கட்டுரை, இன்னொரு குரல் 3 நிமிட வாசிப்பு

போராட்டம் என்றாலே வன்முறையா: பத்ரிக்கு ஒரு மறுப்பு

பாலசுப்ரமணியம் முத்துசாமி | Balasubramanian Muthusamy
11 Oct 2021, 5:00 am
2

அக்டோபர் நான்காம் தேதியன்று, ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சி, உத்தர பிரதேசத்தில் லக்கிம்பூர் கெரியில் நிகழ்ந்த வன்முறையை முன்வைத்து, இது அரசியலாகிறதா என்னும் கேள்வியை எழுப்பியது. இந்த விவாதத்தில், பங்குகொண்ட பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி, இரண்டு முக்கியமான வாதங்களை முன்வைத்தார். 

பெருந்திரளாக மக்களைத் திரட்டி நிகழ்த்தப்படும் போராட்டங்களில், வன்முறை தவிர்க்க முடியாதது என்றார். இதற்கான உதாரணமாக, ஒத்துழையாமை இயக்கத்தின்போது நிகழ்ந்த சௌரி சௌரா வன்முறை நிகழ்வைச் சுட்டிக்காட்டி, ‘வன்முறையில்லாமல் போராட்டம் நடத்துவது காந்தியாலேயே முடியாத ஒன்று’ என்று அவர் சொன்னது முதல் வாதம். 

அடுத்து, "குடியரசில், பிரச்சினைகளை எதிர்கொள்ள இரண்டே வழிகள்தாம் உள்ளன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு, சட்டங்களை இயற்றும் அதிகாரம் உள்ளது. ஒருவேளை, அப்படி இயற்றப்படும் சட்டங்கள் ஒப்புக்கொள்ளும் வகையில் இல்லாமலோ அல்லது அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானதாகவோ இருந்தால், நீதிமன்றத்துக்குச் செல்லலாம். அல்லது, அடுத்த தேர்தலில், வாக்குகள் வழியே வேறொரு அரசைக் கொண்டுவரலாம். ஆனால்,  இந்த இரண்டு வழிகளைத் தவிர்த்து, நாங்கள் எங்களுக்கென்று ஒரு போராட்ட வடிவத்தை வைத்திருக்கிறோம், அதை நாங்கள் செயல்படுத்துவோம் எனச் சொல்வது  அராஜகம்” என்றார். இது அவர் முன்வைத்த இரண்டாவது வாதம். 

இந்த வாதங்கள் பொதுவெளியில் விவாதிக்கப்பட வேண்டியவை.

அஹிம்சை போராட்டம் தோல்வியா?

முதலாவது காந்தியப் போராட்டத்தில் நிகழ்ந்த வன்முறை. தென்னாப்பிரிக்காவில் தொடங்கி, காந்தி தன் போராட்டங்களில் வன்முறை இருக்கக் கூடாது என்பதை வலியுறுத்தியதை மிகச் சரியாக உதாரணம் காட்டும் பத்ரி, சௌரி சௌராவில் நடந்த வன்முறையில் 22 காவலர்கள் தீயிட்டுக் கொல்லப்பட்டதைச் சுட்டி, 'பெரும் போராட்டங்களில் வன்முறையைத் தவிர்ப்பது என்பது காந்தியாலேயே முடியாத விஷயம்' என முடிக்கிறார். இது உண்மைக்குப் புறம்பான கூற்று. 

ஒத்துழையாமை இயக்கத்தை அடுத்து, காந்தி தொடங்கிய உப்புச் சத்தியாக்கிரகப் போராட்டம், அகிம்சை வழிப் போராட்டத்தின் உச்சமெனக் கருதப்படுகிறது. அரச வன்முறைக்கெதிராக, அஹிம்சையையே ஆயுதமாக முன்வைத்து அந்தப் போராட்டத்தில் பெருவெற்றி பெற்றார் காந்தி. 

பின்னர் நடந்த 'வெள்ளையேனே வெளியேறு இயக்கம்' தொடங்கி, அமெரிக்கக் கறுப்பினத்தவர்களுக்கான சம உரிமைப் போராட்டம், தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கான போராட்டம் முதல் சென்ற ஆண்டு அமெரிக்காவில் அரச வன்முறையை எதிர்த்து வெற்றிகரமாக நிகழ்ந்த, ‘கறுப்பின மக்கள் வாழ்க்கை முக்கியம் போராட்டம்' (Black lives matter movement) வரை, குடியுரிமைப் போராட்டங்களின் மைய நாதமாக இருந்து ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளைப் பெற்றுத் தந்திருப்பது, காந்தியின் அஹிம்சைப் போராட்ட வழிமுறைகளே.  இதற்கீடான வெற்றிகளை, அஹிம்சைக்கு மாற்றாக இருக்கும் வன்முறைப் போராட்டங்கள், கடந்த 100 ஆண்டுகளில் மக்களுக்கு வெற்றியைப் பெற்றுத்தரவில்லை என்பதே உண்மை. 

எனவே, சௌரி சௌரா வன்முறையை முன்வைத்து, மக்கள் போராட்டங்களில், வன்முறையைத் தவிர்ப்பது, காந்தியாலேயே முடியாத விஷயம் என நிறுவ முயற்சிப்பது, காந்திய வரலாற்றை முற்றிலும் அறியாத அல்லது அறிந்தும் வரலாற்றைத் தனக்கேற்றபடி வளைக்கும் ஒருவரின் கூற்றாகவே பார்க்க முடியும்.

போராட்டம் அடிப்படை உரிமை

அதேபோல, 'குடியரசில் இரண்டே வழிகள்தாம் உள்ளன. பாராளுமன்றம் அல்லது சட்ட மன்றம் இயற்றும் சட்டங்கள் பிடிக்கவில்லையெனில், நீதிமன்றத்தை நாடுவது அல்லது அடுத்த தேர்தலில் வாக்குகள் வழி அரசை மாற்றுவது' என்கிறார் பத்ரி. இதுவும் முழு உண்மை அல்ல.

இந்திய அரசமைப்புச் சட்டம் 19(1) பிரிவு, இந்தியக் குடிமக்களுக்குக் கீழ்க்கண்ட உரிமைகளை வழங்குகின்றது.

  பேச்சுரிமை

  ஆயுதங்களின்றி, அமைதியான முறையில் கூடுதல்

  தங்களுக்கென அணிகளை, சங்கங்களை உருவாக்கும் உரிமை

அரசின் செயல்களுக்கெதிரான மாற்றுக் கருத்துகளை, எவரும், அரசியல் சட்டம் 12, ‘அரசு’, என வரையறுத்துள்ள நிறுவனங்களுக்கெதிராக முன்வைக்க முடியும் எனச் சொல்கிறது.

இந்த உரிமைகள், இந்திய அரசமைப்புச் சட்டம் கொடுத்துள்ள அடிப்படை உரிமைகளாகும். 

மக்களாட்சியில், அரசு என்பது சம உரிமை பெற்ற சாதாரண மக்களின் தேர்வு வழியே உருவாக்கப்படும் ஒரு நிர்வாக அமைப்பு.  எனவே அந்த மக்களின் நலனுக்காக உழைத்தலே அதன் தலையாய கடமை. 

‘அரசுக்குச் சட்டமியற்றும் அதிகாரம் உள்ளது’ என பத்ரி சொல்வது, முற்றதிகாரம் (absolute Power) அல்ல. அதனால்தான், அரசமைப்புச் சட்டத்தை இயற்றிய நம் முன்னோர், அரசின் செயல்பாடுகளுடன் முரண்படுதலை, வெளிப்படுத்துதலை, அணி திரளுதலை, ஆயுதங்களின்றி போராட்டங்களை முன்னெடுத்தலை, அரசமைப்புச் சட்டத்தில் அடிப்படை உரிமைகளாக உருவாக்கியுள்ளார்கள்.

ஜனநாயகக் குடியரசு

இந்த விவாதத்தில் பத்ரி, ‘குடியரசு’ என்னும் பதத்தை உபயோகிக்கிறார். இந்தியா வெறும் குடியரசல்ல, ஜனநாயகக் குடியரசு!  ஒரு ஜனநாயக் குடியரசின் நோக்கம், மக்கள் நலனாக மட்டுமாகவே இருக்க வேண்டும். அரசு கொண்டுவந்திருக்கும் வேளாண் சட்டங்கள், உழவர் நலனைப் பாதிக்கும் என உழவர்கள் கருதினால், அவர்கள் தங்கள் முரண்பாட்டை, அமைதியான வழிகளில் போராட்டமாக நடத்துவது அரசியல் சட்டம் கொடுத்திருக்கும் அடிப்படை உரிமையே தவிர, அவர் சொல்வதுபோல அராஜகமல்ல.

இந்தியாவில் வேலைவாய்ப்பு உரிமைச் சட்டம், கல்வி உரிமைச் சட்டம், உணவுப் பாதுகாப்புச் சட்டம் போன்ற மக்கள்நலச் சட்டங்கள் உருவாகி வர 60 வருடங்கள் பிடித்தன. ஆனால், அரசுடன் முரண்படும் உரிமையைக் குடிமக்களின் அடிப்படை உரிமையாக, இந்தியா என்னும் ஜனநாயகக் குடியரசின் தொடக்கத்திலேயே நமது முன்னோர்கள் உருவாக்கினார்கள். அதன் காரணம், தனி மனித சுதந்திரமும், அரசுடன் முரண்படும் உரிமையும், மக்களாட்சியின் உயிர்நாடி என்னும் ஆழ்ந்த அறிதல். அவை மறுக்கப்பட்டால், மக்களாட்சி பிறழ்ந்து காலப்போக்கில், மையப்படுத்தப்பட்ட யதேச்சதிகார அரசமைப்பு உருவாக வழியமைத்துவிடும் என்பதே வரலாறு நமக்குச் சொல்லும் உண்மை.  

இந்தியாவின், அமெரிக்காவின் மிகச் சிறந்த கல்வி நிலையங்களில் தொழிற்கல்வி பயின்று, பதிப்பாளராகவும், தமிழ்ச் சூழலில் அறிவுஜீவியாகவும் அறியப்படும் பத்ரி முன்வைத்திருக்கும் வாதங்கள், வரலாறு மற்றும் அரசமைப்புச் சட்டம் பற்றிய முழுமையான அறிதலின்றி வெளிப்பட்டுள்ளது ஆச்சர்யமளிக்கிறது!

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பாலசுப்ரமணியம் முத்துசாமி | Balasubramanian Muthusamy

பாலசுப்ரமணியம் முத்துசாமி, தனியார் நிறுவனம் ஒன்றின் தலைமைப் பொறுப்பில் தான்சானியாவில் பணியாற்றுகிறார். ஈரோடு பகுதி கிராமத்தைப் பின்னணியாகக் கொண்ட இவர், வேளாண்மையும், ஊரக மேலாண்மையும் பயின்றவர். காந்தியப் பொருளியல், வணிகம், வேளாண்மை முதலிய தளங்களில் எழுதிவருபவர். காந்தியை இன்றைய தலைமுறைக்குக் கொண்டுசெல்லும், ‘இன்றைய காந்திகள்’ நூலின் ஆசிரியர்.








பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   3 years ago

100% மக்கள் ஆதரவு பெற்ற அரசு என்ற ஒன்று எப்பொழுதும் இருந்ததில்லை. இதை பத்ரி அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

Reply 4 0

Login / Create an account to add a comment / reply.

Saran Viveka   3 years ago

இதை இரண்டு வழிகளில் பார்க்கிறேன். 1. ஒரு சமூக அமைப்பில் ஏற்கனவே நிலையான சமூக மற்றும் பொருளாதார  பாதுகாப்பை  பெற்றிருப்பவர்கள், மாற்றங்களை விரும்புவது இல்லை, தமக்கு சாதகமான அந்நிலையே தொடர விளைவார்கள்,  அந்நிலைக்கு  குந்தகம் விளைவிக்கும் எந்த ஒரு செயல்பாடு சார்ந்தும் எதிர்மனநிலையே கொண்டிருப்பார்கள். அதற்க்கு முதல் தேவை அதிகார அமைப்பு வலுவானதாக இருக்க வேண்டும், எனவே எப்போதும் இந்த அதிகார அமைப்பு சார்ந்த இவர்கள் ஆதரவு வலுவானதாக இருக்கும். அதை எல்லா நிலைகளிலும் இவர்கள்  ஆதரிப்பதை காணலாம். Even they  prefer leaders whom they see as decisive, authoritative and dominant, even if they are morally questionable.They only see even democratic way protest as a disorder, threat to their present security, feel tremendous anxiety if power is challenged. To bring a sense of safety back into their lives, they latch on to authoritarianism.  Insecurity and weakness are linked to the rise of autocrats and the erosion of democracy. 2. தமக்கு உகந்த ஆடசி நடைபெறும்போது  அதற்க்கு எதிரான நியாயமான மக்கள் போராட்ட்ங்களை கூட  "அநியாயமாக" பெயர் பண்ணுவது. ஒரு பெரும் அமைதியான மக்கள் போராடடத்தில் நடக்கும் ஒன்று இரண்டு சிறு மாற்று நிகழ்வுகளை சுட்டி காட்டி மொத்த போராடடத்தையும் கொச்சைப்படுத்தி அவற்றை அநியாயங்களாக வகைப்படுத்துவார்கள். அதே  நேரத்தில் தமக்கு விருப்பமற்ற ஆடசி இருக்கும் காலத்தில் நடக்கும் தொடர் போராடடத்தை  "இரண்டாம் சுதந்திரப்போர்" என்று முழங்கி சிலிர்ப்படைவார்கள். மக்கள் போராட்டத்துக்கு பதில் "நீதிமன்றத்துக்குச் செல்லலாம். அல்லது, அடுத்த தேர்தலில், வாக்குகள் வழியே வேறொரு அரசைக் கொண்டுவரலாம். ஆனால்,  இந்த இரண்டு வழிகளைத் தவிர்த்து, நாங்கள் எங்களுக்கென்று ஒரு போராட்ட வடிவத்தை வைத்திருக்கிறோம், அதை நாங்கள் செயல்படுத்துவோம் எனச் சொல்வது  அராஜகம்” என்ற இந்த சிந்தனை இந்த இரண்டு மனநிலைகளில் இருந்தே கிளந்தெழுகிறது.

Reply 15 0

Login / Create an account to add a comment / reply.

நாராயணமூர்த்திகாந்தியின் வர்ணாசிரம தர்மம்சிறுகதைகள்எதிர்க்கட்சிகள்எகிறி அடி அணுகுமுறைசுந்தர் சருக்கைக் கட்டுரைதுணிச்சலான புதிய பார்வைடயாலிஸிஸ்வர்த்தகம்வகுப்பறைபாஜக நிராகரிப்பு370 இடங்கள்உயர் நீதிமன்ற தீர்ப்புஅருஞ்சொல் சமஸ்வருமானச் சரிவு… பாஜகவைப் பின்னுக்கு இழுக்கும் சரிவதொடர்ந்து மறுக்குது அரசாங்கம்குறட்டைபாஜகவின் கவலைகளைப் பெருக்கும் ஆறாவது கட்டம்சுய தம்பட்டப் பொருளாதாரம்!முஸ்லிம்கள்அருஞ்சொல் சுகுமாரன்பொருளாதார இறையாண்மைகேப்டன் பிரபாகரன்மொழியியல் தத்துவம்ஆன்லைன் வகுப்புயானைஹிஜாப்: ஆதரவு – எதிர்ப்புமத்திய பல்கலைக்கழகம்சட்டப் பிரச்சினைநவீன காலம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!