கட்டுரை, பொருளாதாரம், நிர்வாகம் 8 நிமிட வாசிப்பு

தமிழக பட்ஜெட்: நம்பிக்கையும், நம்பகத்தன்மையும்

பாலசுப்ரமணியம் முத்துசாமி | Balasubramanian Muthusamy
19 Mar 2022, 5:00 am
1

பொதுவாக ஒன்றிய நிதிநிலை அறிக்கைக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் மாநில நிதிநிலை அறிக்கைக்கு அளிக்கப்படுவதில்லை. மாநில அரசின் நிதிநிலை அறிக்கையானது குறுகிய எல்லைகளைக் கொண்டது  என்றாலும் மக்களின் அன்றாட வாழ்வோடு மிக நெருக்கமானது. இந்த ஆண்டு தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை பல வகைகளிலும் பொதுச் சமூகத்தின் கவனத்தை ஈர்த்திருந்தது. முதல்முறையாக நிதித் துறைப் பின்னணியில் இருந்து, தொழில்முறைசார் நிர்வாகி ஒருவர் நிதி அமைச்சர் பொறுப்பை ஏற்றிருந்தது ஒரு காரணம். தமிழ்நாடு பெரிய கடன் சுமையையும், பொருளாதார நெருக்கடியையும் எதிர்கொண்டுவருவதும் அதை விமர்சித்து, "ஒரு மாற்றுச் சூழலைக் கொண்டுவருவோம்" என்று சொல்லி திமுக ஆட்சிக்கு வந்ததும் ஒரு காரணம்.  "நல்ல நிதி நிர்வாகத்தோடு மக்கள் நலத் திட்டங்களையும் பராமரிப்போம்" என்று சொன்ன முதல்வர் மு.க.ஸ்டாலின் மீதான நம்பிக்கையும் ஒரு காரணம். இதுவரை இல்லாத அளவுக்கு ஆட்சி நிர்வாகத்தில் சரியான இடத்தில் நல்ல அதிகாரிகள் அமர்த்தப்பட்டிருப்பதோடு சர்வதேச அளவில் பெயர் பெற்ற பொருளியலாளர்கள் அடங்கிய ஆலோசனைக் குழு, உள்ளூர் சமூகத்தின் பொருளாதார பலங்கள் - பலவீனங்களை அறிந்த ஆய்வாளர்கள் குழு என்று ஒரு பெரும் அணி களம் இறங்கியதும் அது உண்டாக்கியிருக்கும் எதிர்பார்ப்புகளும் ஒரு காரணம். இத்தகு சூழலில் வெளியாகியிருக்கும் நிதிநிலை அறிக்கை தொடர்பில் விரிவான விவாதங்களை 'அருஞ்சொல்' நடத்தவிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக வெளியாகும் இன்றைய கட்டுரையானது, எத்தகைய கடுஞ்சூழலைக் கடந்து இந்த நிதிநிலை அறிக்கையை நோக்கி திமுக அரசு வந்தது எனும் பின்னணியைச் சொல்கிறது. 

2021 தேர்தலில் வென்ற திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு, பதவியேற்கும் முன்னரே கரோனா இரண்டாம் அலை பெரும் சவாலெனக் காத்திருந்தது. பதவியேற்கும் முன்னரே, கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், முக்கிய அரசு அதிகாரிகளை அழைத்து, அதற்கான நடவடிக்கைகளை ஆலோசிக்கத் தொடங்கினார். இரண்டாம் அலை, முதல் அலையைவிட உக்கிரமாகத் தாக்கத் தொடங்கும் என்னும் அச்சம் பொதுச் சுகாதாரத் துறை வட்டாரங்களில் நிலவியது.

மே மாதம் 7ஆம் தேதி பதவியேற்ற ஸ்டாலின், தேர்தல் வாக்குறுதிகளில் ஐந்தை நிறைவேற்ற உடனடியாகக் கையெழுத்திட்டார்.

1. கரோனா நிவாரணத் தொகையாக 2.1 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு உடனடியாக முதல் தவணையாக ரூபாய் 2000 வழங்கும் ஆணை.

2. ஆவின் பால் விற்பனை விலையை லிட்டருக்கு ரூபாய் 3 குறைக்கவும், கொள்முதல் விலையை ரூபாய் 3 அதிகரிக்கவும் ஆணை.

3. நகரப் பேருந்துகளில் மகளிர் இலவசமாகப் பயணம் செய்யும் ஆணை.

4. தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைப் பெறுபவர்களுக்கான செலவுகளை முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தில் கொண்டுவருவதற்கான ஆணை.

5. 'உங்கள் தொகுதியில் முதல்வர்', திட்டத்துக்காகப் பெறப்பட்ட மனுக்களை 100 நாட்களில் தீர்க்க ஒரு தனித் துறை அமைக்கும் ஆணை.

ஐந்தில் நான்கு ஆணைகள், அரசுக்குச் செலவு வைக்கும் ஆணைகள். கரோனாவின் இரண்டாம் அலை, தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவையே உலுக்கியது. முதல் அலையைவிடப் பல மடங்கு உயிர்ச்சேதம் நிகழ்ந்தது. சென்னையின் பொது மருத்துவமனைகளின் முன்பு கரோனா நோயாளிகளின் அம்புலன்ஸ் படுக்கைகள் இன்றி காத்திருக்கும் நிலையில், திமுக ஆட்சி தொடங்கியது.

மாநிலமெங்கும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட, போக்குவரத்தும், பொருளாதாரச் செயல்பாடுகளும் முடங்கின. ஆகஸ்ட் மாதத்தில் தமிழ்நாட்டின் நிதிநிலை பற்றிய ஒரு வெள்ளை அறிக்கையை நிதி அமைச்சர் பிடிஆர் வெளியிட்டார்.  2013-14 ஆண்டு தொடங்கி, தமிழ்நாட்டின் நிதிப் பற்றாக்குறை தொடர்ந்து அதிகரித்துவந்துள்ளதைத் தரவுகள் மூலம் சுட்டிக் காட்டினார். 2019-20ஆம் ஆண்டு, 35000 கோடியாக இருந்த நிதிப் பற்றாக்குறை, கரோனா முதல் அலையின் பொருளாதாரத் தாக்கம் காரணமாக, 2020-21ஆம் ஆண்டு 62000 கோடியாக உயர்ந்ததைச் சுட்டிக்காட்டினார்.

வெள்ளை அறிக்கையை வெளியிட்ட சில நாட்களில், 2021-22-க்கான திமுக அரசின் இடைக்கால பட்ஜெட்டை சட்டசபையில் சமர்ப்பித்தார். அப்போது கரோனாவின் இரண்டாம் அலை உச்சத்தில் இருந்தது.  திமுக அரசு அதை ஓரளவு சமாளித்திருந்தாலும், அதன் பின் விளைவான பொருளாதார முடக்கத்தின் விளைவுகள் என்னவாக இருக்கும் என்னும் ஒரு நிச்சயமற்ற நிலை பொருளாதார அறிஞர்கள் மற்றும் நிதிநிலை நிபுணர்களிடையே நிலவியது.

அதிமுக அரசு தாக்கல்செய்திருந்த இடைக்கால பட்ஜெட்டை அடுத்து, தனது இடைக்கால பட்ஜெட்டை, `இந்த பட்ஜெட், அடுத்த ஆண்டு நாங்கள் தாக்கல் செய்யப் போகும் முழு ஆண்டு பட்ஜெட்டுக்கான வலுவான அடித்தளத்தை அமைக்கும்`, என்னும் அறிமுகத்தோடு சட்டசபையில் முன்வைத்தார்.

அந்த பட்ஜெட்டில், திமுகவின் இன்னொரு தேர்தல் வாக்குறுதியான பெட்ரோல், டீசல் விலை 5 ரூபாய் குறைக்கப்படும் என்பதில், ஒரு பகுதியாக பெட்ரோல் விலையை ரூபாய் 3 குறைத்தார். இதை எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.  

இரண்டாம் அலையின் தாக்கம் விலகாத நிலையிலும், அந்த ஆண்டுக்கான நிதிப் பற்றாக்குறை, முந்தைய ஆண்டு பற்றாக்குறையான 62000 கோடியை விட, 4000 கோடி குறைவாக இருக்கும் என அறிவித்தார். நெருக்கடிக் காலங்களில், அரசின் செலவுகள் அதிகரிக்கும். அதை முன்வைத்து நிதிப் பற்றாக்குறை அளவுகளைக் கண்டுகொள்ளாமல் முன்சென்றிருக்கலாம். ஆனால், அந்த சமயத்திலும், நிதிப் பற்றாக்குறையைக் குறைக்கும் ஓர் இலக்கை முன்வைத்தது பிடிஆர் என்னும் நிர்வாகியின் தன்னம்பிக்கையைக் காட்டியது.

பின்னர், அந்த ஆண்டு நவம்பர் மாதம் எவருமே எதிர்பாரா வண்ணம் ஒரு பெரும் புயல் சென்னையைத் தாக்கியது. 100 ஆண்டுகளில் காணாத அதீத மழையில் சென்னை மிதந்தது. மழைக்காலத்துக்கான சரியான முன்னெச்சரிக்கைகளை அரசு கையாளத் தவறிவிட்டது எனக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. முதல்வரே முன்னின்று பேரிடர் நிர்வாகச் செயல்பாடுகளைக் கவனித்தாலும், கொஞ்சம் அதிருப்தி நிலவியது உண்மைதான்.

இது போன்ற அசாதாரண நிகழ்வுகள் நடந்துகொண்டே இருந்தாலும், பிடிஆர் ஊடகங்களிலும், பொது நிகழ்வுகளிலும் பேசுகையில், நாங்கள் இந்த ஆண்டு, நிதி நிர்வாகத்தில் உள்ள ஓட்டைகளை அடைக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம் எனச் சொல்லி வந்திருந்தார். இந்த ஆண்டு நாங்கள் தமிழ்நாட்டின் நிதி நிர்வாகத்தைச் சரி செய்து முன்வைப்பது, வருங்காலத்தில், தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வரும் தொழில் நிறுவனங்களுக்குப் பெரும் நம்பிக்கையைக் கொடுப்பதாக இருக்கும் என 'இந்தியா டுடே'யின் ராஜ் செங்கப்பாவுடனான நேர்காணலில் சில நாட்கள் முன்பு கூறியிருந்தார்.

இந்தப் பின்னணியில்தான் பிடிஆர் இன்று முன்வைத்த 2022-23ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் முக்கியத்துவம் பெறுகிறது.  இந்த நிதிநிலை அறிக்கை, 2021-22ஆம் ஆண்டு திமுக அரசு முன்வைத்த பட்ஜெட்டின் திருத்தப்பட்ட மதிப்பீட்டையும் முன்வைக்கிறது. இது சென்ற ஆண்டு திமுகவின் செயல்திறனைப் பேசுகிறது. அந்த வகையில் திமுக நிர்வாகத்தின் ரிசல்ட் என்ன என்பதை இரண்டு புள்ளி விவரங்களைக் கொண்டு நாம் எடை போட்டுவிட முடியும்.

1. ஆகஸ்ட் மாதம் பிடிஆர் முன்வைத்த பட்ஜெட்டில் பற்றாக்குறை 58000 கோடி எனத் திட்டமிடப்பட்டிருந்தது. இது இன்று முன்வைத்த பட்ஜெட்டில் 55000 கோடி எனக் குறைக்கப்பட்டுள்ளது. இது, முந்தய ஆண்டான 2020-21ஐ விட 7000 கோடி குறைவு. கரோனா இரண்டாம் அலையின் உக்கிரமான தாக்கம், அதன் பின் விளைவான பொருளாதார முடக்கம், பின்னர் சென்னையின் வரலாறு காணாத மழையின் பாதிப்பு போன்றவற்றை, முந்தய ஆண்டைவிடச் சிறப்பாகச் சமாளித்ததன் அடையாளம்.

2. கரோனா முதல் அலை ஆண்டான 2020-21இல் மாநிலத்தின் வரிவருவாய் 38000 கோடி. அது 2021-22இல், 43000 கோடியாக அதிகரித்திருக்கிறது. அதேபோல், மாநிலப் பதிவுத் துறையின் வருமானம், 11700 கோடியில் இருந்தது 14300 கோடியாக உயர்ந்துள்ளது.  இந்த இரண்டு வழிகளில் மட்டுமே கிட்டத்தட்ட 7600 கோடி ரூபாய். அதிக வருமானம் இந்தக் கடினமான காலகட்டத்தில் கிடைத்துள்ளது.

அரசு உள்பட எந்த நிறுவனத்திலும், நெருக்கடியான காலகட்டங்களில், அந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் சிக்கலின்றி நடக்க உதவுவது மிகத் திறமையான நிதி நிர்வாகமே. அந்த வகையில், புதிதாகப் பதவியேற்ற அரசின் தேர்தல் அறிக்கைகளுக்கான செலவுகள், கரோனா போன்ற சுகாதார நெருக்கடி ஏற்படுத்தும் செலவுகள் மற்றும் பொருளாதார முடக்கம் போன்றவற்றைச் சமாளித்து, வருமானத்தையும் உயர்த்தியிருப்பதன் மூலம் தன் செயல்திறனை திமுக அரசாங்கம் வெளிப்படுத்தியிருக்கிறது என்று சொல்லலாம். ஆனால், தேர்தலுக்கு முன் திமுக கொடுத்த வாக்குறுதிகளோடும், முன்னரே செயல்பாட்டில் இருந்த திட்டங்களோடும், அண்டை மாநிலச் சூழல்களோடும் இந்த நிநிநிலை அறிக்கையை ஒப்பிட்டால்தான் இந்த அரசு செல்லவிரும்பும் முழுப் பாதையும் புலப்படும்; அடுத்தடுத்த நாட்களில் அவற்றை ஒவ்வொன்றாக துறைவாரியாகப் பார்ப்போம்!

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பாலசுப்ரமணியம் முத்துசாமி | Balasubramanian Muthusamy

பாலசுப்ரமணியம் முத்துசாமி, தனியார் நிறுவனம் ஒன்றின் தலைமைப் பொறுப்பில் தான்சானியாவில் பணியாற்றுகிறார். ஈரோடு பகுதி கிராமத்தைப் பின்னணியாகக் கொண்ட இவர், வேளாண்மையும், ஊரக மேலாண்மையும் பயின்றவர். காந்தியப் பொருளியல், வணிகம், வேளாண்மை முதலிய தளங்களில் எழுதிவருபவர். காந்தியை இன்றைய தலைமுறைக்குக் கொண்டுசெல்லும், ‘இன்றைய காந்திகள்’ நூலின் ஆசிரியர்.


4






பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

அ.பி   3 years ago

இனி அமைச்சர் பதவி அந்த துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களை கொண்டு நிரப்ப பட வேண்டும்....திரு மா. சுப்பிரமணியன் அவர்கள் மிகுந்த உடற்பயிற்சி மற்றும் sports Record வைத்து இருப்பதால், ஒலிம்பிக் வீரர்களை தேர்வு செய்யும் பொறுப்பு தர வேண்டும்... மின் துறையில் புரட்சிகரமான சிந்தனை உடையவர் நியமிக்க வேண்டும்...

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

சமஸ் சனாதனம் பேட்டிஅருஞ்சொல் ஸ்ரீதர் சுப்ரமணியம்இந்துஸ்தானி இசைக் கலைஞர் குமார் கந்தர்வாஇந்து மன்னன்பூட்டல் வேதிவினைஎழுத்தாளன்நாட்டின் எதிர்காலம்கோட்பாடுஎகிப்து ராணுவம்டாக்கா மருத்துவக் கல்லூரிசட்ரஸ்ராஜ்நாத் சிங்பரிவர்த்தனைபெலகாவிஜெய்ராம் தாக்கூர்உணவுமுறைநோன்பு காலம்ஹாங்காங்கின் 25 ஆண்டுகள்பூச்சிக்கொல்லிகோட்டையிலேயே ஓட்டைசமஸ் அருஞ்சொல் தமிழ்நாடு பிரிவினைராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்சமஸ் எனும் புனிதர்ரஃபியா ஜக்கரியா கட்டுரைஆன்லைன் மோசடிராகுல் சமஸ்திலிப் சக்கரவர்த்திபேச்சுஇந்தி அரசியலின் உண்மையான பின்னணிசுயமான தனியொதுங்கல்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!