கட்டுரை, ஏன் எதற்கு எப்படி? 5 நிமிட வாசிப்பு

பத்ம விருதுகளின் வரலாறு என்ன?

டி.வி.பரத்வாஜ்
31 Jan 2022, 5:00 am
1

இந்த ஆண்டு பத்ம விருதுகள் அறிவிப்பை சர்ச்சைகள் சூழ்ந்துகொண்டன. எதிர்க்கட்சி வரிசையில் உள்ள காங்கிரஸைச் சேர்ந்த குலாம் நபி ஆசாத், மார்க்ஸிஸ்ட் கட்சியைச் சேர்ந்த புத்த தேவ் பட்டாச்சார்ஜி இருவருக்கும் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக வெளியான தகவல்களே சர்ச்சைகளுக்கான காரணம். முன்னவர் விருதை ஏற்றுக்கொண்டார்; பின்னவர் விருதை ஏற்க மறுத்துவிட்டார் என்ற தகவல்கள் வெளியாயின. இதையொட்டி, பத்ம விருதுகளுக்கு ஆளுமைகள் எப்படித் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்; இப்படித் தேர்ந்தெடுக்கப்படுகிறவர்களுக்கு விருது அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக ஏன் அவர்களுடைய அனுமதியைக் கேட்கிறார்கள் என்கிற விஷயங்களும் பேசுபொருள் ஆயின. அடிப்படையில், பத்ம விருதுகள் எப்படிக் கொடுக்கப்படுகின்றன? விஷயம் அறிவோம்!

விருதுகளுக்கான வரலாறு என்ன?

ராணுவம், காவல் துறை, தீயணைப்புத் துறை போன்றவற்றில் சிறப்பாகப் பணியாற்றுவோருக்கு ஆண்டுதோறும் அரசு விருதுகள் வழங்கப்படுகின்றன. அதைப் போல குடிமக்களுக்கும் (சிவிலியன்கள்) அவரவர் துறையில் காட்டும் ஈடுபாட்டுக்காகவும் சிறப்பான சேவைக்காகவும் வழங்கவே பத்ம விருதுகள் 1954-ல் நிறுவப்பட்டன.  பத்ம விபூஷண் பெஹலா வர்க் (முதலாவது தரம்), தூஸ்ரா வர்க் (இரண்டாவது தரம்), தீஸ்ரா வர்க் (மூன்றாவது தரம்) என்று இந்த விருதுகள் ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டன. இது விருதாளர்கள் மத்தியில் ஒரு சங்கடத்தை உருவாக்கியதால் விரைவிலேயே பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ என்று பெயர்களை  மாற்றிவிட்டார்கள். பொது வாழ்வில் கலை, சமூக சேவை, பொது விவகாரம், அறிவியல், பொறியியல், தொழில்நுட்பம், வியாபாரம், தொழில்துறை, மருத்தவம், இலக்கியம், கல்வி, சுகாதாரம், கலை என்று பல்வேறு துறைகள் வாரியாக 1955 முதல் வழங்குகின்றனர்.

விருதுக்கு யார் தேர்ந்தெடுக்கிறார்கள்?

விருதுக்கு உரியவர்களைத் தேர்ந்தெடுக்க ஆண்டுதோறும் தேர்வுக் குழுவை நியமிக்கிறார் பிரதமர். மத்திய அமைச்சரவைச் செயலர்தான் இந்தக் குழுவின் தலைவர். உள்துறைச் செயலர், குடியரசுத் தலைவரின் செயலர், பல்வேறு துறைகளைச் சேர்ந்த நான்கு அல்லது ஆறு பிரமுகர்கள் இக்குழுவில் உறுப்பினர்களாக இடம்பெறுவர். இவர்களுடைய பெயர்கள் வெளியே  தெரிவிக்கப்படாது. 

யார் பரிந்துரைக்கலாம்?

விருதுக்குரியவரைத் தனி நபர்கள் உள்பட எவர் வேண்டுமானாலும் பரிந்துரைக்கலாம். மற்றவர்கள்தான் பரிந்துரைக்க வேண்டும் என்று காத்திருக்காமல் நாமே கூட நம்மைப் பற்றி (உண்மையாக) 800 வார்த்தைகளுக்கு மிகாமல் எழுதி அனுப்பலாம். ஆண்டுதோறும் மே 1 முதல் செப்டம்பர் 15 வரையில் இத்தகைய விண்ணப்பங்கள் பெறப்படும். மத்திய ஆட்சிக்குள்பட்ட நேரடிப் பகுதிகள், மத்திய அமைச்சகங்கள், மாநில அரசுகள்கூடப் பரிந்துரைகளை அனுப்பலாம். ஆனால், தகுதி தொடர்பில் இந்தக் குழு ஆராயும். குறிப்பிட்ட துறையில் ஆற்றியிருக்கும் பங்களிப்பை மட்டும் அல்லாது, சம்பந்தப்பட்டவர் குறித்து சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டுகள், வதந்திகள், வழக்குகள் உண்டா என்றும் காவல் துறை மூலம் விசாரிப்பார்கள். அதன் பின்னரே முடிவெடுப்பார்கள்.

தேர்ந்தெடுக்கப்பட்டால் என்ன நடைமுறை?

இதற்குப் பின் தேர்ந்தெடுக்கப்பட்டால், விருதாளர்களின் பட்டியல், பிரதமரிடம் தரப்படும். அவர் அதை ஏற்றுக்கொண்டு குடியரசுத் தலைவருக்கு அனுப்புவார். அவருடைய ஒப்புதலும் கிடைத்த பிறகு, வாய்மொழியாக சம்பந்தப்பட்டவருக்குத் தெரிவிக்கப்பட்டு, அவர் ஒப்புதலையும் பெற்றுவிட்டு, அதன் பிறகே குடியரசு தினத்துக்கு முதல் நாள் விருது அறிவிக்கப்படும். ‘எனக்கு விருது வேண்டாம்’ என்று ஒருவர் மறுத்துவிட்டால் அவருடைய பெயரைப் பட்டியலிலேயே சேர்க்க மாட்டார்கள். குடியரசுத் தலைவர்கள் மாளிகை அறிவிப்பை வெளியிட்ட பிறகு இந்த விருதை மறுப்பதற்கு இடம் தரும் விதி ஏதும் இல்லை.

விருதை ஏற்க மறுத்த வரலாறு உண்டா?

நிறைய உண்டு. மார்க்சிஸ்ட் தலைவர் நம்பூதிரிபாடு 1992-ல் விருதை ஏற்க மறுத்துவிட்டார். பிரதமர் இந்திரா காந்தியின் முதன்மைச் செயலராக பணியாற்றிய பி.என். ஹக்சரும் 1973-ல் பணி ஓய்வுக்குப் பிறகு விருதுக்குத் தேர்வுசெய்யப்பட்ட போது வாங்க மறுத்திருக்கிறார். ராமகிருஷ்ண மிஷன் அமைப்பைச் சேர்ந்த துறவி ரங்கநாதானந்தருக்கு 2000-த்தில் விருது வழங்க சம்மதம் கேட்டபோது, தனிப்பட்ட முறையில் தருவதை ஏற்க முடியாது, இயக்கத்துக்கு வேண்டுமானால் தாருங்கள் என்று கூறினார். வரலாற்று அறிஞர் ரொமீலா தாப்பருக்கு இந்த விருதை வழங்க இரண்டு முறை அரசு விரும்பியும் அவரும் வாங்க மறுத்துவிட்டார்.

இந்த விருதினால் என்ன பலன்?

இந்த விருதுகளின்போது சான்றிதழும் கழுத்தில் அணியும் வகையில் பதக்கமும் தரப்படும். பதக்கத்தைப் போன்ற சிறிய வடிவிலான நினைவுச் சின்னமும் தரப்படும். சான்றிதழில், எந்தத் துறையில் சிறந்து விளங்கியதற்காக விருது என்பது குறிப்பிடப்பட்டு குடியரசுத் தலைவரின் கையொப்பமிடப்பட்டிருக்கும். இந்தப் பதக்கத்தை, தேசிய நிகழ்ச்சிகளின்போதும் அரசு விழாக்களின்போதும் விருது பெறுவோர் கழுத்தில் அணிந்துகொள்ளலாம். ஆனால், இந்த விருதைப் பெயருக்கு முன்னாலோ, பின்னாலோ பட்டம்போல சேர்த்துக்கொள்ளக் கூடாது. அரசு சார்ந்த விஷயங்களில், சமூக அங்கீகாரம், மரியாதை இவையெல்லாம்தான் பலன்கள்!

இந்த ஆண்டின் சர்ச்சைகள் என்ன?

குடியரசு தினத்துக்கு முன்தினம் ஆண்டுதோறும் பாரத ரத்னா, பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்படுவது உண்டு. மார்ச் - ஏப்ரல் மாதங்களில் இவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும். இந்த ஆண்டு 128 பேர் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

வங்க முன்னாள் முதல்வரும் மூத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவருமான புத்ததேவ் பட்டாசார்ஜிக்கு பத்ம பூஷண் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்களின் ஒப்புதல் பெறுவது மரபு. ஆனால், ‘மக்களுக்குச் செய்யும் பொதுத் தொண்டுக்கு வேறு எதையும் கைமாறாகப் பெறக் கூடாது’ என்ற கட்சியின் முடிவுக்குக் கட்டுப்பட்டு அதை வாங்கிக்கொள்ள புத்ததேவ் மறுத்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாயின. 

காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் தலைவருமான குலாம் நபி ஆசாத்தும் பத்ம பூஷண் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். விருதைப் பெற அவர் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, விருது அவருக்கு அறிவிக்கப்பட்டது.

இரு எதிர்க்கட்சிகளுமே இந்த விருதுகளை விரும்பவில்லை. மார்க்ஸிஸ்ட் கட்சி நேரடியாக இந்த விருதைப் பெற விரும்பாததற்கான காரணத்தைப் பேசியது. மாறாக, காங்கிரஸ் கட்சி மௌனம் சாதித்தது. ஆசாத்துக்குப் பாராட்டு தெரிவிக்கவில்லை. ஆனால், புத்ததேவ் பட்டாச்சார்ஜியை  ‘அவர் ஆசாத் - குலாம் அல்ல’ (அதாவது, அவர் சுதந்திரமானவர் - அடிமை அல்ல) என்று வர்ணித்தார் ஜெய்ராம் ரமேஷ். இது புத்த தேவுக்கான பாராட்டு என்பதைவிடவும் குலாம் நபி ஆசாத் மீதான தாக்குதல் என்று சொல்லலாம்.

இந்திய அரசின் இந்த விருதுகள் அரசியல் நோக்கங்களுக்கு அப்பாற்பட்டது என்று சொல்லப்பட்டாலும், இதன் பின்னணியில் அரசியல் நோக்கம் உண்டு என்பது இரு கட்சிகளுக்குமே தெரியும். அதனாலேயே, அவை இந்த விருதுகள் தம் கட்சித் தலைவர்களை வந்தடைவதை விரும்பவில்லை. ஆனால், நெடுநாள் சேவையாற்றியோருக்கு அளிக்கப்படும் இத்தகு விருதுகளை முழுக்கவுமே அரசியல் கண்ணோட்டத்துடனேயே அணுக வேண்டுமா எனும் கேள்வியும் இருக்கிறது!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
டி.வி.பரத்வாஜ்

டி.வி.பரத்வாஜ், சுயாதீன பத்திரிகையாளர். வட இந்தியாவை மையக் களமாகக் கொண்டு எழுதுபவர்.


7

1





பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

Renupriyan    3 years ago

அருமையான கட்டுரை ❤️

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

விபி சிங் சமஸ்உதவித்தொகைஅரசன்நுழைவுத் தேர்வுமக்களவை தேர்தல்லாலுமுடி உதிர்வுதிருநாவுக்கரசர் சமஸ் பேட்டிஅறிவு மரபுசாதிரீதியிலான அவமதிப்புமாற்றம் விரும்பிகளுக்கும்மின்சார சீர்திருத்தம்சிறையும் சாக்லேட் கேக்கும்அண்ணா சாலை விபத்து: பொறியியலும் பாதுகாப்பும்என்ஐஏ பெரியார் இருவருக்கும் இடம் உண்டு: ச.கௌதமன் பேட்டிவிஜய் குப்தாவின் மீன் வளப் புரட்சி!கன்னியாகுமரிஇயந்திரமயம்சேகர் மாண்டே கட்டுரைவடக்கு: மோடியை முந்தும் யோகிஅல்வா பொட்டலங்கள்இரண்டாவது முறை வெற்றிsamas on vallalarக்ரியா எஸ்.ராமகிருஷ்ணன்பூரண மதுவிலக்குவல்லினம்மாநிலத் தலைகள்: கமல்நாத்ஆண்ட்ரூ சாரிஸின் சுட்டல்இசை மேதைகள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!