கட்டுரை, அரசியல், நிர்வாகம் 4 நிமிட வாசிப்பு

ரௌத்திரம் பழகட்டும் எதிர்க்கட்சிகள்

பாலசுப்ரமணியம் முத்துசாமி | Balasubramanian Muthusamy
06 Jun 2023, 5:00 am
2

பாகிஸ்தானில் பயிற்றுவிக்கப்பட்ட பயங்கரவாதிகள் பலர், 2008, நவம்பர் 26 அன்று மும்பைக்குள் நுழைந்து, முக்கியமான இடங்களில், விடுதிகளில் துப்பாக்கிகளால் தாக்குதல் நடத்தினார்கள். இதைக் கொஞ்சமும் எதிர்பார்த்திராத மஹாராஷ்டிரம் காவல் துறை பாதுகாப்பு நடவடிக்கைகளில் சுணங்கியது. பின்னர் ஒன்றிய அரசின் கமாண்டோ படைகள் வந்து நிலைமையைச் சரிசெய்வதற்குள் 175 உயிர்கள் பலியாகின.

அந்தத் துயரச் சம்பவங்கள் நடந்த தினத்தில், ஒன்றிய உள்துறை அமைச்சர் மூன்று முறை தனது உடைகளை மாற்றினார் என்பது பெரும் விமர்சனமாக ஊடகங்கள் வழியே முன்வைக்கப்பட்டது. மும்பை தாஜ் ஓட்டலில் நிகழ்ந்த சேதங்களைப் பார்வையிடச் சென்ற மஹாராஷ்டிர முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக், தன்னுடன் திரைப்பட இயக்குநர் ராம் கோபால் வர்மாவை அழைத்துச் சென்றதும் விமர்சனத்துக்கு உள்ளானது. இதன் விளைவாக, முதல்வரும், உள்துறை அமைச்சரும் தத்தம் பதவிகளை ராஜிநாமா செய்ய நேரிட்டது.

ஊடகங்களும், எதிர்க்கட்சிகளும் இந்தத் தாக்குதல் ஆளுங்கட்சியின் தோல்வி என விமர்சனங்களை முன்வைத்தன. பொதுவெளியில் பெரும் விவாதங்களை உருவாக்கின. இந்தப் பிரச்சினைகளுக்கு எதிர்வினையாக, புதிய உள்துறை அமைச்சராக ப.சிதம்பரம் நியமிக்கப்பட்டார். ‘அன்லாஃபுல் ஆக்டிவிடீஸ் பிரெவென்சன் ஆக்ட்’ (Unlawful Activities Prevention Act - UAPA) என்னும் கடுமையான சட்டம் உருவாக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதுபோன்ற உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளை கால விரயமின்றி எதிர்கொள்ள ‘தேசியப் புலனாய்வு முகமை’ (National Investigative Agency - NIA) என்னும் புதிய நிறுவனம் மன்மோகன் சிங் அரசால் உருவாக்கப்பட்டது.

இதையும் வாசியுங்கள்... 4 நிமிட வாசிப்பு

கசாப்பைத் தூக்கிலிடக் கூடாது... ஏன்?

சமஸ் | Samas 11 Sep 2021

செயல்திறன் மிக்க நிறுவனங்கள்

இதுபோன்ற பிரச்சினைகளை நாடு எதிர்கொண்டபோது எல்லாம் ஊடகங்கள், எதிர்க்கட்சிகள், சிவில் சமூக நிறுவனங்கள் போன்றவை அரசை எதிர்த்து எழுப்பிய குரல்கள், போராட்டங்கள் போன்றவை, அந்தப் பிரச்சினைகள் இன்னொரு முறை எழாமல் இருக்கும் வண்ணம் புதிய சட்டங்களை, நிறுவனங்களை உருவாக்குவதில் முடிந்திருக்கின்றன. இந்திய தேசத்தின் நிர்வாகம் மேம்பட்டிருக்கிறது. மும்பைத் தாக்குதலுக்கு முன்பும் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. எடுத்துக்காட்டாக, 1992ஆம் ஆண்டு நிகழ்ந்த பங்குச் சந்தை ஊழலின் முடிவில், வெளிப்படையாக, சாதாரண மக்களும் பயன்பெறும் வகையில் ஆன்லைன் பங்குச் சந்தையான தேசியப் பங்குச் சந்தை உருவானது. வங்கிகளின் நிர்வாக ஓட்டைகள் அடைக்கப்பட்டன. 1999இல் ஒரு பெரும் புயல் ஒடிசாவைத் தாக்கியது. அந்தப் புயலை எதிர்கொள்ள எந்த முன்னேற்பாடுகளையும் ஒரிசா அரசு செய்திருக்கவில்லை. அந்தப் புயலில் கிட்டத்தட்ட 10 ஆயிரம் பேர் இறந்தனர். அது நாடெங்கும் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதன் விளைவாக, அன்றைய ஒன்றிய வாஜ்பாய் அரசு, தேசியப் பேரிடர் மேலாண்மை நிறுவனம் என்னும் அமைப்பை உருவாக்கியதையும் இங்கே குறிப்பிடலாம். 

புயல்களால் அதிகம் பாதிக்கப்படும் ஒடிசா அரசும் தங்கள் மாநிலத்தில், நாட்டிலேயே சிறந்த பேரிடர் மேலாண்மை அணியை உருவாக்கியது. பின்னர் 2013ஆம் ஆண்டு பைலின் என்னும் பெரும்புயல் ஒடிசாவைத் தாக்கியபோது, அம்மாநிலம் மிகச் செயல்திறன் மிக்க வகையில் அப்புயலை எதிர்கொண்டது. 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். மிக மிகக் குறைந்த உயிர்ச் சேதங்களே (23 பேர்) ஏற்பட்டன.

எழாத குரல்கள்

நாட்டில் சட்டம் ஒழுங்கு, இயற்கைப் பேரிடர் போன்ற நிகழ்வுகளில், ஊடகங்களும், எதிர்க்கட்சிகளும் வகிக்க வேண்டிய முக்கியமான பங்கு ஒன்று உள்ளது. அது, இந்தப் பிரச்சினைகளை எதிர்கொள்வதில் உள்ள முறைகேடுகள், போதாமைகளை உரத்துப் பேசுவது. இது அவர்கள் நாட்டுக்குச் செய்யும் கடமை. சில சமயங்களில், ஊடகம் மற்றும் எதிர்க்கட்சிகளின் குரல்கள் தேவைக்கு அதிகமாக உரத்து இருந்தாலும், அது தேவையானதே.

அப்படிக் குரல்கள் எழாதபோது என்ன நிகழ்கின்றன?

அது 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் குஜராத் மாநிலம் மோர்பியில், ஒரு தொங்கு பாலம் உடைந்து விழுந்ததில், 130 பேர் இறந்துபோனார்கள். அந்த மரணத்தில் அரசியல் செய்ய விரும்பவில்லை எனப் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் அதைப் பெரிதுபடுத்தாமல் கடந்துபோனது.

கடந்த 9 ஆண்டுகளாக ஆளுங்கட்சியின் ஊதுகுழலாக மாறிப்போன தேசிய ஊடகங்களும் இந்த விஷயத்தைப் பட்டும் படாமலும் கடந்துபோனார்கள். அந்த விபத்துக்குக் காரணம் பாதுகாப்பு நடவடிக்கைகளை அலட்சியம் செய்த நிர்வாகமும், அந்தப் பாலம் பாதுகாப்பானது எனச் சான்றிதழ் வழங்கிய உள்ளூர் நிர்வாக அதிகாரிகளுமே. இந்த இரண்டு நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்களின் அலட்சியமே 135 உயிர்கள் பலியானதற்குக் காரணம். 

ஆனால், கிரிமினல் நடவடிக்கைகள், அந்தப் பாலத்தில் அன்று மக்களை டிக்கட் வாங்கிக்கொண்டு அனுமதித்த கடைநிலை ஊழியர்களோடு நின்றுவிட்டது. உண்மையான குற்றவாளிகள் மிக எளிதாகத் தப்பிவிட்டனர். இதுபோன்று இன்னொரு பெரும் விபத்து நடக்காமல் இருக்க மாநில அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்னும் புள்ளி பொதுவெளி விவாதத்துக்கு வரவே இல்லை. மக்கள் உயிரைக் காப்பது அரசின் பொறுப்பு என்பது அழுத்தமாக நிறுவப்படவில்லை. 

அது நடந்தது மாநிலத் தேர்தல் சமயத்தில். எதிர்க்கட்சியான காங்கிரஸ் அந்தச் சமயத்தில், உயிர்களை வைத்து அரசியல் செய்ய விரும்பவில்லை என விலகிக்கொள்ள, ஆளும் பாரதிய ஜனதா கட்சி தப்பிவிட்டது. மோர்பி தொகுதியிலேயே காங்கிரஸ் தோற்றது.

இதையும் வாசியுங்கள்... 7 நிமிட வாசிப்பு

மோர்பி: யாரும் மன்னிப்பு கேட்கவில்லை

ப.சிதம்பரம் 07 Nov 2022

தொடரும் நிர்வாகச் சீர்கேடு

இன்று ஒடிசாவில் மீண்டும் ஒரு பெரும் விபத்து நடந்துள்ளது. இதில் 280க்கும் அதிகமான மனிதர்கள் இறந்துள்ளார்கள். 2008ஆம் ஆண்டு, பாகிஸ்தான் மும்பையில் நடத்திய தாக்குதல்களில் இறந்தவர்களைவிட அதிகம்.

இது இயற்கைப் பேரிடரோ அல்லது தீவிரவாதத் தாக்குதலோ அல்ல. நிர்வாகத் திறன் இன்மை. கிட்டத்தட்ட, ரயில்வே பொது மேலாளர் போல, இந்தியாவின் ஒவ்வொரு வந்தே பாரத் ரயிலைத் திறந்துவைத்து, ஏதோ தான்தான் அந்த ரயிலின் வடிவமைப்பாளர் போல படம் காட்டிக்கொண்டிருந்த பிரதமர், இந்த விபத்துக்கும் பொறுப்பேற்க வேண்டும். அல்லது, 2012ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ‘கவச்’ என்னும் மென்பொருளை வைத்துப் படம் காட்டிக்கொண்டிருந்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பொறுப்பேற்றுப் பதவி விலக வேண்டும்.

இந்திய ரயில்வே நிர்வாகம், இன்னொரு முறை இதுபோன்ற விபத்துகள் நிகழாமல் இருக்க என்ன புதிய நிர்வாகச் சீர்திருத்தம் கொண்டுவரப்போகிறது என்பதை, மக்கள் மன்றத்தில் விளக்க வேண்டும். இந்திய தேசிய ஊடகங்கள் இதில் வாயைத் திறக்க மாட்டார்கள். இந்த விபத்தின் வீரியம் காரணமாக, ஒருநாள் ஊடக விவாதங்களில் பங்கேற்பதைத் தள்ளிவைத்த காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் இந்த விபத்தை எக்காரணம் கொண்டும் விவாதிக்காமல், அதற்கான வருங்காலத் தீர்வுகளை உருவாக்க ஆளுங்கட்சிக்கு எந்த அழுத்தமும் தராமல் கடந்து செல்லக் கூடாது. மக்கள் மன்றத்தில், சமூக ஊடகங்களில், எதிர்க்கட்சிகள் இது தொடர்பான விவாதங்களை உருவாக்கி, இந்த நிகழ்வுக்கு ஆளுங்கட்சியைப் பொறுப்பேற்க வைக்க வேண்டும்.

ஆளுங்கட்சியின் இந்த நிர்வாகத் திறன் இன்மைக்கு எதிராக சமூகம் தங்கள் அதிருப்தியைக் காண்பிக்க வேண்டும். ஜனநாயக அரசியலில், மக்கள்தான் எஜமானர்கள் என்பதை ஆளுங்கட்சி உணர வேண்டும். இல்லையெனில், இந்த விஷயத்தையும் ஒரு வாரத்தில் கடந்து சென்று, மீண்டும் பிரதமர் வந்தே பாரத் ரயிலைக் கொடியசைத்துத் தொடங்கி வைக்கும் அபத்தம் தொடரும். 

கடந்த 9 ஆண்டுகளாக எந்த ஒரு விபத்துக்கும், பிரச்சினைக்கும், போராட்டத்துக்கும், இன்றைய ஆளுங்கட்சி செவி சாய்த்ததில்லை. சமூக அதிருப்தியை, எதிர்ப்புகளை, போராட்டங்களை அது அலட்சியம் செய்து, திசை திருப்பி, எள்ளி நகையாடியே வந்திருக்கிறது. இதற்கு முன்பு உழவர் போராட்டத்தில் 700க்கும் அதிகமானோர் இறந்தபோதும், இரக்கமில்லாமல்தான் அதை எதிர்கொண்டது. அடுத்து வரும் தேர்தலில் அது எதிரொலிக்கும் என்னும் நிலையில்தான் அவற்றைத் திரும்பப் பெற்றது. இத்தகைய அணுகுமுறை ஆளுங்கட்சியின் அகங்காரத்தையே உணர்த்துகிறது. எனவே, இனிமேலும் பொறுப்பதில்லை எனச் சமூகம் கொதித்தெழ வேண்டிய நேரம் வந்துவிட்டது!

 

தொடர்புடைய கட்டுரைகள் 

மோர்பி: யாரும் மன்னிப்பு கேட்கவில்லை
கசாப்பைத் தூக்கிலிடக் கூடாது... ஏன்?

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பாலசுப்ரமணியம் முத்துசாமி | Balasubramanian Muthusamy

பாலசுப்ரமணியம் முத்துசாமி, தனியார் நிறுவனம் ஒன்றின் தலைமைப் பொறுப்பில் தான்சானியாவில் பணியாற்றுகிறார். ஈரோடு பகுதி கிராமத்தைப் பின்னணியாகக் கொண்ட இவர், வேளாண்மையும், ஊரக மேலாண்மையும் பயின்றவர். காந்தியப் பொருளியல், வணிகம், வேளாண்மை முதலிய தளங்களில் எழுதிவருபவர். காந்தியை இன்றைய தலைமுறைக்குக் கொண்டுசெல்லும், ‘இன்றைய காந்திகள்’ நூலின் ஆசிரியர்.


5

1



1


பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

Gokulraj N   1 year ago

பேரிடர் மேலாண்மை சட்டம் 2005-இல் இயற்றப்பட்டது. ஆனால் தாங்கள் வாஜ்பாய் அரசாங்கம் இயற்றிய உள்ளதாக குறிப்பிட்டுள்ளீர்கள்.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

Vidhya sankari    1 year ago

ஆமாம்.எதிர்க்கட்சிகளின் கடமை அது.மக்களின் கோபத்தை, அதிருப்தியை, அச்சத்தைப் பிரதிபலிக்க வேண்டியது எதிர்க்கட்சிகளின் கடமை.தேசிய‌‌ ஊடகங்கள் பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் போது வேறெப்படி மக்கள் குரல் கேட்கும்? மக்களின் பாதுகாப்பு அலட்சியம் செய்யப்படுவதை அரசியல் ஆக்காமல் அடக்கி வாசிப்பது மக்களைக் கைவிடுவது போல்தான். உயிருக்கான பாதுகாப்பு மக்களின் உரிமை இல்லையா?

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

அண்ணன்இன்ஃபோசிஸ்குஜராத்தியர்களின் பெருமிதம்பள்ளுஇந்தியா டுடே கருத்தரங்கம்மாபெரும் பொறுப்புசமஸ் அருஞ்சொல் ஜெயமோகன்மலையாளம்சந்தேகங்களும்!மானுட செயல்கள்தனுஷ்கா நம் குழந்தை இல்லையா?புதிய தொழில்கள்ஆல்கஹால்நகரமாசிறந்த நடிகர் தேசியப் பூங்காக்களும்திலீப் மண்டல் கட்டுரைகாந்தியமும் இந்துத்துவமும்தங்க ஜெயராமன்ஆயுஷ்உக்கிரமான அரசியல் போர்க்களத்தில் மஹ்வா மொய்த்ராதொகுதிப் பங்கீடுமூச்சுக்குழல்சமூக நலப் பாதுகாப்புதேசிய ஊடகங்கள்பரிணாம மானுடவியல்இருவகைத் தலைவர்கள்தேசிய அடையாளங்களை மாற்றும் மோடிபீமாகோரேகாவோன்பாவப்பட்ட ஆண்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!