தலையங்கம், அரசியல், கூட்டாட்சி 3 நிமிட வாசிப்பு
யதேச்சதிகாரத்தின் பிடியில் நாடாளுமன்றம்
முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இந்திய நாடாளுமன்றத்தின் தரத்தைக் கீழே இறக்கியிருக்கிறது மோடி தலைமையிலான பாஜக அரசு. நாடாளுமன்றத்தின் இந்தக் கூட்டத் தொடரில், இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மொத்தம் 141 பேர் இதுவரை பணியிடைநீக்கம் செய்யப்பட்டிருப்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மாபெரும் வீழ்ச்சி.
சென்ற வாரத்தில் நாடாளுமன்றத்தின் பார்வையாளர் மாடத்திலிருந்து அதன் மையப் பகுதிக்கு முன்னேறி இரு இளைஞர்கள் புகைவீச்சு நடத்தியது நம்முடைய பாதுகாப்பு அமைப்பின் தோல்வி. இதுகுறித்து முழுமையான விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோருவது மிக இயல்பானது.
இந்தியாவிலேயே உச்சபட்ச பாதுகாப்பு வளையத்தின் கீழ் உள்ள இடங்களில் ஒன்று நாடாளுமன்ற வளாகம். பழைய நாடாளுமன்றக் கட்டிடம் கட்டி நூறாண்டுகள் நெருங்கும் நிலையில், இந்த 2023 தொடக்கத்தில் புதிய கட்டிடம் திறக்கப்பட்டது. முந்தைய சூழலைக் காட்டிலும் புதிய கட்டிடத்தில் பாதுகாப்பு வளையம் தீவிரமாக்கப்பட்டிருக்கும் என்றே நாடு நம்பியது. காரணம், ஏற்கெனவே 2001இல் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்கானது இந்திய நாடாளுமன்றம்.
சரியாக, 22 ஆண்டுகளுக்கு முன் தாக்குதல் நடந்த அதே தேதியில் இப்போதைய சம்பவம் நடந்திருக்கிறது. முன்னதாக அன்று காலையில்தான் 2001 நாடாளுமன்றத் தாக்குதலின்போது தங்கள் இன்னுயிரை நீத்த பாதுகாப்புப் படை வீரர்களுக்கு பிரதமர் மோடி உள்பட முழு நாடாளுமன்றமும் அஞ்சலி செலுத்தியிருந்தனர். “2001 தாக்குதலானது நாடாளுமன்றக் கட்டிடத்தின் மீது நடத்தப்பட்டது அல்ல; இந்திய ஜனநாயகத்தின் மீதும், இந்தியாவின் ஆன்மாவின் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல் அது” என்று அப்போதுதான் மோடி பேசியிருந்தார்.
அடுத்த சில மணி நேரங்களில்தான் இப்படியொரு சம்பவம் நடந்திருக்கிறது. பாஜக உறுப்பினர் மூலமாகத்தான் இந்த இளைஞர்கள் பார்வையாளர் சீட்டுகளைப் பெற்றிருக்கிறனர். 2001 சம்பவத்தில்கூட அத்துமீறலர்களால் நாடாளுமன்ற அவைக்குள் நுழைய முடியவில்லை. இப்போது அவர்கள் அவைக்குள் நுழைந்து உறுப்பினர்களின் மேஜைக்கு மேல் ஓடுவதை தேசம் பார்த்தது.
கையோடு இந்த இரு இளைஞர்களும், இந்தத் திட்டத்தோடு பிணைந்த இன்னும் இரு இளைஞர்களும் கைதுசெய்யப்பட்டனர். சம்பவம் குறித்து விசாரிக்க உயர்நிலைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை நடக்கிறது. எல்லாம் சரி. எப்படி அத்துமீறல் நடந்தது என்பது முக்கியமான கேள்வி இல்லையா? இதற்கு காரணமானவர்கள் பொறுப்பேற்க வேண்டும், தண்டிக்கப்பட வேண்டும் இல்லையா?
இளைஞர்கள் கைகளில் இருந்தது வெடிப்பொருள் இல்லை; வேலைவாய்ப்பின்மைப் பிரச்சினையைக் கவனப்படுத்தவே இந்தப் புகைவீச்சில் அவர்கள் ஈடுபட்டனர் என்றெல்லாம் வெளியாகியுள்ள ஆரம்ப நிலைத் தகவல்கள் அந்த இளைஞர்களை நாம் எப்படி அணுக வேண்டும் என்பதற்கு உதவலாம். இன்னும் முழு விசாரணை முடியாத சூழலில், கடுமையான பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்களின் கீழ் சம்பந்தப்பட்ட இளைஞர்கள் மீது வழக்கு தொடரப்பட்டிருப்பது மோசமான அணுகுமுறை; அது தனித்து விவாதிக்கப்பட வேண்டியது.
நடந்தது மாபெரும் பாதுகாப்புத் தோல்வி என்பதை இந்த விஷயங்கள் இல்லாமல் ஆக்கிவிடாது. இளைஞர்கள் கைகளில் அபாயகரமான பொருட்கள் இருந்திருந்தால் எத்தகைய அசாம்பாவிதங்கள் விளைந்திருக்கும் என்பதை எவரும் யூகிக்க முடியும்.
எதிர்க்கட்சிகள் இதுபற்றிக் கேள்வி எழுப்புவதில் என்ன தவறு இருக்க முடியும்? ‘உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும்’ என்பது உள்பட கோரிக்கைகளை வலியுறுத்துகின்றன எதிர்க்கட்சிகள். ஏற்பதோ, மறுப்பதோ ஆளுங்கட்சியின் வரையறைக்குள் இருக்கலாம். விவாதிக்கும் சூழலையே அனுமதிக்க மறுப்பது அக்கிரமம் இல்லையா?
பாஜகவின் இந்த ஆட்சிக் காலத்தை நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டால், மணிப்பூர் விவகாரம், டெல்லி சேவைகள் சட்ட விவகாரம், விலைவாசி உயர்வு விவகாரம் என்று எப்போதெல்லாம் எதிர்க்கட்சிகள் தீவிரமான பிரச்சினைகளோடு விவாதிக்க வருகின்றனவோ அப்போதெல்லாம் ‘பணியிடைநீக்கம்’ எனும் ஆயுதத்தை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீது பிரயோகிப்பதை அது உத்தியாகக் கையாண்டுவருவதை உணரலாம். ஆளுங்கட்சியின் சகிப்பின்மையின் வெளிப்பாடுதான் இது.
தேர்தல்களில் எத்தனை இடங்களில் வெல்கிறார்கள், அவைகளில் எத்தனை உறுப்பினர்களைக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கெல்லாம் அப்பாற்பட்டு, எத்தகைய விஷயங்களைப் பேசியிருக்கிறார்கள், எப்படிப்பட்ட விவாதங்களை நிகழ்த்தியிருக்கிறார்கள், இந்த விவாதங்களும் உரையாடல்களும் இயற்றப்படும் சட்டங்களில் எப்படி பிரதிபலிக்கிறது என்பதே ஒரு சட்டம் இயற்றும் மன்றத்தை நடத்தும் ஆளும் கட்சியின் மகத்துவத்துக்கான அத்தாட்சி. மோடியும் பாஜகவும் இந்திய நாடாளுமன்றத்தின் தரத்தைக் கீழே இறக்குவதில் மேலும் மேலும் முன்னகர்கின்றனர். யதேச்சதிகாரம் நீண்ட காலம் நீடிக்காது!
6
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.