கட்டுரை 10 நிமிட வாசிப்பு

ஆவின் எப்படி பிறந்தது தெரியுமா?

பாலசுப்ரமணியம் முத்துசாமி | Balasubramanian Muthusamy
29 Dec 2021, 5:00 am
3

க்டோபர் 31, 1964. பிரதமர் சாஸ்திரி, ‘அமுல்’ நகரமான ஆனந்துக்கு வருகை புரிந்தார். ‘ஆக்ஸ்ஃபாம்’ என்னும் பன்னாட்டு நிதியத்தின் உதவியுடன், ‘அமுல்’ உருவாக்கியிருந்த நவீன கால்நடைத் தீவனத் தொழிற்சாலை அவர் திறந்துவைப்பதற்காகக் காத்திருந்தது. ‘அமுல்’ முன்னெடுக்கும் பெரும் திட்டங்கள் எல்லாம், சர்தார் வல்லபபாய் படேலின் பிறந்த நாள் அன்றுதான் தொடங்கப்படும்.

ஆனந்த் ஒரு சிறு நகரம் என்பதால், அங்கே பிரதமர் போன்ற முக்கிய விருந்தினர்கள் தங்க வசதிகள் எதுவும் கிடையாது. எனவே, ஜவஹர்லால் நேரு தொடங்கி அங்கே வரும் விருந்தினர்கள் அனைவரும், குரியன் வீட்டில் விருந்தினர்களுக்காக ஒதுக்கப்பட்ட ஓர் அறையில் தங்கிச் செல்வார்கள். ஆனால், இம்முறை சாஸ்திரியிடம் இருந்து ஒரு வித்தியாசமான வேண்டுகோள் வந்தது.  அது குரியனை வியப்பில் ஆழ்த்தியது.

விவசாயி வீட்டில் பிரதமர்

‘அமுல்’ பால் நிறுவனத்தின் உறுப்பினரான பால் உற்பத்தியாளரான விவசாயி ஒருவர் வீட்டில் தங்க விரும்புவதாக சாஸ்திரி செய்தி அனுப்பியிருந்தார். அதன்படி ஒரு பால் உற்பத்தியாளர் வீடு தேர்ந்தெடுக்கப்பட்டு, சாஸ்திரியை அங்கே விட்டுவிட்டு, குரியன் வீடு திரும்பிவிட்டார். பிரதமர் சாஸ்திரி, அந்தக் கிராமத்திலுள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று, அதிகாலை 2 மணி வரை பேசிக்கொண்டிருந்தார்.

அடுத்த நாள் குரியனுடன் தன் வியப்பைப் பகிர்ந்துகொண்டார். “இரண்டாவது மற்றும் மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டங்களில், அரசு தொடங்கிய அத்தனை பால் மேம்பாட்டுத் திட்டங்களும் நஷ்டத்தில் இயங்குகின்றன. எங்களது திட்டங்கள் வெற்றி பெறவில்லை. ஆனால், ‘அமுல்’ நிறுவனம் வெற்றிகரமாக நடக்கிறது. இந்த வெற்றிக்கு என்ன காரணம் என நேரில் பார்க்க வந்தேன். நான் பிறந்த உத்தர பிரதேசம் போன்ற வளமான மண் இங்கில்லை. அங்கே இருப்பது போன்ற உயர் ரகப் பால் தரும் கால்நடைகளும் இல்லை. ‘அமுல்’ எப்படி வெற்றி பெற்றது என்று புரியவில்லை. எனக்கு விளக்க முடியுமா?” எனக் கேட்டார் சாஸ்திரி.

“நீங்கள் சொல்வது சரிதான். அரசாங்கம் தொடங்கிய பால் பண்ணைகளுக்கும், ‘அமுல்’ நிறுவனத்துக்கும் வித்தியாசங்கள் உள்ளன. ‘அமுல்’ பால் உற்பத்தியாளர்களின் நிறுவனம். அவர்கள் நலனை முன்னிறுத்தி இயங்குகிறது. பால் உற்பத்தியாளர்களின் பிரதிநிதிகள், தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்கள் கூட்டுறவுச் சங்கங்களின் தலைவர் ஆகிறார்கள்.

நிறுவனத்தின் தினசரிச் செயல்பாடுகளை நிர்வாகம்செய்ய என்னைப் போன்ற மேலாளர்களைப் பணிக்கு அமர்த்தியிருக்கிறார்கள். எனது வேலை, என் நிறுவனத்தின் உரிமையாளர்களாகிய பால் உற்பத்தியாளர்களின் நலனை மேம்படுத்துவது. இந்த வணிக மாதிரியில், உற்பத்தியாளர்களே தங்கள் பொருளை நேரடியாக நுகர்வோரிடம் கொண்டுசேர்க்கிறார்கள். இந்த வணிகச் சங்கிலியின் அனைத்துக் கண்ணிகளும் ‘அமுல்’ நிறுவனத்தின் நிர்வாகத்தின் கீழ் இருக்கின்றன. இதில் இடைத்தரகர்களுக்கு இடமே இல்லை.

ஆனால், உங்கள் திட்டங்களை ஐஏஎஸ் அதிகாரிகள் உருவாக்கி நிர்வகிக்கிறார்கள். அவர்களின் முதன்மை நோக்கம் பால் உற்பத்தியாளர்கள் மேம்பாடாக இருப்பதில்லை. அவர்களது மேலதிகாரிகளின் சொல்படி செயல்படுவது மட்டுமே. அதனால்தான் அரசின் திட்டங்கள் தோல்வியடைகின்றன.

ஆனால், எங்களுக்கும் பிரச்சினைகள் உள்ளன. கூட்டுறவுச் சங்கச் சட்டம் ஓர் எடுத்துக்காட்டு. அது மிகவும் புராதனமானது, பிற்போக்கானது. ஆனால், அதிர்ஷ்டவசமாக, அதன் தொந்தரவுகளில் இருந்தது எங்களை, திருபுவன் தாஸ் படேல் என்னும் தலைவர் பாதுகாத்து, எங்களைச் சுதந்திரமாக இயங்கச் செய்கிறார்!”

குரியன் சொல்வதைக் கவனத்துடன் கேட்டுக்கொண்டிருந்த சாஸ்திரி உற்சாகத்துடன், “இதுதான் ‘அமுல்’ வெற்றிக்குக் காரணமென்றால், நாடெங்கும் இதே போன்ற நிறுவனங்களை உருவாக்க முடியுமல்லவா?” எனக் கேட்டார்.

“நிச்சயம் முடியும்” என்றார் குரியன்.

“அப்படியானால், நாளையில் இருந்தது, நீங்கள் ‘அமுல்’ நிறுவனத்துக்காக மட்டுமல்லாது, இந்தியாவுக்கு உழைக்கத் தொடங்க வேண்டும். உங்களுக்குத் தேவையான உதவிகளை இந்திய அரசு செய்யும்!” என்றார்.

நிதானமாக யோசித்த குரியன், “செய்யலாம் அய்யா.. ஆனால், சில நிபந்தனைகள் இருக்கிறது” என்றார்.

“என்ன நிபந்தனைகள்?” - சாஸ்திரி.

“நான் உழவர்களின் ஊழியனாகத்தான் இருப்பேன்; அரசு ஊழியராக இருக்க மாட்டேன்” - குரியன்.

“என்ன காரணம்?” - சாஸ்திரி.

“அய்யா, அரசாங்க ஊழியரானால் ஓர் மேலதிகாரிக்குப் பதில் சொல்லிக்கொண்டிருக்க வேண்டும். ஆனால், உழவர்களின் ஊழியனாகத் தொடர்ந்தால், அவர்கள் மேம்பாட்டுக்கு உழைக்க வேண்டி இருக்கும். உழவர்களின் ஊழியனாக இருப்பதுதான் சரியாக இருக்கும். ‘அமுல்’ மாதிரியின் வெற்றிக்குக் காரணமும் அதுதான்.”

“அடுத்த முக்கியமான நிபந்தனை. ‘அமுல்’ மாதிரியை இந்தியா முழுவதும் உருவாக்க வேண்டுமென்றால், அந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் ஆனந்தில்தான் அமைய வேண்டும். தில்லியில் அல்ல” என்றார் குரியன்.

இரண்டு நிபந்தனைகளையும் சாஸ்திரி ஒப்புக்கொண்டார்.

அந்த ஆண்டு டிசம்பர் மாதம் பிரதமர் சாஸ்திரி, தனது மந்திரிசபைக்கும், எல்லா மாநில முதல்வர்கள் - ஆளுநர்களுக்கும், “இந்தியாவெங்கும் ‘அமுல்’ கூட்டுறவுப் பால் நிறுவன மாதிரியை எடுத்துச் செல்ல அரசு முடிவெடுத்திருக்கிறது. இது நான்காம் ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் நிறைவேற்றப்படும்” எனக் கடிதம் எழுதினார்.

சில மாதங்களுக்குப் பின்னர், வேளாண் மந்திரியான சி.எஸ். என்னும் சி.சுப்ரமணியத்திடம் இருந்து அழைப்பு வந்தது. அதற்குச் சில வருடங்களுக்கு முன்பு, சி.எஸ். வேண்டுகோளின்பேரில், ஊழலும், செயல்திறனுமற்ற ‘தில்லி பால் ஸ்கீம்’ என்னும் நிறுவனத்தை ஆறே வாரங்களில் சரிசெய்துகொடுத்திருந்தார் குரியன். எனவே, குரியனுக்கும், சிஎஸ்ஸுக்கும் ஏற்கெனவே நல்ல அறிமுகம் இருந்தது.

குரியனை வரவேற்ற சி.எஸ். பிரதமர் தன்னிடம் ‘அமுல்’ திட்டத்தைப் பற்றிப் பேசியதையும் சொல்லி, “அமுல் திட்டத்தை நாடு முழுவதும் எடுத்துச் செல்ல எவ்வளவு நிதி தேவைப்படும்?” எனக் கேட்டார். குரியன், “அலுவலகம் ஒன்றை ஏற்படுத்தவும், அதை நடத்தவும் 30 ஆயிரம் ரூபாய் தேவை” எனச் சொன்னார். சி.எஸ். ஸ்தம்பித்துவிட்டார். “நாடு முழுவதும் அமுல் மாதிரியை எடுத்துச் செல்ல பெரும் நிதி தேவைப்படும் என நினைத்தேன். 30 அல்லது 300 கோடி கேட்பீர்கள் என்றல்லவா நினைத்தேன்?” என்றார். “இல்லை. இப்போதைக்கு இது போதும்” எனச் சொன்னார் குரியன்.

அதற்குள், அரசு அதிகாரிகளின் லாபி கொந்தளித்துவிட்டது. “பிரதமர் எங்கேயோ போனாராம். யாரோ குரியன் என்னும் ஆசாமியைப் பார்த்தாராம். அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டு, ‘தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம்’ அமைக்க ஒப்புக்கொண்டாராம். அதுவும் தில்லியில் இல்லாமல், குஜராத்தில் உள்ள சிறு நகரத்தில்...! ஏற்கனவே வேளாண் அமைச்சரவைக்குக் கீழே பால்வளத் துறை இருக்கிறது. நாங்க எதுக்கு இருக்கறோம்” என்று ஐஏஎஸ் அதிகாரிகள் கொதித்தெழுந்தார்கள். வேளாண் அமைச்சரிடம் முறையிட்டார்கள்.  ஆனால், பிரதமர் சாஸ்திரி, “பால் துறைத் திட்டம் வெற்றி பெற வேண்டுமென்றால், குரியன் சொல்வது போல நடந்தால்தான் நடக்கும்” எனத் தெளிவாகச் சொல்லிவிட்டார்.

குரியன் காத்திருந்தார்.

வேளாண் அமைச்சகத்திலிருந்து ஒரு தகவலும் இல்லை. கேட்ட 30 ஆயிரம் ரூபாய் நிதிக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் ஆயிரத்தெட்டு நிபந்தனைகளை விதித்தார்கள். வெறுத்துப்போன குரியன், சிஎஸ்ஸை சந்தித்தார். “சார் தேசிய பால்வள வாரியத்தை அரசு உதவியுடன் உருவாக்கும் எந்த எண்ணமும் எனக்கு இப்போது இல்லை. விடைகொடுங்கள். நான் கிளம்புகிறேன்!”

குரியனைச் சமாதானப்படுத்த முடியாத நிலையில், சி.எஸ். கேட்டார், “பிரதமருக்கு நான் என்ன பதில் சொல்லட்டும்?”

“பிரதமரிடம் சொல்லுங்கள், ‘குரியன் பிச்சை கேட்டு தில்லிக்கு வரவில்லை. உங்களால் 30 ஆயிரம் கொடுக்க முடியாவிட்டால் பிரச்சினை இல்லை. அதையும் நானே ஏற்பாடு செய்துகொள்கிறேன் என்று” என்றார் குரியன்.

“எங்கள் உதவியில்லாமல், நீங்களே தேசிய பால்வள வாரியத்தை உருவாக்கிக்கொள்வீர்களா?” எனக் கேட்டார் சிஎஸ்.

“எங்களால் முடியும். நாங்களே செய்துகொள்வோம். நன்றி!”

கிளம்பினார் குரியன்.

ஆனந்த் திரும்பியதும், அடுத்த ‘அமுல்’ போர்ட் மீட்டிங்கில், “நமக்கு ஒரு பிரச்சினை உள்ளது. அதைத் தீர்க்க ‘அமுல்’ இயக்குநர்கள் உதவ வேண்டும்” எனக் கேட்டார். தில்லியில் நடந்த விஷயங்களை அவர்களிடம் சொல்லி, அரசாங்க அமைப்பினால், நமக்குத் தேவையான விரைவான உதவிகளை, முடிவுகளைத் தர முடியாது. 30 ஆயிரம் ரூபாய் உதவிக்காக அமைச்சரைப் பார்க்க இரண்டு நாட்களாயிற்று. அதற்குப் பின்னரும் அவரால் ஏற்பாடு செய்ய முடியவில்லை. எனவே, இந்தத் திட்டத்துக்கு ‘அமுல்’தான் உதவி செய்ய வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டார்.

அனைவரும் ஒப்புக்கொண்டனர். ஆனால், ஓர் இயக்குநருக்கு மட்டும் சந்தேகம் வந்தது. “இந்தத் திட்டம் வெற்றி பெற்றால், ‘அமுல்’ நிறுவனத்துக்குத்தானே போட்டியாளர்கள் உருவாகிவருவார்கள். இதை நாம் ஏன் முன்னெடுக்க வேண்டும்?” எனக் கேட்டார்.

அதன் நியாயத்தை உணர்ந்த குரியன், இயக்குநர்களுக்கு மிக விரிவாக, நாட்டின் பொருளாதாரமும், சந்தையும் எவ்வளவு பெரியவை என்பதை விளக்கிச் சொன்னார். மேலும், ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு ‘அமுல்’ உருவாகி வரும்போது, உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்கள் என்பது பெரும் பலம் வாய்ந்த அமைப்பாக உருவாகிவிடும். அப்போது தனியார் துறையில் இருந்தது வரும் போட்டியாளர்களை எளிதில் சமாளிக்க முடியும் எனச் சொன்னார். இல்லையெனில், நாட்டின் இன்னொரு பகுதியில் இருந்து ஒரு தனியார் பால் வணிக நிறுவனம் பெரும் பலத்தோடு எழுந்து வந்தால், ‘அமுல்’ நிறுவனத்துக்கேகூட ஆபத்தாக முடியும் எனச் சொன்னார்.

இயக்குநர்கள், குறிப்பாக தலைவர் திருபுவன் தாஸ் படேல் உள்பட குரியனின் தரப்பை உணர்ந்து, அவரை ஆதரித்தார்கள். குஜராத் அரசு, உழவர்களுக்காக மூன்று கால்நடைத் தீவனத் தொழிற்சாலைகளை 90 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்குமாறு ‘அமுல்’ நிறுவனத்தைக் கேட்டுக்கொண்டிருந்தது. அதற்கான ஆலோசனைக் கட்டணமாக 5% பெற்று, ‘அமுல்’ அதை (4.5 லட்சம் ரூபாய்), தேசிய பால் வள நிறுவனத்துக்கான தொடக்க முதலீடாக அளித்தது.

குரியன் தேசியப் பால்வள மேம்பாட்டு வாரியத்தின் கௌரவத் தலைவராக நியமிக்கப்பட்டார்.  அதேபோல,  கௌரவச் செயலாளரும், பொருளாளரும் நியமிக்கப்பட்டார்கள். அவர்களுக்கு தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தில் ஊதியம் இல்லை. அவர்களுக்கான ஊதியத்தை ‘அமுல்’ அளித்தது. ‘அமுல்’ நிறுவனத்தின் கட்டிடத்தில் ஓர் அறை, தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்துக்காக ஒதுக்கப்பட்டது. ‘அமுல்’ நிறுவனத்தின் தொழில்நுட்ப, மேலாண்மை நிபுணர்கள் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் பணிக்காக, தேவைப்பட்டபோதெல்லாம் உபயோகித்துக்கொள்ளப்பட்டார்கள்.

இப்படித்தான் இந்தியாவின் தேசிய பால் வள மேம்பாட்டு வாரியம், ஒன்றிய அரசின் ஒரு பைசா நிதியில்லாமல் உருவாக்கப்பட்டது!

சாஸ்திரி, குரியனுக்கு அளித்த பணி ‘அமுல்’ கூட்டுறவு மாதிரியை இந்தியாவெங்கும் முன்னெடுத்துச்செல்ல வேண்டும் என்பதாகும். அதன் இன்னோர் அர்த்தம் என்னவென்றால், பால் துறையை அரசாங்கத்திடமிருந்து காப்பாற்றி, அதை அதன் உண்மையான உரிமையாளர்களான பால் உற்பத்தியாளர்களிடமே இருக்கும்படி செய்ய வேண்டும் என்பதுதான் என்பதை உணர்ந்தார் குரியன்.

இதை நிறைவேற்றும் நோக்கத்தில், மொழிவழி மாகாணங்கள் பிரிக்கப்பட்டு, புதிதாக உருவாகியிருந்த மராத்திய மாநில முதலமைச்சரைத் தொடர்புகொண்டார். மராத்தியத்தில் அவர் பெற்ற அனுபவம், அவருக்கு ஒவ்வொரு மாநிலத்திலும் கிடைத்தது. அதன் மூலம், இந்தியாவில் அரசு அதிகாரிகள் என்னும் அரிய வகை உயிரினங்கள் இயங்கும் முறையைப் பற்றிய பெரும் படிப்பினை அவருக்குக் கிடைத்தது.

குரியன் முதலில் முதல்வரைச் சந்தித்தார். அவருக்குக் குரியன் சொன்ன திட்டம் மிகவும் பிடித்துப்போனது. உடனே அவர், வேளாண் துறை அமைச்சரைச் சென்று சந்திக்குமாறு சொன்னார்.  அவரைச் சென்று சந்தித்தார். வேளாண் துறை அமைச்சர், பால் கமிஷனரைச் சந்திக்குமாறு சொன்னார்.

பால் துறை கமிஷனரைச் சந்தித்து, தேசியப் பால்வள வாரியத்தின் திட்டத்தைச் சொன்னார் குரியன். பொறுமையாகக் கேட்டு முடித்த கமிஷனர் கேட்டார், ‘அப்படியானால், மஹராஷ்டிரத்தில் ஆனந்த் போன்ற நிறுவனத்தை உருவாக்கப்போகிறீர்களா?” என்று கேட்டார்.

குரியன், “ஆமாம், அதுதான் திட்டம்” என்று சொன்னார்.

“அப்படியென்றால், எனக்கு என்ன வேலை? என் துறையை மூடிவிட்டு வீட்டுக்குப் போக வேண்டுமா? நீங்கள் குஜராத்தில் என்ன செய்தீர்கள் என்று தெரியும். அங்கே அரசு பால்வளத் துறை என்ற துறையே இல்லை” எனக் கொதித்தார் அதிகாரி.

“ஆமாம்.. குஜராத்தில் அரசு பால்வளத் துறை இல்லை... ஆனால், அங்கே பால் உள்ளது” என்றார் குரியன்.

“மராத்திய பால் உற்பத்தியாளர்கள் வேறு. குஜராத்திகள் வேறு. உங்கள் திட்டம் இங்கே செல்லாது” எனச் சொல்லிய அந்த அதிகாரி குரியனை வழியனுப்பி வைத்தார்.

தன் முயற்சியில் சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தன்போல குரியன், அடுத்த செயல் திட்டத்தில் இறங்கினார். அரசு நிர்வாகத்தில், பால் துறை கமிஷனரின் பரம வைரியான, கால்நடைத் துறைச் செயலரைச் சென்று சந்தித்தார். ‘அமுல்’ தனது பால் தொழிலின் ஒரு பகுதியாக கால்நடை நலம் பேண 75 கால்நடை மருத்துவர்கள் கொண்ட ஒரு குழுவை உருவாக்கி இருந்தது. ‘அமுல்’ போல ஒரு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு நிறுவனம் மஹாராஷ்ட்ராவில் உருவானால், நிறைய கால்நடை மருத்துவர்கள் அதில் உபயோகப்படுவார்கள் எனத் தன் வாதத்தை முன்வைத்தார்.  கால்நடைத் துறைச் செயலர் அதை 'மிகச் சரியாக'ப் புரிந்துகொண்டார்.

“அப்போ என் துறையை இழுத்து மூடிவிட வேண்டும் என்கிறீர்களா?” என்று சினந்தவர் குரியனை உடனேயே வெளியேற்றினார்.

அதற்கடுத்து கூட்டுறவு சங்கத் துறையின் பதிவாளரைச் சந்தித்தார் குரியன். குரியனின் திட்டத்தைக் கேட்ட அவர், “நல்ல திட்டம். என் துறையிலேயே ஒரு நல்ல அலுவலர் இருக்கிறார். அவர் இதைப் பார்த்துக்கொள்வார்.”

“ஐயா, நான் கூட்டுறவு என்று சொல்வது பால் உற்பத்தியாளர்களுடைய நிறுவனம்.  அது அவர்களால் நடத்தப்பட வேண்டுமே ஒழிய, அரசு அலுவலர்களால் அல்ல” என்றார் குரியன்.

இப்படியாக அதன் பின்னர் பல மாநில அரசுகளை அணுகினார் குரியன். கிட்டத்தட்ட அனைத்துத் தலைவர்களும், அலுவலர்களும் இதே போன்ற பதிலைத்தான் சொன்னார்கள்.

பால் உற்பத்தியாளர்கள் முக்கியம். ஏனெனில் அவர்கள் வாக்காளர்கள். எனவே மாநில முதல்வர்கள், அதை வேளாண் அமைச்சர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும் என விரும்பினார்கள். வேளாண் அமைச்சர்களோ, பால் துறை செயலரோ அல்லது கால்நடைத் துறைச் செயலரோ இதை முன்னெடுக்க வேண்டும் என பொறுப்பை அரசு அதிகாரிகளிடம் தள்ளிவிட்டார்கள். அரசு அதிகாரிகளோ, மிகத் தெளிவாக, இந்தத் திட்டம் தங்கள் துறையின் கட்டுப்பாட்டில் மட்டுமே நிர்வகிக்கப்பட வேண்டும் என விரும்பினார்கள். இப்படியான அணுகுமுறையின் விளைவாகத்தான், இரண்டாம், மூன்றாம் ஐந்தாண்டுத் திட்டங்களில் தொடங்கப்பட்ட பால்பண்ணைகள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்திருந்தன.

பல மாநில அரசுகளுடன் பேசிச் சோர்ந்துபோனார் குரியன். மாநிலங்களில் ‘அமுல்’ மாதிரி நிறுவனங்களை அரசு உதவியுடன் உருவாக்க முடியாது. ஏனெனில், அரசு அதிகாரிகள் அதை சுதந்திரமான, உற்பத்தியாளர்கள் கூட்டுறவு நிறுவனங்களாக இயங்க அனுமதிக்க மாட்டார்கள் என்னும் முடிவுக்கு வந்தார்.

ஆகையால், ‘அமுல்’ மாதிரி பால் உற்பத்தியாளர் நிறுவனங்களை உருவாக்க வேண்டும் எனில், நம்மிடம் நிதியாதாரம் இருக்க வேண்டும். நிதியுடன் சென்று மாநில அரசுகளை அணுகி, ‘நாங்கள் 5 கோடி தருகிறோம். உங்கள் மாநிலத்தில் ஒரு ‘அமுல்’ மாதிரி நிறுவனத்தை ஏற்படுத்தித் தருகிறோம். அந்நிறுவனங்கள் பால் உற்பத்தியாளர்களின் கூட்டுறவு நிறுவனங்களாக இயங்க வேண்டும்” என்னும் நிபந்தனையை முன்வைக்கலாம் என்னும் ஒரு தீர்வை வந்தடைந்தார் குரியன். இப்படியாகத்தான் வெண்மைப்புரட்சி என்னும் திட்டம் குரியனின் மனதில் உருவாகத் தொடங்கியது.

குரியன் மற்றும் டாலயாவுடன், உணவு மற்றும் வேளாண் நிறுவனத்தின் (FAO) மைக்கேல் ஹால்ஸ் (Michael Halse) என்னும் பொருளாதார நிபுணரும் இந்தத் திட்ட உருவாக்கத்தில் இணைந்துகொண்டார். அவர்களுக்குக் கிடைத்த ஆரம்ப காலத் தரவுகள், இந்தியாவில் பால் உற்பத்தி, மக்கள்தொகைக்கேற்ப வளராததைச் சுட்டியது. பால் உற்பத்தி வளர வேண்டுமெனில், பால் உற்பத்தி நீடித்து நிற்கும் வகையில் உயர வேண்டும். அதற்கு, பால் உற்பத்தித் தொழில், உற்பத்தியாளருக்கு லாபம் தருவதாக இருக்க வேண்டும். கால்நடை வளம் மேம்படுத்தப்பட வேண்டும்.

பால் உற்பத்தித் தலங்களும், நுகர்வுச் சந்தைகளும் செயல்திறன் மிக்க வணிகச் சங்கிலியால் இணைக்கப்பட வேண்டும். ‘அமுல்’ தொழில் மாதிரியில் ஆனந்த் என்னும் பால் உற்பத்தித் தலமும், மும்பை என்னும் பெரும் நுகர்வுச் சந்தையும் இடைத்தரகர்கள் எவரும் இல்லாமல் உற்பத்தியாளர்களும் நுகர்வோரும் நேரடியாக இணைக்கப்பட்டதுபோல இது நடக்க வேண்டும் என்னும் அடிப்படையில், வெண்மைப் புரட்சித் திட்டம் உருவாகியது.

முதற்கட்டமாக இதற்கு 650 கோடி ரூபாய் நிதி தேவைப்படும் எனக் கணக்கிட்டார்கள் குரியனும் அவரது சகாக்களும். இதற்கான நிதி அரசிடன் இருந்தது. ஆனால், தான் முன்வைக்கும் திட்டத்துக்கு அது தரப்படாது என்பது குரியனுக்குத் தெரியும்.

அந்தக் காலகட்டத்தில் ஐரோப்பிய நாடுகளில், பால் பொருட்கள் அதீதமாக உற்பத்திசெய்யப்பட்டு, அரசுகளால் கொள்முதல் செய்யப்பட்டு, கிடங்குகளில் வெண்ணை மலைகள் உருவாகியிருந்தன. அவற்றை, ஐரோப்பிய அரசுகள் முன்னேறாத நாடுகளுக்கு மானிய விலையிலோ அல்லது விலையில்லாமலோ வழங்கவிருந்தன.

இந்தப் பிரச்சினையை குரியன் ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ள முடிவெடுத்தார். ஐரோப்பிய நாடுகளின் உபரியை இலவசமாகப் பெற்று, அதை இந்தியச் சந்தையில், சரியான விலையில் விற்று, அதில் வரும் நிதியில், இந்தியாவெங்கும் ‘அமுல்’ மாதிரிகளை உருவாக்கும் ஒரு திட்டத்தை வடிவமைத்தார்.  அதற்கு, ‘வெண்மைப் புரட்சி’ (Operation Flood) எனப் பெயரிட்டார்.  வடிவமைத்த அந்தத் திட்டத்தை, உணவு மற்றும் வேளாண் நிறுவனத்துக்கு, இந்தியாவின் சார்பில் அனுப்பிவைக்குமாறு ஒரு வேண்டுகோளுடன், மத்திய அரசுக்கு அனுப்பிவைத்தார். பல மாதங்கள் பதிலேதும் இல்லை.

பின்னர் ஒருமுறை, ஆனந்த் நகருக்குப் பணி நிமித்தமாக வந்த மத்திய உள்துறைச் செயலர் எல்.பி.சிங்குடன் பேசிக்கொண்டிருக்கையில் இதைக் குறிப்பிட்டார் குரியன். டில்லி திரும்பிச் சென்ற எல்.பி.சிங், குரியனை டில்லி வரவழைத்தார். அவரது இல்லத்தில் நடந்த கூட்டத்துக்கு அனைத்து முக்கியச் செயலர்களையும் அழைத்திருந்தார். குரியன் தனது திட்டத்தை செயலர்களுக்கு விரிவாக எடுத்துச் சொன்னார்.

“குரியன் நம்மிடம் எதுவும் கேட்கவில்லை. அவரது திட்டத்தை அரசு சார்பில், உணவு மற்றும் வேளாண் கழகத்துக்கு (FAO) அனுப்பச் சொல்கிறார். இந்தத் திட்டத்தை ஏற்கனவே உலக வங்கியுடனும், உணவு மற்றும் வேளாண் கழகத்துடனும் கலந்தாலோசித்துவிட்டேன் என்றும் சொல்கிறார்.  நம்மால் இதைக் கூடச் செய்ய முடியாதா?”  எனக் கேட்டார்.

ஒருவழியாக, வெண்மைப் புரட்சித் திட்டம் இந்திய அரசின் சார்பாக உணவு மற்றும் வேளாண் கழகத்துக்கு அனுப்பப்பட்டது. குரியனும், வேளாண் துறைச் செயலர் பி.ஆர்.படேலும் இந்தியாவின் சார்பில் கலந்துகொள்வதாக முடிவானது. அங்கே இந்தத் திட்டம் மிகச் சிறந்த வரவேற்பைப் பெற்றது.  பாகிஸ்தான் தரப்பில் இருந்து வந்த பிரதிநிதி, குரியன் பேசி முடிந்ததும், நேரில் வந்து கை குலுக்கி, ‘இந்தியா என்ன திட்டத்தை முன்வைத்தாலும், அதை எதிர்க்க வேண்டும் என எனக்கு ஆணைகள் இருந்தன. ஆனால், உங்களது திட்டத்தைக் கேட்ட பிறகு, என்னால் அதைச் செய்ய முடியாது. எதிர்க்கப்போவதில்லை. ஆனால், அமைதியாக இருந்துவிடப்போகிறேன். புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்!” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

வழக்கமாக, முன்னேறிய நாடுகளில் இருந்தது இப்படிப் பெறப்படும் பொருள் உதவிகள், மக்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்பட்டுவிடும். அது சில மாதங்களில், காற்றில் கரையும் கற்பூரம்போல் காணாமலாகிவிடும். ஆனால், இலவசமாகப் பெறப்பட்ட பொருளை விற்று, அதில் கிடைத்த நிதியை, பால் உற்பத்தித் துறைக் கட்டமைப்பில் முதலீடு செய்து, உலகின் மிகப் பெரும் வளர்ச்சித் திட்டமாக மாற்றினார் குரியன்.

வெண்மைப் புரட்சியின் முதல் கட்டத்தில் (1970-80), நாட்டின் 18 பால் உற்பத்தித் தலங்கள், இந்தியாவின் நான்கு பெரும் நுகர்வுத் தலங்களான தில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை நகரங்களுடன் இணைக்கப்பட்டன.

இரண்டாவது கட்டத்தில் (1981-85), 136 உற்பத்தித் தலங்கள், 290 நகரங்களுடன் இணைக்கப்பட்டன. கூட்டுறவுப் பால் சங்கங்கள் 43,000 ஆக உயர்ந்தன.

மூன்றாம் கட்டத்தில் (1985-1996), உற்பத்தித் தலங்கள் 173 ஆகவும், கூட்டுறவுச் சங்கங்கள் 73,000 ஆகவும் உயர்ந்தன. கால்நடை நலம், கால்நடைத் தீவன தொழிற்சாலைகள், நவீனமயமாக்கல் போன்றவற்றுள் முதலீடுகள் செய்யப்பட்டன.

மூன்றாவது கட்டம் முடிகையில், அமெரிக்காவைவிட அதிக பாலை உற்பத்திசெய்து, உலகின் மிகப் பெரும் பால் உற்பத்தியாளராக விஸ்வரூபம் எடுத்தது. வெண்மைப் புரட்சி என்னும் திட்டம் வெற்றிகரமான ஊரக முன்னேற்றத் திட்டமாக ஒருங்கிணைக்கப்பட்டு, உற்பத்தியாளர் நலன் நாடும் இயக்கமாகப் பேருருக் கொண்டது.

வெண்மைப் புரட்சி தொடங்கிய 1970-ல் இந்தியாவின் பால் உற்பத்தி 2.2 கோடி டன்னாக இருந்தது. அது 2021-ல் 20 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. தாங்கள் உற்பத்திசெய்யும் பால் முழுவதும் கொள்முதல் செய்யப்படும், அதற்கான ஓரளவு சீரான விலை கிடைக்கும் என்னும் பாதுகாப்பான சூழலில், இந்தியப் பால் உற்பத்தியாளர்கள் செய்த அருஞ்சாதனை இது. இந்தியப் பால் உற்பத்தியாளர்களில் 80% பேர், 2-3 கால்நடைகளை வைத்திருக்கும் சிறு உழவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த முறை ‘ஆவின்’ பால் உங்கள் வீட்டை வந்தடையும்போது குழந்தைகளுக்கு இதைச் சொல்லுங்கள், “தேசியப் பால்வள மேம்பாட்டு வாரியத்தின் குழந்தை ஆவின் என்றால், ‘அமுல்’ தேசியப் பால்வள மேம்பாட்டு வாரியத்தின் தாய்; இரண்டையும் பெற்றெடுத்த தாய் குரியன். இன்று ஆவின் தன்னளவிலேயே ஒரு பேரியக்கம்!” என்று

வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா, ‘காந்திக்கும், படேலுக்கும் அடுத்து, குஜராத்துக்குப் பெரும் புகழைக் கொண்டுவந்தவர் குரியன்’ என்று தன் கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார். காந்திக்கும், வினோபாவுக்கும் அடுத்து, இந்திய ஊரக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உழைத்தவர் குரியன் என்றும் சொல்லலாம்!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பாலசுப்ரமணியம் முத்துசாமி | Balasubramanian Muthusamy

பாலசுப்ரமணியம் முத்துசாமி, தனியார் நிறுவனம் ஒன்றின் தலைமைப் பொறுப்பில் தான்சானியாவில் பணியாற்றுகிறார். ஈரோடு பகுதி கிராமத்தைப் பின்னணியாகக் கொண்ட இவர், வேளாண்மையும், ஊரக மேலாண்மையும் பயின்றவர். காந்தியப் பொருளியல், வணிகம், வேளாண்மை முதலிய தளங்களில் எழுதிவருபவர். காந்தியை இன்றைய தலைமுறைக்குக் கொண்டுசெல்லும், ‘இன்றைய காந்திகள்’ நூலின் ஆசிரியர்.


4

8





பின்னூட்டம் (3)

Login / Create an account to add a comment / reply.

Raja   3 years ago

அருமையான பதிவு.

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

Sivabalan Kannan   3 years ago

Sir i have a little confusion. Before, article series was written on AMUL. Is this related to that series. Or it's an another article?

Reply 1 0

Raja   3 years ago

அதன் தொடர்ச்சி போலத்தான், அமுல் என்ற நிறுவனத்தின் வளர்ச்சியை...அதன் உருவாக்கத்தின் பெரும் பங்கு வகித்த குரியன் பற்றி சொல்லி...இறுதியில் இதை போன்ற மாதிரியுடன் உருவாகி வெற்றி பெற்ற நம்ம ஊர் ஆவினையும் அமுலின் குழந்தை என்று சொல்லி முடிக்கிறார். 

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

இந்து மன்னன்குழப்பவாதிகள்என்.கோபாலசுவாமிபொதுச் சார்பியல் கோட்பாடுஅமைச்சரவைசகீப் ஷெரானி கட்டுரைஉம்மைத் தொகைவின்னி அண்ட் நெல்சன்நார்சிஸ்டுகளின் இருண்ட பக்கம்புதிய தாராளமயக் கொள்கைபாபர் மசூதி பூட்டைத் திறந்தது யார்?நான் அம்மா ஆகவில்லையேஇந்தியக் குழந்தைகளின் இன்றைய நிலைதேசிய அரசியல் கட்சிஎம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்தேவேந்திர பட்நவிஸ்வாஜ்பாய்உலகளாவிய வளர்ச்சிபொருளாதார மந்தநிலைஅம்ருத் மகோத்சவ்சமஸ் விபி சிங்புத்தக அட்டைஸரமாகோவின் உலகில் ஒரு வழிகாட்டிஓவியப் பாரம்பரியம்தொழில்நுட்பப் புரட்சிமின் வாகனங்கள்அருந்ததி ராய் ஆசாதிதேர்வுச் சீர்திருத்தம்க்ரெடிட் கார்டுநீரிழிவு

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!