கட்டுரை, வாழ்வியல், கல்வி 5 நிமிட வாசிப்பு

ஆலிவ் மரத்தில் காய்க்கும் கணிதம்

பாலசுப்ரமணியம் முத்துசாமி | Balasubramanian Muthusamy
01 Jul 2022, 5:00 am
3

ப்பிரிக்காவின் வடக்குப் பகுதியில் இருக்கும் நாடு மொரொக்கோ. இங்கே ஸ்மிமு கிராமத்தில் சிதி பௌஸ்கரி என்னும் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 700 மாணவர்கள் படிக்கிறார்கள். மொரொக்கோ அரசு, தனது சுற்றுச்சூழல் மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக, இப்பள்ளியில் ஆலிவ் மரங்களை மாணவர்கள் மூலமாக நட்டது. அந்த மரங்கள் வளர்ந்து, காய்க்கத் தொடங்கின.

அப்பள்ளியில், ஹுசேன் என்னும் ஆசிரியர் பல காலமாகப் பணிபுரிகிறார். தொடக்கத்தில் பிரெஞ்சு மொழி ஆசிரியராக இருந்து, பின்னர் கணிதம் கற்பிக்கும் ஆசிரியராக மாறியவர். காய்க்கத் தொடங்கிய ஆலிவ் பழங்களைப் பள்ளி மாணவர்கள் (10-11 வயது) மூலம் அறுவடை செய்ய முடிவெடுத்தார் ஹுசேன். ஆலிவ் பழங்களிலிருந்து ஆலிவ் எண்ணெய் உற்பத்தி செய்வதை, கணிதம் என்னும் மொழியின் வழியே மாணவர்கள் பார்க்கும் ஒரு புதிய வழிமுறையை அவர் யோசித்தார்.

பள்ளியில் இருந்த 19 மரங்களில் காய்த்த ஆலிவ் பழங்களை மாணவர்கள் பறித்து, அவற்றை எடை போட்டார்கள். மொத்தம் 657 கிலோ ஆலிவ் பழங்கள் அறுவடையாகின. அதில் இருந்து சராசரி மகசூலை எப்படி கணிப்பது என்னும் கேள்வியை முன்வைக்கிறார். 657 கிலோவை, 19ஆல் வகுத்தால், கிடைக்கும் விடைதான் சராசரி மகசூல் எனக் கற்கிறார்கள். 

இதற்குப் பின்னர் எண்ணெய் பிழியும் சிறு தொழிற்கூடத்துக்கு  ஆலிவ் பழங்கள் எடுத்துச்செல்லப்படுகின்றன. அங்கே ஒட்டகம் இழுக்கும் ஒரு செக்கு உள்ளது. ஒட்டகம் செக்கை வட்டமான பாதையில் நடந்து இழுக்கிறது. அந்த வட்டத்தின் விட்டத்தை அளந்து, அதை 3.14ஆல் பெருக்கி, ஒட்டகம் வட்ட வடிவில் நடக்கும் சுற்றளவைக் கணக்கிடுகிறார்கள். 100 கிலோ ஆலிவ் பழங்கள் அந்த எண்ணெய்ச் செக்கில் கொட்டப்படுகிறது. ஒட்டகம் ஒருமுறை சுற்றிவரும் நேரத்தை அளந்து எழுதிக்கொள்கிறார்கள். பின்னர், செக்கில் போடப்பட்டுள்ள ஆலிவ் பழங்களை, எண்ணெயாக மாற்ற, ஒட்டகம் கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் சுற்றிவருகிறது. இந்த நேரத்தையும், ஒட்டகம் ஒருமுறை சுற்றிவர எடுத்துக்கொள்ளும் நேரத்தையும், ஒட்டகம் சுற்றிவரும் வட்டத்தின் சுற்றளவையும் அளந்து, 100 கிலோ ஆலிவ் பழங்களில் இருந்து எண்ணெய் பிழிய, ஒட்டகம் 1,934 கி.மீ. நடக்க வேண்டியுள்ளது எனக் கண்டுபிடிக்கிறார்கள்.

இதன் பின்னர், ஆலிவ் பழங்களில் இருந்தது பிழிந்தெடுக்கப்பட்ட எண்ணெய் சுத்தம் செய்யப்பட்டு, எடை போடப்படுகிறது. அந்த எடையை ஆலிவ் பழங்களின் எடையினால் வகுத்து, ஆலிவ் பழங்களில் இருந்தது எண்ணெய் பிழியும் செயல்திறனைக் கணக்கிடுகிறார்கள். பின்னர் ஆலிவ் எண்ணெய் உள்ளூர்ச் சந்தைக்கு மாணவர்களால் எடுத்துச்செல்லப்பட்டு விற்கப்படுகிறது.

இந்த முறையில், மாணவர்கள் இதுவரை கற்றிராத விஷயங்களை, முற்றிலும் புதிய சூழலில், வழிமுறையில் கற்றுக்கொள்கிறார்கள். இதன் நோக்கம் என்னவென்றால், ‘கல்வியை வாழும் சூழலுடன் இணைப்பதே!’ என்கிறார் ஹுசேன். 

நயி தலீம்

மராத்திய மாநிலத்தில், தண்டகாரண்ய வனப் பகுதியில், கட்சிரோலி பிராந்தியம் இன்று மாவோயிஸ்ட்டுகளால் விவகாரத்தோடு இணைந்து அறியப்பட்டது. ‘கோண்ட்’ பழங்குடி இனத்தவர் அதிகம் வசிக்கும் பகுதி இது. அங்கே மருத்துவ வசதிகள் இல்லை. வனப்பகுதி என்பதால், படித்த மருத்துவர்கள் அங்கே வர விரும்புவது இல்லை. இந்தக் குறையைப் போக்குவதற்காக அபய் பங், ராணி பங் என்னும் மருத்துவத் தம்பதியினர், அங்கே ஓர் மருத்துவமனையை நிறுவினார்கள்.

கட்சிரோலி பிராந்தியத்தில் உள்ள மலைக் கிராமங்களில் அதிகம் படித்திராத பெண்களுக்கு, நவீன மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவமுறைகளைப் பயிற்றுவித்தார்கள். சாலைகள்கூட இல்லாத தொலைதூரக் கிராமங்களில் உள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு தேவையான மருந்துகள், ஊசிகள் போடுவதையும், பிறந்த குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடுவதையும் பயிற்சி பெற்ற, ஆனால் கல்வியறிவு அதிகம் பெறாத இப்பெண்கள் வெற்றிகரமாகச் செய்துவருகிறார்கள்.

பொதுநல மருத்துவத்தில், உலகின் அரும் சாதனைகளுள் இதுவும் ஒன்று என உலகப் புகழ்பெற்ற மருத்துவ இதழான ‘லான்செட்’ (Lancet) அங்கீகரித்துள்ளது. மூன்றாம் உலகுக்கான சிறந்த பொது மருத்துவ முன்னெடுப்பு எனப் புகழப்படும் இம்முறை, இன்று உலகில் பல நாடுகளில் முன்னெடுக்கப்படுகிறது. இம்முறையின் வெற்றியானது ‘ஆஷா’ என்னும் திட்டமாக இன்று இந்தியா முழுவதும் செயல்படுத்தப்படுகிறது.

காந்தியை விடுதலைக்கான போராட்டத்தை அகிம்சை வழியில் முன்னெடுத்தவர் என உலகமே பாராட்டுகிறது. தீண்டாமையையும், வறுமையையும் ஒழிக்க வழிமுறைகளை முன்னெடுத்த நவீனச் சிந்தனையாளர். கல்வியிலும், நவீன வழிமுறைகள் வர வேண்டும் எனச் சிந்தித்த மாமனிதர் காந்தி. அவரின் இந்த வழி ‘நயி தலீம்’ (புதிய வழி) என அறியப்படுகிறது.

எழுதப் படிக்கும் திறன் மட்டுமே கல்வியல்ல. அடிப்படைக் கல்விக்குப் பின், மனிதக் கரங்களைப் பயிற்றுவிக்கும் கல்வியும் தரப்பட வேண்டும். கரங்களை உபயோகித்தலே, மனிதனை, விலங்குகளிடம் இருந்து வேற்றுமைபடுத்தி, மேம்படுத்தியுள்ளது.  

நயி தலீம் கல்விமுறையின் நோக்கம், மனிதனுக்கு ஒரு திறனை அல்லது தொழிலைக் கற்றுத் தருவதல்ல. அவனை முழுமையான மனிதனாக்குவது. உண்மையான கல்வி என்பது, குழந்தையின் உடல், மனம் ஆன்மா ஆகியவற்றை மிக உயரிய நிலைக்குக் கொண்டுசெல்வது. அதுவே சமநிலையிலான கல்வி. தளர்வில்லாமல் கேள்விகளை எழுப்புவதும், எதையும் ஆராய்ந்து பார்க்கும் மனநிலையும் கல்வி கற்றலின் அடிப்படைத் தேவைகள்.  

காந்தியின் வழியில் அபய் பங்

கல்வியே மக்களாட்சி முறையை மிகச் சிறப்பாகப் பேண உதவுகிறது. மக்களாட்சியில், கல்விக்குச் செலவிடப்படும் தொகை, மண்ணில் விதைக்கப்படும் விதையைப்போல பன்மடங்கு பலனை ஈட்டித்தருகிறது. 

‘கல்வியின் நோக்கம், நமது வளங்களைக் கொள்ளையிடும் மேலாதிக்க சக்திகளுக்கு உதவுவதாக இல்லாமல், நாட்டின் கடைநிலையில் வாழும் ஏழையின் வாழ்க்கையை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும். குழந்தைகள் தம் தாய்மொழி வாயிலாகக் கல்வி பயில வேண்டும்’ என்பன கல்வி பற்றிய காந்தியின் எண்ணங்கள்.

தாக்கூர் தாஸ் பங் என்னும் காந்தியின் சீடருக்கு மகனாகப் பிறந்த அபய் பங், நாக்பூரில், காந்திய வழியில் பயிற்றுவிக்கும் நயி தலீம் பள்ளியொன்றில் பயின்றார். கல்வியின் ஒரு பகுதியாக ஒரு சிறு நிலப்பரப்பில் பயிர் செய்யும் பயிற்சி தரப்பட்டது. தன் பங்குக்கு அபய் பங் கத்திரிக்காய் பயிரிட்டார். பயிருக்கு உரம் தேடுகளையில், வேதி உரம் போடக் கூடாது எனச் சொல்லப்பட்டது. வேறு என்ன வழி என யோசித்தபோது, காந்தி ஆசிரமத்தில் இருந்த மாட்டுச் சாணமும், சிறுநீரும் கலந்த கலவையை உரமாகப் பயன்படுத்தலாம் என அறிந்துகொண்டார்.

அந்த உரத்தை அவர் கத்திரிச் செடிகளுக்கு இட்டார். அவை நன்றாகச் செழித்து வளர்ந்தன. பெரிய பெரிய கத்திரிக்காய்களாகக் காய்த்தன. அவற்றைச் சந்தையில் விற்கச் சென்றபோது, சுரைக்காய் அளவு பெரிதான அந்தக் கத்திரிக்காய்களை வாங்க யாரும் முன்வரவில்லை. பின்னர் அது காந்தி ஆசிரமத்தில் சமையலுக்காகப் பயன்படுத்தப்பட்டது. “இதிலிருந்து பல படிப்பினைகளைப் பெற்றேன். விவசாயம் செய்யும்போது விளைச்சல் மட்டுமே முக்கியமல்ல. நுகர்வோரின் தேவைகள் என்னவென்று அறிந்திருப்பதும் முக்கியம் என உணர்ந்தேன்” என்கிறார் அபய் பங்.  

பள்ளிக்கல்விக்குப் பின்னர், அபய் பங், நாக்பூர் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்றார். அங்கே உடன் பயின்ற ராணியைத் திருமணம் செய்துகொண்டார். பின்னர் இருவரும், அமெரிக்காவில் உள்ள உலகப் புகழ்பெற்ற ‘ஜான் ஹாப்கின்ஸ்’ பொதுநல மருத்துவமனையில் உயர்நிலைப் பொதுநல மருத்துவக் கல்வியைப் பயின்றார்கள்.

இந்தியா திரும்பியதும், அவர்கள் கற்ற பொதுநல மருத்துவக் கல்வி மக்களுக்குப் பயன்பட வேண்டும் எனத் திட்டமிட்டார்கள். மருத்துவ வசதிகள் சென்றடைந்திராத கட்சிரோலி என்னும் வனப்பகுதியைத் தேர்ந்தெடுத்தார்கள். அங்கே மக்களுடன் மக்களாக வாழ்ந்து, அவர்களுக்கான மருத்துவ வழிமுறைகளை உருவாக்கினார்கள். அந்த முயற்சி, இன்று உலகெங்கும் ‘இல்லம் தேடிச் செல்லும் மகப்பேறு மற்றும் குழந்தை நலத் திட்ட’மாகச் செயல்படுத்தப்படுகிறது. இந்தியாவிலும் ‘ஆஷா’ என்னும் திட்டமாக வெற்றிகரமாகச் செயல்படுகிறது.

காந்திய கல்விமுறையில் பயின்ற அபய் பங் தன்னை மேம்படுத்திக்கொண்டதுடன் மட்டுமல்லாமல், உலகில் ஏழை மக்களுக்கு எளிதில் கிடைக்கும் ஒரு பொதுநல மருத்துவமுறையை உருவாக்கியிருக்கிறார். காந்தியின் ‘நயீ தலீம்’ கல்விமுறையின் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு அபய் பங், ராணி பங் உருவாக்கியிருக்கும் மருத்துவமுறை.

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பாலசுப்ரமணியம் முத்துசாமி | Balasubramanian Muthusamy

பாலசுப்ரமணியம் முத்துசாமி, தனியார் நிறுவனம் ஒன்றின் தலைமைப் பொறுப்பில் தான்சானியாவில் பணியாற்றுகிறார். ஈரோடு பகுதி கிராமத்தைப் பின்னணியாகக் கொண்ட இவர், வேளாண்மையும், ஊரக மேலாண்மையும் பயின்றவர். காந்தியப் பொருளியல், வணிகம், வேளாண்மை முதலிய தளங்களில் எழுதிவருபவர். காந்தியை இன்றைய தலைமுறைக்குக் கொண்டுசெல்லும், ‘இன்றைய காந்திகள்’ நூலின் ஆசிரியர்.


5

5





பின்னூட்டம் (3)

Login / Create an account to add a comment / reply.

RAGHUNATH VELUSAMY   3 years ago

அருமையான கட்டுரை... குறிப்பாக 'தளர்வில்லாமல் கேள்விகளை எழுப்புவதும், எதையும் ஆராய்ந்து பார்க்கும் மனநிலையும் கல்வி கற்றலின் அடிப்படைத் தேவைகள்'- மிகவும் அருமை.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   3 years ago

1,934 or 1.934?

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

Thiruvasagam   3 years ago

அருமையான கட்டுரை! இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் தனியார் பள்ளிகள் இதுபோன்ற திட்டங்களை முன்னெடுக்க மாட்டார்கள். அரசு பள்ளிகள் இவற்றை முன்னெடுக்க பல நடைமுறை சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும், எடுத்துக்காட்டாக தற்குறிகள் இது போன்ற முன்னெடுப்புகளை குலக்கல்வித் திட்டம் என்று தடுப்பர்! படிப்பதற்கே இவ்வளவு உவகை தரும் கட்டுரையை வெளியிட்டதற்கு அருஞ்சொல்லுக்கு நன்றி!

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

சீனாவைச் சுற்றிவரும் வதந்திசிறுநீரகத் தொற்றுபிரிக்ஸ்‘வலிமை’யான தலைவர் பொய் சொல்வதேன்?டாலா டாலாஇந்திய அணிநடந்தது பசுமைப் புரட்சி அல்ல; பேராசைப் புரட்சி!: அடையாளங்கள்டாக்டர் ஆர்.மகாலிங்கம்இந்தியாவுக்குப் பாடம்பா.இரஞ்சித் நட்சத்திரம் நகர்கிறது அருஞ்சொல் கட்டுரவெற்றிடத்தின் பாடல்கள்அமைச்சர்புலப்ரே பாலகிருஷ்ணன் கட்டுரைகருத்துக் கணிப்புஎன்.சங்கரய்யா பாஜக 370 ஜெயிக்காதுமணீஷ் சபர்வால் கட்டுரைsamasமொரொக்கோஇந்துத்துவமாகும் இந்திய அறிவியல்!ராணுவம்ஓம் பிர்லாஅதீத வேலைஉடை அரசியல்உளவியல் காரணங்கள்கடன் பொறியில் ஆஆக பஞ்சாப்தேர்ந்த வாசகர்குடும்பப் பெயர்மூலக்கூறு

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!