கட்டுரை, அரசியல், ஆளுமைகள் 10 நிமிட வாசிப்பு
ராஜீவ்: சிதைக்கப்பட்ட பெரும் கனவு
குழப்பமாக விடிந்தது 1991 மே 22 . பெங்களூர் சதாசிவ நகரில் நாங்கள் குடியிருந்த வீட்டின் உரிமையாளரான கன்னட அஜ்ஜி (பாட்டி), "எங்கியும் வெளியே போக வேண்டாம். நாங்க இருக்கோம்" என ஆறுதல் சொன்னார். அன்று வேலை பார்க்கத் தொடங்கியிருந்த இளைஞர்களான அது எங்களுக்குப் பெரிய பிரச்சினையாகத் தோன்றவில்லை. முதல் நாள் இரவு இந்தியாவின் முன்னாள் பிரதமரான ராஜீவ் காந்தி தமிழீழ விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டிருந்தார்.
அன்றைக்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அவரது தாயும் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டிருந்தார். ஆனால், அந்த மரணம் நாட்டை முழுவதும் பாதிக்கும் முன்பு, அவரது மகன் ராஜீவ் நாட்டின் மிக இளம் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். துயரத்தில் நாடு ஆழ்ந்தபோதிலும், ஒரு புதிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டது ஆறுதலையும் நம்பிக்கையையும் ஊட்டுவதாக இருந்தது.
இந்திரா காந்தியின் காலத்தில் நிதித் துறையில் பணிபுரிந்தவர் மாண்டேக் சிங் அலுவாலியா. பின்னர் ராஜீவ் பதவியேற்றபோது, பிரதமர் அலுவலகத்தில் துணைச் செயலராகப் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றவர். இந்திராவின் நிர்வாக பாணி என்பது சிறு சிறு மாற்றங்களைச் செய்வதாக இருந்தது. ஆனால், ராஜீவ் தொழில்நுட்பத்தின் துணையோடு இந்தியாவை 21ஆம் நூற்றாண்டுக்குக் கொண்டுசெல்லும் கனவுடன் வந்தார் என்கிறார். அந்தத் தளத்தில் அவர் இந்திராபோல சிறு மாற்றங்களை முன்னெடுப்பவராக இல்லாமல், நேருவைப் போல ஒரு பெருங்கனவைக் கொண்டிருந்தார் என்பது அலுவாலியாவின் பார்வை.
நிதித் துறை, தொழில்நுட்பம், ஊரக மேம்பாடு, நிர்வாகச் சீர்திருத்தம், வேளாண்மை, வெளியுறவுத் துறை, கல்வி போன்ற தளங்களில் அவரது காலகட்டம் பெரும் வளர்ச்சியைக் கண்டது. அதேசமயத்தில், சமூக அரசியல் தளங்களில் அவர் எதிர்கொண்ட, முன்னெடுத்த கொள்கைகள் பெரும் தோல்விகளைச் சந்தித்தன. பிற்காலப் பிரச்சினைகளையும் உருவாக்கின.
தொழில்நுட்ப இயக்கம்
தொழில்நுட்பமே இந்தியாவை 21ஆம் நூற்றாண்டுக்கு எடுத்துச்செல்ல வல்லது என்பதை உணர்ந்த ராஜீவ், தொலைத்தொடர்புத் துறையை நவீனப்படுத்த உதவ வந்த சாம் பிட்ரோடாவை, தொழில்நுட்ப இயக்கம் ஒன்றை உருவாக்கி முன்னெடுக்கப் பணித்தார்.
தொழில்நுட்ப இயக்கம் தனது செயல்பாடுகளை குடிநீர், தடுப்பூசி, கல்வி, எண்ணெய் வித்துகள், தொலைத்தொடர்புத் துறை என ஐந்து முக்கியத் துறைகளில் தொடங்கியது. பின்னர், பால் வளத் துறையும் இதில் சேர்க்கப்பட்டது.
அந்தக் காலத்தில், இந்தியாவில் தொற்றுநோய்களுக்கான தடுப்பூசிகள் பெருமளவில் தயாரிக்கப்படவில்லை. இறக்குமதியையே நம்பியிருக்க வேண்டியிருந்தது. உயிர்த் தொழில்நுட்பத் துறை என்னும் புதிய துறையை உருவாக்கி, எம்.ஜி.கே.மேனன் என்னும் திறமையான அறிவியல் அறிஞரின் தலைமையில், இந்தியாவிலேயே தடுப்பூசிகளைத் தயாரிக்கும் முயற்சிகளைத் தொடங்கியது ராஜீவ் அரசு. தடுப்பூசிகளைத் தயாரிக்கும் பொதுத் துறை நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. இன்று உலகிலேயே மிக அதிகமாக தொற்றுநோய்களுக்கான தடுப்பூசிகளைத் தயாரித்து ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா மாறியதன் அடித்தளம் ராஜீவ் காலத்தில் போடப்பட்டதுதான்.
ஒரு தொலைபேசி இணைப்புக்காக ஆண்டுக்கணக்கில் காத்திருக்கும் நிலை இந்தியாவில் 1980கள் வரை இருந்தது. தொலைபேசி இணைப்பகங்களுக்கான தொழில்நுட்பம் பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. தொலைத்தொடர்புத் தொழில்நுட்பத்தில் வல்லுநரான சாம் பிட்ரோடா, இந்தியாவிலேயே குறைந்த செலவில் தொலைபேசி இணைப்பகங்களை வெற்றிகரமாக உருவாக்கினார். 1989ஆம் ஆண்டு 0.6% ஆக இருந்த தொலைபேசி அடர்த்தி, அடுத்த பத்தாண்டுகளில், 400% வளர்ந்து, 2.8% ஆக உயர்ந்தது. பொது இடங்கள் எங்கும் மஞ்சள் நிறப் பொதுத் தொலைபேசி மையங்கள் உருவாகி, லட்சக்கணக்கான எளியோருக்கான வாழ்வாதாரமாகவும் அது உருவானது.
இந்தியாவில் 1980களில் எரிபொருள் இறக்குமதிக்கு அடுத்ததாகப் பெருமளவு இறக்குமதி செய்யப்பட்ட பொருள் சமையல் எண்ணெய். இந்தியாவின் தேவையில் 50% இறக்குமதியாக இருந்தது. இதனால், அந்நியச் செலாவணிச் சிக்கல் ஏற்படுவதைக் குறைக்க, 'தங்கப் புரட்சித் திட்டம்' (Operation Golden Flow) என்னுமொரு திட்டம் உருவாக்கப்பட்டது. பால் உற்பத்தியில் வெற்றிகரமாக இயங்கிய தேசிய பால்வள நிறுவனம் வழியாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. திட்டம் தொடங்கிய நான்கே வருடங்களில், இந்தியாவில் எண்ணெய் உற்பத்தி அதிகரித்து, 1990ஆம் ஆண்டு இறக்குமதி நின்றது.
ராஜீவ் காலகட்டத்தில் அவர் முன்னெடுத்த பல தொழில்நுட்ப முன்னெடுப்புகள் பெரும் எதிர்ப்பைச் சந்தித்தன. அதில் முக்கியமானது வங்கிகளில் கணிணிமயமாக்கம். ஆனால், அவர் அதில் மிகவும் தீவிரமாக இருந்து தொடங்கிவைத்தார். இன்று கணிணியில்லாத வங்கிகளை நாம் கற்பனைகூடச் செய்ய இயலாது. அதேபோல, அவரது ஆட்சியின் இறுதியில் தொடங்கப்பட்ட ரயில் ரிசர்வேஷன் கணிணிமயமாக்கம் பெருமளவில் பொதுமக்களுக்குப் பயனளித்த ஒன்று.
ராஜீவ் காலத்தில், அமெரிக்க நிறுவனமான 'டெக்சஸ் இன்ஸ்ட்ருமென்ட்ஸ்' என்னும் நிறுவனம் பெங்களூரில் தனது ஆராய்ச்சி நிறுவனத்தைத் நிறுவத் திட்டமிட்டது. ஆனால், அதில் ஒரு சிக்கல் இருந்தது. இந்தியாவில் இருந்தது அமெரிக்காவுக்குச் சிக்கில் இல்லாத தொலைத்தொடர்பு வசதித் தேவை. அது செயற்கைக்கோள் வழியாக மட்டுமே சாத்தியப்படும் ஒரு வசதி. இந்தியாவின் அன்றைய தொலைத்தொடர்புச் சட்டங்களும் விதிகளும், அதை அனுமதிக்கவில்லை. ராஜீவ் காந்தி அதில் தலையிட்டு, அந்நிறுவனத்துக்கான வசதியை ஏற்படுத்திக்கொடுத்தார். அதன் வழி, இந்திய மென்பொருள் தொழிலுக்கான ராஜபாட்டையைத் திறந்துவைத்தார் ராஜீவ் என்கிறார் அலுவாலியா.
நிதித் துறைச் சீர்திருத்தம்
ராஜீவ் காந்தி காலத்தில், அவரது நிதியமைச்சராக இருந்த வி.பி.சிங் கொண்டுவந்த நிதித் துறைச் சீர்திருத்தங்கள் பொதுவெளியில் அதிகம் பேசப்படாதவை. ஒவ்வொரு பட்ஜெட்டிலும் வரும் விதிகளும், வரிகளும் என்னவாக இருக்கும் என்னும் நிச்சயமில்லாத ஒரு சூழலில், அரசு முதன்முதலாக ஒரு நீண்ட கால நிதிக் கொள்கையை வெளியிட்டது. தனிமனித வருமான உச்ச வரி 62.5% என்பதிலிருந்து 50% ஆகக் குறைக்கப்பட்டது. நிறுவன உச்ச வருமான வரி 55% லிருந்து 50% ஆகக் குறைக்கப்பட்டது. இறக்குமதி லைசென்ஸ் முறை விலக்கப்பட்டு, இறக்குமதி வரிகளாக மாற்றும் முடிவை அரசு எடுத்தது. இந்த விதிமுறைகளின் நீட்சியாக, நீண்ட கால நிதிக் கொள்கையையும் வெளியிட்டது. அடுத்த ஐந்தாண்டுகளுக்கு, வரிகள் அதிகரிக்கப்படாது என அரசு அறிவித்த கொள்கை முடிவானது, அதுவரை தொழில் துறையை அரசு அணுகிய விதத்தையே தலைகீழாக மாற்றியது. வி.பி.சிங் சமர்ப்பித்த ராஜீவ் அரசின் இந்த பட்ஜெட், 1991ஆம் ஆண்டு மன்மோகன் சிங் சமர்ப்பித்த பட்ஜெட்டுக்கு இணையானது எனச் சொல்கிறார் இந்தியாவின் தலைசிறந்த வழக்கறிஞரும், வருமான, வணிக வரித் துறை நிபுணருமான அரவிந்த் தத்தார். சோவியத் ரஷ்யாவுக்கு அரசு முறையாகப் பயணம் சென்ற பிரதமர் முதன்முறையாக தன்னுடன் தொழில் துறைத் தலைவர்களை உடன் அழைத்துச் சென்றார்.
இதே காலத்தில், வி.பி.சிங் கலால் வரியில் மதிப்புக்கூட்டு முறை என்னும் சீர்திருத்தத்தை அறிமுகம் செய்தார். இது பெருவெற்றியை அடைந்த ஒரு சீர்திருத்தமாகும். இது பின்னர் வணிக வரிகளிலும் அறிமுகம் செய்யப்பட்டு வெற்றியை அடைந்தது.
அரசியல், சமூக முன்னெடுப்புகள்
இந்தியாவின் மிக இளம் பிரதமராக ராஜீவ் பதவியேற்றதை அமெரிக்க அரசியல் தரப்பு மிகவும் நேர்மறை நிகழ்வாகப் பார்த்தது. சில மாதங்களிலேயே, அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகனின் அழைப்பின்பேரில் அமெரிக்கப் பயணம் மேற்கொண்டார். மார்ட்டின் லூதர் கிங்கின் 'எனக்கு ஒரு கனவு உள்ளது' என்னும் வரிகள்போல தொனிக்கும் வகையில், 'எனக்கும் ஒரு கனவு உள்ளது' எனத் தொடங்கி ராஜீவ் அமெரிக்க மக்களவையில் ஆற்றிய உரை பெருத்த வரவேற்பைப் பெற்றது.
வெளியுறவுத் துறையில், ராஜீவ் நிகழ்த்திய மிகப் பெரும் சாதனை என்பது, சீனத்துடனான உறவைப் புதுப்பித்ததாகும். 1988ஆம் ஆண்டு, ராஜீவ் ஐந்து நாள் அரசு முறைப் பயணமாகச் சீனம் சென்றார். ராஜீவை நேரில் சந்தித்த சீனத் தலைவர் டெங் ஜ்யாவ்பிங், மிக நீண்ட நேரம் அவர் கரங்களைப் பற்றிக்கொண்டார். 'பழைய பிரச்சினைகளை மறப்போம்.. புதிய பாதையில் செல்வோம்' என டெங் முன்மொழிந்தார். எல்லைப் பிரச்சினைகள் தீரும்போது தீரட்டும்; வர்த்தக உறவுகளைப் புதுப்பிப்போம் என இரண்டு தலைவர்களும் முடிவெடுத்தனர்.
இந்தப் புதிய முடிவு, இந்திய-சீன வர்த்தகத்தில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியது. இந்தியாவின் மருந்துப் பொருட்கள் ஏற்றுமதி மற்றும் இருசக்கர வாகனங்கள் ஏற்றுமதியில், உலகின் மிகப் பெரும் நாடாக மாறியுள்ளது. இந்தத் துறைகளுக்கான கச்சாப் பொருட்களும், உதிரிப்பாகங்களும் சீனத்தில் இருந்து/குறைந்த விலையில் வருகின்றன. தவிரவும், இந்தியாவின் அண்மையில் உள்ள நாடுகளான சீஷேல்ஸ் மற்றும் மாலத்தீவுகளில் பிரச்சினை ஏற்பட்டபோது, இந்திய விமானப் படை மிக் விரைந்து அந்நாடுகளின் உதவிக்குச் சென்றது பெருமளவில் உலக நாடுகளால் பாராட்டப்பட்டது.
ஆனால், இலங்கையில் ராஜீவ் முன்னெடுத்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. பிரச்சினையை அவர் புரிந்துகொண்ட விதத்திலேயே கோளாறுகள் இருந்தன. இந்தியாவின் சமரச முயற்சியானது இந்திய அதிகார வர்க்கத்தின் 'பெரியண்ணன் அணுகுமுறை'யால் சிங்களர்கள் - தமிழர்கள் இரு தரப்பினர் இடையிலும் கடும் அதிருப்தியை இந்தியா சந்திக்க வழிவகுத்தது.
வெளியுறவுக் கொள்கையில் ராஜீவுடைய பெரும் சறுக்கல் இலங்கை விவகாரம் என்றால், உள்நாட்டு சமரச முயற்சிகளில் அவருடைய சறுக்கல்களாக பஞ்சாபிலும், அஸ்ஸாமிலும் அவர் மேற்கொண்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஆயின. பஞ்சாப் மாநிலத்தில் லோங்கோவாலுடனும், அஸ்ஸாம் மாநிலத்தில் அஸ்ஸாம் கன பரிஷத்துடனும் ஒப்பந்தங்கள் செய்தார்.
ராஜீவ்-லோங்கோவா ஒப்பந்தம் முழுமையாக நிறைவேறவில்லை. ஒப்பந்தத்தின் பல ஷரத்துக்களை பஞ்சாப்பின் எதிர்க்கட்சிகளும், ஹரியானாவின் எதிர்க்கட்சிகளும் எதிர்த்தன. லோங்கோவால் அதே ஆண்டு பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டார்.
அஸ்ஸாம் மாநிலத்தில், வங்கதேச அகதிகள் சட்டத்துக்குப் புறம்பாகக் குடியேறியது ஒரு பெரும் பிரச்சினையாக இருந்தது. அங்கே காங்கிரஸ் அரசை எதிர்த்து மாணவர்கள் பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்தனர். அந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக, ராஜீவ் அரசு மாணவர் அமைப்புகள் தரப்புடன் ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டது. அதைத் தொடர்ந்து, மாணவர்கள், 'அசாம் கன பரிஷத்' என்னும் அரசியல் கட்சியைத் தொடங்கி ஆட்சியைப் பிடித்தனர். பிரச்சினையும் பிளவுணர்வும் மேலும் அதிகரிக்கவே ராஜீவ் முயற்சிகள் வழிவகுத்தன.
இலங்கை, பஞ்சாப், அசாம் என மூன்று முக்கிய அரசியல் ஒப்பந்தங்களும் வெற்றி பெறாதவை. பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்னும் நோக்கம் இருந்தாலும், பிரச்சினைகளின் முழுப் பரிமாணத்தையும் உணர்ந்திடாமல் ஒரு முதிர்ச்சியற்ற அணுகுமுறையுடன் வேகமாக அவர் களம் இறங்கியதே இவற்றின் தோல்விகளுக்குக் காரணம் எனப் பின்னோக்கிப் பார்க்கையில் உணர முடிகிறது.
சாதி, மத அதிகாரப் போரில் பின்னடைவு
ராஜீவ் காலத்தில் அவர் எதிர்கொண்ட இரு சமூக அரசியல் மாற்றங்கள் சாதி மற்றும் மதத் தளங்களில் நடந்தன. சமூகநீதிக்காக பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் கிளர்ந்தெழுந்த காலம் அது. இதற்கான எதிர்வினையானது அப்போது கிளர்ந்தெழுந்துவந்த இந்துத்துவ மதவிய அரசியலிலிருந்து வெளிப்பட்டது. ராஜீவுக்கு சாதி - மதம் இந்த இரு விஷயங்களிலுமே போதிய புரிதல் இல்லை. இந்துத்துவத்தை எதிர்கொள்ள அதனுடன் சமரசம் செய்துகொள்ளும் அல்லது பாஜகவோடு ஒரு அடி முன்னே செல்லும் அணுகுமுறையை அவர் கையாண்டார். அதேபோல, அழுத்தப்பட்ட சமூகங்களின் அதிகாரப் பகிர்வுக்கான குரலை சாதியக் குரல்களிலிருந்து வேறுபடுத்திப் புரிந்துகொள்ள அவர் தவறினார். விளைவாக அடுத்து உருவான 'மண்டல் எதிர் கமண்டல்' போரை காங்கிரஸால் வேடிக்கை பார்க்கவே முடிந்தது.
ஊழலுக்கு எதிராக அதிகம் சிந்தித்து, அதிகாரவர்க்கத்திடமிருந்து உள்ளூர் மக்களை நோக்கி அதிகாரங்கள் கைமாற வேண்டும் என்று சிந்தித்தவர்; பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் வழி உள்ளாட்சிகளுக்கு அரசமைப்புப் பாதுகாப்புடனான அதிகாரத்தைப் பகிர்ந்தளித்தவர் என்றாலும், ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு அவருடைய அரசும் தப்பவில்லை. போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழல் குற்றச்சாட்டு பெரும் அளவில் அவருடைய செல்வாக்கைக் குலைத்தது.
அரசியல் சரிவு
இந்திய வரலாற்றிலேயே அதிகபட்ச வாக்குகள் (48%) மற்றும் தொகுதிகளுடன் (401) 1984 பொதுத் தேர்தலை வென்ற ராஜீவ் அடுத்த தேர்தலில் மீண்டும் ஆட்சியமைக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார். தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்தும், ஆட்சியமைக்கக் குடியரசுத் தலைவர் அனுப்பிய அழைப்பை மறுத்து எதிர்க்கட்சி வரிசையில் அமரத் தீர்மானித்தார் ராஜீவ்.
அடுத்த இரண்டண்டுகள் இந்திய அரசியலில், பெருங்குழப்பம் நிலவியது. எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த ராஜீவ், 1991 தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை மிகுந்த ஈடுபாட்டுடன் தயாரித்தார். நாடெங்கும் பயணம் செய்து வாக்கு சேகரிக்கையில், தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டார். அவர் உயிரோடு இருந்திருந்தாலும், மீண்டும் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் அளவுக்கான வெற்றியை மக்கள் அவருக்கு வழங்கவில்லை என்பதை 1991 தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தின. அதற்குப் பின்னர் 15 ஆண்டு காலம் மீண்டும் ஆட்சியை காங்கிரஸ் கொடுத்தாலும், தனிப் பெரும்பான்மையுடன் இந்தியாவை ஆண்ட கடைசி காங்கிரஸ் பிரதமராக இன்றும் அவரே நீடிக்கிறார்.
ராஜீவ் மறைந்தாலும், அதற்குப் பின் இந்தியா சென்ற பாதையானது பெருமளவில் அவர் தேர்ந்தெடுத்ததே ஆகும். ராஜீவ் மறைவுக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் அரசும் சரி; அதற்கு அடுத்து ஆட்சிக்கு வந்த கூட்டணி அரசுகளும் சரி; அவர் பாதையிலேயே சென்றன. வாஜ்பாய் அரசும்கூட பொருளியல் கொள்கையில் முந்தைய அரசுகளிடமிருந்து பெரிதாக விலகிடாத அணுகுமுறையையே தேர்ந்தெடுத்தது. அடுத்து வந்த மன்மோகன் சிங் அரசு ராஜீவ் கனவுகளில் திட்டமிட்டு கவனம் செலுத்தியது.
பலத்த எதிர்ப்பார்ப்புடன் பதவியேற்று, தொழில்நுட்பம், பொருளாதாரம், மக்கள் நலன் எனப் பல துறைகளிலும் புதிய உத்வேகத்தை ஏற்படுத்திய ராஜீவ் வெகுசீக்கிரம் மறைந்தாலும் இன்றைய கணிணிமயமான இந்தியாவை உருவாக்கியதில் அவரது பங்கு மறுக்க முடியாத அளவுக்குப் பதிந்திருக்கிறது என்பதே உண்மை. ஆயினும், ராஜீவ் அளவுக்கு இந்தியாவை நவீனமாக்க சிந்தித்த அரசியல் தலைவர் ஒருவர் நேருவுக்குப் பிந்தைய காலகட்டத்தில் நமக்கு வெளிப்படவில்லை. சரித்திரம் அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்கியிருக்கலாம்; காலம் மேலும் கொஞ்சம் அவர் வாழும் வாய்ப்பை நல்கியிருக்கலாம். ஒரு பெரிய பயங்கரவாதச் செயல்பாடு எத்தகைய தொடர் நாசங்களுக்கு சமூகங்களையும் நாடுகளையும் காலத்தைத் தாண்டியும் கொண்டுசெல்லும் என்பதற்கு இன்றைய இந்தியா - இலங்கை இரு நாடுகளின் சூழல்களும் சாட்சியமாக இருக்கின்றன!
- மே 21, ராஜீவ் நினைவு நாள்
5
3
1
பின்னூட்டம் (4)
Login / Create an account to add a comment / reply.
S.Neelakantan 3 years ago
ஸயீரா பானு வழக்கில் இஸ்லாமிய மணமுரிவு பெற்ற பெண்களுக்கு பராமரிப்புப் பெறும் உரிமை உண்டு என்ற உச்ச நீதி மன்றத் தீர்ப்பை எதிர்த்துச் சட்டமியற்றிய தவறு, பிற்காலத்திலும் அவரது கட்சியின் மதச்சார்பின்மைக் கொள்கையைச் சந்தேகிக்க வழிவகுத்தது.
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
Ganeshram Palanisamy 3 years ago
எதற்கும் வளைந்து கொடுக்காத அல்லது வளைந்து கொடுக்கத் தெரியாத ஒரு அரசமைப்பை டெல்லியில் ஏற்படுத்திவிட்டு, நடக்கும் தவறுகளுக்கு டெல்லியில் பதவியில் இருக்கும் கட்சிகள் பழிபோடுவது கிட்டத்தட்ட தவறு. இந்த அமைப்பு கிட்டத்தட்ட காஷ்மீர் முதல் இலங்கை வரை இருந்த அனைத்து பிரச்சினைகளையும் பெரிதாக்கிவிட்டது.
Reply 1 0
Ganeshram Palanisamy 3 years ago
...கட்சிகள் மீது...
Reply 0 0
Login / Create an account to add a comment / reply.
விஷ்வ துளசி.சி.வி 3 years ago
காலம் விசித்திரமானது .. .பலத்த எதிர்ப்பார்ப்புடன் பதவியேற்று, தொழில்நுட்பம், பொருளாதாரம், மக்கள் நலன் எனப் பல துறைகளிலும் புதிய உத்வேகத்தை ஏற்படுத்திய ராஜீவ் வெகுசீக்கிரம் மறைந்தாலும் இன்றைய கணிணிமயமான இந்தியாவை உருவாக்கியதில் அவரது பங்கு மறுக்க முடியாத அளவுக்குப் பதிந்திருக்கிறது என்பதே உண்மை. ஆயினும், ராஜீவ் அளவுக்கு இந்தியாவை நவீனமாக்க சிந்தித்த அரசியல் தலைவர் ஒருவர் நேருவுக்குப் பிந்தைய காலகட்டத்தில் நமக்கு வெளிப்படவில்லை. சரித்திரம் அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை வழங்கியிருக்கலாம்; காலம் மேலும் கொஞ்சம் அவர் வாழும் வாய்ப்பை நல்கியிருக்கலாம்.
Reply 8 1
Login / Create an account to add a comment / reply.