கட்டுரை, கலாச்சாரம், சர்வதேசம் 5 நிமிட வாசிப்பு

ஜனநாயகத்தைக் கண்காணியுங்கள்: நோபல் செய்தி

பாலசுப்ரமணியம் முத்துசாமி | Balasubramanian Muthusamy
14 Oct 2022, 5:00 am
0

சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, அதைப் பற்றி ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுகையில் ஜெயகாந்தன் சொன்னார், “அந்த வீழ்ச்சிக்கு முக்கியமான ஒரு காரணம், இங்கே நம்மிடம் சிக்கிப் படாதபாடுபடுகிறதே, அந்த ஜனநாயகம்... அது அங்கே இல்லை!”

அது மிக முக்கியமான ஒரு வாக்கியம். 

சோவியத் ஒன்றியத்தில் நிகழ்ந்த பல அவலங்கள் உண்மையில் அதன் சிதைவுக்குப் பின்னரே வெளிவந்தன.  உலகெங்கும் யதேச்சதிகார அரசுகளின் கீழுள்ள நாடுகளில் எப்போதும் நிகழ்ந்தது, நிகழ்வது, நிகழப்போவது இதுதான். 

உலகில் போர்கள் மூலம் ஏற்பட்ட மனித அவலங்கள் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் குறைந்திருந்தாலும், ஓயவில்லை. உலகில் எங்கெல்லாம் உண்மையான மனித உரிமைகள் கொண்ட மக்களாட்சி இல்லையோ, அங்கெல்லாம் மனித உரிமை மீறல்கள் இன்றும் பெரிய அளவில் நடந்துகொண்டே இருக்கின்றன. அந்த நாடுகளில் நல்ல கனிம வளம் இருந்தால், தம்மை உலகின் மிக வலிமையான ஜனநாயக நாடு எனச் சொல்லிக்கொள்ளும் உலகின் மிகப் பெரும் பிணந்திண்ணிக் கழுகு, அங்கே போர்களை ஊக்குவிக்கும். 

அமைதி நீடித்து நிலைக்க, உலகுக்குத் தேவை சாதாரண மனிதனின் குரலும், உரிமைகளும் மதிக்கப்படும் ஒரு ஜனநாயக சமுதாயம் - இந்த ஆண்டின் நோபல் பரிசுகளுக்கான தேர்வின் பின் உள்ள செய்தி இதுதான்.

2022ஆம் ஆண்டு, உலக அமைதிக்கான நோபல் பரிசு ஒரு தனிநபருக்கும், இரண்டு சிவில் சமூக அமைப்புகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

பெலாரஸ் நாட்டின் ஆலஸ் பயாலியாட்ஸ்கி (Ales Bialiatsky), ரஷ்ய நாட்டின் மனித உரிமை நிறுவன நினைவகம் (Russian Human rights Organisation Memorial) மற்றும் உக்ரேனிய மனித உரிமைகள் அமைப்பு மற்றும் சிவில் உரிமைகளுக்கான மையம் (Ukranian human rights organisation centre for Civil liberties) இணைந்து இந்த விருதைப் பகிர்ந்துகொள்கின்றன.

யார் இந்த ஆலஸ் பயாலியாட்ஸ்கி?

பெலாரஸ் நாட்டில், 1980களின் மத்தியில், மக்களாட்சி இயக்கத்தைத் தொடங்கியவர்களுள் பயாலியாட்ஸ்கியும் ஒருவர். மக்களாட்சிக்காகவும், அமைதியான மக்கள் நல மேம்பாட்டிற்காகவும் தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர். 1996ஆம் ஆண்டு, பெலாரஸ் நாட்டின் அரசமைப்புச் சட்டம் மாற்றப்பட்டு, நாட்டின் அதிபருக்குப் பெரும் அதிகாரங்கள் வழங்கப்பட்டன. அதை எதிர்த்து பெலாரஸ் நாட்டில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. ஆர்ப்பாட்டங்கள் செய்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் உதவ வியாஸ்னா (viasna) என்னும் நிறுவனத்தைத் தொடங்கி நடத்திவருபவர்தான் இந்த ஆலஸ் பயாலியாட்ஸ்கி

இந்தியாவில் நெருக்கடிநிலை அறிவிக்கப்பட்டபோது, அதை எதிர்த்து சிவில் சமூகம் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கான மக்கள் இயக்கம் (People’s union for Civil and Democratic Rights - PUCL) என்னும் அமைப்பை ஜெயப்ரகாஷ் நாராயண் தொடங்கியதை இங்கே நாம் நினைவுகூரலாம். இதன் மூலம் பெலாரஸ் சமூகத்தில் பயாலியாட்ஸ்கியின் முக்கியத்துவத்தை உணரலாம்.

பெலாரஸ் அரசு பயாலியாட்ஸ்கியை அடக்க பல முயற்சிகள் செய்தது. 2011-14 வரை சிறையில் அடைத்தது. 2020ஆம் ஆண்டு எழுந்த பெரும் ஆர்ப்பாட்டங்களின்போது, அரசு மீண்டும் அவரைச் சிறையில் அடைத்தது. இன்று வரை எந்த விசாரணையும் இன்றி சிறையில் இருக்கிறார். 

இந்தியாவில் பீமா கோரேகான் சம்பவங்களின் பின்னணியில், ஸ்டேன் ஸ்வாமி, வரவர ராவ், சுதா பரத்வாஜ் போன்ற சிவில் சமூகச் செயல்பாட்டாளர்கள், தேசியப் புலனாய்வு நிறுவனத்தால் கைதுசெய்யப்பட்டு, ஆண்டு கணக்கில் ஜாமீன் மறுக்கப்பட்டு சிறையில் விசாரணையின்றி அடைக்கப்பட்டிருந்ததை இங்கே நினைவுகூரலாம். அப்படியென்றால், இன்றைய நம்முடைய இந்தியச் சமூகம் எதை நோக்கிச் செல்கிறது என்ற கேள்வியையும் எழுப்பிக்கொள்ளலாம்.

ரஷ்யாவின் மனித உரிமை நிறுவன நினைவகம்

இந்த நிறுவனம் சோவியத் ஒன்றியத்தில், கம்யூனிஸ அரசின் ஒடுக்குமுறைகளை ஆவணப்படுத்தும் நோக்கத்தோடு தொடங்கப்பட்டது. ஆண்ட்ரி சக்கரோவ் (Andrei Sakharov), மனித உரிமைகளுக்கான வழக்கறிஞர் ஸ்வெட்லனா கனுஷ்க்கினா (Svetlana Gannushkina) போன்றவர்களால் தொடங்கப்பட்ட நிறுவனம்.  ‘கடந்த காலத்தில் மக்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளை நேர்மையாக எதிர்கொள்வதே, வருங்காலத்தில் அதுபோன்ற கொடுமைகள் மீண்டும் நிகழாமல் தடுக்கும் வழி’ என்னும் கருதுகோளை மையமாக வைத்துத் தொடங்கப்பட்டது இந்த நிறுவனம்.

சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு, ரஷ்யாவின் மிகப் பெரும் மனித உரிமைக் காப்பு நிறுவனமாக உருவெடுத்தது.

ஸ்டாலின் காலத்தில் நிகழ்ந்த அடக்குமுறைக் கொடுமைகள், பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பான தகவல்கள் முதலியவை இந்நிறுவனத்தால் ஆவணப்படுத்தப்பட்டுப் பாதுகாக்கப்பட்டுள்ளன. ராணுவமயமாக்கலை எதிர்த்தல், மனித உரிமைகளைக் காத்தல், சட்டத்தின் அடிப்படையிலான ஆட்சிமுறை போன்ற தளங்களில் முன்னணியில் நின்று செயலாற்றிவருகிறது இந்த நிறுவனம்.

உக்ரேனிய மனித உரிமைகள் அமைப்பு

2007ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், மனித உரிமைகளை முன்னெடுத்தல் மற்றும் மக்களாட்சியை மேம்படுத்துதல் என்னும் நோக்கங்களோடு தொடங்கப்பட்டது. சட்டத்தின் அடிப்படையில் ஆட்சி நடக்க வேண்டும் என்னும் நோக்கத்தோடு, உக்ரைன் அரசு, பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தின் உறுப்பினராக வேண்டும் என்னும் கோரிக்கையை முன்னிறுத்திப் போராடிவருகிறது. 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், ரஷ்யா உக்ரைன் மீது தொடுத்த போரில், உக்ரைன் நாட்டில் ரஷ்யா நிகழ்த்திவரும் போர்க்குற்றங்களை அடையாளப்படுத்தி, ஆவணப்படுத்தும் முக்கியமான பணியைச் செய்துவருகிறது. 

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்தபோது, பெரும்பாலான ஐரோப்பிய ஊடகங்களின் எதிர்வினை வேடிக்கையாக இருந்தது. ஊடகப் பிரதிநிதிகள் பலரும், ‘இதுபோன்ற போர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் அல்லவா நடக்கும்!’ என ஆச்சர்யப்பட்டார்கள். 19ஆம் நூற்றாண்டிலும், 20ஆம் நூற்றாண்டின் முதல் பாதியிலும் ஐரோப்பிய நாடுகள் உலகெங்கும் போர்களை நடத்தின என்பதே பொதுப் புத்தியில் இருந்து மறைந்துவிட்டது.

இன்று நடந்துகொண்டிருக்கும் போர், தனிமனித ஆணவம், மேலாதிக்க உணர்வு மற்றும் ஆயுதப் பொருளாதார நன்மைகளின் மீது நடந்துவரும் ஒன்றாகும். இதன் பலி சாதாரண மனிதர்கள். இந்த அப்பட்டமான மனித உரிமை மீறலைக் கண்டிக்கும் நோபல் கமிட்டியின் பிரகடனமாக இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது எனப் புரிந்துகொள்ளலாம்.

பரிசு பெறுபவர்களின் யூகப் பட்டியலில் இந்தியா

இந்த ஆண்டு நோபல் பரிசு பெறுவார்கள் என ‘டைம்’ இதழ் வெளியிட்ட யூகப் பட்டியலில் இரண்டு இந்திய நிறுவனங்கள் இருந்தன.

ஓய்வுபெற்ற இந்தியக் குடிமைப் பணி அதிகாரி ஹர்ஷ் மந்தர் தொடங்கிய ‘அன்பின் வாகனம்’ (karwaan-e-mohabbat) என்னும் இயக்கம் அதில் ஒன்று. இது பொதுவெளிகளில் கும்பல்களால் அடித்துக் கொல்லப்படும் மக்களின் தரப்பில் நிற்பதற்காகத் தொடங்கப்பட்ட இயக்கம். 

இன்னொன்று ப்ரதீக் சின்ஹா மற்றும் முகம்மது ஸுபைர் நடத்திவரும் ‘ஆல்ட் நியூஸ்’ (alt news) என்னும் செய்தி நிறுவனம். இது இந்தியாவில் அண்மையில் பெருகிவிட்ட பிரச்சினையான ஊடகங்களில் வெளியிடப்படும் செய்திகளின் உண்மைத்தன்மையை சோதித்து வெளியிடும் இணையதள ஊடகம். 

ஆக, இந்த ஆண்டின் நோபல் உணர்த்தும் பெரும் செய்தி என்ன?
அது ஜனநாயகத்துக்கான பணியில் ஈடுபட்டிருப்போரைப் பெருமைப்படுத்துவதோடு அல்லாமல், உலகெங்கும் விழிப்புணர்வோடு ஜனநாயகத்தைக் கண்காணிக்கவும் அறைகூவல் விடுக்கிறது என்று சொல்லலாம்!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பாலசுப்ரமணியம் முத்துசாமி | Balasubramanian Muthusamy

பாலசுப்ரமணியம் முத்துசாமி, தனியார் நிறுவனம் ஒன்றின் தலைமைப் பொறுப்பில் தான்சானியாவில் பணியாற்றுகிறார். ஈரோடு பகுதி கிராமத்தைப் பின்னணியாகக் கொண்ட இவர், வேளாண்மையும், ஊரக மேலாண்மையும் பயின்றவர். காந்தியப் பொருளியல், வணிகம், வேளாண்மை முதலிய தளங்களில் எழுதிவருபவர். காந்தியை இன்றைய தலைமுறைக்குக் கொண்டுசெல்லும், ‘இன்றைய காந்திகள்’ நூலின் ஆசிரியர்.


3

1

1




ரூபாய் - டாலர் செலாவணி விகிதம்ஜார்கண்ட் சட்டமன்றம்மகளிர் சுய உதவி நிறுவனங்கள்இனப்படுகொலைக்குத் தயாராகிறதா இந்தியா? வருமானச் சரிவு… பாஜகவைப் பின்னுக்கு இழுக்கும் சரிஅரசு நிர்வாகம்வர்ண தர்ம சிந்தனைராமாயணம் நகரங்களும்ரத்த தானம்உயர்கல்விப் பாடத்திட்டத்தில் பன்மைத்துவம் அழிகிறதாபோக்குவரத்துத் துறைபத்திரிகையாளர்களுக்கு யார் எஜமானர்?டபுள் என்ஜின் ரயில்ராஜாஜி அண்ணாமனுதர்ம சாஸ்திரம்கலைஞர் முரசொலிகே.சந்துரு கட்டுரைகள்சிற்றரசர்கள்வேலைவேதியியலர்கள்பிடிவாதத்தைத் துறத்தல்ஊடகர் கலைஞர்புராதனக் கம்யூனிசம்கடல்அரசியல் பிரதிநிதித்துவம்திருமாவேலன் பெரியார்மூட்டு வலிதுயரம் எதிர் சமத்துவம்சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!