தலையங்கம் 4 நிமிட வாசிப்பு
கல்யாண் சிங்: இந்தியா எளிதில் கடக்க முடியாத ஒரு பெயர்
ஆசிரியராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கி ஆளுநராக முடித்துக்கொண்ட கல்யாண் சிங்கின் மரணத்தை இந்தியா எதிர்கொண்ட விதம் கவனிக்க வேண்டியதாக இருந்தது. பெரும்பாலான ஊடகங்கள், அரசியல் கட்சிகள் அமைதியாக இந்த மரணத்தைக் கடந்தன. உத்தர பிரதேசத்தில் விரைவில் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் பாஜக, வரவிருக்கும் தேர்தல் பிரச்சார மேடைகளுக்கு கல்யாண் சிங்கை அவரது மரணத்துக்குப் பிறகும் கூட்டி வரும் என்பதை அந்தக் கட்சி கொடுத்த மரியாதையும், உத்தர பிரதேச அரசு வெளியிடும் தொடர் அறிவிப்புகளும் வெளிப்படுத்துகின்றன. டெல்லியிலிருந்து பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் அஞ்சலி செலுத்துவதற்கு லக்னௌ வந்திருந்தனர். அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலுக்குச் செல்லும் பிரதான சாலைக்கு அவர் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. பிரதமர் மோடி சன்னமான வார்த்தைகளில், ‘சாமானிய மக்களின் நம்பிக்கையாக கல்யாண் சிங் திகழ்ந்தார்’ என்று கூறினார். அரசியல் மொழியில் அதை இப்படி மொழிபெயர்க்கலாம்; அதுதான் பாஜக சொல்ல விரும்பும் செய்தியும்கூட: ‘பிற்படுத்தப்பட்ட மக்களின் பிரதிநிதியாக கல்யாண் சிங் திகழ்ந்தார்; இது எல்லோருக்குமான கட்சி!’
‘அப்படியா?’ என்றும், ‘சரி, அப்படியென்றால், எப்படித் திகழ்ந்தார்?’ என்றும் ஊடகங்களும் ஏனைய கட்சிகளும் பேசியிருக்க வேண்டும். தாக்கூர்களின் ஆட்சி என்ற பெயருக்கு, யோகியின் அரசு ஆளாகியிருக்கும் இந்த நாட்களில் மட்டும் அல்லாது, நீண்ட காலம் ‘பிராமணர்கள் - தாக்கூர்களின் கட்சி’ என்ற பெயரோடுதான் உத்தர பிரதேசத்தில் அழைக்கப்பட்டுவந்தது பாஜக; தேசிய அளவில் அப்போது அதன் பெயர் ‘பிராமண - பனியா கட்சி’. இந்து தேசியத்தின் அடையாளச் சின்னமாகவே பாஜகவால் ஆக்கப்பட்டுவிட்ட ராமரின் அயோத்தி, நாட்டின் பெரிய மாநிலமான உத்தர பிரதேசத்தில் இருந்தது பாஜகவுக்குப் பெரிய அனுகூலமாக இருந்தது என்றாலும், அதை முன்வைத்து மக்களைத் திரட்டி ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றும் அளவுக்கான ஆளுமையாக அங்கு யாரும் பாஜகவுக்கு அமையவில்லை.
உத்தர பிரதேசத்தில் 1980-களில் உச்சம் தொட்ட ‘மண்டல் எதிர் மந்திர்’ அரசியலில், சமூகநீதி அரசியலுக்கு எதிராகக் கோயில் அரசியலை முன்னெடுத்த பாஜக, தன்னுடைய அரசியல் எதிரிகளைக் கையாள ஒருகட்டத்தில் ‘மண்டல் மற்றும் மந்திர்’ எனும் கலவை வியூகத்தைக் கையில் எடுத்தது; அதன் அரசியல் வடிவம்தான் லோத் சமூகத்தைச் சேர்ந்த கல்யாண் சிங்; பிற்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்து, முஸ்லிம்களின் ஆதரவோடு அப்போது மேலெழுந்துவந்த முலாயம் சிங் யாதவுக்கு எதிராகப் பிற்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்தே வளர்த்தெடுக்கப்பட்டார்.
முலாயம் சிங் யாதவ் சார்ந்த யாதவர் சமூகம் நீங்கலான பிற்படுத்தப்பட்டோர் எனும் அணிதிரட்டலோடு, முலாயம் சிங்குக்குப் பின் பலமாக இருந்த முஸ்லிம் சமூகத்தினரைச் சுட்டிக்காட்டியே இந்து அடையாளத்தின் கீழ் ஏனைய சாதிகளைத் திரட்டும் வியூகத்தைக் கையாண்டது பாஜக. இதில், கவனிக்க வேண்டிய முக்கியமான இரு விஷயங்கள்: ஒன்று, பிற்படுத்தப்பட்டோர் அரசியல் என்ற திரட்சி உருவாகும்போதே அதற்குள்ளான சாதி வேறுபாடுகளை ஒரு பிளவாக அது பயன்படுத்தியது; மற்றொன்று, பிற்படுத்தப்பட்டோர் அரசியல் இயல்பாகக் கொண்டிருந்த மத நல்லிணக்கப் பண்பிலும் வேறுபாட்டைக் கலந்தது.
தீவிரமான இந்துத்துவராக வெளிப்பட்டார் கல்யாண் சிங். நாக்கில் தீயை வைத்திருந்தார். 1990-ல் பாஜக மேற்கொண்ட ரத யாத்திரை உக்கிரமான மதவுணர்வுத் திரட்டலாக அமைந்தது. இப்படித்தான் 1991-ல் உத்தர பிரதேசத்தில் பாஜகவின் முதல் முதல்வராகப் பதவியேற்றார். காவல் துறையையும் அதிகாரிகளையும் ஒருங்கிணைத்துக் கையாண்டார்; ‘நல்ல நிர்வாகி’ என்று போட்டிப் போட்டுக்கொண்டு ஊடகங்கள் அவருக்குப் புகழ் மாலை சூட்டின. உச்ச நீதிமன்றத்துக்கு உத்தர பிரதேச அரசு கொடுத்த வாக்குறுதிக்கு மாறாக, 1992 டிசம்பர் 6 அன்று இந்திய ஜனநாயகம் வெட்கித் தலைகுனியும்படி பாபர் மசூதி இடிக்கப்பட்டு, நாட்டின் இதயத்தில் ஆறாத ஒரு கீறல் விழுந்தபோது அவர்தான் முதல்வராக இருந்தார்.
வாழ்வில் எப்போதும் இதற்காக கல்யாண் சிங் துளி வருந்தியதாகத் தெரியவில்லை. இத்தகு கூச்சமற்ற மூர்க்கத்தன்மைதான் பிற்பாடு பாஜகவின் புதிய தலைமைக்கான அடையாளம் ஆனது. இதுதான் பாஜகவுக்குப் பிற்படுத்தப்பட்ட தலைமையும், பிற்படுத்தப்பட்ட தலைவர்களுக்கு பாஜகவும் சேர்த்த வண்ணம் ஆனது. சொல்லப்போனால், அந்தக் கட்சியின் இன்றைய சமன்பாடுகளுக்கும் கலாச்சாரத்துக்குமான முன்மாதிரி கல்யாண் சிங். அவருடைய அடுத்த தீவிர வடிவமாகவே மோடி வெளிப்பட்டார்.
பாபர் மசூதி இடிப்புக்குப் பின் கட்சியை நாடு முழுக்க விஸ்தரித்தது பாஜக. ஆனால், அடுத்த முறை முதல்வரான கல்யாண் சிங் வெகுசீக்கிரம் கட்சிக்குள்ளேயே ஓரங்கட்டப்பட்டார்; ஆதிக்க சாதியினரைக் கட்சிக்குள் அனுசரிக்க முடியாததும், பிற்படுத்தப்பட்டோருக்கும் தலித்துகளுக்கும் அவர் கொடுத்த சில முன்னுரிமைகளும் இதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்றாக இருந்தன. உயர் சாதி ஆதிக்கத்திலேயே கட்சி இருப்பதாகக் கூறி பாஜகவிலிருந்து வெளியேறி புதிய கட்சி தொடங்கினார்; திரும்ப பாஜகவுக்கே வந்தார்; திரும்ப வெளியேறினார்; திரும்ப வந்தார்; இப்படியாக வீழ்ந்தார் கல்யாண் சிங்.
கல்யாண் சிங்குக்கு முந்தைய பாஜகவோடு இன்றைய பாஜகவை ஒப்பிட முடியாது. இன்றைக்கு அதிகமான பிற்படுத்தப்பட்டோரும் தாழ்த்தப்பட்டோரும் இடம்பெற்றிருக்கும் கட்சியும் அது. சரிதான், ஆனால், கட்சியில் அவர்களுடைய நிலையும், அவர்களுக்கான வேலையும் என்ன என்ற கேள்வி முக்கியமானது. ஆட்கள் மாறுகிறார்கள், மேல் இருப்போரின் செயல்திட்டம் மாறுகிறதா? கல்யாண் சிங்குகள் தன்னளவில் அதிகாரத்தை ருசிக்கிறார்கள் என்பதைத் தாண்டி, சமூகத்தில் பெரும் சேதாரத்தை உண்டாக்கும் களப்பலியாடுகளாகவே கடைசியில் எஞ்சுகிறார்கள்!
(நம்முடைய ‘அருஞ்சொல்’ ஊடகத்துக்கான பணிகள் 2021 ஆகஸ்ட் 22 அன்று தொடங்கின. தனிமனிதப் பாட்டுக்காக ஆப்பிரிக்கா சென்ற காந்தி, ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் அடியெடுத்து வைத்ததன் வழியாகப் பொதுவாழ்வை நோக்கித் தன் பாதையைத் திருப்பிக்கொண்ட நாள்; நேட்டா இந்திய காங்கிரஸ் தொடங்கப்பட்ட நாள்; அதுவே காந்தியால் நிர்மாணிக்கப்பட்ட முதல் பொது அமைப்பு; கூடவே, தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை நாளும்கூட. காந்தியையும் தமிழையும் இணைக்கும் புள்ளியான அந்த நாளிலிருந்து நாம் பணிகளைத் தொடங்கினோம். 1921 செப்டம்பர் 22 அன்று மதுரையில் தன்னுடைய ஆடையை எளியவர்களின் அடையாளமான வேட்டி, துண்டாக மாற்றிக்கொண்டார் காந்தி. காந்தியின் மிக முக்கியமான குறியீடுகளில் ஒன்றானது அவருடைய ஆடை. தமிழ்நாட்டையும் காந்தியையும் பிணைக்கும் இந்த நிகழ்வின் நூற்றாண்டு நிறைவில் நம்முடைய இணையதளம் மக்கள் பார்வைக்கு வந்திருக்கிறது. இடைப்பட்ட ஒரு மாதத்தில் வெளியானவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டவற்றை இங்கே கொடுத்திருக்கிறோம். அவற்றில் ஒன்று இது.)
1
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.