கட்டுரை, அரசியல், நிர்வாகம், கூட்டாட்சி 5 நிமிட வாசிப்பு

அக்னிவீர்: ஆதரிக்க 8 காரணங்கள்

திலீப் மண்டல்
11 Aug 2024, 5:00 am
0

ரேந்திர மோடி தலைமையிலான அரசு கொண்டுவந்துள்ள அக்னிவீர் திட்டம் பெரிய அளவில் விவாதப்பொருளாகியிருக்கிறது. இளம் வீரர்களை அக்னிவீர் திட்டத்தில் 4 ஆண்டுகளுக்கு மட்டும் பணியாற்ற அனுமதிப்பதால், ஈடுபாட்டுடன் கூடிய கடமை என்பது கரைந்துவிடும், பணிப் பாதுகாப்பும் போய்விடும் என்பது எதிர்ப்பாளர்கள் கூறும் முக்கியக் காரணங்கள். அயல்நாட்டு செய்தித்தாள்கள், ஊடகங்கள் அனைத்தும் இது தொடர்பாக தவறான புரிதல்களை மேலும் கிளறிவிடும் வகையிலேயே செய்திகளைத் தந்தன.

‘பிபிசி’யின் 2022ஆம் ஆண்டு தலைப்பு இது: தன்னுடைய ராணுவ பலத்தை சுருக்கிக்கொள்ள இந்தியா திட்டமிடுகிறதா?

‘அல் ஜஸீரா’: இந்தியாவின் புதிய ஆளெடுப்பு திட்டம் பேரழிவு தரும் விளைவுகளை ஏற்படுத்திவிடும்! 

(40,000 இடங்களுக்கு 12.8 லட்சம் இளைஞர்கள் 2024இல் அக்னிவீர் திட்டத்தில் சேர விண்ணப்பித்த நிலையிலும் இந்த விமர்சனம் வெளியானது).

சமூக ஊடகங்கள் பெருத்துவிட்ட இக்காலத்தில் இதைப் போன்ற கருத்துகள் இந்தியாவை உடனடியாக அடைந்து, சூழலை மேலும் சூடேற வைக்கிறது. சில அரசியல் தலைவர்கள் தங்களுடைய அரசியல் உள்நோக்கங்களுக்கேற்ப இது தொடர்பாகப் பேசி உசுப்பேற்றுகின்றனர்.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

பிரிட்டன் நடவடிக்கை

இந்தியாவைப் பொருத்து ‘பிபிசி’ தெரிவித்த கருத்து ஒருபுறமிருக்க, ராணுவத்தில் ஆள்களைச் சேர்ப்பதைப் படிப்படியாக – ஆனால் கணிசமாக குறைத்துக்கொண்டேவருகிறது பிரிட்டிஷ் அரசு. 2000வது ஆண்டில் 1,09,600 ஆக இருந்த சிப்பாய்களின் எண்ணிக்கை 2023இல் 76,950 ஆகிவிட்டது. ஃசைபர் போர் நுட்பங்கள், டுரோன்களுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறது பிரிட்டிஷ் ராணுவம்.

பிரிட்டனின் ஆள்குறைப்புக்கு ‘பிபிசி’ அளித்த தலைப்பு: ‘பிரிட்டிஷ் ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 2025இல் 72,500 ஆக குறைக்கப்படும்’. இந்த முடிவைக் கண்டித்தோ, விமர்சித்தோ கருத்து ஏதும் கூறப்படவில்லை. சமூக ஊடகங்களும் மௌனம் காத்தன.

இதையும் வாசியுங்கள்... 7 நிமிட வாசிப்பு

அக்னி பாதை: முட்டாள்தனமான திட்டம்

ப.சிதம்பரம் 27 Jun 2022

எட்டு காரணங்கள்

ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு தொடர்பாக அவரவர் கண்ணோட்டத்தில் தெரிவிக்கும் கருத்துகள் ஒருபுறமிருக்க, உலக அளவில் ராணுவ வியூகங்களில் கையாளப்படும் உத்திகளுக்கேற்ப அக்னிவீர் திட்டம் இயைந்துவருகிறது என்பதைத் தெரிவித்து, இதை ஆதரிப்பதற்கான எட்டு காரணங்களையும் கூறுகிறேன்:

1. உலகம் முழுவதும் ராணுவத்தில் நவீன ஆயுதங்கள், ஏவுகணைகள், கணினி உதவியுடனான தொழில்நுட்பங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. இவற்றைக் கையாள தொழில்நுட்பப் பயிற்சி பெற்ற, இளமையான, குறுகிய காலப் பயிற்சியிலேயே திறன்களை வளர்த்துக்கொள்ளும் வீரர்களைப் படையில் சேர்க்கின்றன. அமெரிக்க ராணுவம், இரண்டு ஆண்டுகள் முதல் ஆறு ஆண்டுகள் வரையில்தான் குறுகிய கால சேவைக்கான பணிக்காலம் என்று ஒப்பந்தம் செய்துகொள்கிறது. இதனால் புத்தம் புதிய இளைஞர்களின் ஆற்றல், படைக்குத் தொடர்ந்து கிடைக்கிறது. எதிர்காலத்துக்காக, அமெரிக்க ராணுவம் இப்போது படையில் இருப்பவர்களில் மேலும் 24,000 பேரை குறைத்துக்கொள்கிறது. அமெரிக்க ராணுவத்தைவிட இந்திய ராணுவம் அளவில் பெரிதாக இருந்தாலும், அந்த நாடு அடிக்கடி பிற நாடுகளுடன் மோதுவதைப் போல அதிக எண்ணிக்கையில் தாக்குதலில் ஈடுபடுவதில்லை.

இஸ்ரேல் நாட்டில் ராணுவ சேவை என்பது அனைவருக்கும் கட்டாயம். ஆண்கள் 32 மாதங்களும் பெண்கள் 24 மாதங்களும் தங்களுடைய இளவயதில் ராணுவத்தில் சேர்ந்து பயிற்சி பெறுவதுடன், போர் வந்தால் கட்டாயம் ஈடுபட வேண்டும். இப்படிப் பயிற்சி தரும்போதே திறமையும் ஆர்வமும் உள்ளவர்களைக் கட்டாயப் பணிக்காலத்துக்குப் பிறகும் பதவி உயர்வு, அதிக ஊதியம் தந்து ராணுவம் தக்கவைத்துக்கொள்கிறது. குறுகிய காலப் பயிற்சி முடித்தவர்கள் வெவ்வேறு தொழில்நுட்பத் திறமைகளுடன் சாதாரண வாழ்க்கையில் ஈடுபட்டு சாதிக்கின்றனர். மிகவும் கடுமையான இந்தச் சூழலில்கூட இஸ்ரேல் ராணுவத்தில் 1,69,500 பேர்தான் இருக்கின்றனர்.

சீனாவும் தனது மக்கள் விடுதலை சேனையின் (பிஎல்ஏ) துருப்புகள் எண்ணிக்கையை வெகுவாகக் குறைத்துக்கொண்டுவிட்டது. ஆள்களுக்குப் பதிலாக தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்துகிறது. 2018இல் ராணுவத்திலிருந்து 3 லட்சம் பேரை விடுவித்தது. அதேசமயம், பெரும் எண்ணிக்கையில் ஆயுதப்படை போலீஸை வைத்திருக்கிறது. நெருக்கடி ஏற்பட்டால் இவர்கள் ராணுவ வீரர்களாகக் களம் இறங்குவார்கள்.

இப்படி உலகின் பெரும்பாலான நாடுகள் ராணுவத்தில் நிரந்தர சிப்பாய்கள் என்ற வழிமுறையைக் கைவிட்டுவிட்டு இளைஞர்களை மட்டும் தேவைக்கேற்ப படையில் வைத்துக்கொள்ளும்போது, இந்தியா அதற்கு விதிவிலக்காகச் செயல்படுவது சரியா?

2. அக்னிபாத் திட்டமானது இந்திய ராணுவத்தில் தொடர்ந்து இளைஞர்களைச் சேர்ப்பது, பயிற்சியளித்து படையில் சேர்ப்பது. இதனால், படையில் வீரர்கள் புதுப்பிக்கப்படுவதுடன் படையின் சராசரி வயது 4 முதல் 5 ஆண்டுகள் வரையில் குறையும். இந்திய ராணுவத்தின் இன்றைய சராசரி வயது 32. உலக அளவில் சராசரி 26.

இந்திய ராணுவ அதிகாரிகள் பெரும்பாலும் 15 அல்லது 17 ஆண்டுகள் சேவைக்குப் பிறகு தங்களுடைய நடுத்தர வயதில் - 35 முதல் 37 இருக்கும்போது - படையிலிருந்து ஓய்வுபெறுகின்றனர். (ஜவான் என்றால் இளைஞர் என்ற பொருளுக்கு இது சற்றே முரண்). இந்திய ராணுவத்தில் முதியவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் பிரச்சினை 1963 - 1967 போர்க் காலத்துக்குப் பிறகு ஏற்பட்டது. அப்போது படையில் புதிதாக ஆள் சேர்த்ததுடன், ஏற்கெனவே படையில் இருந்தவர்களுக்கும் சேவைக்காலம், விருப்பத்தின் பேரில் நீட்டிக்கப்பட்டது. ஏழு ஆண்டுகள் முதல் 17 ஆண்டுகள் வரையில்கூட பலர் நீட்டிப்பு பெற்றனர்.

தாற்காலிக ஏற்பாடாகத் தொடங்கியது கிட்டத்தட்ட நிரந்தரம்போலவே பின்பற்றப்பட்டது. இதனால் இந்திய ராணுவத்தில் முதியவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது, ஓய்வூதியப் பிரச்சினைகளும் பெரிதானது. பெரும்பாலான படை வீரர்கள் திருமணமாகி பிள்ளைகள் பெற்று குடும்பஸ்தர்களாகவும் மாறிவிட்டனர்.

இதையும் வாசியுங்கள்... 5 நிமிட வாசிப்பு

வரவேற்புக்குரிய ஆரம்பம் அக்னி பாதை

ஆசிரியர் 20 Jun 2022

ஓய்வுபெற்ற பிறகு…

3. அக்னிவீர் திட்டத்தில் சேரும் படை வீரர்களில் திறமையும் ஆர்வமும் உள்ளவர்கள் ஒப்பந்த காலத்துக்குப் பிறகும் பணியில் நீடிக்க அனுமதிக்கப்படுவார்கள். அதேசமயம், ராணுவத்துக்காகும் செலவைக் கட்டுப்படுத்தவும் இந்தத் திட்டம் உதவும். அப்படி மிச்சமாகும் தொகையை, ராணுவத்தில் புதிய தொழில்நுட்பங்களைச் சேர்க்கவும், பயிற்சிகளை அதிகப்படுத்தவும், ஆயுதங்களை நவீனப்படுத்தவும் பயன்படுத்த முடியும். இதனால் ராணுவத்தின் ஒட்டுமொத்த தாக்குதல் திறனும் அதிகரிக்கும். எந்தச் சூழ்நிலை வந்தாலும் எதிர்கொள்ளும் அளவுக்கு ராணுவம் படை, பலம், தொழில்நுட்பம், இளம் வீரர்களுடன் களம் காணும்.

4. அக்னிவீர் வீரர்கள் பதவிக்காலம் முடிந்த பிறகும் இளைஞர்களாகவே இருப்பதால், எளிதில் சாதாரண வாழ்க்கைக்குக் திரும்பிவிட முடியும். 40 வயது அல்லது அதை ஒட்டிய இப்போதைய ராணுவ வீரர்கள் ஓய்வுபெற்ற பிறகு புதிய வேலை பெறுவதற்கும் முடியாமல், வேறு தொழில்களிலும் ஈடுபட முடியாமல் திண்டாடும் நிலைமை ஏற்படாது. அக்னி வீரர்களின் குறுகிய பதவிக் காலத்தை கருத்தில்கொண்டே, அவர்கள் பணி ஓய்வுபெற்ற பிறகு புதிய வேலைவாய்ப்பை எளிதாகப் பெறும் வகையில் திறன் பயிற்சிகளும் சேர்த்தே அளிக்கப்படவுள்ளன. அத்துடன் அரசு வேலைகளில் சேரவும், மேற்கொண்டு கல்வி பயிலவும், தொழில் பயிற்சி பெறவும்கூட வாய்ப்புகள் அளிக்கப்படுகின்றன. ராணுவத்தில் சேர்ந்து திறனை வளர்த்துக்கொண்ட இவர்கள் ஒழுக்கமும் கட்டுப்பாடும் உள்ளவர்களாக தாங்கள் ஈடுபடும் பிற துறைகளிலும் நாட்டுக்குச் சிறப்பான சேவைகளை அளிக்க முடியும்.

அது மட்டுமல்ல, நாட்டின் நலனுக்காக தேவை ஏற்படும் பட்சத்தில் மீண்டும் ராணுவத்தில் சேர்ந்து போர்முனைக்குச் செல்வதற்கான தயார் படையணியாகவும் அக்னிவீரர்கள் திகழ்வார்கள். 4 ஆண்டுகள் பணி முடிந்து ஓய்வுபெறும் அக்னிவீர்கள் இன்றைய திட்டப்படி ரூ.11.7 லட்சம் பெறுவார்கள். அதை அவர்கள் தொழில், வணிகம் செய்ய மூலதனமாக பயன்படுத்திக்கொள்ள முடியும்.

5. மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் (சிஐஎஸ்எஃப்) ஆள்சேர்ப்பு விதிகளில் ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் திருத்தம் செய்துள்ளது. அதன்படி அதன் எதிர்கால ஆளெடுப்புகளில் 10% அக்னிவீர்களுக்காக ஒதுக்கப்படும். (சில மாநில அரசுகளும் காவல் துறையில் அக்னிவீர்களுக்கு தனியிடங்களை ஒதுக்குவதாக அறிவித்துள்ளன). மத்திய ஆயுதப்படைப் பிரிவிலும் அசாம் ரைஃபிள்ஸ் படையிலும் இப்படி 10% இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

6. மிகக் குறுகிய காலத்துக்குத்தான் வேலை என்றால் ராணுவ வீரர்களுக்குத் தொழிலில் ஈடுபாடு இருக்காது, சக வீரர்களுடன் கலந்து பழகுவதில் இணக்கம் ஏற்படாது, ஒப்பந்த காலத்துக்குப் பிறகு எதிர்காலம் எப்படியோ என்ற கவலையே பெரிதாக இருக்கும் என்றெல்லாம் இந்தத் திட்டத்தைக் குறை கூறுகின்றனர். குறுகிய காலப் பயிற்சியாக இருந்தாலும் ராணுவ வீரர்களிடையே ஒற்றுமையும் ஒருங்கிணைந்து செயல்படுவதும் வலுப்படவே செய்யும். குறுகிய காலத்தில் தயாராவதற்காகவே சிறப்பாக திட்டங்கள், பயிற்சிகள் வகுக்கப்படுவது உலகில் இப்போது நடைமுறையாகிவிட்டது. மிகச் சிறப்பாக திறமையை வெளிப்படுத்தும் அக்னிவீரர்கள் தொடர்ந்து படையில் தக்கவைத்துக்கொள்வதுடன் பதவி உயர்வுகளையும் பெற முடியும்.

எப்படி நடத்தப்பட வேண்டும் அக்னிவீரர்கள்?

7. இந்திய ராணுவம் என்பது வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்கான இடம் அல்ல. கிழக்கிந்திய கம்பெனி காலத்தில் இந்தியர்களுக்கு, ‘பட்டாளம்’ என்பது வேலைவாய்ப்புக்கான வழியாக இருந்தது. அதுகூட 1857 சிப்பாய் கலகத்துக்குப் பிறகு தென்னிந்தியர்களையும் வட இந்தியர்களையும் நம்பாமல் - டெல்லிக்கு வடக்கு பகுதியில் வசித்தவர்களையும் பெஷாவர்காரர்களையும் பிரிட்டிஷ் ராணுவம் அதிகம் சேர்த்துக்கொண்டது.

பிரிட்டிஷ் இந்திய ராணுவம் - பிரிட்டிஷ் மகாராணிக்காக, இந்திய மன்னர்களுக்கு எதிராகவே சண்டையிட்டது. அதில் சேர்ந்த இந்தியர்களும் ‘படைக்கு விசுவாசமாக’, இந்திய மன்னர்களுக்கு எதிரான போரில் தொடர்ந்து ஈடுபட்டார்கள். அதற்குக் காரணம் அதை அவர்கள் வெறும் ‘வேலைவாய்ப்பாக’ கருதியதுதான். இதே மனநிலை இப்போதும் தொடர முடியாது. வேலையில்லாதவர்களுக்கு வேலை அளிப்பதற்கான அமைப்பல்ல ராணுவம்.

ராணுவத்தில் பணிபுரிய நல்ல பயிற்சியும் அர்ப்பணிப்பு உணர்வும் திறமையும் அவசியம். உயிருக்கு ஆபத்தான கட்டத்தில்கூட தாய்நாட்டுக்காக தியாகம் செய்யத் தயாராக இருப்பவர்கள்தான் ராணுவத்தில் பணிபுரிவர். அக்னிபாத் திட்டம் கொண்டுவரப்பட்டாலும் இப்போது ராணுவத்தின் வெவ்வேறு பிரிவுகளில் பணியில் இருப்பவர்கள் எவரும் பணிக்காலத்துக்கு முன்னால் கட்டாயமாக ஓய்வு தந்து வீட்டுக்கு அனுப்பப்பட மாட்டார்கள்.

இதையும் வாசியுங்கள்... 7 நிமிட வாசிப்பு

நான் முஹம்மது ஸுபைர்

ப.சிதம்பரம் 18 Jul 2022

8. எதிர்க்கட்சித் தலைவர்கள் காலத்துக்கு ஒவ்வாத மனநிலையில் இருந்துகொண்டு, அரசியல் லாபத்துக்காக இந்தத் திட்டம் பற்றிப் பேசுகிறார்கள். ‘தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு நிரந்தர வேலை, நல்ல சம்பளம், ஓய்வுபெற்றால் கணிசமான ஓய்வூதியம் தரும் ராணுவ வேலைக்குக் குறுகிய கால ஆளெடுப்பா?’ என்று கண்டிக்கின்றனர். வயதானவர்கள் ராணுவத்தில் இருந்தால் அது படையின் ஆற்றலைக் குறைக்குமே என்ற தேச நலன் அவர்களுக்கில்லை.

அரசியல்ரீதியிலான இத்தகைய எதிர்ப்புகள் ராணுவம் எப்படி இருக்க வேண்டும் என்பதையே இரண்டாம் பட்சமாக்கிவிடும், ராணுவத்தை நவீனப்படுத்த முடியாமலும் அதில் சீர்திருத்தங்களைச் செய்ய முடியாமலும் தடுத்துவிடும்.

அக்னிவீர் திட்டம் சிறப்பாகச் செயல்பட, ராணுவத்தின் பிற படை வீரர்களைப் போலவே அக்னிவீர்களையும் சமமாக நடத்த வேண்டும். அவர்களுடைய சேவையை அங்கீகரித்து சிறப்புப் பட்டங்களை அளிக்க வேண்டும். அவர்களுடைய சீருடையும் பிற வீரர்களுக்கு சமமாக மிடுக்குடன் அமைய வேண்டும்.

ஓய்வூதியப் பலன்களுடன், பணிக்காலத்தில் இறக்கும் அக்னிவீர்களுக்கும் இதர வீரர்களுக்கு வழங்கப்படுவதைப் போன்ற இழப்பீடு வழங்கப்பட வேண்டும். போர்க்களத்தில் உயிர்த் தியாகம் செய்யும் அனைத்து வீரர்களும் சமமாகவே நடத்தப்பட வேண்டும். ராணுவத் தலைமையுடன் அரசு ஆலோசனை கலந்து, உரிய மாற்றங்களைச் செய்ய வேண்டும்.

© த பிரிண்ட்

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

தொடர்புடைய கட்டுரைகள்

அக்னி பாதை: முட்டாள்தனமான திட்டம்
வரவேற்புக்குரிய ஆரம்பம் அக்னி பாதை
நான் முஹம்மது ஸுபைர்

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
திலீப் மண்டல்

திலீப் மண்டல், மூத்த பத்திரிகையாளர். ‘இந்தியா டுடே’ இந்தி இதழின் நிர்வாக ஆசிரியராக இருந்தவர். இதழியல், சமூகவியல் தொடர்பான நூல்களை எழுதியிருக்கிறார். ‘தி பிரின்ட்’ உள்ளிட்ட இதழ்களில் தொடர்ந்து எழுதிவருகிறார்.

தமிழில்: வ.ரங்காசாரி

2






ராகுல்: கண்ணுக்குப் புலப்படாத நான்காவது குதிரைமுள்ளும் மலரும்மேதமைபைஜூஸ்வட கிழக்கு பிராந்தியம்டாலா டாலாபகுதிநேரம்மதச்சார்பற்ற கொள்கைகொழுப்புகர்நாடக சங்கீதம்சமூகவியல் துறைதமிழ்ப் பண்பாடுகருத்துப்படம்காதல்ஆஃப்கன் ஊடகம்அரசியல் சட்ட நிர்ணய சபைநேர்முக வரி வருவாய்முக்காடு அணிந்த பேய்பாஸ்மண்டாபாலுறவுப.சியின் தொழில் பசிசொத்துகள்பல்கலைக்கழகங்களில் அதிகாரம்நார்வேதேர்தல் நடைமுறைதாய்லாந்துபுஷ்பாராகுல் சமஸ்ஓ சொல்றியா மாமாசுப்ரியா சுலே

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!