கட்டுரை, தொடர், ஆரோக்கியம், வரும் முன் காக்க 7 நிமிட வாசிப்பு

காது வலிக்கு என்ன காரணம்?

கு.கணேசன்
17 Jul 2022, 5:00 am
0

'செல்வத்துள் செல்வம் செவிசெல்வம் அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை' என்று திருவள்ளுவரே வியந்து பாராட்டிய காது, ஐம்புலன்களில் முக்கியமானது. ஒலியைக் கேட்பதற்கு மட்டுமல்ல… நாம் நேராக நிற்கவும், தள்ளாடாமல் நடக்கவும்கூட காதின் பங்களிப்பு மிகவும் அவசியம். கேட்கும் திறனுக்கும் பேச்சுத் திறனுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. குழந்தைக்கு காது கேட்கத் தொடங்கினால்தான், அது பேசத் தொடங்கும். இல்லையென்றால் அதற்குப் பேச்சும் வராது.

நடைமுறையில் கண்ணுக்கும் பல்லுக்கும் பிரச்சினை ஏற்பட்டால், உடனடியாக நாம் மருத்துவரைப் பார்க்கிறோம். காதுக்கு ஒரு பிரச்சினை என்றால், அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் அலட்சியமாக விட்டுவிடுகிறோம். இருட்டோ, வெளிச்சமோ எதன் பொருட்டும் கவலைப்படாமல் காது தன் வேலையைச் செய்துகொண்டிருப்பதால்தான் அதன் முக்கியத்துவத்தை உணராமல் இருக்கிறோம். கொஞ்ச நேரத்துக்குக் காதை அடைத்துக்கொண்டிருங்கள். அப்போதுதான் அதன் மகத்துவம் புரியும். 

காது கேட்பது எப்படி?

காதில் வெளிக்காது, நடுக்காது, உள்காது என்று மூன்று பகுதிகள் உள்ளன. வெளிக்காது ஒலி அலைகளை உள்வாங்கி காதுக்குள் கொண்டுசெல்கிறது. நடுக்காதில் உள்ள செவிப்பறை அந்த ஒலி அலைகளை ஏற்றுக்கொள்ளும்போது அதிர்கிறது. இந்த அதிர்வுகள் செவிப்பறையை ஒட்டியுள்ள சுத்தி, பட்டடை, அங்கவடி எனும் மூன்று எலும்புகள் மூலம் உள்காதுக்குள் நுழைந்து, அங்கு நத்தை வடிவில் உள்ள 'காக்ளியா'வை (Cochlea) வந்தடைகின்றன. 

அங்கு பெரிலிம்ப் (Perilymph), எண்டோலிம்ப் (Endolymph) என்று இரு வகைத் திரவங்கள் உள்ளன. இதில் எண்டோலிம்ப் திரவத்தின் மீது நடுக்காதின் அங்கவடி எலும்பு பிஸ்டன் போல் இயங்குவதால், இங்கேயும் அதிர்வுகள் உண்டாகின்றன. அப்போது இந்தத் திரவங்களில் மிதந்துகொண்டிருக்கும் இழை அணுக்கள் (Hair cells) தூண்டப்படுகின்றன. உடனே, அங்கு மின்னலைகள் உருவாகி, செவி நரம்பு வழியாக மூளைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. பிறகுதான், நாம் கேட்பது பேச்சா, பாட்டா, சத்தமா, இசையா என்று வகை பிரித்துச் சொல்கிறது, மூளை.

உடலை சமன் செய்யும் காது!

உள்காதில், கேட்கும் திறனைத் தருகின்ற காக்ளியாவோடு உடலைச் சமநிலைப்படுத்துகின்ற லேப்ரிந்த் (Labyrinth) என்னும் பாகமும் உள்ளது. லேப்ரிந்தின் ஒரு பக்கத்தில் காக்ளியாவும், இன்னொரு பக்கத்தில் அரைவட்டக் குழல்களும் (Semicircular canals) இருக்கின்றன. இவற்றுக்குக் கீழே யுட்ரிக்கிள் (Utricle), சாக்யுல் (Saccule) என்று இரண்டு அறைகள் உள்ளன.  லேப்ரிந்த் என்பது எலும்பு லேப்ரிந்த், படல லேபரிந்த் என்று இரண்டுவிதமாக இருக்கிறது. மேலும் கீழும் உள்ள எலும்பு லேப்ரிந்தில் பெரிலிம்ப் திரவமும், நடுவில் உள்ள படல லேப்ரிந்தில் எண்டோலிம்ப் திரவமும் உள்ளன, யுட்ரிக்கிள், சாக்யுல் மற்றும் அரைவட்டக்குழல்களில் பெரிலிம்ப் திரவம் உள்ளது. 

இவற்றிலும் இழை அணுக்கள் இருக்கின்றன. நாம் நடக்கும்போது, எழுந்திருக்கும்போது, ஓடும்போது, தலையைத் திருப்பும்போது படல லேப்ரிந்தில் உள்ள எண்டோலிம்ப் திரவம் அசைகிறது. இந்த அசைவின் வேகம், விகிதம், திசை, பரப்பு இவற்றைக் கொண்டு அரைவட்டக்குழல்களில் வெவ்வேறு குறியீடுகள் உண்டாகும். இவற்றை இழை அணுக்கள் கிரகித்து செவிநரம்பின் வழியாக மூளைக்கு எடுத்துச் செல்லும். இந்தத் தகவல்களைக் கொண்டு நாம் நிற்கிறோமா, நடக்கிறோமா, தலையைத் திருப்புகிறோமா என்று நம் மூளை தெரிந்துகொள்ளும். அதற்கேற்ப மூளை செயல்பட்டு உடல் தசைகளுக்கு ஆணை பிறப்பித்து உடலை சமநிலைப்படுத்தும்.

காது வலிக்குக் காரணம்!

காது நோய்களில் முக்கியமானது, காது வலி. காதில் கொப்பளம் தோன்றுவது, காதில் சீழ் வடிவது, அழுக்கு அல்லது அந்நியப் பொருள்கள் அடைத்துக்கொள்வது, எறும்பு போன்ற பூச்சி புகுவது, காதில் அடிபடுவது போன்றவற்றால் காது வலி வரும். மூக்கில் சளி பிடிப்பது, மூக்கு ஒழுகுவது, தடுமம் போன்ற மூக்குப் பிரச்னைகளால்கூட காதுவலி வருகிறது. தொண்டையில் சளி பிடித்து புண் உண்டாவது, டான்சில் வீங்குவது போன்றவையும் காதுவலியை வரவேற்கும். காது வலிக்கான காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை பெற்றால் குணமாகும்.

காதில் சீழ் வடிந்தால்?

காதில் சீழ் வடிவதற்கு முக்கியக் காரணம், ஜலதோஷம்தான். இதன் துவக்கத்தில், மூக்கில் தண்ணீர் மாதிரி சளி கொட்டும். தும்மல் வரும். இதைக் கவனிக்கத் தவறினால், மூக்கிலிருந்து மஞ்சள் நிறத்தில் சளி கட்டியாக வரும். இப்போதாவது இதற்குச் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், இந்தச் சளியில் உள்ள கிருமிகள், தொண்டையையும் நடுக்காதையும் இணைக்கின்ற 'ஈஸ்டாக்கியன் குழல்' (Eustachian tube)  வழியாக நடுக்காதுக்குச் சென்று, சீழ் வைக்கும். பிறகு அங்குள்ள செவிப்பறையைத் துளைத்துக்கொண்டு வெளிக்காது வழியாக சீழ் வெளியேறும். காதில் சீழ் வடிந்தால், கண்டிப்பாக அது கேட்கும் திறனைப் பாதிக்கும். ஆகவே, இதற்கு ஆரம்பநிலையிலேயே மருத்துவச் சிகிச்சை பெற்றுவிட வேண்டும். காலம் கடத்தினால், ‘டிம்பனாஸ்டமி’ (Tympanostomy) எனும் அறுவைச் சிகிச்சை தேவைப்படும்.

காதில் குரும்பி சேர்ந்தால்?

காதுகள் சரியாகக் கேட்க வேண்டுமானால், செவிப்பறை சீராக இருக்க வேண்டும். இதற்கு இயற்கை நமக்குத் தந்துள்ள பாதுகாப்பு வளையம்தான், காதுக் குரும்பி(Ear wax). காதுக்குள் 'செருமோனியஸ்' சுரப்பிகள் (Ceremonious glands) உள்ளன. இவைதான் காதுக்குள் ஒருவித திரவத்தைச் சுரந்து, குரும்பியாக மாறி, செவிப்பறையைப் பாதுகாக்கின்றன. காதுக்குள் நுழையும் பூச்சிகள், அழுக்குகள், அந்நியப் பொருள்கள் போன்றவை செவிப்பறையைப் பாதித்துவிடாதபடி தடுப்பது, இந்தக் குரும்பிதான். இதை அகற்ற வேண்டிய அவசியமில்லை. தானாகவே மெள்ள மெள்ள ஊர்ந்து வெளியில் வந்துவிடும்.

குரும்பியை அகற்றுவது எப்படி?

குரும்பியை அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படுமானால், மூன்று வழிகளில் அதை அகற்றலாம். நம் கண்ணுக்கு எளிதில் தெரியும்படி உருண்டையாகத் திரண்டிருக்கும் குரும்பியை ஊக்கு கொண்டு அகற்றிவிடலாம். சிலருக்குக் காதின் உள்புறமாக குரும்பி ஒட்டிக்கொண்டிருக்கும். இவர்களின் காதில் இதற்கென உள்ள காது சொட்டு மருந்து அல்லது தேங்காய் எண்ணெய் சில சொட்டுகள் சில நாட்களுக்கு விட்டால், குரும்பி அதில் ஊறி, தானாகவே வெளியில் வந்துவிடும். என்றாலும், நாள்பட்ட குரும்பி இந்த வழியில் வராது. சிரிஞ்சு மூலம் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து அகற்ற வேண்டும். இதற்கு மருத்துவர்தான் உதவ வேண்டும்.

காது குடைவது நல்லதா?

காதுக்குள் ஏதாவது பிரச்சினை என்றால், உடனே நாம் கையில் எடுக்கும் பொருள் 'பட்ஸ்'தான். காதுக்குள் குரும்பி சேர்ந்தால் பட்ஸ் கொண்டு அதை எடுக்க முயல்கிறோம். இந்த முயற்சி, குரும்பியை இன்னும் கொஞ்சம் உள்ளே தள்ளிவிடுமே தவிர, வெளியில் கொண்டுவராது. மாறாக, செவிப்பறையைத் தாக்கிப் புண்ணாக்கிவிடும். ஆகவே, கையில் தொடக்கூடாத ஒரு பொருள் உண்டென்றால் அது 'பட்ஸ்'தான் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

இன்னும் பலருக்குக் காது குடைவது ஒரு பழக்கமாகவே உள்ளது.  ஊக்கு, ஹேர்பின், பேனா, பென்சில், பலப்பம், தீக்குச்சி, சாவி என்று கையில் கிடைப்பதை எல்லாம் காதுக்குள் நுழைத்துக் குடைந்துகொண்டிருப்பார்கள். இந்தப் பழக்கம் நீடித்தால், செவிப்பறை பழுதடைந்து, பின்னொரு நாளில் காது கேட்காமல் போகும்.

காதுக்குள் அந்நியப் பொருள் நுழைந்துவிட்டால்?

காதுக்குள் புகுந்த பொருள் கண்ணுக்குத் தெரிந்தால், தலையைச் சாய்த்துப் பொருளைக் கீழே விழ வைக்கலாம் அல்லது மருத்துவரிடம் காண்பித்து அதற்கென உரிய கருவியால் வெளியில் எடுப்பதே நல்லது. காதில் எறும்பு போன்ற பூச்சி புகுந்திருந்தால், தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை சில சொட்டுகள் விட்டால், பூச்சி அதில் இறந்துவிடும். பிறகு, சில சொட்டுகள் தண்ணீர் விட்டு,  தலையைச் சாய்த்தால் பூச்சி வெளியில் வந்துவிடும். எந்தக் காரணத்தைக் கொண்டும் காய்ச்சிய எண்ணெயைக் காதுக்குள் ஊற்றாதீர்கள். அப்படிச் செய்தால், அது காதைப் பாதிக்கும்.

காது சொட்டு மருந்து - கவனம்!

காது வலி, காது அடைப்பு, காது இரைச்சல் என்று காதுப் பிரச்சினை  எதுவானாலும் உடனே காதில் ஒரு சொட்டு மருந்தை ஊற்றிக்கொள்வது சிலருக்குப் பழக்கம். இதனால் அவர்களுக்கு ஆபத்துதான் வருமே ஒழிய காதுக்குப் பாதுகாப்பு ஏற்படுவதில்லை. நம் காது எப்போதுமே உலர்ந்த தன்மையுடன் இருக்க வேண்டிய உறுப்பு. அதில் அவசியமேயின்றி எண்ணெய், சொட்டு மருந்து என்று எதையாவது ஒன்றை ஊற்றி ஈரமாக வைத்திருந்தால், காற்றில் கலந்து வரும் பூஞ்சைக் கிருமிகள் (Fungal infection) அதில் உட்கார்ந்துகொள்ளும். அரிப்பை உண்டுபண்ணும். காது அடைத்த மாதிரி தோன்றும். காதுவலி, காதில் சீழ் வடிவது என்று பிரச்சினைகள் தொடரும். இறுதியில், காது கேட்பது குறையும். ஆகவே, தேவைப்பட்டால் மட்டுமே மருத்துவரின் ஆலோசனைப்படி காதில் சொட்டு மருந்து ஊற்றுங்கள். நீங்களாக எந்த மருந்தையும் காதுக்குள் ஊற்றாதீர்கள். 

(தொடர்ந்து பேசுவோம்)

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
கு.கணேசன்

கு.கணேசன், பொது நல மருத்துவர்; மருத்துவத் துறையில் உலகளாவிய அளவில் நடக்கும் மாற்றங்களை ஆழ்ந்து அவதானித்து, எளிய மொழியில் மக்களுக்கு எழுதும் பணியில் ஈடுபட்டிருப்பவர்; ‘சர்க்கரைநோயுடன் வாழ்வது இனிது!’, ‘நலம், நலம் அறிய ஆவல்’, ‘செகண்ட் ஒப்பினீயன்’ உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: gganesan95@gmail.com


1






ஒருங்கிணைந்த நவீனப் பொதுப் போக்குவரத்து முறைவெறுப்புதேர்தல் ஆணையத்தில் தன்னாட்சி அவசியம்ஹாங்காங் மாடல்பேராசிரியர். பிரேம் கட்டுரைவல்லபபாய் படேல்அறிஞர்கள் குழு அல்லகூட்டுத்தொகைபரக் அகர்வால் நியமனம்கோர்பசெவ்: வரலாற்றில் ஓர் அவல நாயகர்புராதனக் கம்யூனிசம்சுற்றுலாமுற்போக்கு வரி துயரம்ராகுல் காந்தியின் இந்திய ஒருங்கிணைப்பு நடைப்பயணம்!பாலிசிஸ்டிக் ஒவேரியன் சின்ட்ரோம்நிகழ்நேரப் பதிவுகள்வள்ளலார் திருவிளக்குநூல் சேகரிப்பாளர்லாலு பிரசாத் யாதவ்தங்கம் சுப்ரமணியம்ஐன்ஸ்டைன்கருத்துரிமை: மகாவித்வான் காட்டிய எதிர்வினைதேசிய சராசரி வருமானம்தொல்காப்பியம் பன்மைத்துவம்நீலம் பண்பாட்டு மையம்ஸ்ரேயஸ் சர்தேசாய் கட்டுரைரஅ பாதித்தால் பக்கவாதம் வரலாம்: சமாளிப்பது எப்படி?இந்திய குடிமைப் பணி மாற்றங்கள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!