அமுல். இந்தியாவின் மிகப் பெரும் உணவு வணிக நிறுவனம். அதன் சென்ற ஆண்டு விற்பனை ரூ.52,000 கோடி. இன்று 75-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் ‘அமுல்’ பல வகைகளில் ஒரு முன்மாதிரி சாதனை நிறுவனம். ‘அமுல்’ வெற்றியே இந்தியாவெங்கும், வெண்மைப்புரட்சி என்னும் திட்டமாக உருவெடுத்தது. ‘ஆவின்’, ‘மில்மா’, ‘விஜயா’, ‘நந்தினி’, ‘வேர்கா’ என மாநிலம்தோறும் பால் கூட்டுறவு நிறுவனங்கள் தொடங்கப்பட்டு, இன்று உலகின் மிகப் பெரும் பால் உற்பத்தியாளராக இந்தியா ஓங்கி வளர உதவியுள்ளது. இடைத்தரகர்கள் இல்லாத வணிக அமைப்பு என்பதோடு, உற்பத்தியாளர்களுக்கு அதிகபட்ச வருவாயை வழங்கும் அமைப்பும் இதுவே. இந்தியாவின் கோடிக்கணக்கான விவசாயிகளின் புன்னகை முகமாக உருவெடுத்திருக்கும் ‘அமுல்’ நிறுவனத்தின் இந்த வைரத் தருணத்தை இந்த வாரம் முழுவதும் கொண்டாடுகிறது ‘அருஞ்சொல்’. அதன் ஒரு பகுதியாகவே இந்தக் கட்டுரை வெளியாகிறது.
ஒரு புதிய தலைமுறையை வார்த்தெடுக்கும் நோக்கத்தோடு, காந்தி 1920-ம் ஆண்டு, குஜராத் வித்யா பீடம் என்னும் கல்வி நிறுவனத்தை உருவாக்கினார். தன் வாழ்நாள் இறுதிவரையில், அதன் வேந்தராக இருந்தார். கலேல்கர் (1928 – 1935); வல்லபபாய் படேல் (1935-1948), மொரார்ஜி தேசாய் (1948-1963) போன்ற தலைவர்கள் நீண்ட காலம் அதன் துணை வேந்தர்களாக இருந்து, காந்திய வழியில் அந்நிறுவனத்தை நடத்தியுள்ளனர்.
1929-ம் ஆண்டு துணை வேந்தராக இருந்த கலேல்கருக்கு, காந்தி ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில், "இந்தியப் பொருளாதாரம், அதன் அடித்தளத்தில் இருந்து வலுவாகக் கட்டமைக்கப்பட வேண்டும். அந்தக் கட்டமைப்பை உருவாக்க, நமது பொருளாதார நிலை பற்றிய சரியான தரவுகள் திரட்டப்பட வேண்டும். அப்படித் திரட்டப்படும் தரவுகள், அறிவியல்பூர்வமான ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு, அந்த ஆய்வுகளின் வழியே தீர்வுகள் உருவாக்கப்பட வேண்டும். அப்படி உருவாக்கப்படும் தீர்வுகள், எந்தச் செப்பிடுவித்தைகளாலும் மாற்ற முடியாத வகையில் இருக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
ஜே.சி.குமரப்பாவின் பொருளாதார ஆய்வு
அப்படி ஒரு பொருளாதார ஆய்வை மேற்கொள்ள இறைவனே அனுப்பியதுபோல, அந்த ஆண்டே பொருளாதார அறிஞர் ஜே.சி.குமரப்பா காந்தியை வந்தடைந்தார். குமரப்பா தமிழர். அம்பேத்கர் படித்த கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் பயின்றவர். குமரப்பா பொருளாதார ஆய்வின் இயக்குநராகவும், வல்லபபாய் படேல் தலைவராகவும் நியமிக்கப்பட்டு, மட்டார் என்னும் ஒரு தாலுக்கா தேர்ந்தெடுக்கப்பட்டு, அங்கு முறையான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அந்த ஆய்வு, இந்திய ஊரகச் சமூகத்தின் வேளாண் கட்டமைப்புக் குறைபாடுகள், பிரிட்டிஷ் அரசின் பிற்போக்குத்தனமான வேளாண் வரிகள், பொருளாதாரச் சுரண்டல் வணிக முறைகள் மற்றும் அரசு ஊழியர்களின் அதீத ஊதியம் போன்றவை ஏற்படுத்தும் பாதிப்புகளை அறிவியல்பூர்வமாக ஆய்வுசெய்து பெறப்பட்ட தரவுகள் மூலம் முன்வைத்தது.
இந்தப் பணிகளின் அடுத்த மைல்கல்லாக, 1934-ம் ஆண்டு நடைபெற்ற வாராணசி காங்கிரஸில், தனது பொருளாதாரக் கட்டமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக அகில இந்திய ஊரகத் தொழில் கூட்டமைப்பு என்னும் நிறுவனத்தை உருவாக்கும் திட்டத்தை காந்தி முன்மொழிந்தார். அதன் தலைவராக காந்தியும், செயலராக குமரப்பாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்நிறுவனம் வார்தாவில் அமைக்கப்பட்டது. விஞ்ஞானிகள் சி.வி.ராமன், ஜே.சி.போஸ் உள்பட 18 பேர் இதன் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டனர். கிராமியத் தொழில்களுக்கான மேம்பட்ட தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டன. அரிசி அரவை ஆலை, எண்ணெய் ஆலைகள், தேன் சேகரிப்புத் தொழில்நுட்பம், காகிதம் செய்யும் தொழில்நுட்பம், சோப் தயாரித்தல் போன்றவை நவீனமாக்கப்பட்டது அதன் தொடக்க காலச் சாதனைகளாக இருந்தன. இவை இந்தியாவெங்கும் எடுத்துச்செல்லப்பட்டு, காதி கிராம வணிக நிறுவனங்களாக நாடெங்கும் உருவாகின. இந்த நிறுவனங்கள் இன்றும் கோடிக்கணக்கான மக்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கி வருகின்றன.
பெருந்திரளானோரின் உற்பத்தி
இந்தக் காலகட்டத்தில், காங்கிரஸ் இயக்கத்தில் இருந்த பலருக்கும், காந்திக்கும் பொருளாதார அணுகுமுறைகளில் பெரும் வேறுபாடுகள் உருவாகின. காங்கிரஸின் முக்கியமான தலைவர்கள், நேரு, போஸ் முதல் ஜெயப்பபிரகாஷ் நாராயண் வரை பலரும், ஐரோப்பாவில் உருவாகிவந்த தொழில்நுட்பம், நவீனத் தொழிற்சாலைகள் மீது பெரும் நம்பிக்கை வைத்திருந்தார்கள். அவர்கள் கிராமங்களைப் பிற்போக்கான அலகுகளாகப் பார்த்தார்கள். ஆனால், காந்தி கிராமத்தில் வசிக்கும் கடைநிலை மனிதருக்கு பொருளாதாரத் தற்சார்பை உருவாக்கி, அதன் மீது நாட்டின் பொருளாதாரம் கட்டமைக்கப்பட வேண்டும் என முயற்சித்தார்.
நவீனத் தொழிற்சாலைகளின் இயந்திரங்கள், உற்பத்தியிலிருந்து மனிதரை விலக்கிவிடும். அது நீண்ட கால நோக்கில், பொருளாதார அடித்தட்டின் கடைநிலையில் உள்ள மனிதரை பாதிக்கும் என நம்பினார் காந்தி. ஆக, பெரிய தொழிற்சாலைகளைக் கொண்டு பெரும் உற்பத்தி என்பதற்கு மாற்றாக, பெருந்திரளானோருக்கு வாய்ப்பளிப்பதாக பெரும் உற்பத்தி இருக்க வேண்டும் என்பதே அவர் முன்வைத்த செயல்திட்டமாக இருந்தது. (Production by Masses and Not Mass production by large industries)
இப்படியாக காந்திய வழியில் உருவாக்கப்பட்ட காதி கிராமத்தொழில் நிறுவனங்கள் மற்றும் பால் உற்பத்திக் கூட்டுறவு நிறுவனங்கள், இன்று 3.22 கோடி மக்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கிவருகின்றன. இந்தியாவின் மரபான தனியார் துறை, 1.1 கோடி மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குகிறது. பொதுத்துறை நிறுவனங்கள், 1.25 கோடி மக்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கின்றன. ஒப்பீட்டளவில், காந்தியத் தொழில் நிறுவனங்களே இன்றும் இந்தியாவில் அதிக மக்களுக்கான வாழ்வாதாரமாக விளங்குகின்றன.
காந்தியத் தொழில்முறையின் மிக முக்கியமான எடுத்துக்காட்டு, பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு நிறுவனமாகும். வல்லபபாய் படேலின் வழிகாட்டுதலில், குஜராத்தின் ஆனந்த் என்னும் ஊரில் தொடங்கிய ‘அமுல்’ நிறுவனம் உலகின் மிகப் பெரும் ஊரக மேம்பாட்டுத் திட்டங்களுள் ஒன்றாக உருவெடுத்தது. 'பெருந்திரளானோருக்கு வாய்ப்பளிக்கும் உற்பத்தி' என காந்தி சொன்னதுபோல், இதில் இன்று 1.76 கோடி சிறு பால் உற்பத்தியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். 1950-ம் ஆண்டு 1.7 கோடி டன்னாக இருந்த பால் உற்பத்தி, 2020-ல் 20 கோடி டன்னாக உயர்ந்து, இந்தியா உலகின் மிகப் பெரும் பால் உற்பத்தியாளராக அமுல் மாறியுள்ளது. இது எப்படித் தொடங்கியது?
கேடா பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு நிறுவனம்
1945-46ம் ஆண்டுவாக்கில், குஜராத்தின் கேடா மாவட்டத்தில், பால் உற்பத்தியாளர்கள் ஒரு பெரும் பிரச்சினையைச் சந்தித்தனர். கேடா மாவட்டத்திலிருந்து, பாலைக் கொள்முதல் செய்துகொண்டிருந்த பால்சன் என்னும் நிறுவனத்தை நடத்திவந்த பார்சி வணிகர், பால் உற்பத்திக்கான சரியான விலையைக் கொடுப்பதிலும் கொள்முதலிலும் பிரச்சினை செய்தார். இதனால், பால் உற்பத்தியாளர்கள் நஷ்டம் அடைந்தனர்.
பாதிக்கப்பட்ட விவசாயிகள், தங்கள் தலைவரான வல்லபபாய் படேலிடம் சென்று தங்கள் பிரச்சினைகளைச் சொல்லி, அதற்கான தீர்வை உருவாக்கித் தருமாறு கேட்டனர். வல்லபபாய் படேல், தனது தளகர்த்தரான மொரார்ஜி தேசாயை அழைத்தார். பால் உற்பத்தியாளர்கள் தனியார் வணிகர்களை நம்பியிருக்காமல், அவர்களை இணைத்து அவர்களுக்கான ஒரு நிறுவனத்தை உருவாக்கிட உதவிசெய்யுமாறு பணித்தார்.
மொரார்ஜி தேசாய் களத்தில் இறங்கி பிரச்சினைகளை ஆராய்ந்தார். விவசாயிகளின் பிரதிநிதிகளில் ஒருவராக இருந்த திருபுவன் தாஸ் படேல் என்பவரின் செயல்பாடுகள், அவரை மிகவும் கவர்ந்தது. பால் உற்பத்தியாளர்களை ஒன்றிணைத்து, உற்பத்தியாளர்களின் நலனைப் பாதுகாக்கும் ஒரு நிறுவனத்தை உருவாக்க வேண்டும் என்று முடிவெடுத்தார். அதன் தலைவராக இருக்குமாறு, திருபுவன் தாஸ் படேலைக் கேட்டுக்கொண்டார். முதலில் மறுத்தவர் பின்னர் மொரார்ஜி தேசாயின் வற்புறுத்தலால் பொறுப்பேற்றார். 1946-ம் ஆண்டு, கேடா மாவட்டத்தின் இரண்டு கிராமப் பால் உற்பத்தியாளர்கள் இணைந்து, 'கேடா' பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு நிறுவனம் திருபுவன் தாஸ் படேலின் தலைமையில் உருவானது.
பால் உற்பத்தியாளர்கள் தாங்கள் உற்பத்திசெய்த பாலை, 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பம்பாய் நகரில் வசிக்கும் நுகர்வோருக்கு அனுப்பிவந்தனர். கோடை காலங்களில், பாலை அவ்வளவு தொலைவு அனுப்புவதில் சிரமங்கள் இருந்தன. பால் கெட்டுப்போவது அடிக்கடி நடந்தது.
அப்போது 'அமுல்' பால் பண்ணையை அடுத்து, ஒரு அரசு பால் நிறுவனம் இருந்தது. அதில் இந்திய அரசு செலவில் அமெரிக்கா சென்று படித்து வந்த ஒரு இளைஞர் பணியில் இருந்தார். மேல்படிப்புக்காக அரசு அவருக்கு கல்வி உதவித் தொகை வழங்கியிருந்தது. அந்த உதவி பெற்றதனால், அவர் அரசாங்கத்தில் குறிப்பிட்ட காலம் வரை பணியாற்ற வேண்டும் என்னும் நிபந்தனையின் காரணமாக, அங்கே வேண்டா வெறுப்பாகப் பணியாற்றிவந்தார்.
'அமுல்' பால் உற்பத்தியாளர்களின் தலைவரான திருபுவன் தாஸ் படேல், அந்தப் படித்த இளைஞரை அணுகி, பால் கெட்டுப்போவதைத் தடுக்க ஏதும் தொழில்நுட்பம் உள்ளதா என விசாரித்தார். அந்த இளைஞரும், அதற்கான தொழில்நுட்பத் தீர்வைச் சொன்னார். பிரச்சினை தீர்ந்ததில் மகிழ்ந்துபோன அவர், அந்த இளைஞரை 'அமுல்' நிறுவனத்தில் பணிக்குச் சேர முடியுமா எனக்கேட்டார். இளைஞரும் அதற்கு ஒத்துக்கொண்டார். அவர் பெயர் வர்கீஸ் குரியன். இதன் பின் நிகழ்ந்ததைத்தான், உலகம் சரித்திரம் எனச் சொல்கிறது.
நாளை பேசுவோம்...
பின்னூட்டம் (2)
Login / Create an account to add a comment / reply.
Ganeshram Palanisamy 3 years ago
காங்கிரஸ் என்பது ஏதோ ஊழல் செய்ய மட்டுமே உருவான கட்சி என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் நீங்கள் அதை முற்றிலும் மாற்றிவிட்டீர்கள்.
Reply 2 0
M. Balasubramaniam 3 years ago
காங்கிரஸ் பேரியக்கத்தில் பல அபாரமான நிர்வாகிகள் இருந்துள்ளார்கள். இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் அபுல் கலாம் ஆசாத் தொடங்கி, சிதம்பரம் வரை. நம் ஊரில் சமகால வரலாறு சரியாகப் பேசப்படுவதில்லை. https://tamizhini.in/2021/09/28/%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b0%e0%af%81%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9/
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.