கட்டுரை 7 நிமிட வாசிப்பு

ஏஞ்செலா மெர்க்கல்: விடைபெறும் தேவதை

வ.ரங்காசாரி
28 Sep 2021, 5:00 am
2

இஸ்ரேல் பிரதமர் கோல்டா மேயர், பிரிட்டிஷ் பிரதமர் மார்கரெட் தாட்சர், இந்திய பிரதமர் இந்திரா காந்தி, இலங்கை பிரதமர் சிரிமாவோ பண்டார நாயக, மியான்மர் தலைவர் ஆங்சான் சூச்சி… இவர்களைப் போல உலக அரசியல் வரலாற்றில் என்றைக்கும் ஒளிரும் நட்சத்திரமாக ஏஞ்செலா மெர்க்கெல் இருப்பார். பெற்றோர் இட்ட பெயருக்குப் பொருத்தமான தேவதைதான் அவர். 16 ஆண்டு காலம் ஜெர்மனியின் பிரதமராக இருந்துவிட்டு அரசியலிலிருந்து விடைபெறுகிறார். மெர்க்கெல்லுக்குப் பிறகு யார் என்று ஜெர்மனி மட்டுமல்லாது, உலக நாடுகள் அனைத்தும் கவனிக்கும் அளவுக்கு அரவணைக்கும் தலைவராக இருந்தவர் மெர்க்கெல்.

1954 ஜூலை 17-ல் அன்றைய மேற்கு ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் பிறந்தார் மெர்க்கெல். மெர்க்கெல்லின் தந்தை ஹோர்ஸ்ட் கஸ்னர், தாயார் ஹெரிண்ட். தந்தை ஜெர்மானியர், தாய் போலந்துக்காரர். அதனால் இவ்விரு மொழிகளும் மட்டுமல்லாமல், ரஷ்ய மொழியும் சரளமாகப் பேசுவார் மெர்க்கல்; ஆழ்ந்த மத நம்பிக்கை உள்ளவர். 

லுத்தரன் திருச்சபை போதகரான தந்தை கிழக்கு ஜெர்மனியில் தேவ ஊழியம் செய்ய முடிவுசெய்ததால், மெர்க்கெலும் அங்கே நகர்ந்தார். பள்ளிக்கூடத்தில் ரஷ்ய மொழியிலும் கணிதத்திலும் முதல் மாணவியாகத் திகழ்ந்தார். லீப்சிக் நகரின் கார்ல் மார்க்ஸ் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் படித்தார். படிப்பு முடிந்ததும் பொறியியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் வேலை கேட்டார். கல்லூரியில் பணிபுரிவோரை உளவு பார்த்து தகவல் தருவதாக இருந்தால் வேலை தருகிறோம் என்றது நிர்வாகம். எனக்கு எதையும் ரகசியமாக வைத்துக்கொள்ளத் தெரியாது என்று கூறி அந்த வேலையை நிராகரித்தார். பின்னர் குவாண்டம் கெமிஸ்ட்ரி பிரிவில் ஆய்வு செய்து 1986-ல் முனைவர் பட்டம் பெற்றார். 1989 வரை ஆய்வாளராக இருந்தார். 

இதனூடாகவே தனது 23-வது வயதில் உடன் பயின்ற இயற்பியல் மாணவர் உல்ரிச் மெர்க்கெலை 1977-ல் மணந்தார். 1982-ல் அந்தத் திருமணம் முறிந்தது. வேதியியல் பேராசிரியர் ஜோசிம் சாவரை 1981-ல் சந்தித்தார்; 1998-ல் இருவருக்கும் மணம் ஆனது. கால்பந்தாட்டத்துக்குத் தீவிர ரசிகை மெர்க்கல். பிற்காலத்தில் நாடாளுமன்றத்தில் இருக்கும்போதுகூட கால்பந்து நேர்முக வர்ணனை என்றால் மூழ்கிவிடுவார்.

ஜெர்மனியின் முதல் பெண் பிரதமர்

மெர்க்கல் 1989-ல் அரசியலுக்கு வந்தார். லோதர் டி மெய்சியரின் கிழக்கு ஜெர்மானிய அரசின் ஊடகத் தொடர்பாளராகச் சிறிது காலம் பணியாற்றினார். கிறிஸ்துவ ஜனநாயக கட்சியின் (சிடியு) பொதுச் செயலாளராகப் பதவியேற்றார். மெர்க்கலின் அரசியல் செயல்பாடுகள் 1990-ல் கிழக்கு, மேற்கு ஜெர்மனிகள் இணைந்து ஒரே ஜெர்மனியானபோது அவரை நாடாளுமன்றம் நோக்கி உந்தியது. மெக்லென்பர்க்-வோர்போமெர்ன் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார் மெர்க்கல். 

பிரதமர் ஹெல்முட் கோல் மகளிர், இளைஞர் நலத் துறை அமைச்சராக 1991-ல் மெர்க்கலைத் தனது அமைச்சரவையில் இணைத்துக்கொண்டார். பிறகு சுற்றுச்சூழல், இயற்கைப் பாதுகாப்பு, அணுசக்தித் துறை அமைச்சராக அவர் 1994-ல் நியமிக்கப்பட்டார். இந்தப் பயணத்தின் தொடர்ச்சியாக 2005 பொதுத் தேர்தலுக்குப் பிறகு, ஜெரார்ட் ஷ்ரோடருக்குப் பிறகு ஜெர்மனியின் பிரதமராகப் பதவியேற்றார்.

ஜெர்மனியின் முதல் பெண் பிரதமர் மெர்க்கல்; ஒரு கூட்டணி அரசின் தலைவராகவே கடும் சவால்கள் மத்தியில் மெர்க்கல் பொறுப்பேற்றார். ஆட்சியை அவர் கையாண்ட விதமும் சர்வதேச அளவில் ஜெர்மனிக்கு அவர் உண்டாக்கிய மதிப்பும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட செல்வாக்கை மக்களிடத்தில் மெர்க்கலுக்கு உண்டாக்கின. 2005, 2009, 2013, 2017 என்று அடுத்தடுத்து 4 முறை பிரதமராக அவர் பதவியேற்றார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பெருந்தூண்

ஐரோப்பிய ஒன்றியம், வட அட்லான்டிக் ஒப்பந்த நாடுகள் அமைப்பு (நேட்டோ), அட்லான்டிக் கடலோர நாடுகள் என்று எந்த அமைப்பாக இருந்தாலும் அங்கே சர்வதேச ஒத்துழைப்பையே வலியுறுத்தி அதற்காகப் பாடுபட்டு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தார் மெர்க்கல். 2007-ல் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவராக இருந்து லிஸ்பன் உடன்படிக்கை, பெர்லின் பிரகடனம் ஆகியவற்றை வெற்றிகரமாக உருவாக்கினார்.

உலக அளவில் நிதி நெருக்கடிநிலை ஏற்பட்டபோதும் ஐரோப்பிய நாடுகள் கடன் சுமையில் தத்தளித்தபோதும் அவற்றிலிருந்து மீளவும் மக்கள் நிம்மதியாக வாழவும் மிக நுட்பமாகச் செயல்பட்டு தீர்வு கண்டார். பொருளாதார வீழ்ச்சியிலிருந்து நாடுகளைக் காப்பாற்ற 2008-ல் அடித்தளக் கட்டமைப்புத் துறைகளிலும், பொது முதலீட்டிலும் எல்லா நாடுகளும் அதிகம் செலவழிக்க தூண்டுதல் திட்டத்தை உருவாக்கினார். ஐரோப்பிய ஒன்றியத்தின் பெருந்தூண் என்று மெர்க்கல் கொண்டாடப்பட்டதில் ஆச்சரியமே இல்லை.

ஆப்பிரிக்க நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள் போன்றவற்றிலிருந்து ஏராளமான அகதிகள் படகுகளில் உயிரைப் பணயம் வைத்து வந்தபோது ஐரோப்பிய நாடுகள் அவர்கள் இறங்க இடம் தர மறுத்தன. அந்த நெருக்கடியிலிருந்து அவர்களைச் சர்வதேச சமூகம் காக்க வேண்டிய பொறுப்பை உரக்கப் பேசி, ஜெர்மனியின் கதவுகளைத் திறந்துவைத்து முன்னுதாரணமாகத் திகழ்ந்தார் மெர்க்கல். 

தாராள ஆராதகர்

ஜெர்மனியில் அணு ஆயுத உற்பத்தியைப் படிப்படியாகக் குறைத்துக்கொண்டேவந்து முழுக்க அவற்றை ஒழிப்பது நோக்கி அவர் நகர்ந்தது பெரும் சாதனை. பசுமைக்குடில் இல்ல வாயு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தவும் புதுப்பிக்கத்தக்க இயற்கை ஆற்றல்களை அதிகம் பயன்படுத்தவும் மூலவளங்களை உருவாக்கினார். ஜெர்மனி ராணுவத்தில் மக்கள் அனைவரும் சில ஆண்டுகள் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற கட்டாயத் திட்டத்தை நீக்கினார். அனைவருக்கும் சுகாதார வசதிகள் கிடைக்கும் சீர்திருத்தத்தைக் கொண்டுவந்தார். 

சீனத்திலிருந்து 2019 இறுதியில் கரோனா தொற்று ஐரோப்பாவில் பரவலானபோது, ஜெர்மனியில் உரிய தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து பெரும் பாதிப்பைத் தவிர்ப்பதில் பெரும் அக்கறையைக் காட்டினார் மெர்க்கல். 2011 முதல் 2012 வரையிலும் பிறகு 2014 முதலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவராக நீண்ட காலம் பதவி வகித்தார். 2021-க்குப் பிறகு பிரதமர் பதவியை மீண்டும் ஏற்க மாட்டேன், அரசியலிலிருந்து ஓய்வெடுக்கப் போகிறேன் என்று சிடியூ கட்சியின் மாநாட்டில் 2018 அக்டோபரிலேயே அறிவித்துவிட்டார்.

மெர்க்கலின் சிறப்பான குணம் எதுவென்றால், சித்தாந்தங்களுக்கு அப்பாற்பட்ட சிறந்த நடைமுறைத் தலைவராக அவர் செயல்பட்டார் என்பது ஆகும். 

இளமைப் பருவத்தில் சுதந்திர ஜெர்மானிய வாலிபர் சங்கத்தில் (எஃப்டிஜே)  உறுப்பினராக இருந்தார் மெர்க்கல். அது கம்யூனிஸ்டுகளின் இளைஞர் இயக்கமாகும். மார்க்ஸிஸம்-லெனினிஸம் தொடர்பான அறிமுகம் அப்போது அவருக்குக் கிடைத்தது. அந்தக் காலகட்டதில் ஒருவர் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் கிழக்கு ஜெர்மனியில் கம்யூனிஸத்தை அறிந்துகொள்வது கட்டாயமாக இருந்தது. அதன் விளைவோ என்னவோ, பிற்பாடு ஜெர்மனியின் பொருளாதார, சமூக தளங்களில் வலதுசாரி சீர்திருத்தங்களை ஆதரிப்பவராக மெர்க்கல் இருந்தார். தாராளச் சந்தைக்கு, கட்சியைவிட தீவிர ஆதரவாளராக அவர் செயல்பட்டார்.

அணுசக்தி தயாரிப்பை ஜெர்மனி கைவிட வேண்டும் என்ற கோரிக்கை வந்தபோது, எதிர்க்கட்சியில் இருந்த மெர்க்கல், “இதில் அவசரப்பட வேண்டாம், நம்முடைய பொருளாதாரம் வளர்ந்த பிறகு இதில் கவனம் செலுத்தலாம்” என்றார். இராக்கில் அமெரிக்கப் படைகள் நுழைந்ததைக்கூட, “தவிர்க்க முடியாதது” என்று வரவேற்றார். ஐரோப்பிய ஒன்றியத்தில் துருக்கியை உறுப்பினராகச் சேர்க்க ஜெர்மனி அரசு அளித்த ஆதரவை கண்டித்த அவர், “சிறப்புக் கூட்டாளியாக வைத்திருக்கலாம், உறுப்பினர் பதவிக்கு என்ன அவசியம்?” என்று கேட்டார். துருக்கிக்கு எதிராக பெரும்பாலான ஜெர்மானியர்களுக்கு இருந்த எண்ணமே அவரிடமும் நிலவியது. 

பல முரண்பட்ட முடிவுகளை எடுத்தார் என்றாலும், ஜெர்மனி மக்கள் மெர்க்கலைத் தங்களுக்கு அணுக்கமான தலைவராகவே பார்த்தார்கள். எந்த சர்வதேச அமைப்பின் தலைவராக இருந்தாலும் எந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாக இருந்தாலும் அரவணைப்புணர்வுடன் நடந்துகொண்டார். தவறுகளைச் சுட்டிக்காட்டத் தயங்கியதில்லை. ஜெர்மனியின், ஐரோப்பிய ஒன்றியத்தின் நலன்களுக்கு முன்னுரிமை கொடுத்தார். அதேசமயம் உலகம் என்ற பொதுச் சமுதாயத்தின் ஓர் அங்கமாகவே எப்போதும் செயல்பட்டார். அகதிகள் பிரச்சினையை இன, மத, மொழி, இட அடிப்படையில் ஆராய்ந்து கொண்டிருக்காமல் மனிதாபிமானப் பிரச்சினையாகப் பார்த்தார். அதனால் எழுந்த விமர்சனங்களை லட்சியம் செய்யவில்லை. ஜெர்மனிக்கு வரும் அகதிகள் உடலால், உணர்வால், உள்ளத்தால் ஜெர்மானியராகிவிட வேண்டும் என்று கூறியதன் மூலம் இரு தரப்பாருக்கும் பாலமாக இருந்தார். 

பலவீனங்களுக்கு முகம் கொடுத்தவர்

மெர்க்கலை 1995-ல் நாய் கடித்துவிட்டது. அதிலிருந்து நாய் என்றாலே அவருக்கு பயம். 2007-ல் பத்திரிகையாளர் சந்திப்பின்போது ரஷியத் தலைவர் விளாதிமீர் புடின் தன்னுடைய லேப்ரடார் நாயுடன் வந்தார். உங்களை அச்சப்படுத்துவதற்காக அல்ல’ என்று மெர்க்கலைப் பார்த்து அவர் கூறினார். “தான் ஒரு ஆண்பிள்ளை என்று காட்ட நாயைக் கூட்டிவந்தார் புடின். தன்னுடைய சொந்த பலவீனம் குறித்து அவருக்கு அச்சம்” என்று காட்டமாகக் கண்டித்தார் மெர்க்கல்.

2017-க்குப் பிறகு மெர்க்கலுக்குக் கை நடுக்கம் ஏற்படுவது எல்லோருக்கும் தெரிந்தது. அதை மறைக்க அவர் முற்படவில்லை. ‘உடலில் நீர்ச்சத்து குறைந்தால் அப்படியாகிறது’ என்று அவர் பதில் அளித்தார். 2019 ஜூன் மாதம் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது கை நடுக்கம் அதிகமானதால் நிற்க முடியாமல் இருக்கையில் அமர்ந்துவிட்டார். தான் அரசியலிலிருந்து விடைபெறுவது என்று எடுத்த முடிவு சரியானதுதான், இல்லையா என்று அவர் தனக்கு நெருக்கமானவர்களிடம் கேட்டார். ஜெர்மனி இப்போது அடுத்த தேர்தலை எதிர்கொண்டிருக்கும் நிலையில், தனக்கு அடுத்து கட்சியை வழிநடத்தவுள்ளோருக்காக உளமாரப் பணியாற்றினார் மெர்க்கல்.

ஜெர்மனி மக்கள் தங்களுடைய நேசமிக்க தலைவருக்கு அரசியலிலிருந்து விடைகொடுக்கிறார்கள். கூடவே ஐரோப்பாவும் சக்தி வாய்ந்த தலைவருக்கு விடைகொடுக்கிறது. மேற்கத்திய அரசியல் தலைவர்களிடமிருந்து படிக்க வேண்டிய பாடங்களில் ஒன்றாக இந்தியத் தலைவர்களுக்கு நாம் இதையும் சொல்லலாம்; நீங்கள் நல்ல நிலையிலும், புகழின் உச்சத்திலும் இருக்கும்போதே அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுவிட வேண்டும்!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
வ.ரங்காசாரி

வ.ரங்காசாரி, மூத்த பத்திரிகையாளர். விமர்சகர். ‘அருஞ்சொல்’ இதழின் துணை ஆசிரியர். முன்னதாக, ‘தினமணி’யில் செய்தி ஆசிரியராகவும், பின்னர் ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் நடுப்பக்க நிர்வாகியாகவும் பணியாற்றியவர். பத்திரிகைத் துறையில் 35 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவம் மிக்கவர். தொடர்புக்கு: vrangachari57@gmail.com








பின்னூட்டம் (2)

Login / Create an account to add a comment / reply.

Aravindh Rajendran   3 years ago

ஹிட்லர் எனும் சர்வாதிகாரி ஆட்சி செய்ய நாட்டில் இப்படியும் ஒரு தலைவர் என்பதை எடுத்துக்காட்டுகிறார் மெர்க்கல்.இனி ஜெர்மனிக்கு சான்சலராக வர வாய்ப்புள்ள ஓலஃப் ஷோல்ஷ்/ அர்மின் லாஷெட் எப்படி இப்பிம்பத்தை தாங்குவார்களா என்று பார்ப்போம்.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

KARANTHAI JAYAKUMAR   3 years ago

மேற்கத்திய அரசியல் தலைவர்களிடமிருந்து படிக்க வேண்டிய பாடங்களில் ஒன்றாக இந்தியத் தலைவர்களுக்கு நாம் இதையும் சொல்லலாம்; உண்மை உண்மை

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

தொழிலாளர்கள் உரிமைஉரிமைவங்கதேசம்: கும்பல்களின் நீதி!முசோலினிநிலக்கரி தட்டுப்பாடுதமிழ்நாடு முதல்வர்பண்பாட்டு தேசியம்அடையாளத் தலைவர்க்ரூடாயில்உள்கட்சி ஜனநாயகம்வசுந்தரா ராஜ சிந்தியாமதவாதம்அர்னால்ட் டிக்ஸ்தி கேரளா ஸ்டோரிஜெர்மானிEven 272 is a Far cryயாழ்ப்பாண நூலகம்பள்ளிக்கல்விபஞ்சாப் முதல்வர்சாதி ஒழிப்புகிறிஸ்தவர்கள்உச்ச நீதிமன்ற தீர்ப்புவி.பி.சிங்: ஓர் அறிமுகம்குறைந்தபட்ச ஊதியச் சட்டம்மக்களவை தேர்தல்தனுஷ்வன்கொடுமைத் தடுப்புச் சட்டம்முலாயம் சிங் யாதவ்ஆசிரியரிடமிருந்து...இடதுசாரி கட்சிகள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!