கட்டுரை, தொடர், ஆரோக்கியம், வரும் முன் காக்க 5 நிமிட வாசிப்பு

முடி உதிரும் பிரச்சினைக்குத் தீர்வு

கு.கணேசன்
21 Aug 2022, 5:00 am
0

வீட்டில் செல்லப் பிராணிகள் வளர்ப்பதற்கும் முடி உதிர்வதற்கும் தொடர்பு இருக்கிறது என்றால், மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவதாகத்தான் நினைப்பீர்கள். ஆனால், அதுவும் சாத்தியமே! எப்படி?

என் மருத்துவ நண்பர்களில் ஒருவர் சருமநல மருத்துவர். அவர் சொன்ன சம்பவத்தை உங்களுக்குப் பகிர்ந்தால் அது புரியும். இல்லத்தரசி புனிதா ரொம்பவும் வசதியானவர். வீட்டில் நாய், பூனை, கிளி என ‘செல்லங்களை’ வளர்ப்பதில் பிரியம் கொண்டவர். அவருக்கு ஒருமுறை தலைமுடி உதிரும் பிரச்சினை மாதக்கணக்கில் நீடித்தது. அலோபதி, ஹோமியோபதி, நேச்சுரோபதி, சித்தா எனச் சகலத்தையும் பார்த்துவிட்டார். அவருடைய தலையில் பூஞ்சை இருப்பதுதான் முடி உதிரக் காரணம் என்று எல்லோரும் கோரஸ் பாடினார்கள். ஆனால், அதிலிருந்து மீளத்தான் வழி சொல்லவில்லை. அவர் சிகிச்சை பெறும்போது மட்டும் முடி உதிர்வது நிற்பதும், சிகிச்சையை நிறுத்தியதும் மறுபடி வேதாளம் முதுகில் ஏறிக்கொள்வதுமாக நாட்கள் கடந்தன.

கடைசியாக, அவர் என் நண்பரைச் சந்தித்திருக்கிறார். அப்போது அவருடைய வளர்ப்புப் பூனைக்கும் சருமத்தில் பிரச்சினை. நண்பரின் மருத்துவமனைக்கு வரும் வழியில் விலங்குநல மருத்துவரும் இருந்ததால், அங்கு பூனைக்குச் சிகிச்சை பெற்றுக்கொண்டு, அவருக்குச் சிகிச்சை எடுக்க வந்திருக்கிறார். அப்போதுதான் இத்தனைக் காலமும் புரிபடாது இருந்த புனிதாவின் புதிர் அவிழ்ந்தது. புனிதாவின் சரும நோயும் அவர் பூனைக்கு இருந்த சரும நோயும் ஒன்றுதான். புனிதா அந்தப் பூனையை மடியில் வைத்துக்கொண்டு முகம் உரசிக் கொஞ்சுவார் என்பதால், பூனையிடமிருந்து புனிதாவுக்கு அந்தச் சரும நோய் ஒட்டிக்கொண்டுவிட்டது. இந்தக் ‘கம்பசூத்திரத்தை’ என் நண்பர்தான் கண்டுபிடித்திருக்கிறார். எனவே, புனிதாவிடம், “இந்தப் பூனையின் பிடியிலிருந்து விலகினால்தான் உங்கள் தலையிலிருக்கும் பூஞ்சை விலகும். அப்புறம் உங்கள் தலைமுடி உதிர்வது நிற்கும்!’ என்று அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார். அது உண்மையானதும், சந்தோஷம் தாளாமல், ஒரு ‘டாபர்மேனை’ என் நண்பருக்கு அன்பளிப்பாகத் தந்திருக்கிறார்.

ஆக, முடி உதிரும் பிரச்சினைக்கு முடிவு கட்ட வேண்டுமானால், தலை சீவும் சீப்பிலிருந்து வளர்ப்புப் பிராணிகள் வரை கவனிக்க வேண்டும். அப்போதுதான் இதற்கு உண்மையான காரணம் தெரியும்; சரியான சிகிச்சை எடுக்க முடியும்.

என்ன செய்யலாம்?

ஒன்றைச் சொல்லிவிடுகிறேன். முடிப் பிரச்சினைக்காக விளம்பர டாக்டர்களை நம்பாதீர்கள். அனுபவம் கூடிய சரும மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள். இந்தப் பிரச்சினைக்கான அடிப்படை கோளாறை முதலில் சரிப்படுத்துங்கள். அதற்குச் சில ரத்தப் பரிசோதனைகளும் சருமத்திசு ஆய்வும் தேவைப்படும். அடுத்து, “முடியின் வேர்க்காலில் உயிர் இருக்கிறதா? மறுபடியும் அதை வளரச் செய்ய முடியுமா?” என்று தெரிந்துகொள்ளவும் சிறப்புச் சோதனைகள் உள்ளன.

தலைமுடி ஆரோக்கியமாக இருக்க, குழந்தை முதலே அக்கறை வேண்டும். முக்கியமாக, முடி பராமரிப்பு, உணவின் மீதான கரிசனம், நலம் காக்கும் வாழ்வியல்… இவைதான் அடர்த்தியான முடிக்கு ஆர்கானிக் உரங்கள். ஆனால், இன்றைக்குத் தும்பைவிட்டு வாலைப் பிடிப்பவர்கள்தான் அதிகம்.

தினமும் குளித்து முடித்து முடி உலர்ந்ததும் கொஞ்சமாகத் தேங்காய் எண்ணெய் தேய்த்துக்கொண்டால் போதும். தலைக்குக் குளிக்க எந்த ஷாம்பும் ஆகாது; சந்தன சோப்பும் சிகைக்காயும் நல்லது. ஹேர் கண்டிஷனர் தேவையே இல்லை. தலை வாருவதற்கு மரச்சீப்புதான் சரி. கடினமான சீப்பினால் அடிக்கடி தலைவாரினால், முடியின் முனை பிளவுபடும். அதிக சூடான வெந்நீரில் குளிப்பது, ஹேர் டிரையர் பயன்படுத்துவது, பிளீச் செய்வது, தலைச்சாயம் பூசுவது, ஹேர் கலரிங்… எல்லாமே முடிக்கு நாம் செய்யும் துரோகம்.

தலைமுடி உதிரத் தொடங்கியதுமே சில ஹார்மோன் மாத்திரைகளைச் சாப்பிட்டு வந்தால், அடுத்த முடி கொட்டாது. ஆனால், இது நிரந்தரத் தீர்வு ஆகாது. ‘மினாக்சிடில்’ (Minoxidil) எனும் தைலத்தைத் தடவ ஓரளவு முடி வளரும். ஆனால், இந்தத் தைலத்தையும் தொடர்ந்து தடவ வேண்டும். அதோடு டென்ஷனைக் குறைப்பது, பரபரப்பைத் தவிர்ப்பது, குடும்பத்தில் சச்சரவு இல்லாமல் பார்த்துக்கொள்வது, கவலைகளைக் கழற்றிப்போடுவது, நேரத்தோடு உறங்குவது போன்ற வாழ்க்கைமுறை மாற்றங்களும் தேவை.

விருந்தென்றால் இனிப்பு கட்டாயம்; முடியென்றால் ஊட்டச்சத்து முக்கியம். மீன், ஈரல், அடர் பச்சைக் காய்கறிகள், கீரைகள், பேரீச்சை, கேரட், முட்டை, பருப்பு, சுண்டல், பால், பால் பொருள்கள், சிறுதானிய உணவுகள், சோயாபீன்ஸ், காளான், திராட்சை, ஆரஞ்சு, முந்திரி, மாதுளை, உலர் அத்தி, பாதாம், பிஸ்தா, வாழைப்பழம், நெல்லி, கறிவேப்பிலை… முடிக்குப் பிடித்த ‘உணவுமேளா’ இது! சாப்பிட்டுப் பாருங்கள். கருமையான கூந்தலை அள்ளி முடியலாம்.

வழுக்கைக்குச் சிகிச்சை!

காற்றில்லாத பலூனால் பறக்கமுடியாது. அதுபோல் வழுக்கைக்கு மருந்து கிடையாது. ‘பிஆர்பி’ (PRP - Platelet Rich Plasma) சிகிச்சை சிலருக்கு உதவுகிறது. இது பயனாளியின் ரத்தத்திலிருந்து தட்டணுக்களைப் பிரித்தெடுத்து, மறுபடியும் அவர்கள் தலைச் சருமத்தில் ஊசிமூலம் செலுத்தப்படும் ரத்த சிகிச்சை. இது சரிப்படாதவர்களுக்கு ‘முடி மாற்று சிகிச்சை’ (Hair transplantation) கைகொடுக்கிறது. இதில் பின்னந்தலையில் உள்ள முடியை வேரோடும் தோலோடும் எடுத்து வழுக்கை உள்ள இடத்தில் நாற்று நடுவதைப்போல் நடுகிறார்கள். வழுக்கையில் முடி வளர இது ஒன்றுதான் தற்போதைய வழி! தன் தடுப்பாற்றல் (Auto immune disease) தரும் ‘அலோபீசியா ஏரியேட்டா’ எனும் நோயின் காரணமாக முடி உதிரும் பிரச்சினை உள்ளவர்களுக்கு ‘பேரிசிடினிப்’ (Baricitinib) மருந்து பலன் தருகிறது. தலையில் கத்திபடக் கூடாது; ஊசி சொருகக் கூடாது என்றால், இருக்கவே இருக்கிறது, ‘விக்’!

(தொடர்ந்து பேசுவோம்...)

இளநரை மறைய…!

தவறான உணவுப் பழக்கம், போதுமான தூக்கமின்மை, அதிக வேளைப் பளு, மன அழுத்தம், மரபியல், முடியை அழகூட்ட பிளீச்சிங், கலரிங், கர்லிங் எனும் பெயர்களில் அதிக அளவில் ரசாயனங்களைப் பயன்படுத்துவது போன்ற காரணங்களால்தான் தற்போது இளைஞர்களிடம் இளநரை அதிக இடம்பிடிக்கிறது. உணவுப் பழக்கம்தான் காரணம் என்றால் அதைக் குணப்படுத்திவிட முடியும். இரும்பு, புரதம், பயாட்டின், ஃபோலிக் அமிலம், தாமிரம், கால்சியம் பென்டோதினேட், பிஏபிஏ (PABA), துத்தநாகம் போன்ற சத்துகள் உள்ள முட்டை, கறி, மீன், காய்கறி, கீரை, பால், பழங்களைச் சாப்பிட்டு வந்தால் அல்லது இந்த சத்துகள் கலந்த மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிட்டால் இளநரை மறையும்.

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
கு.கணேசன்

கு.கணேசன், பொது நல மருத்துவர்; மருத்துவத் துறையில் உலகளாவிய அளவில் நடக்கும் மாற்றங்களை ஆழ்ந்து அவதானித்து, எளிய மொழியில் மக்களுக்கு எழுதும் பணியில் ஈடுபட்டிருப்பவர்; ‘சர்க்கரைநோயுடன் வாழ்வது இனிது!’, ‘நலம், நலம் அறிய ஆவல்’, ‘செகண்ட் ஒப்பினீயன்’ உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: gganesan95@gmail.com








சொத்துரிமைவீடு கேட்ட முன்னாள் எம்.எல்.ஏ.இப்போது உயிரோடிருக்கிறேன்மடாதிபதிஇரண்டாம் கட்டம்உயிரணு உற்பத்திசட்டத்தின் கொடுங்கோன்மைகேரளாஇமாலயம்சரமாகோமூன்று தீர்க்கதரிசன விஷயங்கள்சுந்தர் சருக்கைக் கட்டுரைஉறவுகள்ஆரோக்கியத் தொல்லைகள்உயர் ரத்த அழுத்தம்அர்னால்ட் டிக்ஸ்கடல்பரப்புப் பாதுகாப்பு ஆய்வுஐந்தாவது கட்ட வாக்குப்பதிவு: பாஜகவுக்கு நெருக்கடிகாட்டுமிராண்டித்தனம்தங்க ஜெயராமன் கட்டுரைமாயக் குடமுருட்டி: கர்த்தநாதபுரம்அப்பாராகுல் காந்தியின் இந்திய ஒருங்கிணைப்பு நடைப்பயணம்!கென்யாசமூக ஊடக நிறுவனங்களின் போர்மாநிலக் கல்வி வாரியம்பழுப்பு நிறப் பக்கங்கள்கேள்விஅமரர் கல்கிநெடு மயக்கம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!