கட்டுரை, ஆரோக்கியம், வரும் முன் காக்க 7 நிமிட வாசிப்பு
நெஞ்சில் எரிச்சல் ஏற்படுவது ஏன்?
பத்தாம் வகுப்பு படிக்கும் பிரதாப் அடிக்கடி நெஞ்சு வலிக்கிறது என்று என்னிடம் சிகிச்சைக்கு வருவான். ‘பாடங்களைப் படிப்பதற்குச் சிரமப்படுவதால் இப்படிச் சொல்லி தப்பிக்கிறான்’ என்று அவன் வீட்டில் சந்தேகப்பட்டனர். அவனுடைய ஆரம்பப் பரிசோதனையிலும் நோய் எதுவும் தெரியவில்லை. கடைசியில் வயிற்றை எண்டோஸ்கோப்பி எடுத்துப் பார்த்தபோதுதான் அவனுடைய பிரச்சினை புரிந்தது. பொதுவாக, 40 வயதுக்கு மேல் வரக்கூடிய நெஞ்செரிச்சல் (Heartburn) பிரச்சினை பிரதாப்புக்கு 15 வயதிலேயே வந்துவிட்டது. விளக்கமாக விசாரித்ததில் அவன் தினமும் சாப்பிடும் சிப்ஸ்தான் அதற்குக் காரணம் எனத் தெரிந்தது. அவன் உணவுமுறையை மாற்றிக்கொண்டதும் நெஞ்செரிச்சல் காணாமல் போனது.
இன்றைய நவீன வாழ்வியலில் பிறந்த குழந்தை முதல் படுக்கையில் கிடக்கும் முதியோர் வரை அனைவருக்கும் உணவுமுறை மாறிவிட்டது. அதனால் ஏற்படும் தொற்றா நோய்க்கூட்டத்தில் நெஞ்செரிச்சலும் சேர்ந்துகொண்டது. ‘சாதாரண தொந்தரவுதானே!’ என்று இதை அலட்சியப்படுத்தவும் முடியாது. காரணம், அடிக்கடி நெஞ்செரிச்சல் ஏற்பட்டு, நாட்பட்டு நீடித்தால், அது புற்றுநோயில் கொண்டுபோய் விடக்கூடிய ஆபத்து உள்ளது.
எதுக்களிப்பு நோய்!
வழக்கத்தில் நாம் ‘நெஞ்செரிச்சல்’ என்று சொன்னாலும், இது நெஞ்சு முழுதும்ஏற்படும் பிரச்சினை இல்லை; உணவுக்குழாயில் ஏற்படுகிற பிரச்சினை. இதை 'இரைப்பை அமிலப் பின்னொழுக்கு நோய்' (Gastro Esophageal Reflex Disease - சுருக்கமாக GERD) என்கிறார்கள் மருத்துவர்கள். ‘எதுக்களிப்பு நோய்’ என்றும் இதைச் சொல்லலாம்.
நம் உணவுக்குழாயில் இரண்டு ‘கதவுகள்’ (Sphinctres) உள்ளன. மேல்முனையில் இருக்கும் கதவு, நாம் உணவைவிழுங்கும்போது அது மூச்சுக்குழாய்க்குள் செல்வதைத் தடுக்கிறது. கீழ்முனையில் இருக்கும் கதவு, இரைப்பையில் சுரக்கும் அமிலம் உணவுக்குழாய்க்குள் நுழையவிடாமல் தடுக்கிறது. இந்தக் கதவு உணவுக்குழாய்க்கும் இரைப்பைக்கும் இடையில் ஒரு பேரிகார்டுபோல் அமைந்துள்ளதால் சாதாரணமாக நாம் சாப்பிடும் உணவு எதுக்களிக்காமல் இரைப்பைக்குள் சமத்தாகச் சென்றுவிடுகிறது.
பிரச்சினை எப்போது ஆரம்பிக்கிறது?
இரைப்பையில் இருக்கும் அமிலம் இந்த பேரிகார்டைக் கடந்து உணவுக்குழாய்க்குள் தேவையில்லாமல் நுழையும்போதுதான் ஆரம்பிக்கிறது. மழை அங்கி அணிந்து கொண்டால் மழையைத் தாங்கும்; தீயைத் தாங்குமா? அதுமாதிரிதான், உணவுக்குழாய் காரமான, சூடான, குளிர்ச்சியான உணவுகளைத் தாங்குமே தவிர, அமிலத்தின் வீரியத்தை அதனால் தாங்க முடியாது. இந்த அமில அலைகள் அடிக்கடி மேலேறி வரும்போது அங்குள்ள திசுப்படலத்தை அரித்துப் புண்ணாக்கிவிடும். இதனால் அழற்சி ஏற்பட்டு நெஞ்செரிச்சல் உண்டாகும். இது, இந்த நோயின் அடிப்படை அம்சம்.
எதிரிகளை அறிவோம்!
இன்றைய தலைமுறை அதிகம் விரும்பிச் சாப்பிடும் இனிப்பு, காரம், மசாலா, கொழுப்பு மிகுந்த உணவுகள்தான் உணவுக்குழாய்க்கு முக்கிய எதிரிகள். இந்த உணவுகளை எப்போதாவது சாப்பிட்டால் தவறில்லை; அடிக்கடி சாப்பிட்டால் வந்து சேரும் இந்தத் தொல்லை. எப்படி? உணவுக்குழாயின் கீழ்க்கதவு இந்த உணவுகளின் ஆக்கிரமிப்பால் பலவீனமடைந்து கறையான் கடித்த கதவுபோல் சிதைந்துவிடும்; இதனால், இரைப்பையில் இருக்கும் அமிலம் மேல்நோக்கி வரும்போது அதைத் தடுக்க முடியாமல் சிரமப்படும்; உணவுக்குழாய்க்குள் அமிலத்தை அனுமதித்துவிடும்.
இரைப்பையில் அளவுக்கு அதிகமாக அமிலம் சுரந்தாலும் அது உணவுக்குழாயின் கீழ்முனைக்குச் சென்று காயத்தை ஏற்படுத்தும். 'அல்சர்' எனப்படும் இரைப்பைப் புண் உள்ளவர்களுக்கு இப்படித்தான் நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது.
வயிற்றில் அதிக அழுத்தம் இருந்தாலும் நெஞ்செரிச்சல் ஏற்படும். இதற்கான காரணிகளில் முதலாவதாக வருவது உடற்பருமன். இது தவிர, இறுக்கமாக ஆடை அணிபவர்கள், கர்ப்பிணிகள், வயிற்றில் கட்டி உள்ளவர்கள் ஆகியோருக்கு நெஞ்செரிச்சல் ஏற்பட இந்த அழுத்தமே காரணம். வழக்கமாக, பெண்கள் சாப்பிட்ட பின்பு வீட்டை சுத்தம் செய்கிறேன் என்று குனிந்து நிமிர்ந்து வேலை செய்வார்கள். இதனாலும் வயிற்றில் அழுத்தம் அதிகரித்து, அமிலம் மேலேறி, நெஞ்செரிச்சல் உண்டாகும்.
சிலருக்கு இரைப்பையின் மேற்பகுதி மார்புக்குள் புகுந்து (Hiatus hernia) உணவுக்குழாயை அழுத்தும். இதன் விளைவாக அதன் தசைகள் கட்டுப்பாட்டை இழந்துவிடும். இதற்காகவே காத்திருந்ததுபோல் இரைப்பை அமிலம் உணவுக்குழாய்க்குள் படையெடுக்க, அங்கு புண் உண்டாகி நெஞ்செரிச்சல் தொல்லை தரும். பலருக்கு உணவு சாப்பிட்டவுடன் நெஞ்செரிச்சல் ஏற்படும்; சிலருக்குப் பசிக்கும்போது ஏற்படும். ஏப்பமும் எதுக்களிப்பும் சேர்ந்துகொள்ளும்.
என்ன பரிசோதனை செய்வது?
‘நெஞ்செரிச்சல்தானே... தானாகச் சரியாகிவிடும்’ என்று மட்டும் அலட்சியமாக இருக்கவேண்டாம். இந்தப் பிரச்சினை உணவுக்குழாயிலிருந்து வருகிறதா, இதயத்திலிருந்து வருகிறதா என்று தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டியது மிக அவசியம். அதற்கு, நோயின் துவக்கத்திலேயே ‘கேஸ்ட்ரோ எண்டோஸ்கோப்பி’ (Gastro endoscopy) மற்றும் இசிஜி (ECG) பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
என் வெளியூர் வாசகி ஒருவரின் அப்பாவுக்கு நீ்ரிழிவு இருந்தது. அவருக்கு அடிக்கடி நெஞ்சில் எரிச்சலும் வந்தது. அதற்கு அவர் அல்சர் மாத்திரைகளைச் சாப்பிட்டு வந்தார். அதனால் அவருக்குத் தற்காலிக நிவாரணம் கிடைத்தது; நிரந்தரத் தீர்வு இல்லை. என்னிடம் யோசனை கேட்டார். “இசிஜி (ECG) பார்த்துக்கொள்ளுங்கள். சிலருக்கு மாரடைப்பு ஏற்படும்போது ஆரம்ப அறிகுறியாக நெஞ்செரிச்சல் மட்டுமே உண்டாகலாம்” என்றேன். இசிஜி எடுத்துப் பார்த்தார்கள். நான் சொன்னமாதிரி அவருக்கு ‘சைலன்ட் அட்டாக்’ – மறைமுக மாரடைப்பு - இருந்தது. அதற்கு சிகிச்சை எடுத்ததும் நெஞ்செரிச்சல் இல்லை. இப்படி, இசிஜி எடுக்காமல் ஏமாந்தவர்களும் இருக்கிறார்கள். எனவேதான் இந்த எச்சரிக்கை.
அடுத்து, நெஞ்செரிச்சல் நாட்பட்டு இருந்தால் ‘கேஸ்ட்ரோ எண்டோஸ்கோப்பி’ மிக அவசியம். ஏனென்றால், நெஞ்செரிச்சல் உள்ளவர்களில் ஆயிரத்தில் 3 பேருக்கு ‘பேரட் இசோபேகஸ்’ (Barrett esophagus) எனும் புற்றுநோய் வரக்கூடும். ஆரம்பத்திலேயே இதைக் கண்டுகொண்டால் குணப்படுத்துவது எளிது. தலைக்கு வந்தது தலைப்பாகையோடு முடிந்துவிடும்.
சிகிச்சை என்ன?
இரைப்பையில் அமிலச் சுரப்பைக் கட்டுப்படுத்தும் மருந்துகளும் அமிலத்தைச் சமன் செய்யும் மருந்துகளும்தான் இதற்குரிய சிகிச்சைகள். இவற்றுடன் அமிலம் உணவுக்குழாய்க்குள் செல்வதைத் தடுக்கும் மருந்துகள் (Prokinetic drugs) மற்றும் வாந்தி தடுப்பு மருந்துகள் தரப்படுகின்றன. நெஞ்செரிச்சலுக்கு அவ்வப்போது ஆன்டாசிட் மாத்திரைகளைச் சாப்பிட்டால் பிரச்சினை தீராது; மருத்துவர் கூறும் காலம் முழுவதும் சாப்பிட வேண்டும். அதுதான் முக்கியம்.
தடுப்பது எப்படி?
நெஞ்செரிச்சலுக்கு உணவு விஷயத்தில் அக்கறை செலுத்த வேண்டியது முக்கியம். காரம் புகுந்த, மசாலா கலந்த, எண்ணெய் மிகுந்த, கொழுப்பு நிறைந்த, புளிப்பேறிய பன்னாட்டு உணவுகளை ஒதுக்குங்கள். நம் பராம்பரிய உணவுகளைப் பின்பற்றுங்கள். ஒரேநேரத்தில் வயிறு நிறையச் சாப்பிடுவதைவிட மூன்று அல்லது நான்கு மணிநேர இடைவெளிகளில் கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிடுவது நல்லது.
சாப்பிடும் நேரத்தில் காலில் வெந்நீர் ஊற்றிக்கொண்டமாதிரி நடந்துகொள்ளாதீர்கள். நிதானம் இதற்குப் பிரதானம். உணவை நன்றாக மென்று விழுங்குங்கள். சந்தோஷத்துடன் சாப்பிடுங்கள். கவலையாக இருக்கும்போதோ, கோபமாக இருக்கும்போதோ சாப்பிட வேண்டாம். அதுபோல் பேசிக்கொண்டே சாப்பிட வேண்டாம். காபி/தேநீர் வேண்டாம். இறைச்சி, முட்டை, சாக்லேட், காற்றடைத்த செயற்கை பானங்கள், குளிர் பானங்கள், சிட்ரஸ் பழங்கள் போன்றவற்றைக் குறைத்துக்கொள்ளுங்கள். மோரும் இளநீரும் நல்லது.
எப்படிப் படுப்பது?
மிக முக்கிய யோசனை இது: சாப்பிட்டவுடன் படுக்காதீர்கள். குறைந்தது இரண்டு மணி நேரம் கழித்துப் படுக்கச் செல்லுங்கள். அப்போதுகூட படுக்கையின் தலைப்பகுதியை அரை அடியிலிருந்து ஒரு அடி வரை உயர்த்திக்கொள்வது நல்லது. படுக்கும் நிலையும் முக்கியம்.
அதிக நேரம் குப்புறப் படுப்பது, மல்லாந்து படுப்பது, வித்தியாசமான கோணங்களில் கால்களை நீட்டி மடக்கிப் படுப்பது போன்றவை தவறானவை. இடது பக்கமாகப் புரண்டு படுப்பதுதான் சிறந்தது. இந்த நிலையில் படுக்கும்போது, இரைப்பையில் உள்ள உணவு புவி ஈர்ப்பு விசை காரணமாக இரைப்பையில் முழுவதும் இறங்கிவிடும். இரைப்பையை எதுவும் அழுத்துவதில்லை. அமிலமும் உணவும் மேலே ஏற வழியில்லை. இதனால், நெஞ்செரிச்சல் ஏற்படுவதில்லை. மாறாக, வயிறு நிரம்ப சாப்பிட்டுவிட்டு, வலது பக்கமாகப் படுத்தால், இடது பக்கத்தில் இருக்கிற குடல் இரைப்பையை அழுத்தும். அப்போது இரைப்பையில் நிரம்பி இருக்கிற உணவும் அமிலமும் உணவுக்குழாய்க்குச் சமமாக வந்துவிடும் இதனால், இவை இரண்டும் உணவுக்குழாய்க்குள் எளிதாகப் புகுந்து நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும். எனவேதான் இடது பக்கமாகப் படுப்பது நல்லது என்கிறோம்.
இது கடைசிதான் என்றாலும் முக்கியமானது: புகை, புகையிலை, மது, பான், பீடா… இவை எல்லாமே உணவுக்குழாய்க்குச் சகுனிகள். இவற்றையும் ஓரங்கட்டுங்கள். உடற்பருமன் இருந்தால் அதைக் குறைக்க வழி பாருங்கள். அப்போதுதான் நெஞ்செரிச்சல் தொல்லை நிரந்தரமாகத் தீரும்.
(பேசுவோம்)
1
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.