வாழ்வியல், வரும் முன் காக்க 7 நிமிட வாசிப்பு

ரத்த அழுத்தமும் பார்வையைப் பறிக்கும்

கு.கணேசன்
30 Oct 2021, 5:00 am
0

ண்மையில் என்னிடம் சிகிச்சைக்கு வந்த வங்கி அதிகாரி ஒருவருக்குப் பார்வையில் சிறு சிக்கல். அவரைப் பரிசோதித்ததில் ரத்த அழுத்தம் 180/120 என்று இருந்தது. அவரது பார்வைப் பிரச்சினைக்கு அந்த உயர் ரத்த அழுத்தம் ஒரு காரணமாக இருக்கும் என்றேன். கண் மருத்துவரையும் ஆலோசித்துக்கொள்ளுங்கள் என்று வழி காட்டினேன்.

நீரிழிவு இருந்தால்தானே கண்ணைப் பாதிக்கும்; எனக்குத்தான் நீரிழிவு இல்லையே என்று, அந்த அதிகாரி நான் சொன்ன காரணத்தை நம்ப மறுத்தார். அவர் கண் மருத்துவரிடம் சென்று ‘நான் சொன்னது சரிதான்’ என்று கண் மருத்துவரும் உறுதிசெய்த பிறகுதான் என்னை நம்பினார். உயர் ரத்த அழுத்தத்துக்கு என்னிடமே சிகிச்சை பெற்றுக்கொண்டார். பார்வை பிரச்சினையும் சிறிது சிறிதாகத் தீர்ந்தது.

உயர் ரத்த அழுத்தத்துக்கும் பார்வைக்கும் தொடர்பு உண்டு என்பது படித்தவர்களுக்கே தெரியவில்லை எனும்போது, படிக்காத பாமரர்களுக்கு இந்த விஷயத்தில் விழிப்புணர்வு குறைவாக இருப்பதில் வியப்பில்லை. முன்பெல்லாம் 50 வயதைக் கடந்தவர்களுக்கே இது பிரச்சினை செய்தது. இப்போதைய வாழ்வியலில் 30 வயதுக்காரர்களுக்கும் இது ஏற்படுகிறது என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம். அடுத்து, ரத்தத்தில் கொலஸ்டிரால் அதிகமாக இருப்பவர்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும் இந்தப் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புண்டு.

இரட்டையர்கள்

உயர் ரத்த அழுத்தமும் நீரிழிவும் பார்வையைப் பாதிக்கும் இரட்டையர்கள். மாரடைப்பைப் போலவோ,  பக்கவாதத்தைப் போலவோ அவ்வளவாக அறிகுறிகளை வெளிப்படுத்தாமல் திடீரென்று பார்வை இழப்புக்குப் பாதை போடுபவர்கள். உயர் ரத்த அழுத்தத்தால் கண்ணில் உள்ள விழித்திரை பாதிக்கப்பட்டால், அது ‘உயர் ரத்த அழுத்த விழித்திரை வலுவிழப்பு நோய்’ (Hypertensive Retinopathy). நீரிழிவால் பாதிக்கப்பட்டால், அது ‘நீரிழிவு விழித்திரை வலுவிழப்பு நோய்’ (Diabetic Retinopathy).

விழித்திரை நோய்

கண்ணில் உள்ள 'விழித்திரை' (Retina) என்பது நாம் பார்க்கும் பொருட்களின் பிம்பங்களைப் பெற்று, மின்சக்தியாக மாற்றி, பார்வை நரம்பு வழியாக மூளைக்குக் கடத்தி, எதைப் பார்க்கிறோம் என்பதை உணர்த்த உதவும் முக்கியமான பகுதி. கட்டுப்பாட்டில் இல்லாத ரத்த அழுத்தமும் நீரிழிவும் அங்குள்ள ரத்தக்குழாய்களைப் பாதிப்பதால், அவற்றின் வழியாக விழித்திரைக்குச் செல்லும் ஊட்டச்சத்தும் ஆக்ஸிஜனும் குறைந்துவிடும். இது விழித்திரையின் செயல்பாட்டைக் குறைத்துவிடும்.

குறிப்பாக, நீரிழிவுக்காரர்களுக்கு ரத்தச் சர்க்கரை தொடர்ந்து அதிகமாக இருக்கும்போது, அந்த அதீதச் சர்க்கரை, விழித்திரையின் நுண் ரத்தக்குழாய்களை அரிக்கிறது. புரதம் மிகுந்த புறக்கழிவுக் கசிவு (Exudate) கண்ணுக்குள் ஏற்படுகிறது. அப்போது விழித்திரை வீங்கிப் பழுதாகிறது. இதுதான் விழித்திரை பாதிப்பின் ஆரம்பக் கட்டம். ஆனாலும், பார்வையில் பிரச்சினை இருக்காது. அதேநேரம் கண்ணுக்குள் ஓசையின்றி ஒரு ‘பிரளயம்’ ஆரம்பித்திருக்கும்.

ரத்த அழுத்தம் தொடர்ந்து உயர்ந்தநிலையில் இருந்தாலும், நீரிழிவு தீவிரமானாலும், பாதிக்கப்பட்ட ரத்தக்குழாய்கள் வலுகுறைந்து, வீங்கிச் சிதைந்துவிடும் அப்போது, விழித்திரையில் ரத்தக்கசிவு ஏற்படுகிறது. கசிந்த ரத்தம் விழித்திரையில் படர்ந்து ஈரமாக்குகிறது. இதனால், பார்வை பழுதாகிறது. அடுத்து, விழித்திரைக்கு ரத்த ஓட்டம் குறையக் குறைய அதை ஈடுசெய்வதற்கு, அங்கு அசாதாரண ரத்தக் குழாய்கள் புதிதாகப் புறப்படுகின்றன. இவை வழக்கத்தைவிட வலுவில்லாமல் இருக்கும். இவற்றுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றால் வெடித்துவிடும். இதனால் அடிக்கடி ரத்தக் கசிவு ஏற்படும். பொதுவாக, விழித்திரைக்கு முன்பாக இருக்கும் 'விழிப்படிகத் திரவம்’ (Vitreous humor) என்பது  மண்ணில் படாத மழைத் துளிபோல் தெளிவாக இருக்க வேண்டும். இதில் ரத்தக்கசிவு (Vitreous hemorrhage) கலந்துவிடும்போது, அனைவரும் குளிக்கும் குட்டைத் தண்ணீர்போல் கலங்கலாகிவிடும். மேலும், இந்தக் கசிவு விழித்திரையை மட்டுமல்லாமல் பார்வை நரம்பையும் அழுத்தும். அப்போது பார்வை கடுமையாகப் பாதிக்கப்படும்.

இந்தக் கட்டத்திலும் அந்த இரட்டை நோய்களைக் கட்டுப்படுத்தத் தவறினால், விழித்திரையின் பின்புறச் சுவரிலிருந்து அது திடீரென  விடுபட்டுவிடும். இதற்கு 'விழித்திரை விலகல்' (Retinal Detachment) என்று பெயர். இது கண் பார்வையை உடனே பறித்துவிடக்கூடிய மோசமான நிலைமை. ஆனாலும், கண்ணுக்குள் ரத்தக்கசிவு இருப்பதைத் தொடக்கத்திலேயே கவனித்து, தகுந்த சிகிச்சை எடுத்துக்கொண்டால் இதையும் தடுத்துவிட முடியும்.

அறிகுறிகள் என்ன?

இந்த நோயின் ஆரம்ப நிலையில் எந்த அறிகுறியும் தெரியாது. அதிக நாட்கள் கழித்துத்தான் அறிகுறிகள் வெளியில் தெரியும். முதலில் கண் கூசும். பார்வையில் புள்ளி புள்ளியாகத் தெரியும். பூச்சி பறப்பதுபோல் தெரியும். பக்கப் பார்வை குறையும். இரவில் பார்வை தடுமாறும்.

எப்படிக் கண்டுபிடிப்பது?

வழக்கமான பார்வைத் திறன் பரிசோதனை, கண்நீர் அழுத்தப் பரிசோதனை மற்றும் குறுதுளை ஒளி சோதனை (Slit Lamp Examination), விழித்திரை பரிசோதனை ஆகியவற்றின் மூலம் பாதிப்பை அறிய முடியும். அடுத்து, விழித்திரைக்கு ரத்தக் குழாய் மூலம் ஒரு சாயத்தைச் செலுத்திப் படம் எடுக்கும் 'ஃபண்டஸ் ஃபுளுரசின் ஆஞ்சியோகிராபி' (Fundus Fluorescein Angiography) பரிசோதனை மூலமும் 100 % இந்த நோயைக் கண்டுபிடிக்க முடியும். இவை தவிர, ஆப்டிகல் கொஹிரென்ஸ் டோமோகிராபி (OCT), பி-ஸ்கேன் பரிசோதனை என்று வேறு சில பரிசோதனைகளும் இருக்கின்றன.

சிகிச்சைகள் என்னென்ன?

இதற்கு லேசர் சிகிச்சைதான் முக்கியமானது. லேசர் ஒளிக்கதிர்களைக் கண்ணுக்குள் செலுத்தி, ரத்தக் கசிவுள்ள ரத்தக் குழாய்களை மூடுவதும் ரத்தக் கசிவை நிறுத்துவதும் இதன் செயல்முறை. இதற்கு 'லேசர் போட்டோ கோயாகுலேஷன்' (Laser Photo Coagulation) என்று பெயர். கண்ணுக்குள் குறைந்த அளவு ரத்தக் கசிவு இருந்து, புதிய ரத்தக்குழாய்களும் காணப்படும் நிலையில் லேசர் சிகிச்சை நல்ல பலனைத் தரும். பாதிப்பின் தீவிரத்தைப் பொறுத்து பல முறை லேசர் சிகிச்சை தேவைப்படும். இந்த சிகிச்சையை ஒவ்வொரு கண்ணுக்கும் தனித்தனியாக மேற்கொள்ள வேண்டும். விழித்திரையில் வலு குறைந்த புதிய ரத்தக் குழாய்கள் புறப்படுவதை இது தடுத்துவிடுவதால் மறுபடியும் விழித்திரையில் ரத்தக் கசிவு ஏற்படாது.

அடுத்து, விழித்திரை லேசாக விலகியிருந்தால், லேசரில் சரிசெய்யலாம். விழித்திரை மோசமாக விலகி இருக்கிறது என்றால் 'விட்ரெக்டமி' (Vitrectomy) எனும் விழிப்படிகத் திரவ மாற்று அறுவை சிகிச்சையும் லேசர் சிகிச்சையும் தேவைப்படும். விழித்திரை விலகினாலும் விலகாவிட்டாலும், ரத்தக் கசிவு மட்டும் மோசமாக இருக்கிறது என்னும் நிலைமைக்கும் இதே சிகிச்சைதான்.

இதுவும் முக்கியம்!

விழித்திரையின் மையத்தில் 'ஒளிக்குவியம்' (Macula) என்னும் ஒரு பகுதி இருக்கிறது. இங்குதான் நாம் பார்க்கும் காட்சிகள் விழுகின்றன. பார்ப்பதற்கும் வாசிப்பதற்கும் இந்தப் பகுதி பேருதவி புரிகிறது. இங்கு தோன்றும் புறக்கழிவுப் புரதம் காரணமாக இந்தப் பகுதி வீங்கிவிடும்.  ‘நீரிழிவு ஒளிக்குவிய நோய்’ (Diabetic Maculopathy) என்று பெயர். பார்வை குறைவதற்கு இது ஒரு முக்கியக் காரணம். இந்தப் பாதிப்பு உள்ளவர்களுக்கு வாசிப்பதும் வாகனம் ஓட்டுவதும் சிரமமாக இருக்கும். ஓசிடி (OCT) பரிசோதனையில் இந்த பாதிப்பு உறுதிசெய்யப்படும்.

ஒளிக்குவிய வீக்கம் (Macular edema) தொடக்க நிலையில் இருந்தால் லேசர் சிகிச்சை மட்டுமே போதும். மோசமான நிலையில் இருந்தால், ஸ்டீராய்டு அல்லது ஆன்டி -விஇஜிஎஃப் (anti-VEGF) மருந்தைக் கண்ணுக்குள் நேரடியாக ஊசி மூலம் செலுத்தும் நவீன மருத்துவமும் இதைத் தொடர்ந்து லேசர் சிகிச்சையும் தேவைப்படும். ஒரு மாத இடைவெளியில் மறுபரிசோதனைசெய்து வீக்கம் தெரிந்தால் மேலும் சில தவணைகள் இந்த மருந்துகளில் ஒன்றைச் செலுத்த வேண்டிவரும்.

தடுப்பது எப்படி?

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மாதாமாதம் தங்கள் ரத்த அழுத்தத்தை அளந்துகொள்ள வேண்டும். நீரிழிவு உள்ளவர்கள் மாதாமாதம் ரத்தச்சர்க்கரையை அளந்துகொள்ள வேண்டும். வருடத்துக்கு ஒரு முறை விழித்திரையைப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ரத்த அழுத்தம் 120/80 என்ற அளவிலும், உணவு சாப்பிட்டபின் ரத்தச் சர்க்கரை 120 - 140 மி.கி./டெ.லி. என்ற அளவிலும், ரத்தச் சர்க்கரையின் மூன்று மாதக் கட்டுப்பாடு (HbA1C) 5 - 6% என்ற அளவிலும் இருக்க வேண்டும். எல்.டி.எல். கொலஸ்டிரால் 100 மி.கி./டெ.லி.க்கும் குறைவாக இருக்க வேண்டும். அப்போதுதான் அறிகுறிகளைக் காட்டாத ஆரம்பநிலைப் பாதிப்பைக் கண்டறிந்து பார்வை இழப்பைத் தவிர்க்க முடியும். புகைபிடிப்பதைத் தவிர்ப்பது, மதுவை மறப்பது, உடல் எடையைச் சீராக்குவது, ரத்தசோகையைத் தடுப்பது போன்ற வாழ்க்கைமுறை மாற்றங்களும் முக்கியம்.

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.
கு.கணேசன்

கு.கணேசன், பொது நல மருத்துவர்; மருத்துவத் துறையில் உலகளாவிய அளவில் நடக்கும் மாற்றங்களை ஆழ்ந்து அவதானித்து, எளிய மொழியில் மக்களுக்கு எழுதும் பணியில் ஈடுபட்டிருப்பவர்; ‘சர்க்கரைநோயுடன் வாழ்வது இனிது!’, ‘நலம், நலம் அறிய ஆவல்’, ‘செகண்ட் ஒப்பினீயன்’ உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: gganesan95@gmail.com








பின்னூட்டம் (0)

Login / Create an account to add a comment / reply.

Be the first person to add a comment.

மாயக் குடமுருட்டி: வெற்றிடத்தின் பாடல்கள்அண்ணா சாலை விபத்து: பொறியியலும் பாதுகாப்பும்சாதிப் பிரச்சினைஇலவச மின்சார இணைப்புகள்அதிக சம்பளம் வாங்க வழிசாட்சியச் சட்டம்ஆஃப்கன்மஹாஸ்வேதா தேவிபருக்கைக் கண்முன்னாள் பிரதமர்தமிழக அரசுஇந்திய மாடல்சோழப் பேரரசுஇன அழிப்பு அருங்காட்சியகம்சிறுநீரகக் கல் வலி: தப்பிப்பது எப்படி?ஆணின் விந்தணு பூஜ்ஜியத்துக்குப் போய்விடுமா?காலி இடங்கள்இந்திய வரலாறுஅரசு நிர்வாகம்வலதுசாரிக் கொள்கைராஜராஜன்குறைந்தபட்ச ஆதரவு விலை: சட்ட உத்தரவாதம் உண்மையில் மாலி அல்மெய்டாமம்தாஜாட் சமூகத்தைக் கவர உபி அரசியலர்கள் ஏன் அவ்வளவு மெசமஸ் கி.ரா.அன்றாடம் கற்றுக்கொள்கிறவரே ஆசிரியர்சிந்தனை வளம்சாந்தன்தேசிய உயிரியல் ஆய்வு மையம்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!