கட்டுரை, கலாச்சாரம், இலக்கியம் 15 நிமிட வாசிப்பு
தாழ்வுணர்வு கொண்டதா தமிழ்ச் சமூகம்?
பேராசிரியர் பர்வீன் சுல்தானாவுக்கு சமீபத்தில் ஜெயமோகன் ஒரு நீண்ட நேர்காணல் அளித்திருந்தார். அதில் அவர் வெளியிட்டிருந்த சில கருத்துகள் பொதுவெளியில் சர்ச்சைகளை உருவாக்கின. முக்கியமாக இரு விஷயங்களைத் தொட்டு ஒரு கருத்தை அவர் அழுத்தமாகப் பேசியிருந்தார். ஒன்று, கீழடி தொடர்பாக நிறைய தமிழர்கள், தமிழ் வரலாறு தொடர்பாக வெளியிட்டுள்ள காணொளிகள் வரலாற்றை மிகைப்படுத்திச் சொல்கின்றன; இதற்குக் காரணம் தமிழர்களின் தாழ்வுணர்வே எனச் சொல்லியிருந்தார். இரண்டு, திராவிட இயக்கம் தமிழுக்கு அதிகம் பங்களிக்கவில்லை என்றும், தனித் தமிழுக்காக வாதிட்ட அண்ணா, கலைஞர் போன்றவர்களின் உரைகளில், சம்ஸ்கிருதம் அதிகம் இடம்பெற்றிருந்தது என்றும் சொல்லியிருந்தார்.
வசைகளும் சந்தையும்
ஜெயமோகனின் அந்தக் காணொளிகள் யூடியூபில் ஏற்றப்பட, அவற்றின் கீழே வசைகள் வந்து குவிந்தன. ஜெயமோகனின் வாசகர் ஒருவர் பர்வீன் சுல்தானாவுக்குப் பேட்டியளித்ததை விமர்சித்து ஜெயமோகனுக்கு கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்துக்கான பதிலில், தனது கருத்துகளைப் பொதுவெளியில் பேச வேண்டியது அவசியத்தை விளக்கி, ‘சந்தையில் சுவிசேஷம்’ என்னும் மார்ட்டின் லூதரின் சொற்றொடரைப் பாவித்துப் பதில் எழுதியிருந்தார் ஜெயமோகன்.
தமிழகத்தின் துடிப்பான பெண் அரசியலர்களில் ஒருவர் ஜோதிமணி. கரூர் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர். கீழ்மத்திய வர்க்க வீட்டில் பிறந்து, கல்லூரிக் கல்வி பயின்று, 1993 பஞ்சாயத்துத் தேர்தலில் வென்று, ஊராட்சித் தலைவரானவர். 24 ஆண்டுகள் உழைப்பிற்குப் பின் குடும்ப, அரசியல் பின்புலம் எதுவும் இல்லாமல், மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வென்றவர். இன்றைய வாக்கரசியலுக்குத் தேவையான சாதுர்யத்தையும், தனிப்பட்ட நேர்மையையும் தக்க வைத்துக்கொண்டு போராடிக்கொண்டிருப்பவர்.
ஜோதிமணியின் ஒவ்வொரு முகநூல் நிலைத்தகவலுக்கும் பல நூறு பின்னூட்டங்கள் வருகின்றன. அவை ஒவ்வொன்றிலும் குறைந்தது 4-5 ட்ரோல்கள் அவரைத் தனிப்பட்ட முறையில் தாக்கி எழுதியிருப்பதைப் பார்க்க முடியும். பெரும்பாலானவை காண சகிக்காதவை.
ஜெயமோகன் சந்தை என்று குறிப்பிடும் பொதுத்திரளில் எதிர்ப்படும் எதிர்வினைகள் எல்லோருக்குமே இப்படிதான் வருகின்றன. சந்தையின் குணம் அது. இயேசு கிறிஸ்துவைச் சிலுவையில் அறையச் சொல்லிகூட சந்தை குரல் கொடுக்கும். சுவிசேஷம் சொல்லச் செல்பவனுக்கும் அது தெரியும். தமிழ்ச் சந்தையில் மட்டுமல்ல; ஆந்திர, மராத்திய, கன்னடிய, இந்தி சந்தைகளிலும் இதுதான் நிலைமை. இந்தியாவுக்கு வெளியே போனால், ஒவ்வொரு நாட்டிலும் இப்படி சமூக உதாரணங்களை நீட்டிக்கொண்டே போகலாம். ட்ரம்ப் அமெரிக்காவின் அதிபராகவே தேர்ந்தெடுக்கப்பட்டவர்!
இதுதான் அளவுகோலா?
சுவிசேஷம் சொல்லச் செல்பவன் எப்போதும் பொதுத்திரளின் பங்களிப்பின் இன்றியமையாத தன்மையையும், அம்மனிதர்களின் மன எல்லைகளையும் உணர்ந்த முதிர்ச்சியோடு புரிந்துகொண்டுதான் அங்கே செல்வான். அந்த முதிர்வும் அதனால் உருவாகும் கனிவுமே அங்கே சுவிசேஷம் சொல்லச் செல்பவனின் அடிப்படைத் தகுதிகள். அங்கே பேச வேண்டிய பொருளைச் சரியான சொற்களில் பேச வேண்டிய அவசியத்தை அவன் அறிவான்.
தமிழின் தொன்மையைப் பற்றிய பெருந்திரள் வெளிப்பாட்டை வைத்து மொத்த தமிழ்ச் சமூகத்தையும் தாழ்வுணர்வு கொண்டதாக ஒரு மதிப்பீட்டை முன்வைக்கிறார் ஜெயமோகன். அதற்கு வரும் வசை எதிர்வினைகளை அறிவார்ந்த நிபுணர்களின் எதிர்வினைகள்போல ஜெயமோகனுக்கு அவர் வாசகர்கள் பாவித்துக் கடிதங்கள் எழுதுகிறார்கள். அதை ஆமோதிக்கும் விதமாகவே அவர் செய்கையும் அமைகிறது. இது சரியா?
உண்மையில், கீழடி தொடர்பான விவாதங்களில் ஈடுபட வேண்டுமானால், தொல்லியல் அறிஞர்கள், இது தொடர்பாக ஆய்வுசெய்த அரசு அதிகாரிகள் போன்றவர்களிடம் ஒரு சீரிய தளத்தில் செய்ய வேண்டும்.
தமிழக அரசு கீழடி தொடர்பான சிறு புத்தகங்களை வெளியிட்டுள்ளது. அவற்றில், ஏதாவது பொய்யான வரலாற்றுத் தகவல்கள் இருந்தால், அவை சுட்டப்பட்டு, பொதுவெளியில் விமர்சிக்கப்பட வேண்டும். இல்லாவிடில் அதையொட்டி ஓர் ஒப்பீட்டு வரலாற்றை எழுதலாம். அது பொதுமக்களிடையே ஒரு சமநிலையான உணர்தலை உருவாக்கும். இதுதான் அறிவுஜீவிகள் செய்ய வேண்டியது. அதை விட்டுவிட்டு, பொதுவெளியில் வைக்கப்படும் சில காணொளிகளை, வசைகளை முன்னெடுத்து வெளிச்சமிட்டு, மொத்த சமூகமே தாழ்வுணர்வு கொண்டது என ஒரு மதிப்பீட்டை ஜெயமோகன் முன்வைப்பது அறிவார்ந்த செயலா?
கீழடி போன்ற ஓர் அகழ்வாராய்ச்சித் திட்டங்களை, தமிழக அரசு அல்லது அரசியலர்கள் ஏன் முன்னெடுக்கிறார்கள்? ஏன் தமிழ்நாடு மட்டும், தன் மொழி அடையாளங்களைப் பொதுவெளியில் உரத்து முன்வைக்கிறது? இங்குதான் ஜெயமோகன் அந்த நேர்காணல்களில் பேசிய விஷயங்களை முன்வைத்துப் பேச வேண்டியிருக்கிறது.
ஏன் தமிழகம் தனித்து யோசிக்கிறது?
தமிழகம், கேரளம் போன்ற மாநிலங்கள் இந்திய அரசின் எல்லைகளுக்குள் தங்களுக்கான தனித்துவத்தை முன்னிறுத்தும் சமூகங்கள். மொத்த நாடும் தீபாவளியைப் பெரும் பண்டிகையாகக் கொண்டாடும்போது, கேரளம் ‘ஓணம்’ எனத் தனக்கே உரித்தான பண்டிகையைக் கொண்டாடுவது நாளுக்கு நாள் கூடுதல் அர்த்தம் பெறுவதை ஓர் உதாரணமாகச் சொல்லலாம். ஒரு கூட்டணியாட்சி அமையும் சூழலில், அரசியல் பேரத்தின் ஒரு பகுதியாக, தமிழ் மொழியைச் செம்மொழியாக்கும் அறிவிப்பைத் தமிழ்நாடு பெற்றுக்கொண்டதை இன்னோர் உதாரணமாகச் சொல்லலாம்.
இந்தியா என்னும் தேசத்துக்குள், தங்களது மாநிலத்துக்கான ஒரு தனித்துவத்தை வலிந்து முன்வைக்கின்றன இச்சமூகங்கள். இந்தச் சமூக, அரசியல் போக்கை, அரசியல் அறிவியலாளர் பிரேர்ணா சிங், ‘துணைத் தேசியம்’ என வரையறுக்கிறார்.
இந்திய விடுதலை பெற்ற காலத்தில் தொடங்கி, ஜனநாயகத்தின் எல்லைகளுக்குள் தங்களுக்கான தனித்துவமான அடையாளங்களை உருவாக்கிக்கொண்டு, அதன் வழியே அரசியல் அதிகாரங்களைப் பெற்று வழிநடத்திய மாநிலங்கள், ஒப்பீட்டளவில் அதிக சமூக, பொருளாதார மேம்பாடுகளை அடைந்திருக்கின்றன என்பது பிரேர்ணா சிங் முன்வைக்கும் கோணம். அதை அவர் தரவுகளுடன் முன்வைத்து எழுதிய புத்தகம் பரவலாகப் பேசப்பட்டது (How Solidarity Works for Welfare: Subnationalism and Social Development in India, Cambridge University Press 2016).
இப்புத்தகம், அமெரிக்காவின் அரசியல் அறிவியல் கூட்டமைப்பின் 'அரசியல் அறிவியல் மற்றும் உலக உறவு'களில் சிறந்த புத்தகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, உட்ரோ வில்சன் பரிசைப் பெற்ற புத்தகம். அமெரிக்க சமூகவியல் கழகத்தின், சிறந்த சமூக வரலாற்றுக்கான பேரிங்டன் மூர் பரிசையும் பெற்ற புத்தகம். பிரேர்ணா சிங் தற்போது, ப்ரௌவுன் பல்கலைக்கழகத்தின், வாட்சன் நிறுவனத்தில், அரசியல் மற்றும் பன்னாட்டு உறவுகள் துறையில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார்.
ஜெயமோகனின் பங்களிப்பு என்ன?
சமீபத்தில் ஜெயமோகனைப் பற்றிய ஒரு கட்டுரையை நண்பர் ஒருவர் எழுதச் சொன்னார். எவ்வளவு யோசித்தும், என்னால் ஜெயமோகனின் பங்களிப்பைப் பற்றிய ஒரு கட்டுரையை உருவாக்க முடியவில்லை. என்னை எழுதத் தூண்டிய அரசியல், பொருளியல் தளங்களில் எதிர்வினை புரியவைக்கும் ஆசிரியரும், நண்பருமான ஜெயமோகன் என் மனதில் இருக்கிறார். நான் அவரது இலக்கிய ஆக்கங்களை மரியாதையுடன் படிக்கும் ஒரு சாதாரண வாசகன் மட்டுமே. அந்த இடத்தில் ஜெயமோகனின் முதன்மைப் பங்களிப்பான இலக்கியத்தை எழுத எனக்குத் தகுதிகள் போதாது. நாளை ஒருவேளை எழுத வேண்டும் என்னும் கட்டாயம் வந்தாலும், கொஞ்சம் உழைத்து, அவரது இலக்கிய ஆக்கங்களைப் பற்றி எழுதுவேனே தவிர மற்ற தளங்களில் அவருக்குப் பங்களிப்பும், நிபுணத்துவமும் குறைவு என எழுத மாட்டேன்.
அதேபோல, திராவிட இயக்கங்களின் முதன்மையான பங்களிப்பு, அதிகார அரசியல் தளத்தில் உள்ளது. பிராமணர்கள் அல்லாதோரின் முழக்கம் என ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமைக் குரலாக 1915களில் தொடங்கிய அது, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைப் பேசியது. அது ஆட்சியில் இருந்த காலத்தில்தான் பிரதிநிதித்துவம் செய்த மக்களுக்காகக் காரியங்கள் செய்தது.
சென்னை மாநகராட்சியில் குழந்தைகள் பள்ளிக்கு வர வேண்டி, காலை உணவை அறிமுகம் செய்த இயக்கம் அது. சமூகத்தின் பல்வேறு தரப்புகளையும் பிரதிநிதித்துவம் செய்யும் வகையில், கல்வியிலும் வேலைவாய்ப்புகளிலும் இடஒதுக்கீட்டைக் கொண்டுவந்தது. உள்ளூர் மேலாதிக்கச் சாதியினரால் சீரழிக்கப்பட்டுக்கொண்டிருந்த இந்துக் கோயில்களை அரசுடைமை ஆக்கியது.
பின்னர், காந்தி என்னும் சூறாவளி நாட்டை வழிநடத்திச் செல்லும் வேகத்தில், 1937இல் காங்கிரஸ் இயக்கம் இங்கு ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றி, பின்னர் அடுத்த 30 ஆண்டுகளைத் தன் கையில் கொண்டுவந்தபோதும்கூட திராவிட இயக்கமே சமூகத் தளத்தில் செல்வாக்கு செலுத்தியது. காமராஜர்தான் அங்கே கோலோச்ச முடிந்தது; ராஜாஜி அல்ல!
காமராஜர் தமிழகத்தின் கூறுகளான சமூக நீதிக்கும், சமூக நலத் திட்டங்களுக்குமே முன்னுரிமை அளித்தார். இட ஒதுக்கீட்டுக் கொள்கையை உறுதிசெய்யும் முதல் அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை, அவரது அழுத்தத்தின்பேரில்தான் நேரு செயல்படுத்தினார்.
அண்ணாவின் முக்கியத்துவம் என்ன?
நீதிக் கட்சியின் சரிவைப் பார்த்த பெரியார் சமூக இயக்கமாக மட்டுமே திராவிட இயக்கம் செயல்பட வேண்டும் என நினைத்தார். ஆனால், அரசியல் அதிகாரமில்லாமல், சமூக மாற்றங்களைச் செய்ய முடியாது என நினைத்த அண்ணா, அவரிடம் இருந்து விலகினார்.
அண்ணா எதிர்த்தது காங்கிரஸ் என்னும் மிகப் பெரும் சாம்ராஜ்யத்தை. லட்சியவாத கால அரசு எனச் சொல்லி காங்கிரஸ் ஆட்சி செய்யவந்தாலும், அதிலும் போதாமைகள் இருக்கும் என்னும் காலகட்டம் உருவானது. இந்திய மக்களாட்சியில் எதிர்க்கட்சிகளின் இடம் பெரிதாகத் தொடங்கியது. கால மாற்றத்தை உணராத காங்கிரஸ் தன்னை மாற்றிக்கொள்ளத் திணறியது.
தமிழ் அடையாளம், ஒடுக்கப்பட்டோர் நலன், மக்களுக்கான அடிப்படைத் தேவைகள் என்னும் தளங்களில், மக்கள் முன் தன்னை காங்கிரஸுக்கு மாற்றான வருங்காலமாக முன்வைத்தார் அண்ணா. எழுத்து, நாடகம், சினிமா என்னும் தளங்களில் பொதுத்தளத்தில் வலுவாக இயங்கியது திராவிட இயக்கம். ஜனநாயகம் தந்த சாத்தியங்களில் புதிய வழிகளில் அரசியல் போராட்டங்களை, கருத்துகளை முன்வைத்து, பெரிய பின்புலம் எதுவுமில்லாமல், காங்கிரஸ் பேரரசை வீழ்த்தினார் அண்ணா.
இன்றைய பொதுப்புத்தி, முனைப்பு என்றாலே தொழில் முனைப்பைப் பற்றி மட்டுமே பேசுகிறது. டாடா, அம்பானி தொடங்கி சுந்தர் பிச்சை வரை. ஆனால், அரசியல் தளங்களில் உருவான முனைப்பையும், முனைவோரையும் யாரும் பேசுவதில்லை. தமிழகத்தில், அதைப் பேசுவது பற்றிய தீண்டாமையைப் பத்திரிக்கையாளர்களும், தீவிர இலக்கியவாதிகளும் உருவாக்கிவந்திருந்தார்கள்.(இன்றைய சூழலில் அரசியலைப் பத்தி நான் எப்படிப் பேச முடியும் என்பது சுந்தர ராமசாமியின் ஆப்த வாக்கியங்களுள் ஒன்று!)
இந்திய ஜனநாயகத்தின் மிகப் பெரும் தலைவர்களுள் ஒருவர் அண்ணா. அவர் உருவாக்கிய பாதையில் தொடர்ந்தது திமுக. அதிலிருந்து பிளந்து அதிமுக உருவானது. திராவிடக் கட்சிகளின் முதன்மை அடையாளம் மக்கள் நல அரசியல். மக்கள் நல அரசியலில், அவர்கள் பல முக்கியக் காரியங்களை இருவருமே செய்தார்கள்.
தமிழ்நாடு என்னும் பெயர் மாற்றம், சீர்திருத்தத் திருமணத்துக்கான சட்ட அங்கீகாரம், திருக்குறளுக்கான முக்கியத்துவம், தமிழுக்கான பல்கலைக்கழகம், பெண்ணுக்குச் சொத்துரிமை எனப் பல முன்னெடுப்புகள். இந்தியாவின் மக்கள் நல அரசியலின் முதுகெலும்பான பொது விநியோகக் கட்டமைப்பு, சத்துணவு, மகளிர் சுகாதார, கல்வி மேம்பாட்டுத் திட்டங்கள் எனச் சமூகத்தின் கடைநிலை மக்களுக்கான பல திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்தினார்கள்.
தமிழும் திராவிட இயக்கமும்
திராவிடக் கட்சிகள் தமிழுக்கு இன்னும் செய்திருக்கலாமா என்றால் செய்திருக்கலாம். ஆனால், இதைக் கூடச் செய்யாத சமூகங்களில் என்ன நிகழ்ந்திருக்கிறது என்னும் ஓர் ஒப்பீட்டையும் நாம் பார்க்க வேண்டும். மும்பையில், இன்று மராத்தி இல்லை. இந்தி மற்றும் குஜராத்தி மொழிகளே மேலாதிக்கம் செலுத்துகின்றன. பெங்களூரிலும் அப்படியே. கன்னடம் வேண்டும் எனக் கன்னடர்கள் போராடும் நிலை உள்ளது. ஆனால், தமிழகத்தில், தமிழ் என்பதற்கான தனித்துவம் தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இங்கே ஆட்சிக் கனவில் இருக்கும் தேசிய அரசியல் கட்சிகளைக்கூட உலக மேடைகளில் தமிழின் செம்மையைப் பேச வேண்டிய இடத்துக்குத் தள்ளியிருக்கிறது.
திராவிட அரசியல் கட்சிகளின் முதன்மைப் பங்களிப்பு அரசியலில், மக்கள் நலனில். மக்கள் நலன் பாதுகாக்கப்படுவதில்தான், அவர்களின் அரசியல் அதிகாரத்துக்கான ஊற்றுக்கண் இருக்கிறது என்பதை உணர்ந்தவர்கள் அதன் தலைவர்கள். உணராமல் தவறுகள் செய்து தங்களைத் திருத்திக்கொண்ட வரலாறும் உண்டு (இட ஒதுக்கீட்டுக்கான பொருளாதார அளவுகோல், கோவிலில் உயிர்ப்பலித் தடை போன்றவை உதாரணங்கள்).
திராவிட இயக்கம்தான் ரூபாய்க்கு 3 படி அரிசியை யோசிக்கச் சொன்னது. சொன்ன காலத்தில் சிரித்தவர்கள் வாழ்ந்த காலத்திலேயே அரிசி இலவசமானது. அது தொடர்ந்து இன்று அரசுப் பள்ளி மாணவிகளின் கல்லூரிப்படிப்புக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவி என்பது வரை வந்திருக்கிறது. ஜனநாயகம் என்பது மக்கள் நலனுக்காக என்றால், தமிழகத்தில் நடந்திருப்பது அதுதான்.
பொருளாதாரத்திலும் சாதித்தார்கள்
பொருளாதார வளர்ச்சிக்குத் தேவையான தொழில் துறைக்குத் தர வேண்டிய முக்கியத்துவத்தையும் உணர்ந்த ஆட்சியாளர்களாகத் திராவிட அரசியலர்கள் இருந்திருக்கிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சியை ஆட்சியில் இருந்து அகற்ற டாட்டா மோட்டார்ஸ் நிறுவனத்தை வங்காளத்தில் இருந்து வெளியேற்றியதுபோல மம்தா பானர்ஜி செய்த பெரும் வியூகப் பிழைகள் எதையும் இவர்கள் செய்யவில்லை.
1995ஆம் ஆண்டு இறுதியில், ஹுண்டாய் மற்றும் ஃபோர்டு நிறுவனங்கள் சென்னையில் தங்கள் ஆலைகளை உருவாக்கும் தொடக்க நிலையில் ஆட்சி மாறியது. ஆனால், தொழில் கொள்கை மாறவில்லை. பத்தாண்டுகளில் ஸ்ரீபெரும்புதூர் இந்தியாவின் ஆட்டோமொபைல் துறையின் முன்னணி மையமாக மாறியது.
1980களின் மத்தியில், தமிழ்நாடு தொழில் துறை மேம்பாட்டு நிறுவனத்தின் வசம் கைக்கடிகாரங்கள் தயாரிப்பதற்கான அனுமதி இருந்தது. ஆனால், செயல் திறனும் திட்டமும் இல்லை. அதனால், அது டாட்டா நிறுவனத்தை அணுகி, இணைந்து தொழில் செய்யும் ஒரு திட்டத்தை வைத்தது. அதில் அன்று சில கோடிகள் மட்டுமே முதலீடு செய்தது தமிழக அரசு. 'டைட்டன்' நிறுவனத்தில் முதன்மைப் பங்குதாரர் தமிழக அரசுதான். ஆனால், மேலாண்மை சுதந்திரம் முழுக்க டாட்டாவிடம். அன்றைய சில கோடிகள் முதலீட்டின், மேலாண்மையில் இடையூறு செய்யாத அரசின் கொள்கையின் இன்றைய மதிப்பு ரூ. 30 ஆயிரம் கோடிக்கு மேல்!
பெங்களூருவில் மென்பொருள் தொழில் அபரிதமான வளர்ச்சி கண்ட காலத்தில், மாநிலத்துக்கென மென்பொருள் கொள்கையை உருவாக்கி, 'டைடல் பார்க்' என்னும் மென்பொருள் கட்டமைப்பை உருவாக்கி அத்தொழிலில், தமிழ்நாட்டிற்கான பங்கை உறுதிசெய்தார்கள்.
மாநிலத்துக்குத் தொழில் திட்டங்கள் வரும் முன்பே, நிலத்தைக் கையகப்படுத்தி, நில வங்கிகள் கொண்ட தொழில்பேட்டைகளை உருவாக்கித் தயாராக வைத்திருக்கும் கொள்கைகளைத் தொடர்ந்து செயல்படுத்தினார்கள்.
இதைத்தான் பொருளாதாரப்பொருளாதாரப் பேராசிரியர் அமர்த்தியா சென், 'சுதந்திரச் சந்தை + மக்கள் நல அரசு' என்னும் கொள்கையாகப் பேசுகிறார். உலகச் சமூதாயத்தில் மேம்பட்ட மக்கள் நல அரசுகளான மேற்கு ஐரோப்பிய நாடுகள் செல்லும் பாதை இதுதான்.
சமூகம் என்பது மிக முக்கியமான ஒரு சமூகப் பொருளாதார அமைப்பு. பிரமிட் வடிவத்தில் இருக்கும், அதன் அடிப்பக்கத்தில் இருப்பவர்கள் பெரும்பாலும் அடிப்படைத் தேவைகளுக்காக ஓடிக்கொண்டிருப்பவர்கள். ஆனால், ஜனநாயகம் என்னும் அற்புதம் பிரமிடின் உச்சியில் இருப்பவருக்கும், அதன் கீழடியில் இருப்பவருக்கும் ஒரே மதிப்புள்ள வாக்கு என்னும் சமத்துவத்தைக் கொடுக்கிறது. இந்திய அரசமைப்புச் சட்டம் அனைவருக்கும் சமூக, பொருளாதார நீதி மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று சொல்கிறது.
சமூகத்தில் பண்பாடும், கலை இலக்கியமும் முக்கியமானவை. ஆனால், அவை மட்டுமே சமூகத்தின் முதன்மை இலக்காக இருக்க முடியாது. மக்களுக்கான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்வதும், சமூக மேம்பாட்டை நோக்கி அழைத்துச் செல்வதுமே ஓர் அரசியல் இயக்கத்தின் நோக்கமாக இருக்க முடியும். அந்தப் பயணத்தில், இந்தியாவில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், திராவிட இயக்கங்கள் எனப் பல சித்தாந்தங்களை முன்வைத்த அரசியல் இயக்கங்கள் உண்டு. அவர்களின் பங்களிப்பை அந்தத் தளங்களில் மதிப்பீடுசெய்வதே சரியான முறை.
வாதங்களை முன்வைக்கையில், எதிர்வாதத்தின் நேர்நிலைப் புள்ளிகளையும், போதாமைகளையும் முன்வைத்தலே மரபு. ஆனால், இந்த நேர்காணலில், விமர்சனங்கள் என்னும் பெயரில், திராவிட இயக்கத் தலைவர்களின் மீதும், சமூகத்தின் மீதும் பெரும்பாலும் எதிர்மறை விமர்சனங்களை மட்டுமே முன்வைத்து, மொத்தத் தமிழ்நாட்டின் மீதும் ஒரு முத்திரையைக் குத்துகிறார் ஜெயமோகன்.
தமிழர் மேட்டிமையம் பேசும் அரைகுறைகளின் செயல் முட்டாள்தனம் என்பதில் இரு வேறு கருத்துகள் இருக்க முடியாது. ஆனால், அதைப் பொதுமைப்படுத்திட முடியவே முடியாது.
இந்தியாவின் வறுமை மிகுந்த மாநிலங்களுள் ஒன்றாக இருந்து, கல்வி, சுகாதாரம், தொழில் என எல்லாத் துறைகளிலும் பெரும் பாய்ச்சலை உருவாக்கி, இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக வளர்ந்திருக்கும் சமூகத்தைப் பார்த்து, தாழ்வுணர்வு கொண்ட சமூகம் என ‘இலக்கியக் கண்ணாடி’யை மட்டுமே அணிந்துகொண்டு ஜெயமோகன் பேசுவது வேடிக்கையாக உள்ளது.
ஜெயமோகன் மட்டுமல்ல, மற்றவர்களும் தமிழர்களின் மிகையுணர்ச்சி, அதீதப் பழம்பெருமை பேசுதல் பற்றிய விமர்சனங்களை வைத்திருக்கிறார்கள். பா.சிங்காரம் தனது நாவலில், தமிழர்கள் பழம்பெருமை பேசுதல் பற்றிய விமர்சனத்தை முன்வைத்து, தமிழைவிடத் தொன்மையான நாகரீகங்களின் பழைமையை ஒப்பிட்டு, நமது தொன்மையை சமநிலையுடன் அணுக வேண்டியதன் அவசியத்தைச் சொல்கிறார். பழம்பெருமை பேசும் அதே சமூகத்திலிருந்து லட்சியவாதிகள் எழுந்து வருவார்கள் என்னும் நம்பிக்கையையும் அவர் படைப்பு இயல்பாகச் சொல்லிச் செல்கிறது. அந்த அணுகுமுறையில் ஒரு சமநிலை உள்ளது.
அண்ணா சாமானியர்களை அரசியல் அதிகாரத்தில் அமரச்செய்த பெரும் அரசியல் முனைவர். சாம்ராஜ்யத்தை வீழ்த்திய சாதாரணர். அவர் முன்வைத்த மக்கள் நல அரசியலே இன்று இந்தியா முழுவதும் முன்னெடுக்கப்படுகிறது. அந்த இயக்கத்தில் சறுக்கல்கள் உண்டு. எதிர்மறைக் கூறுகள் உண்டு. அவை இந்தியாவின் எல்லா அரசியல் கட்சிகளிலும் உண்டு. ஆனால், அவற்றைத் தாண்டி எஞ்சும் பங்களிப்பை நாம் பொருள் கொள்ளுதல் முக்கியம்.
இந்திய நிதர்சனமும் தமிழக நிதர்சனமும்
இன்றைய இந்திய அரசியலின் மைய அரங்கில் ஒற்றைத்தன்மைக்கு எதிராக திரண்டு நிற்கும் வலிய சக்தியாக சமூக நீதி அரசியல் உருவெடுத்திருக்கிறது. இதை நூறாண்டுகளுக்கு முன்னரே, 'ஏன் இந்தச் சமநிலையின்மை?' எனக் கேட்ட கட்சி நீதிக் கட்சி. ஆனால், இன்றும் ஒன்றிய அரசு நிறுவனங்களிலும், பல வட மாநிலங்களிலும், இதைக் கேள்வி கேள்வி கேட்கும் அரசியல் தலைமைகள் இல்லை. மக்களிடையே அறிதலும் இல்லை. அதனால்தான் விடுதலை பெற்ற 75 ஆண்டுகள் கழித்தும், இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தில் பெரும்பான்மையான நீதிபதிகள் உயர்சாதியினராக இருக்கிறார்கள். மத்திய அரசின் 91 செயலர்களில் 89 பேர் உயர்சாதியினராக இருக்கிறார்கள். 20-30% இருக்கும் உயர்சாதியினர், கல்வி, வேலைவாய்ப்பு புலங்களில், 70-80% இடங்களை ஆக்கிரமித்திருக்கிறார்கள்.
தமிழகத்தில் அப்படியல்ல. 80-85% இருக்கும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதியினர், அவர்களுக்கான கல்வி, அரசியல் தளங்களில் உள்ளார்கள். இது முழுமையான பிரதிநிதித்துவம் அல்ல. இங்கு இன்னும் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக நிலை மிக அவலமாக உள்ளது. ஆனால், மத்திய அரசு மற்றும் பல வட மாநில அரசு நிறுவனங்களில் இருப்பதைவிடப் பல மடங்கு மேலான சட்டபூர்வமான சமூகப் பிரதிநிதித்துவம் இங்கே உள்ளது.
மக்கள் நலத் திட்டங்கள், சமூக நீதி, சுதந்திரச் சந்தை என்னும் தளங்களில் பெரும் மேம்பாடுகளை, தமிழகம் கடந்த 50 ஆண்டுகளில் நிகழ்த்தியிருக்கிறது. இந்த ஒருங்கிணைந்த மேம்பாடுதான் திராவிட இயக்கங்களின் முதன்மைப் பங்களிப்பு. இந்தத் தளங்களில், இந்த இயக்கத்தின் செயல்திறன், விளைவுகள், மற்ற மாநிலங்களுடனான ஓப்பீடுகள் போன்றவற்றைப் அறிவார்ந்த தளங்களில் பேசுவதே சரியான முறை.
அதை விடுத்து, திராவிட இயக்கத் தலைவர்கள் இலக்கியவாதிகள் அல்ல, எழுத்தாளர்கள் அல்ல அவர்கள் பேச்சில் சம்ஸ்கிருதம் இருந்தது என்றெல்லாம் பேசிக்கொண்டே போகலாம். அது ஜெயமோகனுக்குப் பொருளாதார அறிவு குறைவு எனப் பேசும் முறைக்குச் சமமானது. அக்மார்க் அபத்தம்!
தொடர்புடைய கட்டுரைகள்:
எல்லோரையும் வரலாறு விசாரிக்கும் ஜெயமோகன்
சந்தையில் சுவிசேஷம்
8
3
1
பின்னூட்டம் (4)
Login / Create an account to add a comment / reply.
Saravanan P 3 years ago
Keezhadi findings are historically important for Tamilians, because they not only take back the history of the people at least by a few hundred years but also reveal their civilizational progress. Feeling proud of it is genuine and does not mean inferiority complex of the people. Secondly, mixing of few Sanskrit words in speeches by the Dravidian leaders shows their broadmindedness when it comes to languages and their concern was imposition of Hindi and, as people with self respect opposed it tooth and nail. Writer Jeyamohan's comments on the above two matters show his prejudicial mind and lack of civility.
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
Rajendra kumar 3 years ago
நிறைய தரவுகள் மற்றும் அற்புதமான பல கருத்துக்களை அறிய நல்லதொரு வாய்ப்பாக அமைந்தது..... இதுபோன்ற கருத்து மோதல்கள் தான் உண்மையை நோக்கி நம்மை நகர்த்தும்... நன்றி
Reply 2 0
Login / Create an account to add a comment / reply.
BALA 3 years ago
விமர்சனங்களை கருத்துக்களால் எதிர் கொள்ள வேண்டும். தமிழர்களும், திராவிட இயக்கங்களும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்களா ?..
Reply 2 0
Login / Create an account to add a comment / reply.
செல்வம் 3 years ago
ஜெயமோகனின் கட்டுரைகளைத் தொடர்ந்து வாசித்து வருபவர்கள் 'பெரியார் தத்துவ அறிஞரா?' 'தொ.பரமசிவன் ஆய்வாளரா?' என்பது போன்ற கிருத்துருவங்களை நன்கறிவார்கள். புரிந்துகொள்வார்கள். கடந்துசெல்வார்கள். அவரது தளத்தில் இதுபோன்ற சர்ச்சைகளில் பிரசுரமாகும் கடிதங்கள் 'ஒட்டி அடிறா ஊர்க் கோடாங்கி' வகை. தொடர்புடைய அவரது கட்டுரையிலோ, அதேபோன்ற முந்தைய கட்டுரைகளிலோ உள்ள சொற்களைக் கொண்டு நெய்யப்பட்டவை. யார் யார் அந்தக் கடிதங்களை எழுதுவார்கள் என்பதை ஊகிக்கவும் முடியும்.
Reply 3 0
Login / Create an account to add a comment / reply.