தலையங்கம் 3 நிமிட வாசிப்பு
பாஜக எதிரணிக்குத் தலைமை ஏற்கும் வல்லமை காங்கிரஸுக்கு இருக்கிறதா?
நீண்ட இடைவெளிக்குப் பின் எதிர்க்கட்சிகளை நோக்கி தேசத்தின் கவனத்தைத் திருப்ப முற்பட்டிருக்கிறது காங்கிரஸ் கட்சி. நாட்டின் முக்கியமான எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் விதமாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நடத்தியிருக்கும் கூட்டம் முக்கியமான முன்னெடுப்பாகும். காங்கிரஸ் அல்லாத முதல்வர்கள் ஸ்டாலின் (தமிழ்நாடு), மம்தா (வங்கம்), உத்தவ் (மகாராஷ்டிரா) சோரன் (ஜார்கண்ட்) உட்பட 19 கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் பங்கேற்றிருப்பதும், ‘பாஜக அரசை வீழ்த்த நாடு தழுவிய அளவிலான எதிர்க்கட்சிகளின் கூட்டிணைவு வேண்டும்’ என்று அவர்களில் பலர் பேசியிருப்பதும் காங்கிரஸுக்கு நல்ல தொடக்கம்தான்.
கேரளத்திலும், வங்கத்திலும் காங்கிரஸை எதிர்க்கும் கம்யூனிஸ்ட்டுகளும் இப்போது காங்கிரஸோடு ஒன்றுபட்டு நிற்கிறார்கள்; களத்தில் ஆளுக்கு ஒருபுறமாகத் திரும்பி நிற்கும் உத்தர பிரதேசத்திலிருந்தும்கூட சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கூட்டத்துக்கு ஆதரவு சமிக்ஞையோடு கடிதம் எழுதியிருக்கிறார். அதேசமயம், பகுஜன் சமாஜ் கட்சி இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
பாஜகவுக்கு எதிரான ஒட்டுமொத்த கட்சிகளையும் ஒரு குடையின் கீழ் திரட்ட காங்கிரஸ் விரும்புகிறது. “அவரவர் நலன்களைத் தாண்டி தேச நலனுக்காக ஒன்றுபட வேண்டிய தருணம் இது” என்று பேசுகிறார் காங்கிரஸ் தலைவர் சோனியா. ஆனால், காங்கிரஸாலேயே அதை செய்ய முடியவில்லை என்பதே நிதர்சனம். இல்லை என்றால் ஏன் ஆம்ஆத்மி கட்சிக்கு இந்தக் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படவில்லை? பஞ்சாப் தேர்தல் விரைவில் வரவிருப்பதும், காங்கிரஸ் எதிர்கொள்ளும் பிரதான எதிர்க்கட்சிகளில் ஆம்ஆத்மி கட்சியும் முக்கியமானது என்பதுதானே காரணம்?
2024 மக்களவைத் தேர்தலைப் பிரதான இலக்காகக் கொண்டு செயலாற்ற வேண்டும் என்று இந்தக் கூட்டத்தில் சோனியா பேசியதாகத் தெரிகிறது. “ஒன்றிணைவதைத் தவிர எவருக்குமே வேறு வழியில்லை” என்றும் அவர் சொல்லியிருக்கிறார். வெறும் எதிர்ப்பு எல்லோரையும் ஒன்றிணைத்துவிட முடியாது. உளபூர்வமாக பாஜகவின் செயல்திட்டத்துக்கு மாற்றான ஒரு செயல்திட்டம் சிந்திக்கப்பட வேண்டும்; அதுதான் ஒன்றிணைக்கும் மையப் புள்ளியாக இருக்க முடியும். முக்கியமாக ஒன்றிணைக்கும் வல்லமையை காங்கிரஸ் பெற வேண்டும்.
கூட்டம் முடிந்த பிறகு, “இத்தகு கூட்டணிக்குத் தலைமை ஏற்பது யார் என்பதைப் பற்றி இப்போது அலட்டிக்கொள்ள வேண்டியது இல்லை; மக்கள்தான் தலைமை” என்று மம்தா பேசியிருப்பதெல்லாம் சப்பைக்கட்டுகள். மக்களிடம் இது எடுபடாது. கொள்கைரீதியாக எதிர் நிலையில் நின்றாலும், அசாதாரண சக்தி பிரதமர் மோடி என்ற உண்மைக்கு காங்கிரஸ் கூட்டணி முகம் கொடுக்க வேண்டும். நவீன இந்தியாவில் நேருவுக்குப் பின் பெரும் செல்வாக்கு பெற்ற ஒருவரை எதிர்கொள்ளத் துணிகையில், தன் தரப்புக்கு என்று ஒரு தலைவரை எதிர்க்கட்சிகள் தேர்ந்தெடுக்க வேண்டும்.
சுதந்திரத்தை விரும்புபவர்கள் எவரும் காங்கிரஸின் இந்த முன்னெடுப்பை ஆதரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்தத் தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் கூறியிருப்பது சரியானது. ஆனால், இப்படி ஒரு நெருக்கடியான காலகட்டத்தில், கட்சித் தலைவர் பதவியை வைத்து எங்கேனும் ஒரு பிரதான எதிர்க்கட்சி குளறுபடிகளில் ஈடுபட முடியுமா? குறிப்பாக, ராகுல் காந்தியின் திட்டம்தான் என்ன? மீண்டும் காங்கிரஸ் தலைவர் பதவியை அவர் ஏற்கப்போவதில்லை என்றால், செயல்படக்கூடிய ஓர் இளந்தலைவரை காங்கிரஸ் தேர்ந்தெடுக்க வேண்டும் அல்லது ராகுல் காந்தியே பொறுப்பேற்கும் திட்டத்தில் இருந்தால், காலம் தாழ்த்தாமல் உடனடியாக அவர் அதைச் செய்ய வேண்டும்; கட்சிக்குப் புது ரத்தம் பாய்ச்ச வேண்டும்.
காங்கிரஸ் தன்னைச் சீரமைத்துக்கொள்ளாமல் பாஜகவை எதிர்கொள்ளும் வல்லமையுள்ள ஓர் எதிர்க்கூட்டணியை ஒன்றிணைக்கவே முடியாது!
(நம்முடைய ‘அருஞ்சொல்’ ஊடகத்துக்கான பணிகள் 2021 ஆகஸ்ட் 22 அன்று தொடங்கின. தனிமனிதப் பாட்டுக்காக ஆப்பிரிக்கா சென்ற காந்தி, ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் அடியெடுத்து வைத்ததன் வழியாகப் பொதுவாழ்வை நோக்கித் தன் பாதையைத் திருப்பிக்கொண்ட நாள்; நேட்டா இந்திய காங்கிரஸ் தொடங்கப்பட்ட நாள்; அதுவே காந்தியால் நிர்மாணிக்கப்பட்ட முதல் பொது அமைப்பு; கூடவே, தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை நாளும்கூட. காந்தியையும் தமிழையும் இணைக்கும் புள்ளியான அந்த நாளிலிருந்து நாம் பணிகளைத் தொடங்கினோம். 1921 செப்டம்பர் 22 அன்று மதுரையில் தன்னுடைய ஆடையை எளியவர்களின் அடையாளமான வேட்டி, துண்டாக மாற்றிக்கொண்டார் காந்தி. காந்தியின் மிக முக்கியமான குறியீடுகளில் ஒன்றானது அவருடைய ஆடை. தமிழ்நாட்டையும் காந்தியையும் பிணைக்கும் இந்த நிகழ்வின் நூற்றாண்டு நிறைவில் நம்முடைய இணையதளம் மக்கள் பார்வைக்கு வந்திருக்கிறது. இடைப்பட்ட ஒரு மாதத்தில் வெளியானவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டவற்றை இங்கே கொடுத்திருக்கிறோம். அவற்றில் ஒன்று இது.)
பின்னூட்டம் (0)
Login / Create an account to add a comment / reply.
Be the first person to add a comment.