இன்னொரு குரல் 4 நிமிட வாசிப்பு

ஆம், இன்றைய போராட்டங்கள் வன்முறைதான்

பத்ரி சேஷாத்ரி
15 Oct 2021, 5:00 am
3

விவசாயிகள் போராட்டம் தொடர்பில், ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு, சில கருத்துகளைத் தெரிவித்திருந்தேன். அதற்கு எதிர்வினையாக பாலசுப்ரமணியம் முத்துசாமி, ‘போராட்டம் என்றாலே வன்முறையா: பத்ரிக்கு ஒரு மறுப்பு’ என்ற எதிர்வினையில் சில கருத்துகளைப் பகிர்ந்திருக்கிறார். அதன் சுட்டி கமெண்டில்.

தற்போதைய போராட்ட வடிவங்கள் அனைத்துமே வன்முறை வடிவில்தான் உள்ளன. அவற்றை காந்திய, அகிம்சைப் போராட்டங்கள் என்பதுபோல போராடுபவர்களும் அவர்களுடைய ஆதரவாளர்களும் மட்டும் சொல்லிக்கொள்கிறார்கள்.

நீங்கள் உங்கள் கடையை அடைத்து, உங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தால் அது அகிம்சைப் போராட்டம். என் கடையை வலுக்கட்டாயமாக மூடச் சொன்னால், அது அகிம்சைப் போராட்டம் அல்ல. தெருவை மறித்து பேருந்துகள் ஓடவிடாமல் செய்து, ரயில் பாதைகளில் படுத்துக்கொண்டு ரயில் வண்டிகள் ஓடாமல் தடுத்து, அனைத்து மக்களுக்கும் தொல்லை கொடுத்தால், அவை கொடூரமான வன்முறைப் போராட்டங்களே!

காந்தியப் போராட்டத்தின் அடிப்படையாக நான் புரிந்துகொண்டிருப்பது, உங்கள் எதிர்ப்பைத் தெரிவித்து, பிற மக்களின் மனத்தை மாற்றி, போராட்டத்துக்குக் காரணமான சட்டங்களை அல்லது நடவடிக்கைகளைத் திரும்பப் பெறச் செய்வது. இவ்வாறு எதிர்ப்பைத் தெரிவிக்கும்போது பிறர் யாருக்கும் எந்தத் தீங்கும் நிகழாதவாறு பார்த்துக்கொள்வது.

விவசாயிகள் போராட்டத்தை அமைதியான, காந்திய வழியிலான போராட்டம் என்று எவ்வாறு காந்தியர்களே சொல்கிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை. மத்திய அரசு, விவசாயம் தொடர்பான சில சட்டங்களை இயற்றுகிறது. இந்தச் சட்டங்களால் விவசாயிகளுக்குப் பயன் கிடைக்கும் என்றுதான் இந்தச் சட்டங்களை இயற்றுகிறார்கள். ஆனால்,  ஒருசில விவசாயிகள் இவற்றை ஏற்கவில்லை. எதிர்ப்புகளும் போராட்டங்களும் பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தர பிரதேசத்தின் ஒருசில பகுதிகளில் மட்டுமே கிளம்புகின்றன.

போராடும் விவசாயிகளின் கோரிக்கைகள் நியாயமானவையா, இல்லையா என்பதற்குள் நான் புகப்போவதில்லை. அவர்களுடைய போராட்ட வடிவங்கள் குறித்து மட்டுமே நான் பேசப்போகிறேன்.

விவசாயிகளின் போராட்டம் எத்தகையதாக இருந்தது?

1. ரயில்களைச் செல்லவிடாமல் தடுத்தல்.

2. அம்பானியும் அதானியும் இந்தச் சட்டங்களால் பயன்பெறுவார்கள் என்று நினைத்துக்கொண்டு செல்பேசி கோபுரங்களை அடித்து நொறுக்குதல். 

3. பெரும் கூட்டமாக தில்லியை நோக்கிச் சென்று தடைகளையெல்லாம் மீறி, ஹரியானா-தில்லி பாதைகளையெல்லாம் மறித்தல். தில்லியின் கழுத்தை நெருக்குதல்.

4. தில்லி காவல் துறை கொடுத்த வழியில் செல்லாமல் டிராக்டர்களைக் கொண்டு தடைகளை உடைத்து, கலவரத்தில் ஈடுபட்டு, காவலர்களுடன் சண்டை போட்டு, தில்லி செங்கோட்டையின் மீது ஏறி, அங்கு தங்கள் கொடியை நடுதல்.

5. உத்தர பிரதேசத்தில் அமைச்சர் வரப்போகும் பாதையை மறித்தல். மோசமான சம்பவம் ஒன்று நடந்து, அதில் சில தோழர்களைக் காவு கொடுத்த பின், கல்லால் அடித்துச் சிலரைக் கொலை செய்தல்.

இந்தப் போராட்டங்கள் எவையுமே அமைதி வழி சத்தியாக்கிரகப் போராட்டங்கள் கிடையா. அனைத்திலுமே வன்முறை நிகழ்ந்தன. காவல் துறையினரின் எண்ணிக்கையைவிட மிக அதிகமான எண்ணிக்கையில் போராட்டக்காரர்கள் கலந்துகொண்டனர். அவர்களை வழிநடத்தும் தலைவர்கள் சொன்னால், இந்தக் கூட்டம் அப்படியே கேட்டு நடக்குமா என்பதற்கு உத்தரவாதம் கிடையாது. ஏற்கெனவே தில்லியில் பெரும் வன்முறை நிகழ்ந்தேறியிருந்தது.

இதற்கிடையில் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கைக் கையில் எடுத்து, அரசுக்குப் பெரும் நெருக்கடிகளைக் கொடுத்தது. ஏன் இந்தச் சட்டங்களைச் சில காலம் நிறுத்திவைக்கக் கூடாது என்றது. ஈகோ இல்லாமல் நடந்துகொள்ளுங்கள் என்று அரசுக்கு அறிவுறுத்தினர் நீதிபதிகள். அதன் பின், சட்டங்களைத் தாற்காலிகமாக நிறுத்திவைப்பதாகவும், ஒரு குழு அமைத்து இந்தச் சட்டங்களின் சாதக பாதகங்களைப் பரிசீலிப்பதாகவும் சொன்னார்கள். அவ்வாறு அமைக்கப்பட்ட குழு, பல விவசாயச் சங்கங்களைச் சந்தித்து, அவர்களுடைய கருத்துகளைக் கேட்டு அறிக்கை எழுதி உச்ச நீதிமன்றத்திடம் கொடுத்துள்ளது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகளைப் பற்றிக் கவலைப்படாது, போராட்டக்காரர்கள் உத்தரப் பிரதேசத்துக்குத் தங்கள் போராட்டத்தை விரிவாக்கினர்.

இதில் எங்கே காந்தியப் போராட்ட முறைமை உள்ளது? அரசு சர்வாதிகாரமாக நடந்துகொள்ளவில்லை. நீதிமன்றம் அரசின் கையைத்தான் கட்டிப்போட்டுள்ளது. விவசாயிகளிடம், தயவுசெய்து தில்லியின் குரல்வளையை நெரிக்காதீர்கள் என்று கெஞ்சுகின்றது. 

லக்கிம்பூர் போராட்டத்தின்போது, வாகனம் ஏற்றப்பட்டு சில போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டார்கள். அதன் தொடர்ச்சியாக போராட்டக்காரர்கள் கல்லால் அடித்தே சிலரைக் கொன்றார்கள். காந்தி இம்மாதிரியான கல்லால் அடிக்கும் செயல்களை ஆதரித்திருப்பாரா? காந்தியின் அடிப்படைக் கருத்தே, போராட்டத்தில் நாம் இறங்கும்போது காவலர்களால் தாக்கப்படுவோம், மண்டை உடையும், எதிர்த்தரப்பினரின் தாக்குதலுக்கு உள்ளாவோம், அனைத்தையும் ஏற்றுக்கொண்டு பதிலுக்கு வன்முறையில் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என்பதே ஆகும்.

அதெப்படி, ஒருவன் அடிக்க நாம் பார்த்துக்கொண்டிருப்பதா என்று நீங்கள் கேட்டால், அது காந்தியப் போராட்டமாக இருக்க முடியாது. உங்கள் சொந்தவகைப் போராட்டம் என்று வேண்டுமானால் பெயர் வைத்துக்கொள்ளுங்கள். அது கட்டாயம் அகிம்சைப் போராட்டம் கிடையாது.

சட்டம் ஒழுங்கைக் காக்கும் காவலர்கள், ஏன் பெருங்கூட்டப் போராட்டங்களுக்குப் பெரும்பாலும் அனுமதி தருவதில்லை? ஏனெனில், அத்தனை பெரிய கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது சாத்தியமே இல்லை. 

எந்தக் கட்சியோ, அமைப்போ (பாரதிய ஜனதாவையும் இந்துத்துவ லும்பன் கூட்டங்களையும் சேர்த்துத்தான் சொல்கிறேன்) நடத்தும் பெருங்கூட்டப் போராட்டங்களை நான் ஆதரிப்பது இல்லை. ஒரு பெரும் கூட்டம் அந்தக் கூட்டத்தில் சேராத மக்களை அச்சுறுத்துகிறது. அந்தக் கூட்டத்துக்கு ஒரு ‘அனானிமிட்டி’ கிடைக்கிறது. அவர்கள் செய்யும் கொடுந்தவறுகளுக்குத் தண்டனை கிடைத்ததே இல்லை. ஆட்களைக் கல்லால் அடித்துக் கொல்வது, பேருந்துகளை அடித்து நாசமாக்கி உடைப்பது, கார்களைத் தீயிட்டுக் கொளுத்துவது, இவை அனைத்துமே பல பெருங்கூட்டப் போராட்டங்களின்போது நிகழ்பவை.

தன்னுடைய முகநூல் பக்கத்தில் ‘அருஞ்சொல்’ கட்டுரைக்கு எதிர்வினையாற்றும் விதமாக இந்தக் குறிப்பை எழுதியிருக்கிறார் பத்ரி சேஷாத்ரி.  ‘அருஞ்சொல்’ தொடர்பில் முன்வைக்கப்படும் ஆளுமைகளின் குறிப்புகள், விமர்சனங்கள் எதுவாயினும் ‘இன்னொரு குரல்’ பகுதியில் அதை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறோம். அதன் ஒரு பகுதியாக இதை வெளியிடுகிறோம். 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பத்ரி சேஷாத்ரி

பத்ரி சேஷாத்ரி, பதிப்பாளர், அரசியல் விமர்சகர்.








பின்னூட்டம் (3)

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   3 years ago

இவருடைய கட்சிக்காரர்கள் காரைவிட்டு நான்கு பேரை கொன்றது அசம்பாவிதமாம்.்ஆனால் எதிர்வினை மட்டும் வன்முறை தாக்குதலாம். அதாவது அகிம்சாவாதிகள் ஆயுதங்கள் வைத்திருக்கக்கூடாது என்று கூறுகிறார். தவறு செய்பவர்களை விட அந்த தவறை நியாயப்படுத்துபவர்களே ஆபத்தானவர்கள்.

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

Narayan   3 years ago

விவசாயிகள் அடித்ததால் இறந்தால் (கொலை ) காரை ஏற்றினால் (காவு) என்னடப்பா உன் ஞாயம்

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Seyed Bukhari   3 years ago

திரு சேஷாஸ்திரி அவர்களின் கூற்றில் சிலவற்றோடு உடன்படுகிறேன்.நடக்கும் எதுவும் காந்திய அஹிம்ஷை போராட்டம் அல்ல எனும் கருத்தில் உடன்படுகிறேன்.அத்தோடு அஹிம்ஷையும் போராட்டமும் குறித்து விமர்சிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கிறேன்.அஹிம்ஷை என்பது போராட்டம் அல்ல.போராட்டத்திற்கு எதிரான அதிகாரத்தின் உணர்வுகளை பிரதிபலிக்கும் காப்பாற்றும் தந்திரமாகும்.போராட்டம் என்பது உணர்வற்று வெந்ததை தின்று விதி வந்தால் சாவோம் என ஜடமாய் வாழும் சமுகத்திற்கு உயிரூட்டி உணர்வூட்டி இலக்கை அடையும் குணமாகும்.ஆதலால் அஹிம்ஷை போராட்டம் என்பது வார்த்தைக்கும் பொருந்தாத ஒரு வடிவம்.தீமைக்கு அநீதத்துக்கு எதிரான இயக்கம் போராட்டம் எனப்படும்.இது மானுட நாகரிகத்தின் தவிர்க்க முடியாத இயல்பாகும். அஹிம்ஷை என்பது அநீதத்தை அங்கீகரித்து கொள்ள தூண்டும் தீமையின் வேறோர் வடிவமாகும்.ஆதலால் போராட்டத்தில் அஹிம்ஷையை கலந்து உபதேசிப்பதை நிறுத்திக் கொள்வது சிறப்பாகும்.அப்படியெனில் போராடுவோர் இம்சை செய்வோரா என்றால் இல்லை.அதிகாரத்தின் சூழ்ச்சி வலையில் சிக்குண்டு இம்சையை அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள்.அதிகாரத்தின் இம்சையை விட்டு வெளியேறும் எல்லோரிடமும் இம்சையை ஆதரிப்போர் முன் வைக்கும் முதல் கோரிக்கை பிறரை ஏன் வதைக்கிறீர்கள்.போராட்டம் என்பது பிறரை வதைக்கும் படலம் அல்ல.பிறர் தங்களை போன்று இம்சைக்கும் வதைக்கும் பிறர் ஆளாகிடக் கூடாது என்ற கழிவிரக்கம்.பற்றி எரியும் வீடு உங்களை தொற்றிக் கொள்ளும் எனும் எச்சரிக்கை போராட்டம்.உங்கள் உடமைகளை பாதுகாத்து கொள்ளுங்கள் என்ற எச்சரிக்கை தான் போராட்டம்.சில வேளைகளில் அழைத்தவுடன் ஏற்போரும் அமர்வோரும் உண்டு.அதை புறக்கணித்து இம்சையை ஏற்றுக் கொள்ள விரைவோரும் உண்டு.இம்சையை சகித்துக் கொள்ள துணிந்தவர்களை தடுத்து நிறுத்த வேண்டியதும் போராட்டத்தின் ஓர் அங்கம்.இது இம்சைக்கு எதிரான இயக்கம்.இதை இம்சைக்கு எதிரான அஹிம்ஷை எனும் பொருளில் அழைத்தால் அஹிம்ஷை குறித்து அப்போது சிந்திக்கலாம்.இல்லையேல் இம்சையை சகித்துக் கொள்ள தூண்டும் அஹிம்ஷை என்பது இம்சையின் ஒட்டிப்பிறந்த மற்றொரு குழந்தையே,!

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

இரட்டை என்ஜின்ராமச்சந்திர குஹா அருஞ்சொல்கீழ் முதுகு வலிகூடங்குளம்அரவிந்தன் கண்ணையன் எதிர்வினைதேசப் பாதுகாப்புஅருஞ்சொல் முதல் பிறந்த நாள்ஹிப்னாடிஸம்எழுபத்தைந்து ஆண்டுகள்இந்திய அடிமைப் பணியாகிவிடுமா இந்திய ஆட்சிப் பணி?ஜொமெட்டோபசவராஜ் பொம்மைஇஸ்ரேல்கேசவ விநாயகன்சத்யஜித் ரேஇளம் தம்பதியர்அன்றாடம் கற்றுக்கொள்கிறவரே ஆசிரியர்காது கேளாமை ஏன்?மீண்டும் சோழர்கள் காலச் செழுமைக்குக் கொண்டுசெல்ல மபுலம்பெயர்ந்தோர் எதிர் உள்ளூர் சமூகம்தமிழ் வரலாறுவைசியர்கலாச்சாரப் புரட்சிரயில் எரிப்புபொதுவுடைமைக் கட்சிஹர்ஷ் மரிவாலாவர்ண பகுப்பு ஜாதியமானது எப்படி?அணுகுமுறையில் மாற்றம்ஜெ.சிவசண்முகம் பிள்ளைராஜீவ் காந்தி

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!