தலையங்கம், அரசியல், பொருளாதாரம், நிர்வாகம், கூட்டாட்சி 5 நிமிட வாசிப்பு

வரப்புத் தகராறா மக்களின் வதை?

ஆசிரியர்
25 Dec 2023, 5:00 am
4

பேரிடர் தருணத்தில்கூட ஈவிரக்கமற்ற அரசியல் சண்டைகளில் இறங்குவோரை எப்படிப் பார்ப்பது?

தமிழகம் 2023இல் எதிர்கொண்ட வெள்ள பாதிப்புகள் இன்னமும் முழுமையாகப் பொதுவெளியின் கவனத்துக்கு வரவில்லை. மாநிலத்தின் தலைமைச் செயலர் இதுவரை அறிவித்திருப்பதைக் காட்டிலும் பல மடங்கு அளவுக்கு சேதங்கள் நிகழ்ந்திருப்பதைக் களச் செய்திகள் சொல்கின்றன.

வடக்கே  சென்னை பெருவெள்ளத்தை எதிர்கொண்ட அடுத்த இரு வாரங்களில் தெற்கே நெல்லை, தூத்துக்குடி பெருவெள்ளத்தில் சிக்கியது பெரும் சோகம். எந்த ஓர் அரசு நிர்வாகமும் அடுத்தடுத்த இத்தகைய தாக்குதல்களின்போது நிலைகுலையும்.

மக்களின் வதைகளை விவரிக்க சொற்களே இல்லை. 

பெருநகரம் பாதிப்புக்கு ஆளாகும்போதேனும் ஊடக வெளிச்சத்தில் பாதிப்புகள் உடனே வெளியே வரும். கிராமங்கள் பாதிக்கப்படும்போது பெரும்பாலும் துயரங்கள் அத்தனையும் அங்கேயே புதையுண்டு போகும். 

பெருநகரத்தில் உள்ள ஒருவருடைய வீடு மூழ்கும்போது அவருடைய உடைமைகளை அவர் இழக்கிறார்; கிராமத்தில் ஒருவருடைய வீடு மூழ்கும்போது அவருடைய உடைமைகளோடு வாழ்வாதாரமான கால்நடைகளையும் பறிகொடுக்கிறார். இரண்டு மாடுகள் அல்லது பத்து ஆடுகளை வைத்துக் காலத்தை ஓட்டும் குடும்பங்கள் எத்தனையெத்தனை? பல குடும்பங்களை இந்த வெள்ளம் அகதிகளின் நிலைக்குத் தள்ளியிருக்கிறது.

நல்ல இதழியலை ஆதரியுங்கள்… இது உங்கள் ஜனநாயகக் கடமை!

உங்கள் வாழ்வையே மாற்றிவிடும் வல்லமை மிக்கது நல்ல எழுத்து. பலருடைய அர்ப்பணிப்பு மிக்க உழைப்பின் விளைவாகவே நல்ல இதழியல் சாத்தியம் ஆகிறது. பல்லாயிரம் மாணவர்களால் வாசிக்கப்படும் ‘அருஞ்சொல்’ வளர பங்களியுங்கள். கீழே உள்ள சுட்டியைச் சொடுக்கினால் சந்தா பக்கத்துக்குச் செல்லலாம் அல்லது 63801 53325 எனும் எண்ணுக்கு ஜிபே உள்ளிட்ட யுபிஐ ஆப் வழியாகவும் நீங்கள் பங்களிக்கலாம்.

தமிழக அரசு அறிவித்திருக்கிற நிவாரணத் தொகை உண்மையில் பாதிப்புகளிலிருந்து ஒருவர் மீண்டெழ போதவே போதாது. ரூ.8,000 தொகையை வைத்துக்கொண்டு, இடிந்துபோன ஒரு குடிசையைத்தான் திரும்ப எழுப்பிவிட முடியுமா என்ன? ஏதோ, அரசு உடனடியாக ஒரு தொகையைக் கொடுத்து உயிர் மூச்சு கிடைக்க வழிவகுக்கிறது. அவ்வளவுதான்.

நூறாண்டுகளுக்குப் பின் பெய்யும் மழை, ஐம்பதாண்டுகளுக்குப் பின் ஏற்படும் வெள்ளம் என்பன போன்ற வர்ணனைகள் எல்லாம் அளவுகளில் சரியாக இருக்கலாம்; சேதங்களுக்கு யார் பொறுப்பேற்பது? அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். மக்கள் சும்மா கேட்கவில்லை; கட்டிய வரியிலிருந்துதான் கேட்கிறார்கள்.

தமிழக அமைச்சர் உதயநிதி ‘யாருடைய அப்பன் வீட்டு பணத்தையும் கேட்கவில்லை; தமிழ்நாட்டின் பணத்தைத்தான் கேட்கிறோம்’ என்று ஒரு பேட்டியில் கூறிய சொற்களும் தொனியும் தவிர்த்திருக்க வேண்டியவை. மாநில அரசின் சார்பில் பேசக்கூடிய விஷயத்தில் ஒரு தலைவர் வெளிப்படுத்த வேண்டிய மொழி இது அல்ல. ஆனால், இந்த வெள்ளத்தை ஒட்டி திமுகவும் பாஜகவும் நடத்திக்கொண்டிருக்கும் அரசியல் யுத்தத்தின் ஒரு பகுதியாகத்தான் இதைப் பார்க்க வேண்டும். ஏனென்றால், வெள்ளத்தில் மக்கள் தத்தளித்துக்கொண்டிருந்த நாட்களில்கூட மிக மோசமான வெறுப்பை இணையத்தில் பாஜகவினர் கக்கிக்கொண்டிருந்தனர்; தமிழக அரசு நிதியுதவி கேட்டது தொடர்பான கேள்விக்கு 'மத்திய அரசு ஒன்றும் ஏடிஎம் அல்ல' என்ற நிதியமைச்சர் நிர்மலாவின் பொறுப்பற்ற  சொற்கள் எரிதீக்கு எண்ணெய் ஆனது. அதற்கான எதிர்வினையாகவே உதயநிதி பேசியிருந்தார்.

பிரதமர் மோடியைத் தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார். நேரிலேயே வெள்ள பாதிப்புகளை விளக்கினார். மாநிலத்தின் தேவைகளை அப்போது அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து, ‘தேசியப் பேரிடராக இந்த வெள்ளப் பாதிப்புகளை அறிவிக்க வேண்டும்’ என்று தமிழக அரசு கேட்டது மிக அத்தியாவசியமான ஒரு கோரிக்கை.

அடுத்த சில நாட்களில் செய்தியாளர் சந்திப்பில், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா இதுகுறித்த கேள்விகளுக்குப் பதில் அளித்தார். உதயநிதியின் பேச்சுக்கு எதிர்வினையாற்றிய அவர், அதோடு சேர்த்து ‘தேசியப் பேரிடர் என்று ஒரு முறைமையே இல்லை’ என்று பேசியபோது வெளிப்படுத்திய தொனியும் அந்த அரை மணியில் டெல்லி செய்தியாளர்கள் வெள்ளம் தொடர்பாகக் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் அரசியல் பேச்சாக அளித்த பெரும்பான்மை பதில்களும் எந்த வகையிலும் அவர் வகிக்கும் பதவிக்கு கண்ணியமானது இல்லை. 

நிர்மலா குறிப்பிட்டது உண்மை. ஒரு பேரிடரை ‘தேசிய பேரிடர்’ என்று அறிவிக்க சட்டப்படி எந்த ஏற்பாடும் இந்தியாவில் இல்லை. ஆனால், ‘தீவிர இயற்கைப் பேரிடர்’ (Calamity Of Severe Nature) என்று அறிவிக்கும் முறை உள்ளது. பொதுவாக, தேசிய பேரிடர் மேலாண்மைக் கொள்கையின்படி, மாநில அரசுகளே மாநிலப் பேரிடர் நிவாரண நிதி (SDRFs) வழியே பேரிடர் நிவாரணம் வழங்க வேண்டும். ‘தீவிரமான இயற்கைப் பேரிடர்’களுக்கு மட்டுமே தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து கூடுதல் உதவி வழங்கப்படும் (NDRF). இந்த வகையில், ரூ.54,770 கோடியை 2021-22 முதல் 2025-26 வரையிலான காலகட்டத்துக்கு நிதி ஆணையம் ஒதுக்கியிருக்கிறது. 

தமிழக அரசு இப்போது அதைத்தான் கேட்கிறது. ‘தேசியப் பேரிடராக இந்த வெள்ளப் பாதிப்பை அறிவிக்க வேண்டும்’ என்று தமிழக அரசு கோரியதில் எந்தத் தவறும் இல்லை; ஏனென்றால், பல அரசியலர்கள் எளிய மக்களுக்குப் புரிவதற்காக அப்படியான பிரயோகத்தையும் பயன்படுத்துகிறார்கள். ஒரு மாநிலத்தின் வெள்ள பாதிப்பை இந்த வரையறையின் கீழ் ஒன்றிய அரசு அறிவித்தால்தான் அதன் நிதியுதவியை மாநிலம் பெற முடியும். 2015 சென்னை வெள்ளத்தை அப்படி மோடி அரசு அறிவித்தது. 2018இல் கேரளம் இதே அறிவிப்பின் கீழ் நிதியுதவி பெற்றது. இந்த நிதியுதவியெல்லாமும்கூட நேர்ந்த இழப்புக்கு முன் பொருட்டு இல்லை.

உங்கள் வாழ்க்கை முழுவதும் பங்களிக்கக் கூடியது ஒரு நல்ல கட்டுரை.

நல்ல இதழியலை ஆதரியுங்கள். இது உங்கள் கடமை!

63801 53325

இதையெல்லாம் நிர்மலா அறியாதவரா? மிக மோசமாக ‘டெக்னிகாலிடிக்ஸ்’ பேசினார். வார்த்தை விளையாட்டு விளையாடினார். 

மக்களுடைய துயரங்கள் சார்ந்தோ, மாநிலம் எதிர்கொள்ளும் நெருக்கடி சார்ந்தோ துளிப் பரிவு நிர்மலாவிடம் இல்லை. அரசு சம்பந்தப்பட்ட வெள்ளம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பை ஒரு அரசியல் மேடையைப் போன்று அவர் பயன்படுத்தினார். ‘நான் கொடுக்கும் இடத்தில் இருக்கிறேன் - மறுக்கிறேன்’ எனும் அகங்காரத்தை அந்த வார்த்தைகளைச் சொல்லாமலே அவர் வெளிப்படுத்தினார். ‘ரூ.6000 நிவாரணம் தொகை போதுமா?’ என்று கேட்ட செய்தியாளரிடம் அதற்குப் பதில் அளிக்காமல், ‘வங்கியின் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத்தை அளிக்காமல், ஏன் ரொக்கமாகக் கொடுத்தார்கள்?’ என்று அவர் கேட்டது அசட்டையின் உச்சம். 24 மணி நேரத்துக்குள் 93.2 செமீ மழையை எதிர்கொள்ளும் ஓர் ஊரையோ, இப்படிப்பட்ட வெள்ளத்தில் உடைமைகளைப் பறிகொடுத்த ஒரு கிராமவாசியின் நிலையையோ தன் வாழ்வில் ஒரு முறையேனும் அவர் நேரில் கண்டிருப்பாரா என்ற கேள்வி தவிர்க்க முடியாமல் எழுந்தது. தேசியக் கட்சிகளைத் தமிழ்நாட்டு மக்கள் இவ்வளவு வெறுக்கக் காரணம் இந்த மமதை. 

அரசியல் சண்டைகள் போட ஏராளமான கட்சி மேடைகள் இருக்கின்றன. உதயநிதியை அங்கு நிர்மலா எதிர்கொள்ளட்டும். மக்களுடைய வதைகளை அரசியலாட்டக் காய்களாக யாரும் பயன்படுத்திட அனுமதிக்க முடியாது. மாநில அரசு எடுத்த வெள்ளத் தடுப்பு நடவடிக்கை என்ன; இனி முன்னெடுக்கவுள்ள செயல்திட்டம் என்ன; இதற்கெல்லாம் ஒன்றிய அரசின் பங்களிப்பு என்ன? இந்த விவாதங்கள் எல்லாம் முக்கியமானவை. மக்கள் விவாதிக்கத்தான் போகிறார்கள். அதற்கு முன் உங்கள் கடமைகளை முடியுங்கள். மாநில அரசுக்கு நிதி தேவைப்படுவது மக்களுடைய பிரச்சினை. 

பருவநிலை மாறுபாடு உலகளாவிய பிரச்சினையாகிவரும் சூழலில், இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளும் அணுகுமுறையிலும், இது தொடர்பான நடவடிக்கைகளுக்கான நிதி ஒதுக்கீட்டிலும் அரசுகளிடத்தில் பெரும் மாற்றம் தேவைப்படுகிறது. வரிசெலுத்துநர்கள் வாழ்விழந்து பசியில் நிற்கும் நாட்களில் அரசுகளின் சேத மதிப்பீட்டு அறிக்கைகளுக்காகக் காத்திருக்க முடியாது. அரசுப் பணம் மக்களுடைய பணம். மக்களுக்கு எப்போது தேவையோ அப்போது அது அவர்களை வந்தடைந்தாக வேண்டும். அரசினுடைய கொள்கைகளும் சட்ட விதிகளும் அதற்கேற்ப மாற வேண்டும்!

அது நேரமோ, பணமோ...

அறிவுக்குச் செலவிட தயங்காதீர்கள்.
இது உங்கள் ஆளுமை, சமூகம் இரண்டின் வளர்ச்சிக்குமானது!

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.

2

3





பின்னூட்டம் (4)

Login / Create an account to add a comment / reply.

Seyed Bukhari   11 months ago

இந்த கட்டுரையை வாசித்தவுடன் நினைவுக்கு வந்தது நடுநிலை.பாதிப்புகளில் நடுநிலை என்பது சந்தர்ப்பவாதம்.அழுத்தமாய் சொல்வதெனில் வஞ்சகம்.800 ரூபாயை கொடுத்து விட்டு அரசு ஒதுங்கிக் கொள்ளும்.ஆனால் அடித்தட்டில் அழிந்தவனை பற்றிய கவலையோ அக்கறையோ அரசுக்கு இல்லை.மாநில அரசை குற்றப்படுத்தி கட்டுரை துவங்குகிறது.அதிலிருந்து மாநில அரசை விமர்சிக்க தொடங்குகிறது..மக்களின் துயரத்தில் வலியில் ஒன்றிய அரசுகள் பங்கெடுத்தாய் தரவுகளில்லை.அரசியல் ஆதாயத்திற்காக கிள்ளிக் கொடுக்கவும் அள்ளி கொடுக்கவும் செய்திருக்கிறார்கள்.அது பங்கெடுப்பல்ல.நிகர பங்கீட்டு அரசியல் லாபம்.ஆனால் துயரத்தின் வலியை உணர்ந்து உள்ளபடி துடிப்பது மக்களோடு நிற்பது மாநில அரசு.அதை குறிப்பிடாமல் கட்டுரை நகர்கிறது.அத்தோடு அடிபட்டு வலியால் கத்துபவனையும் கத்தாதே என அதட்டுபவனையும் ஒன்றாக்கி வாய்க்கால் தகராறு என தலைப்பிட்டுள்ளது. இதுபோன்ற இருநிலை தான் அபாயகரமானது.கோலும் உடையாமல் பாம்பும் சாகாமல் பார்த்துக் கொள்ளும் அசாத்திய திறமை.இந்த திறமை இதுபோன்ற துயரங்களில் வேண்டாமே!

Reply 2 0

Login / Create an account to add a comment / reply.

Ganeshram Palanisamy   11 months ago

அவர் இம்மாதிரி பேசுவது புதிதல்ல. HALக்கு இல்லாத தகுதி Relianceக்கு இருந்தது என்று ஏற்கனவே கூறியவர்தான்.

Reply 0 0

Login / Create an account to add a comment / reply.

MANOHARAN A   11 months ago

வெங்காயம் விலை 200 தாண்டிய போது நாடாளுமன்றத்தில் இது பற்றி கேட்டபோது நான் வெங்காயம் சாப்பிடுவதில்லை எனவே எனக்கு அது பற்றி தெரியாது என்று ஆணவமாக பதிலளித்தவர் தானே இவர். நிச்சயமாக இவர் மக்களுக்கானவர் அல்ல என்பது என் கருத்து.

Reply 3 0

Login / Create an account to add a comment / reply.

J. Jayakumar   11 months ago

We have a Tamil-speaking Finance minister at Centre. What is wrong in meeting her first and briefing her on the gravity of the situation? In earlier regimes, irrespective of party affiliations, top bosses maintained cordiality and good relationship with powers to get the maximum benefits for their States! Ego shouldn't come in the way of getting things done for your people!

Reply 2 9

Login / Create an account to add a comment / reply.

புதிய நாடாளுமன்றம்ஜிடிபி - வேலைவாய்ப்பு: எது நமது தேவை?பொதுப் போக்குவரத்துசட்டமன்றம்திரை பிம்பங்கள்கற்க வேண்டிய கல்வியா?சகிப்பின்மைநிதிக் கொள்கைமறுசீரமைப்பு திட்டம்டி.டி.கோசம்பிபாரத ரத்னாசெல்போன்புற்றுக்கட்டிகும்பல்ராகுல்விமான ஓட்டிஆட்சியாளர்கள்முகப்பருசுளுக்கிசந்தையில் சுவிசேஷம்உயர்கல்வி வளாகங்கள்நாராயணமூர்த்திமுடி உதிர்வுமனு நீதிவிவேகானந்தர்காவிரி நீர்இந்தியத் தாய்மொழிகளின் தகைமைஇந்திய வணிகம்யோகி ஆதித்யநாத்தேனுகா

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!