகள் - அரசியலர்கள் என்று கொள்கைகளை வகுப்பதில் பங்கு வகிக்கும் பலதுறை ஆளுமைகளும் ‘அருஞ்சொல்’ இதழை வாசிக்கிறார்கள் என்பதை அறிந்திருக்கிறோம். ஆகையால், கட்டுரைகளை வாசிப்பவர்கள் ‘எனக்குப் பிடிக்கிறது அல்லது பிடிக்கவில்லை’, ‘நான் இதை ஆதரிக்கிறேன் அல்லது எதிர்க்கிறேன்’ என்பதுபோல ஓரிரு வரிகளில் தங்கள் கருத்துகளை எழுதாமல் விரிவாக எழுதிட வேண்டுகிறோம். அப்படி எழுதப்படும் கருத்துகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவை ‘இன்னொரு குரல்’ பகுதியில் வெளியாகும். கருத்துகளை aruncholeditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிடுங்கள் அல்லது கட்டுரைகளின் பின்னூட்டப் பகுதியில் எழுதிடுங்கள்.
தேசத் துரோகச் சட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர இந்தியா என்ன செய்ய வேண்டும்?
இத்தகு சட்டத்தை எதிர்த்து சமூக நல விரும்பிகள் தொடுத்த போராட்ட மாதிரிகளுக்கு என்ன பதில் வந்துள்ளது? அடிப்படை உரிமையான ஷரத்து 21, 22-க்கு எதிராக இருக்கும் இதற்கு ஷரத்து 32-ன் கீழ் உச்ச நீதிமன்ற விளக்கம் கேட்கப்பட்டுள்ளதா? தேச அக்கறை என்ற போர்வையில், இவர்களின் பாசக்கயிற்றில் பலியாகும் போராளிகளை வேறு எந்த வகையில் நாம் பாதுகாப்பது? இதற்கு நிகரான பாதுகாப்பு அரண் எதேனும் உள்ளதா?
- சதிஷ் குமார்
மின் வாரிய நஷ்டத்தை எப்படி அணுகுவது?
மின் வாரிய இழப்பை நாம் எப்படிப் பார்ப்பது என்ற முறையில் இந்தக் கட்டுரை எழுதப்பட்டுள்ளது. தீர்வுகளைப் பற்றிய வழிமுறைகளைச் சொல்வதுதான் மின் வாரிய இழப்பை எப்படி அணுகுவது என்ற தலைப்புக்குப் பொருத்தமாக இருக்கும். மேலும், இலவச மின்சாரமும் தடையில்லா மின்சாரமும் கிடைக்கப் பெற்ற பல விவசாயிகள் தண்ணீர் மேலாண்மை குறித்து அக்கறையோடு இல்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
- கலைச்செல்வன்
வெறுப்பு: நரகத்தில் செய்யும் முதலீடு
சம்பிரதாயமான வார்த்தைகளில் ‘அற்புதமான கட்டுரை’ என்று வாழ்த்தி முடிக்கலாம். ஆனால், இந்த 15 நிமிட வாசிப்புக் கட்டுரையைப் படித்து முடித்த அளவில் மனதில் எழும் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதாக அந்த இரு வார்த்தைகள் இராது. இதைப் போன்ற கட்டுரைகள் ஒரு பொதுஜன தினசரியில் வெளியிட வாய்ப்பே இல்லை என்பதில்தான் சமஸின் ‘அருஞ்சொல்’ அர்த்தம் பெறுகிறது. வெறுப்பின் கதையாடலானது வரலாறு முழுக்கத் தொடர்ந்தவண்ணம் உள்ளது. அதன் புனைவை ஊடுருவிப் பார்ப்பவர் வெகு சிலரே. அவர்களுக்கும் எதிராக வெறுப்பு தனது புதிய கதையாடல் ஒன்றைத் தொடங்கும். வெறுப்பின் உடற்கூறை உணர்ந்துகொள்வது கதையாடல்களின் நோய்மைகளை அறிந்துகொள்ள உதவும். பாலசுப்ரமணியன் பொன்ராஜ் சொல்வதுபோல, அன்பு பலவீனமானதுதான். ஆனால், பலத்துடன் மோதியே பலவீனம் தன்னை வலுவாக்கிக்கொள்கிறது. வாசகர்கள் தமது அறிவுப் பரப்பை விசாலமாக்கிக்கொள்ள இதைப் போன்ற கட்டுரைகள் மிகவும் உதவும். நன்றி!
- பிரபு
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.