கட்டுரை, ஆரோக்கியம், பொருளாதாரம், நிர்வாகம் 10 நிமிட வாசிப்பு
தமிழக பட்ஜெட்: சின்ன மருத்துவமனைகளை சிந்திக்கலாம்
தமிழக நிதிநிலை அறிக்கைத் தொடர்பில் விரிவாக 'அருஞ்சொல்' அலசிவருகிறது. தொடரின் ஒரு பகுதியாக சுகாதாரத் துறையில் என்ன நடக்கிறது என்பதை இந்தக் கட்டுரை பேசுகிறது.
உலக சுகாதாரத் துறைக்கு 2020ஆம் ஆண்டு மறக்க முடியாதது. அந்த ஆண்டு மார்ச் மாதம் கரோனா தொற்று பரவத் தொடங்கியபோது தமிழக அரசு தொடக்கத்தில் மிகவும் அசிரத்தையாகத்தான் அதை எதிர்கொண்டது. ஆனால், அதன் தாக்கம் அதிகமானவுடன் விழித்துக்கொண்டு சுகாதாரத் துறைச் செயல்பாடுகளை முடுக்கிவிட்டது.
மிக விரைவில் தேவைக்கேற்ப அதிக படுக்கைகள், கிருமிநாசினிகள், மருத்துவமனைகளில் சேர்க்கப்படும் நோயாளிகளுக்கு உணவு முதலிய ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
முதலாம் அலை முடிந்து கொஞ்சம் ஆசுவாசம் கிடைக்கும் காலத்தில் தமிழகத்தில் தேர்தல் நடந்தது. தேர்தல் முடிவுகள் வரும்போது கரோனாவின் இரண்டாம் அலை எழத்தொடங்கியது. பதவியேற்கும் முன்னரே, திமுக தலைவர் ஸ்டாலின் அரசு அதிகாரிகளைச் சந்தித்து, பேரிடர் நடவடிக்கைகளை ஆலோசித்தார். சென்னையின் பொது மருத்துவமனைகளின் வாசல்களில், நோயாளிகளுடன் ஆம்புலன்ஸ்கள் படுக்கைகளுக்காகக் காத்திருந்தன. பேரச்சம் மக்கள் அனைவருக்கும் இருந்தது.
திமுக அமைச்சரவையில், சுகாதாரத் துறை அமைச்சராக மா.சுப்ரமணியம் பதவி ஏற்றுக்கொண்டார். சென்னை மேயராக இருந்த காலத்தில், நல்ல நிர்வாகி எனப் பெயர் எடுத்தவர். முதல்வர் ஸ்டாலின், களத்தில் நேரடியாகவே இறங்கினார். தமிழகம் முழுவதும் பயணித்து, கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டார். மா.சுப்ரமணியமும், சுகாதாரத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணனும் சுழன்றனர். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு அமைச்சர் பொறுப்பாளாராக நியமிக்கப்பட்டார். அவர்கள் தலைமையில், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன.
முதல் நடவடிக்கையாக, கிடைக்கும் இடங்களில் எல்லாம் படுக்கை வசதிகள் அதிகரிக்கப்பட்டன. தற்காலிகச் சுகாதாரப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். தீவிர சிகிச்சைக்கான அறைகளும் ஏற்பாடுசெய்யப்பட்டன. ஆக்சிஜன் தட்டுப்பாடு பெருமளவில் இருந்தது. ஆக்சிஜனை வெளி மாநிலங்களில் இருந்து இறக்குமதிசெய்யவும், மாநிலத்தில் உள்ள ஆக்சிஜன் தயாரிப்புத் தொழிற்சாலைகளில் இருந்து கொள்முதல் செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பெரிய மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தயாரிப்பு இயந்திரங்கள் கூடுதலாக நிறுவப்பட்டு, ஆக்சிஜன் பற்றாக்குறை சரிசெய்யப்பட்டது.
கரோனா இரண்டாம் அலை 4-5 மாதங்கள் சுழன்று பெரும் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்திவிட்டு அகன்றது. இந்தக் கொடுந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், மருத்துவர்களும், செவிலியர்களும் அஞ்சாமல், அகலாமல் களத்தில் தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் பணிபுரிந்தனர். பல மருத்துவர்கள், செவிலியர்கள் தங்கள் இன்னுயிரை ஈந்தனர். போர்க்களமானது நாடு!
இந்தப் பேரிடரின்போதுதான் தமிழ்நாட்டின் பொதுச் சுகாதாரக் கட்டமைப்பின் முக்கியத்துவத்தை மாநிலமும், மக்களும் நன்கு உணர்ந்தனர். அரசு மருத்துவமனைகளைக் குற்றம் சொல்லி, அனைத்தையும் தனியாருக்குத் தாரை வார்க்கச் சொன்ன ‘அரைவேக்காட்டு அறிவிஜீகள்’ காணாமல்போயினர். கல்வி, மருத்துவம் போன்ற மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் கட்டமைப்புகள் அரசின் வசம் ஏன் இருக்க வேண்டும் என்பதற்கான மிகத் தெளிவான வாதத்தை, கரோனா அழுத்தம் திருத்தமாக நிறுவிச் சென்றது.
பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள்
இந்த நிதிநிலை அறிக்கையில், சுகாதாரத் துறைக்கான நிதி ஒதுக்கீடு முந்தைய ஆண்டான ரூ.20,394 கோடியைவிட 12% குறைக்கப்பட்டு, ரூ.17,902 கோடியாக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தக் குறைப்புக்கான காரணங்களைத் துறை சார்ந்த மானியக் கோரிக்கையைப் பார்க்கையில், மூலதனச் செலவுகள் கிட்டத்தட்ட ரூ.1,500 கோடி வரை குறைந்திருப்பதாகத் தெரிகிறது. இதற்கான காரணங்கள் விளக்கப்படவில்லை.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை தமிழ்நாடு மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் மருத்துவமனையாக மேம்படுத்தப்படுகிறது என்பது முக்கியமான அறிவிப்பாகும். அதேபோல, 19 அரசு மருத்துவமனைகள், மாவட்ட மருத்துவமனைகளாக மேம்படுத்தப்பட்டும் என்னும் அறிவிப்பும் வந்துள்ளது.
காஞ்சிபுரத்தில், 1969ஆம் ஆண்டு நிறுவப்பட்ட அறிஞர் அண்ணா புற்றுநோய் மருத்துவமனை, 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக மேம்படுத்தப்படும் என்னும் அறிவிப்பு ஏற்கெனவே வந்திருந்தது. ஆனால், இப்போது இருக்கும் படுக்கைகளே நிறைவதில்லை என்னும் ஒரு நிலை இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இது உண்மை எனில், இங்கே மேலும் படுக்கைகளைச் சேர்ப்பது அவ்வளவு உசிதம் அல்ல. தமிழ்நாட்டில் எங்கெங்கெல்லாம் புற்றுநோய் அதிகமாக இருக்கிறதோ, அந்த மாவட்டங்களில் புற்றுநோய்க்கெனத் தனி மருத்துவமனைகளை அமைக்கலாம். புற்றுநோய்ச் சிகிச்சைக்கென கூடுதல் படுக்கைகள் என்னும் அளவில் இந்தத் திட்டம் வரவேற்கத்தக்கதே.
ஆனால், ஒரு கேள்வி எழுகிறது. ஏன் 750 படுக்கைகள் கொண்ட பெரும் மருத்துவமனைகள்? சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்குச் சென்றிருந்த பத்திரிக்கையாளர் ரங்காசாரி, அங்கிருந்த கழிவறைகளின் மோசமான நிலையை ‘அருஞ்சொல்’ இதழில் எழுதியிருந்த கட்டுரையை இங்கே நினைவுகூரலாம். ஸ்டான்லி, ராஜீவ் காந்தி மருத்துவமனைகளின் முன்பு கூடும் கூட்டமும், அதை நிர்வாகம்செய்வதும் இந்த மருத்துவமனைகளுக்கு மிகவும் கடினமான காரியமாக உள்ளன.
பெரிய மருத்துவமனைகளில் பெரும் கூட்டம் என்பது தவிர்க்க முடியாதது. நமது சமூகத்தில், ஒரு நோயாளியுடன் தேவைக்கு அதிகமான உறவினர்கள் வருவது ஒரு பிரச்சினை. பொதுவெளிகளைச் சுத்தமாக வைத்திருக்கும் சமூகம் அல்ல நாம். சென்னை போன்ற பெரும் நகரங்களில் பெரும் அலகுகள் கொண்ட மருத்துவமனைகள் பராமரிப்பதற்குச் சிரமாமனவை. போக்குவரத்து நெரிசலையும் அதிகரிக்கக் கூடியவை.
சென்னை போன்ற பெருநகரங்களில், மருத்துவமனைகளை அமைக்க, அரசுக்கு நிலம் கிடைப்பதில் பிரச்சினைகள் இருக்கும் எனப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், வருங்காலத்தில் இதுபோன்ற பெரும் மருத்துவமனைகள் அவசியமா என்பதை அரசு பரிசீலனைசெய்வது மிக முக்கியம்.
சுத்தமான மருத்துவமனை, மருத்துவச் சேவையின் மிக முக்கியமான அங்கம். அவை பஸ் நிலையங்கள், சந்தைகள் போன்ற திறந்தவெளிகள் அல்ல. கொஞ்சம் அழுக்காக இருந்தால் பரவாயில்லை எனத் தாண்டி போவதற்கு.
சிறு மருத்துவமனைகள் மாநிலமெங்கும் பரந்து இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டால், மக்களுக்கு எளிதில் சேவைகள் கிடைக்கும். அவை பராமரிக்கவும் எளிதானவையாக இருக்கும்.
எனவே, மாநிலத்தில் ஒரு இடத்தில் பெரும் மருத்துவமனை என்பதற்குப் பதிலாக, வருங்காலத்தில், 15 இடங்களில் சிறு மருத்துவமனைகளைக் கட்டலாம். மிக முக்கியமாக புற்றுநோய் என்னும் ஒரு துறைக்கு, புற்றுநோய் அதிகமிருக்கும் மாவட்டங்களில், அறிஞர் அண்ணா, மருத்துவர் சாந்தா போன்றவர்களின் பெயர்கள் அடங்கிய 15 மருத்துவமனைகளை உருவாக்கலாம். காஞ்சிபுரத்தில் இருக்கும் தலைமை மருத்துவமனைக்கு மிகவும் அவசர சிகிச்சைத் தேவைப்படும் நோயாளிகளை அனுப்பி, உயர்தர மருத்துவம் செய்யும் ரெஃபரல் மருத்துவமனையாக உருவாக்கலாம். இதன் மூலம் மருத்துவச் சேவை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்களும் எளிதில் பெறக்கூடிய ஒன்றாக மாறும்.
மக்களைத் தேடி மருத்துவம்
ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்களால் பாதிக்கப்படுபவர்களில் பலர், அதற்கான சீரான சிகிச்சைகளைப் பெறுவதில்லை. அதேபோல, மார்பகப் புற்றுநோய் பற்றிய அறிதல்கள் இல்லாமல், பெண்கள், அதைத் தொடக்க நிலையில் பரிசோதனைகள் செய்துகொள்வதில்லை. வயதானவர்களுக்கான சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ள பலரால் மருத்துவமனை வரை சென்றுவரும் வசதிகள் இருப்பதில்லை. அதேபோல பெரிட்டோனியல் டயாலிசிஸ் என்னும் சுலபமான சிறுநீரகச் சிகிச்சை பலருக்குக் கிடைப்பது இல்லை. இந்தக் குறைபாடுகளை நீக்கும் வகையில், 2021 ஆகஸ்டு மாதம், ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்னும் புதிய திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பொது மருத்துவமனைகளைத் தேடி பயணம் செய்து பல மணி நேரம் காத்து சிகிச்சை பெற முடியாத முதியவர்களுக்கும், நோயினால் பாதிக்கப்பட்டு வீட்டைவிட்டு வெளியே நகர முடியாத நோயாளிகளுக்கும் இந்தத் திட்டம் பெரும் வரப்பிரசாதமாக இருக்கும். இதுவரை 50 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பயனடைந்திருக்கிறார்கள் என அரசு செய்திக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
செவிலியர் பற்றாக்குறை
மருத்துவப் படிப்பு என்பது தமிழகத்தின் பெரும்பாலான குடும்பங்களின் கனவு. மாநிலத்தின் பொதுநலக் கட்டமைப்புக்கு, பொது மருத்துவமனைகளும், மருத்துவர்களும் முக்கியமான தேவை. ஆனால், அதே அளவுக்கு முக்கியமானவர்கள், செவிலியர்கள். ஆனால், தமிழக மருத்துவக் கட்டமைப்பில், தேவையான அளவுக்கு செவிலியர்கள் இல்லை என்பது ஒரு பெரும் குறைபாடு. 1500 படுக்கைகள் கொண்ட ஸ்டான்லி மருத்துவமனையில் 500 மருத்துவர்களும், 334 செவிலியர்களும் உள்ளனர். 1500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைக்கு ஒரு ஷிஃப்டுக்கு 100 செவிலியர் என்னும் இந்த சதவீதத்தை பொதுச் சுகாதாரத்துறை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.
மருத்துவர்களைவிட, செவிலியர்களே நோயாளிகளுடன் அதிக நேரம் செலவிடுபவர்கள். எனவே பணி அழுத்தம் மிக அதிகமாக இருப்பது அவர்களுக்குத்தான். இதுபற்றி ஒரு ஆய்வுக்குழு அமைக்கப்பட்டு, தீர்வுகள் காணப்படுதல் மிக அவசியம்.
சேவை நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுதல்
கண் மருத்துவம், புற்றுநோய், மது குடிப்போர் மறுவாழ்வு முதலிய துறைகளில், தமிழ்நாட்டில் பல சேவை நிறுவனங்கள் வெற்றிகரமாக இயங்கிவருகின்றன.
எடுத்துக்காட்டாக, அர்விந்த் கண் மருத்துவக் குழுமம், தன் கண் சிகிச்சைக்கான பரிசோதனைகளை, அறுவைசிகிச்சைகளை நோயாளிகளுக்கு மிகத் தரம் வாய்ந்த முறையில் மிகக் குறைவான செலவில் மேற்கொண்டுவருகின்றன. அவர்கள் அந்த மருத்துவச் சேவையை, ஏழைகளுக்கு எவ்வாறு அளிக்க முடிகிறது, அதற்காக அவர்கள் செலவிடும் தொகை என்ன, ஒப்பீட்டில், அதே சிகிச்சையை அளிக்க அரசுக்கு என்ன செலவாகிறது என்பதை ஒரு முறையான ஆய்வு செய்து, அவர்களது சிகிச்சை சிறப்பானதாக இருக்கும்பட்சத்தில், அவர்களுடன் அரசு இணைந்து மக்களுக்கு அவர்கள் மூலமே சிகிச்சை அளிக்கும் ஒரு முறையைப் பரிசீலிக்கலாம். இதனால், மக்களுக்குத் தரமான சிகிச்சை கிடைக்கும். அதேசமயம், மருத்துவக் கட்டமைப்பு மற்றும் ஊழியர்களுக்காகும் செலவுகளும் குறையும்.
இத்திட்டம், லாப நோக்கில்லாத சேவை நிறுவனங்களுடன் மட்டுமே, இணைந்து செயல்படும் வகையில் இருக்க வேண்டும். இந்தச் சேவை நிறுவனங்களும் நீண்ட காலம் (உதாரணம்: அரவிந்த் கண் மருத்துவக் குழுமம், சங்கர நேத்ராலாயா, அடையாறு புற்றுநோய் மருத்துவமனை, சுந்தரம் ஃபவுண்டேஷன்) மக்களுடன் பணிபுரிந்த ஒன்றாக இருக்க வேண்டும். இது வழக்கமான குறுகிய கால அரசு டெண்டர் முறையிலன்றி, நீண்ட கால செயல்திறன் ஒப்பந்த அடிப்படையில் இருக்க வேண்டும்.
கடந்த ஆண்டு கரோனா தொற்றை வெற்றிகரமாக எதிர்கொண்ட வகையிலும், தொடர்ந்து மருத்துவக் கட்டமைப்பைப் பலப்படுத்தும் வகையிலும் தமிழ்நாடு அரசு செயலாற்றிவருவது பாராட்டுக்குரியது. இந்த ஆண்டு குறைக்கப்பட்ட முதலீடு ஒரு தற்காலிகச் செயல் என நம்புவோம்.
3
பின்னூட்டம் (1)
Login / Create an account to add a comment / reply.
Ganeshram Palanisamy 3 years ago
இதை நான் ஓரிரு வருடங்களுக்கு முன்பே கூறியிருந்தேன். ஒரு AIIMS க்கு பதிலாக நான்கைந்து இடங்களில் மருத்துவமனகளை அமைக்கலாம். அதுவும் முக்கிய நகரங்களில் இருந்து 10-15 கிமீ தள்ளி.
Reply 3 1
Login / Create an account to add a comment / reply.