தலையங்கம் 4 நிமிட வாசிப்பு

சட்டமன்றத்தில் தொழுகைக்குத் தனி அறையை ஒதுக்குவது ஆபத்தான முன்னுதாரணம்

ஆசிரியர்
09 Sep 2021, 12:00 am
1

ஜார்கண்ட் சட்டமன்ற வளாகத்தில், முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்கள் தொழுகை நடத்துவதற்குத் தனி அறை ஒதுக்கப்பட்டதன் விளைவாக உருவாகியிருக்கும் சர்ச்சை தேவையற்றது; விபரீத விளையாட்டையும் தொடங்கி வைப்பதாகும். உடனடியாக இது பாஜகவின் எதிர்வினைக்கு வழிவகுத்திருக்கிறது. அதே சட்டமன்ற வளாகத்தில் இந்து உறுப்பினர்கள் பிரார்த்தனை நடத்த அனுமன் கோயில் கட்ட வேண்டும் என்று அவர்கள் அமளியில் இறங்கியிருக்கிறார்கள்.

முந்தைய பாஜக ஆட்சிக் காலத்தில் மூன்று மாடிக் கட்டிடமாக ரூ.465 கோடியில் கட்டப்பட்டிருக்கும் ஜார்கண்டின் புதிய சட்டமன்றம் அந்த மாநிலத்துக்கென்று பிரத்யேகமான கலாச்சாரப் பண்புகளைத் தன்னோடு இணைத்துக்கொள்ள முயன்றால் அது வரவேற்கத்தக்கது. பழங்குடிச் சமூகங்களின் தொல் மரபுகளுக்குப் பெயர் பெற்ற மாநிலம் அது. இன்றைய மதச் சம்பிரதாயங்களுக்கு முந்தைய பண்பாட்டுச் செழுமையும் வழக்காறுகளும் அங்கு உண்டு. துரதிர்ஷ்டவசமாக, ஓட்டு அரசியல் நோக்கமே நம்முடைய அரசியலர்களின் எல்லாச் சிந்தனைகளுக்கும் தோற்றுவாய் ஆகிறது. மாநிலத்தை ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் முதல்வர் ஹேமந்த் சோரன், முஸ்லிம் சமூகத்தைக் குளிர்விப்பதாக எண்ணி இப்படி ஓர் அபாய விளையாட்டை ஆரம்பித்திருக்கிறார். 81 உறுப்பினர்களைக் கொண்ட ஜார்கண்ட் சட்டமன்றத்தில் 4 பேர் முஸ்லிம்கள். மாநிலத்தில் ஆட்சியைப் பறிகொடுத்துப் பரிதவித்திருந்த பாஜகவினர் இதை நல்வாய்ப்பாகக் கருதி கையில் எடுத்துக்கொண்டிருக்கின்றனர். சட்டமன்ற வாயிலில் மேளதாளங்களோடு ஆர்ப்பாட்டத்தில் அமர்ந்தவர்கள், அடுத்து சபாநாயகரின் இருக்கையைச் சுற்றி நின்று கோஷம் எழுப்பியிருக்கின்றனர்.

பாஜக இந்த விஷயத்தில் முன்னெடுக்கும் அணுகுமுறை நம்முடைய கவனத்துக்கு உரியது. “முஸ்லிம்கள் தொழுகைக்கென்று அறை ஒதுக்கப்படுவதை நாங்கள் எதிர்க்கவில்லை; மாறாக, இந்துக்களுக்கும் அப்படி ஒரு கோயில் வேண்டும் என்று கேட்கிறோம்” என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் பாபுலால் மராண்டி கூறியிருக்கிறார். நாடு முழுவதும் உள்ள சட்டமன்றங்களையும் நாடாளுமன்றத்தையும் முழுக்க மதமயமாக்குவதற்கான அடிப்படை இது. ஜார்கண்டில் இந்த சர்ச்சை உருவான அடுத்த சில நாட்களிலேயே பிஹார் சட்டமன்றத்திலும் ‘ஹனுமன் சாலிசா’வுக்காகத் தனி இடமும், செவ்வாய்க்கிழமைகளில் தனி நேரமும் ஒதுக்கிட வேண்டும் என்று பாஜக உறுப்பினர் ஹரி பூஷண் தாக்கூர் பச்சால் கோரிக்கை விடுத்திருக்கிறார். அந்தப் பக்கத்திலும் பாட்டுக்குப் பஞ்சம் இல்லை. உத்தர பிரதேசச் சட்டமன்றத்திலும் முஸ்லிம்கள் தொழுகை நடத்த தனி அறை ஒதுக்கிட வேண்டும் என்று சமாஜ்வாதி உறுப்பினர் ஹாஜி இர்பான் சோலங்கி கோரிக்கை விடுத்திருக்கிறார். இது எங்கே போய் முடியும் என்பது கணிக்க முடியாதது இல்லை. இந்திய நாடாளுமன்றம் இப்போது புதிய கட்டுமானத்தில் இருக்கிறது. மிகத் தவறான முன்னுதாரணத்தை உருவாக்குகிறது ஜார்கண்ட் அரசு. 

முதல்வர் ஹேமந்த் சோரன் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, தொழுகைக்குத் தனி அறை ஒதுக்கும் முடிவைக் கைவிட வேண்டும்; இன்னும் சொல்லப்போனால், ஜார்கண்ட்டைச் சேர்ந்த முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்களே தாமாக முன்வந்து இந்த ஒதுக்கீட்டை ரத்துசெய்யும் நடவடிக்கைக்கு முன்னிற்க வேண்டும். அரசியலிலும் ஆட்சி நிர்வாகத்திலும் மதம் ஒன்றுகலப்பதன் கொடூர விளைவுகளை நெடுங்காலமாக அனுபவித்ததன் விளைவாகவே பல முற்போக்கு நாடுகள் இரண்டையும் போதுமான அளவுக்குத் தள்ளி வைத்திருக்கின்றன. இந்தியா இதற்குக் கொடுத்திருக்கும், கொடுத்துக்கொண்டிருக்கும் விலை ஏற்கெனவே அதிகம். அதனாலேயே இத்தகு அமைப்புகளை நம்முடைய முன்னோர்கள் தவிர்த்திருக்கின்றனர்.

பொது இடங்களில் பிரார்த்தனைக்கு என்று ஓர் அறையை நாம் சிந்திப்போம் எனில், பிரிட்டன் முன்னுதாரணத்தைப் பின்பற்றலாம். பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பிரார்த்தனைக்கு என்று ஒரு பொது அறை உண்டு. அந்த அறை எந்தக் குறிப்பிட்ட சார்பும் இல்லாதது. எல்லா மதங்களுக்கும், எல்லா நம்பிக்கைகளுக்கும், எல்லாச் சிந்தனைகளுக்கும் இடம் அளிப்பது. முக்கியமாக, இறை மறுப்பாளர்களுக்கும் சிந்தனைகளுக்கும்கூட இடம் அளிப்பது. இத்தகைய மாதிரியும்கூட இந்தியாவைப் பொறுத்த அளவில் ஆட்சிமன்றங்களுக்குத் தேவை இல்லை. ஒரு பொது இடத்தை எல்லோருக்குமானதாகச் சிந்திக்கும் ஒழுங்குக்கு இன்னமும் இந்தியர்கள் பழகவே இல்லை என்பதுதான் உண்மை; இல்லையெனில் அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்கள் தொடங்கி பேருந்துகள் வரை ஏன் கடவுள் படங்கள் தொங்க வேண்டும்? ஆக, ஆட்சிமன்றங்களுக்குச் செல்லும் பிரதிநிதிகள் மக்களுக்கான சேவையை மட்டும் அங்கு மேற்கொள்ளட்டும்; அதைக் காட்டிலும் மதமும் கடவுளும் ஏற்கும் சிறந்த பிரார்த்தனை ஒன்று இல்லை.

(நம்முடைய ‘அருஞ்சொல்’ ஊடகத்துக்கான பணிகள் 2021 ஆகஸ்ட் 22 அன்று தொடங்கின. தனிமனிதப் பாட்டுக்காக ஆப்பிரிக்கா சென்ற காந்தி, ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் அடியெடுத்து வைத்ததன் வழியாகப் பொதுவாழ்வை நோக்கித் தன் பாதையைத் திருப்பிக்கொண்ட நாள்; நேட்டா இந்திய காங்கிரஸ் தொடங்கப்பட்ட நாள்; அதுவே காந்தியால் நிர்மாணிக்கப்பட்ட முதல் பொது அமைப்பு; கூடவே, தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை நாளும்கூட. காந்தியையும் தமிழையும் இணைக்கும் புள்ளியான அந்த நாளிலிருந்து நாம் பணிகளைத் தொடங்கினோம். 1921 செப்டம்பர் 22 அன்று மதுரையில் தன்னுடைய ஆடையை எளியவர்களின் அடையாளமான வேட்டி, துண்டாக மாற்றிக்கொண்டார் காந்தி. காந்தியின் மிக முக்கியமான குறியீடுகளில் ஒன்றானது அவருடைய ஆடை. தமிழ்நாட்டையும் காந்தியையும் பிணைக்கும் இந்த நிகழ்வின் நூற்றாண்டு நிறைவில் நம்முடைய இணையதளம் மக்கள் பார்வைக்கு வந்திருக்கிறது. இடைப்பட்ட ஒரு மாதத்தில் வெளியானவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டவற்றை இங்கே கொடுத்திருக்கிறோம். அவற்றில் ஒன்று இது.)

எங்கள் கட்டுரைகளை அவ்வப்போது பெற 'அருஞ்சொல்' வாட்ஸப் சேனலைத் தொடருங்கள்.







பின்னூட்டம் (1)

Login / Create an account to add a comment / reply.

PRAVINKUMAR M   3 years ago

State remaining secular is utmost important at this moment.

Reply 1 0

Login / Create an account to add a comment / reply.

தாத்தாஅரசியல் மாற்றம்போர்க் கப்பல்சிறந்த பேச்சாளர்அறிவியலாளர்களின் அறிக்கைதண்டனைமினி தொடர்தர்ம சாஸ்திர நூல்பேய்எதிர்மறைப் பிம்பம்பாரத்ஒளிதான் முதல் நினைவுமச்சு நதிமுஃப்தி முஹம்மது சயீதுவிக்டோரியா அருவிஒன்றிய சட்ட அமைச்சர்கோவிட்ஆசிரியர்கள் வடக்குக்குப் பரிசும் பாராட்டும்!சென்னை மாநாகராட்சிரயில் விபத்துசிஏஏசோழர் காலச் சிற்பங்கள்அறிவியல் துறைஒற்றைக் குழந்தைத் திட்டம்மாநிலத் தலைகள்: கமல்நாத்மொத்த கனத்தையும் ஒரு ஸ்டாலின் சுமக்க முடியாதுகொலம்பியா பல்கலைக்கழகம்நகைச்சுவை நடிகர் - முதல்வர்இந்திய இடதுசாரிகள்

Login

Welcome back!

 

Forgot Password?

No Problem! Get a new one.

 
 OR 

Create an Account

We will not spam you!