கட்டுரை, சட்டம் 9 நிமிட வாசிப்பு

பால் தொழிலுக்கு ஆபத்து?

பாலசுப்ரமணியம் முத்துசாமி | Balasubramanian Muthusamy
18 Feb 2022, 5:00 am
2

ராண்டுக்கும் மேலாக நடந்த விவசாயிகள் போராட்டத்தின் விளைவாக, மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றுக்கொண்ட ஒன்றிய அரசு, சத்தமில்லாமல் அடுத்த ஏவுகணையை ஊரகப் பொருளாதாரம் நோக்கி அனுப்பியிருக்கிறது. 2022 ஜனவரி 18-ம் தேதியன்று, தேசிய பால்வள வாரியச் சட்டத் திருத்த மசோதாவின் வரைவு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. 

என்ன பிரச்சினை?

இந்த வரைவு மசோதாவில் முன்வைக்கப்படும் இரண்டு முக்கிய திருத்தங்கள், தற்போதைய பால் துறைக் கூட்டுறவு நிறுவனங்களின் முன்னாள் தலைவர்கள் மற்றும் துறை வல்லுநர்களால் எதிர்க்கப்படுகின்றன. அவை: 

1. தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் இயக்குநர் குழுவில், தனியார் பால் துறையைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படுவார்.

2. தேசியப் பால்வளத் துறை, தனது செயல்பாடுகளை, கூட்டுறவுத் துறையைத் தாண்டி, தனியார் துறைக்கும் விரிவாக்கம்செய்யும்.

இந்தத் திருத்தங்களால் பால் துறைக்கு என்ன கெடுதல்கள் விளைந்துவிடும் எனக் கேட்கலாம். இந்தியப் பால் துறை வளர்ந்து வந்த வரலாற்றை அறிந்துகொண்டால், இதனால் விளையும் சிக்கல்கள் என்னவென்பது விளங்கும்.

பால் தொழில் வளர்ந்த வரலாறு

இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில், குஜராத்தின் ஆனந்த் நகரில் பால் உற்பத்தியாளர்கள் தனியார் பால் வணிகர்களால் ஏமாற்றப்பட்டுவந்தனர். இதனால் நஷ்டமடைந்த பால் உற்பத்தியாளர்கள், சர்தார் வல்லபபாய் படேலைச் சந்தித்து, தங்களுக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டனர். அவர் தன் அடுத்தநிலைத் தலைவரான மொரார்ஜி தேசாயை அழைத்து, பால் உற்பத்தியாளர் நலனைக் காக்கும் ஒரு நிறுவனத்தை உருவாக்கித் தருமாறு பணித்தார். 

மொரார்ஜி தேசாய் திருபுவன் தாஸ் படேல் என்னும் உள்ளூர்த் தலைவரை அழைத்து, இந்தப் பணியை ஒப்புவித்து, பால் உற்பத்தியாளர் கூட்டுறவு நிறுவனம் உருவாக உதவிசெய்தார். 'அமுல்' எனப் பெயரிடப்பட்ட அந்தப் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு நிறுவனம் வெற்றியடைந்தது. அந்நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்த வர்கீஸ் குரியன், அமுல் நிறுவனத்தின் பொருட்களை நாடெங்கும் கொண்டுசேர்த்து, அதைப் பல மடங்கு பெரிதாக்கினார்.

இதே காலகட்டத்தில், ஒன்றிய அரசின் முதலாம் மற்றும் இரண்டாம் ஐந்தாண்டு திட்டங்கள் வழியே உருவாக்கப்பட்ட பால் உற்பத்தி மற்றும் பதனிடும் நிறுவனங்கள் பெரும் தோல்வியை அடைந்திருந்தன. அரசின் பால் நிறுவனங்கள் தோல்வியடைகையில், 'அமுல்' மட்டும் எப்படி வெற்றிபெற்றது என்பதை அறிந்துகொள்ள, அன்றைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, 'அமுல்' இயங்கிக்கொண்டிருந்த ஆனந்த் நகருக்கு வந்தார். பால் உற்பத்திசெய்யும் கிராமம் ஒன்றுக்குச் சென்று, அங்கேயே இரவு முழுவதும் தங்கி, உற்பத்தியாளர்களுடன் உரையாடினார். பின்னர், குரியனுடனும் உரையாடி, தன் சந்தேகங்களைத் தீர்த்துக்கொண்டார். 

அமுல் வெற்றிக்கான காரணங்கள்

1. அமுல் பால் உற்பத்தியாளர்களின் நிறுவனமாக இயங்கிவந்தது. ஒருவருக்கு ஒரு பங்கு என்னும் கூட்டுறவு நிறுவனம்.
2. ஒருவருக்கு ஒரு பங்கு என்னும் சமமான உரிமை எனினும், உரிமையாளர் எவ்வளவு பால் உற்பத்தி செய்கிறாரோ, அந்த அளவுக்கு அவருக்கு வருமானம் அதிகரிக்கும்.  
3. இம்முறையில், சம உரிமை இருக்கும் அதேசமயத்தில், உழைப்புக்கேற்ற வருமானம் எனத் தனி மனித உழைப்புக்கும் பலன் கிடைக்கும். சம உரிமை மற்றும் செயல்திறன் – இரண்டுக்குமே மதிப்பு இருக்கும் வணிக அமைப்பு.
4. 'அமுல்' நிறுவனம், கொள்முதல்செய்யும் பாலை, பல்வேறு பொருட்களாக மாற்றி, நுகர்வோருக்கு நேரடியாகக் கொண்டுசெல்கிறது. இங்கே மற்ற வணிகம்போல இடைத்தரகர்களுக்கு இடம் இல்லை. எனவே, நுகர்வோர் செலுத்தும் பணத்தில், மிக அதிக சதவீதம் உற்பத்தியாளருக்குச் செல்லும். 

பால் துறையின் நீடித்த மேம்பாடு என்பது, பால் உற்பத்தியாளர்களின் பங்களிப்போடு முன்னெடுக்கப்படுகையில்தான் சாத்தியம் என்பதை அறிந்துகொண்ட பிரதமர் சாஸ்திரி, 'அமுல் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு' மாதிரியை நாடெங்கும் கொண்டுசெல்ல ஒரு நிறுவனத்தை உருவாக்கச் சொன்னார். அவர் வழிகாட்டுதலின் படி, 'தேசிய பால் வள மேம்பாட்டு நிறுவனம்', 'அமுல்' பிறந்த அதே ஆனந்த் நகரில் 1965-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 

தேசிய பால்வள நிறுவனம் வழக்கமான அரசாங்க நிறுவனமல்ல. பால் உற்பத்தியாளர் நலன் நாடும் கூட்டுறவுப் பால் உற்பத்தி நிறுவனங்களின் மேம்பாட்டுக்காக, அரசு சாராத, பால் துறை தொழில்நுட்பம் சார்ந்த நிபுணர்களால், நிர்வகிக்கப்படும் நிறுவனம். இது 1980-ம் ஆண்டு, நாடாளுமன்றத்தின் ஒரு சட்டம் மூலம், அதன் தனித்தன்மை உறுதிசெய்யப்பட்டது.

மூல நோக்கங்கள் என்ன?

தேசிய பால்வள நிறுவனம் கீழ்க்கண்ட நோக்கங்களுடன் தொடங்கி இன்று வரை செயல்பட்டுவருகிறது:

1. கூட்டுறவு முறையே, தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் விரும்பத்தக்க வணிக முறையாக இருக்கும். இது பால் துறையின் வளத்தை, ஜனநாயக வழியில், அதை உருவாக்கும் மக்களாகிய பால் உற்பத்தியாளர்களின் நிர்வாகத்தின் கீழ் வைத்திருக்க உதவும். 
2. உண்மையான சுயசார்பு என்பது, மக்கள் ஒன்றிணைந்து சுதந்திரமாகச் செயல்பட்டு, உருவாக்கும் நிறுவனத்தின் செயல்பாடுகளின் வழி பயனடைதல் மற்றும் பொறுப்புடன் நிர்வகித்தலாகும்.
3. சமூகத்தில் நீடித்த வளர்ச்சி என்பது, மக்களால் நிர்வகிக்கப்படும் நிறுவனங்களின் வழிகாட்டுதலின் மூலமே நடக்கக் கூடும்.
4. இந்த நிறுவனங்களின் மேலாண்மையிலும், முடிவுகளிலும், பெண்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் பங்களிப்பு இருக்க வேண்டும். 
5. தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகள், செயல்திறன் மேம்பாடுகளின் மூலம் இந்தியப் பால் உற்பத்தித் துறை தொடர்ந்து தன் முதன்மை நிலையைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும்.
6. சூழலுக்கேற்ப தேசிய பால் வள மேம்பாட்டு நிறுவனம், தன் தொழில் உத்திகளை மாற்றிக்கொண்டாலும், அடிப்படை விழுமியங்களை எந்தக் காரணத்துக்காகவும் மாற்றிக்கொள்ளக்கூடாது.

தேசிய பால்வள மேம்பாட்டு நிறுவனத்துக்கான தொடக்கக் கால முதலீடு தொடங்கி, பல்வேறு திட்டங்களுக்கான நிதியாதாரத்தை தேசிய பால்வள மேம்பாட்டு நிறுவனமே திரட்டிக்கொண்டது.

1971-ம் ஆண்டு உணவு மற்றும் வேளாண் நிறுவனத்தின் (Food and Agriculture Organisation) உதவியோடு, வெண்மைப் புரட்சி-1 தொடங்கப்பட்டது. அதன் பின்னர் 2 மற்றும் 3-ஆம் கட்டங்களில், இந்தியாவின் 22 மாநிலங்களில், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. இது தவிர, தில்லி, பெங்களூர் போன்ற நகரங்களில் மிக வெற்றிகரமாக இயங்கிவருகின்றது. தேசிய பால் வள நிறுவனம், இந்தியப் பால் துறைக்கான தொழில்நுட்பங்கள், இயந்திரங்கள் போன்றவற்றை உற்பத்தி செய்யும் துணை நிறுவனங்கள் பலவற்றையும் உருவாக்கிக்கொண்டது. 

1971-ம் ஆண்டு 2 கோடி டன்னாக இருந்த இந்தியப் பால் உற்பத்தி, வெண்மைப் புரட்சியின் மூன்றாம் கட்ட இறுதியில் - 1996-ம் ஆண்டில் - உலகின் மிகப் பெரும் பால் உற்பத்தியாளராக உருவெடுத்தது. 2021-ம் ஆண்டு இந்தியப் பால் உற்பத்தி 20 கோடி டன்னைத் தாண்டியது. 1970-களில் தினசரி சராசரி பால் உற்பத்தி 103 கிராமாக இருந்த நிலை உயர்ந்து, இன்று 400 கிராமாக உயர்ந்துள்ளது.

1991-ம் ஆண்டு நவ தாராளமயப் பொருளாதாரச் சீர்திருத்தங்களுக்குப் பின், கூட்டுறவுப் பால் துறை நசிந்துபோகும் என எதிர்பார்த்ததற்கு மாறாக, அமுல், ஆவின், மில்மா, நந்தினி, வேர்கா போன்ற கூட்டுறவுப் பால் நிறுவனங்கள் செயல்திறன்மிக்க வகையில் செயல்பட்டுவருகின்றன.

வேளாண் துறையில், உணவு தானிய மானியங்களுக்காக, இந்திய அரசு ஆண்டுக்கு 1.80 லட்சம் கோடி ரூபாய் வரை செலவிட்டுவருகிறது. ஆனால், பால் துறைக்கான மானியம் ஆண்டுக்கு ரூ.2500 கோடிதான்.

இந்தியப் பால் துறை என்பது, தேசிய பால்வள வாரியத்தின் செயல்பாடுகளால், பெருமளவு மானியங்கள் தேவையற்ற, உற்பத்தியாளர்களுக்கு ஓரளவு லாபகரமான வணிகமாகச் செயல்பட்டுவருகிறது. இதில் தனியார் துறை போன்ற லாப நோக்கம் கொண்ட இடைத்தரகர்கள் இல்லாமல் இருப்பதால், நுகர்வோர் செலுத்தும் விலையில், பெருமளவு உற்பத்தியாளர்களைச் சென்றடைகிறது.

கடந்த சில பத்தாண்டுகளில், ரிலையன்ஸ் போன்ற அசுர நிதிபலம் பெற்ற நிறுவனங்கள் பால் துறையில் நுழைந்தன. தேசிய பால்வள வாரியத்தின் அதிகாரிகளைக் கவர்ந்து சென்று, பால் தொழிற்சாலைகளை தொடங்கின. பல பன்னாட்டு நிறுவனங்களும் தங்கள் செயல்பாடுகளைத் தொடங்கின. ஆனால், அவை அனைத்துமே, குறைந்த செலவில் இயங்கும் செயல் திறன் மிக்க கூட்டுறவு நிறுவனங்களின் வணிகச் சங்கிலியுடன் போட்டி போட இயலாமல், தங்கள் தொழிலை சில ஆண்டுகளுக்குப் பின்னர் நிறுத்திக்கொண்டன.

1965-ம் ஆண்டு தொடங்கி, இன்று வரை, இந்தியப் பால் துறை, அரசின் தலையீடுகள் அதிகமில்லாமல், மிகக் குறைந்த மானியத்தில், ஓரளவு லாபகரமாக இயங்கிவருகின்றன. உண்மையிலேயே பால் துறைக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டுமென்றால், அரசு ஒன்றும் செய்யாமல் இருக்கலாம் என்ற அளவிலேயே அதன் செயல்பாடுகள் இன்று உள்ளன. 

தேசிய பால்வள வாரியத்தில், தனியார் துறைப் பிரதிநிதிகளை இயக்குநர்களாக நுழைப்பதும், தனியார் துறைக்கு தேசிய பால் வள வாரியம் பங்களிக்க வேண்டும் என அதன் செயல்பாடுகளைத் தனியார் துறைக்கு விஸ்தரிப்பதும், தேசியப் பால்வள மேம்பாட்டு வாரியத்தின் கொள்கைகளுக்கு முரணாகும். 

இன்று தனியார் துறையிடம் அளவற்ற நிதியாதாரம் உள்ளது. தொழில்நுட்பமும் எளிதில் கிடைக்கிறது. பின் எதற்காக அவர்கள், பால்வள மேம்பாட்டு நிறுவனத்தில் நுழைய வேண்டும்? தனியார் துறையின் ஆதிக்கம் மெல்ல மெல்லப் பரவி, கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனங்களுக்கான முதலீடுகளை, செயல்பாடுகளை முடக்கவேசெய்யும்.

நீண்ட கால நோக்கில், இது பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு நிறுவனங்களை எதிர்மறையாகப் பாதிக்கும். பால் உற்பத்தியாளர்களின் வருமானம் குறைந்து, ஊரகப் பொருளாதாரம் சிதைந்துவிடும். இதனால், முக்கியமாகப் பாதிக்கப்படப்போவது பால் உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் பெண்கள்தாம். 

எனவே, ஒன்றிய அரசின் இந்த மசோதா திருத்த முயற்சியை எதிர்த்து, பால் உற்பத்தியாளர் கூட்டுறவு நிறுவனங்கள், மாநில அரசுகள், விவசாயச் சங்கங்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் குரல் கொடுக்க வேண்டும். ஏழைகளுக்கு உதவிசெய்யாவிடினும் பரவாயில்லை. அவர்கள் வயிற்றில் அடிக்கும் திட்டங்களை அரசு செய்யாமல் இருக்கட்டும்.

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
பாலசுப்ரமணியம் முத்துசாமி | Balasubramanian Muthusamy

பாலசுப்ரமணியம் முத்துசாமி, தனியார் நிறுவனம் ஒன்றின் தலைமைப் பொறுப்பில் தான்சானியாவில் பணியாற்றுகிறார். ஈரோடு பகுதி கிராமத்தைப் பின்னணியாகக் கொண்ட இவர், வேளாண்மையும், ஊரக மேலாண்மையும் பயின்றவர். காந்தியப் பொருளியல், வணிகம், வேளாண்மை முதலிய தளங்களில் எழுதிவருபவர். காந்தியை இன்றைய தலைமுறைக்குக் கொண்டுசெல்லும், ‘இன்றைய காந்திகள்’ நூலின் ஆசிரியர்.


4

3





பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   3 years ago

நீங்கள் சொல்ல மறந்த இன்னொன்று பொதுமக்களுக்கு பால் பொருட்கள் குறைந்த விலையில் கிடைத்தது.

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   3 years ago

நீங்கள் தொடர்ச்சியாக பால் கூட்டுறவு சங்கங்களை புகழ்ந்து எழுதினீர்கள். அதுதான் அவர்களுக்கு முக்கிய உறுத்தல். ஆப்பு தயார் செய்துவிட்டார்கள்.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

அனல் மின் நிலையம்ரஃபேல் விமானம்கடற்கரைசிறுநீரகக் கல்மகாபாரதம்சின்னம்மெஹ்பூபா முஃப்திகணினி அறிவியல்மாநிலங்களவையின் அதிகாரங்கள்ராணுவ ஆதிக்கம்ஜி ஜின் பிங்துணிச்சலான புதிய பார்வைபாலியல்தமிழ் ஒன்றே போதும்தேசிய சராசரி வருமானம்ஜெயிலர்ஜீவானந்தம் ஜெயமோகன்வானதி சீனிவாசன்மணவை முஸ்தபா: இறுதி மூச்சுவரை தமிழ்ப் பற்றாளர்!தொல்லை தரும் தோள் வலி!மக்கள் இயக்க அமைப்புகள்தனித் தெலங்கானாபொது அமைதிபிரணாய் ராய்மோகன் பகவத்மிகை ஈடுபாடும் உருவாவது எப்படி?மகமாயிதொழில்நுட்பம்முந்தைய பிரபஞ்சத்தின் நினைவுமூலக்கூறு

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!