ஜூலியன் அசாஞ்சே கொஞ்சம் கொஞ்சமாக செத்துக்கொண்டிருக்கிறார் என்று அவருடைய வழக்குரைஞர் தெரிவித்திருப்பதும், அவருடைய உடல்நலம் குன்றிக்கொண்டேவருவதும் ஜனநாயகத்துக்காக இப்படிச் செயலாற்றும் விசிலூதிகளின் பாதுகாப்பு தொடர்பாக தீவிரமான கேள்விகளை எழுப்புகிறது. கூடவே நவீன சமூகத்தின் நாகரிக எல்லைகளின் போதாமையையும் அது சுட்டிக்காட்டுகிறது.
இங்கிலாந்தில் உள்ள உயர் பாதுகாப்புச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அசாஞ்சே தன்னுடைய ‘விக்கிலீக்ஸ்’ இணையதளத்தின் வழி பல நாடுகளின் மோசமான அரசியலாட்டங்களை அம்பலப்படுத்தியவர். அசாஞ்சே அம்பலப்படுத்திய விவகாரங்கள் அந்தக் காலகட்டத்தில் உலகெங்கும் பெரும் நாயகப் பிம்பத்தை அவருக்கு உருவாக்கின. வெகுசீக்கிரம் சர்வதேச முற்றுகையின் கீழ் கொண்டுவரப்பட்ட அவர், இப்போது பிரிட்டன் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். தன்னை அமெரிக்கா வசம் ஒப்படைத்துவிடக் கூடாது, அது தன் உயிருக்கு ஆபத்து என்று கோரி நீதிப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார் அசாஞ்சே. லண்டன் உயர் நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்துவந்தது. அமெரிக்க அரசிடம் அசாஞ்சேவை ஒப்படைத்துவிடலாம் என்று சில நாட்களுக்கு முன் அது தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக பிரிட்டன் உச்ச நீதிமன்றத்தில் முறையிட அசாஞ்சேவின் வழக்கறிஞர்கள் தயாராகிவருகின்றனர். இதனிடையே கடுமையான உடல் - மன நலப் பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார் அசாஞ்சே. மேல்முறையீட்டில் ஒருவேளை தோற்று, அமெரிக்காவுக்கு அசாஞ்சே அனுப்பப்பட்டால், அமெரிக்க சட்ட நடைமுறைகளின்படி 175 ஆண்டுகள் வரை அவர் சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரிடலாம். முதல் உலகப்போர் காலச் சட்டத்தை ஏவி சதிகாரர் என்று அசாஞ்சே மீது குற்றஞ்சாட்டுகிறது அமெரிக்கா.
ஐம்பது வயதாகும் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தால் அங்குள்ள சிறைக்கூட நிலைமை காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டுவிடுவார்; மோசமான நிலையில் அவர் இருக்கிறார் என்று அவருடைய சார்பில் வாதிட்டதை முன்னதாக பிரிட்டனின் கீழமை நீதிமன்றம் ஏற்றது. ஆனால், உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு வந்தபோது அமெரிக்க அரசு சார்பில் அளிக்கப்பட்ட உறுதிமொழியை அது ஏற்றது. அசாஞ்சேவை தனிமைச் சிறையிலோ, கொலராடோவில் உள்ள சூப்பர்மேக்ஸ் சிறையிலோ அடைக்க மாட்டோம் என்று அமெரிக்க அரசு உறுதியளித்தது. வழக்கு விசாரணைக்குப் பிறகு தண்டனையை அவர் ஆஸ்திரேலிய சிறைகளில்கூட அனுபவிக்கட்டும் என்றும் அமெரிக்க அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் விளைவாக அமெரிக்கத் தரப்பை ஏற்றுக்கொண்டது நீதிமன்றம்.
ஆஸ்திரேலியாவில் பிறந்தவரான அசாஞ்சே லண்டனில் உள்ள ஈக்வடார் நாட்டு தூதரகத்தில் 2012-ல் தஞ்சம் புகுந்தார். அரசு ரகசியங்களை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டின்பேரில் முதலில் அவரை ஸ்வீடனிலும் பிறகு அமெரிக்காவிலும் விசாரிக்க முற்பட்டனர். பின்னர், ஸ்வீடன் அரசு தனது வழக்கைக் கைவிட்டுவிட்டது. அமெரிக்க அரசு துரத்திவருகிறது. கேள்வி என்னவென்றால், ஜனநாயக விழுமியங்களுக்கும், அரசமைப்புச் சட்டங்களுக்கும்கூட அப்பாற்பட்டு அரசு எனும் அமைப்பை மோசமாகக் கையாளும் ஆட்சியாளர்களை அம்பலப்படுத்தும் விசிலூதிகளுக்கு நாம் என்ன வகையான சட்டபூர்வப் பாதுகாப்பை உருவாக்கியிருக்கிறோம்? 'அரச ரகசியம்' என்ற சொல்லாடலின் கீழ் எதையெல்லாம் மக்கள் பார்வையிலிருந்து மறைத்துவைக்க முடியும்? காலனிய கால அணுகுமுறையின் நீட்சியாகவும் கடந்துவந்த நூற்றாண்டுகளின் பார்வையையும் இன்னும் எவ்வளவு காலத்துக்குத் தூக்கிச் சுமக்கப்போகிறோம்?
அமெரிக்க வெளியுறவுத் துறை அலுவலகம் மற்றவர்களுடன் வைத்திருந்த தொடர்பு, மின்னஞ்சல் தொடர்பு அனைத்தையும் அசாஞ்சே பொதுவெளியில் வெளியிட்டார். பாக்தாத்தில் அமெரிக்கா நடத்திய வான் தாக்குதல், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவரைக் கொல்வதில் முடிந்தது உள்பட பல தகவல்கள் அவர் வெளியிட்ட ஆவணங்களில இருந்தன. இவற்றில் பல விஷயங்கள் ஆட்சியாளர்களின் அத்துமீறல்களையே வெளிக்கொணர்ந்தன.
அசாஞ்சேவின் ஆதரவாளர்கள் - அவரைத் திருமணம் செய்துகொள்ளப்போகும் ஸ்டெல்லா மோரிஸ் உள்பட, "லண்டன் நீதிபதிகளின் அனுமதியானது, ரகசியம் என்று அரசுகளால் அறிவிக்கப்படும் கோப்புகளிலிருந்து தகவல்களைப் பெற்று வெளியிடும் பத்திரிகையாளர்களின் முயற்சிகளுக்குப் பெரிய தடையாக அமைந்துவிடும்" என்று எச்சரிப்பதானது மிக முக்கியமானது. "இந்த நீண்ட சட்டப் போராட்டம் நீடித்தால் அது அவர் ஆயுளைப் பாதிக்கும் எனும் எங்கள் அச்சம் இப்போது மேலும் அதிகரிக்கிறது... இது சீக்கிரம் தீர்க்கப்பட வேண்டும். மிருகக்காட்சிசாலையில் கூண்டுகளில் அடைக்கப்பட்டிருக்கும் விலங்குகளைப் பாருங்கள். அது அவற்றின் வாழ்நாளைக் குறைக்கிறது. அசாஞ்சேவுக்கும் அதுதான் நடக்கிறது. முடிவடையாத நீதிமன்ற வழக்குகள் மனதளவில் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துகின்றன" என்று அசாஞ்சேவின் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். உண்மைதான். உண்மையை வெளிக்கொணர்ந்தற்காக எதிர்கொள்ளும் சித்திரவதையானது எவரையும் மனச்சிதைவுக்கு ஆளாக்கிவிடும். அசாஞ்சேவுக்கு ஏற்படும் எந்த ஆபத்தும் ஜனநாயகத்துக்கான இழிவாகவே அமையும்.
ஜனநாயக உரிமைகள், தாராள மதிப்பீடுகளுக்கான தூதர்களாகத் தங்களை வெளிப்படுத்திக்கொள்ளும் மேற்கு நாடுகள் விசிலூதிகளுக்கான சட்டபூர்வ பாதுகாப்பை உருவாக்குவதே நம் காலத்துக் கருத்துரிமையின் அடுத்தகட்ட நீட்சியாக இருக்க முடியும். அரசின் முக்கியமான ரகசிய நகர்வுகளைத் தன்னலன் சார்ந்து ஒருவர் இன்னொருவருக்கு வெளிப்படுத்துவதும், சமூக நலன் கருதி பொதுவில் பத்திரிகையாளர்கள் அம்பலத்துக்குக் கொண்டுவருவதும் ஒன்று இல்லை. விசிலூதிகள் நவீன சமூகத்தின், பத்திரிகைச் செயல்பாட்டின் முக்கியமான அங்கங்கள். அவர்களுடைய உயிர்ப்பான செயல்பாடு ஜனநாயகத்துக்கு முக்கியம். அசாஞ்சே உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.
3
2
1
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.