கட்டுரை, தொடர், ஆரோக்கியம், வரும் முன் காக்க 5 நிமிட வாசிப்பு
இரைப்பைப் புற்று கவனம்!
இந்த வாரக் கட்டுரைக்குள் செல்வதற்கு முன்பாக ‘அருஞ்சொல்’ வாசகர் எஸ்.மதுகுமாரின் கடிதத்தை வாசியுங்கள்.
ஐயா! வணக்கம். நான் மதுகுமார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் வசித்து வருகிறேன். நான் தங்களுடைய கட்டுரைகளை ‘அருஞ்சொல்’ தளத்திலும், ‘இந்து தமிழ் திசை’ செய்தித்தாளிலும் தவறாமல் படிப்பேன். இன்று ‘அருஞ்சொல்’ தளத்தில் ‘குடல் புற்றுநோய்’ பற்றிய கட்டுரையைப் படித்தேன். எனக்கு இதில் ஒரு சந்தேகம் என்னவென்றால், குடல் புற்றுநோயும், வயிற்றுப் புற்றுநோயும் ஒன்றா? ஏனென்றால், கடந்த வருடம் என்னுடைய தாயார் வயிற்றுப் புற்றுநோயால் காலமானார். அவருக்கு வயது 65. நாங்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்தோம். ஆனாலும் பலன் இல்லாமல் சிகிச்சை செய்த இரண்டு மாதங்களில் காலமாகிவிட்டார். இன்று உங்களுடைய கட்டுரையில் குடல் புற்றுநோய் பற்றி விரிவாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். இதுவும், வயிற்றுப் புற்றுநோயும் ஒன்றா அல்லது வெவ்வேறா எனத் தயவு கூர்ந்து எனக்கு விளக்கவும்.
நன்றி!
இப்படிக்கு,
S.மதுகுமார்.
வாசகர் மதுகுமார்போல் இரைப்பைப் புற்றுநோயும் குடல் புற்றுநோயும் ஒன்றா, வெவ்வேறா எனும் குழப்பத்தில் அநேக வாசகர்கள் இருக்கலாம். அவர்களுக்காக இந்த வாரக் கட்டுரை.
முதலிலேயே சொல்லிவிடுகிறேன். குடல் புற்றுநோய் வேறு. இரைப்பைப் புற்றுநோய் வேறு. இரண்டும் தனித்தனி இனம். உலக அளவில் நுரையீரல் புற்றுநோய்க்கு அடுத்தபடியாக மக்களைப் பெரிதும் பாதிப்பது இரைப்பைப் புற்றுநோய்தான். போனதலைமுறை வரை வயதானவர்களுக்கே இரைப்பைப் புற்றுநோய் வந்தது. இப்போது 30 வயதிலும் இது வருகிறது. பெண்களைவிட ஆண்களுக்கு இரைப்பைப் புற்றுநோய் வருவதுதான் அதிகம்.
காரணங்கள் எவை?
இரைப்பைப் புற்றுநோய்க்கு (Gastric cancer) முக்கியக் காரணம் துரித உணவுகள்தான். தவிர, மாசடைந்த சுற்றுச்சூழல் இந்த நோய் உருவாவதைத் தூண்டுகிறது. அதனால்தான் ஆஸ்பெஸ்டாஸ் தொழில் புரிபவர்கள், உலோகத் தொழில் புரிபவர்கள், சுரங்க வேலை செய்பவர்கள், ரப்பர் தோட்டத் தொழிலாளர்கள் ஆகியோருக்கு இந்த நோய் அதிக அளவில் வருகிறது.
அடுத்து, நீண்ட நாள்களுக்கு இரைப்பையில் புண் உள்ளவர்களுக்கு (Atrophic gastritis), கடுமையாக ரத்தசோகை (Pernicious anemia) உள்ளவர்களுக்கு, வைட்டமின் பி12 சத்துக்குறைவு உள்ளவர்களுக்கு இந்த நோய் வர வாய்ப்புகள் அதிகம். இந்தப் புற்றுநோய் வந்த குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு பரம்பரைத் தன்மை காரணமாக இது இளைய வயதிலேயே வர வாய்ப்பிருக்கிறது.
இரைப்பைப் புற்றுநோய்க்கு தவறான உணவுப் பழக்கமும் ஒரு முக்கியக் காரணம்தான். ஜப்பான் நாட்டில் கருகிய உணவை (Smoked food) அதிகமாக விரும்பிச் சாப்பிடும் பழக்கம் உள்ளது. நிறைய மது அருந்துவது, சோயா சாஸ் மற்றும் ஊறுகாய் வகைகளை உண்ணும் பழக்கம் அங்கு அதிகம். இதனால் ஜப்பானில் இரைப்பைப் புற்றுநோய் பெருமளவில் வருகிறது. அயர்லாந்தில் சுட்டமீன், கோர்ட்ரியாவில் வாட்டிய ஆமை, வட சீனாவில் 'கோலினாத்' என்னும் தானியம் போன்றவற்றை அதிக அளவில் உண்பதால் இந்த நோய் அந்த நாடுகளில் அதிகமாக வருகிறது.
இந்தியாவில் புகைபிடித்தல், வெற்றிலை பாக்கு, புகையிலை, பானமசாலா, நிறைய மது அருந்துதல் போன்ற பழக்க வழக்கங்களாலும் வயலில் தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளாலும் இந்த நோய் வருவதாகத் தெரிகிறது.
அதிக சூடான, காரமான, மசாலா மிகுந்த அல்லது அதிகக் குளிர்ச்சியான உணவுகளையோ, குளிர்பானங்களையோ அடிக்கடி உண்ணும்போது இந்த நோய் சீக்கிரத்தில் வந்துவிடுகிறது. எச்.பைலோரி (H.Pylori) கிருமி இரைப்பையில் நீண்ட காலத்துக்கு தொல்லை தருமானால் இந்த நோய் உண்டாகிற வாய்ப்பு அதிகரிக்கும்.
உணவில் உப்பை அதிகமாகச் சேர்த்துக்கொள்பவர்களுக்கும் செவ்விறைச்சிகளை (Red meat) அதிகமாக உண்ணும் பழக்கம் உள்ளவர்களுக்கும் இந்த நோய் வருகிறது. நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்களைக் குறைவாகவும், கொழுப்பு மிகுந்த பீட்ஸா, பர்கர், சாண்ட்விச் போன்ற துரிதஉணவுகளை அதிகமாகவும் உண்ணும்போது இந்த நோய் வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது. இரைப்பையில் 'பாலிப்' (Polyp) கட்டிகள் இருப்பவர்களுக்கு அவை புற்றுக்கட்டிகளாக மாறுவதற்கு வாய்ப்புண்டு.
அறிகுறிகள் என்னென்ன?
பெரும்பாலோருக்கு இந்த நோய் தோன்றும்போது எந்தவித அறிகுறிகளும் வெளியில் தெரிவதில்லை. அப்படியே தெரிந்தாலும் இரைப்பைப் புண்ணுக்குரிய அறிகுறிகள்தான் முதலில் தெரியும். பசி குறைவது, ஏப்பம் வருவது, உணவில் விருப்பம் குறைவது, லேசான வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், உணவை விழுங்குவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் வெளிப்படும். இவையெல்லாமே சாதாரண அறிகுறிகள் என்பதால், பலரும் 'அல்சர்' மருந்துகளைச் சாப்பிட்டுக் கொண்டு உண்மையான நோயைக் கவனிக்காமல் இருந்துவிடுவார்கள். அதற்குள் இரைப்பைப் புற்றுநோய் வளர்ந்து பரவிவிடும்.
பிறகுதான் இரைப்பைப் புற்றுக்கே உரிய அறிகுறிகள் தெளிவாகத் தோன்றும். அதாவது, இவர்கள் கொஞ்சமாகச் சாப்பிட்டாலும் வயிறு நிரம்பியதுபோல் இருக்கும். வயிற்றுவலி அடிக்கடி வரும். உணவு சாப்பிட்டதும் வயிற்றுவலி அதிகமாகும். குமட்டல், வாந்தி வரும். அது மோசமான வாடை எடுக்கும். வாந்தி வந்தபிறகு வலி குறையும். சமயங்களில் இரைப்பையில் பந்து உருளுவது போன்று இருக்கும். ரத்தவாந்தி வரும். மலத்தில் ரத்தம் போகலாம். கருமலம் வெளியேறலாம். உணவு உண்பது குறையும். உடல் எடை குறையும். உடலில் ரத்தம் அளவு குறையும். வயிறு வீங்கி நீர்கோர்த்த மாதிரி தெரியும்.
என்ன பரிசோதனைகள் உள்ளன?
பயனாளிக்கு 'பேரியம்' மாவு சாப்பிடக் கொடுத்து, அவருக்குச் செரிமான மண்டலத்தை எக்ஸ்-ரே படம் எடுத்துப் பார்த்தால் இந்த நோயைத் தெரிந்துகொள்ளலாம். இது பழைய முறை. இப்போது எண்டோஸ்கோப்பி மூலம் இரைப்பையைப் பரிசோதித்து, புற்றுநோயைத் துவக்கத்திலேயே அறிகிறார்கள். தற்போது என்பிஐ எண்டோஸ்கோப்பி (NBI microscopy), குரோமோ எண்டோஸ்கோப்பி (Chromo microscopy) மற்றும் எண்டோ மைக்ராஸ்கோப்பி (Endo microscopy) மூலம் இரைப்பையில் புற்றுநோய் உள்ளதா, அது என்ன வகையைச் சேர்ந்தது, எவ்வளவு பரவியுள்ளது, அடைப்பு உள்ளதா எனப் பல விவரங்களை நேரடியாகப் பார்த்துத் துல்லியமாகத் தெரிந்துகொள்ளலாம். மேலும், புற்றுநோய் திசுவில் சிறு பகுதியை அகற்றி, திசுப் பரிசோதனைக்கு அனுப்பி, நோயை உறுதி செய்யலாம். திரவத் திசுப் பரிசோதனை (Liquid biopsy) மூலம் இந்த நோயை முன்னரே அறிவதும் உண்டு.
நோயாளியின் வயிற்றை 'அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன்', சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் போன்ற பரிசோதனைகளைச் செய்து பார்த்தால் இரைப்பைக்கு வெளியில் உள்ள உறுப்புகளான கல்லீரல், கணையம், கருப்பை, சிறுநீர்ப்பை, சிறுகுடல், பெருங்குடல், மலக்குடல், எலும்புகள், தண்டுவடம், மூளை போன்றவற்றுக்குப் புற்றுநோய் பரவியிருந்தால் தெரிந்துவிடும். இவற்றோடு மார்பு எக்ஸ்-ரே எடுப்பதும் ரத்தம் மற்றும் மலப் பரிசோதனைகளும் தேவைப்படும்.
இப்போது ‘பெட்-சிடி’ ஸ்கேன் வந்துள்ளது. இது புற்றுநோய் பரவலை மட்டுமல்லாமல், புற்றுநோய் மிக மிக ஆரம்பநிலையில் இருந்தாலும் இனிமேல் புற்றுநோய் வரக்கூடிய நிலையில் இருந்தாலும் துல்லியமாகத் தெரிவித்துவிடும். அதேநேரத்தில் எல்லோருக்கும் எல்லா ஸ்கேன் பரிசோதனைகளும் தேவையில்லை. நோயாளியைப் பொறுத்து இவற்றின் தேவை அமையும்.
சிகிச்சைகள் என்னென்ன?
இரைப்பைப் புற்றுக்கு அது உள்ள நிலைக்கு ஏற்ப அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை, மருந்து சிகிச்சை ஆகியவை பயன்படுகின்றன. இரைப்பையில் புற்றுக்கட்டி அகற்ற முடியாத நிலைமையில் இருக்குமானால், புற்று எதிர் மருந்துகளையும் கதிர்வீச்சு சிகிச்சையையும் முதலில் பயன்படுத்துவார்கள். இதன் பலனால் புற்றுக்கட்டி சுருங்கிவிடும். அதன் பிறகு அதை அகற்றுவது எளிதாகிவிடும். நோயின் நிலையைப் பொறுத்து மறுபடியும் மருந்து சிகிச்சையும் கதிர்வீச்சு சிகிச்சையும் தேவைப்படலாம்.
இப்போது இலக்கு சார்ந்த மருந்து சிகிச்சை (Targeted therapy) தரப்படுவது வழக்கமாகி வருகிறது. இவை ரத்தத்தின் வழியே புற்றுநோய் உள்ள இடத்தைத் துல்லியமாக அடைந்து புற்று மேன்மேலும் வளராமல் தடுக்க உதவுகின்றன. இந்த மருந்துகள் புற்றுநோய் இல்லாத மற்ற செல்களைத் தாக்குவதில்லை என்பது இந்த சிகிச்சையில் கிடைக்கும் பெரிய பலன். ‘இமுனோதெரபி’ என்னும் புதுவித சிகிச்சையும் இப்போது புகுந்துள்ளது. இவை எல்லாமே புற்றுநோயைப் பூரணமாகக் குணப்படுத்துகின்றன.
அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற மேல்நாடுகளில் இரைப்பைப் புற்றுநோய் மோசமாக இருந்தால் அந்த இரைப்பையை முழுவதுமாக அகற்றிவிட்டு 'செயற்கை இரைப்பை'யைப் (Artificial stomach) பொருத்திவிடுகின்றனர். இந்தியாவில் இதற்கு வழியில்லை; பதிலாகப் ‘பாதுகாப்பு சிகிச்சை’யைத் (Palliative care) தருகிறார்கள்.
தடுப்பது எப்படி?
புகைப்பதையும் புகையிலை கலந்த பொருள்களைப் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும். மது அருந்தக் கூடாது. அதிக காரமான சூடான மசாலா கலந்த உப்பு அதிகமுள்ள உணவுகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும். சிறுதானிய உணவுகள், முழுதானிய உணவுகள், நார்ச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகப்படுத்தவும். பாக்கெட் உணவுகளுக்கும் பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கும் ‘நோ’ சொல்லுங்கள். வெள்ளைப்பூண்டு, வெங்காயம், அவரைக்காய், பட்டாணி, சுண்டல், காளான் ஆகியவற்றுக்கு புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் உண்டு. இந்த உணவுகளை அதிகப்படுத்துங்கள். குளத்து மீன் குழம்பு நல்லது. வறுத்த அசைவம் வேண்டாம். சமைக்கும்போது கருகிப்போன உணவுகளை உண்ணாதீர்கள். காரணம், அந்தக் கருகலில்தான் புற்றுநோயை உருவாக்கும் காரணிகள் குடியிருக்கும். தினமும் ஓர் உடற்பயிற்சி செய்யுங்கள்.
எந்த வயதானாலும் சரி, பசி குறைந்து, உடல் எடை குறைகிறது, ரத்தமும் குறைகிறது என்றால் உடனே எண்டோஸ்கோப்பி மற்றும் கொலோனோஸ்கோப்பி பரிசோதனையைச் செய்துகொள்ளுங்கள். இதன் பலனால், இரைப்பை / குடல் புற்றுநோயைத் தடுக்க முடியும்; புற்றுநோய் இல்லாத உலகத்தைக் காணவும் முடியும்.
(தொடர்ந்து பேசுவோம்…)

3






பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.