கட்டுரை, வாழ்வியல், சர்வதேசம் 4 நிமிட வாசிப்பு

தான்சானியாவின் வணிக அமைப்பு

பாலசுப்ரமணியம் முத்துசாமி | Balasubramanian Muthusamy
04 Jun 2023, 5:00 am
1

ன் பணியில் மூழ்குவதன் முதற்கட்டமாக, எங்கள் தொழிற்சாலை இயங்கும் முறைகளையும், நிதி மேலாண்மை வழிகளையும், கணினிச் செயல்பாடுகளையும் அறிந்துகொள்வதாக இருந்தது. முதல் பார்வையில், கொஞ்சம் பழைய தொழிற்சாலை என என் மனதில் பதிந்துபோன பார்வையை சில நாட்களிலேயே நான் மாற்றிக்கொள்ள நேர்ந்தது. ஏனெனில், தொழிலின் பல்வேறு தளங்களுக்கேற்றார்போல, நிறுவனம் முதலீடு செய்திருந்த அணுகுமுறை. இதை நான் ஒரு ஆய்வாக முன்வைக்க முடியாது. எனது சொந்த அனுபவத்தில் இருந்து மட்டுமே எழுதுகிறேன்.  

அலகுக்கேற்ற தொழில்நுட்பம்

நிறுவனம் மூன்று பிரிவுகளில் இயங்கிவந்தது. முதலாவது பற்பசை, பல் துலக்கும் ப்ரஷ் மற்றும் மௌத் வாஷ் போன்றவை. பற்பசை பெரும் அலகு உற்பத்தி. இத்தளத்தில் எங்களது போட்டியாளர்கள் பன்னாட்டு வணிகச் சின்னங்கள் (ப்ராண்டுகள்). இந்தப் பிரிவில், உலகின் மிக முன்னேறிய தொழில்நுட்ப இயந்திரங்களில் நிறுவனம் முதலீடு செய்திருந்தது. ஒவ்வொரு இயந்திரமும் சில மில்லியன் டாலர்கள் விலை மதிப்புடையவை.

இரண்டாவது மற்றும் மூன்றாவது பிரிவுகள் – அலங்காரப் பொருட்கள், க்ரீம்கள், லோஷன்கள் மற்றும் உணவுப் பொருட்கள். இங்கே பன்னாட்டுச் சின்னங்கள் இருந்தாலும், அவை பெரிய வணிகம் இல்லை. உள்ளூர் உற்பத்தியாளர்களே இந்தப் பிரிவுகளில் பெரும் போட்டியாளர்கள். மேலும் இங்கே உற்பத்தி என்பது சிறு சிறு அலகுகளே. எனவே, பெரும் இயந்திரங்கள் இல்லை. மனிதர்களால் இயக்கப்படும் சிறு சிறு இயந்திரங்கள் மட்டுமே இருந்தன.

எனக்கு இந்தியாவின் வேளாண் அணுகுமுறை நினைவுக்கு வந்தது. இந்திய வேளாண்மையை முன்னேற்ற வேண்டுமென்றால், வல்லுநர்களிடம் கேட்டால் சொல்வார்கள். இந்திய வேளாண் அலகு மிகச் சிறியது. எனவே, அவற்றை ஒழித்துப் பெரும் அலகாக்கி, இயந்திரங்கள் கொண்டுவந்து, நவீனத் தொழில் நுட்பம் மூலமாக உற்பத்திச் செயல்திறனை அதிகரித்து, வேளாண் லாபத்தைப் பெருக்கி, ப்ளா… ப்ளா… ப்ளா… என நான் வேளாண்மை படிக்கும் காலம் வரை கதை சொல்லிக்கொண்டிருந்தார்கள். அந்தக் காலத்தில்தான், அலகுக்கேற்ற தொழில்நுட்பம் (appropriate technology) என்னும் கருதுகோள் அறிமுகமானது.

விடுதலை பெற்ற காலத்தில் சராசரி வேளாண் பண்ணையின் அலகு 5 ஏக்கர். அது நான் வேளாண்மை படிக்கையில், மக்கள்தொகைப் பெருக்கம் காரணமாக 2.5 ஏக்கராகக் குறைந்துவிட்டது. இந்த அலகை அமெரிக்கப் பண்ணை அலகாக (சராசரி 440 ஏக்கர்) மாற்ற வேண்டுமெனில், வேளாண்மையில் இருக்கும் 90% மக்களை வேளாண்மையில் இருந்து வெளியேற்ற வேண்டும். வெளியேற்றினால் டப்பா டான்ஸ் ஆடிவிடும் என்னும் உலக உண்மை புரிந்து, அலகுக்கேற்ற தொழில்நுட்பம் (appropriate technology) என்பதை வேளாண் திட்ட வல்லுநர்கள் பேசத் தொடங்கினார்கள்.

வணிகர்களின் ஆப்பிரிக்கப் பயணம்

ஆங்கிலேயர் வருமுன் இந்தியா உலகின் மிகப் பெரும் பொருளாதார சக்தியாக, உலகப் பொருளாதாரத்தில் 24% உற்பத்தியைச் செய்துவந்தது. இந்தியாவில் மேற்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் இருந்த வணிகக் குழுக்கள் எல்லைகளைத் தாண்டி வணிகச் செயல்பாடுகளை பெருமளவில் முன்னெடுத்தார்கள். தமிழ்நாட்டின் நாட்டுக் கோட்டைச் செட்டிகள் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வணிகம் செய்தார்கள். மேற்கு இந்தியாவின் குஜராத்தில் இருந்த சிந்திகள், குஜராத்திகள், இஸ்லாமியர்கள் எனப் பல குழுக்கள் ஆப்பிரிக்காவை நோக்கிப் பயணித்தார்கள்.

ஆங்கிலத்தில் ‘அட்வெர்சிட்டி ரிவீல்ஸ் ஏ ஜீனியஸ்; பிராஸ்பெரிட்டி கான்சீல்ஸ் இட்’ (Adversity reveals a Genius; Prosperity conceals it) என்று ஒரு சொலவடை உண்டு. இந்தியாவின் பெரும் வணிகக் குழுக்கள் இந்தியாவின் செழுமையான நதிகள் பாய்ந்த பகுதிகளில் இருந்து தோன்றவில்லை. மாறாக பாலை வனப் பிரதேசமான ராஜஸ்தான், குஜராத் பகுதிகளில் இருந்துதான் இந்தியாவின் மிக வெற்றிகரமான வணிகக் குழுக்கள் முதலில் உருவாகின. தமிழ்நாட்டிலும் இந்தப் போக்கை நாம் கவனிக்கலாம். காவிரிப் படுகையில் இருந்து அல்ல. நீர் வளமற்ற செட்டிநாட்டில் இருந்துதான் தமிழ்நாட்டின் மிகப் பெரும் வணிக் குழு உருவாகியது.

இந்த வணிகக் குழுக்களில், எனது அனுபவம் குஜராத்தி முதலாளிகளிடம் மட்டுமே. எனது 33 ஆண்டு கால அனுபவத்தில் 13 ஆண்டுகள் குஜராத்தி முதலாளிகளிடம் பணிபுரிந்திருக்கிறேன். வணிகத்தில் அவர்களின் அணுகுமுறையை நான் மேதமை என்றே சொல்வேன். எப்படிச் சிச்சுவேஷனைச் சொன்னதும் இளையராஜாவுக்கு சரியான மெட்டுக்கள் பீரிட்டுக் கிளம்புகிறதோ அதேபோல, தொழிலுக்கு என்ன தேவையோ அதை மட்டுமே துல்லியமாக யோசிக்கும் குஜராத்தி முதலீட்டாளரின் அணுகுமுறை என்னை ஒவ்வொரு நாளும் வியப்பில் ஆழ்த்துகிறது.

இங்கே என் நிறுவனத்தின், இந்த ‘தேவைக்கேற்ற முதலீடு’ என்னும் அணுகுமுறைதான் முதலில் ஈர்த்தது. அடுத்து, கணினிமயமாக்கல். நிறுவனத்தின் மொத்தச் செயல்பாடுகளும் கணினிமயமாக்கப்பட்டிருந்தன. ஆனால், இங்குமே மத்திய அலகு நிறுவனங்கள் பயன்படுத்தும் மைக்ரோசாஃப்ட் நாவிசான் மென்பொருள் பயன்படுத்தப்பட்டிருந்தது. எஸ்ஏபி (SAP) அல்ல. மைக்ரோசாஃப்ட் நாவிசான் எக்செல் மென்பொருளை அடிப்படையாகக் கொண்டது, எனவே பயன்படுத்த எளிதாக இருந்தது.

வெளியில் இருந்து பார்க்கும்போது 30 ஆண்டுகள் பின்தங்கிய தொழிற்சாலை போன்ற வடிவமைப்பு இருந்தாலும், அண்மையில் அணுகும்போது, தொழிலுக்குத் தேவையான அளவு கச்சிதமான நவீனத் தொழில்நுட்பங்களைக் கொண்டதாக இருந்ததைக் கண்டு அசந்துபோனேன்.

கரியாக்கோ மொத்த வணிகச் சந்தை

கரியாக்கோ – மஞ்சசே - ம்பகாலா

தொழிற்சாலை பற்றிய அறிமுகம் முடிந்ததும் நான் அடுத்துச் செல்ல வேண்டிய இடம் டார் எஸ் ஸலாமின் மொத்த வணிகம் நடக்கும் சந்தைகள். டார் எஸ் ஸலாம் நகரில், கரியாக்கோ, மஞ்சசே மற்றும் ம்பகாலா என்னும் இடங்களில் மொத்த வணிகச் சந்தைகள் உள்ளன. அதில் கரியாக்கோ முக்கியமான சந்தை.

டார் எஸ் ஸலாம், மலாவி, காங்கோ, ஜாம்பியா, புருண்டி போன்ற பல நாடுகளின் வணிகர்கள் வந்து பொருட்களைக் கொள்முதல் செய்துகொண்டு போகும் முக்கியமான வணிக நகரம். எனவே, டார் எஸ் ஸலாமின் மொத்த வணிகச் சந்தைகளில் பல நாட்டு மக்களைப் பார்க்கலாம். 

என் வாழ்க்கையின் பெரும்பகுதி இதுபோன்ற மொத்த வணிகச் சந்தைகளில் கழிந்திருக்கிறது. பெங்களூரின் கே.ஆர் மார்க்கெட், சென்னையின் கொத்தவால் சாவடி, கோயம்பேடு, துறையூர், தாவண்கெரே, ராய்ச்சூர், அதோனி, ஜல்காவ்ன், ராஜ்கோட், மும்பையின் வாசி, தில்லியின் கரிபாவ்லி, அம்பாலாவின் அனாஜ் (தானிய) மண்டி, டாக்காவின் முஜிபூர் ரஹ்மான் மார்க்கெட் என அது ஒரு பெரிய லிஸ்ட். 

எறும்புகள் சுறுசுறுப்பாக ஓடிக்கொண்டிருப்பதைப் போல ஒரு இயக்கத்தை இந்தச் சந்தைகளில் பார்க்க முடியும். மொத்த நகரமும் மெதுவாக இயங்கிக்கொண்டிருக்க இவை மட்டும் ‘வேகமான’ மோடில் சென்றுகொண்டிருக்கும். ஒவ்வொருமுறை இங்கே சென்றுவரும்போதும், பெரும் நேர்நிலை மனநிலை மனதுள் நிரம்பும்.

இதற்குள் இந்தச் சந்தைகளில் புழங்கத் தேவையான குறைந்தபட்ச வார்த்தைகளைக் கற்றுக்கொண்டிருந்தேன் (இன்னிக்கு வரைக்கும் இதை வைத்துதான் காலட்சேபம் நடக்கிறது என்பது ரகசியம். வெளியே சொல்லிவிடாதீர்கள்).  

கரிபூ (நல்வரவு), ஹபாரியா சுபூஹீ (how’s this morning), சலாமா (வணக்கம்), அஹ்சாண்டே (நன்றி) என்னும் வார்த்தைகளே அவை. அதற்கு உள்ளூர் தான்சானியர்கள் ஸ்வாஹிலியில் பதில் சொன்னால், எனக்கு மேலே பேச வராது. ஹி… ஹி… ஹிதான்.

ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தின் இருந்தபோது, இந்த இடத்தில் ராணுவத்தின் ‘கேரியர் கார்ப்ஸ்’ (Carrier Corps) என்னும் ஒரு பிரிவின் கட்டிடம் இங்கே இருந்தது. அந்தப் பெயர் மருவி ‘கரியாக்கோ’ என ஆனது.  சென்னையில் ஹாமில்ட்டன் பாலம், அம்பட்டன் வாராவதியாக மாறியது போல.

ஆங்கிலேயர்கள் காலிசெய்துகொண்டு போனபோது, இந்த இடம் வணிக வளாகமாக மாறியது. பின்னர், 1974ஆம் ஆண்டில், ஒரு சட்டம் மூலம் இங்கே ஒரு முறையான வணிக வளாகம் உருவாக்கப்பட்டது. இதை உருவாக்கியவர், இஸ்ரேல் சென்று கட்டிடக் கலை படித்துவந்த பேடா அமுலி (Beda Amuli) என்னும் தான்சானியர்.

பேடா அமுலி

உலகின் எல்லா மொத்த வணிகச் சந்தைகளைப் போலத்தான் கரியாக்கோ சந்தையும். அங்கே நடக்கும் வணிகத்தைவிட, கிடைக்கும் பொருட்களைவிட, அதையொட்டி வாழும் மனிதர்களின் செயல்பாடுகள் எனக்கு பிடித்தமானவை. உடல் உழைப்பை மட்டுமே நம்பி வாழும் மனிதர்கள். அவர்களுக்காக உணவைச் சமைத்து விற்பனை செய்யும் மம்மாக்கள். மொத்த விலை கடையில் இருந்தது பொருட்களை வாங்கி, நடைபாதையில் கடைவிரித்து சில்லறை வணிகம் செய்யும் நடைபாதை வணிகர்கள் (மச்சிங்கா) என புதுமைப்பித்தனின் சிறுகதையின் ஒரு காட்சி போல மனத்தை நிறைக்கும்.

(தொடரும்…)

 

தொடர்புடைய கட்டுரைகள்

ஆப்பிரிக்க டயரி குறிப்புகள்
தான்சானியாவில் என் முதல் மாதம்

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பாலசுப்ரமணியம் முத்துசாமி | Balasubramanian Muthusamy

பாலசுப்ரமணியம் முத்துசாமி, தனியார் நிறுவனம் ஒன்றின் தலைமைப் பொறுப்பில் தான்சானியாவில் பணியாற்றுகிறார். ஈரோடு பகுதி கிராமத்தைப் பின்னணியாகக் கொண்ட இவர், வேளாண்மையும், ஊரக மேலாண்மையும் பயின்றவர். காந்தியப் பொருளியல், வணிகம், வேளாண்மை முதலிய தளங்களில் எழுதிவருபவர். காந்தியை இன்றைய தலைமுறைக்குக் கொண்டுசெல்லும், ‘இன்றைய காந்திகள்’ நூலின் ஆசிரியர்.


3

2





பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Duraiswamy.P   1 year ago

சிறந்த விவரிப்பு. ஆப்பிரிக்கா என்றாலே மிக மிக பின் தங்கிய நாடுகள் கொண்ட கண்டம் என்ற எண்ணம் மாறுகிறது. வாழ்த்துக்கள்.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

ஏர்முனைமுகமது அபுபக்கர் பாரூக் கட்டுரைபள்ளியில் அரசியல்தாய்மொழிஐஐடிஏடாங்கரிசிபயிர்கொடூர சம்பவம்இஸ்லாமிய பயங்கரவாதம்விஞ்ஞானிஅரசுகளுக்கிடையிலான கவுன்சில்ஏழைகள் எங்கே இருக்கிறார்கள்?மம்தாஅறிஞர்கள்உள்நாட்டுப் பயணம்மராத்தியர்கள்Samas articleலிஜோ ஜோஸ் பெள்ளிச்சேரிகொள்குறிக் கேள்விகள்சனாதனம்: இந்துக்கள் கடமை என்ன?நிர்வாகம்இஸ்ஸாசித்தாந்த முரண்அடுத்த தலைமுறைச் சீர்திருத்தம்ஊடக அதிபர்கள்காதல் - செக்ஸ்தெ.சுந்தரமகாலிங்கம் சாசனம்திறமைக்கேற்ற வேலைசிட்லின் கே. சேத்தி கட்டுரைஎண்ம போர்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!