தலையங்கம், அரசியல், கூட்டாட்சி 3 நிமிட வாசிப்பு
தன்னிலை உணர வேண்டும் காங்கிரஸ்
அடுத்தடுத்து அதிர்வுகளைச் சந்தித்த 'இந்தியா கூட்டணி'க்கு அருமையான ஆரம்பத்தைக் கொடுத்திருக்கிறார் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்.
பாஜகவை எதிர்கொள்ளும் விதமாக 28 எதிர்க்கட்சிகளின் கூட்டணியாக அமைக்கப்பட்ட இந்தியா கூட்டணி சென்ற ஒரு வாரத்தில் பெரும் சரிவுகளைச் சந்தித்தது. தலைநகர் டெல்லியிலும் பஞ்சாபிலும் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி தரப்பிலிருந்து முதல் அதிருப்தி வெளியானது.
வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட முடிவெடுத்துள்ளதாக அடுத்து அறிவித்தார் அக்கட்சியின் தலைவரும் வங்கத்தின் முதல்வருமான மம்தா பானர்ஜி. பிஹாரில் ஆட்சியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் இந்தியா கூட்டணியிலிருந்து விலகி பாஜகவோடு சேர்ந்து ஆட்சி அமைக்கும் முடிவை முதல்வர் நிதிஷ்குமார் அடுத்து அறிவித்தார்.
சீட்டுகள் சரிவது போன்று சரசரவென்று சரிவுச் செய்திகள் தொடர்ந்து வெளியாகிவந்த நிலையில்தான், உத்தர பிரதேசத்தில் காங்கிரஸுக்கு 11 தொகுதிகளை ஒதுக்கி அறிவிப்பை வெளியிட்டார் அகிலேஷ் யாதவ்.
உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!
நாட்டிலேயே அதிக மக்கள்தொகையைக் கொண்டதும், 543 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவைக்கு 80 உறுப்பினர்களை அனுப்புவதுமான உத்தர பிரதேசம் இன்று பாஜகவின் கோட்டையாக இருக்கிறது. 2014, 2019 இரு தேர்தல்களிலும் பாஜக வெற்றிக்கு முக்கியமான பங்கு வகித்த மாநிலம் இது. 2014இல் 73 இடங்களையும் 2019இல் 64 இடங்களையும் பாஜக கூட்டணி இங்கு வென்றதோடு, 2019இல் 49.98% வாக்குகளையும் அள்ளியது.
மூன்றாவது முறையாக ஆட்சியை வசமாக்க உத்தர பிரதேசம் பாஜகவுக்கு மிக முக்கியமான மாநிலம். ஒட்டுமொத்த இந்தி மாநிலங்களிலும் போக்கை உருவாக்கும் மாநிலமும் இது. பாஜகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடை போட இந்தியா கூட்டணிக்கும் உத்தர பிரதேசம் முக்கியமான மாநிலம்.
சமாஜ்வாதி கட்சி இங்கு பாஜகவுக்கு அடுத்த நிலையில் உள்ளது. காங்கிரஸுக்கு ஒருகாலத்தில் வலுவான களமாக இருந்த உத்தர பிரதேசம் கடந்த பத்தாண்டுகளில் பெரும் வீழ்ச்சி நிலமாகிவிட்டது. 2019 மக்களவைத் தேர்தலில் சோனியா காந்தி மட்டுமே அங்கு வெல்ல முடிந்தது. 6.36% ஆக அதன் வாக்கு வங்கி சரிந்தது. அடுத்து வந்த 2022 சட்டமன்றத் தேர்தலில் 399 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் வெறும் இரண்டு இடங்களில் மட்டுமே வென்றது; குறிப்பாக, 387 தொகுதிகளில் டெபாசிட் தொகையை இழந்தது. வாக்கு வங்கி மேலும் வீழ்ந்து 2.4% ஆனது.
சமீபத்திய ஐந்து மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சியை காங்கிரஸ் மோசமாகக் கையாண்டதன் வாயிலாக இரு கட்சிகளுக்கும் இடையிலான உறவு மோசம் ஆகியிருந்தது. வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கூடுதலான தொகுதிகளைக் கேட்பதாகச் சொல்லி சமாஜ்வாதி தரப்பிலிருந்து கசப்பான சமிக்ஞைகளும் வெளியாயின.
உத்தர பிரதேசத்தில் கூட்டணியிலிருந்து சமாஜ்வாதி வெளியேறியிருந்தால் ஈடாக்க முடியாத சேதம் உருவாகியிருக்கும். பக்கத்து மாநிலமான பிஹாரில் நிதிஷ் குமார் பாஜக பக்கம் திரும்பியதன் விளைவாக இந்தியா கூட்டணியின் கதை இனி அவ்வளவுதான் என்ற செய்திகள் பரப்பப்பட்ட அதே நாளில் அகிலேஷ் யாதவ் காங்கிரஸுடனான கூட்டணியை வலுப்படுத்தும் விதமாக காங்கிரஸுக்கு 11 தொகுதிகளை அறிவித்து எதிர்மறைச் செய்திகளுக்கு அணை போட்டது நல்ல வியூகம். சமாஜ்வாதி தாராள மனதுடன் நடந்துகொண்டிருப்பதாகவே சொல்ல வேண்டும். காங்கிரஸ் இதை ஏற்க வேண்டும்.
பாஜகவை முழு நேரத் தேர்தல் இயந்திரமாக மாற்றியுள்ளதோடு, ஆட்சியின் ஒவ்வொரு நகர்வையும் தேர்தலோடு பிணைந்ததாகச் சிந்திக்கும் பிரதமர் மோடியைக் களத்தில் சாவதானமாக எதிர்கொண்டுவிட முடியும் என்று எண்ணினால் அது மடத்தனம். உத்தேச வேட்பாளர் பட்டியலையே சில மாதங்களுக்கு முன் கசியவிட்டது பாஜக. அயோத்தி ராமர் கோயில் பிராண பிரதிருஷ்டை அதன் தேர்தல் பிரச்சார ஆரம்பம் என்றே கொள்ள வேண்டும்.
தேர்தலுக்கு 90 நாட்கள்கூட இல்லாத நிலையில், இன்னமும் தொகுதிப் பங்கீட்டையே இந்தியா கூட்டணி முடிக்காதது, பொதுச் செயல்திட்டத்தை உருவாக்காதது, பிரச்சார உத்திகளை வகுக்காதது என்று பல வகைகளிலும் தீவிரச் செயல்பாடுகள் ஏதுமின்றி தலைவர்கள் கூடிக் கலைந்தது கூட்டணியில் உள்ள பல கட்சிகளையும் பதற்றத்தில் தள்ளியது இயல்பானது.
காங்கிரஸ்தான் பெருமளவில் இந்தியா கூட்டணியின் மெத்தனச் செயல்பாட்டுக்குப் பொறுப்பேற்க வேண்டும். தொகுதிப் பங்கீடுகூட இன்னமும் முடிக்கப்படாதது தலையாய சிக்கல்.
வங்கத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் 2019 தேர்தலில் வெறும் 2 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வென்றது; ஒரு இடத்தில் இரண்டாம் இடம் வந்தது. அங்கே 3 தொகுதிகளை காங்கிரஸுக்கு ஒதுக்க முன்வந்தது திரிணமூல் காங்கிரஸ். இதை காங்கிரஸ் ஏற்க மறுத்தது. தவிர, முதல்வர் மம்தாவுடன் பகையுறவைப் பராமரிக்கும் காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரியின் அணுகுமுறையும் திரிணமூல் காங்கிரஸுக்கு கடுப்பைத் தந்தது. நடைப்பயணம் மேற்கொண்டுவரும் ராகுல் காந்தி தன் மாநிலத்தைக் கடக்கும்போதும் தன்னிடம் இதுகுறித்து ஒரு வார்த்தைகூட பேசவில்லை என்ற வருத்தத்தையும் அதிருப்திப் பட்டியலில் மம்தா இணைத்தார்.
எல்லாமே காங்கிரஸின் அணுகுமுறையில் உள்ள சிக்கல்கள்தான். நாடு தழுவி அன்பை விதைக்கும் பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி மம்தாவை நேரில் சென்று சந்தித்திருந்தால் பிரச்சினைக்கு முடிவு கட்டியிருக்கலாம்; குறைந்தபட்சம் செல்பேசி வழியாகவேனும் பேசியிருக்கலாம். எப்போது சுல்தான் அணுகுமுறை மாறும்?
2019 மக்களவைத் தேர்தலில் 421 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸால் 52 இடங்களையும், 19.7% வாக்குகளையும் மட்டுமே பெற முடிந்தது. 148 இடங்களில் அது டெபாசிட் இழந்தது. குடும்பத்துக்கு கோட்டை போன்று விளங்கிய அமேதியில் ராகுல் காந்தி தோற்றார். முன்னாள் முதல்வர்கள் 9 பேர் மோசமான தோல்வியைத் தழுவினர். இந்த இடத்தில்தான் நாட்டின் பழம்பெரும் கட்சியை நிறுத்தியுள்ளார்கள் இன்றைய காங்கிரஸ் தலைவர்கள். இந்தத் தன்னிலையை அவர்கள் உணர வேண்டும்.
வரவிருக்கும் 2024 தேர்தலில், குறைந்தது 150 தொகுதிகளிலேனும் கட்சி வெல்ல வேண்டும் என்று காங்கிரஸுக்கு ஓர் இலக்கு இருந்தால், பாஜகவை நேரடியாக எதிர்கொள்ளும் மாநிலங்களில் எதிரியை வீழ்த்த அது வியூகம் அமைத்துப் பணியாற்ற வேண்டும். கூட்டணிக் கட்சிகள் மீது அளவுக்கு அதிகமாக தன்னுடைய சவாரி சுமையை அது ஏற்றினால், கசப்புதான் மிஞ்சும். நிதிஷ் குமார் வெளியேறியது இந்தியா கூட்டணிக்குப் பேரிழப்பு இல்லை; ஆனால், மம்தா சுட்டிக்காட்டுவது மிக முக்கியமான நடத்தைச் சிக்கல்.
காங்கிரஸ் தன்னுடைய மனதை மேலும் விசாலமாக்க வேண்டும்; தொகுதிப் பங்கீடு தொடங்கி பிரச்சார வியூகம் வரை எல்லாப் பணிகளையும் முடுக்கிவிட வேண்டும். கூட்டணியில் எல்லோரையும் அரவணைத்தபடி காங்கிரஸ் தலைவர்கள் தேர்தல் களத்தில் கையோடு இறங்க வேண்டும்!
தொடர்புடைய கட்டுரைகள்
இந்தியா கூட்டணியால் பாஜகவை வெல்ல முடியுமா?
மோடிக்கு சரியான போட்டி கார்கே
காங்கிரஸ் குறிவைக்கும் 255 தொகுதிகள்
14 ஊடகர்களைப் புறக்கணிப்பது ஏன்?
உதயமாகட்டும் கூட்டாட்சி இந்தியா
2024: யாருக்கு வெற்றி?
மாநிலக் கட்சிகளே எதிர்காலத்தைத் தீர்மானிக்கப்போகின்றன
பாஜக எப்படி வெல்கிறது? முதல்வர்களைக் கவனியுங்கள்!
மோடியை வீழ்த்த வரலாற்றிலிருந்து ஒரு பாடம்
2024 பாஜக வெற்றி நிச்சயமில்லை
3
1
பின்னூட்டம் (1)
Login / Create an account to add a comment / reply.
Sundar Gopalakrishnan 10 months ago
நல்ல கட்டுரை. காங்கிரஸ் செய்துவரும் தவறுகளை மிகச் சரியாகவே சுட்டிக்காட்டியுள்ளார் சமஸ். பாஜகவை எப்படி வீழ்த்துவது என்பதைப் பற்றித்தான் காங்கிரஸ் யோசிக்க வேண்டுமே தவிர, தனக்கு எத்தனைத் தொகுதிகளைக் கூட்டணிக் கட்சிகள் ஒதுக்குகின்றன என்பதைக் குறித்துக் கவலைப்படக் கூடாது. அதே போல காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி தேர்தலில் வெற்றிபெற்றால் மல்லிகார்ஜுன கார்கேவையே பிரதமராகத் தேர்ந்தெடுக்கலாம்.
Reply 1 0
Login / Create an account to add a comment / reply.