விளையாட்டாக மூன்றாண்டுகள் வேகமாக ஓடிவிட்டன. 2021 ஜூன் மாதத்தில் ‘தி இந்து’ தமிழ் நாளிதழிலிருந்து வெளியே வந்தேன். ‘அருஞ்சொல்’ செப்டம்பர் 22 அன்றுதான் வாசகர்கள் பார்வைக்கு வெளியானது என்றாலும், அதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே அது சோதனை ஓட்டத்தை ஆரம்பித்திருந்தது.
இந்த மூன்றாண்டுகளில் எத்தகைய பணிகளில் எல்லாம் ‘அருஞ்சொல்’ ஈடுபட்டிருக்கிறது என்பதை எண்ணிப் பார்த்தால், பெரியவர் வ.ரங்காசாரி வழிகாட்டுதலுடன் கூடிய ஒரு சின்ன ஆசிரியர் குழு மகிழ்ச்சிக்குரிய பல பணிகளை மேற்கொண்டிருக்கிறது.
இதெல்லாம் சாத்தியமா?
தமிழில் ‘தினமலர்’, ‘விகடன்’ போன்ற பத்திரிகைகள் அன்றாடம் நூற்றிச்சொச்சம் செய்திகள், கட்டுரைகளை வெளியிடுகின்றன; ஜெயமோகன், சாரு நிவேதிதா போன்ற எழுத்தாளர்கள் தினம் இரண்டு மூன்று கட்டுரைகளைத் தங்களுடைய தளத்தில் எழுதுகின்றனர்.
இப்படிப்பட்ட சூழலில், அன்றாடம் வெறுமனே ஒரு கட்டுரையை மட்டும் வெளியிடும் ஒரு தளம் எங்கேனும் பொது கவனத்தைப் பெற முடியுமா? அப்படியே அந்தத் தளத்துக்கு ஒரு கவனம் கிடைத்தாலும், ‘சமஸ் தளம்’ என்று அதைச் சொல்வார்களே தவிர, ஒரு பத்திரிகையாக யாரேனும் அதைக் குறிப்பிடுவார்களா?
இப்படிக் கேட்டவர்கள் அதிகம். மூன்றாண்டுகளில் எல்லாவற்றையும் ‘அருஞ்சொல்’ உடைத்தது.
தமிழுக்குப் புதிய வரவு
தமிழின் முன்னணி எழுத்தாளர்கள், அரசியல் விமர்சகர்கள், அறிவுஜீவிகள் பலரும் ‘அருஞ்சொல்’லுக்குப் பங்களித்தார்கள். மூன்றாண்டுகளில் 1500+ கட்டுரைகள் – பேட்டிகளை அருஞ்சொல் வெளியிட்டிருக்கிறது. யாரோ பத்திருபது பேர் கொண்ட சிறு குழு அல்ல; 250+ எழுத்தாளர்களின் பங்களிப்பு இது.
முன்னாள் ஆட்சியாளரும், பொருளியல் நிபுணருமான ப.சிதம்பரம், வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா முதல் சமூகவியலாளர் யோகேந்திர யாதவ், அரசமைப்புச் சட்ட நிபுணர் கௌதம் பாட்டியா வரை நாட்டின் பல முக்கியமான அறிவுஜீவிகள் தமிழில் ‘அருஞ்சொல்’ வழியாகவே பேசுகிறார்கள். இங்கே வெளியான பெருமாள் முருகன் தொடர் பத்திகளும் சாரு நிவேதிதாவின் தொடர் பேட்டிகளும் தனித்து நூலாக்கம் பெற்று வாசகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன.
தமிழுக்கு வெளியிலிருந்து மொழிபெயர்ப்பின் மூலமாகக் கொண்டுவரப்பட்டவர்கள் எண்ணிக்கையை எடுத்துக்கொண்டால், இந்த மூன்றாண்டுகளில் ‘அருஞ்சொல்’ அந்தப் பங்களிப்பில் முதலிடத்தை வகிக்கிறது.
மாற்றத்தை உருவாக்கிய எழுத்துகள்
தமிழகத்தில் ‘அருஞ்சொல்’ மூலமாக கவனத்துக்குக் கொண்டுவரப்பட்ட பல விஷயங்களில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. காலையுணவுத் திட்டம் முதல் சோழர்களுக்கான அருங்காட்சியகம் வரை பல பெரும் முயற்சிகளுக்கு ‘அருஞ்சொல்’ தூண்டுகோலாக இருந்திருக்கிறது.
தமிழ்நாட்டை ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிட்டு முதல்வர் பேசிய நிலையில், “அது, உண்மைதான்! ஆனால், தமிழ்நாட்டுக்குள் ஆப்பிரிக்காவோடு ஒப்பிடத்தக்க பிராந்தியங்களும் இருக்கின்றன” என்று சொல்லி நாம் வெளியிட்ட “தமிழகத்தின் உபி, பிஹார் மாவட்டங்களை என்ன செய்யப்போகிறோம்?” கட்டுரை உண்டாக்கிய அதிர்வுகள் அதிகம். அன்றைய தலைமைச் செயலர் இறையன்பு நேரடியாக அழைத்துப் பேசினார். தமிழக அரசு இது தொடர்பில் முக்கியத் துறைச் செயலர்கள் கூட்டத்தை நடத்தி விவாதித்தது. சென்னை, கோவைக்கு வெளியே ஏனைய பிராந்தியங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், தொழில் கொள்கையை உருவாக்க முதல்வர் உத்தரவிடுவதற்கு அது வழிவகுத்தது.
நற்செயல்பாடுகளைப் பாராட்டும் அதேசமயம், அரசின் தவறுகளையும் தொடர்ந்து ‘அருஞ்சொல்’ சுட்டிக்காட்டிவந்தது. கருத்துரிமையை முடக்கும் அரசின் நடவடிக்கைகள், கள்ளக்குறிச்சி வன்முறை, தமிழக அமைச்சர்கள் சிலரின் மோசமான செயல்பாடு, வேங்கைவயல் விவகாரம் போன்ற பல விஷயங்களில் ‘அருஞ்சொல்’லின் விமர்சனங்கள் பெரும் விவாதப்பொருள் ஆகியிருக்கின்றன.
இந்திய அரசின் பெரும்பான்மை முக்கிய முடிவுகள் ‘அருஞ்சொல்’லின் தீவிர விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றன. மோடி அரசின் பல நடவடிக்கைகளைக் கடுமையாக விமர்சித்த ‘அருஞ்சொல்’ அதேசமயம், மக்கள் நலன் சார்ந்த அரசின் எந்த முக்கியமான முடிவையும் வரவேற்றுள்ளது.
இந்தியாவின் பெரும்பான்மை ஊடகங்கள் அணுகிய விதத்துக்கு மாறாக, நாட்டின் மதச்சார்பின்மைத் தத்துவத்தைத் தூர வீசிவிட்டு, தன்னுடைய அரசியல் நோக்கங்களுக்கான ஒரு கருவியாக அயோத்தி ராமர் கோயில் திறப்பு நிகழ்வைப் பயன்படுத்திய பிரதமர் மோடியைக் கண்டிக்கும் வகையில், தீவிரமான விமர்சனத்தை முன்வைத்ததுடன் 2024, ஜனவரி 22 அன்று தளத்தை முழுமையாக கருப்புப் பின்னணியில் இயக்கும் முடிவைச் செயல்படுத்தியது ‘அருஞ்சொல்’ ஆசிரியர் குழு.
வாசகர்களின் சந்தாக்கள்
அறிவு எல்லோரையும் சென்றடைய பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன். ஆகையால், ‘அருஞ்சொல்’ தளத்தைப் பூட்டி வைத்து, சந்தா செலுத்துவோரால் மட்டும்தான் வாசிக்க முடியும் என்ற சூழலை நாம் இங்கே உருவாக்கவில்லை. “எவர் வேண்டுமானாலும் வாசிக்கலாம்; இயன்றோர் சந்தாவைச் செலுத்திடுங்கள்” என்று மட்டும் தெரிவித்தோம். பல்லாயிரக்கணக்கான மாணவர்கள், போட்டித் தேர்வர்கள் உள்பட எளியோர் கட்டணமின்றி வாசிக்க இது உதவுகிறது.
இதுவரை ஒருநாளும் ‘அருஞ்சொல்’லுக்கு சந்தா செலுத்துங்கள் என்று என்னுடைய ஃபேஸ்புக் பக்கம் உள்பட சமூகவலைதளப் பக்கங்களிலோ, ‘அருஞ்சொல்’ சார்ந்த நிகழ்வுகளிலோ கேட்டதே இல்லை. வாசகர்கள் கட்டுரைகளை வாசிக்க தடையாக இருக்கும் என்று கூகுள் விளம்பரங்களையும் அனுமதித்தது இல்லை. ‘அருஞ்சொல்’ இதழுக்குள் வரும் சந்தா நினைவூட்டல்களோடு சரி.
பத்திரிகைகளுக்குப் பொருளாதார சுதந்திரம் மிக முக்கியம். ‘அருஞ்சொல்’ அப்படி சுயாதீனமாக கம்பீரமாகச் செயல்படும் வகையில், ஒவ்வொரு வருடமும் / மாதமும் தவறாமல் சந்தா அனுப்பும் தனித்துவமான வாசகர்களை ‘அருஞ்சொல்’ பெற்றிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் தொடங்கும் முன்னரே முதலாவதாக முந்திக்கொண்டு ஆண்டுதோறும் ரூ.25,000/- ஆண்டு சந்தாவை அனுப்பி வைக்கும் கரூர் வாசகர் பி.சரவணன் இங்கே ஓர் உதாரணர் - இன்றுவரை இவருடைய முகம்கூட எனக்குத் தெரியாது; செல்பேசியில்கூட இவருடன் நான் தொடர்புகொண்டது இல்லை. இப்படி பல நூறு வாசகர்களைப் பட்டியலிட முடியும்.
பதிப்புலகிலும் முத்திரை
மூன்றாண்டுகளில் பதிப்புத் துறையிலும் தனக்கென்று தனி முத்திரையை உருவாக்கியது ‘அருஞ்சொல்’.
முதல் வெளியீடாக வெளிவந்த நீதிநாயகம் கே.சந்துருவின் சுயசரிதையான ‘நானும் நீதிபதி ஆனேன்’ அந்த ஆண்டில் அதிகம் பேசப்பட்ட நூலாக வாசசகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றது.
அடுத்த ஆண்டில் வெளியான கல்வியாளர் சீனிவாசனின் வரலாற்றைப் பேசும் ‘ஒரு பள்ளி வாழ்க்கை’ தமிழகக் கல்வித் துறை சார்ந்த மிக முக்கியமான நூல்களில் ஒன்றாக உருவெடுத்தது. அதே ஆண்டில் வெளியான இயக்குநர் த.செ.ஞானவேலுவின் ‘ஜெய்பீம் – திரைக்கதை, வசனம், பாடல்கள், உரையாடல்’ நூல் இதுவரை தமிழில் இப்படி சினிமா திரைக்கதை நூல் ஒன்று வெளியானதில்லை என்ற பேச்சை உண்டாக்கியது.
மூன்றாமாண்டில் வெளியான ‘சோழர்கள் இன்று’ தமிழ் இதழியல் – பதிப்புத் துறையில் ஒரு பிரம்மாண்ட உருவாக்கம் எனும் பெயரைப் பெற்றது. எல்லா நூல்களுமே அந்தந்த ஆண்டுகளில் விற்பனையில் உச்சம் தொட்டன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
அரசியலோடு ஏனைய துறைகள்
தொடக்க நாட்கள் முதலாகவே ‘அருஞ்சொல்’ அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுத்துவருகிறது. என்றாலும், வரலாறு, அறிவியல், மருத்துவம், இலக்கியம் என்று பல்வேறு துறைசார் கட்டுரைகளும் அதில் இடம்பெற்றுவருகின்றன. இப்படிப் பல்வேறு துறைகளுக்கும் அளிக்கப்படும் இடம் – பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும் என்று வாசகர்கள் தொடர்ந்து கூறிவந்தனர்.
2024 மக்களவைத் தேர்தல் முடிந்ததும், இதற்கான ஏற்பாடுகளைச் செய்யலாம் என்று ஆசிரியர் குழுவினர் சில மாதங்கள் முன்பே முடிவு எடுத்திருந்தோம். இப்படிப் பல துறைகளுக்கும் இடம் அளிக்கும்போது முன்னதாக இணையதளம் திட்டமிட்டிருந்த ‘அன்றாடம் ஒரு கட்டுரை’ எனும் வரையறையைக் கடப்பதும் புதிய வடிவம் ஒன்றுக்கு இடம்பெயர்வதும் அவசியம் ஆகிறது.
இனி ஞாயிறுதோறும் ‘அருஞ்சொல்’
இந்த அடிப்படையில் வார இதழாகப் புதிய வடிவம் கொள்கிறது ‘அருஞ்சொல்’. இனி ஞாயிறுதோறும் ‘அருஞ்சொல்’ வெளியாகும். அதேசமயம், அன்றாடம் ‘அருஞ்சொல்’லை ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸப் என்று சமூக வலைதளங்கள் மூலம் பின்தொடரும் வாசகர்களுக்கு தினசரி ஒரு கட்டுரை என்று வழக்கம்போல முக்கியமான கட்டுரைகள் அவர்கள் செல்பேசியை வந்தடையும்.
இந்த ஏற்பாடு வாசகர்களுக்குச் சுடச்சுட கட்டுரைகளைக் கொடுக்க கூடுதல் வழிவகுக்கும் என்பது இதன் சிறப்பு அம்சம். ஏனென்றால், அன்றாடம் ஒரு கட்டுரையை மட்டும் வெளியிடுகையில், சில சமயங்களில் கட்டுரைகளை இரண்டு மூன்று வாரங்கள் வரை காத்திருப்பில் வைத்து வெளியிடும் சூழல்கூட நேரிடுகிறது. இனி அந்தந்த வார விவகாரங்களை அந்தந்த வாரத்திலேயே வாசகர்கள் வாசிக்க முடியும். அதேபோல, பல புதிய துறை விஷயங்களுக்குத் தளத்தில் இடம் அளிக்கவும் முடியும். ஜூன் 2 முதலாக தளத்தின் தோற்றம், செயல்பாட்டிலும் மேம்பாட்டை வாசகர்கள் பார்க்க முடியும். நன்றி!
- சமஸ், ஆசிரியர்
12
2
பின்னூட்டம் (3)
Login / Create an account to add a comment / reply.
Nasarbruno 6 months ago
கல்லூரி நாட்களிலிருந்து உங்கள் அரசியல் கட்டுரைகளின் வாசகராக இருந்தும் வருகின்றேன். தொடரட்டும் வாழ்த்துகள்.
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.
VIJAYAKUMAR 6 months ago
தமிழ் இதழியலில் மிக முக்கியமான பங்களிப்பைச் செய்கிறது அருஞ்சொல். மிக தைரியமான விமர்சனக் கட்டுரைகள், பொதுக் கட்டுரைகள், அறிஞர் பலரை தமிழுக்குக் கொண்டுவந்திருக்கிறீர்கள். உங்கள் பணி தொடர்ந்து சிறக்க வாழ்த்துக்கள். ஒரு சிறு விளம்பர இடையீடுகூட இல்லாமல், சார்பெடுக்காமல் முற்றிலும் சமூக நோக்கில் ஓர் இதழ் நடத்தப்படுவது சாதாரண காரியமல்ல. அருஞ்சொல் குழுவுக்கு நன்றி.
Reply 2 0
Login / Create an account to add a comment / reply.
Mohiddeen Harsath 6 months ago
நல்வாழ்த்துகள்.
Reply 2 0
Login / Create an account to add a comment / reply.