கட்டுரை, அரசியல், கூட்டாட்சி 4 நிமிட வாசிப்பு

இந்திய மக்களின் மகத்தான தீர்ப்பு!

பாலசுப்ரமணியம் முத்துசாமி | Balasubramanian Muthusamy
16 Jun 2024, 5:00 am
0

லகின் மிகப் பெரும் மக்களாட்சி நாடான இந்தியாவின் 2024 தேர்தல் முடிவுகள், நாட்டை ஒரு புதிய இலக்கை நோக்கித் திருப்பியிருக்கின்றன. மிக வலிமையான தலைவர், வலுவான கட்டமைப்பைக் கொண்ட அரசியல் கட்சி என்னும் நிலையிலிருந்த மோடியையும் பாஜகவையும், இந்திய மக்கள் தலையில் தட்டி அமர்த்தியிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

பெரும்பான்மைக் கனவின் சரிவு

ராமருக்குக் கோவில் கட்டி, அதில் முதல் நாள் விழாவுக்குத் தானே முன்னின்று கலந்துகொண்டு, அதைத் தன் மடிச் செல்ல ஊடகங்கள் வழியே தொடர் காணொளியாக இந்திய நாட்டின் முன்னே ஒரு விழாவை நடத்தினார் மோடி. அவர் ராமரை வழிநடத்திச் செல்வதுபோல வட இந்தியாவில் ஊடகங்கள் பரப்புரை செய்தன. அந்தக் கோவில் திருவிழாவில் கலந்துகொள்ள வராத எதிர்க்கட்சிகளை ‘இந்துக்களின் எதிரி’ எனச் சித்தரிக்கும் முயற்சிகள் நடந்தன.

அதற்கும் சில காலம் முன்பு, நாடாளுமன்றத் திறப்பு விழாவுக்கு, தமிழ்நாட்டின் சைவ ஆதீனங்களை டெல்லிக்கு வரவழைத்து, அந்தக் கட்டிடத்தில் அவர்கள் கொண்டுவந்த ‘செங்கோ’லை நிறுவினார். 

மோடி 2024 தேர்தல் சமயத்தில் அவரிடம் எடுக்கப்பட்ட நேர்காணல் ஒன்றில், “தன் அம்மா மறைந்த பின்னர், தான் ஒரு மனிதப் பிறப்பாகப் பிறந்ததாக உணரவில்லை. கடவுள் தன்னை ஏதோ ஒரு காரணத்துக்காக பூமிக்கு அனுப்பியிருக்கிறார் என நினைக்கிறேன்” எனச் சொன்னார்.

இந்த முறை 400 நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்னும் முழக்கத்தை முன்வைத்தார். 400 உறுப்பினர்கள் வென்றால், இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தை மாற்றுவோம் என இரண்டாம் நிலைத் தலைவர்கள் சிலர் பேசத் தலைப்பட்டனர். தன்னை இந்திய நாட்டின் மன்னர் என மோடி தம்மை முன்வைக்காதது மட்டும்தான் குறை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

மக்களின் முடிவு

ஊடகங்கள் மோடியையே முன்னிறுத்தின. 2019ஆம் ஆண்டு தேர்தலில் பெற்ற எண்ணிக்கையைவிட அதிகம் பெற வாய்ப்புகள் உண்டு என்றே பெரும்பாலான ஊடகங்கள் சொல்லின.

காந்தியடிகளின் ஒரு அறிவுரை உண்டு. ‘நான் உங்களுக்கெல்லாம் ஒரு மந்திரத் தாயத்து அளிக்கிறேன். முடிவெடுக்கையில், அது சரியா, தவறா என்னும் ஐயப்பாடு எழும்போதோ அல்லது உமது அகந்தையோ, சுயநலமோ மேலெழும்போதோ, ஒரு ஏழ்மை மிக்க, நலிவுற்ற முகத்தை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். நீங்கள் செய்யவிருக்கும் காரியம் அல்லது எடுக்கவிருக்கும் முடிவு, தீட்டவிருக்கும் திட்டம், அந்தப் பரம ஏழைக்கு எந்தவிதத்திலாவது பயன்படுமா என உங்களையே நீங்கள் கேட்டுக்கொள்ளுங்கள். உங்கள் சந்தேகங்கள் மறைந்துபோவதைக் காண்பீர்கள்’ என்பதுதான் அது.

2024 தேர்தல், இந்திய மக்களின் முன்பு அப்படி ஒரு கேள்வியை முன்னிறுத்தியது. ’ஜெய் ஸ்ரீராம்’, ‘ஜெய் ஜெகன்னாத்’, ‘மருதமலை முருகனுக்கு அரோகரா’ என இடத்துக்கு ஏற்ப இந்து மதவாத கோஷத்தை முன்னிறுத்தி, இந்துத்துவமே தங்கள் வழி என இந்து மதத்தை முன்னிறுத்தும் ஓர் ஆட்சிக்கு இந்த முறை அவர்கள் கேட்பதுபோல 400 சீட்களைக் கொடுக்கப்போகிறீர்களா? என்பதே அந்தக் கேள்வி.

அப்படியொரு கேள்வி இந்தியச் சமூகத்தின் முன்பு வைக்கப்பட்டபோது, இந்திய மக்கள் காந்தியின் தாயத்துபோல, பாபா சாகேப் அம்பேத்கர் அளித்த அரசமைப்புச் சட்டமே இந்தியாவை வழிநடத்த வேண்டும் எனத் தீர்மானித்திருக்கிறார்கள். 

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

2024 மக்கள் தீர்ப்பு சொல்வது என்ன?

ப.சிதம்பரம் 09 Jun 2024

ராமர் அளித்த தோல்வி

தேர்தல் விதிமுறைகளை அலட்சியப்படுத்தி, சிறுபான்மையினரான இஸ்லாமியர் மீதான வெறுப்புப் பிரச்சாரத்தை முன்வைத்தார் மோடி. ராமர் கோவிலுக்குப் போகாதவர்கள், இந்துக்களின் சொத்துக்களை இஸ்லாமியர்களுக்குக் கொடுத்துவிடுவார்கள் என்றெல்லாம் எதிர்க்கட்சியினர் மீது ஆதாரம் இல்லாத பொய்களைச் சொன்னார்.

எதிர்க்கட்சிகள், குறிப்பாக காங்கிரஸ், 400 எண்ணிக்கை கிடைத்தால், பாஜக இந்திய அரசமைப்புச் சட்டத்தை மாற்றிவிடும் எனப் பிரச்சாரம் செய்தது. பெண்களுக்கும், ஏழைகளுக்கும், உழவர்களுக்கும் திட்டங்களை அறிவித்தது. 

இந்தியச் சமூகத்தின் ஊடுபாவுகள் வழியாக, 2024ஆம் ஆண்டு தேர்தலில், ஒரு தீர்ப்பு வெளியாகியுள்ளது. அது, இந்துத்துவத்தை முன்னெடுக்கும் மோடிக்கும், பாஜகவுக்கும், அறுதிப் பெரும்பான்மை கொடுக்கப்போவதில்லை என்னும் அருமையான முடிவு. மாநிலத்திலும் மத்தியிலும் பாஜக ஆட்சி நடக்கும் உத்தர பிரதேச மக்களே மிகத் தெளிவாக பாஜகவின் மதவாத ஆட்சிக்கான ஆதரவை விலக்கிக்கொண்டிருக்கிறார்கள்.  

சென்ற தேர்தலைவிட இந்தத் தேர்தலில், பாஜக 63 சீட்களை இழந்துள்ளது. அதில், 29 தொகுதிகளை உத்தர பிரதேசத்தில் மட்டுமே இழந்துள்ளது. தங்களது ஆட்சியின் மிகப் பெரும் சாதனைகளுள் ஒன்றான ராமர் கோவில் கட்டப்பட்ட அயோத்தி நகரை உள்ளடக்கிய ஃபைஸாபாத் தொகுதியில், பாஜக தோற்றுள்ளது. வென்றவர் சமாஜ்வாதி கட்சியின் தலித் வேட்பாளர். 

அயோத்தியைச் சுற்றியுள்ள பல தொகுதிகளிலும், பாஜக தோற்றுள்ளது. இஸ்லாமியரை மறைமுகமாகக் குறிக்கும் வகையில், ‘அதிகம் பிள்ளை பெறுபவர்கள்’ என மோடி தாக்கிப் பேசிய ராஜஸ்தானின் பன்ஸ்வாரா தொகுதியில் பாஜக தோற்றுள்ளது.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

சீர்திருத்ததைத் தொடரட்டும் ராகுல்

காஞ்சா ஐலய்யா 09 Jun 2024

காங்கிரஸுக்கான பாடம்

பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், தனது தேர்தல் வாக்குறுதியில் பல மக்கள் நலத் திட்டங்களை முன்வைத்தது. 

அவை ஏழைப் பெண்களுக்கு வருடம் ஒரு லட்சம் ரூபாய், மத்திய அரசுப் பணியிடங்களில் காலியாக உள்ள 30 லட்சம் பணியிடங்களை நிரப்புவது, உழவர்களுக்கான குறைந்தபட்சக் கொள்முதல் விலையைச் சட்டப்பூர்வமாக்குவது, ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கூலியை ரூ.400 ஆக உயர்த்துவது என்பன. 

இதற்கு மக்கள் தங்களது ஆதரவை உயர்த்திக் கொடுத்திருக்கிறார்களே தவிர, ஆட்சியைத் தரவில்லை. முக்கியமான வட இந்திய மாநிலங்களில், அதன் கட்சிக் கட்டமைப்பு பலகீனமான ஒன்றாக இருப்பதே இதன் முக்கியக் காரணம். 

இதைச் சரிசெய்யாமல், காங்கிரஸ் ஆட்சியில் அமர வாய்ப்பே இல்லை. இன்னும் ஐந்தாண்டுகள் உள்ளன, கட்சிக் கட்டமைப்பைச் சரிசெய் என இந்தியச் சமூகம் தேர்தல் முடிவுகள் வழியே சொல்லியிருக்கிறது.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

மோடி ஏன் அப்படிப் பேசினார்?

அரவிந்தன் கண்ணையன் 02 Jun 2024

கூட்டணி ஆட்சி எனும் முடிவு

தேர்தல் முடிவுகள் வெளியானதும், பாஜக தரப்பு பெரிதும் ஏமாற்றத்துக்குள்ளானது. 400க்கும் மேலே எனக் கோஷமிட்ட பாஜக, தனிப் பெரும்பான்மை கிடைக்காமல், கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டிய சூழல் உருவானது.

எதிர்க்கட்சிகள் அதை வெற்றியாகப் பேசிக்கொண்டார்கள். தேர்தல் முடிவுகள் வெளியான மாலை நடக்கவிருந்த பாஜக கொண்டாட்டம் நடக்கவில்லை. 

கூட்டணி ஆட்சி என்பது அரசியல் நிலையாமையை உருவாக்கும். நாடு பலகீனமாகிவிடும், நிர்வாகத்தில் சுணக்கம் நிகழும் என்பது போன்ற கருத்துகள் ஊடகங்களிலும், சமூகத்திலும் எழுவதைப் பார்க்க முடிகிறது.

ஆனால், கூட்டணி ஆட்சி என்பது ஜனநாயகத்தின் பரிணாமம் என்பதுதான் உண்மை. இந்தியா விடுதலை அடைந்தபோது, 650 குறுநாடுகள், பிரிட்டிஷ் நேரடியாக ஆட்சிசெய்த பகுதி எனப் பல்வேறு பூகோளப் பகுதிகள், சமூகங்கள் ‘இந்தியா’ என்னும் குடையின் கீழ் இணைந்தன. தொடக்க காலத்தில் அவை ஒன்றாக இணைந்து இயங்க வேண்டிய அவசியம் இருந்தது. வடக்கிலும், தெற்கிலும், வடகிழக்கிலும் தன்னாட்சிக் குரல்கள் எழுந்த வண்ணம் இருந்தன. வறுமை தாண்டவமாடியது. அப்போது, இந்தியா என்னும் கூட்டமைப்பு சிதறிவிடாமல் இருக்க ஒரு மையப்படுத்தப்பட்ட அமைப்பும், தலைமையும் தேவைப்பட்டது.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

நாட்டை எப்படி பாதுகாப்பது?

ராமச்சந்திர குஹா 02 Jun 2024

பொருளாதாரச் சீர்த்திருத்தங்கள்

விடுதலை பெற்ற 40 ஆண்டுகளில், இந்தியா ஒரு நவீன சமூகமாக உருவெடுத்தது. அதன் பின்னர், உலகமயமாக்கலின் விளைவாக, உலகுடன் மிக நெருங்கிய சமூகப் பொருளாதாரமாக மாறியுள்ளது. இன்று ‘இந்தியா’ என்பது அனைத்துச் சமூகங்களும் ஒப்புக்கொண்ட ஒரு கருதுகோளாகிவிட்டது. 

அதேசமயம், இந்தியாவின் அரசியல் பொருளாதாரத்தைத் தீர்மானித்துக்கொண்டிருந்த கங்கைச் சமவெளி மாநிலங்களின் பொருளாதாரச் செல்வாக்குக் குறைந்து மேற்கு, தெற்கு மாநிலங்கள் இன்று பொருளாதாரத்தில் வலிமை மிக்க சக்திகளாக மாறியுள்ளன. 

அந்த மாநிலங்கள் அரசியல் தளங்களில், தங்களுக்கான சமூக - அரசியல் பொருளாதாரப் பிரதிநிதித்துவத்தைக் கோருகின்றன. தேசியக் கட்சியான காங்கிரஸின் வலிமை குறைந்து, அதிலிருந்து பிரிந்துபோன தலைவர்களின் உழைப்பில் பல மாநிலங்களில் வலுவான பிராந்தியக் கட்சிகள் உருவாகியுள்ளன. அவை ஏற்கெனவே உள்ள பிராந்தியக் கட்சிகளோடு இணைந்து தங்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுள்ளன.

விடுதலை பெற்ற 75 ஆண்டுகளில், 50 ஆண்டுகள் (காங்கிரஸ் - 40, பாஜக - 10) பெரும்பான்மை ஆட்சியும், 25 ஆண்டுகள் மைனாரிட்டி / கூட்டணி ஆட்சியும் நடந்துள்ளன. முதல் 30 ஆண்டுகளில், இந்தியா தனது அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்கியது. மிக முக்கியமான பங்களிப்பு அது. ஆனால், 1989 தொடங்கி 25 ஆண்டுகளில், கூட்டணிகளின் ஆட்சியில், இந்தியா மிகப் பெரும் பொருளாதாரச் சீர்திருத்தங்களை, மக்கள் நலக் கொள்கைகளை உருவாக்கியுள்ளது. 

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

GST Needs to go!

பாலசுப்ரமணியம் முத்துசாமி | Balasubramanian Muthusamy 09 Jun 2024

கூட்டணி ஆட்சியின் நன்மைகள்

இந்தியாவின் வெற்றிகரமான ரிசர்வ் வங்கியின் ஆளுநர் எனப் போற்றப்படும் ஒய்.வி.ரெட்டி, “1990 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில்தான் இந்தியப் பொருளாதாரம் மிகப் பெரும் வளர்ச்சி விகிதத்தை எட்டியுள்ளது. பெரும்பான்மைக் கட்சி ஆட்சியைவிட, கூட்டணிக் கட்சிகள் ஒன்றிணைந்து, ஒருமித்த கருத்துகள் வழியே உருவாகிவரும் அரசுகள் ஒரு வகையில் மிக நல்ல வளர்ச்சியைக் கொடுத்திருக்கின்றன. அரசியல் நிலையாமை இருந்தாலும், நிர்வாகக் கொள்கைகளை உருவாக்குவதில் ஒருமித்த கருத்துகள் இருந்தது பாராட்டத்தக்கது” எனச் சொல்லியிருக்கிறார்.

கூட்டணி ஆட்சி உருவாகிவரும்போது, அரசியல் கட்சிகளின் அதீத அரசியல் நிலைகள் மட்டுப்படுத்தப்படுகின்றன. அனைவரும் ஒப்புக்கொள்ளும் வகையில் அவற்றின் நிர்வாகம் அமைகிறது. மக்களாட்சியின் சிறப்பே, ஒரு நாட்டில் இருக்கும் அனைத்துத் தரப்பினருக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்பதுதான். அந்தப் பிரதிநிதித்துவம், பெரும்பான்மை ஆட்சியைவிட, கூட்டணி ஆட்சியில் கிடைக்கத்தான் சாத்தியங்கள் அதிகம்.

உலகின் பல்வேறு வளர்ந்த நாடுகளில், கூட்டணி ஆட்சி என்பது இயல்பான ஒன்றாகிப் பல காலம் ஆகிவிட்டது. ஜெர்மனி, ஃப்ரான்ஸ், ஆஸ்திரியா, ஆஸ்திரேலியா, இத்தாலி, ஜப்பான், ஸ்விட்சர்லாந்து, நியூஸிலாந்து என வெற்றிகரமான உதாரணங்கள் உள்ளன.

எனவே, தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை எனப் புலம்பிக்கொண்டிருக்காமல், ஆளுங்கட்சிக் கூட்டணி அடுத்த 5 ஆண்டுகளுக்கான நிர்வாகப் பணிகளைத் தொடங்க வேண்டும். கூட்டணி ஆட்சி எனக் கிண்டல் செய்யும் எதிர்க்கட்சிகள், 25 ஆண்டுகளாக அவர்கள் நடத்திவந்ததும் கூட்டணி ஆட்சிதான் என்பதை உணர்ந்து, அவர்களின் பங்களிப்பைச் செய்ய வேண்டும்.

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

2024 மக்கள் தீர்ப்பு சொல்வது என்ன?
சீர்திருத்ததைத் தொடரட்டும் ராகுல்
இடதுசாரிகளுக்குத் தேவை புதிய சிந்தனை
மோடி ஏன் அப்படிப் பேசினார்?
நாட்டை எப்படி பாதுகாப்பது?
GST Needs to go!

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பாலசுப்ரமணியம் முத்துசாமி | Balasubramanian Muthusamy

பாலசுப்ரமணியம் முத்துசாமி, தனியார் நிறுவனம் ஒன்றின் தலைமைப் பொறுப்பில் தான்சானியாவில் பணியாற்றுகிறார். ஈரோடு பகுதி கிராமத்தைப் பின்னணியாகக் கொண்ட இவர், வேளாண்மையும், ஊரக மேலாண்மையும் பயின்றவர். காந்தியப் பொருளியல், வணிகம், வேளாண்மை முதலிய தளங்களில் எழுதிவருபவர். காந்தியை இன்றைய தலைமுறைக்குக் கொண்டுசெல்லும், ‘இன்றைய காந்திகள்’ நூலின் ஆசிரியர்.


3






தனிச் சுடுகாடுமுற்காலச் சேரர்கள்சோஷியல் காபிடல்ரெங்கையா முருகன்திராவிட மாதிரிகடல்வழி வாணிபம்முக்கிய நகரங்கள்எழுதுவது எப்படி? சொல்கிறார்கள் உலக எழுத்தாளர்கள்!ஒடிசா ரயில் விபத்துவருவாய் ஏய்ப்புதேசியத் தலைநகர அதிகாரம் யாரிடம்?இந்திரா என்ன நினைத்தார்?முதலுதவிமா.சுப்பிரமணியம்மது வகைகள்பொய்யுரைகள்கருத்துரிமை: மகாவித்வான் காட்டிய எதிர்வினைஇந்திய அரசியல் கட்சிகள்சமஸ் வள்ளலார் கட்டுரைஇந்து தேசம்Samas articleஆண் பெண் உறவுச்சிக்கல்தற்கொலைமகா.இராஜராஜசோழன் கட்டுரைஇந்திய அறத்தின் இரு முகங்கள்காங்கிரஸ் பற்றிய என் நிலையில் மாற்றம் ஏன்?பொதுச் சார்பியல் கோட்பாடுநவீன இந்திய இலக்கியம்வருமான வரித் துறைஓப்பன்ஹைமர்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!