கட்டுரை, தலையங்கம் 5 நிமிட வாசிப்பு

திமுக எதிர்கொள்ளும் தார்மீக சவால்

ஆசிரியர்
28 Mar 2022, 5:00 am
3

உள்ளாட்சியில் பெரிய வெற்றியை அடைந்திருக்கும் திமுக அதன் மூலம் ஒரு பெரும் சவால் உருவாகி இருப்பதற்கும் முகங்கொடுக்க வேண்டும். முன்னதாக எதிர் வரிசையில்  இருந்தபோதே ஊர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சரிபாதிக்கும் மேலான இடங்களில் திமுக கூட்டணி வென்றது; இப்போது ஆளும் வரிசைக்கு வந்த பிறகு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்லில் ஆகப் பெரும்பாலான இடங்களையும் கைப்பற்றியிருப்பதானது, முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளபடி, அவர் தலைமையிலான இந்த அரசின் நிர்வாகத்துக்கு மக்கள் கொடுத்திருக்கும் நற்சான்று என்றே கருதலாம். அதேசமயம், திமுகவுக்கு உள்ளும் புறமுமாய் இது இரட்டைச் சவால் என்பதையும்  அக்கட்சி உணர வேண்டும். 

முந்தைய அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி நிர்வாகம் முறையாக அணுகப்படவில்லை;  பெரும் பகுதியான காலகட்டம் அலுவலர்களைக் கொண்டே நிர்வாகத்தை அது நடத்திவந்தது. ஜனநாயகத்துக்கும், கூட்டாட்சிக்கும், மக்களுடைய பிரதிநிதித்துவத்துக்கும் இது பெரும் கேடு. இதனால் ஏற்பட்ட மோசமான விளைவுகளை ஊரக – நகர்ப்புறக் கட்டமைப்பில் ஏற்பட்டிருக்கும் தேக்கமாகத் தமிழகம் சுமக்கிறது. மாநிலத்தின் பெருவாரியான பகுதிகளில் கொசுப் படையெடுப்பு ஒரு தீவிரமான பிரச்சினையாக உருவெடுத்திருப்பது அதன் வெளிப்பாடுகளில் ஒன்று.

விரிந்துகொண்டே இருக்கும் ஊர்க் கட்டமைப்பில் திட்டமிட்ட நிர்வாகம் மற்றும் சீர்திருத்தத்தை மக்கள் பிரதிநிதிகள் வழியாகவே புதிதாக கற்பனைசெய்ய முடியும். அலுவலர்கள் வழியான நிர்வாகம் ஏற்கெனவே உள்ள கட்டமைப்பைப் பராமரிக்க உதவலாமே தவிர, தொலைநோக்கிலான சீர்திருத்தங்களுக்கு வலு  தராது. உள்ளாட்சித் தேர்தலை நடத்தினால், தாங்கள் தோற்றுப்போவோம் எனும் அச்சத்தாலேயே அதிமுக அரசு இந்தத் தேர்தலை எவ்வளவு காலம் ஒத்திப்போட முடியுமோ அவ்வளவு காலம் இழுத்தடித்தது. பிறகு, நீதிமன்ற நிர்பந்தத்தால் ஊர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான நடவடிக்கையை அது எடுத்தது;  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் துணிவு அக்கட்சிக்கு இருக்கவில்லை. 

ஒரு நாடு அளவுக்குப் பரந்து விரிந்த தமிழகத்தின் உள்ளாட்சி நிர்வாகம் முடக்கப்படுவதானது அரசியல் அவலம். இப்போது ஒருவழியாக மாநிலம் முழுமைக்கும் உள்ளாட்சி நிர்வாகிகள் அமைந்திருக்கின்றனர். இடைப்பட்ட காலகட்டத்தில் தமிழகத்தின் பல நகராட்சிகள்  மாநகராட்சிகளாகவும், பல பேரூராட்சிகள் நகராட்சிகளாவும் அந்தஸ்தில் ஏற்றம் கண்டிருப்பது, தமிழகம் எவ்வளவு வேகமாக  நகர்மயமாகிவருகிறது என்பதையும், ஊர்கள் எவ்வளவு வேகமாக வளர்ந்துவருகின்றன என்பதையும் நமக்குச் சொல்கின்றன. '21 மேயர்கள், 138 நகராட்சித் தலைவர்கள்; இவர்களில் சரிபாதியினர் பெண்கள்' என்கிற ஒருவரித் தகவல் இன்று தமிழக ஊர்க் கட்டமைப்பின் முன் உள்ள நிர்வாகத் தேவையைக் கணத்தில் கூறிவிட வல்லது.

முக்கியமான கேள்வி என்னவென்றால், வளர்ந்துவரும் ஊர் நிர்வாகத்தின் அந்தஸ்தைப் பெயர் அளவில் உயர்த்தும் நாம், தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கான அந்தஸ்தை எந்த அளவுக்கு உண்மையாகவே உயர்த்தப்போகிறோம்? நகராட்சியாக இருந்த கும்பகோணம் இன்று மாநகராட்சியாக ஆகியிருக்கிறதென்றால் கும்பகோணத்தின்  உள்ளாட்சி நிர்வாகி உலங்கெங்கும் உள்ள ஒரு மேயருக்குரிய தகுதியையும் அதிகாரத்தையும் பெற வேண்டும். இதை உண்டாக்குவது அரசின் பொறுப்பு. 

அரசமைப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட 73, 74 இரு திருத்தங்களும் உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு அரசமைப்பு சார்ந்த அந்தஸ்தை வழங்கி இருக்கின்றன. அதிகாரங்களைப் பெரிய அளவில் இதன் மூலம் உள்ளூர் நிர்வாகங்களுக்கு மாநில அரசுகள் மடை மாற்ற முடியும். உள்ளாட்சி நிர்வாகம் மாநில அரசின் அதிகாரப் பட்டியலில் வருவதால், இதற்கேற்ப சட்டங்களை நிறைவேற்ற வேண்டியது மாநில அரசுகளின் கடமை.

உள்ளாட்சி நிர்வாகத்துக்கு அதிகாரங்களைப் பகிர்வதில் தமிழ்நாடு எப்போதுமே பின்தங்கி இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மாநில அரசை சார்ந்திருக்க வேண்டிய நிலையிலேயே உள்ளூர் நிர்வாகங்கள் இருக்கின்றன. நிர்வாகத் தளத்தில் குஜராத் மற்றும் கேரளத்தோடு ஒப்பிட்டால், தமிழ்நாடு பல மடங்கு இந்த விஷயத்தில் கீழே இருக்கிறது. வரலாற்றுரீதியாகவே குஜராத் இந்த விஷயத்தில் மேம்பட்டு இருக்கிறது. 1800 பிற்பகுதிகளில் இருந்தே அன்றைய பம்பாய் மாகாணத்தின் பல சட்டங்கள் இதற்கு முன்னோடியாக அமைந்தன. நீர் வழங்கல், கழிவுநீர் வடிகால்கள், பொதுச் சுகாதாரம், சாலைகள், விளக்குகள் போன்ற சின்னச் சின்ன விஷயங்களுக்குக்கூட மாநில அரசின் தயவை எதிர்நோக்கி இருக்கும் நிலையைப் பெருமளவில் குஜராத் கடந்திருக்கிறது. சுயாதீன உள்ளாட்சி நிர்வாகத்தில் கேரளம் மேம்பட்ட இடத்தில் இல்லை என்றாலும்,  உள்ளாட்சி நிர்வாகக் கூட்டங்களில் பெருந்திரளான மக்கள் பங்கேற்பை உருவாக்கியதில் அது முன்னோடி மாநிலம். இவற்றையெல்லாம் பல மடங்கு தாண்டி சுயாதீனமாகவும் உயிரோட்டமாகவும் உள்ளாட்சி நிர்வாகம் செயல்படத்தக்க வகையில் ஒரு முன்மாதிரியை உருவாக்க தமிழகத்தால் முடியும்.

அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் தம்முடைய மேயர்களுக்கு எத்தகைய நிதிச் சுதந்திரத்தையும் அதிகாரங்களையும் வழங்கியிருக்கின்றன; ஐரோப்பாவின் வளர்ச்சியில் உள்ளாட்சி நிர்வாகங்களின் பங்கு என்பதைக் கவனித்தால் அங்கிருந்து தமிழகம் இதற்கான இந்திய முன்மாதிரியை உருவாக்க முடியும்.

இந்தியக் கூட்டாட்சிக்கான சித்தாந்த முன்னோடி அண்ணாவால் தொடங்கப்பட்ட கட்சியின் தலைவர் என்பதோடு, இன்றைக்கு இந்தியாவில் கூட்டாட்சிக்கான உரத்தக் குரல்களில் ஒருவராகவும் உருவெடுத்திருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். கூட்டாட்சி என்பது ஒன்றிய அரசிடமிருந்து மாநில அரசு அதிகாரங்களைக் கேட்டுப்பெறுவது மட்டும் இல்லை; மாநில அரசிடமுள்ள அதிகாரங்களை உள்ளூர் நிர்வாகங்களுக்குப் பகிர்வதும் ஆகும். கடைசி மனிதருக்குமான அதிகாரம் என்பது அப்படிதான் சாத்தியம்.

சமீப காலமாக முதல்வர் பேசிவரும் 'திராவிட மாதிரி' கொண்டிருக்கும் ஓட்டைகளில் இதுவும் ஒன்று. கூட்டாட்சியைத் தொடந்து பேசிவரும் திராவிடக் கட்சிகள் உள்ளாட்சிகளுக்கான அதிகாரத்தை முறைப்படி பகிரவில்லை என்கிற இழுக்குக்கு முடிவுகட்டப்பட வேண்டும். அரசியலர்களுக்கு இணையாக இந்த விவகாரத்தில் அதிகார வர்க்கத்துக்கும் பொறுப்பு உண்டு. இந்தியா முழுமையுமே உள்ளாட்சி நிர்வாகங்களுக்கான அதிகார வரையறை ஓர் எல்லைக்குள் குறுக்கப்பட்டிருக்க அதிகார வர்க்கத்தின் குறுக்கீடுகளும் ஒரு காரணம் என்ற குற்றச்சாட்டு உண்டு. தமிழகத்தில் இந்த அரசு இப்போது சரியான அதிகாரிகளை சரியான இடத்தில் அமர்த்தியிருக்கும் சூழலில், அதிகார வர்க்கமும் தன்னுடைய கடந்த காலத் தவறுக்குப் பிராயச்சித்தம் தேட வேண்டும்.

தமிழக முதல்வர் ஒரு வரலாற்றுத் தருணமாக இதைக் கருதலாம். ஒன்றிய அரசிடமிருந்து அதிகாரங்களைப் பெற கூட்டாட்சி முழக்கத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தும் ஓர்  அரசியல் கட்சிக்கு இது ஒரு தார்மீக சவாலும் கடமையும் ஆகும். மேலும், இந்திய அளவில் மாறிவரும் அரசியல் சூழலுக்கு ஏற்ப தன்னுடைய சித்தாந்ததைப் புதுப்பிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் திமுக கீழே தன்னுடைய கட்சியினருக்குப் புதிய அரசியல் நிர்வாகத்தைக் கற்பிப்பதற்கான வாய்ப்பாகவும் இந்த மாற்றம் அமையக்கூடும். 

 

 

 

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.

4

3





பின்னூட்டம் (3)

Login / Create an account to add a comment / reply.

Nandakumar S   3 years ago

அதிகாரப்பரவலும் ஒரு சமூக நீதியே ! 1994 ல் புதிய உள்ளாட்சிகள் அமைக்கப்பட்ட காலம் தொட்டே அதனை வலுப்படுத்துவதில் அடுத்தடுத்து அமைந்த தமிழக அரசுகள் தயக்கம் காட்டி வருகின்றன. அதிகாரக்குவிப்பினை நோக்கி இந்தியாவை நகர்த்திட முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதற்குத் தமிழகம் சரியான தீர்வினை கொடுக்கமுடியுமென்றால் அது மாநில சுயாட்சியோடு இணைந்த உள்ளாட்சிக்கான தன்னாட்சியினை நோக்கிய முன்னெடுப்புகளாகத்தான் இருக்க முடியும். ஜனநாயக ரீதியிலான இந்த செயல்பாட்டிற்கு மக்கள் துணை நிற்பார்கள். அதிகாரப்பரவலும் ஒரு சமூக நீதியே !

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

J. Jayakumar   3 years ago

We have to take into account the calibre, integrity and educational background of our elected people! We can't simply equate them with European counterparts!

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

A D Sankar Ganesh   3 years ago

அதிகார பரவலாக்கல் மற்றும் நிதி நிர்வாக சுதந்திரம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கினால் மட்டுமே உண்மையான மக்கள் பிரதிநிதித்துவ ஜனநாயகம் மேம்படும் மேலும் புதிய ஆழுமையுடைய நல்ல மக்கள் பிரதிநிதிகள் உருவாகிட வழிவகுக்கும் உள்ளூர் மக்களின் பங்களிப்பு மற்றும் பொருப்புடைமை கூடிட வழிவகுக்கும்

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

சிந்தனை வளம்ஜனரஞ்சகப் பத்திரிகைகூத்தாடிதிருத்தி எழுதப்பட வேண்டிய தீர்ப்புகள்அனுபவ அடிப்படைபாஜக உள்ளுக்குள் எதிர்கொள்ளும் எதிர்க்குரல்கள்மாலி அல்மெய்டாமைய நிலத்தில் ஒரு பயணம்மஹிரா சர்ஃபராஸ் கட்டுரைமுதல்வர் கடிதம்மக்களவை பொதுத் தேர்தல் - 2024ஜாம்பியாjustice chandruசகோதரத்துவம்காதலிரத்த அணுக்கள்ஆண் பெண் உறவு அராத்துஸ்ரீஹரிக்கோட்டாவின்னி: இணையற்ற இணையர்!உங்களுடைய மொபைல் உளவு பார்க்கப்படுகிறதா?கல்வித் துறைகுழப்பம்ஹரியாணா: காங்கிரஸுக்குப் பாடம்!பைஜூஸ்எம்.ஜி.ஆர்வேலையில் ஜொலிப்பது எப்படி?நிலத்தடிநீர்அருஞ்சொல் பஜாஜ்பிரபஞ்சம்இடி அமின்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!