கட்டுரை, தொடர், ஆரோக்கியம், வரும் முன் காக்க 5 நிமிட வாசிப்பு

கழுத்து வலியால் கவலையா?

கு.கணேசன்
22 May 2022, 5:00 am
1

முப்பது வருடங்களுக்கு முன்பு பட்டிதொட்டி எங்கும், ஆணும் பெண்ணும் தலையில் மண் கூடை, சாந்துச் சட்டி, தண்ணீர்க் குடம் சுமந்தார்கள்; களத்தில் தானிய மூட்டைகளைத் தூக்கினார்கள்; குளம், குட்டை, ஆற்றுக்குத் துணி மூட்டையைக் கொண்டுபோய்த் துவைத்தார்கள்; திருவிழாவுக்குச் செல்லும்போது, குழந்தைகளைத் தோளில் தூக்கிக் கொண்டார்கள். ஆனால், அப்போதெல்லாம் அவர்கள் கழுத்து வலி வந்து அதிகம் கஷ்டப்பட்டதாகத் தெரியவில்லை; கழுத்தில் ‘காலர்’ கட்ட வேண்டிய அவசியமும் ஏற்படவில்லை.

‘நவீனத் தொழில்நுட்பம்’ என்னும் பெயரில் வீடு, வயல், ஆலை, அலுவலகம், வேலை சார்ந்த இடம் எனச் சகலத்திலும் ‘மெஷின்’கள் வந்து உட்கார்ந்து கொண்டதும், தலைச்சுமை வேலைகள் ரொம்பவே குறைந்துவிட்டன. ஆனாலும், இப்போதுதான் கழுத்தில் வலி வந்து ‘காலர்’ கட்டிக் கொண்டவர்களை அதிகம் காண்கிறோம்.

என்ன காரணம்?

காட்டு வேலை, கட்டிட வேலை, ரோட்டு வேலைக்குச் செல்கிறவர்கள் தொடங்கி, வீட்டுப் பெண்கள், பதின்பருவத்தினர், அலுவலகம் செல்கிறவர்கள்வரை இன்றைய இளைஞர்களில் 75% பேர் கழுத்து வலிக்கு சிகிச்சை எடுப்பதாக ‘ஜர்னல் ஆஃப் ஆர்த்தோபீடிக்ஸ்’ எனும் பிரபல மருத்துவ இதழ் கருத்துச் சொல்லியிருக்கிறது. அது எடுத்த ‘சர்வே’யில், ‘கணினி, தொலைக்காட்சி, செல்போன், ‘டேப்லட்’ எனும் நவீன ‘சூனியக்காரிகள்’ நான்கும் சேர்ந்து நாட்டில் வைத்திருக்கும் ‘சூனியம்’ இது’ என்பது உறுதியாகி இருக்கிறது. நடுத்தர வயதுள்ளவர்களைக் குறிவைத்துத் தாக்கும் இந்தக் கழுத்து வலிக்கு ‘செர்விக்கல் ஸ்பாண்டிலைட்டிஸ்’ (Cervical Spondylitis) என்பது மருத்துவப் பெயர்.

காரணங்கள் என்ன?

கழுத்து வலிக்கு முக்கியக் காரணம், கழுத்துப் பகுதியில் உள்ள தசைகள் சோர்ந்துபோவதுதான். அப்போது கழுத்தை அவற்றால் தாங்கிப்பிடிக்க முடிவதில்லை. அதன் வெளிப்பாடுதான் கழுத்து வலி. அதிக சுமையைத் தலையில் தூக்குவது, நீண்ட நேரம் கழுத்தை அசைக்காமல் ஒரே நிலையில் வைத்துக்கொள்வது போன்றவை இந்த மாதிரி கழுத்து வலிக்கு அடித்தளம் அமைக்கும்.

கழுத்தில் உள்ள முள்ளெலும்புளுக்கு இடையில் சவ்வு சிதைந்து போவது அல்லது விலகிவிடுவது போன்ற காரணங்களால் கழுத்து வலி வருவது அடுத்த வகை. பொதுவாக நாற்பது வயதில் இந்தச் சவ்வு சிதையத் தொடங்கும். இப்போதோ இந்தச் சிதைவு இளம் வயதிலேயே தொடங்கிவிடுகிறது. காரணம், இவர்கள் உட்கார்ந்துகொண்டே வேலை செய்வது இப்போது அதிமாகிவிட்டது. கணினி முன்னால் அமர்ந்துகொண்டு அதிக நேரம் வேலை செய்வதை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

இதுபோல் தொடர்ந்து பல மணிநேரங்களுக்குத் தொலைக்காட்சி பார்ப்பது, படுத்துக்கொண்டே படிப்பது, படுத்துக்கொண்டே தொலைக்காட்சி பார்ப்பது, கழுத்தைக் கோணலாக வைத்துக்கொண்டு உறங்குவது. பல தலையணைகளைத் தலைக்கு அடுக்கிவைத்து உறங்குவது, வேலைக்குச் செல்ல பல மணிநேரம் பயணிப்பது, பயணங்களில் உட்கார்ந்துகொண்டே உறங்குவது போன்றவையும் கழுத்துவலிக்குப் பாதை போடும்.

இப்போதெல்லாம் பலரும் இரு சக்கர வாகனங்களை ஓட்டிச் செல்லும்போதும் செல்போனில் பேசுகிறார்கள். அப்போது கழுத்தை ஒரு பக்கமாக சாய்த்துக்கொண்டு பேசுகிறார்கள். இந்தத் தவறான பழக்கம் நாளடைவில் கழுத்துவலியை ஏற்படுத்துகிறது.

குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் அடிக்கடி பயணிப்பதும் கழுத்து வலியைச் சீக்கிரத்தில் கொண்டுவந்துவிடும். உடலுழைப்பும் உடற்பயிற்சியும் இல்லாதவர்களுக்குக் கழுத்துத் தசைகள் சீக்கிரத்தில் இறுகிவிடும். முன்பெல்லாம் இது 50 வயதில் நிகழும். ஆனால், உடலுழைப்பு இல்லாத இன்றைய இளைய சமுதாயத்துக்கு 20 வயதில் இந்த இறுக்கம் ஏற்பட்டுவிடுவதால் தற்போது இந்த நோய் இளைஞர்களுக்கு வருகிற நோயாக மாறிவிட்டது.

தொண்டையில் உள்ள சுரப்பிகளில் ஏதாவது ஒரு தொற்று ஏற்பட்டு அங்கு நெறிகட்டிக்கொண்டால் அந்த வலி கழுத்தில் உணரப்படும். காய்ச்சலும் இருந்து கழுத்தை அசைக்க முடியமால் கழுத்தை ஒரு பக்கமாக சாய்த்ததுபோல் இருந்தால், இந்தக் காரணம் இருக்க அதிக வாய்ப்பு உண்டு. இவை தவிர கழுத்தில் அடிபடுவது, விளையாடும்போது கழுத்தெலும்பு சவ்வு விலகிவிடுவது போன்ற காரணங்களாலும் கழுத்து வலி வரும்.

அறிகுறிகள்:

‘செர்விக்கல் ஸ்பாண்டிலைட்டிஸ்’ நோயின் ஆரம்பத்தில் கழுத்தில் மட்டும் வலி ஏற்படும். பிறகு தோள்பட்டைக்கு வலி பரவும். கைகளில் குடைவதுபோல் வலிக்கும். விரல்கள் வரை வலி பரவக்கூடும். சிலருக்கு கை மற்றும் விரல்கள் மரத்துப்போவதும் உண்டு. நாளாக ஆக கழுத்தைத் திருப்பும்போது கழுத்து வலியுடன் தலைச்சுற்றலும் ஏற்படும்.

என்ன பரிசோதனை?

கழுத்தை எக்ஸ்ரே, சிடி ஸ்கேன் மற்றும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுத்துப் பார்த்து நோயைப் புரிந்துகொள்ளலாம்.

என்ன சிகிச்சை?

ஆரம்பநிலையில் உள்ள கழுத்து வலியை சாதாரண வலி மாத்திரைகளால் குணப்படுத்திவிடலாம். நோய் நீடிக்கிறது என்றால் மருத்துவரின் ஆலோசனைப்படி கழுத்தில் பட்டை அணிந்துகொள்வது, கழுத்துக்கு ‘ட்ராக்சன்’ போட்டுக்கொள்வது, பிசியோதெரபி நல்ல பலன் தரும்.

தடுப்பது எப்படி?

  1. எப்போதும் நேராக நிமிர்ந்து உட்காரவும் நிற்கவும் நடக்கவும் பழகிக்கொள்ளுங்கள்.
  2. பேருந்துகளில் பயணம் செய்யும்போது முடிந்த வரை பின் இருக்கையில் உட்கார்ந்து பயணம் செய்வதைத் தவிருங்கள்.
  3. பயணங்களில் உட்கார்ந்துகொண்டே உறங்குவதைத் தவிருங்கள். முடியாதபோது அல்லது அவசியம் ஏற்படும்போது தலையைப் பின்பக்கமாக சாய்த்துக்கொண்டு உறங்குங்கள்.
  4. ஒன்றரை மணிநேரத்துக்கு மேல் தொடர்ந்து தொலைக்காட்சி பார்க்க வேண்டாம்.
  5. கணினியில் வேலை செய்கிறவர்கள் அதன் திரை கண்பார்வைக்கு நேர்மட்டத்தில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். தலையைத் தூக்கியவாறு திரையைப் பார்க்கவேண்டாம்.
  6. கழுத்து அதிக நேரம் ஒரே நிலையில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். உதாரணமாக, படிக்கும்போதும், கணினியைப் பார்க்கும்போதும் தொலைக்காட்சியைப் பார்க்கும்போதும் 20 நிமிடங்களுக்கு ஒருமுறை கழுத்தை வேறு பக்கம் திருப்பி ஓய்வு தர வேண்டும்.
  7. தலையைக் குனிந்துகொண்டே அதிக நேரம் வேலை செய்யக் கூடாது. உதாரணம் - தையல் வேலை செய்கிறவர்கள்.
  8. மென்மையான தலையணையைப் பயன்படுத்துங்கள். உங்களுக்கு எப்படிப் படுத்துக்கொண்டால் கழுத்தும் தலையும் வசதியாக இருகிறதோ, அப்படிப் படுத்து உறங்குங்கள்.
  9. அளவுக்கு அதிகமான சுமையைத் தலையில் தூக்காதீர்கள்.
  10. படுக்கும்போது சிறிய தலையணையைப் பயன்படுத்துங்கள்.
  11. புரதம், கால்சியம், வைட்டமின்கள், தாதுக்கள் மிகுந்த பால் முட்டை, இறைச்சி, மீன், காய்கறி, பழங்களை உட்கொள்ளுங்கள்.
  12. உடல் பருமன் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
  13. நடப்பது, நீந்துவது, சைக்கிள் ஓட்டுவது போன்ற உடற்பயிற்சிகளில் ஒன்றை தினமும் பின்பற்றுங்கள்.
  14. கழுத்துத் தசைகளுக்கு வலுவூட்டும் தசைப்பயிற்சிகளை அல்லது யோகாசனப் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்வதும் நல்லது.
  15. மோசமான சாலைகளிலோ வேகத்தடைகளிலோ இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும்போது வேகத்தைக் குறைத்துக்கொள்ளுங்கள்.

கழுத்தில் சுளுக்கு ஏற்பட்டால்?

திடீரென்று கழுத்தைத் திருப்புதல், அதிர்வு தரும் அசைவுகள், அதிக சுமையைத் தூக்குதல், வேகமாகத் தலையை அசைத்தல் மற்றும் தலையைத் திருப்புதல் போன்ற பல காரணங்களால் கழுத்து சுளுக்கிக்கொள்ளும். அப்போது சுளுக்கு எடுப்பது பலருக்கும் பழக்கம். இது தவறு. இப்படிச் சுளுக்கு எடுப்பதில் ஆபத்தும் உள்ளது. காரணம், கழுத்தெலும்பில் உள்ள சவ்வு விலகியிருந்து அதன் காரணமாக கழுத்தில் சுளுக்கு ஏற்பட்டிருந்தால், சுளுக்கு எடுப்பதன் மூலம் நோய் கடுமையாகிவிடும். பதிலாக, கழுத்துக்கு முழுமையாக ஓய்வு தந்தாலே சுளுக்கு குணமாகிவிடும். அத்துடன் வலிநிவாரணி களிம்புகளைத் தடவி லேசாக மசாஜ் செய்யலாம். வலி நிவாரணி மாத்திரை மற்றும் ஊசிகளைப் பயன்படுத்தலாம். பிசியோதெரபி செய்யலாம்.

(தொடர்ந்து பேசுவோம்)

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
கு.கணேசன்

கு.கணேசன், பொது நல மருத்துவர்; மருத்துவத் துறையில் உலகளாவிய அளவில் நடக்கும் மாற்றங்களை ஆழ்ந்து அவதானித்து, எளிய மொழியில் மக்களுக்கு எழுதும் பணியில் ஈடுபட்டிருப்பவர்; ‘சர்க்கரைநோயுடன் வாழ்வது இனிது!’, ‘நலம், நலம் அறிய ஆவல்’, ‘செகண்ட் ஒப்பினீயன்’ உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: gganesan95@gmail.com


4






பொருளாதாரம்தமிழக நிதிநிலை அறிக்கைஇலக்கியவாதிபெரிய சவால்கள்நீண்ட கால செயல்திட்டம்பாரபட்சம்ஜனநாயகத்தின் தற்காப்புக் கேடயம் ‘என்டிடிவி’மக்கள்தொகைக் கணக்கெடுப்புவத்திராயிருப்புபத்ரிவிட்டுக்கொடுத்து வெற்றியைப் பெறுவோம்தைவான்மதமும் மொழியும் ஒன்றா?பிரிட்டிஷ் நாடாளுமன்றம்கோர்பசெவ்எல்.இளையபெருமாளும் மதுவிலக்கும்உருவாக்கப்பட்ட எதிர்பார்ப்புகள்ஹரியானாசோஷலிஸ்ட்சுதந்திர இந்தியாதூக்க மாத்திரைசமஸ் சனாதனம் பேட்டிசும்மா இருப்பதே பெரிய வேலைஅரசின் கொள்கைபசுமைப் புரட்சிசமஸ் கலைஞர்உதிர்கிறதா இறையாண்மை?ஒருங்கிணைந்த நவீனப் பொதுப் போக்குவரத்து முறைபயமின்றி தேர்வை அணுகுவது எப்படி?மேண்டேட்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!